Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 184
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் - 6
இரண்டு கைகளிலும் மருதாணியோடு இரண்டு தோழிகளும் அறையில் அமர்ந்திருந்தனர்.
சிந்தியா “ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி எந்த யோசனையும் இல்லாமல் இப்படி இருக்கிறது நல்லா இருக்குல்லே”
ஆமாம் என்று தலையசைத்தாள்.சிரித்துக் கொண்டே ஆதிரையைப் பார்த்து “தர்ஷனைப் பற்றி என்ன நினைக்கிறே?”
அவள் அப்படிக் கேட்டதும் ஆதிரையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்து யோசனையாக “எதுக்கு கேட்கிறே?” என்று அவள் கேட்கவும் ஆதிரையின் முகமாற்றத்தைக் கவனித்த சிந்தியா “சும்மாத் தான் கேட்டேன் அவரு எல்லோர்கிட்டேயும் ரொம்ப ஈஸியா பழக மாட்டாங்க நீயும் அப்படித் தானே ஆனால் உங்க ரெண்டுபேருக்கும் சட்டுனு ஒத்துப் போய் பேசினது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு அதான் கேட்டேன்” என்றாள்.ஆதிரை எல்லாவற்றையும் கேட்டாள்.ஆனால் பதில் பேசவில்லை.
மறுநாள்….
மதனின் உறவுக்கார பெண்ணொருத்தி நிச்சயிர்தார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.அங்கே நடக்கிற எல்லா விஷயங்களையும் பார்த்தவர் மதனின் அம்மாவிடம் “இரண்டாவது கல்யாணத்துக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா?” என்ற போது அவரோ சிறு புன்னகையை பதிலாக தந்து விட்டு “நீங்க சொல்றது மாதிரி இரண்டு பேருக்கும் இது இரண்டாவது கல்யாணம் தான் ஆனால் அவங்களுக்கு இது புது வாழ்க்கைக்கான ஆரம்பம் அதனாலத் தான் நாங்க எல்லோரையும் அழைச்சு ஊரே மெச்சிற மாதிரி கல்யாணத்தை பண்ணாமல் அவங்க நல்லபடியா வாழனும்னு அப்படி நினைக்கிற நல்ல உள்ளங்களை இந்த திருமணத்திற்கு அழைச்சு இருக்கிறேன் உங்களையும் சேர்த்து தான் ஏன்னா மதனோட கல்யாணத்தைப் பற்றி ரொம்ப அக்கறையா இருந்தீங்க” என்ற போது அந்தப் பெண்ணால் எதுவும் பேச முடியவில்லை.
இதை எல்லாம் பார்த்த ஆதிரைக்கு அவள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் கண்முன்னே ஒருநொடி வந்து போனது.ஆதிரையின் திருமணம் இரு பக்கமும் பெற்றோர்களால் பார்த்து சம்மதம் சொல்லி செய்துக் கொள்ள முடிவெடுத்தனர்.
திருமணத்திற்கு ஒருநாளைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையின் அம்மாவிடம் “ஏன் இவ்வளவு செய்து திருமணம் நடத்த வேண்டும்?” என்று கேட்டதற்கு அவளின் அத்தையோ “எல்லாம் அவங்க இஷ்டப்படித் தான் நடக்கும்னு முடிவெடுத்தா இப்படி அனாவசியமாகத் தான் இருக்கும்” என்றார்.
இதைக் கேட்டு ஆதிரையின் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.ஆனால் திருமணத்திற்கு ஒருநாள் முன்னால் மகளின் வாழ்க்கை போய் விடுமே என்று பயந்து அமைதியாக இருந்தார்.ஆனால் அதுவே தன் வாழ்க்கையின் அழிவுக்கான ஆரம்பமாக இருந்தது.அங்கே வாழ ஆரம்பித்த பிறகு ஆதிரை தான் அங்குள்ளவர்களைப் பற்றி புரிந்துக் கொள்ள முடிந்தது.
பழைய நினைவில் அப்படியே நிற்க அப்பொழுது அந்த வழியாக வந்த தர்ஷன் மெதுவாக ஆதிரையை அழைத்தான்.அவளோ வேறு யோசனையில் நின்றுக் கொண்டிருந்ததால் சரியாக கேட்காமல் இருக்க அவளின் காதோரமாய் மெதுவாக “ஆதிரை” என்று அழைக்கவும் அவனின் சூடான மூச்சுக் காற்று வரவும் பதறிப் போய் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் பதறிப் போன விழிகளைப் பார்த்தவன் “சாரி ஆதி உங்களை பயமுறுத்திட்டேனா?” என்றதற்கு இல்லை தலையசைத்தாலும் “நீங்க திடீர்னு பக்கத்தில் வரவும் பயந்திட்டேன்” என்றாள்.
அவன் எதுவும் சொல்லவில்லை.சிந்தியா சிவந்திருந்த தன் கரங்களை எல்லோருக்கும் காட்டியது போல் தர்ஷனுக்கும் காட்டினாள்.அவனோ சிந்தியாவிடம் “உங்க ப்ரெண்ட் மருதாணி போட்டாங்களே அவங்களோடது சிவந்திருக்கான்னு பார்க்கலையா?” என்றதற்கு ஆதிரையிடமும் கேட்டு சிவந்து போன அவளின் கரங்களையும் பார்த்தாள் சிந்தியா அவனும் சேர்ந்து தான்.
மாலையில் நிச்சயமாகம் இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் இருந்தது.சிந்தியாவும் அவளின் பெற்றோரின் முகமும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தது.அழகிய இளம் பச்சை நிறத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுப்புடவையில் கூந்தலில் பூச்சூடி சிறிது ஒப்பனையோடு அழகு மிளிர்ந்த பாவையாக அமர்ந்திருந்தாள் மணப்பெண்.
அவளுக்கு பின்னால் எப்போதும் உடுத்தும் உடையை நேர்த்தியாக
அணிந்து தன் தோழியின் திருமணத்தில் தானும் முக்கியமான இருப்பதில் ஏக நிம்மதியில் நின்றுக் கொண்டிருந்தாள் ஆதிரை.மதன் சிந்தியாவின் கையில் மோதிரம் அணிவித்து அவர்களுக்கான நிச்சயிர்தார்த்தம் முடிந்தது.
பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி சாப்பிட்டு முடிக்கவும் நேரம் வேகமாக கடந்தது.
இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிந்தியா தான் வாங்கி வைத்திருந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த இளஞ்சிவப்பு மேக்ஸியை ஆதிரையிடம் அணியச் சொன்னாள்.
எவ்வளவோ அவள் மறுத்தும் கட்டாயப்படுத்தி அந்த உடையை அணிய வைத்தாள்.
ஆதிரையும் அந்த உடையில் அழகாக மிளிர்ந்தாள்.அதுவரை யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் இருந்த உடை இப்பொழுது அவளை தணித்துக் காட்டியது.
மதனுக்கு தோழனாக வந்து நின்ற தர்ஷனைப் பார்க்கவும் ஆதிரைக்கு ஒன்றுமே புரியவில்லை.அவள் எடுத்திருந்த உடையின் வண்ணத்தோடு அவனின் உடையும் இருந்தது.அதைப் பார்த்து ஏனோ இருவரும் ஜோடிப் போல இருந்தனர்.
அந்த சங்கடத்தில் கொஞ்சம் அல்ல நிறையவே யோசனையில் இருந்தாள்.அவளின் முகமாற்றத்தைக் கண்ட தர்ஷன் நேராக அவளுக்கு அருகில் சென்று “ஆதிரை” என்று அழைத்தான்.
“சொல்லுங்க”
“ஆதி என் மேல வருத்தப்படாதீங்க இந்த டிரெஸ் நான் வேணும்னு போட்டுக்கலை ஏதேச்சையாக அமைந்தது என் அம்மா எனக்கு டிரெஸ் பார்சல் அனுப்பி இருக்கிறதாக சொன்னாங்க வந்து போட்டப் பிறகு தான் தெரியும் வேணும்னா நீங்களே பாருங்க” என்று தன் கையில் வைத்திருந்த கைப்பேசியில் உள்ள குறுஞ்செய்தியைக் காட்டினான்.
அதில் அவர் இரண்டு நாட்களே முன்னரே அனுப்பி இருந்தது தெரிய வந்தது.அப்போது தர்ஷன் “உங்கள் வாழ்க்கை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாய் இருக்குமானால் எவருடனும் எந்த பொருளின் மீதும் முரண்பாடு இருக்காது” என்றான். அவள் விரும்பும் அந்த இனியக் குரலில்.
அதைக் கேட்டதும் ஏதோ ஒரு தைரியம் ஒட்டிக் கொள்ள சுற்றி இருந்தவர்கள் தன்னைப் பற்றி யோசிப்பார்கள் என்பதை விட தான் வந்திருந்த இனிமையான நினைவுகளுக்கு தயாரானாள்.
அங்கே நடந்த அழகிய தருணங்களை புகைப்படத்தில் முகம் முழுக்க புன்னகையோடும் விளையாட்டு பேச்சுகளுக்கு புன்னகையோடு நேரம் செல்ல நினைவாக தன் அம்மாவிற்கும் வியன்காவிடமும் அங்கே நடந்த முக்கிய நிகழ்வினை வீடியோ மூலம் காட்டினாள்.
ஆதிரையைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்கே” என்று மகளும் அம்மாவும் பாராட்டிக் கொண்டனர். அன்றைய இரவு ஆடலும் பாடலோடு சிரிப்பும் சந்தோஷமுமாய் நிறைந்து இருந்தது.
மறுநாள் விடியற் காலையில் வெகு சீக்கிரமே எல்லோரும் தயாராகி கோவிலுக்குச் சென்றனர். குறித்த முகூர்த்த நேரத்தில் சிந்தியா மணப்பெண் கோலத்தில் மணமேடையை நோக்கி வரும் போது ஆதிரையும் இன்னும் சில பெண்களும் கையில் விளக்கேந்தி வந்தனர்.
பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிந்தியாவின் கழுத்தில் மதன் தாலியிட்டு தன்னவளாக்கிக் கொண்டான்.
சிந்தியாவின் விழிகளில் கண்ணீரையும் முகத்தில் புன்னகையோடு இருக்க அவன் நெற்றியில் திலகம் இடும் போது மெதுவாக “இனிமேல் இப்படி எல்லாம் அழக் கூடாது சிந்தியா உன் முகத்தில் புன்னகை தான் நிலைச்சு இருக்கனும்” என்ற போது சரியென்று தலையசைத்தவள் “இனிமேல் என்னை எப்பவும் தனியா விட்டுற மாட்டீங்கல்ல” என்று அவள் ஏக்கமாய் கேட்கவும் அவள் கையை இறுக அணைத்தவன் “இல்லை நாம எப்பவும் சேர்ந்து தான் இருப்போம்” என்றான் அன்போடு.
இதை எல்லாம் அருகில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரைக்கு சிந்தியாவுக்கு கிடைத்த வாழ்க்கையினை எண்ணி மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விழிகளில் நிரப்பிக் கொண்டது. இதை எல்லாம் தர்ஷன் பார்த்துக் கொண்டிருந்தான்.
திருமாங்கல்யத்தை வாங்கியவளின் பாதத்தில் மெட்டியிட்டான் மதன். பின்னர் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
இடையினில் குட்டிம்மா வந்து இரண்டுபேருடைய கையையும் பிடித்துக் கொண்டாள். ஆதிரையும் கொஞ்சம் தள்ளி தர்ஷனும் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அருகில் வரவும் ஆதிரையும் சிந்தியாவும் கட்டிக் கொண்டனர்.
“வாழ்த்துக்கள் சிந்தியா மதன் உன் வாழ்க்கையில் அன்பும் சந்தோஷமும் நிறைஞ்சு இருக்கனும்” என்றவள் கன்னத்தில் லேசாக அன்பாக முத்தமிட்டாள் ஆதிரை.
அவள் அப்படி செய்ததும் சிந்தியாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.அவளை இறுக அணைத்தவள் “உன் வாழ்க்கையிலும் அன்பும் சந்தோஷமும் இனிமேல் நிறைந்து இருக்கனும்னு என் கல்யாண முடிந்த உடனே கடவுள்கிட்ட வைச்ச முதல் பிராத்தனையே உனக்காகத் தான் ஆதிரை” என்ற போது சரியென்று தலையசைத்தாள்.
இங்கே மதனும் தர்ஷனும் முதலில் கைக்கொடுக்கவும் “கங்கிராட்ஸ் மதன்” என்ற போதூ மதன் “ரொம்ப தாங்ஸ் தர்ஷன் உன்னாலத் தான் இந்தக் கல்யாணமே நடந்துச்சு இதுல எல்லாமே நீ எனக்காக செய்தது பெரிய விஷயம்” என்றான் அன்போடு ஆரத்தழுவிக் கொண்டார்கள்.