Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 18

CHAPTER 18

மனசு-18

By karuppiahrajesh70@gmail.com · October 27, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 18 ​

ஆனந்தன், அனுஷாவின் திருமணத்திற்கு மறுநாள் விடியல்.​அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது கனகத்தின் குரல். தூக்கக் கலக்கத்தோடு இருக்கும் இளையமகன் சந்தோஷை எழுப்ப அவர் படும்பாடும், அதையொட்டிய சத்தமும் அந்தச் சிறிய வீட்டின் சுவர்களில் எதிரொலித்தது. அந்தச் சத்தத்தில் ஆனந்தனும் அனுஷாவும் ஒரே நேரத்தில் விழித்துக் கொண்டனர்.​நடப்பது என்னவென்று அறியத் தயக்கத்துடன் கதவைத் திறந்த அனுஷா, வாசலில் எட்டிப் பார்த்தாள். தூக்கம் சொட்டும் கண்களுடன் தளர்ந்த நடையில் நின்ற சந்தோஷைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கழிவறையில் நிறுத்தினார் கனகம். அரைகுறையாகத் தன் இயற்கைக் கடன்களை முடித்துவிட்டுத் திரும்பியவனை, மீண்டும் அதே பாசத்தோடு அழைத்து வந்து படுக்கையில் படுக்கவைத்தார்.​திரும்பும்போது வாசலில் நின்ற அனுஷாவைப் பார்த்த கனகம், சற்றே நிம்மதியான மூச்சுடன், “இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தாலும் படுக்கையிலேயே ஒன்னுக்குப் போய்விட்டிருப்பான்; அதான் எழுப்பி கூட்டிட்டு வந்து படுக்க வச்சேன். நீ எதுக்கு இந்த நேரத்துல எழுந்திருச்சு வந்த? போய் தூங்கு,” என்றார்.​அனுஷா அமைதியாகத் தலையசைத்துவிட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள். தரையில் விரிக்கப்பட்ட படுக்கையில் விழித்தெழுந்து அமர்ந்திருந்த ஆனந்தன், “என்ன?” என்பது போல் அவளது முகத்தைப் பார்த்தான்.​அவளது விழிகளில் தேங்கியிருந்த குழப்பம் அவனுக்கும் புரிந்தது. ஆனந்தன் ‘ஒன்றும் இல்லை’ என்பது போலத் தலையை லேசாக அசைத்தான்.​சிறிது தயக்கத்திற்குப் பிறகு, மெல்லிய நடுங்கும் குரலில் அனுஷா கேட்டாள்:”இனிமே இந்த ரூமுக்குள்ள நம்ம இப்படித்தான் இருக்கப் போறோம்… உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?”​அவளைக் சில கணங்கள் உற்றுநோக்கிய ஆனந்தன், குரலில் எவ்விதத் தாளமும் இன்றிச் சொன்னான்:”நான் உங்களை எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன். அதுபோல…” என்று சொல்லி அப்படியே வாக்கியத்தை நிறுத்திக் கொண்டான்.​புருவங்களைச் சுருக்கி வினவியவளிடம், அவனது குரலில் சிறு உறுதி தொனித்தது:”என்னோட வீட்ல இருக்க யாரையும் நீங்க நோகடிச்சிடாதீங்க.”​அனுஷா மறுபேச்சின்றி ‘சரி’ என்பது போல் தலையசைத்துவிட்டு, குளியலறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.​குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு அப்போதுதான் அந்த நிஜம் உறைத்தது. நேற்று, இந்த வீட்டிற்கு வந்தபோது கட்டியிருந்த அதே புடவைதான் இன்றும் அவள் மீது இருந்தது. தனக்கென்று மாற்றுத் துணியோ, பிராய்வசியான பொருட்களோ எதையுமே எடுத்துவராத அந்தத் தருணம் அவளுக்கு ஒருவிதப் படபடப்பைத் தந்தது. நேற்றிலிருந்து சரியாகச் சாப்பிடாத உடல் அவளை வதைத்தது; பசியும் கைநடுக்கமும் சேர்ந்து கொள்ள, கட்டிலின் ஒரு ஓரத்தில், ஆனந்தனின் காலடியில் சோர்வுடன் அமர்ந்தாள்.​மறுபுறம், சமையலறையில் கனகம் தன் வழக்கமான பணிகளைத் தொடங்கியிருக்க, மீனாவும் உறக்கம் கலைந்து வந்து உதவ ஆரம்பித்தாள்.​”மீனா, நீ போய் அண்ணனை எழுப்பி விடு,” என்றார் கனகம்.​மீனாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “அவளெல்லாம் ஒரு ஆளா? அவளைப் போய் நான் எழுப்பவா? நீயே போய் எழுப்பிக்கோ!” என்று எரிச்சலாகப் பொரிந்தாள்.​”கல்யாணம் முடிஞ்ச புதுப் பொண்ணை நாத்தனாதான் எழுப்பி விடணும்டி! அதுதான் சம்பிரதாயம்.”​”அந்தச் சம்பிரதாயம் எல்லாம் நம்ம வீட்டுக்குச் சரிப்படாது. நீயே போய் எழுப்பு,” என்று மீனா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.​தன் கணவனை இழந்தவள் என்ற சமூகத்தின் தயக்கமும் தளைகளும் கனகத்திற்குள் முட்டின. “அடியே! புதுசா கல்யாணம் முடிச்ச புள்ளைங்களை நான் போய் எழுப்ப முடியுமாடி?” என்று அவர் குரல் தாழ்ந்து கேட்க…​இதை வேறுவிதமாகப் புரிந்துகொண்ட மீனா, எள்ளலோடு சொன்னாள்:”நீ நினைக்கிற மாதிரியே அங்க ஒன்னும் நடந்திருக்காது; சும்மா போய் எழுப்பு.”​தன் தலையில் தானே அடித்துக் கொண்ட கனகம், ‘நாயை வேலை ஏவினா, நாய் வாலை வேலை ஏவுது’ என்று முணுமுணுத்தபடியே ஆனந்தனின் அறைக்கதவைத் தள்ளினார். கதவு லேசாகத் திறந்துகொண்டது.​உள்ளே, ஆனந்தனின் கால் அருகில் அனுஷா சோர்ந்து அமர்ந்திருப்பதைக் கண்ட கனகத்தின் முகத்தில் ஒரு நிம்மதியும் புது மகிழ்ச்சியும் பரவியது.”அனுஷா… அப்படியே குளிச்சுட்டு பூஜை ரூம்ல விளக்கேத்தும்மா,” என்றார் பாசமாய்.​ஆனந்தனின் வேண்டுகோளுக்காகவும், இந்த வீட்டின் நிம்மதிக்காகவும் இனி கனகத்திடம் முகம் கோணக் கூடாது என்று நினைத்த அனுஷா, தயக்கத்துடன் தன் குறையைச் சொன்னாள்:”அம்மா, எனக்கு மாத்து புடவை இல்ல… நான் போய் எடுத்துட்டு வந்தப்புறம் விளக்கேத்தட்டுமா?”​”அதால என்னம்மா? நான் உனக்கு புடவை தாரேன், மாத்திக்கிட்டு வந்து விளக்கேத்து,” என்று அன்போடு தன் அறைக்குச் சென்று ஒரு புதிய புடவையை எடுத்து வந்தார் கனகம்.”இது புதுப் புடவைதான். இந்தப் பங்குனி பொங்கலுக்கு ஆனந்தனும் மீனாவும் எனக்கு ஒண்ணொன்னு எடுத்திட்டாங்க. நான் ஒண்ணைக் கட்டிக்கிட்டு, இன்னொண்ணை அப்படியே வச்சிருந்தேன்,” என்று சொல்லி அவர் நீட்ட, அனுஷா நன்றியுடன் அதை வாங்கிக் கொண்டாள்.​புடவையை மாற்றிக்கொண்டு பூஜை அறையில் தீபம் ஏற்றிவிட்டு, சமையலறைக்கு வந்து கனகத்திற்கு உதவியாக அமர்ந்தாள் அனுஷா. அங்கிருந்த மீனா, அவளை ஒருவித வினோதமான, கூர்மையான பார்வையால் முறைத்தாள்.​நேற்றைய முகம் இன்று இல்லாததைக் சுட்டிக்காட்டும் விதமாக மீனா கேட்டாள்:”நேரத்துக்கு ஒவ்வொரு மாதிரி பேசுற! நேத்து ஒரு மாதிரி பேசினே, இன்னிக்கு ஒரு மாதிரி பேசிற. ஏன்?”​அமைதியைக் கைவிடாத அனுஷா, “சாரி அண்ணி… நேத்து கொஞ்சம் தலைவலி,” என்று அந்தச் சூழ்நிலையைச் சமாளித்துவிட்டு, உடனே கனகத்திடம் திரும்பினாள்.”அம்மா, நீங்கள் போய் சந்தோஷைக் கவனிங்க; நானும் அண்ணியும் மற்ற வேலைகளைப் பார்த்துக்கிறோம்,” என்றாள் பொறுப்பான மருமகளாக.​ஆனால் மீனாவுக்கு அந்தச் சமரசமும் பிடிக்கவில்லை. “எனக்கு ரொம்ப நேரம் உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது,” என்று கழண்டுகொள்ள முயன்றாள்.​உடனே கனகம் மீனாவை அதட்டினார். “அவ ஒழுங்கா பேசுறா, நீ இப்படி தலைக்கு மேல ஏறாதடி! கூட இருந்து பாரு, தம்பியை எழுப்பி பாத்ரூம் விடணும்,” என்று கடிந்துகொண்டே அங்கிருந்து நகர்ந்தார். வேறு வழியின்றி மீனா முணுமுணுத்தபடியே வேலைகளில் ஈடுபட்டாள்.​சிறிது நேரத்திற்குப் பிறகு ஆனந்தன் தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்தான். கனகம் சந்தோஷை அழைத்து வந்து அவனுக்கு அருகில் அமர்த்தினார். இருவருக்கும் இட்லிகள் பரிமாறப்பட்டன. ஆனந்தன் மௌனமாகச் சாப்பிடத் தொடங்க, சந்தோஷோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமர்ந்திருந்தான்; அவனுக்குக் கனகமே ஊட்டி விட்டார்.​இதைப் பார்த்த அனுஷா கனிவோடு கேட்டாள்:”தம்பி கையால சாப்பிட மாட்டாரா?”​சற்று வருந்தும் குரலில் கனகம் சொன்னார்: “அவருக்குப் பிசைஞ்சு சாப்பிடத் தெரியாது; எதையும் எடுத்துத் தன் வாயில வைக்க மாட்டான்.”​”சரி, நான் ஊட்டிப் பழக்கட்டுமா?” என்ற அனுஷாவின் கேள்வியில் ஒரு தாயின் பாசம் தெரிந்தது. கனகம் தன் தட்டை அவளிடம் நீட்டினார்.​தட்டில் இருந்த இட்லியை ஒரு பிடியாகப் பிடித்து, “சந்தோஷ், கையை நீட்டு,” என்றாள் அனுஷா புன்னகையுடன்.​சந்தோஷ் அவளைக் கோபமாக முறைத்துக் கொண்டே தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து நீட்டினான். அனுஷா அவன் உள்ளங்கையில் அந்த இட்லியை வைத்து, “ஆ… போட்டுக்கோ,” என்றாள்.​ஆனால் அவனோ சற்றும் யோசிக்காமல், கையில் வாங்கியதை அப்படியே அனுஷாவின் முகத்திலேயே அள்ளி எறிந்துவிட்டு, கைதட்டிச் சிரித்தான். அந்தப் பிஞ்சு மனதின் அறியாமை அதில் வெளிப்பட்டது.​பதறிப்போன கனகம், “சந்தோஷ், அப்படிச் செய்யாத!” என்றார் அதட்டலாக. ஆனந்தனும் அதிர்ச்சியோடு நிகழ்ந்ததைப் பார்த்தான்.​ஆனால் அனுஷா சற்றும் கோபப்படவில்லை. தன் முகத்தைத் துணியால் துடைத்துக் கொண்டவள், மாறாக இன்னும் கனிவோடு அவனிடம் பேசினாள்.”ஒண்ணும் இல்லம்மா, எனக்குப் பிரச்சனை இல்ல,” என்றவள், மீண்டும் ஒரு உருண்டையைப் பிடித்து அவன் அருகில் கொண்டு சென்று, “ஓகே, இப்போ இதே மாதிரி வாயில போட்டுப்பியாம்?” என்றாள்.​இந்த முறை அவனது கையைப் மென்மையாகப் பற்றிக்கொண்டு, அவன் வாய் அருகில் உணவைக் கொண்டு சென்று, “ஆ… போட்டுக்கோ,” என்றாள். வேறு வழியின்றித் தன் கையில் இருந்ததைச் சுயமாக வாய்க்குள் போட்டுக் கொண்டான் சந்தோஷ். தொடர்ந்து அவளுக்கு அவன்மீது பரிதாபமும் பாசமும் பெருக, சில பிடிகளைத் தானே ஊட்டிவிட்டாள்.​சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து வெளியே வந்தாள் மதுமிதா.​அவளைக் கண்ட மீனா பாசமாய், “மது குட்டி, கூட கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே? இன்னிக்கு லீவுதானடா?” என்றார்.​புன்னகையுடன் நின்ற மதுமிதா, “நோ மம்மி… நானும் அத்தையோட சேர்ந்து மாமாவ ட்ரெய்ன் பண்ணப் போறேன்,” என்றாள் சுறுசுறுப்பாக.​இதைக் கேட்டுச் சிரித்த கனகம், “என் செல்ல குட்டிக்கு ட்ரெய்னிங் கொடுக்க டீச்சர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுதே!” என்று பெருமிதம் கொண்டார்.​சாப்பிட்டு முடித்த ஆனந்தன் தன் அலுவலகப் பணிகளுக்காகக் கிளம்பினான். அவனது புறப்பாட்டைக் கண்ட கனகம், மெல்லிய ஏமாற்றத்துடன், “இன்னும் ரெண்டு நாள் வீட்டுல இருந்துட்டு போகலாமேடா…” என்றார்.​ஆனால் ஆனந்தன் எவ்விதத் உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், “நான் என்ன இன்னொருத்தர் கிட்டேயா வேலைக்குப் போகப் போறேன்? என்னோட மில்லு… அதை சும்மா போய் வந்து பாத்துட்டு இருக்கப் போறேன். எதுக்கு லீவு எடுக்கணும்?” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அவனது இந்த விலகல் போக்கும், ஒட்டாத தன்மையும் கனகத்திற்கும் மீனாவுக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தந்தது.​அதேவேளையில், மூலையில் நின்றிருந்த அனுஷாவின் மனமோ தவித்துப் போனது. ‘நான் இந்த வீட்டுக்கு மருமகள் கிடையாது; எப்போதும் வேலைக்காரிதான். என்னை மொத்தக் குத்தகைக்கு விலைக்கு வாங்கி வந்திருக்கிறீர்கள்… அவ்வளவுதான்!’ என்று அவள் இதயம் ரகசியமாக அழுது புலம்பியது.​சந்தோஷுக்கோ, அனுஷாவைக்கண்டால் ஏனோ ஒரு ஒவ்வாமை; அவளைப் பார்த்தபடியே முறைத்துக்கொண்டு, எச்சில் வடிந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். எதைப் பற்றியும் அறியாத பிஞ்சு மதுமிதாவோ, “பாய் மாமா!” என்று ஆனந்தனுக்குத் தன் சிறிய கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.​அந்த இல்லத்தின் சுவர்களுக்குள், உறவுகளின் சிக்கல்கள் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே சென்றன.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!