அத்தியாயம் 3
“மனசுல எதையும் போட்டு குழப்பிகிட்டு இருக்கியா தீரா?” என லோகேஷ் கேட்க, மொட்டைமாடியின் கைப்பிடி சுவற்றில் ஏறி அமர்ந்தான் மனோதீரன்.
“என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு. வேண்டாம்னா கட்டாயம் இல்ல. நீ சரினு சொன்ன பின்னாடி தான் நானும் கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணினேன். இப்போ நீயே அந்த புள்ளைட்ட சரியா பேசலையோனு இருக்கு. அதான் கேட்டேன். அதுவும் கேட்கலாமா வேண்டாமானு யோசிச்சு தான் டா கேட்டேன். தப்பா நினைக்காத என்ன?” என அதற்கு விளக்கமும் கொடுத்தான் லோகேஷ்.
“தப்பா நினைக்க என்ன இருக்கு த்தான்? நீங்க நல்லது நினைச்சு கேட்டீங்க. நானும் இனியாவது நல்லாருக்கணுமேனு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இப்போ தான் த்தான் பயமா இருக்குது த்தான்!” என்றான் தீரன் பெருமூச்சோடு.
“என்ன டா பயம் உனக்கு? அதான் அந்த பொண்ணுக்கு பாஸ்ட் என்னனு நல்லா விசாரிச்சு சொல்லிட்டேன்ல? வேற எதுவும் பிரச்சனையா?”
“ப்ச்ப்ச்! பாஸ்ட் எல்லாம் இனி நினைக்குறதாவே இல்ல. ஆனா பிருந்தாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானானு ஒரு டவுட் த்தான். என்னவோ சரியில்லைனு தோணுது!”
“தீரா! பொண்ணு பாவம் டா. இப்ப தான் இருப்பத்தஞ்சு வயசு. அதுக்குள்ள அதுக்கு ஒரு வாழ்க்கை முடிஞ்சு மறுவாழ்க்கை வேற! எல்லாத்தையும் ஏத்துக்குற பக்குவம் இந்த வயசுல எதிர்பார்க்க முடியுமா? அதுக்கு நல்லது செய்யணும்னு எல்லாம் அவங்க வீட்டுலயும் நினைச்ச மாதிரி தெரியல. கட்டி குடுத்து அனுப்பிவிட்டா போதும்னு தான் இருந்துச்சு அதோட அம்மா. இப்ப எந்த இடத்துல இருக்கோம் நம்ம இருக்குற இடம் பாதுகாப்பு தானானு அதுக்கும் ஏகப்பட்ட குழப்பம் இருக்கும். நீ கூட இருந்து பேசி பழகு. எல்லாம் சரியாகும்!” என லோகேஷ் சொல்ல,
“ஒரு வாரம் லீவ் தான் த்தான். பேசி பாக்குறேன்!” என்றான் தீரன்.
“சென்னை கூட்டிட்டு போறதையும் கொஞ்சம் யோசி தீரா. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க பாரு!” என்று சொல்லியதை மட்டும் தீரனால் இப்பொழுது ஏற்று கொள்ள முடியவில்லை.
“மணி பத்தாவது பாரு. எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க? போய் தூங்கு. எவ்வளவு நேரமாவுது மேல வந்து? வா!” என லோகேஷ் அழைக்க,
“நீங்க போங்க. நான் வர்றேன்!” என்றான்.
“உன் அம்மா அப்பா எல்லாம் தூங்கியாச்சு. நிலாவை நான் எங்க ரூம்க்கு கூட்டிட்டு போறேன். அந்த பொண்ணு பயந்துட போகுது. சீக்கிரம் வா!” என போகும் வழியில் சொல்லிக் கொண்டே சென்றான். தீரனின் சங்கடம் புரிந்து அவன் தனியே செல்ல, அடுத்த இரண்டு நிமிங்களுக்கு மேல் தீரனாலும் அங்கிருக்க முடியாமல் கீழே வந்துவிட்டான்.
தன் அறையில் மட்டும் விளக்கு எரிவதைக் கண்டவன் ஜக்கில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு அறைக்கு சென்று கதவை சாற்ற, அவனைக் கண்டதுமே வேகவேகமாய் எழுந்து நின்றாள் பிருந்தா.
வந்த வேகத்தில் “சாப்பிட்டியா?” என்றவன் அவள் தலையசைக்கும் வேகத்தை கூட கவனித்தபடி, “உக்காரு!” என்றான் கட்டிலை கைகாட்டி.
“என்ன படிச்சிருக்க?” என்று அவன் கேட்கவும், “பிஎஸ்சி!” என்றவள் அதிர்ந்து தலையை ஆட்டி, “இல்ல இல்ல ஸ்கூல் ஸ்கூல் முடிச்சிருக்கேன்!” என்று வேகமாய் சொல்ல, கண்களை சுருக்கி ஆழமாய் கவனித்தான் அவளை தீரன்.
“அப்போ பிஎஸ்சி?” தீரன் கேட்க, படபடவென்று வந்துவிட்டது பிருந்தாவிற்கு.
“இல்ல ஸ்கூல் தான்…” என அவள் சொல்ல வர,
“ப்ச்! அப்போ ஏன் பிஎஸ்சி வந்துச்சு உன் வாய்ல இருந்து? பொய் சொல்ல ட்ரை பண்றியா? எனக்கு உண்மையை மட்டும் சொல்லு” என கொஞ்சம் கண்டிப்புடன் தீரன் கேட்க, பயத்தில் கண்கள் கலங்கி வந்தது பிருந்தாவிற்கு.
“தெரியாம சொல்லிட்டேன். பிஎஸ்சி தான் படிச்சிருக்கேன். ஆனா வேலைக்கெல்லாம் போகணும்னு கேட்க மாட்டேன். அம்மாகிட்ட சொல்லிடாதீங்க” என்றாள் கெஞ்சலாய்.
“புரியல. ஏன்? சொல்ல கூடாதுன்னு சொன்னாங்களா?” என்று அவன் அதை தோண்டி துருவ, பாவமாய் விழித்தாள். சொல்லவே கூடாது என கூறியதை சொல்லிவிட்டு இப்பொழுது அவரையும் சொல்லிக் கொடுப்பதை போலான நிலை. இதெல்லாம் அன்னைக்கு தெரிந்தால்?.
“வேண்டாம் ப்ளீஸ்” என்றவள் முகத்தில் அதிகத்திற்கும் அதிகமான கெஞ்சல்.
தீரனுக்கு இப்பொழுது இன்னும் குழப்பம் தான் மிஞ்சியது. நெருங்கி பேசவும் பயம் விலகி கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாது என்ற நிலை அவனுடையது. அதற்கென்றே அவளிடம் கண்டிப்பை காண்பிக்க, அவள் அதற்கு கொள்ளும் பயம் வேறு இவனை வதைத்தது. ‘இது நடிப்பாய் இருந்தால்?’ என நம்பவும் முடியவில்லை அவனுக்கிருந்த அனுபவத்தின் அடிப்படையில்.
“பேமிலி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா?” என அவன் கேட்க, தலையை மட்டும் ஆமென்று அசைத்தாள்.
“இங்கேயும் கொஞ்சம் அப்படி தான்!” என அவன் கூறியதற்கே அரண்டு அவனை பிருந்தா பார்க்க,
“இப்படி படிச்சதை எல்லாம் மறைக்க வேண்டாம். அவ்வளவு எல்லாம் இல்ல. அம்மா தான் கொஞ்சம் அப்படி!” என சொல்ல அதற்கும் தலையசைத்தாள்.
“சனி ஞாயிறு எனக்கு லீவ். அப்ப தான் ஊருக்கு வருவேன். மத்தபடி சென்னைல பசங்க கூட தங்கிருக்கேன்” என்று அவனைப் பற்றி கூறவும் அவள் கவனிக்க,
“அங்க ஒரு வீடு இருக்கு நமக்கு. ஃபிளாட்ல செகண்ட் ஃபிளோர்!” என்றதற்கும் தலையசைத்தாள்.
“அங்க நான் போறதில்ல. இனியும் எப்போ போவேன் தெரில” என்று சொல்ல, அவளும் அவன் கூறுவதை கேட்டு அமர்ந்திருந்தாள்.
“வேற எதுவும் சொல்றதுக்கு இல்ல. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். எதையும் யோசிச்சுக்க வேண்டாம். போக போக தெரிஞ்சிப்போம். ஹ்ம்?” என அவன் சொல்லவும் சிறு ஆசுவாசம் கொண்டு பார்த்தவள் தலையசைக்க,
“ஓகே டைம் ஆச்சு. படுத்துக்கோ!” என்றதும் மீண்டும் அவள் முகம் மாற, கால்களை அழுத்தமாய் தரையில் ஊன்றியபடி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.
“மார்னிங் பார்க்கலாம்!” என்றவன் எழுந்து விளக்கை அணைத்து விடிவிளக்கை போட்டுவிட்டு அவளுக்கு எதிர்பக்கமாய் வந்து படுத்துக் கொண்டான்.
மனம் பட்பட்டென்று அடித்துக் கொள்ள அங்கிருந்து நகரவும் முடியவில்லை பிருந்தாவிற்கு. மூச்சுக்கள் வேகமெடுக்க எப்பொழுது பிடித்து இழுப்பானோ என்பதை போன்ற எண்ணத்துடன் கொஞ்சமும் அசையாமல் அமர்ந்திருக்க,
“தூக்கம் வரலையா உனக்கு?” என்றான் அவளைக் கண்டவன்.
“ஹான்?” என அவள் திரும்பிப் பார்க்க வந்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவனைக் காணாமல்.
“தூங்கு பிருந்தா. ரிலாக்ஸ். மார்னிங்ல இருந்தே ரொம்ப டென்ஷனா இருக்க நீ. பார்த்துப்போம். இப்போ படுத்துக்கோ!” என மீண்டும் அவன் சொல்ல, ஒருவித பதைபதைப்புடன் கட்டிலின் ஓரம் படுத்துக் கொண்டதோடு அங்கேயே ஒட்டிக் கொண்டாள் அசையாதபடி.
பதினைந்து நிமிடம் தாண்டியும் எந்தவொரு மாற்றமும் இல்லை தனக்கருகில் என்பதிலும் பயம் தெளியாமல் தொண்டைக்குழி நீர்வற்ற உறக்கம் கொன்று அசையாமல் இருந்தாள் பிருந்தா.
நேரம் கடந்து கடந்து எப்பொழுது என்றே தெரியாமல் தூக்கத்தின் பிடிக்குள் சென்றிருந்தவள் தூங்கிய பத்தே நிமிடங்களில் படக்கென்று விழித்துப் பார்த்தாள். மொத்த தூக்கமும் அவள் பயத்தில் தான் காணாமல் போயிருந்தது.
அதன்பின் தான் திரும்பிப் பார்க்க நிஜத்திற்குமே தூங்கி இருந்தான் தீரன். அதில் அவ்வளவு விரிந்தது பிருந்தாவின் கண்கள். அதிலும் அந்த கண்களில் கண்ட பிரகாசம்!.
அந்த நிமிடம் மனம் கொண்ட ஆறுதலுக்கும் ஆசுவாசத்திற்கும் அளவே கிடையாது.
கைகளை தன் கண்களுக்கு மேல் வைத்து நல்ல உறக்கத்தில் இருந்தான் மனோதீரன். இப்பொழுது தான் நிறுத்தி நிதானமாய் அவன் முகத்தினை கவனிக்கவே செய்தாள் மனைவி. மனம் கொஞ்சம் சமன்பட்டு வந்தது இப்பொழுது.
ஏதோ ஒரு பெரிய கூட்டிற்குள் தான் அடைக்கப்பட்டுவிட்டோம் எனும் எண்ணம் இருந்தவளுக்கு தீரனின் இந்த உறக்கம் கண்டு அத்தனை விடுதலை உணர்வு.
“நைட்டுக்கு ஆம்பளைனா அப்படி இப்படி தான் இருப்பான். குறை சொல்லிட்டு கத்திகிட்டு வந்து மானத்தை வாங்கி வச்சிடாத. பொழைக்க தெரிஞ்சுக்கோ!” என்ற வார்த்தைகள் நாராசமாய் காதுக்குள் ஒலிக்க, அதில் மனதோடு உடலும் இப்பொழுதும் நடுங்கியது அவளுக்கு.
அவனைப் பார்த்தபடி இருந்தவள் மீண்டுமாய் எங்கனம் உறங்கினாளோ கொஞ்சமே கொஞ்சம் அவன் மீது உண்டாகியிருந்த நம்பிக்கையில் இப்பொழுது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் பிருந்தா.
தூக்கத்தில் திரும்பிய தீரன் தற்செயலாய் கண் விழித்த போது தன் முகத்தின் அருகில் மனைவியின் முகம் கண்டு சில நொடிகள் பார்த்தபடி இருந்தவன் பின் வாகாய் அவளைப் பார்த்தவாறு நன்றாய் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
முதல் நாள் புகைப்படத்தில் பார்த்ததை விட இவன் அவளிடம் பேசிட என சென்று போது கண்ட அதே அப்பாவியான முகம் தான் இப்பொழுதும்.
‘இந்த வயசுல இந்த பாடு வேண்டாம் டா அந்த பொண்ணுக்கு. அவ்வளவு கஷ்டப்பட்டுட்டா’ லோகேஷ் கூறியதும் நினைவில் வந்தது. அது புரிந்தாலும் இவளுடன் அத்தனை எளிதில் அவளுக்கான இடம் கொடுக்க முடியவில்லை தீரனுக்கு. அது அவனுக்கான பயம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்திருந்த அனுபவம் என கொஞ்சம் தள்ளி வைக்கவே நினைத்தான்.
‘இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி எல்லாம் எனக்கு இல்ல. உன்னை நம்பி தான் நடந்ததை எல்லாம் மீறி இவளை கட்டி கூட்டிட்டு வந்திருக்கேன். இப்பவும் என்னை கைவிட்டுடாத!’ என மனதார அந்த நிமிடமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டான் மனோதீரன்.
சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தவனுக்கு மீண்டுமான உறக்கம் தீரனின் கண்களைத் தழுவ அமைதியான உறக்கம் கிடைத்திருந்தது அவனுக்குமே.
காலை ஆறு மணி எங்கோ கேட்ட கோவில்மணி சத்தத்தில் கண்விழித்த பிருந்தா மணியைக் கண்டு அடித்துபிடித்து எழுந்தாள்.
தீரன் இன்னும் கண் விழிக்கவில்லை என்றது ஒரு நிம்மதி என்றாலும் அவசர அவசரமாய் ஒரு புடவையை தன் பையில் இருந்து தேடி எடுத்துக் கொண்டவள் குளியலறை சென்று குளித்துவிட்டு வர இன்னும் விழிக்கவில்லை அவன்.
கதவை திறந்து வெளியில் செல்ல பயம் தான் என்றாலும் வேறு வழியில்லை. போய் தான் ஆக வேண்டிய நிலை. அவன் எழுந்து தன்னைப் பார்ப்பதற்குள் சென்றுவிட வேண்டும் என மெதுவாய் கதவை திறந்தவள் வெளிவர, வெளிவாசல் திறந்தே இருந்ததில் பூனையாய் நடந்து வீட்டின் வெளியே இருந்த தோட்டத்திற்கே சென்றுவிட்டாள்.
அங்கே சென்ற பின் தான் நன்றாய் மூச்சை இழுத்துவிட்டு ஓரிடத்தில் அமைதியாய் அமரவும் முடிந்தது பிருந்தாவிற்கு.
“விடிஞ்சதும் என்னைப் பார் என் அழகைப் பார்னு யாருக்கும் முகத்தைக் காட்டிட்டு நின்னுடாத. உனக்கே தெரியும் உன் முகராசி என்னனு. ஒதுங்கி நின்னுப் பழகு. அதுவும் முக்கியமா உன் வீட்டுக்காரர் எந்திச்சதும் முன்னாடி போய் நின்னுடாத. எதாவது ஆச்சுன்னா உனக்கு தான் வாழ வழி இருக்காது பார்த்துக்கோ” என்ற தீச்சொற்கள் நியாபகத்தில் நிற்க தனியே வந்து அமர்ந்துவிட்டாள் பிருந்தா.