Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 3

CHAPTER 3

முல்லைப்பூ – 3

By S.K Velan · October 6, 2026

3

🌺 மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ 🌺

பாகம் – 3

மருத்துவமனையை நோக்கிக் கந்தனின் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

காருக்குள் முல்லை மயக்க நிலையில் கிடந்தாள்.

அவள் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தை கதிரின் கைகளில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

முன்பக்கத்தில் கந்தன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டிருக்க, நிலா மீண்டும் மீண்டும் பின்னால் திரும்பி முல்லையையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கதிர்வேலனின் பார்வையும் அந்தக் குழந்தையின் மீதே இருந்தது.

அந்த நேரத்தில்…

பின்னால் இருந்து வேகமாக வந்த அடியாட்களின் வாகன சத்தம் கேட்டது.

கந்தன் பின்புறக் கண்ணாடி வழியாகப் பார்த்தவன்,

“அடடா! இவங்க நம்மள இன்னும் விடல போல!” என்று முணுமுணுத்தான்.

மங்கலத்தின் ஆட்களோ, எப்படியாவது முல்லையையும் குழந்தையையும் பிடித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் காரைத் துரத்திக் கொண்டிருந்தனர்.

“கந்தா… வேகமா போங்க!” என்று நிலா பதற்றத்துடன் சொல்ல,

“ஏய்… நான் மட்டும் என்ன வேகம் போகாம வெங்காயமா வெட்டிக்கிட்டு இருக்கேன்?” என்று கந்தன் பற்களைக் கடித்தபடி காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

அவன் முன்னால் இரண்டு பாதைகள் பிரிய, ஒரு நொடியும் யோசிக்காமல் கந்தன் வலது புறப் பாதையில் காரைத் திருப்பினான்.

சில வினாடிகளிலேயே திடீரெனக் காரை வேறொரு குறுகிய சாலைக்குள் செலுத்தினான்.

அவர்களைத் துரத்திக் கொண்டு பின்னால் வந்த வாகனங்கள் அந்தச் சாலையைத் தவறவிட்டு நேராகச் சென்றன.

கந்தன் சற்றுத் தூரம் சென்றதும் காரின் வேகத்தைக் குறைத்துப் பின்னால் பார்த்தான்.

அவனைத் தொடர்ந்து யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு,

“ஹப்பா… தப்பிச்சாச்சு!” என்று பெருமூச்சு விட்டான்.

அதே நேரத்தில், முல்லையைத் துரத்திச் சென்ற அடியாட்களில் ஒருவன் பதற்றத்துடன் மங்கலத்தைக் கைபேசியில் அழைத்தான்.

“அக்கா… அவங்க நம்ம கண்ணுல இருந்து தப்பிச்சுட்டாங்க. எங்க தேடியும் அந்தக் குழந்தையும் முல்லையும் கிடைக்கல!” என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மங்கலத்தின் முகம் கோபத்தில் இறுகியது.

“டேய்… நீங்க என்ன பண்ணுவிங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா அந்தக் குழந்தை இன்னைக்குள்ள நம்ம கைக்கு வந்தாகணும்!” என்று அவள் கட்டளையிட்டாள்.

மங்கலத்தின் கோபமான முகத்தைப் பார்த்த முகேஷ்,

“என்னாச்சு மங்கலம்? இன்னைக்குப் பூஜை நடக்குமா, நடக்காதா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“கண்டிப்பா நடக்கும் ஐயா.” என்று மங்கலம் பதில் சொல்ல,

“ஹாங்… நடக்கும்! நடந்து கிழிக்கும்!” என்று முகேஷின் மனைவி முக்தா கோபத்துடன் முறைத்தாள்.

அவள் மங்கலத்தை நோக்கி ஆவேசமாக,

“நம்ம கண்ணுல மண்ணைத் தூவிட்டு எவனோ ஒருத்தன் அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு போயிருக்கான். அவனைப் போட்டுத் தள்ளிட்டு, குழந்தையைத் தூக்கிட்டு வர முடியாம… இப்போ எங்கிட்ட வந்து கதை பேசுறியா?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு மங்கலத்தை முறைத்தாள்.

மங்கலம் பயத்துடன் தலையைக் குனிந்தபடி,

“மன்னிச்சிடுங்க அம்மா… அந்த முல்லை இப்படிப் பண்ணுவான்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. அதுவும் இல்லாம, யாரோ ஒரு வளர்ந்து கெட்டவன் கையில போனை வச்சுக்கிட்டு லைவ் வீடியோ போனதும் நான் பயந்துட்டேன்…” என்று தயக்கத்துடன் கூறினாள்.

அதைக் கேட்ட முகேஷ் முகம் சுளித்தபடி,

“அவன் லைவ் போனதால இப்போ நமக்கும் தேவையில்லாத பிரச்சனையெல்லாம் வரப்போகுது.” என்றார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் புரிந்துகொண்ட முக்தா, மங்கலத்தை நோக்கி இன்னும் கோபமாகப் பார்த்தாள்.

“இங்க பாரு…

இந்த நாளுக்காக நான் ரெண்டு வருஷம் காத்திருந்து, பல கோடி செலவு பண்ணி முல்லையைத் தேடிப் பிடிச்சேன்.

எல்லாம் கூடி வர்ற நேரத்துல உன்னோட அஜாக்கிரதையால எனக்கும் இவருக்கும் ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா…” என்று கூறியவள், சுற்றிலும் இருந்த அந்தக் காட்டை ஒரு பார்வை பார்த்தாள்.

பின்னர் மங்கலத்தை நேராகப் பார்த்தபடி,

“இந்தக் காட்டுலேயே உனக்குச் சமாதி கட்டிடுவேன்!” என்று மிரட்டினாள்.

முக்தாவின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மங்கலத்தின் முகத்தில் இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது.

முகேஷோ எதுவும் பேசாமல் காரை நோக்கி நடந்தார்.

முக்தாவும் அவரைப் பின்தொடர்ந்து காரில் ஏற,”முக்தா… அந்த வீடியோ எடுத்தவன் யார் என்னனு சீக்கிரம் கண்டுபிடி” என்ற முகேஷின் வார்த்தை முடியும் முன்னே முக்தா அவள் கையில் இருந்த கைபேசியைக் கொண்டு கந்தனை பற்றிய விவரங்களைத் தேட ஆரம்பித்தாள்.

“என்ன கிடைத்ததா!?” என்று முகேஷ் கேட்க, “ம்… அவன் பேர் கந்தவேலன். ASI ஆக இருக்கிறான். Free டைம்ல இந்த மாதிரி போன்ல லைவ் போட்டுத் தேவையில்லாத வேலையும் பார்ப்பான் போல” என்றாள் முக்தா.

“கந்தவேலன் …” என்று அவன் பேரை அழுத்தமாகச் சொன்ன முகேஷின் முகத்தில் கோவம் எழுந்தது.

“சரி… நீ கமிஷனர்கிட்ட சொல்லி அந்த முல்லையையும் நம்ம பிள்ளையையும் காட்டு பங்காளவிற்கு அழைத்து ஏற்பாடு பண்ணு” என்று முகேஷ் சொல்ல, அதற்குச் சம்மதமாகத் தலையசைத்தாள் முக்தா.

அடுத்த நொடி

அந்தக் கார் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டது.

மங்கலம் மட்டும் அந்தக் காட்டின் நடுவில் நின்றபடி, அவர்கள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது முக்தா மீது இருந்த பயம் மெல்ல மாறி, அவளுடைய மொத்த கோபமும் இப்போது முல்லையின் மீது திரும்பியது.

“என் ஆசையில மண்ணைப் போட்ட உன்னை நான் உயிரோட விடவே மாட்டேன்…” என்று தனக்குள் சபதம் கொண்டாள்.

மறுபுறம், மங்கலத்தின் ஆட்கள் காட்டின் பல பகுதிகளிலும் அந்தக் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தனர்.

“எப்படியாவது அந்தக் குழந்தையைக் கண்டுபிடிச்சே ஆகணும்!”

என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு, காட்டின் ஒவ்வொரு பகுதியையும் சல்லடை போட்டுத் தேடினர்.

ஆனால்…

அவர்கள் தேடிக் கொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தை, அவர்களுக்குத் தெரியாமல் கதிர்வேலனின் கைகளில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தையின் சிறிய விரல்கள் கதிர்வேலனின் சட்டையைப் பற்றியிருந்தன.

கதிர்வேலன் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான்.

அப்போது அவனுடைய மனதில்,

“எப்படியாவது இந்தக் குழந்தையைக் காப்பாத்தணும்…” என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

…….

சிறிது நேரத்தில்…

கந்தனின் கார் கதிரின் GKM மருத்துவமனை வாசலில் வந்து நின்றது.

கதிர்வேலன் முல்லையின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கினான்.

அதே நேரத்தில் மருத்துவமனை ஊழியர்கள் மயக்க நிலையில் இருந்த முல்லையை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

அப்போது,

“நிலா…” என்று கதிர்வேலன் தன் தங்கையை அழைத்தவன்,

“முல்லைக்கு நம்ம டாக்டர்ஸ் கிட்ட சொல்லி உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கச் சொல்லு. அவங்களுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது.” என்றான்.

“சரி கதிர்.” என்ற நிலா உடனே முல்லையுடன் உள்ளே சென்றாள்.

கதிர் தன் கையில் இருந்த முல்லையின் ஆண் குழந்தையை அருகில் இருந்த நர்ஸிடம் கொடுத்து, “பேபிக்கு டிரெஸ்ஸிங் பண்ணுங்க…” என்று சொல்ல, நர்ஸ் முல்லையின் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

அப்போது கந்தன்,

“மச்சான்… அவங்க பார்த்துப்பாங்க. நீ வா… நம்ம போய் என் மருமகளைப் பார்க்கலாம்.” என்று சொல்ல, கதிரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

அந்த நேரத்தில்,

“டாக்டர்…” என்று வேகமாக வந்த நர்ஸ் ராஜி, கதிரிடம் ஏதோ சொல்ல வந்து தயங்கினாள்.

“என்ன ராஜி?” என்று கதிர் கேட்கும் முன்பே,

“என் மருமகள் எங்க?” என்று கந்தன் கேட்க,

“குழந்தை ரூம்ல…” என்று ராஜி சொல்லி முடிப்பதற்குள், கதிர் ஒரு நொடியும் யோசிக்காமல் நேராக அறை எண் 20-க்குச் சென்றான்.

அங்கே ஒரு சின்னத் தொட்டிலில், பிங்க் நிறத் துணி போர்த்தப்பட்ட நிலையில், அவனுடைய பெண் குழந்தை அழகாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் கதிரின் முகம் முழுவதும் சந்தோஷம் மலர்ந்தது.

“என் அழகு பாப்பா…” என்று சொல்லிக் கொண்டே குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டான்.

தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆசை தீரக் கொஞ்ச ஆரம்பித்தான்.

“பட்டுப் பாப்பா… இங்க பாரு… அப்பா வந்திருக்கேன்…” என்று சொல்லி அவளுடைய கன்னத்தை வருடிக் கொடுத்தான்.

அவனுக்குப் பின்னால் வந்த கந்தன், கதிரின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.

அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.

“டேய்… என்னடா… குழந்தைக்கு என்னாச்சு?!” என்று பதற்றமாகக் கேட்டான்.

அதைக் கேட்ட கதிர் ஒன்றும் புரியாமல் கந்தனைப் பார்த்து,

“ஏன்? என்னாச்சு?” என்று கேட்டவன், மீண்டும் தன் குழந்தையைப் பார்த்து,

“என் தேவதை நல்லாத்தானே இருக்கா…” என்றவன், குழந்தையை இன்னும் பாசமாக அணைத்துக் கொண்டான்.

குழந்தையின் முகத்தைப் பார்த்தபடியே அவன் சிரித்துக் கொண்டிருக்க, அவனுக்குத் தன் குழந்தையைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

ஆனால் கதிரின் கையில் இருந்த அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த கந்தனுக்கு மட்டும் என்ன சொல்வதென்றே தெரியாமல் போனது.

“டேய் கதிர்…” என்று கந்தன் மேலும் ஏதோ பேச வருவதற்குள்,

“கந்தா… என்னை எதுவும் கேட்காதே. என் குழந்தை நல்லாதான் இருக்கா… நல்லாதான் இருப்பா…” என்று கதிர் சொல்லிக் கொண்டே, தன் குழந்தையின் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.

அதைப் பார்த்த கந்தனின் விழியோரத்தில் கண்ணீர் கசிந்தது.

அதே நேரத்தில்,

“Excuse me, டாக்டர்…” என்று கேட்டுக் கொண்டே நர்ஸ் ராஜி உள்ளே வந்தாள்.

அவள் கையில் இருந்த ஒரு கடிதத்தைக் கதிரிடம் நீட்டி,

“இந்த லெட்டரை கண்மணி மேடம் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க.” என்று சொன்னாள்.

தன் குழந்தையை ஒரு கையில் ஏந்திக் கொண்டே, மற்றொரு கையால் அந்தக் கடிதத்தைக் கதிர் வாங்கினான்.

குழப்பத்தோடு அந்தக் கடிதத்தைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தவன், முதல் வரியைப் படித்தவுடனே அவனுடைய முகம் மாறியது.

அதில்,

“உன் காதலைப் போலவே… உன் குழந்தையும் அரைகுறைதான்…”

என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த வார்த்தைகளைப் படித்ததும் கதிரின் கண்களில் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.

தன் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தவன், மீண்டும் அந்தக் கடிதத்தைப் பார்த்தான்.

அவனுடைய கைகளில் இருந்த குழந்தையின் மீதான பாசம் ஒரு பக்கம்…

அந்தக் கடிதத்தில் இருந்த வார்த்தைகள் ஏற்படுத்திய கோபம் இன்னொரு பக்கம்…

கதிரின் முகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச சந்தோஷமும் மெல்ல மறைந்தது.

கதிர் அந்தக் கடிதத்தை வாசித்து முடிக்க, அவன் கையில் இருந்த கடிதம் அப்படியே கீழே தவறி விழுந்தது.

அதை எடுத்துப் படித்த கந்தன், சில நொடிகள் எதுவும் பேசாமல் கதிரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“இன்னும் இவ திருந்தல மச்சான்…” என்று மட்டும் சொன்னவன், அதற்கு மேல் என்ன சொல்லிக் கதிருக்கு ஆறுதல் சொல்வது என்று புரியாமல் தவித்தான்.

அப்போது அந்த அறைக்குள் ஓடி வந்த நிலா,

“கதிர்… நம்ம வீட்டு ஏஞ்சலை கொடு…” என்றவள், கதிரின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சிக் கொண்டு அதன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.

அவளுக்கு ஏற்கனவே தன் அண்ணனின் குழந்தைக்கு இருக்கும் பிறவிக் குறைபாடு தெரிந்துதான் இருந்தது.

“என் செல்லம்… அத்தையைப் பாரு… இங்க பாரு… உன் கந்தன் மாமாவைப் பாரு…” என்று குழந்தையிடம் கொஞ்சியவள்,

“ஆமா… கண்மணி எங்க?” என்று கேட்டாள்.

கந்தன் எதுவும் சொல்லாமல் தன் கையில் இருந்த கடிதத்தை நிலாவிடம் கொடுத்தான்.

அதை வாங்கிப் படித்த நிலா,

“ச்சி… என்ன பொம்பள இவ…” என்று கோபமாகச் சொன்னவள், அடுத்த நொடியே தன் உடன்பிறந்த சகோதரனின் நிலையை எண்ணி கவலைப்பட்டாள்.

அங்கே இருந்த யாராலும் யாரையும் பார்க்க முடியவில்லை.

யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

அந்த அறையே ஒருவிதமான அமைதியில் மூழ்கியிருந்தது.

அப்போது…

கதிரின் பெண் குழந்தை வீரென்று அழத் தொடங்கியது.

அந்த அழுகைச் சத்தம்…

“அப்பா… இனி எனக்கு எல்லாமே நீ தான்… என்னைத் திரும்பிப் பாரு…” என்று அவனிடம் சொல்லுவது போலக் கதிருக்குத் தோன்றியது.

கதிர் குழந்தையைப் பார்த்தவன்,

“நிலா… என் பிள்ளைக்குப் பால் ஏற்பாடு பண்ணு…” என்றான்.

“கதிர்… பாப்பாக்கு தாய்ப்பால் தான் நல்லது…” என்று நிலா சொல்ல,

“தாயே இல்ல… எங்கிருந்து தாய்ப்பால்…” என்று கதிர் விரக்தியாகப் பேசினான்.

“கதிர்… என் செல்லத்துக்குத் தாய்ப்பால் தான் குடுக்கணும். இரு… நான் வரேன்…” என்ற நிலா வேகமாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.

“நிலா… எங்க போற?” என்று கதிரும் கந்தனும் அவளைத் தொடர்ந்து செல்ல, நிலா நேராகச் சென்றது முல்லையை வைத்திருந்த சிகிச்சை அறைக்குத்தான்.

நிலாவின் கையில் இருந்த குழந்தை பசியில் அழுது கொண்டிருக்க,

“ஏய்… இவ என்ன பண்றா?” என்று கதிர் புரியாமல் கேட்டான்.

நிலா அந்த அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்ற அடுத்தச் சில நொடிகளில் கதிரின் பெண் குழந்தையின் அழுகைச் சத்தம் அடங்கியது.

அதற்குப் பதிலாக, குழந்தை பசியாறிக் கொண்டிருக்கும் அமைதியான சத்தம் மட்டும் கேட்டது.

கதிரின் கண்கள் கலங்கின.

அவன் கண் முன்னே முல்லை, கதிரின் பெண் குழந்தைக்குப் பசியாற்றிக் கொண்டிருந்தாள்.

அந்தக் காட்சியைப் பார்த்த கதிரால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.

“டேய் மச்சான்…” என்று கந்தன் அவன் தோளைப் பிடித்தவன், “வா…” என்று அவனை ஆறுதலாக வெளியே அழைத்துச் சென்றான்.

அதே நேரத்தில் மருத்துவமனை வாசலில் மங்கலத்தின் அடியாட்கள் வந்து இறங்கினர்.

அதைப் பார்த்த கந்தன் மீண்டும் கதிரை முல்லை இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.

“மச்சான்… அவனுங்க போற வரைக்கும் நம்ம வெளிய போக வேண்டாம்…” என்று கந்தன் சொல்ல,

“டேய்… அவனுங்களுக்குப் பயந்து நம்ம ஏன்டா மறையணும்? இரு… அவனுங்கள…” என்று கோபமடைந்த கதிர், தன் கையை முறுக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான்.

“டேய் மச்சான்… நில்லுடா…” என்று கந்தன் அவனைத் தடுக்க முயற்சி செய்ய,

அதற்குள் மருத்துவமனை வாசலில் நின்றிருந்த அடியாட்களை அங்கேயே தடுத்து நிறுத்தும் அளவுக்குக் கதிர் அவர்களை அடித்துத் தள்ளினான்.

கண்மணிமீது இருந்த கோபம்…

அவள் எழுதிய அந்தக் கடிதம் கொடுத்த வலி…

என்று எல்லாமே சேர்ந்து அந்த அடியாட்கள்மீது கதிரின் கோபமாக வெளிவந்தது.

“கதிர்… போதும் டா…” என்று கந்தன் அவனைப் பிடித்துப் பின்னால் இழுத்தவன்,

“இவனுங்களுக்காக நீ பிரச்சனையில சிக்காதே…” என்று சொல்லிக் கொண்டே கதிரை மீண்டும் முல்லை இருந்த அறைக்குள் இழுத்து வந்து கதவைச் சாத்தினான்.

வெளியே என்ன நடந்தது என்று எதுவுமே புரியாமல் முல்லை கதிரையும், கந்தனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அவள் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தின் வலியும், கடந்த சில மணி நேரமாக அவள் மனதில் இருந்த பயமும் அவளுடைய வலியை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

“கந்தா… என்னாச்சு?” என்று நிலா கேட்க,

“காட்டுல நம்மள துரத்திகிட்டு வந்த ஆளுங்க எப்படியோ மோப்பம் பிடிச்சு இங்க வந்துட்டாங்க. அவங்கள கதிர் அடிச்சுத் தள்ளிட்டான்…” என்றான் கந்தன்.

“வாவ்… சூப்பர்!” என்ற நிலா,

“கந்தா… நீங்க பண்ண வேண்டிய வேலையெல்லாம் கதிர் பண்ணுறான் பார்த்தீங்களா?” என்று கேட்டாள்.

“ஹாங்… என்னால பண்ண முடியாது தான் மா… ஏன்னா அந்தக் காட்டுக்குள்ள நம்ம பார்த்த முகேஷ்… பெரிய பேக்ரவுண்ட் இருக்குற பண முதலை. அவனை எல்லாம் பகைச்சுக்கிட்டு டிபார்ட்மென்ட்ல வாழ முடியாது.” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட நிலா எதுவும் பேசாமல் அமைதியானாள்.

அதே நேரத்தில்…

முல்லை கதிரின் பெண் குழந்தைக்குப் பசியாற்றி முடித்திருந்தாள்.

குழந்தை அமைதியாக அவள் அருகில் இருந்தது.

முல்லை வலி நிறைந்த குரலில்,

“டாக்டர்…” என்று நிலாவை அழைத்தாள்.

ஆனால்…

அவளுடைய பார்வை மட்டும் கதிரின் மீதுதான் இருந்தது.

அவளுடைய கண்களில் இருந்த அந்தப் பார்வையைக் கதிரும் கவனித்தான்.

“என்ன முல்லை… குழந்தை தூங்கிட்டாளா?” என்று நிலா கேட்டவள், முல்லையின் கையில் இருந்த கதிரின் பெண் குழந்தையைத் தன் வசம் வாங்கிக் கொண்டு,

“ரொம்பத் தேங்க்ஸ் முல்லை…” என்றாள்.

“ஐயோ… நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்…” என்ற முல்லை, சில நொடிகள் தயங்கினாள்.

“என்னையும்… நான் பெத்த பிள்ளையையும் காப்பாத்த இந்த உலகத்துல யாருமே இல்லைன்னு நினைச்சு ரொம்பப் பயந்துட்டேன்…” என்றாள்.

அவள் குரலில் இருந்த பயத்தைக் கேட்ட நிலா,

“ஆமா… உங்களுக்கு என்னதான் பிரச்சனை? ஏன் அவங்க உங்க குழந்தையை உங்ககிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறாங்க? உங்க husband எங்க?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி கேட்டதும் முல்லையின் விழிகள் ஈரமாகின.

கதிரின் பார்வையும் அவள் மீதுதான் இருந்தது.

முல்லை என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று கதிரும் ஆவலுடன் காத்திருக்க,

அப்போது…

“டாக்டர்… டாக்டர்…” என்று பதற்றத்துடன் ஓடி வந்த நர்ஸ்,

“Patient முல்லையோட குழந்தைக்கு breathing trouble ஆச்சு டாக்டர்… உடனே வாங்க டாக்டர்!” என்றதும், கதிர் வேகமாக குழந்தையை பார்க்க ஓடினான்.

தொடரும்….

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!