வெகு நாட்களுக்கு பின் அன்றைய விடியல் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது பிருந்தாவிற்கு. கொஞ்சம் தெளிவும் கிடைத்ததை போலிருந்தது.
நேற்றைய இரவு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தீரன் அவளிடம் அவளினை தேடி இருந்தாலும் பிருந்தா மொத்தமாய் தன்னுள் சுருண்டு சுருங்கி இருப்பாள். அவனின் கண்டிப்பான பேச்சு கொடுத்த பயம் அவனின் இந்தவித தன்மையில் கொஞ்சம் குறைந்ததைப் போலிருந்தது.
வீட்டை சுற்றிய சிறு இடத்தினில் அழகாய் அதற்கேற்றவாறு என்று மரமும் செடியும் என்று பார்க்கவே புத்துணர்வாய் இருந்தது. அங்கேயே நீண்ட நேரமாய் அமர்ந்துவிட்டாள் பிருந்தாவும்.
“அண்ணி!” என்ற குரலில் திரும்பிப் பார்க்க, நிலா நின்றிருந்தாள்.
இருவருமே புன்னகைக்க, “இங்க என்ன பண்றீங்க? அண்ணா தேடுறாங்க!” என்று நிலா சொல்லவும் புன்னகை மறைந்து தலை தாழ்த்தியவள் செயலில்,
“காபி போடவா?” என நிலா கேட்க,
“நீங்க குடிச்சீங்களா?” என்றாள் பிருந்தா.
“இனிமேல் தான். பாப்பா இன்னும் தூங்குறா. இவங்க தான் கடைக்கு போகணும் சொன்னாங்க. அதான் காபி போட வந்தேன். அண்ணா உங்களை தேடிட்டு இருக்கவும் நானும் வெளில வந்தேன்!” நிலா சொல்ல,
“இங்க என்ன பண்றீங்க?” என பின்னோடே வந்துவிட்டான் மனோதீரனும்.
“இங்க தான் இருக்காங்க ண்ணா” என்ற நிலா,
“நான் காபி போடுறேன்!” என்று சொல்லி உள்ளே செல்ல, பிருந்தாவும் அங்கிருந்து நகர்ந்தாள்.
“வானமே விடியலை. இவ்வளவு நேரமே இங்க வந்து என்ன பண்ற நீ?” என்றான் மனைவியிடம் தீரன்.
“மணியாகிடுச்சே. தூக்கம் வரல. அதான் வந்தேன்!” என்றவளுக்கு வந்த காரணம் நினைவில் வந்து சோர்வைக் கொடுத்தது.
“இங்க அப்படிலாம் எதுவும் இல்ல. உனக்கு எப்ப முடியுமோ அப்ப எழுந்தா போதும். அம்மாவே லேட்டா தான் எழுந்துப்பாங்க. அப்பா வேலைக்கு போகவும் பத்து மணியாகும். ஆறு மனிக்கு முன்னாடி எழுந்தா இப்படி தான் சுத்தி வரணும் வீட்டை!” தீரன் சொல்ல,
“ஹ்ம்!” என்றவள் அவனைக் கடந்து நடந்தாள்.
எங்கே வெளியில் இருந்தால் தீரன் அன்னையோ நிலாவின் கணவன் என யாரும் வருவார்களோ என நினைத்து அறைக்குள் சென்றுவிட, அவள் செயலகளை கவனித்து கூடவே வந்தான் மனோதீரன்.
என்னவோ அவளிடம் ஒரு வித்தியாசம். அதை கேட்க நினைத்தவன் பின் அவளுக்கு இது புது இடம் தானே பழக வேண்டுமே என நினைத்து அமைதியாகிவிட்டான்.
“காபி உனக்கும் தான் நிலா ரெடி பன்றா!” தீரன் அவளிடம் கூற,
“இதோ.. போறேன்!” என அத்தனைக்கும் தயக்கம் தான். ஒரு நிலையில் இருக்கவே முடியவில்லை அவளுக்கு. எங்கேனும் தனியே சென்றால் பரவாயில்லை என்று தோன்றியது.
“அண்ணனுக்கும் இதுல இருக்கு அண்ணி. குடுத்துடுங்க!” என நிலா மொத்தமாய் கொடுக்க,
“காபியா? நான் கொடுக்கவா?” என கேட்டவளை,
“அண்ணா கேட்டாங்க அண்ணி.” என்றாள் நிலா அவள் அதிர்வு கண்டு.
“ஓஹ்!” என்றவள் இதை என்னவென்று யாரிடம் சொல்ல என தோன்ற, தலையை மட்டும் ஆட்டி எடுத்துக் கொண்டு வந்து அறைக்குள் வைத்தாள்.
அவன் குளியலறையில் இருப்பது தெரியவும் தனக்கான காபியை மட்டும் எடுத்துக் கொண்டு மீண்டும் தோட்டத்தில் வந்து அங்கிருந்த ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
இப்படியே எத்தனை நாளைக்கு செல்ல? கூற வேண்டும் தானே? தானே தன் வாயால் தன்னிடம் இருந்து எதுவும் வாங்கிக் கொள்ள வேண்டாம் என கூறும் நிலை. மிகக் கொடியாதாய் இருந்தது பிருந்தாவிற்கு.
ஆனாலும் தெளிவுபடுத்தி விரிவாய் எடுத்து கூற தான் நினைத்தாள். தன்னைத் தீண்டத் தகாதவளாய் நடத்திய நிலை நினைவில் எழ, இங்கும் தனக்கு ஒரு எல்லை இனி பிறக்கும் என புரிந்த நொடி மனம் அங்கே சோர்ந்து நின்றுவிட்டது.
அதையும் தானே கூறி தானே ஏற்றுக் கொள்ள வேண்டும். மிகக் கொடுமையான தருணம். சொல்லாமல் இருக்கலாம் என்றால் அவள் மனசாட்சியே அவளிடம் ‘ஒருவேளை அவர்கள் நினைக்கும்படி தான் ராசி இல்லாதவளாய் இருந்தால்?’ என்ற எண்ணமே அதை மறைக்கவிடவில்லை.
இதுவரை மறைத்து நடந்த திருமணத்திற்கே இன்னும் என்னென்ன பேச்சுக்கள் எழுமோ எனும் பயமும் இல்லாமல் இல்லை.
யோசித்தபடி அங்கேயே அமர்ந்திருந்தவள் நேரமாவதை உணர்ந்து எழ, நிலா வழியனுப்ப லோகேஷ் வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.
பார்த்ததும் சட்டென்று மீண்டுமாய் அமர்ந்துவிட்டவளுக்கு வியர்த்து வர, கூடவே கண்ணீரும் பொங்கி வந்தது தன் நிலையை எண்ணி.
மேலும் ஐந்து நிமிடங்கள் கழித்து தான் எழுந்து உள்ளே சென்றாள்.ஏழரை மணியாகி இருந்தது. இன்னும் விசாலாட்சி எழுந்ததாய் தெரியவில்லை. அங்கே என்ன செய்வதென்றும் தெரியவில்லை. நிலாவும் அறைக்கு சென்றிருப்பாள் போல. யாரும் இன்றி தானும் தங்கள் அறைக்குள் சென்றாள்.
“எங்க போன? என்ன பிரச்சனை உனக்கு? எதாவது உடம்பு சரியில்லையா?” என அக்கறையாய் தான் கேட்டான் தீரன்.
“இல்ல நல்லா தான் இருக்கேன்”.
“வேற என்ன? எதுக்காக சுத்திட்டே இருக்க?”
“தூக்கம் வரல. யாரும் இல்ல. அதான் சும்மா போனேன்!” என்றவள்,
“நான் கொஞ்சம் பேசணுமே!” என்றாள் அவனின் ஆராய்ச்சியான பார்வையில்.
“ஹ்ம்!” என அவனும் கவனிக்க,
“நான் நானா கல்யாணத்துக்கு சம்மதிக்கல. நானா எதையும் மறைக்கவும் நினைக்கல” என்றவள் அவன் முகம் பார்த்து அவன் கோபம் கொள்கிறானா என கவனித்து தயங்கி பயந்து என பேச,
“சொல்லு!” என்றான் முகத்தில் எதையும் காண்பிக்காதவன்,
“நான் பிறந்தப்ப என் அம்மா இறந்தாங்க!” என்று அவள் சொல்லவும்,
“வாட்?” என தீரன் எழ,
“சந்திராம்மாவை என் அம்மாக்கு முன்னாடியே என் அப்பா கல்யாணம் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு பையன்களும் இருந்திருக்காங்க. கல்யாணத்துல பார்த்தீங்களே அவங்க ரெண்டு பேர் தான். இது எதுவும் அப்ப என் அம்மாக்கு தெரியாது. நான் பிறந்த அஞ்சு நிமிஷத்துல அம்மா இறந்துட்டாங்களாம்!” என்று சொல்ல, இது அவனுக்கு புதுசெய்தி தான். லோகேஷ் கூட இதையெல்லாம் கூறியிருக்கவில்லை.
“அப்போ என்னோட….” என பிருந்தா பேச வர,
“அண்ணா! அம்மா உங்களை கோவிலுக்கு கிளம்ப சொன்னாங்க. எட்டு மணிக்கு தான் நல்ல நேரமாம். நேத்து சொல்ல மறந்துட்டாங்களாம்!” என குரல் கொடுத்தாள் நிலா.
மணி எட்டை தொட இருக்க, பிருந்தாவைப் பார்த்தவன் அவளும் பேசுவதா வேண்டாமா என நிற்பதைக் கண்டு,”நல்ல நேரத்துல கோவிலுக்கு போய்ட்டு வந்துடலாம்!” என்றான்.
இதை மறுக்க முடியாதே? சரி என்றவள் இன்றே பேசிவிட நினைத்தாள். தன்னைப் பற்றி தெரிந்தால் கோபம் கொள்வானே சமாளிக்க வேண்டுமே என ஒரு பயம். கூடவே வீட்டைவிட்டு அனுப்பி விட்டால் என்ற ஒரு பயம் என மனம் முழுதும் அந்த நினைவிலேயே சுற்றி வந்தது.
என்னவோ கூடுதலாய் மனதின் எங்கோ ஒரு மூலையில் சிறு பிடிவாதம். அப்படி இவர்கள் தன்னை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டால் மட்டும் நிச்சயம் தான் தன் தந்தை வீட்டிற்கு செல்லக் கூடாது என்பதில்.
ஆனால் எங்கு செல்ல வேண்டும் எங்கே செல்ல முடியும் என்று கேட்டால் நிச்சயம் பிருந்தாவின் நிலை பரிதாபம் தான்.
“கிளம்பி வெளியே வந்த பிருந்தாவை மேலும் கீழுமாய் விசாலாட்சி பார்க்க,
“அத்தை!” என்றவள் அவரின் குறுகுறு பார்வையில் நெளிந்து நின்றாள்.
காலை விசாலாட்சி எழுந்து வந்த சில நிமிடங்களிலேயே நிலா அன்னையை பிடித்து வைத்து ஏகத்திற்கும் பேசிவிட்டாள்.
“மனசாட்சி இருக்குதாம்மா உங்களுக்கு? அண்ணனுக்கு இந்த வாழ்க்கை என்னைக்கும் நிலைக்கட்டும்னு ஒரு எண்ணமில்லையா? அவன் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் முழு காரணமே நீங்க தான். இப்ப மட்டும் அண்ணியை எதாவது பேசி மறுபடி குடும்பத்துக்குள்ள சண்டை வந்துச்சு… நானெல்லாம் இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் பார்த்துக்கோங்க!” என்றுவிட்டாள் நிலா.
அதற்காக எல்லாம் அமைதியாய் செல்பவர் இல்லை விசாலாட்சி. அதுவும் திருமணத்திற்கு முன்னேயே கூறிவிட்டான் அன்னையிடம் பிருந்தாவை சென்னை அழைத்து செல்ல போவதில்லை என்று. அதிலேயே கொஞ்சம் அமைதியாகி இருந்தார்.
“ஃபிரிட்ஜ்ல பூ வச்சிருக்கேன். எடுத்து வச்சுக்கோ. ஒரு மணி நேரத்துல வந்துடனும். அவன்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லிடு!” என்றவர் நகர்ந்து செல்ல, பூவை எடுத்து வைத்துக் கொண்டு பிருந்தா மீண்டும் தோட்டத்திற்கு செல்ல, அங்கே அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெயில் வந்துவிட்டது.
அதை கவனித்து அங்கே இருந்த செடிகளை அவள் பார்வையிட, லோகேஷிற்கு அழைத்து பிருந்தாவைப் பற்றியும் அவள் குடும்பத்தைப் பற்றியும் தகவல் கேட்டான் மனோதீரன்.
“என்ன டா திடிர்னு? எதுவும் பிரச்சனையா? நீ தானே முடிஞ்சதை பேச வேண்டாம்னு சொன்ன?” என லோகேஷ் கேட்க,
“சொல்லுங்க த்தான். இங்க அவ என்னென்னவோ சொல்றா. நீங்க கொஞ்சம் ஷார்ட்டா சொல்லுங்க. நான் பாத்துக்குறேன்!” என்றான் தெரிந்துகொள்ள வேண்டி.
“போன்லயே கேட்குறீயே. அதான் பிரச்சனையோனு நினைச்சேன்!” என்ற லோகேஷ்,
“பிருந்தாவை தூத்துக்குடில கட்டிக் குடுத்துருந்தாங்க. அவன் இறந்து ஒரு வருஷம் ஆகும் முன்னயே இந்த பொண்ணு அங்க இருக்க மாட்டேன்னு வந்துட்டு போல. உயிரோட இருக்கும் போதும் அவன் இவளை ரொம்ப கொடுமைப்படுத்தினதா கேள்விப்பட்டேன். அப்பவும் பிருந்தா அம்மா இந்த ஊருக்கே அவளை வர விடாதாம். புருஷன் சொந்ததுலயே தள்ளி விட பாத்துருக்கு. அதுவும் அந்தம்மா கொஞ்சம் சண்டைக்கார பொம்பளையாளு தான். என்னவோ அந்தம்மாக்கு இந்தப் பொண்ணைக் கண்டாலே ஆகாதாம் டா. எனக்கு தெரிஞ்சு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு எங்கேயும் நிம்மதியா எல்லாம் அது வாழல. என் அம்மாக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம் அவங்களுக்கு தான் விவரம் தெரியும். அம்மா சொல்லவும் உனக்கு சரியா இருக்கும்னு தொணவும் தான் பேசவே போனேன் தீரா” என்றான் லோகேஷ்.
பிருந்தா மீது சந்தேகம் என்றில்லை. உண்மையை உண்மையாய் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு. அதற்கென்றே கேட்டுக் கொண்டான்.
“என்ன டா? தீரா! ஒன்னும் பிரச்சனை இல்லையே? நான் வரட்டுமா? பக்கத்துல தான் இருக்கேன்!” என்றான் என்னவோ என நினைத்த லோகேஷ்.
“அதெல்லாம் வேண்டாம் த்தான். நான் கோவிலுக்கு கிளம்புறேன். நீங்க பொறுமையாவே வாங்க!” என்றவன் பேசி முடித்து சில நிமிடங்கள் யோசித்துவிட்டு தான் வெளிவந்தான்.
“இட்லி வச்சுட்டேன் ண்ணா. சாம்பார் அம்மா செஞ்சுட்டாங்க. சாப்பிட்டு கிளம்புங்க!” என நிலா சொல்ல,
“பிருந்தா எங்க?” என்றான் அவளிடம் தீரன்.
“அண்ணி பாப்பா கூட தோட்டத்துல இருக்காங்க!” என நிலா சொல்ல,
“வர சொல்லு டி. நேரத்துக்கு போக வேண்டாம்?” என சத்தமிட்டார் விசாலாட்சி.
அடுத்த பத்து நிமிடங்களில் எல்லாம் இருவரும் சாப்பிட்டு கோவிலுக்கு கிளம்பி இருந்தனர்.