Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 20

CHAPTER 20

மனசு – 20

By karuppiahrajesh70@gmail.com · November 3, 2026

0

​மதில் தாண்டுமா மனசு — 20​

அனுஷா தன் பெரியம்மாவின் குடும்பத்தைப் பற்றிச் சிந்தித்து அமர்ந்திருந்த வேளையில், அந்தத் தெருவைச் சேர்ந்த சில மூத்த சுமங்கலிப் பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.​அவர்களைக் கண்டதும் கனகம், “வாங்க பங்கஜம் மாமி, வாடி சியாமளா! தங்கம், அன்னம், அழகு, சங்கரி… என்ன எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க?” என்று மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரித்தார்.​வந்திருந்த பெண்கள் சிலர் சோபாவிலும், சிலர் தரையிலும் அமர்ந்தனர். புதிதாக வந்தவர்களைக் கண்ட சந்தோஷ், தன் வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக, “ஆகா… ஆகா… போ… போ!” என்று உரக்கக் கனைத்தான். படுக்கையறைக்குள் இருந்த அனுஷாவிற்கு அவனது குரல் கேட்க, தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.​கனகம் சந்தோஷின் வாயை அடைப்பதற்காகச் சில விளையாட்டுப் பொருட்களையும் இரண்டு பிஸ்கட்டுகளையும் கையில் கொடுத்து, “அப்படிச் சொல்லக் கூடாதுடா… நீ இதைச் சாப்பிடு,” என்று அவனைச் சமாதானப்படுத்தி நகர்த்த முயன்றார். அவன் அவர்களை முறைத்துப் பார்த்தபடியே அமைதியாக அமர்ந்துகொண்டான்.​தங்கம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “மீனாவையும் அவ பொண்ணையும் காணோமேக்கா?” என்று முதல் விசாரணையைத் தொடங்கினார்.​”ரெண்டு பேரும் மாடியில அவங்க அப்பா கூட போன்ல பேசிட்டு இருக்காங்க,” என்றார் கனகம்.​சியாமளா, “அவ இருந்தா தம்பியைச் சரியா கண்ட்ரோல் பண்ணுவா… சரி சரி, இப்போ அமைதியாத்தானே இருக்கான்!” என்றதும், கனகம் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தார்.​அனுஷா புதிதாக வந்திருந்தவர்களைப் பார்த்தபடி நிற்க, அவர்கள் முகத்தில் மெல்லிய புன்னகை நிலவியது. அனுஷா மரியாதை நிமித்தமாகக் கரம்கூப்பி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தாள்.​அவளைப் பார்த்தவுடன் பங்கஜம் மாமி, “கனகம்! உனக்கு ஒரு பையன் இருக்கான், அவனுக்குக் கல்யாணம் செஞ்சிருக்க… தெருவுக்குள்ள யாருக்கும் ஒரு வார்த்தை சொல்லலையே ஏன்? அப்படின்னு சண்டை போடுறதுக்குத்தான் நாங்க எல்லாரும் வந்திருக்கோம்!” என்றார்.​கனகம் சற்றுத் தயங்கி, “பையனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம்மா. ஆனா, ரொம்ப வருஷம் கழிச்சு நடக்குறதால, இந்த வயசுல ஊரைக் கூட்டி விழா நடத்த வேண்டாம், சுருக்கமா முடிச்சுக்கலாம்னு சொன்னான். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. அதான்…” என்று நிறுத்தினார்.​சங்கரி, “சரிங்கம்மா, ஊர் மொத்தத்தையும் கூப்பிட வேண்டாம்… பக்கத்து வீட்டுக்காரங்க எங்களுக்குக் கூடவா ஒரு வார்த்தை சொல்லக் கூடாது?” எனக் கேட்க, கனகம், “சின்னப் பிள்ளைக பேச்சைக் கேட்டு நானும் மதியை இழந்துட்டேன்,” என்றார்.​அழகு குறுக்கிட்டு, “நீங்கதான் கூப்பிடல… நாங்களும் அப்படிக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? அப்புறம் ஒருத்தர் முகத்துல ஒருத்தர் முழிக்க வேண்டாமா? அதான் நாங்களே வந்துட்டோம். நாங்க வந்ததுல உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே?” என்றார்.​”நான் அழைக்காமலேயே இத்தனை பேர் வந்திருக்கிறதுக்கு நான் வருத்தப்படுவேனா? சந்தோஷம்தான்! இருங்க, சாப்பிட்டுட்டுப் போகலாம்,” என்று கனகம் சொல்ல, அனுஷா உடனடியாகச் சமையலறைக்குள் புகுந்தாள்.​பங்கஜம் மாமி, “எம்மா எம்மா புதுப்பொண்ணு! ஒன்னும் வேண்டாம்மா… நீ எதுவும் செய்யாத,” என்று அவளைத் தடுக்க முயன்றார்.​அனுஷா, “நான் எதுவும் சமைக்கல மாமி, குடிக்கத் தண்ணீர் கொண்டு வரேன்,” என்றாள்.​அன்னம் சிரித்தபடி, “தண்ணிதானா… ஒரு காபி கொடுப்பேன்னு பார்த்தேன்!” என்றார்.​அனுஷா புன்னகைத்தபடி, “சரிங்க, காபி கொண்டு வரேன்,” என்று சொல்லிச் சமையலறைக்குள் செல்ல, கனகத்தின் இதழ்களில் தன்னையறியாமல் ஒரு புன்னகை அரும்பியது.​சியாமளா, “பொண்ணு அழகா இருக்கு, குணமும் நல்ல குணமா இருக்கு! அதைப் பார்த்து நாங்க கண்ணு போட்டுருவோம்னு பயந்துதானே எங்களையெல்லாம் கல்யாணத்துக்கு அழைக்கல?” என்று கிண்டலாகக் கேட்க, தங்கம், “நம்ம கனகம் அம்மாவுக்கு அந்த அளவுக்கு யோசிக்கத் தெரியாது… நீங்க ரொம்ப கற்பனை பண்ணிக்கிறீங்க!” என்று வம்பு இழுக்க, அங்கு இருந்த பெண்கள் அனைவரும் கலகலவெனச் சிரித்தனர்.​சிறிது நேரத்தில் அனைவருக்கும் காபியும் பலகாரமும் கொண்டு வந்து கொடுத்தாள் அனுஷா. அனைவரும் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.​அனுஷாவிற்கு அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாட்களாக இருந்தன. அதைத் தொடர்ந்து இரண்டு மாத காலக் கோடை விடுமுறை என்பதால், “ஆனந்தன், என்னுடைய தம்பிக்குச் சேவை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வார்த்தைகளை அவள் தன் மனதின் முதன்மைக் கடமையாக ஏற்றுக் கொண்டாள்.​அந்த இரண்டு மாத விடுமுறை காலத்தையும் சந்தோஷிற்குச் சிறு சிறு பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கவும், பேசப் பழக்கவும் தன் நாட்களைச் செலவழித்தாள். வீட்டில் இருந்த மற்றவர்கள் அதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டனர்.​மீனா வீட்டில் நடக்கும் தினசரி நிகழ்வுகளைத் தன் கணவனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்து வந்தாள். ஆனந்தன் மற்றும் அனுஷாவின் திடீர் திருமணத்தைப் பற்றியும், அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பாராமுகத்தைப் பற்றியும் மீனா ஒவ்வொரு நாளும் வருத்தத்துடன் கூறி வந்தாள்.​மீனாவின் கணவன் சங்கர், “இருவருக்கும் போதுமான தனிமையையும் அவகாசத்தையும் கொடுத்தால், அவர்கள் ஒன்றி வாழ்வதற்கு வழி பிறக்கும்,” என்று யோசனை கூறினார்.​அதைத் தொடர்ந்து மீனா, சங்கர் அனுப்பிய பணத்தைக் கொண்டு தெருவின் கடைக்கோடியில் புதிதாக ஐந்து சென்ட் நிலம் வாங்கிப் போட்டிருந்தாள். அதில் தற்போது வீடு கட்டி, அம்மாவையும் தம்பியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது கணவன்-மனைவி இருவரின் தீர்மானமாக இருந்தது.​சங்கர், ஆனந்தனுக்குத் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். திரையில் எண்ணைக் கண்டவுடன் ஆனந்தன் மலர்ந்த முகத்தோடு, “சொல்லுங்க மச்சான்!” என்றான்.​சங்கர், “மாப்பிள்ளை! நம்ம இடத்துல வீடு கட்டணும். அப்படியே என்னோட அம்மா, அப்பாவையும் அங்கே கூட்டிட்டு வந்து பக்கத்துல வச்சுக்கலாம்னு நினைக்கிறேன்,” என்றான்.​”தாராளமா செஞ்சிடலாம் மச்சான்!” என்றான் ஆனந்தன்.​சங்கர் தொடர்ந்தான்: “அப்போ இந்த வைகாசியில கால் ஊன்றி, வாஸ்து பூஜை ஆரம்பிச்சிடுங்க. மீனா அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை இப்போதைக்கு வச்சுக்கோங்க. மேற்கொண்டு தேவைப்பட்டா நான் அனுப்பி வைக்கிறேன். பற்றாக்குறை இருந்தா அவளோட நகைகளைக் கொஞ்சம் அடகு வச்சுக்கோங்க.”​ஆனந்தன் உறுதியான குரலில், “என்னென்ன தேவையோ நானே பார்த்துச் செஞ்சிடுறேன். எவ்வளவு செலவாகுதுன்னு உங்களுக்கு அப்பப்போ கணக்குக் கொடுக்கிறேன். மீனா கிட்ட வேணுங்கிற பணத்தை வாங்கிக்கிறேன். நீங்க எதையும் யோசிச்சுக் கவலைப்படாதீங்க. வைகாசியில நீங்க சொன்ன மாதிரியே நல்ல முகூர்த்த நாள் பார்த்துடலாம்,” என்றார்.​”டபுள் பெட்ரூம் இருக்கிற மாதிரி இருந்தா போதுமில்லையா?” என்று ஆனந்தன் கேட்க,​”டபுள் பெட்ரூம் ஓகேதான். ஆனா மாடியும் சேர்த்து அமைச்சா நல்லா இருக்கும்னு பாக்குறேன். பின்னாடி தனியா எடுத்துச் செய்ய முடியாது இல்லையா?” என்றான் சங்கர்.​”ஓகே மச்சான்! முதல்ல கீழே எப்படி வருதுன்னு பார்த்துட்டு, அதுக்குள்ள முடிஞ்சா சரி. மேற்கொண்டு செய்ய ரொம்ப செலவாகும்னா அதைக் கைவிட்டுடலாம்.”​”சரி, நீங்க பார்த்துச் செய்யுங்க,” என்று சங்கர் தொடர்பை முடித்துக்கொண்டான்.​அதைத் தொடர்ந்து, இரண்டு மாத கால விடுமுறை முடிந்து அனுஷாவும் மதுமிதாவும் பள்ளிக்குச் சென்று விட்டார்கள். அந்த மாதத்திலேயே வந்த முதல் முகூர்த்த நாளில் மீனாவுக்கு வீடு கட்ட கால்நாவு செய்யப்பட்டு வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டது.​வாஸ்து பூஜைகள் செய்ய மீனா மற்றும் மதுமிதா, ஆனந்தன் குடும்பத்திலிருந்து ஆனந்தன், அனுஷா, சந்தோஷ், கனகம் என்று அனைவரும் அந்த காலி மனையில் கூடி நின்றனர். தலைமை கொத்தனார் பூஜைகளைத் தொடங்கினார். சிறிய குழி தோண்டி, அதில் நவதானியம் இட்டு, பால் ஊற்றி, பூ தூவி பூஜை செய்தார்.​அவரைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான மீனா அதேபோல பூஜை செய்தாள். அதேபோல மதுமிதா பூஜை செய்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் வரிசையாக அதேபோல பூஜை செய்தனர்.​சந்தோஷ் மனநிலை குன்றியவன் என்பதால் அவனை பூஜை செய்ய விடாமல் பிடித்து நிறுத்திக் கொண்டிருந்தார் கனகம். உடனே கொத்தனார், “தம்பி கிட்டயும் கொடுத்துப் போடச் சொல்லுங்க,” என்று அழைக்க, கனகம், “வேண்டாம், அவனுக்கு அதெல்லாம் செய்யத் தெரியாது, சும்மா சாமி கும்பிடட்டும்,” என்றார். ஆனால் கொத்தனார் வலுக்கட்டாயமாக சந்தோஷை நிறுத்தி, அவன் கைகளில் நவதானியத்தை அள்ளிக் கொடுத்து, “இதைக் குழிக்குள்ள போடுடா,” என்றார்.​அவன் சிரித்துக்கொண்டே அதைத் தன் வாயில் போட்டுக் கொள்ள முயன்றான். கனகம் பதறி, “துப்புடா… துப்புடா…” என்று சொல்ல, அவனோ நரநரவென்று அதை மென்று விழுங்க ஆயத்தமானான்.​கனகம் வருத்தத்துடன், “தான்னால் சாப்பிட்டு பழகுனாலும் பழகினான், இப்படி எதைக் கொடுத்தாலும் வாயில போட்டுக்கிட்டு திங்க மட்டும்தான் பழகிக்கிட்டு இருக்கான்!” என்று ஆதங்கப்பட, அனுஷாவிற்கு தான் கற்றுக் கொடுத்த பாடத்தில் ஏதேனும் பிழை இருக்குமோ என்ற சிறு வருத்தம் மனதிற்குள் தோன்றியது.​கொத்தனார் புன்னகையோடு, “நவதானியம் உடம்புக்கு ஆரோக்கியமானதுதானேம்மா, சாப்பிட்டாலும் விடுங்க, சாப்பிடட்டும்,” என்று சமாதானம் கூறினார்.​அனைவரும் ஒன்றாக நின்று வாஸ்து பகவானை வழிபாடு செய்துவிட்டு, முதல் செங்கலை மதுமிதாவிடம் கொடுத்து வைக்கச் சொன்னார் கொத்தனார். மதுமிதா தன்னுடைய ஆசிரியருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அனுஷாவை அழைத்து, “அத்தை, நீங்க என்னோட சேர்ந்து கல்லை வையுங்க,” என்று அழைத்தாள்.​ஆனால், அனுஷாவிற்குத் தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவள் என்ற எண்ணம் மனதிற்குள் ஆழமாக இருந்ததால், “இல்லை பாப்பா… நீயே போய் வைடா,” என்று தயங்கினாள். மதுமிதா விடாமல் வலுக்கட்டாயமாக அனுஷாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தன்னோடு செங்கலைப் பிடிக்கும்படி வற்புறுத்தி, இருவருமாகச் சேர்ந்து முதல் கல்லை நட்டு வைத்தார்கள்.​கல்லை நட்டி முடித்த பிறகு, அனுஷா தயக்கத்தோடும் பயத்தோடும் மீனாவின் முகத்தை எப்படி இருக்கிறதோ என்று நோக்கினாள். ஆனால், மீனா மிகுந்த மகிழ்ச்சியோடு, “சூப்பர் மது! சூப்பர் அண்ணி!” என்று இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாகப் புன்னகையுடன் பேசினாள்.​

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!