Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 18

CHAPTER 18

நதி – 18

By Nadhi · November 24, 2026

0

“முடியலைன்னா விடேன்! நான் தான் கேன்டீன்ல பார்த்துப்பேன்ல?” என்று சொல்லி அலுவலகம் கிளம்பியே சமையலறை வந்தான் மனோ தீரன்.

இருவருக்குமே அத்தனை பழக்கமாகி இருந்தது இந்த வீடும் உறவும். சென்னை வந்து நாட்கள் கடந்து மாதங்களாகும் நிலை. திருமணமாகி ஒன்றரை மாதங்களை கடந்த நிலை.

பிருந்தா மொத்தமாய் மாறி இருந்தாள் தீரனின் அருகாமையில்.

அவளுக்கென ஒரு வீடு. அவளுக்கென ஒருவன். அவளுக்கென்றே ஒரு வாழ்க்கை. பிறந்ததில் இருந்து அனுபவிக்காத ஒரு நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி என இந்த காலம் அவளுக்கு அத்தனை பிடித்திருந்தது.

நேற்றைய மாலை தான் அலுவலகம் முடிந்து வீடு திரும்பி இருந்தவனிடம் முதன் முதலாய் கோபத்தை காண்பித்திருந்தாள் பிருந்தா.

அதையும் தூசாய் தட்டிவிட்டு அவள் சொல்வதை செய்யவே முடியாது என்று தீரன் சொல்லிவிட, இரவு உணவு நேரம் வரை அவனிடம் முகம் காண்பிக்காமல் சமையலறையை மட்டுமாய் உருட்டிக் கொண்டிருந்தாள்.

‘கோபம் எல்லாம் வருதே!’ என மனைவியை நினைத்து சிரிப்பு தான் வந்தது தீரனுக்கு.

இரு நாட்களாய் வானிலையும் சரி இல்லை என்பதில் பிருந்தாவிற்கு ஏற்கனவே தலைவலி, இருமல் என உடல்நிலை சரி இல்லை.மருத்துவமனைக்கு அழைத்தாலும் அவள் வரவில்லை.

நாளை ஒரு நாள் பார்க்கலாம். இல்லையெனில் மாலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என தீரன் நினைத்திருக்க, காஞ்சிபுரம் செல்ல வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டாள் அவனிடம்.

அவனும் முதலிலேயே இப்பொழுது முடியாது என்று சொல்லிவிட அங்கே தான் ஆரம்பித்தது சண்டை கூட.

“நாம வந்து ஒரு மாசமாக போகுது. வார வாரம் வர்றேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லிட்டு தானே வந்திங்க? அப்புறம் ஏன் இவ்வளவு நாலா போகல நாம? எப்ப இருந்து நான் கேட்குறேன்!” என அடுத்தடுத்து பிருந்தா சாதாரணமாய் ஆரம்பித்து கோபமாய் கேட்டு வைக்க,

“எல்லாம் சரியானதும் தான் வருவேன் சொன்னேன். இப்ப சரியாகிடுச்சா எல்லாம்?” என்றான் தீரனும்.

“ஏன்? இப்ப என்ன? நல்லா தானே இருக்கோம்?” என்றவளுக்கு அவன் கூறிய விதம் புரியவில்லை.

“நல்லா இருந்தா போதுமா?” என்றான் மீண்டும் தீரனும்.

“நீங்க வேணும்னே பழி வாங்குற மாதிரி பண்றீங்க. அங்க அத்தை உங்க மேல கோவமா தான் இருப்பாங்க. அதான் ஒரு கால் கூட பண்ணல அவங்க. ரெண்டு வாரமா கேட்டு கேட்டு எனக்கும் சலிச்சு போச்சு. என்ன நினைக்குறிங்கனே புரியல!” என மனைவியாய் கணவனை வார்த்தைகளில் அத்தனை பேச்சு பேசி வைக்க,

“அப்படி எல்லாம் நினைச்ச உடனே போக முடியாது பிருந்தா. அதுக்குன்னு ஒரு நேரம் வரணும். அங்க பிரச்சனை பண்ணி இங்க உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன். இங்க உன்னோட நான் எப்படி வாழுறேன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாமா? வாழ்க்கையை ஆரம்பிக்காம எப்படி அவங்க முன்ன போய் நிக்க?” என்று அவன் தெளிவாய் கேட்டுமே,

“அதுக்குன்னு? இப்ப நாம சந்தோசமா இருக்கோம்னு நாம போய் அவங்க முன்னாடி நின்னா அவங்களுக்கே தெரிஞ்சிட போகுது. இதுல என்ன இருக்குன்னு நீங்க வர மாட்டேன்னு நிக்கிறீங்க?” என்றவளை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளும் நிலை தான் தீரனுக்கு.

“இப்போ போறோமா இல்லையா?” என பிருந்தா முடிவாய் கேட்க,

“சண்டே என் பிரண்ட்டோட பொண்ணு பர்த்டேனு இன்வைட் பண்ணிருக்கான் நம்ம ரெண்டு பேரையும். அங்க போகணும். இந்த வாரம் முடியாது!” என சொல்லி உள்ளே சென்றுவிட்டான்.

அதன்பின் இரவு உணவை முடித்து தூங்கும் வரை பேசவே இல்லை பிருந்தாவும்.

இரவே அவ்வளவு இருமல் பிருந்தாவிற்கு. எழுப்பி மருந்தை கொடுத்து தான் மீண்டும் படுத்துக் கொண்டான் தீரனும்.காலையில் சமைக்க வேண்டாம் என அவன் சொல்லியுமே சமையலறையில் தான் நின்றிருந்தாள்.

“முடியலைன்னா விடேன்! நான் தான் கேன்டீன்ல பார்த்துப்பேன்ல?” என்று மீண்டும் அவள் முன் வந்து அவன் சொல்ல,

“நீங்க கேன்டீன்ல சாப்பிட்டுப்பிங்க. நான் என்ன பண்றதாம்?” என்றவள் அவன் முகம் பார்க்காமல் சமையலில் கவனம் வைத்து சொல்ல, அவள் கோபத்தில் அப்படியே அவளை அள்ளிக் கொள்ள வேண்டும் போலிருந்தது தீரனுக்கு.

இதழ் மடித்துக் கடித்துக் கொண்டவன்,”நான் வெளில வாங்கிட்டு வர்றேன் பிருந்தா!” என்றான் அப்போதும்.

“ப்ச்! உங்களுக்கு டைம் ஆகிடும். இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாமே ரெடி பண்ணிடுவேன்! நீங்க எடுத்துட்டே போய்டலாம்!” இதுவும் முகம் பார்க்காமல் தான் வந்தது பதில்.

அதற்குமேலும் முடியாமல் கைப்பிடித்து இழுத்து தன் முன் தீரன் அவளை நிற்க வைக்க, அவனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காததால் என்னவோ என பதட்டமாய் அவனைக் கண்டாள்.

அப்பொழுது தான் அவளின் கோபமும் அவளுக்கு புரிய, எங்கே பதிலுக்கு அவனும் தன்னிடம் கோபம் கொண்டு விட்டானோ எனும் அதிர்வும் என அவள் அவனின் முகம் பார்க்க,

“கோவமா இருந்தா இப்படி தான் முகம் பார்க்காமல் பேசுவியா?” என்றவன் கேள்வியில் தொண்டைக்குழி எங்கும் ஏறி இறங்கியது.

‘அப்படியா செய்தோம்?’ என அவளுமே நினைத்து தான் பார்த்துக் கொண்டாள். தான் இதுவரை கோபம் கொண்டோமா என்றே அவளுக்கு நினைவில் இல்லாததும் சேர்ந்து இப்பொழுது பாவமாய் பார்க்க வைக்க, எங்கே என்னவும் வலிக்கும்படி சொல்லிவிடுவானோ என்ற பயம் வேறு.

“இருமல் சரியாகிடுச்சா?” தீரன் கேள்வி கேட்க, அரண்ட விழியோடே தலையை மட்டும் ஆட்டினாள்.

“கோல்டு, தலைவலி?”

“பரவால்ல!”

“ஹ்ம்! ஈவ்னிங் வரை பார்ப்போம். இல்லைனா ஹாஸ்பிடல் தான்!” என்றவன் கைகள் இன்னும் அவளின் தோள்களில் இருக்க, அவளின் உடலின் நடுக்கத்தை நன்றாய் உணர்ந்தான் அந்த நொடி.

ஆனாலும் உடனே விடவில்லை. விட தோன்றவும் இல்லை.

“ஊருக்கு தானே போகணும். போகலாம். இன்னும் கொஞ்ச நாள்லேயே!” என அவள் முகம் பார்த்து சொல்லவும் வேக வேகமாய் சரி என்று தலையசைத்தாள்.

அதில் சின்னதாய் புன்னகையை இதல்களில் உதிர்த்தவன் அவளின் கன்னம் தட்டிவிட்டு கையை எடுக்க, இன்னும் மலங்க அவள் விழிக்கும் நேரமே வெளியில் வந்துவிட்டான் தீரன்.

“உஃப்ப்!” என பெருமூச்சோடு தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன் உள்ளம் ஒரு சில நிமிடங்கள் என்றாலும் அவனிடம், அவன் வசம் என சுத்தமாய் இல்லை.

கடந்த சில நாட்களாய் அவனை அவனே நன்றாய் உணர்ந்தான். பிருந்தாவை அத்தனை தேட சொல்லியது மனது.

இப்பொழுதும் கோபம், அடம் என அவள் அவனிடம் முகம் காண்பிக்க மறுக்க, இழுத்து தனக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாய் ஒரு வேகம் அவனையும் மீறி உண்டானதில் சில நொடிகளில் விழித்துக் கொண்டவன் கன்னத்தின் தீண்டலோடு ஓடியே வந்துவிட்டான்.

உள்ளே பிருந்தா நிலையும் கொஞ்சம் சேதம் தான். இத்தனை நாட்கள் உணராதவள் இன்று அவனின் பார்வையையும் அவன் விரல் தீண்டலையும் என கணவனின் அண்மையை அவனின் பார்வையை என தெளிவாய் புரிந்து கொண்டவளுக்கு அது அதிர்ச்சியும் தான்.

“ப்ச்! என்ன பன்றாளோ!” என அவளை நினைத்தபடி சில நிமிடங்கள் கூட வெளியே நிற்க முடியாமல் மீண்டும் சமையலறைக்கு அவன் வர, இன்னும் அவன் எப்படி விட்டு சென்றானோ அதே நிலையில் மீளாமல் நின்றவளைக் கண்டு கனிவும் சிரிப்பும் கலந்தே வந்தது கணவனிடம்

“ஹோய்! என்ன முடிக்கலையா? வெளில சாப்பிட்டுக்கவா?” என்று அவன் கேட்கவும் தான் உணர்வே வர,

சட்டென்று திரும்பி சமையலை கவனித்தாள்.

“பொரியல் பொசுங்கிப் போச்சு பாரு!” என்றவன் சிரிப்பில் அடிக்கண்ணால் முறைத்தவள் முழுதாய் திரும்பிப் பார்க்கவில்லை. பார்க்க முடியவும் இல்லை.

“நாளைக்கு தான் பிரண்ட்டோட பொண்ணு பர்த்டே பார்ட்டி பிருந்தா. நாம போகணும். மறந்துடாத!” என சொல்லி தான் அலுவலகம் சென்றான் அன்று.

சனிக்கிழமை எல்லாம் விடுமுறை தான். இன்று தான் இங்கு வந்த பின் முதன்முறையாய் செல்கிறான் என நினைத்தபடி அவனை அனுப்பி வைத்துவிட்டு வேலையை முடித்து வந்து ஓய்வாய் அமர்ந்தாள்.

இன்னும் உள்ளுக்குள் அந்த குறுகுறுப்பு மட்டும் மறையவே இல்லை அவளிடம்.இத்தனை நாட்களில் தான் நினைத்தும் பார்க்காத ஒன்றை இன்று அவனின் ஒற்றை பார்வையில் உணர முடிந்ததை நினைத்து ஒரு மாதிரியாய் உள்ளமெங்கும் நடுங்கி நின்றது.

எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து நிற்பதாய் மனம் கூறினாலும் அவனுக்கு அப்படி இல்லையோ என்ற சந்தேகமும் அப்பொழுது தான் தோன்ற, இதே மாதிரியான பேச்சோ பார்வையோ என அவனிடம் முன்பே இருந்ததா என தன் நியாபக அடுக்கில் தேடிக் கொண்டிருந்தாள்.

கிடைக்காதே. கிடைத்திட அவனும் தான் தெளிந்து வர நேரமெடுத்ததே.

அன்று அலுவலகம் வந்தபின்னும் ஒருவித மகிழ்ச்சி தீரனிடம். முகமும் அதை காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

பலமுறை அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைக்கலாமா என பார்த்து பின் வேண்டாம் என்ற முடிவும் செய்து என எண்ணம் எங்கும் நிறைந்திருந்தாள் பிருந்தா.

மதிய வரையான வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வர, மனைவி நிலையும் அதுவே தான் என அவனுக்கும் உணரமுடிந்தது.

பெரிதாய் பேச்சுக்கள் இல்லை என்றாலும் வார்த்தைகளில்லா அந்த மௌன நேரங்கள் பெரும் இம்சையை கொடுத்துக் கொண்டிருந்தது.

இதோ பிருந்தா அதிகத்திற்கும் பயந்த அன்றைய இரவும் வந்துவிட, மனமெங்கும் ஒரு நிலையில் இல்லாமல் சமையலறையில் வெகுநேரமி நின்றிருந்தாள்.

“இன்னும் என்ன பண்ற நீ? தூங்க வரலையா?” என தீரன் வந்து கேட்கும் பொழுது நேரம் பத்தை கடந்திருக்க,

“ஹ்ம்!” என தலையசைப்பு தான் அவளிடம்.

அவள் நிலை புரிந்தவனும் பெரிதாய் எந்தவித சீண்டலோ பார்வையோ என கொடுக்கவில்லை.

“நீங்க தூங்கலை?” என வெளியில் நின்றவனை வந்து கேட்டாள் அவன் வராததில்.

“வர்றேன். நீ போ!” என அனுப்பி வைத்தவன் அவள் சென்று வெகு நேரம் கழித்தே உள்ளே வர, அதுவரையில் புரண்டு தூக்கத்தைக் கேட்டு போராடிக் கொண்டு அப்பொழுது தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள் பிருந்தா.

“ரொம்ப சோதிக்கிறியே!” என மனைவியைப் பார்த்து சொல்லியவனுக்கு என்னவோ அவளை தேடி சரணடைய அவள் விருப்பம் தெரிய வேண்டுமாய் இருந்தது.

மறுக்க போவதில்லை தான். ஆனாலும் விருப்பம் முக்கியம் தானே என்ற எண்ணம் தான்.

“பார்க்கலாமே எவ்வளவு நாளைக்குன்னு!” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு தான் அவனும் தூக்கத்தை தேடினான்.

அடுத்தநாள் காலை நிலா பிருந்தாவிற்கு அழைக்க, வெகு நேரம் அவளிடம் பேசியபடி நின்ற பிருந்தா ஓரளவு முந்தைய நாள் தாக்கத்தில் இருந்து வெளிவந்து புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!