Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 1

CHAPTER 1

மனசு – 1

By karuppiahrajesh70@gmail.com · October 1, 2026

0

​மதில் தாண்டுமா மனசு-1

​தமிழகத்தின் முன்னணி வர்த்தக மையமான விருதுநகரில், ஆனந்தன் ஒரு குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர். பெரும் கோடீஸ்வரர் இல்லை என்றாலும், அந்த வட்டாரத்தில் அவனது உழைப்புக்கும் நேர்மைக்கும் நல்ல பெயருண்டு. கழிவுப் பஞ்சு நூலைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதை நூற்புச் சுற்றுகளாகப் (கழி) மாற்றும் பத்து ராட்டு எந்திரங்கள் கொண்ட சிறிய ஆலை ஒன்றை நடத்தி வந்தான்.

​அந்த ஆலையின் மூலம் பத்து பெண் தொழிலாளர்கள், ஒரு மேற்பார்வையாளர், பண்டலிங் எந்திரத்தை இயக்கும் மூவர், லோடு ஏற்ற இறக்க உதவும் தொழிலாளர்கள் என மொத்தம் இருபது குடும்பங்களுக்கு அவன் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தான்.

​முப்பத்தைந்து வயதைக் கடந்தும் ஆனந்தன் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்வதற்கு அவனது தம்பி சந்தோஷே முக்கிய காரணம்.

சந்தோஷ் பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றியவன். முப்பது வயதானாலும் இன்னும் குழந்தையைப் போலத்தான் அவனைப் பராமரிக்க வேண்டும். அவனாகச் சுயமாக எழுந்து நடப்பதற்கே பத்து ஆண்டுகள் பிடித்திருந்தன. “அக்கா”, “அம்மா”, “ஆனா” என்ற மூன்று வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குப் பேசத் தெரியாது.

​தன்னிலை அறியாது எச்சில் வடிப்பதும், இருக்கும் இடத்திலேயே கழிப்பிடத் தேவைகளை முடித்துக் கொள்வதுமாக இருக்கும் சந்தோஷைப் பார்க்கும் பெண் வீட்டார், “இந்த வீட்டில் நம் மகள் எப்படி வாழ முடியும்?” என்று அஞ்சி ஆனந்தனுக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.

​தாயார் கனகம், “கல்யாணம் முடிந்த கையோடு என் மூத்த மகனைத் தனிக்குடித்தனம் அனுப்பி விடுகிறேன்” என்று பெண் வீட்டாரிடம் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். ஆனால் ஆனந்தனோ, “என்னால் என் தம்பியையோ வீட்டையோ பிரிந்து வர முடியாது” என்று கடைசி நிமிடத்தில் திட்டவட்டமாகக் கூறி விடுவான்.

​இப்படியே இருபத்தைந்து வயதில் தொடங்கப்பட்ட அவனது திருமணப் பேச்சுவார்த்தைகள், பத்து ஆண்டுகள் கடந்தும் முப்பத்தைந்து வயதில் தொடர்கதையாகவே நீடித்தது.

அவன்தான் நம் கதையின் நாயகன்…

​ஆனந்தனின் தங்கை மீனா. அவளது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால், தற்போது தாய் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். அவளுக்கு ‘மதுமிதா’ என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டிப் பெண் குழந்தை உண்டு. மது, அருகில் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்து வருகிறாள். தினமும் அவளைப் பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு, பிறகு தனது வேலைக்குச் செல்வது ஆனந்தனின் வழக்கமான நடைமுறை.

​அன்றும் அதே போல் ஆனந்தன் மதுவைப் பள்ளியில் கொண்டு வந்து விடும்போது, கேட் அருகே சில சிறுவர்கள் ஒரு தெரு நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு, “இது என்னுடையது, என்னுடையது!” என்று சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனந்தன் அதைக் கடந்து பள்ளியின் வாயிலில் மதுவை இறக்கிவிட்டான்.

​

அப்போது மது, “மாமா, நாய்க்குட்டி சூப்பரா இருக்குல்ல? எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா?” என்று ஆசையாய்க் கேட்டாள்.

​உடனே ஆனந்தனுக்கு வீட்டிலிருக்கும் தம்பியின் நினைவு வந்தது. “வீட்ல ஏற்கனவே இருக்கிறவனைப் பார்த்துக்கவே ஆள் பத்தல… உனக்கு இதுல புதுசா இன்னொன்னு தேவையா?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

​

சென்ற சிறிது நேரத்தில், மதுவின் மதிய உணவுப் பை வண்டியிலேயே இருப்பதை கவனித்தான். உடனே வண்டியைத் திருப்பி மீண்டும் பள்ளிக்கு வந்தான்.

​அப்போது அங்கே ஒரு பெண், அந்தச் சிறுவர்களிடம், “நாய்க்குட்டியைக் கீழே போடுங்கப்பா, இப்படித் தொந்தரவு பண்ணக் கூடாது… பாவம் இல்ல? நீங்க குட்டியா இருக்கும்போது உங்களை உங்க அம்மாக்கிட்ட இருந்து பிரிச்சா உங்க அம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க? இந்தக் குட்டிக்கும் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படும் இல்லையா? அதனால நாய்க்குட்டியைக் கீழே விடுங்க,” என்று அன்பாகக் கண்டித்துக் கொண்டிருந்தாள்.

​வண்டியில் அமர்ந்தபடியே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு வாயிலிலேயே நின்றுவிட்டான் ஆனந்தன்.

குழந்தைகள் நாய்க்குட்டியைக் கீழே விட்டுவிட்டுப் பள்ளிக்குள் ஓடினர்.

அந்தப் பெண் அருவருப்புப் படாமல் அந்த நாய்க்குட்டியைத் தூக்கி, சாலையின் மறுபுறத்தில் இருந்த அதன் தாயோடும் மற்ற குட்டிகளோடும் சேர்த்து விட்டுவிட்டுப் பள்ளிக்குள் நுழைந்தாள்.

​

அவள் சென்ற பிறகு, ஆனந்தன் சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு கேட்டுக்கு வந்தான். அங்கிருந்த காவலாளியிடம், “செகண்ட் ஸ்டாண்டர்ட் மதுமிதாவோட சாப்பாட்டுப் பை… மறந்துட்டு வந்துட்டா, கொடுத்துடுங்க,” என்று கூறி ஒப்படைத்துவிட்டு ஆலைக்குக் கிளம்பினான்.

​தொழிற்சாலைக்குச் செல்லும் வழிமுழுக்க, குழந்தைகளிடம் அன்பாக எடுத்துச் சொல்லி, நாய்க்குட்டியை அதன் தாயிடம் கொண்டு சேர்த்த அந்த ஆசிரியை பற்றிய சிந்தனைதான் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ‘எல்லாரும் அவசர அவசரமா கடந்து போற இந்த உலகத்துல, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராம அந்தச் சின்ன உயிர்கூடக் கஷ்டப்படக் கூடாதுன்னு யோசிக்கிறாளே… யாரு இவ?’ என்று அவளது பொறுப்புணர்ச்சியையும் கருணையையும் நினைத்துப் பார்த்துக் கொண்டே ஆலைக்குள் நுழைந்தான்.

​ஆலைக்குள் நுழைந்தவனை, “வெல்கம் அண்ணா!” என்று இன்முகத்தோடு வரவேற்றாள் சூப்பர்வைசர் சுதா.

​”எல்லாரும் வந்துட்டாங்களா சுதா?” என்றான் ஆனந்தன்.

​”தினமும் இதே கேள்விதானா அண்ணா? மிஷின் ஓடுற சத்தத்தை வச்சே எல்லாரும் வந்துட்டாங்கன்னு கண்டுபிடிக்க மாட்டீங்களா?”

​”ஆப்சென்ட் எத்தனை பேரு சுதா?”

​”சந்தோஷ் காட்டன் மில்லுக்கு வேலைக்கு வர்றவங்க ஒரு நாள் கூட லீவ் எடுக்க மாட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா அண்ணா? வீட்ல இருக்கிற டார்ச்சர் தாங்காம, இங்க வந்தா நிம்மதியா இருக்கலாம்னு ஓடி வந்துருவாங்க… நீங்க வேற!” என்று சுதா நக்கலாகச் சொல்லிச் சிரிக்க, அடுத்தடுத்த வேலைகள் சுறுசுறுப்பாகத் தொடங்கின.

​

ஆனந்தன் எந்திரங்கள் சீராக இயங்குவதையும், வேலையாட்களையும் பார்வையிட்டபடி, தனது ஷெட்டின் முன்புறமிருந்த வேப்பமரத்தடிக்குச் சென்று அமர்ந்தான். பண்டல் போடுவதற்கான லேபிள்களைச் சரிபார்த்து எண்ணிக்கையை எழுதத் தொடங்கினான்.

​அதே நேரத்தில், கான்வென்ட் பள்ளியின் ‘இரண்டாம் வகுப்பு – ஏ’ பிரிவுக்குள் புதிதாக நுழைந்தாள் ஆசிரியை அனுஷா.

​

மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, “குட் மார்னிங் மேம்!” என்று ஒரே குரலில் வரவேற்றனர்.

​

“குட் மார்னிங் டூ ஆல்!” என்று புன்னகையுடன் பதிலளித்தாள் அனுஷா.

​முன்வரிசையில் அமர்ந்திருந்த யோகவ் மற்றும் ராகவ் இருவரும், “இவங்களை நான் காலையிலயே பார்த்தேனே…” என்று அருகில் இருந்தவர்களிடம் கிசுகிசுத்தனர்.

​”நான் உங்களுக்குப் பாடம் எடுக்க வந்திருக்கிற புது மேம்… என்னைப் பிடிச்சிருக்கா?” என்று அனுஷா கேட்க,

குழந்தைகள் அனைவரும் உற்சாகமாகத் தலையசைத்தனர்.

​

“சரி, எல்லாரும் செல்ஃப் இன்ட்ரோடக்ஷன் கொடுத்துக்கலாமா? என் பேரு அனுஷா. என் சொந்த ஊரு அருப்புக்கோட்டை. இப்போ விருதுநகர்ல தங்கியிருக்கேன். எங்க அப்பா ஒரு விவசாயி. நான் சொன்ன மாதிரி நீங்களும் உங்க அறிமுகத்தைச் சொல்லுங்க பார்ப்போம்,” என்றாள்.

​

அங்கிருந்த இருபது குழந்தைகளும் தங்களது பெயர், தெருவின் பெயர் மற்றும் தந்தையின் தொழிலைப் பற்றிக் கூறி அமர்ந்தனர்.

​மதுமிதாவின் முறை வந்ததும், “என் பேரு மதுமிதா. நாங்க விருதுநகர் காமராஜர் ஃபர்ஸ்ட் தெருவுல இருந்து வர்றோம்…” என்று கூறித் தன் தந்தையைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டு அமர்ந்தாள்.

​

அடுத்து, மதுவின் தோழி அனுஜா எழுந்து நின்று, “என் பேரு அனுஜா,” என்றாள்.

​உடனே அனுஷா புன்னகையுடன், “நம்ம ரெண்டு பேர் பேரும் ஒன்னுதான் போலயே!” என்றாள் செல்லமாக.

அதைக் கேட்டு மதுமிதாவுக்கு லேசாகப் பொறாமை ஏற்பட்டது.

​தொடர்ந்து யோகவின் முறை வர, “என் பேரு யோகவ். மேம்… நீங்க காலையில என்கிட்ட இருந்துதானே அந்த நாய்க்குட்டியை வாங்குனீங்க? ஞாபகம் இருக்கா?” என்றான்.

​”அது நீதானா யோகவ்? நீ நாய்க்குட்டி வளர்க்கணும்னா முதல்ல வீட்ல அம்மா அப்பாகிட்ட பர்மிஷன் வாங்கணும். நீ பாட்டுக்குத் தெருவுல போற குட்டியையெல்லாம் பிடிச்சுட்டுப் போனா, வீட்ல வேண்டாம்னு சொன்னா என்ன பண்ணுவ? அப்படியே தெருவுல விட்டுட்டா அது பாவம் இல்லையா? அம்மாவைப் பிரிஞ்சு அழும்ல?” என்று மீண்டும் அவனுக்கு அன்பாக அறிவுரை கூறினாள்.

​அருகில் இருந்த ராகவ் எழுந்து, “மேடம், அந்த நாய்க்குட்டி எங்க வீட்டு நாய் போட்ட குட்டி மேடம்! அதான் நான் இவனுக்குக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன். இனிமே பிடுங்குனா பாருங்க!” என்றான்.

​”ஓகே ஓகே… நான் அந்த நாய்க்குட்டியை உங்க வீட்டுப் பக்கத்துலயே பத்திரமா விட்டுட்டேன். சரி, இப்போ நாம பாடத்துக்குப் போகலாமா?” என்று சிரித்தபடியே வகுப்பைத் தொடங்கினாள் அனுஷா.

​

மாலை நேரம்… மதுவை அழைப்பதற்காகப் பள்ளிக்கு வந்திருந்தான் ஆனந்தன். பள்ளி முடிந்து வெளியே வந்த மது, ஆனந்தனின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

​

வீட்டிற்குச் செல்லும் வழியில், “மாமா… காலையில நாம ஒரு நாய்க்குட்டி பார்த்தோம்ல? அந்தச் சண்டையைக் காம்ப்ரமைஸ் பண்ணி விட்டது யாரு தெரியுமா?” என்று கேட்டாள் மது.

​

“யாரு மது?”

​”எங்க கிளாஸ்க்கு வந்திருக்கிற புது மேம்தான்! அவங்க எவ்வளவு சூப்பரா பாடம் நடத்துறாங்க தெரியுமா?”

​

“அப்படி இன்னைக்கு என்ன காம்ப்ளிகேட்டடான சப்ஜெக்ட்டைப் பத்திச் சொல்லிக் கொடுத்தாங்க?” என்று ஆனந்தன் வேடிக்கையாகக் கேட்க,

​”கடவுள் வாழ்த்து!” என்றாள் மது.

​

“ரொம்ப டப்பான சப்ஜெக்ட்தான்!”

​”நீ கிண்டல் பண்ற… போ, நான் சொல்ல மாட்டேன்!” என்று சிணுங்கினாள்.

​”மது… மது, சாரிடா! அந்த மேம் பேரு என்ன மது?”

​”அவங்க பேரு அனுஷா. என் கூட உட்கார்ந்து இருப்பாளே அனு, அவளோட பேரும் அவங்க பேரும் ஒன்னுதான். ஏன் மாமா, எனக்கு அனுஷான்னு பேரு வச்சிருக்கலாம்ல?”

​

ஆனந்தன் சிரித்துக் கொண்டே, “உங்க அப்பாவுக்கு இந்த பேருதான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு வச்சுட்டாருடா,” என்றான்.

​”அனுவோட பேரும் மேமோட பேரும் ஒன்னா இருக்கறதால அவ பண்ற அலப்பறை இருக்கே… தாங்க முடியல! அவங்க பேரை ‘மதுமிதா’ன்னு வச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…” என்று சோகமாகச் சொல்லிக் கொண்டே வர, இருவரும் வீட்டை வந்து சேர்ந்தார்கள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!