மதில் தாண்டுமா மனசு — 3
வருணின் வீட்டிலிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்து ஏமாந்துபோனாள் அனுஷ
நாட்கள் நகர, வருணின் முதலாண்டு நினைவு நாளும் வந்து சேர்ந்தது. ‘இனிமேல் அவர்கள் கூப்பிட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை’ என்ற கசப்பான முடிவுக்கு வந்தவளாக, அன்றைய நாளைத் தன் நினைவுகளால் நிரப்பத் தொடங்கினாள்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, அம்மாவையும் பெரியம்மாவையும் உடன் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றாள்.
வருணின் ஆத்மா சாந்தியடையக் கோரி அர்ச்சனை செய்தாள். பின்னர், விநாயகர் சன்னதிக்கு அருகிலிருந்த அரசமரத்தடியில் அமைதியாக மோட்ச தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மூவரும் அந்த மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தார்கள்.
நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த ஆதங்கத்தை அடக்க முடியாமல் அனுஷா தன் தாயிடம் மெல்லிய குரலில் விம்மினாள், “அத்தையும் மாமாவும் என்னை ஒரு வார்த்தைகூடக் கூப்பிடாம விட்டுட்டாங்களேம்மா! அவர் இந்நேரம் உயிரோட இருந்திருந்தா… நாம இப்படி ஒரு சங்கடமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்ல?”
வனஜா அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு ஆறுதலாகப் பேசினாள், “அப்படிப் பேசக்கூடாதும்மா. உனக்குக் கணவர்னா அவங்களுக்குப் பெத்த பிள்ளை! ரெண்டு பேருக்குமே இழப்பு ஒன்னுதான்; இதுல யாருடைய துயரம் பெருசுன்னு எடைபோட்டுப் பார்க்க முடியாது. அவங்க சொந்த வருத்தத்துல உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கலாம்… அதனால்கூட உன்னைக் கூப்பிடாமல் விட்டு இருக்கலாம்.”
அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அமுதா, தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த தொலைபேசி அழைப்பை மனக்கண்ணில் ஓட்டியபடி மெளனமாக அமர்ந்திருந்தார்.
வருணின் தாயார் அன்று அமுதாவிற்கு அழைத்திருந்தார். தயக்கமும் நடுக்கமும் நிறைந்த குரலில், “சம்பந்தி அம்மா… வருண் தவறின நாள் இன்னும் ரெண்டு நாள்ல வருது… நீங்க அனுவை அழைச்சிட்டு வரப்போறீங்களா?” என்று கேட்டபோது, அமுதாவால் உடனே பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது.
அமுதாவின் மௌனத்திலிருந்த தவிப்பைப் புரிந்துகொண்ட வருணின் தாயாரே தொடர்ந்தார், “எனக்குப் புரியுது சம்பந்தி… அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கணும்னுதான் நீங்க சொந்த ஊரை விட்டே வெளியே போயிருக்கீங்க. இந்த நேரத்துல நானும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது பாருங்க. அதனாலதான் உங்களை நேர்ல கூப்பிடல. ‘ஒரு வார்த்தைகூடச் சொல்லலையே’ன்னு நீங்க வருத்தப்படக் கூடாதுன்னுதான் போன் பண்ணேன். அவ வருணை மறந்துட்டு புது வாழ்க்கையைத் தொடங்கணும்; வருணும் அதைத்தான் விரும்புவான். அவன் விருப்பத்தை அவ புரிஞ்சிக்கிற நாள் சீக்கிரம் வரணும். நானும் அனுவுக்காக வேண்டிக்கிறேன்… என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி…”
வருணின் தாயார் அத்தனை அன்போடு பேசியதும், அமுதா கட்டுப்படுத்த முடியாமல் “சம்பந்தி அம்மா…” என்று கதறி அழுதே விட்டாள்.
“பரவாயில்லைம்மா, நீங்க மனசைத் தளரவிடாதீங்க… கண்டிப்பா நல்ல காலம் பிறக்கும்” என்று தேற்றிவிட்டு இணைப்பைத் துண்டித்திருந்தார் வருணின் தாய்.
“அம்மா… ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?” – அனுஷாவின் குரல் அமுதாவை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது.
தியானம் கலைந்தவள் போல் விழித்த அமுதா, “ஒன்னும் இல்லடி அனு… இந்த வயசுல நீ இந்தச் சடங்கும் சம்பிரதாயமும் செய்ய வேண்டியிருக்கேங்கிற அங்கலாய்ப்புதான் எனக்கு” என்றாள் பெருமூச்சுடன்.
”நான் ஆசைப்பட்டா அம்மா இதையெல்லாம் செய்யறேன்? என்னோட வருண் ஏதோ ஒரு உலகத்துல சந்தோஷமா இருக்கணும்ங்கிற நம்பிக்கைலதான் இதைச் செய்யறேன்…”
’நீ இல்லாதவனைச் சந்தோஷப்படுத்த நினைக்கிறாய்; நானோ என் பொண்ணு என் கண்ணெதிரே சந்தோஷமா இல்லையேன்னு துடிக்கிறேன்’ – தன் மனதிற்குள் குமுறிய அமுதா, வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு போலியான புன்னகையைச் சிந்தி, “சரி, நேரம் ஆச்சு… புறப்படலாம்” என்று எழுந்துகொண்டார்.
வனஜாவும் அனுஷாவும் அவருடன் இணைந்து வீட்டிற்குச் சென்றார்கள். அன்றைய பொழுது அனுஷா பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி வருணிற்கு நினைவஞ்சலி செலுத்தினாள். அவனோடு கழித்த ஒவ்வொரு இனிமையான தருணங்களையும் மனக்கண்ணில் ஓடவிட்டபடி, தன் கடந்த கால நினைவுகளுக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள்.
சந்தோஷ் காட்டன் மில்லில்…
அங்கே பிரம்மாண்டமாக நின்றிருந்த வேப்பமரத்தடியிலிருந்த கல்பலகையில், அன்றைய நாளிதழ் காற்றில் சடசடவெனப் புரண்டு கொண்டிருந்தது.
ஆனந்தன் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு அந்த நிழல் இருக்கைக்கு வந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து சுதாவும் அங்கே வந்து அமர்ந்தாள்.
காற்றில் புரண்ட நாளிதழில் ‘கல்யாண மாலை’ பக்கம் திறந்திருப்பதை ஆனந்தன் பார்த்தும் பார்க்காதது போல் கடந்து தனது வேலையைக் கவனிக்க,
சுதா அதை உற்று நோக்கினாள். ‘அண்ணன் இதைப் பார்த்துத் தயங்குகிறாரோ’ என்று தவறாகப் புரிந்து கொண்டவள், அவனைத் தேற்றும் பொருட்டு, “ஏன்னா… இந்த மாதிரி எதுலயாவது உங்க பேரை ரிஜிஸ்டர் பண்ணியிருக்கலாமே அண்ணா?” என்று வினவினாள்.
ஆனந்தன் நிமிர்ந்து, “எதுல ரெஜிஸ்டர் பண்ணனும்?” என்று நிதானமாகச் சுதாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
”அதான்… பேப்பர்ல இருக்குற கல்யாண மாலை விளம்பரத்துல!”
ஆனந்தன் உதட்டில் மெல்லிய புன்னகை அரும்ப, “எனக்குப் பொண்ணு கிடைக்கலையேன்னு நான் வருத்தப்படுறேன்னு நினைச்சியா சுதா?” என்றான்.
சுதாவுக்கு அதற்குச் சரியாகப் பதில் சொல்லத் தெரியாமல் ‘ஆமாம்’, ‘இல்லை’ என்பது போல் நாலாபுறமும் தலையசைத்தாள்.
ஆனந்தன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான், “நிஜமான காரணம் என்ன தெரியுமா? நான் என் குடும்பத்தைக் கைவிட்டா, அடுத்த நிமிஷமே எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடும். என்னை பெத்த அம்மாவே எனக்குக் கல்யாணம் நடக்கணும்ங்கிறதுக்காக என்னை எப்பவோ விட்டுக் கொடுத்துட்டாங்க. ஆனா, என் குடும்பத்தை இழந்து அந்தச் சுகம் எனக்கு வேண்டாம்ங்கிற வைராக்கியத்துலதான் நான் கல்யாணமே வேணாம்னு இருக்கேன். அன்னைக்கே நான் சம்மதிச்சிருந்தா, இந்நேரம் எனக்கு 10 வயசுல ஒரு குழந்தை இருந்திருக்கும்” என்று மெலிதாகச் சிரித்தபடி தொடர்ந்தான்.
”சரி சுதா, நான் இதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கல… பேப்பர்ல வேற ஏதாவது முக்கியமான செய்தி இருக்கான்னுதான் பார்த்தேன். நீ எடுத்து வை, நான் சாப்பிட்டு வந்துடுறேன்” என்று கூறிவிட்டு மதிய உணவிற்காக வீட்டிற்குப் புறப்பட்டான்.
ஆனந்தன் சென்றதும் அங்கிருந்த பணியாளர்களும் ஓரிருவராகச் சாப்பிட வெளியே வந்து அமர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு சுதா தனியாக அமர்ந்தபோது, அவளோடு சுகந்தியும் வந்து சேர்ந்துகொண்டாள்.
சுகந்தி, “என்ன சுதா… இவ்ளோ லேட்டா சாப்பிடற? எப்பவும் எல்லாருக்கும் முன்னாடியே சாப்பிட்டு முடிப்பியே, இன்னைக்கு என்ன ஆச்சு?” என்றாள்.
”நம்ம ஆனந்த் அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கேன்னு அதைப்பத்தியே யோசிச்சுட்டே இருந்தேன்கா… அதான் நேரம் போனதே தெரியல.”
”ஹும்… நீ எவ்வளவு யோசித்தாலும் அவருக்குக் கல்யாணம் நடக் போறது இல்லைடி!”
”ஏன்கா அப்படிச் சொல்றீங்க?” என்று சுதா வியப்புடன் கேட்டாள்.
”உன்னோட ஆனந்த் அண்ணன் கல்யாணத்துக்குப் போடுற நிபந்தனை அப்படி!”
”அப்படி என்ன கண்டிஷன் போடுறாரு?”
“கல்யாணம் முடிஞ்சாலும் அம்மாவும் தம்பியும் கூடவே இருக்கணும், அவங்களை விட்டு நான் ஒரு அடியும் நகர மாட்டேன்னு அடம் பிடிப்பாரு.”
சுதா ஆச்சரியமாக, “அது எப்படி உனக்கு இவ்வளவு நிச்சயமா தெரியுது கா?” என்று கேட்டாள்.
சுகந்தி ஒரு நொடி தயங்கி, குரலைத் தாழ்த்தி, “நான் அவரோட தாய்மாமா பொண்ணு சுதா… முதன்முதலில் என்னைத்தான் அவருக்குக் கட்டி வைக்கணும்னு எங்க அத்தை ரொம்ப ஆசைப்பட்டுச்சு. பெரியவங்க எல்லாம் பேசி முடிவும் பண்ணிட்டாங்க. ஆனா கடைசி நேரத்துல, தாய்மாமான்னுக்கூட பார்க்காம எங்க அப்பாவைப் பார்த்து, ‘நான் என் குடும்பத்தை விட்டு வர மாட்டேன்… உங்க பொண்ணை வேற ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுங்க’ன்னு வெட்டொன்று ஒன்னு இரண்டாகச் சொல்லிட்டாரு.”
சுதா தயக்கத்துடன், “அக்கா… நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. ஆனந்தன் அண்ணா பார்க்க நல்லா லட்சணமாத்தானே இருக்காரு, அவர் மேல உங்களுக்கு ஆசை இல்லையா?”
சுகந்தி பெருமூச்சோடு தொடர்ந்தாள், “நான் மட்டும் ஆசைப்பட்டா போதுமா சுதா? அந்த உணர்வு அவருக்கும் இருக்கணும்ல? ‘என் அத்தை பையன்தானே… எங்க அப்பா சொல்ற கண்டிஷனுக்குச் சம்மதிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க, தாலி கட்டுன பிறகு நாம என்ன வேணா செஞ்சுக்கலாம், உங்க வீட்டிலேயே இருந்துக்கலாம்’னு சொல்லி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். ‘அடங்க மாட்டேன்டி… மரியாதையா போயிடு’ன்னு விரட்டி அடிச்சுட்டாரு. என்னோட மூத்த பையன் பிறக்குற வரைக்கும் அவரோட மூஞ்சியிலேயே முழிக்காம இருந்தேன். அப்புறம் என் வீட்டுக்காரர் ஃபாரின் போன பிறகுதான் குடும்ப சூழ்நிலைக்காக இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தேன்.”
திருணமாகாத இளம் பெண்ணான சுதாவிற்கு வியப்பும் அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது. “அக்கா! உங்களுக்குள்ள இப்படி ஒரு கதை இருக்குன்னு எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே கா… ஆமா, அவர் வீட்டுல அப்படி என்ன பிரச்சனை இருக்குன்னு அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு உங்க அப்பா கண்டிஷன் போட்டாரு?”
சுகந்தி சுற்றிலும் முகம் திருப்பி, குரலை இன்னும் தாழ்த்தி, “அந்த வீட்ல ஒரு பிராப்ளமும் கிடையாதுடி… இவரோட தம்பி, அதான் நம்ம மில்லோட பேருல இருக்கானே சந்தோஷ்… அவன் ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவன். அவன் வீட்ல இருக்கிறதால அந்த வீடே ஒரு மாதிரி கழிவறை நாற்றம் அடிக்கும். நின்ற இடத்திலேயே எல்லாமே பண்ணிடுவான்; கக்கூஸ் வருதுன்னுகூட சொல்லத் தெரியாத அளவுக்கு ஒருத்தன் இருக்கிற வீட்டுக்கு நம்ம பொண்ணு போனா நிம்மதியா வாழ முடியாதுன்னு எங்க அப்பா யோசிச்சாரு. ஒரு நல்ல தகப்பன் அப்படித்தானே யோசிப்பாரு? ஆனா ஆனந்துக்கு அவனோட தம்பியைக் குறை சொல்றதாவும், அந்த வீட்டைக் குறை சொல்றதாவும் நினைச்சுட்டு கண்ணை மூடிட்டு கத்த வந்துருவாரு. நானும் அவர் மேல இருக்குற ஆசையில எவ்வளவு தூரம் மன்றாடிக் கேட்டிருப்பேன் தெரியுமா? என்னை அவர் அலட்சியப்படுத்தினதுக்கு இப்ப எப்படி தனியா நிற்கிறாரு பாரு! இப்ப மட்டும் இல்ல, இனிமேல் அவரோட வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்… உணர்ச்சியே இல்லாத ஜென்மம்!” என்று ஆத்திரத்துடன் கூறிய சுகந்தி, பாதி சாப்பிட்ட சாப்பாட்டுப் பாத்திரத்தை வேகமாய் மூடி வைத்துவிட்டு, கை கழுவிக்கொண்டு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.