Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 2

CHAPTER 2

நதி – 2

By Nadhi · October 7, 2026

1

கூழாங்கல் 2

“கூறுகெட்ட கழுத. அவங்க தான் சொல்றாங்கன்னா உனக்கு அறிவு வேணாமா டி? இங்கேயும் எக்கு தப்பா எதுவும் ஆகிப் போச்சுன்னா நாங்க என்ன பண்ணுவோம்? யார்கிட்ட போய் நிப்போம்?” என பல்லைக் கடித்துக் கொண்டு மகள் பிருந்தாவிடம் கிசுகிசுப்பாய் பேசி நின்றார் சந்திரா.

அந்த சொல்லில் மழுக்கென்று மீண்டுமாய் கண்ணில் நீர் சேர,

“வாயைக் கொஞ்சம் மூடு டி. எப்ப பாரு அழுதுகிட்டு. விடியா மூஞ்சி. என் தலையெழுத்து இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கணுமோ உன்னால” என்றவர் யாரோ அறைக்குள் வரும் அரவத்தில் தன் முகத்தை நேராக்கிக் கொள்ள, பிருந்தாவும் கண்களை துடைத்துக் கொண்டாள்.

“உன் நேரமும் ராசியும் என்னனு உனக்கு தெரியாதோ? உன் கண்ணை திறந்து பார்த்தா தான் உன் வாழ்க்கை மாற போவுதா? அவ்வளவு சொல்லியும் எதுக்கு டி கண்ணை திறந்த நீ? நாளபின்ன எதாவது ஆவட்டும் அப்போ இருக்கு உனக்கு!” என மகளிடம் முணுமுணுத்து அங்கிருந்து நகர்ந்தார் சந்திரா.

திருமணம் முடிந்து மாப்பிள்ளையின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்திருந்தனர் அனைவரும்.

அங்கே தான் மதிய உணவுக்கு உணவகத்தில் சொல்லி இருந்தார் சிவஞானம்.

பிருந்தாவின் இரு சகோதர்களும் திருமணம் முடிந்த கையோடு அங்கிருந்தே தங்களது வேலையை கவனிக்க சென்றுவிட, அன்னை சந்திராவும் தந்தை கந்தனும் மட்டும் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் பெரிதாய் விருப்பம் இல்லை தீரனின் அன்னை விசாலாட்சிக்கு.

அவருக்கு தேவையான சீரும் பணமும் பிருந்தாவின் வீட்டிலிருந்து கிடைக்காது என்றதிலேயே விசாலாட்சி திருமணத்திற்கு மறுத்திருக்க, சிவஞானமும் நிலாவின் கணவன் லோகேஷ்ஷும் சேர்ந்து தான் இந்த திருமணம் நடைபெற வேண்டியவற்றை பார்த்துக் கொண்டது.

பிருந்தா வீட்டில் அப்படி யோசிக்கவே இல்லை. எந்த இடமாய் இருந்தாலும் பரவாயில்லை. மகளை தங்கள் வீட்டில் இருந்து அனுப்பி வைத்துவிட்டால் போதும் என்ற மனநிலை தான் அவர்களுக்கு.

அதற்காக காசு பணத்தை செலவு செய்யவும் அவர்கள் தயாராய் இல்லை.

பிருந்தாவின் முதல் திருமணமும் அதன் பின்னான வாழ்க்கையும் என முற்றிலும் சேர்ந்து சந்திரா வேறு எதையும் யோசிக்கவே இல்லை.

மகளின் மனதைப் பற்றிய கவலையும் இல்லை அவர்களுக்கு.

நான்கே மாதங்களில் ஆன தன் வாழ்க்கையை இழந்த ஒரு வருடத்தில் இப்படி ஒரு நிகழ்வு பிருந்தாவிற்கு. அதை ஏற்கிறேன் என்றோ மறுக்கிறேன் என்றோ வாயைத் திறந்து கூறும் சந்தர்ப்பமும் கூட அவளுக்கு அமையவில்லை.

அதிலும் கொடுமையாய் “வரதட்சணை குடுக்க முடியாத உங்களுக்கு என்னத்துக்கு மகளை கரை சேர்க்கணும்ன்ற ஆசை?” என்று நடு வீட்டில் நின்று கேட்டவர்கள் வீட்டிற்கே தன்னை மருமகளாய் அனுப்பி வைத்த அன்னையை எண்ணி நொந்து தான் போயிருந்தாள் பிருந்தா.

‘எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிடேன்!’ என மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்ட நேரம் தான் மனோதீரன் அவளிடம் பேச வேண்டும் என்று வந்து நின்றது.

“அவகிட்ட பேச என்ன இருக்கு. எல்லாம் கேட்டு தான் நடத்துறோம். அவளுக்கு சம்மதம் தான்!” என சந்திரா சொல்வது உள்ளே அறையில் இருந்த பிருந்தாவிற்கும் கேட்டிருந்தது அந்நேரம்.

அதையும் மீறி தான் அனைவரையும் தாண்டி அவள் முன் வந்து நின்றிருந்தான் தீரன்.

பார்த்ததும் தானாய் உடலில் ஒரு நடுக்கமும் மனதில் ஒரு படபடப்பும் என தடுக்கவே முடியவில்லை பிருந்தாவிற்கு.

கண்முன் என்னென்னவோ எண்ணங்கள். தன்னைப் பிடித்து இழுத்து சுவரோடு ஒட்டி நிற்க வைத்து கழுத்தைப் பிடித்து தூக்குவதைப் போன்ற தோற்றம் என மூச்சு வாங்க, அதெல்லாம் தன் எண்ணம் தான் என் புரிந்து அதிலிருந்து வெளிவர நினைத்தாலும் முடியவில்லை அவளிடம்.

“நான் மனோ! சென்னைல இருக்கேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா?” என மனோதீரன் நேராய் அவளுக்கு முன் வந்து நின்று கேட்க,

“அவுக என்ன கேட்டாலும் வீட்டுல பேசிக்கோங்கனு மட்டும் தான் சொல்லணும். கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லணும். புரிஞ்சதா?” என்று அன்னை சொல்லி மிரட்டிவிட்டு சென்றது நியாபகம் வந்தது பிருந்தாவிடம்.

“உங்க எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்!” என்று சொல்வதற்குள் அத்தனை இடைவெளி எடுத்துக் கொண்டாள்.

நிச்சயம் அது அவளின் இயற்கையான பேச்சில்லை என புரிய தான் செய்தது தீரனுக்கும்.

“சம்மதம் அப்புறம்! உனக்கு மாதிரி எனக்கும் ஒரு பாஸ்ட் இருக்கு. அதை நான் பேசணும். எனக்கு சில டெர்ம்ஸ் இருக்கு. அதை கிளீயர் பண்ணனும்!” கொஞ்சம் அழுத்தமாய் குரல் உயர்த்தி தீரன் சொல்லவுமே வெடவெடத்து போனாள். முகமெல்லாம் வியர்வை துளிகள் வேறு.

“என்னாச்சு உனக்கு? உடம்புக்கு முடியலையா?” என குரலை தாழ்த்தி கேட்டான் தீரன்.

“ம்ம்ஹும்! இல்ல. ஒண்ணுமில்ல. எனக்கு… எனக்கு சம்மதம். நீங்க என்ன சொன்னாலும் சம்மதம். அம்மாகிட்ட பேசிக்கோங்க ப்ளீஸ்!” என்றவள் கண்கள் கலங்கிவிட்டது.

எதற்கோ அவள் மிரள்வது புரிந்தது. என்ன ஏதேன்று தான் புரியவில்லை.

“நான் சென்னைல இருக்கேன் சொன்னேன். சப்போஸ் நம்ம கல்யாணம் நடந்தா நீ கொஞ்ச நாள் என் பேமிலியோட இங்க காஞ்சில தான் இருக்கனும். ஒன்னு இல்ல ரெண்டு வருஷம் ஆகும் நான் சென்னைக்கு உன்னை கூட்டிட்டு போக!” என்றதற்கும் அதே பதில் தான்.

“வீட்டுல என்ன சொன்னாலும் எனக்கு சரி தான். அவங்ககிட்ட கேட்டுக்கோங்க!” என்றவள் சொல்லும் நடுக்கத்தில் தான் வெளிவந்தது.

அதற்குமேல் அவனுக்கும் கேட்க எதுவும் இல்லை. லோகேஷ் தான் அந்த திருமணம் நடக்க அவ்வளவு பாடுபட்டிருக்க, அதற்கு மேல் தீரனும் திருமணத்திற்கு சம்மதித்திருந்தான்.

மதிய உணவை முடித்துக் கொண்டு சந்திராவும் கந்தனும் கிளம்பத் தயாராகி இருக்க, பிருந்தாவிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை அப்பொழுது.

“நாங்க பொண்ணை நல்லா பத்துக்குறோம். நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க!” என்று சிவஞானம் சொல்ல,

“நல்லதுங்க!” என்ற கந்தன்,

“வர்றோம் பிருந்தா!” என்றார் மகளிடம்.

“பார்த்து நடந்துக்கோ. சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும். எப்பவும் போய் யார் முன்னாடியும் படக்குன்னு நின்னுடாத. எதையும் யோசிச்சு பண்ணு. இந்த வீடும் இல்லைனா உன் நிலமை என்னனு உனக்கு தான் தெரியணும். உன் அண்ணன்களுக்கு அடுத்தடுத்து கல்யாணத்தை நடத்தணும் நான். அவனுங்களுக்குன்னு இன்னும் ஒரு நல்லது செய்ய முடியல உன்னை வச்சுக்கிட்டு. இனியாவது அவனுங்களை பாக்குறேன். நீ உனக்கு ஏத்த மாதிரி பார்த்து பக்குவமா இருந்துக!” என்று மகள் அருகில் வந்து மெதுவாய் சொல்லி சென்றார் சந்திரா.

திருமணத்திலும் அதன் பின் இவ்வளவு நேரம் இங்கிருந்த போதும் என விசாலாட்சி பிருந்தா குடும்பத்தினரிடம் எதுவும் பேசி இருக்கவில்லை. அவர் கேட்ட பணமோ நகையோ தாங்கள் கொடுக்காதது தான் அதற்கு காரணம் என தெரிந்தாலும் அவர் கோபத்தை கவனத்தில் நினைக்காமல் அவரிடமும் மரியாதையாய் விடைபெற்று நகர்ந்தனர் பிருந்தா பெற்றோர்.

நிலா, லோகேஷ், அவர்களின் பெண் குழந்தை கூடவே விசாலாட்சி, சிவஞானம், என குடும்பத்தினர் மட்டுமே அதன்பின் இருந்தவர்கள்.

அக்கம்பக்கத்தினர் எட்டிப் பார்த்த போதும் விசாலாட்சிக்கு பயந்து அருகில் வர நினைக்கவில்லை.

குழந்தை விளையாடுவதும், நிலா அவளுக்கு உணவு கொடுப்பதும் என குழந்தையின் சத்தம் மட்டுமே அங்கே கேட்டுக் கொண்டிருக்க, அதைத் தவிர்த்து வீட்டில் அத்தனை அமைதி.

விசாலாட்சி உடன்பிறந்தவர்கள் அலைபேசியில் அழைத்து திருமணம் நல்லபடியாய் நடைபெற்றதா என கேட்க, அவரும் பட்டுக் கொள்ளாமல் தான் பதில் கூறி வைத்துவிட்டார்.

பிருந்தா அவளுக்கு கொடுக்கப்பட்ட அறையைவிட்டு வெளிவரவே இல்லை.

லோகேஷ் வெளியில் சென்று வந்தவனும் தன் மனைவி குழந்தையுடன் கிளம்பத் தயாராக,

“நாளைக்கு போகலாம் இருங்க த்தான்!” என்று கேட்டது மனோதீரன் தான்.

“வேலை கிடக்கு தீரா” என்று லோகேஷ் சொல்ல,

“வேலை இருக்கட்டும். இன்னைக்கு ஒரு நாள் இங்க இருங்க. இல்ல நிலாவும் பாப்பாவும் இருக்கட்டும். நீங்க கிளம்புங்க!” என்றான்.

“அவங்களை இங்க விட்டுட்டு சாப்பாட்டுக்கு மருமவன் என்ன பண்ணுவாரு?” என அப்போது தான் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார் விசாலாட்சி.

“ஆமா இவ ஆக்கிப் போடலைனா எனக்கு சாப்பிட தெரியாதாக்கும்? வரத்துல நாலு நாள் நான் தான் அவளுக்கு சமைச்சு போட்டுட்டு இருக்கேன். ஏன் சொல்லலையா உங்க மக?” என லோகேஷ் கேட்க,

“ப்ச் என்ன நீங்க? இப்ப கேட்டாங்களா உங்க பெருமையை?” என்றாள் நிலா.

“பெருமையா? நீ அடுப்பு பக்கம் போக மாட்டனு சொல்லிக்கிட்டு இருக்கேன். இது பெருமையா உனக்கு?” என இன்னும் அவன் பேச, தீரன் சின்னதாய் புன்னகைத்தான்.

“நிலா இருந்தா மருமக புள்ளைக்கும் கொஞ்சம் நல்லாருக்கும்னு தீரன் நினைய்ப்பிருக்கும்” சிவஞானம் சொல்ல,

“அட ஆமா மாமா. இதை யோசிக்காம விட்டேன் பாருங்க நானும். அதுவும் சரி தான். அப்போ அவ இருக்கட்டும். நான் போய்ட்டு காலைல வாரேன்!” என்று சொல்லிவிட்டான் லோகேஷ்.

“அதுக்காக மட்டும் சொல்லல. நீங்க இருந்தா இன்னும் கொஞ்சம் பெட்டெரா இருக்கும் தோணுது வீடு!” என்று தீரன் சொல்லிவிட,

“என்ன நீங்க இவ்வளவு தாங்கிக்கிட்டு இருக்கீங்க அவரை. ஏங்க! அதான் அண்ணா சொல்றாங்க இல்ல? இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கினா என்னவாம் உங்களுக்கு?” என நிலா சொல்லவும்,

“நான் என்னவோனு நினைச்சேன். அவ்வளவு தானே? இருந்துட்டா போச்சு. வேலையை மட்டும் முடிச்சுட்டு ஒரு மணி நேரத்துல வந்துடுறேன் சரியா?” என ஏற்று கொண்டான் லோகேஷ்ஷும்.

விசாலாட்சியிடம் தீரன் பேசவே இல்லை. அவரும். வீம்பாய் மகனிடம் பேசவில்லை. இது எங்கு சென்று முடியுமோ என்று தான் இருந்தது தீரனுக்கு.

ஏற்கனவே பட்ட அனுபவம் என்று பிருந்தாவை சென்னைக்கு இப்பொழுது அழைத்து செல்லும் எண்ணம் இல்லை. ஆனால் அன்னை இப்படி கோபத்தில் இருக்கும் சமயம் அவளை எப்படி விட்டு செல்வது என்ற சிந்தனையும் இருக்க தான் செய்தது அவனுக்கு.

இரவு வரையும் நிலா எவ்வளவு தான் சாதாரணமாய் காட்டிக் கொண்டு பேசி வீட்டினை இயல்பாய் வைத்துக் கொள்ள நினைத்தாலுமே அது ஒரு அசாதாரண சூழல் தான் அங்கே.

“எல்லாம் உன் அம்மாவால. நல்ல நாள்லையும் எப்படி இருக்காங்க பாரு உர்ருன்னு!” என லோகேஷ் மனைவியிடம் திட்ட,

“அண்ணி வந்திருக்க முதல் நாளே பிரச்சனை வேண்டாமேனு பாக்குறேன். நாளைக்கு நான் பேசிக்குறேன் அவங்ககிட்ட. நீங்க சாப்பிட்டு வாங்க தூங்கலாம்!” என்றாள் நிலா.

உணவை முடித்ததும் நிலா பிருந்தாவுடன் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருக்க,

“அட வாங்க த்தான்!” என மறுத்த லோகேஷ்ஷினை அழைத்துக் கொண்டு மொட்டைமாடிக்கு சென்றுவிட்டான் மனோதீரன்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!