மதில் தாண்டுமா மனசு — 19
சனிக்கிழமை… வாரத்தின் இறுதி நாள் என்பதால், அன்று ராட்டை ஓட்டியவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கூட்டி எழுதிக்கொண்டிருந்தாள் சுதா.அப்போது ஆனந்தன் தன் இருசக்கர வாகனத்தைக் கம்பெனிக்குள் கொண்டுவந்து நிறுத்தினான். வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருந்த சுதா அவனைப் பார்த்து ஆச்சரியத்துடன், “என்ன அண்ணா, கல்யாணம் முடிஞ்ச மறுநாளே வேலைக்கு வந்துட்டீங்க? கம்பெனியை நாங்க கடத்திட்டு போயிடுவோம்னு பயந்துட்டீங்களா?” என்றாள்.
வண்டியை நிறுத்தியபடியே, “அப்படியெல்லாம் இல்லை சுதா. வீட்ல சும்மாவே இருக்க ஒரு மாதிரியா இருந்தது, அதான் ஒரு விசிட்…” என்றான் ஆனந்தன்.
”சரிங்க அண்ணா… அண்ணி நல்லா இருக்காங்களா?”
ஆனந்தன் புன்னகைத்தபடி, “நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுற மாதிரி விசாரணை எல்லாம் பலமா இருக்கே!” என்றான்.
“அண்ணி புதுசுதானே அண்ணா…”
”அண்ணி சூப்பரா இருக்காங்க!”
“அண்ணி சூப்பரா இருக்கிறதாலதானே நீங்க கட்டிக்கிட்டீங்க?” என்று கண் சிமிட்டியவள், “சரிங்க அண்ணா, நான் பேசிட்டே இருந்தா கணக்கு மாறிடும்” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையில் கவனத்தைத் திருப்பினாள்.
“ஓகே சுதா, நான் உள்ள ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு முதல் அறைக்குள் நுழைந்தான் ஆனந்தன்.அங்கே இருந்த பெண்களும் அவனை அன்பாக வரவேற்றனர். “பொண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே சார்? கல்யாணத்துக்குத்தான் எங்களைக் கூப்பிடல, இங்கேயாவது ஜோடியா பார்த்திருப்போம்ல!” என்று செல்லமாக முறைத்துக் கொண்டனர். அவர்களின் பாசமான பேச்சைக் கேட்டுச் சிறிது நேரம் பேசிவிட்டு, அடுத்த அறைக்குச் செல்ல வெளியே வந்தான்.
அங்கே ராட்டை ஓடும் சத்தத்தில் ரகசியம் பேச முடியாது என்பதால், சுகந்தி சத்தமாகவே அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாள்.”ராணி, உன்னோட ஓனருக்குக் கல்யாணம் நடந்தது மறந்துடுச்சா? புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வேலைக்கு வந்துட்டாரு போல!”
”சத்தமா பேசாத சுகு! பக்கத்து ஹால்லதான் இருக்காரு…” என்றாள் ராணி.
“நான் என்ன தப்பாவா கேட்டுட்டேன்? காசு சேர்க்கிறது மட்டுமே குறிக்கோளா இருக்குற மனுஷன், கல்யாணம் முடிச்சா மட்டும் எப்படிப் பொண்டாட்டியை கவனிச்சுக்க முடியும்? துட்டு சம்பாதிக்க ஓடி வந்துட்டாரு! மத்தவங்களுக்காகக் கல்யாணம் பண்ணிட்டு, பொண்டாட்டியை வீட்டுக்குப் காவலுக்கு வச்சிட்டு வேலைக்கு வந்துட்டாருன்னு சொன்னேன்… இதுல என்ன தப்பு?”
“அவரு உன் சொந்தக்காரருதானே சுகு, அந்த தைரியத்துல பேசுற…”
“நான் மட்டுமா பேசுறேன்? நம்ம விருதுநகர் முழுசும் அப்படித்தான் பேசுறாங்க!”
அடுத்த ராட்டிலிருந்த அம்மு, “சுகந்தி, நீங்க நெருங்கிய சொந்தக்காரங்கதானே? உங்களையுமா கல்யாணத்துக்குக் கூப்பிடல?” எனக் கேட்டாள்.
அம்முவிற்கு எதிரில் ராட்டை ஓட்டிக்கொண்டிருந்த பரணி, “சுகந்தி, ஆனந்துக்குச் சொந்த தாய்மாமா பொண்ணு!” என்று கூடுதல் தகவலைப் பகிர்ந்தார்.
ராணி ஆச்சரியத்தோடு, “சொந்த மாமன் மகளைக் கல்யாணத்துக்குக் கூப்பிடலையா சுகந்தி?” என்று இழுத்தாள்.
அம்மு, சுகந்தியை வெறுப்பேற்றும் விதமாக, “ஆனந்த் பொண்ணு கேட்டு வந்தப்பக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிருப்பீங்க, அதான் கூப்பிடாம விட்டுட்டாரோ என்னவோ?” என்றாள்.
சுகந்தி சீற்றமாய், “இப்ப லட்ச லட்சமா கொடுத்துப் பொண்ணைக் கட்டிட்டு வந்த மாதிரி, அன்னைக்கு எங்க அப்பாகிட்ட லட்ச லட்சமா கொடுத்திருந்தா கட்டிக் கொடுத்திருப்பார்! இன்னைக்கு வந்த காசும் பணமும் பகட்டும் அன்னைக்கு இல்லாம இருந்த நேரத்துலயே, எங்க அப்பா பொன்னையும் பொருளையும் சேர்த்துக் கொடுத்துப் பொண்ணு தர்றேன்னு கேட்டதுக்கே வேண்டாம்னு வீராப்பா போனவரு இவர்! இன்னைக்குப் பணம் வந்து சேர்ந்ததும் பொண்ணையே விலைக்கு வாங்குற அளவுக்குப் பெரிய ஆளாயிட்டாரோ? எல்லாம் காலக்கொடுமை. இவர் வேண்டாம்னு சொன்னதும் நான் என்ன கல்யாணம் பண்ணிக்காம அப்படியேவா இருந்துட்டேன்? எனக்கும் கல்யாணம் முடிஞ்சு புள்ள குட்டி இருக்கு; என் புருஷனும் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிருக்காரு!” என்று கோபமாகப் பொரிந்து தள்ளினாள்.
அவள் சொன்னதைக் கேட்ட ஆனந்தனுக்கு நெஞ்சில் சுரீர் என்றது. உள்ளே சென்று அவளைக் கண்டித்துவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால், தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து, வேப்பமரத்து அடியில் அமர்ந்திருந்த சுதாவிடம் வந்தான்.
சுதா, “என்ன அண்ணா, முறைப்பொண்ணு ரொம்ப முறைக்கிறாங்களா?” என்று சிரித்தபடி கேட்டாள்.
ஆனந்தன் முகம் இறுக, “சுதா, இந்த வாரத்தோட சுகந்தியை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லி, கணக்கை முடிச்சு அனுப்பிடு” என்றான்.
“என்ன அண்ணா… அவ்வளவு தூரத்துக்கா அந்தப் பொம்பளை பேசிடுச்சு? அப்படி என்னதான் சொல்லிச்சு?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.
“நான் புதுப் பணக்காரன் ஆன பவுஸைக் காட்டுறதுக்காக, லட்ச லட்சமா கொடுத்துப் பொண்ணை விலைக்கு வாங்கி கல்யாணம் செஞ்சிருக்கேன்னு சொல்றா…”
”அவங்க சொன்னா அது உண்மையாயிடுமா அண்ணா? அண்ணியோட அழகுக்கும் குணத்துக்கும் கோடி கோடியா கொட்டிக் கொடுத்துக் கூட்டிட்டு வரலாம்! எத்தனை கோடி கொடுத்தாலும் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தாதானே தாலி கட்ட சம்மதிப்பாங்க? அண்ணிக்கு உங்களைப் பிடிச்சிருக்கு!”
சுதா இறுதியாகச் சொன்ன அந்த வார்த்தை, அவன் மனதிற்குள் தித்திப்பைத் தந்ததோ என்னவோ… மெல்லிய புன்னகை அவன் உதடுகளில் படர்ந்தது.”அதெல்லாம் அவங்களுக்கும் தெரியும் அண்ணா, ஏதோ வயிற்றெரிச்சல்ல பேசுறாங்க, பேசிட்டுப் போகட்டும்! இதை எதுக்கு நீங்க ஃபீல் பண்றீங்க?” என்று சுதா சமாதானப்படுத்தியதும்,
ஆனந்தன் லேசான மனதுடன், “சரி சுதா, நான் வீட்டு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு, மகிழ்ச்சியான மனநிலையோடு அங்கிருந்து புறப்பட்டான்.வீட்டில்,
கனகமும் அனுஷாவும் சாப்பிட்டு முடித்து சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது கனகத்தின் கைப்பேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் அவர் அழைப்பை ஏற்க,
மறுமுனையில், “அண்ணி, நான் வனஜா பேசுறேன்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
“சொல்லு வனஜா…” என்றார் கனகம்.
“முதல்ல எங்க பொண்ணு நடந்துக்கிட்டதுக்கு எங்களை மன்னிச்சுக்கோங்க அண்ணி. அவள்தான் வேணும்னு நீங்க அடம் பிடிச்சுக்கேட்ட கோபமும், நாங்க ஆனந்தனை கட்டிக்க சொல்லி வர்புறுத்தி சம்மதிக்க வச்சுட்டோம்ங்கிற கோபமும் அவளுக்கு இருந்ததால அப்படி நடந்துக்கிட்டா. மத்தபடி நல்ல தங்கமானவள்.”
“அவளை பிடிச்சதால் தானே, இவ நம்ம மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன்.”
“நீங்க எதையும் நினைச்சு மனசை குழப்பிக்காதீங்க அண்ணி!” என்றாள் வனஜா.
“சரி வனஜா, நான் எதையும் தப்பா நினைக்கல. நீங்க மறுவீடு அழைப்புக்கு வரலைன்னும் வருத்தப்படலை. சரி, அவளோட துணிமணிகளைக் கொடுத்து விடுங்க…” என்றார் கனகம்.
“கார்த்திக் துணிமணியை எடுத்திட்டுவர்ரான்.”
“சரி நீங்களும் அவகிட்ட நேரம் கிடைக்கும்போது பேசுங்க. நேற்றை விட இன்னைக்குக் கொஞ்சம் தெளிவா இருக்கிற மாதிரி தெரியுது; போகப் போகத் தன்னை மாத்திப்பாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று கனகம் நம்பிக்கை தெரிவித்தார்.
வனஜா, “சரி அண்ணி” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
தொலைபேசி இணைப்பைத் துண்டித்த சில நிமிடங்களிலேயே, அனுஷாவின் துணிமணிகள் அடங்கிய பையுடன் கார்த்திக் அங்கே வந்து நின்றான்.
அவனிடம் பையைப் பெற்றுக்கொண்ட கனகம், அவனுக்கும் உணவு கொடுக்க முயன்றார். ஆனால், கார்த்திக் உள்ளே கூட வராமல் அங்கிருந்தபடியே கிளம்பிச் சென்றுவிட்டான்.
கனகம் அந்தப் பையை அனுஷாவிடம் நீட்டி, “அனும்மா, உங்க அண்ணன் உன்னோட புடவை துணிமணிகளைக் கொடுத்துட்டுப் போறான் பாரு” என்றார்.அதை வாங்கிக்கொண்ட அனுஷா,
“கார்த்திக்கை உள்ள கூப்பிடலையா அம்மா?” என்று ஏக்கமாகக் கேட்டாள்.
“நான் கூப்பிட்டாலும் அவன் வர மனநிலையில் இல்ல, ரொம்ப வேகமாப் போயிட்டான் அனுஷா” என்று கனகம் கூறிவிட்டு நகர்ந்தார்.
அனுஷா தன் உடைகளை ஆனந்தனின் அறைக்குள் எடுத்துச் சென்று பீரோவில் வைத்துவிட்டு, அப்படியே கட்டிலில் அமர்ந்தாள். நேற்று தன் அண்ணன் என்று கூடப் பாராமல் கார்த்திகை அவமானப்படுத்தி அனுப்பியதை அவள் எண்ணிப் பார்த்தாள். தன் திருமணத்திற்காகத் தன் பெரியம்மா தனது சொந்த மகனையே தள்ளிவைத்துவிட்டு, நாடகமாடி தன்னை இந்த ஊருக்கு அழைத்து வந்ததையும், தன் அண்ணன் தனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத் தாயைப் பிரிந்து தனி வீடு பிடித்நு வழ்ந்ததையும் எண்ணிப் பார்த்தவளுக்கு, இதையெல்லாம் நினைத்துச் சந்தோஷப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியாமல் மனம் தவித்தது. ஆனாலும் பெரியம்மா குடும்பத்தின் தியாகத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாதே. நீர் தேங்கிய கண்களோடு நிதானம் இல்லாமல் அமர்ந்து விட்டாள்.