🌺 மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ 🌺
பாகம் – 4
தன் பிள்ளையின் நிலைமையைக் கேட்ட முல்லை பதறிப்போனவளாக,
“ஐயோ… என் குழந்தைக்கு என்னாச்சு…?” என்று கதறியபடி எழ முயன்றாள்.
“முல்ல… நீங்க அசையக்கூடாது. உங்களுக்கு stitches போட்டு இருக்கு. நீங்க படுங்க,” என்று நிலா அவளைத் தடுத்து மீண்டும் அமர வைத்தாள்.
“பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்துல இப்படியெல்லாம் சில பிரச்சனைகள் வருவது சகஜம்தான். அதுக்காக நீங்க பயப்படாதீங்க. கதிர் குழந்தையைப் பார்த்துப்பான். உங்க பிள்ளைக்கு ஒண்ணும் ஆகாது,” என்று நிலா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
நிலா அப்படிச் சொன்னதும், சற்று அமைதியான முல்லையின் பார்வை, தன் அருகில் படுத்திருந்த கதிரின் பெண் குழந்தையின் மீது நிலைத்தது.
அழகான பெண் குழந்தை. நிம்மதியாகத்தான் உறங்கிக் கொண்டிருந்தது.
ஆனால், குழந்தையின் வலது கை மட்டும் பாதிக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் இருக்க, முல்லையின் பார்வையைப் புரிந்துகொண்ட நிலா,
“என் அண்ணன் குழந்தைதான்…” என்றாள்.
நிலா சொல்லும்போதே அவள் குரலில் அப்படியொரு வலி இருந்தது.
“உங்க அண்ணி…?” என்று முல்லை கேட்க,
“அவங்க…” என்று நிலா உண்மையைச் சொல்ல முடியாமல் தவித்தாள்.
“அவங்களுக்கு உடம்பு சரியில்லையா!? அவங்க பிள்ளைக்குப் பால் தரக்கூடாதா!?” என்று முல்லை கவலையாகக் கேட்டாள்.
அப்போது கதிர் இறுக்கமான முகத்துடன்,
“என் பிள்ளையைப் பெத்துக்கொடுத்தவள் செத்துட்டா,” என்றான்.
அவனது வார்த்தையைக் கேட்டதும் நிலா அதிர்ச்சியடைந்தவளாகக் கதிரைப் பார்த்தாள்.
முல்லையின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.
அந்த நேரத்தில் அறையின் வாசலில் நின்று இருந்த கதிரின் கையில் முல்லையின் ஆண் குழந்தை இருந்தது.
கதிர் சொன்ன வார்த்தைகளின் வலியை உணர்ந்த முல்லை, தன் குழந்தையைப் பார்க்காமல், அருகில் இருந்த கதிரின் பெண் குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டாள்.
முல்லையின் விழியோரத்தில் கண்ணீர் கசிய,
“உனக்கும் என் தலையெழுத்துதானா!? எனக்கும் நான் பிறக்கும்போதே என் அம்மா சாமிகிட்ட போயிட்டாங்க…” என்ற முல்லை கண்கள் கலங்கினாள்.
அவளின் வார்த்தைகளைக் கேட்ட நிலாவும் கதிரும் அவள் மீது பரிதாபம் கொள்ள,
“இவங்க என்ன சொல்லுறாங்க!? அப்போ கண்மணி ஸ்வாமிநாதன் கூடப் போன மாதிரி, முல்லையோட அம்மாவும் ரங்கசாமி க்கூட ஓடிட்டாங்களா!?” என்ற கந்தனின் காலை ஓங்கி மிதித்தாள் நிலா.
அவள் மிதித்த மிதியில்,
“ஆ…!” என்று அலறிய கந்தனின் குரல் கேட்டு, கதிரின் பெண் பிள்ளையும் முல்லையின் ஆண் பிள்ளையும் ஒரே நேரத்தில் சத்தம் போட்டு அழுதது.
குழந்தை அழுததும், கதிர் முல்லையின் ஆண் பிள்ளையைக் கையில் ஏந்தியபடி,
“சரி… சரி… அழாத, Champ…” என்று அவனைச் சமாதானப்படுத்த,
“அச்சோ தங்கமே… அழாதீங்க அழாதீங்க…” என்று முல்லையும் கதிரின் பெண் பிள்ளையைச் செல்லம் கொஞ்சினாள்.
“ஐயோ கந்தா… நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா!? இங்க பாருங்க, உங்களாலதான் இவங்க ரெண்டு பேரும் அழறாங்க,” என்று நிலா கந்தனை முறைக்க,
“இவனால் தான் இவங்க நாலு பேரும் சிரிக்கப் போறாங்க,” என்ற உண்மை அப்போது நிலாவுக்குத் தெரியாமல் போனது.
மறுபக்கம், இதே தருணம் மங்கலம் தன் வீட்டிற்குள் பதற்றத்துடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.
“அக்கா… இப்ப என்னக்கா பண்ணப் போறோம்?” என்று அவளது ஆள் அஞ்சிய குரலில் கேட்க,
“எனக்குமே ஒண்ணும் புரியலடா! இன்னைக்குள்ள முல்லையையும் அவ பிள்ளையையும் இங்க கூட்டிட்டு வர முடியலைனா, அந்த முக்தா நம்மள உயிரோடவே சமாதி கட்டிடுவா!” என்றாள் மங்கலம், ஏமாற்றமும் பயமும் கலந்த குரலில்.
“ஏன் அக்கா… ஒருவேளை நம்மளால அந்தக் குழந்தையை இன்னைக்குப் பூஜைக்குத் தூக்கிட்டு வர முடியாம போயிடுச்சுனா!?” என்று அவன் தயங்கியபடியே கேட்க,
ஆத்திரமடைந்த மங்கலம் அவன் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்து,
“கொன்னுடுவேன் உன்னை!” என்று உறுமினாள்.
“அக்கா… உங்களைக் கோபப்படுத்தணும்னு கேட்கலக்கா… ஆனாலும்…” என்று அவன் இழுக்க,
“இன்னைக்கு மட்டும் நாம அந்தப் பூஜையைச் செய்யலைனா, அடுத்தப் பூஜைக்கு இன்னும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டி வரும்டா!” என்றாள் மங்கலம் பலத்த சிந்தனையோடு.
“ஐயோ! அதுவரைக்கும் முகேஷ் ஐயா காத்து இருப்பாரா?” என்று அவன் அதிர்ச்சியோடு கேட்க,
“நம்மனால அமீர் ஐயாவுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுனா, அப்புறம் முகேஷ் ஐயாவும் முக்தா அம்மாவும் சேர்ந்து நம்ம மூச்சையே நிறுத்திடுவாங்க!” என்றாள் மங்கலம்.
எப்படியாவது இன்றைக்குள் முல்லையின் ஆண் குழந்தையைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற வெறி அவள் கண்களில் தெரிந்தது.
இதே தருணம், மருத்துவமனை அறையில்…
“இந்தாங்க… உங்க பிள்ளை…” என்று கூறியபடி முல்லையின் ஆண் குழந்தையை அவளிடம் பத்திரமாகக் கொடுத்தான் கதிர்.
அதேநேரம், முல்லையின் கைகளில் இருந்த பெண் குழந்தையை நிலா வாங்கிக்கொள்ள, தன் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட முல்லையின் கண்கள் கலங்கின.
“இந்த நொடி உன்னை நான் காப்பாத்திட்டேன்டா… ஆனா, அடுத்த நொடி உனக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியலையே…” என்று அவள் முணுமுணுத்த வார்த்தைகளில், அவளது வலியும் ஆழமான பயமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் கலங்குவதைப் பார்த்த கந்தன்,
“ஆமா… நீங்க யாரு? அந்தக் கோடீஸ்வரன் முகேஷ் எதுக்காக உங்க பிள்ளையைத் தூக்கிட்டுப் போக அவ்வளவு ஆர்வமா இருந்தான்?” என்று நேரடியாகக் கேட்க, முல்லை பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றாள்.
அவளது முகமாற்றத்தைக் கொண்டே அவளுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்ட கதிர்,
“கந்தா… அவங்களை எதுவும் கேட்டு வற்புறுத்தாத! அவங்களோட குடும்பம் எங்க இருக்குனு மட்டும் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. அவங்களுக்கு விஷயத்தைச் சொல்லி, வந்து கூட்டிக்கிட்டுப் போகச் சொல்லு,” என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு, நிலாவிடமிருந்து தன் பெண் குழந்தையை மீண்டும் தூக்கிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பாதையையே பார்த்தபடி நின்ற நிலா,
“இப்போ இவன் குழந்தையை எங்க தூக்கிட்டுப் போறான்?” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
பிறகு முல்லையின் பக்கம் திரும்பி,
“சரி முல்லை… நீங்க சொல்லுங்க. உங்க குடும்பம் எங்க இருக்காங்க? உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை?” என்று மென்மையாகக் கேட்டாள்.
“என் வீடு… என் மாமா…” என்று அதற்கு மேல் பேச முடியாமல், முல்லையின் கண்கள் மீண்டும் கலங்கி நீரைச் சொரிந்தன.
அவள் படும் வேதனையைப் பார்த்து நிலாவுக்கு மிகவும் பாவமாக இருந்தது.
“சரி முல்லை… நீங்க இப்போ எதுவும் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க… நான் போயிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து உங்களைப் பார்க்குறேன்,” என்று நிலா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
பிறகு,
“கந்தா… வாங்க, போகலாம்…” என்று அவனையும் அழைத்துக்கொண்டு நேராகக் கதிரின் பெண் குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே, கதிர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த தன் பிஞ்சு மகளின் முகத்தையே ஆசையோடும் ரசனையோடும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
கதிரின் மனநிலையை நன்கு அறிந்திருந்த கந்தன்,
“மச்சான்…” என்று அவனை அழைக்க,
“எனக்குத் தயவு செய்து ஆறுதல் சொல்லி, மேலும் என்னைக் கோழை ஆக்கிடாதே…” என்றான் கதிர்.
“டேய், என்ன நீ! நான் உனக்கு ஆறுதல் சொல்ல வரல. ஆனா…” என்று கந்தன் வார்த்தையை இழுக்க,
“கதிர்… உனக்குப் பிள்ளை பிறந்த செய்தியை GR கிட்ட சொல்ல வேண்டாமா?” என்று கேட்டாள் நிலா.
அவள் கேட்ட கேள்வியில், கதிரின் விழியோரத்தில் கண்ணீர் கசிந்தது.
“அவங்களைக் கஷ்டப்படுத்திட்டு, நான் பண்ண சில வேலைகளாலதான் இப்போ எனக்கு இந்தத் தண்டனை…” என்ற கதிரைப் பார்க்க, நிலாவுக்குப் பாவமாக இருந்தது.
“விடு மச்சான்… நீ என்ன பண்ணுவ? அந்தக் கண்மணிக்குக் கொழுப்பு டா!” என்று கந்தன் சொல்ல,
“நாம மட்டும் லண்டன் போகலைன்னா, கண்மணியை இங்கிருந்து போக விட்டிருக்கவே மாட்டேன்,” என்றாள் நிலா.
“ஏய், அவ கதையை விடு… கதிருக்குப் பிள்ளை பிறந்த செய்தி மாமிக்குத் தெரிஞ்சா, அவங்க சந்தோஷப்படுவாங்க தானே?” என்று கந்தன் கேட்க,
“கண்மணி கதையைத் தெரிஞ்சுக்கிட்டா அவங்க வருத்தப்படுவாங்களே…” என்றாள் நிலா.
“ஆமா… அவங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம். அவங்களைப் பொறுத்தவரை, நான் கண்மணியோட சந்தோஷமா இருக்குறதாவே அவங்க நம்பட்டும்,” என்ற கதிர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் பிள்ளையின் அருகே அமைதியாக அமர்ந்திருந்தான்.
அன்றைய தினம் இரவு நேரம்…
மருத்துவமனை அறையில் அமர்ந்திருந்த முல்லை, தன் அருகில் படுத்திருந்த ஆண் குழந்தையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க அவளது கண்கள் கலங்கின.
“நீ ஏன் என் வயித்துல வந்து பிறந்த…?” என்று குழந்தைக்குத் தெரியாமல் கண்ணீருடன் கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வியின் வலியை அறியாமல் அந்தக் குழந்தை அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது.
அப்போது,
“மேடம்…” என்ற குரலோடு நர்ஸ் ராஜி அந்த அறைக்குள் வந்தாள்.
“இந்தாங்க மேடம்… உங்களுக்குத் தேவையான டிரஸ் எல்லாம் இதுல இருக்கு. நீங்க இதை யூஸ் பண்ணிக்கோங்க,” என்று சொல்லி அந்தப் பையை முல்லையிடம் கொடுத்தாள்.
“எனக்கா…?” என்று புரியாமல் கேட்டாள் முல்லை.
“ஆமா முல்ல… உங்களுக்குத்தான்.”
என்று சொல்லிக்கொண்டே நிலாவும் அறைக்குள் வந்தாள்.
“எனக்கு ஏன் இவ்வளவு டிரெஸ்?” என்று முல்லை கேட்க,
“உங்களுக்கு மட்டும் இல்ல… இதோ இந்தக் குட்டிப் பையனுக்கும் இதுல டிரெஸ் இருக்கு,” என்று நிலா குழந்தைக்கான துணிகளையும் காட்டினாள்.
முல்லையின் கண்கள் மீண்டும் கலங்கின.
“இந்த உதவிக்கெல்லாம் உங்களுக்கு நான் என்ன கைமாறு பண்ணப் போறேன்னு தெரியல…” என்று அவள் சொல்ல,
“எனக்கு நீங்க ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணா போதும்,” என்றாள் நிலா.
“என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லுங்க,” என்று முல்லை சொல்ல, நிலா சற்றுத் தயங்கியபடி,
“நீங்க இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற வரைக்கும்… என் அண்ணன் குழந்தைக்குப் பால் கொடுக்கணும்,” என்று கேட்டாள்.
முல்லை ஒரு நொடியும் யோசிக்காமல்,
“கண்டிப்பா கொடுக்குறேன்,” என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும் நிலாவின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.
“சரி… உங்க பேமிலி பற்றிக் கேட்டேனே…” என்று மீண்டும் முல்லையிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.
“என் மாமா பேர் செல்வம்…” என்று முல்லை தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த நேரத்தில்,
“நிலா… அங்க பாரு! குட்டிப் பாப்பா பசிக்கு அழுது. உன் அண்ணன் என்னமோ பால் டப்பா கொடுத்து பசி ஆத்த முயற்சி பண்ணுறான்… ஆனா குழந்தை புட்டிப் பால் குடிக்க மாட்டுது!” என்று சொல்லிக்கொண்டே கந்தன் அறைக்குள் வந்தான்.
“இந்தக் கதிருக்கு அறிவே இல்ல!” என்று நிலா முணுமுணுத்தபடி உடனே அறையை விட்டு வெளியேறினாள்.
“அவன் அப்படியே உன்னை மாதிரி, நிலா!” என்று கந்தனும் அவளைத் தொடர்ந்து கதிரின் பெண் குழந்தை இருந்த அறைக்குச் சென்றான்.
அங்கே குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்தது.
“பாப்பா… என் செல்லம் தானே நீங்க… இந்தாங்க, பால் குடிங்க…” என்று கதிர் குழந்தையின் வாயில் புட்டிப் பாலை கொடுக்க முயற்சி செய்தான்.
ஆனால் குழந்தையோ குடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக வாயை மூடிக்கொண்டது.
அப்போது அங்கே வந்த நிலா,
“கதிர்… என்ன பண்ற நீ?! கொடு குழந்தையை!” என்று சொல்லி, அவன் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்கிக்கொண்டாள்.
நேராகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு முல்லையின் அறைக்குச் சென்றாள்.
“ஏய் நிலா… நில்லு!” என்று அவளை அழைத்தபடியே கதிரும் அந்த அறைக்குள் சென்றான்.
ஆனால் அதற்குள் முல்லை குழந்தைக்குப் பசியாற்றிக்கொண்டிருந்தாள்.
“நான் இருக்குற வரைக்கும் பாப்பாவுக்கு நானே பால் கொடுக்குறேன்,” என்றாள் முல்லை.
“இல்ல… அதெல்லாம் வேணாம்,” என்று கதிர் உடனே மறுத்துப் பேச,
“கதிர்… நீ இதுல தலையிடாத. அட்லீஸ்ட் குழந்தை கொஞ்ச நாளாவது தாய்ப்பால் குடிக்கட்டும்,” என்றாள் நிலா.
“டேய்… அதான் சொல்லுறாங்கல்ல. நீ வா, நிலா பார்த்துப்பா,” என்று கந்தனும் சொல்ல,
சில நொடிகள் அமைதியாக இருந்த முல்லை,
“பேசாம இந்த ரெண்டு குழந்தையும் இதே ரூம்ல ஒண்ணா இருக்கட்டுமா?” என்று கேட்டாள்.
“இல்லைங்க… உங்களுக்கு ஏன் சிரமம்?” என்று கதிர் மறுத்துப் பேச,
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை. உங்க பிள்ளை என் கிட்டயே இருக்கட்டும். நீங்க எனக்குப் பண்ண உதவிக்கு நான் கொஞ்சமாவது நன்றி கடன் பட்ட மாதிரி இருக்கும்,” என்று முல்லை சொல்ல,
குழந்தையின் நலனைக் கருத்தில்கொண்டு கதிரும் அதற்குச் சம்மதித்தான்.
முல்லை குழந்தைக்குப் பசியாற்றி முடித்ததும், அதைத் தொட்டிலில் மெதுவாகப் படுக்க வைத்தாள்.
அதே நேரத்தில் கந்தனின் கைபேசி ஒலித்தது.
“நான் தான் மெடிக்கல் லீவுல இருக்கேனே… இந்த மீசை ஏன் இப்போ என்னைக் கூப்புடுறாரு?” என்று முணுமுணுத்தபடியே கந்தன், அவனது மேல் அதிகாரியிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்றான்.
“ஹலோ சார்…” என்று கந்தன் பேச ஆரம்பிக்க,
“என்ன மிஸ்டர் கந்தன்… லீவ்ல போயிட்டு பெரிய புரட்சி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்களாமே?” என்று மேல் அதிகாரி கேட்டார்.
கந்தனோ ஒன்றும் புரியாமல் பேய் விழி விழித்தவன்,
“சார்… என்ன சொல்றீங்க?!” என்று புரியாமல் கேட்டான்.
“அதான்… காட்டுல முகேஷ் ஆளுங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணையும் அவ குழந்தையையும் காப்பாத்தி உங்களோட கூட்டிட்டு போனீங்களாமே?” என்று அவர் கேட்க,
“ஆனா உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும், சார்?” என்று கந்தன் வியப்போடு கேட்டான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியும் மேன்! சரி… இப்போ அந்தப் பொண்ணும் குழந்தையும் எங்க இருக்காங்க? எந்த ஹாஸ்பிடல்ல அவங்களை அட்மிட் பண்ணிருக்க?” என்று அவர் நேரே விஷயத்துக்கு வந்தார்.
“அவங்களா சார்… அவங்களை வர வழியிலேயே அவங்களோட சொந்தக்காரங்க வீட்டுல இறக்கிவிட்டுட்டு வந்துட்டேன் சார்,” என்று கந்தன் சுதாரித்துக்கொண்டு பொய் சொன்னான்.
“என்னது சொந்தக்காரங்களா? யோவ் கந்தா … அந்தப் பொண்ணுக்குச் சொந்தம் பந்தம்னு யாரும் இல்லை! அவ பேரு முல்லைப்பூ. முக்தா அம்மா வீட்டுல வேலை பார்க்கும்போது, அங்க இருந்த பல லட்சம் மதிப்புள்ள வைர நகையைத் திருடிட்டு ஓடியிருக்கா! அவளைப் பிடிக்கப் போகும்போதுதான் நீ குறுக்கப் பூந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிருக்க,” என்றார் கமிஷனர்.
கமிஷனர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட கந்தனுக்குச் சிரிப்பே வந்துவிட்டது.
‘அடப்பாவிங்களா! வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு இவ வைர நகையைத் திருடிட்டு ஓடி வந்தாளா?! என்னடா புதுக் கதையா இருக்கு!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட கந்தன்,
“அப்போடியா சார்!” என்று கேட்டான்.
“ஆமா கந்தா… சரி சொல்லுங்க இப்போ அந்தக் குழந்தை” என்று ஆரம்பித்து, “இல்ல இல்ல… அந்த முல்லை இப்போ எங்கே!?” என்று கமிஷனர் கேட்டார்.
“சார்… உங்களுக்கு இப்போ அந்தப் பொண்ணு வேணுமா? இல்ல வைர நகை வேணுமா? இல்ல அந்தப் பொண்ணோட குழந்தை வேணுமா?” என்று நேரடியாகக் கேட்டான் கந்தன் .
அவன் கேள்வியைக் கேட்ட அடுத்த நொடியே, மறுமுனையில் போனைப் பிடுங்கிய ஒரு பெண்ணின் ஆத்திரமான குரல் ஒலித்தது.
“Hey you, bastard! I know… அந்த முல்லையும் குழந்தையும் உன்கிட்டதான் இருக்காங்க.
ஒழுங்கு மரியாதையா அவங்களை என்கிட்ட ஒப்படைச்சுட்டு, உனக்கு என்ன பணம் வேணுமோ அதைக் கேட்டு வாங்கிக்கோ!”
அந்தக் குரலைக் கேட்டதும் கந்தன் உடனே, “நீங்க யாரு? முக்தா மேடம் பேசுறீங்களா?” என்று கேட்டான்.
உடனே அதிகாரத் தோரணையில், “Yes! நான் தான். சொல்லு… உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் உடனே ஏற்பாடு பண்ணுறேன். ஆனா எனக்கு அந்தக் குழந்தை தான் முக்கியம். Come on… சொல்லு, உனக்கு உடனே என்ன வேணும்?” என்று முக்தா அவசரமாகக் கேட்டாள்.
கந்தன் சுற்றிலும் பார்த்தான்.
நிலாவும் கதிரும் அவனையே ஏதும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.
முல்லையின் அருகாமையில் இரண்டு குழந்தைகளும் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தன.
கந்தன் சற்று யோசித்துவிட்டு, “இப்போ எனக்கு உடனே Free Size-ல ஒரு…” என்று வார்த்தையை இழுத்தான்.
மறுமுனையில் முக்தா ஆவலுடன் காத்திருக்க,
“ஒரு லுங்கி வேணும், மேடம்!” என்றான் கந்தன்.
அவனது பதிலைக் கேட்ட முக்தாவின் கோபம் தலைக்கேறியது.
அவனைப் பார்த்த நிலாவும் கதிரும், ‘இவன் யார்கிட்ட லுங்கி கேக்குறான்?’ என்பது போல விழித்துப் பார்த்துக்கொண்டிருக்க,
“Hey… I’ll kill you, மேன்!” என்று முக்தா கந்தனை ஆத்திரத்தில் எச்சரித்தாள்.
அவள் மிரட்டலைக் கேட்ட கந்தனோ கொஞ்சமும் பயப்படாமல்,
“ஐயோ மேடம்… நான் என்ன உங்க மாமனா, மச்சானா? நீங்க என்கிட்ட கிள்ளி அடிச்சு விளையாட?! போனை வைங்க மேடம்!” என்று கிண்டலாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் பார்வை அப்பாவியாக அமர்ந்து இருக்கும் முல்லைப்பூவின் மீது தான் பதிந்தது.
– தொடரும்.