“சிந்து யாரையாவது காதலிச்சு ஏமாந்திருப்பாளோ, அதான் விரக்தியா பேசுறாளோ?” என ஷாலினி சொல்ல அதிர்ச்சி ஆகினான் வருண்.
அந்த நாள் முழுக்க வருண் யாரையாவது காதலிச்சு ஏமாந்து இருப்பாளோ என்ற எண்ணம் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது,
‘யாரை காதலிச்சிருப்பா, எப்படி ஏமாந்திருப்பா?’ என்ற கேள்விகள் அவன் மனதில் வந்து போனது
சிந்து வேலையில் சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆனது.அலுவலகத்தில் பேசும் நபர்கள் கூட இவர்கள் தான்.
இன்னும் இவர்களிடம் கூட ஒரு
அடி தள்ளியே தான் இருக்கிறாள். சிந்துவைப் பற்றி யாரிடம் கேட்பது என மனம் முழுவதும் குழம்பியிருக்க வேலை செய்ய முடியாமல், அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
நண்பர்கள் அனைவரும் ஏன் வீட்டுக்கு போற என்று கேட்டிருக்க தலைவலி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு, எதையும் மனசுல போட்டு குழப்பிக்கிறாத, எல்லாம் நல்லதே நடக்கும்” என்று அவன் மனதறிந்து பேசினர்கள்.
வீட்டுக்கு வந்த வருண் அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்.
காலையில் காதலை சொல்ல வேண்டும் என்று ஆசை ஆசையாக சென்றவன்,
மதியனத்தில் மனம் முழுவதும் பாரம் நிரம்பி இருக்க, சோபாவை விட்டு எழுந்து மெத்தையில் போய் விழுந்தான்.
இன்பம் துன்பம் எது வந்தாலும் இசையிலேயே குளிர் காயும் வழக்கத்தை கொண்டவனோ
அவன் சிந்தனையை மாற்றும் பொருட்டு, அங்கிருந்த எஃப் எம் இல் பாடலை ஒளிர விட்டான்.
“பெண்ணே நீயும் பெண்ணா, பெண்ணாகிய ஓவியம் “என்று ஒலிக்க, காலையில் சிந்து வெள்ளை நிற சுடிதாரில் ரோஜா பொக்கேயோடு தன் அருகே வந்தது ஞாபகம் வர அவனுடைய புலம்பிய மனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது,
அந்தப் பாடல் ஒலிக்க ஒலிக்க தன்னை மாதவனாகவும், சிந்துவை ஜோதிகாவாகவும் நினைக்க தொடங்கி விட்டான்.
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டு ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க சரிகை செய்த நெற்றி
பனி பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான்
மொழிகள் இனிக்கிறது
பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டு ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்….
என்ற பாடலை கேட்டுக்கொண்டே தூக்கத்தை தழுவியிருந்தான் நம் நாயகன்.இரண்டு மணி நேரம் தூங்கி இருப்பான் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
எழுந்து கதவை திறக்க, ஐம்பது வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்
“யாருமா நீங்க?என்ன வேணும்”
“ராகவ் தம்பி இல்லையா?”
“நீங்க”
“உங்க வீட்டுக்கு எதிர்த்த வீட்ல தான் தம்பி நான் இருக்கேன்,கொஞ்சம் கால்ல அடிபட்டு இருக்கு.என் மருமக வேற இன்னும் ஆபீஸ்ல இருந்து வரல,
அதான் ராகவ் தம்பி இருந்தால் என் பேரன்ன கூட்டிட்டு வரச் சொல்லலாமேன்னு வந்தேன்” என அந்த பெண்மணி சொல்ல வருணுக்கு புரிந்து விட்டது.
“அம்மா நீங்க நேத்து ராகவ் வண்டில…..” என இழுக்க,
“ஆமா தம்பி அது நான் தான்”
“கால் வலியெல்லாம் குறைஞ்சு இருக்காமா?”
“கொஞ்சம் குறைஞ்சி இருக்குதுய்யா, ஒரு வாரம் ஆகும்னு டாக்டர் சொன்னாரு”
“ம்! மருந்து மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கிருங்க சீக்கிரம் குணமாயிரும்”
“ சரி தம்பி, அப்புறம்
ராகவ் தம்பி நம்பர் இருந்தால் தாங்களேன், நான் தம்பி கிட்ட விஷ்வத்த வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிப் பார்க்கிறேன்” என அந்த பெண்மணி கூறினார்.
“இல்லம்மா நானே போய் கூப்பிட்டு வரேன்”
“நீங்களா? “
“ஆமாம்மா”
“உங்களுக்கு பிரச்சனை இல்லையே?”
“இல்லம்மா ஒன்னும் பிரச்சனை இல்ல நான் போய் கூட்டிட்டு வந்துடறேன்” என்றான் வருண்.
அந்தப் பெண்மணியிடம் அவர்களது பேரனின் ஸ்கூலையும், அவனின் பெயரையும் கேட்டுவிட்டு, அவனுடைய புல்லட் சாவியை எடுத்துக்கொண்டு கதவையும் பூட்டிவிட்டு ஸ்கூலை நோக்கி விரைந்தான்,
ஸ்கூலுக்குச் சென்று, விஷ்வத் என கேட்க அங்குள்ள ஆசிரியர் விஷ்வத்தை கூட்டிக் கொண்டு வந்தார்,
குண்டு குண்டு கன்னங்களோடு, வசீகரிக்கும் கண்களைக் கொண்ட, அந்த ஐந்து வயது மழலையை, சூர்யாவிற்கு பார்த்த உடனே பிடித்து போய்விட்டது
“ஹாய் “
“ஹாய் அங்கிள்” என்றான் விஷ்வத்.
“சரி வா போகலாமா உங்க பாட்டி உன்னைய கூட்டிட்டு வரச் சொன்னாங்க” எனச் சொல்ல வேகமாய் தலையசைத்தான் விஷ்வத்.
இருவரும் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வந்தனர். அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது புல்லட்டில் வருண் ஏறி உட்கார,
“அங்கிள் இது புல்லட்டா? எனக்கு புல்லட் பைக்னா ரொம்ப பிடிக்கும், நம்ம இதுல தான் போறோமா ஜாலி….ஜாலி…”என சொல்லிக்கொண்டே மிகவும் குஷியானான்,
அவனைப் பார்த்த வருணிற்கும் குஷியானது. புல்லட் என்றால் வருணுக்கும் மிகவும் விருப்பம், அதனால் தான் கார் வாங்கும் செல்லும்அளவுக்கு வசதி இருந்தாலும் வாங்காமல் புல்லட்டில் வந்து கொண்டிருக்கிறான்.
ராகவ் எத்தனையோ முறை “மச்சி நீ ஒரு கார் வாங்க வேண்டியது தானே, எத்தனை காலத்துக்குடா இந்த புல்லட்டிலேயே சுத்திக்கிட்டு இருப்ப” என கேட்டுப் பார்த்து விட்டான்.
ஆனால் வருணுக்கு பைக் பிடிக்கும் என்பதால் இன்னும் பைக்கிலே போய்க் கொண்டிருக்கிறான்.
“அங்கிள் நானும் பெரியவனாகி இதே மாதிரி ஒரு பைக் வாங்குவேன்” என விஷ்வத் சொல்ல,
“பைக் சின்னதா தானே இருக்கும் நீ பெரிய காரா வாங்கு” என வருண் கூறினான்.
“இல்ல அங்கிள், எனக்கு கார் வேண்டாம், எனக்கு பைக் தான் பிடிக்கும், நான் பைக்ல தான் போவேன்” விஷ்வத் கூறியதை கேட்க சிரிப்பு வந்தது.
வருண் விஷ்வத்தை பைக்கில் முன்னாடி உட்கார வைத்து, பைக்கை செலுத்த,
“வேகமாபோங்க…வேகமா போங்க..” என தன் கைகளை நீட்டி, ரசித்துக்கொண்டே கூறினான்,
இருவரும் பைக்கில் சென்ற அந்த பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றனர்,
அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் பைக்கை நிறுத்திவிட்டு, “உனக்கு ஐஸ் கிரீம் பிடிக்குமா?”என வருண் விஷ்வத்திடம் கேட்க,
“ரொம்ப பிடிக்கும் அங்கிள்,
ஆனா அம்மா சாப்பிட விட மாட்டாங்க,
சளி பிடிக்கும்னு சொல்லுவாங்க,
அம்மாவுக்கு தெரியாம பாட்டிகிட்ட வாங்கி கேட்டாலும்,
உன் அம்மா என்னை திட்டுவானு பாட்டியும் வாங்கி தர மாட்டாங்க” என அவன் முகத்தை சோகமாக வைத்தான்
“வா இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்”
“வேண்டாம் அங்கிள்,அம்மா திட்டுவாங்க” என கூறினான் விஷ்வத்.
“நம்ம ஐஸ்கிரீம் சாப்பிடுறது உங்க அம்மாவுக்கு தெரியாது”என வருண் சொல்ல
“நெஜமாவா?” என கேட்டான் விஷ்வத்,
“ஆமாம்” என்று சொல்லிவிட்டு கடைக்குச் சென்று ஐஸ்கிரீமை வாங்கி இருவரும் சுவைத்தனர். பின்பு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வர,
அங்கே முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் போதையில்
சண்டை போட்டுக் கொண்டிருந்தான்,
அந்த இளைஞனிடம், விஷ்வத்தின் பாட்டி பேசிக் கொண்டிருந்தார்,
“ஏண்டா இப்படி எங்க உயிரை வாங்குற?
உங்க உன் கண்ணுல படாம இருக்கிறது தானே இங்கே வந்தோம்.
இங்க வந்து எங்கள வாழ விட மாட்டியா?” என கேட்டுக்கொண்டே தன் கண்ணில் வழிந்த நீரை தன் முந்தானையால் துடைத்தார்.
அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டே வருண் தன்னுடைய பைக்கை அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்துவதற்காக செல்ல”அங்கிள் அங்க போகாதீங்க போகாதீங்க….
அந்த ஆளு நம்மள பாத்தா ரொம்ப அடிப்பாரு” என்று பயந்து கொண்டே கூறினான்.
“ பயப்படாத நான் போகல, ஆனால் யாரு அவரு” என்று வருண் கேட்க
“அது எங்க அப்பா” என விஷ்வத் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றான் வருண்
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள்