Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 184
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன் - 5
பேசிக் கொண்டே வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆதிரையிடம் பதில் வராமல் போகவே தர்ஷன் அவள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்க அவளோ தூங்கிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் தன் பயணத்தை தொடர்ந்தான்.டவுணுக்கு செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு மேலான பயணம் முடிந்தும் அவளை எழுப்பாமல் காரை ஓரமாக நிறுத்தி வெளியில் நின்று ஓரமாக கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
விழிப்பு வந்து எழுந்தவள் காரிலிருந்து வெளியே வந்து நிற்கவும் அவளைப் பார்த்தவன் அழைப்பை துண்டித்து விட்டு அவளருகில் வந்து “ஸ்லீப்பிங் பியூட்டி எழுந்திட்டீங்களா?” என்ற போது அவனது கிண்டலில் பதில் சொல்ல முடியாமல் “நைட் சரியா தூங்க முடியலை அதனால் தான்” என்று தலையை குனிந்துக் கொண்டாள்.
அவனோ “நான் காரணம் கேட்கலை நீங்க வந்த வேலையை பாருங்க இதோ இங்கே நிறைய கடைகள் இருக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோங்க எனக்கு இங்கே சில வேலைகள் இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்” என்று சென்று விட்டான்.
ஆதிரை ஒவ்வொரு கடைக்குச் சென்று அங்கே வீடியோ அழைப்பினில் வியன்காவிடம் பேசி அவளுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு வாங்கினாள்.அதோடு தன் அண்ணன் மகனுக்கும் குட்டிம்மாவுக்கும் சேர்ந்து வாங்கிக் கொண்டாள்.
அப்பொது ஆதிரையின் அம்மா “ஆதிரை தினமும் மாத்திரை போடுறியாம்மா நல்லா தூங்கிறே தானே?” என்ற போது தான் அவளுக்கு நினைவே வந்தது.
இங்கே வந்த இரண்டு நாட்களில் அவள் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை.
படுத்தவுடனே தூங்கியும் போனாள்.சில நேரங்களில் தன்னையும் அறியாமல் தூங்கிப் போனதும் நினைவுக்கு வந்தது.அதனால் தன் அம்மாவிடம் “ம்ம்… நல்லா தூங்கிறேன்ம்மா” என்றாள்.
அவரிடம் இரண்டு நாட்களாக நடந்த சில விஷயங்களைச் சொன்னாள்.தர்ஷனுடான அந்த சந்திப்பை சொல்லவில்லை.கல்லூரிப் பெண் போல மறைத்துக் கொண்டாள்.இப்படி எல்லாம் சகஜமாக பேசினோம் என்றால் தவறாக எண்ணி விடக் கூடாதே என்ற எண்ணமும்.ஏனோ சொல்லவும் ஒருவித தயக்கம். இன்னும் சில பொருட்கள் தன்னுடைய பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும் வாங்கினாள்.
இப்படி எல்லாம் அவள் யாருக்கும் வாங்கியதும் இல்லை.இந்த மாதிரி தனியாக ஒரு பயணம் தன் விருப்பப்படி என்று எல்லாம் வாங்கினாள்.இதுவரை மற்றவர்களோடு வரும் போது அவர்கள் சொல்வது போல் இருந்துக் கொள்வாள்.அப்படித் தான் அவளது பழக்கம்.
எல்லாம் புதியதாக இருந்தது.
எவ்வளவு நேரம் சென்றது அவளுக்கே தெரியவில்லை.
ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்தாள்.அவசரப்படுத்த அங்கே யாரும் இல்லை.கூகுளின் உதவியால் பேரம் பேசி பொருட்களை வாங்கி திரும்பிப் பார்க்கும் போது அங்கே தர்ஷன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து கையசைத்தவள் அவனருகில் வந்தவள் “என்னோட ஷாப்பிங் முடிஞ்சிடுச்சு போகலாமா?” என்றாள்.
அவனோ ஆச்சரியமாய் “இவ்வளவு சீக்கிரமாகவா?”
“என்ன சீக்கிரமா? இதுவே ரொம்ப லேட்டாகிடுச்சுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகிடுச்சு” என்றாள்.
அவனோ “மதன் அம்மாவோடு அவங்க பேமிலியோடு வந்தால் கதவை மூடுற வரைக்கும் ஷாப்பிங் போகும் அதுக்கு நீங்க சீக்கிரம் தான்” என்றான்.அவளோ “அப்படியா!” என்ற போது கையில் இருந்த பொருட்களை வாங்கப் போனான்.ஆதிரை “பரவாயில்லை நானே வைச்சுக்கிறேன்”
“நான் எடுத்துக்க மாட்டேன் வீட்டுக்கு போனதும் கொடுத்து விடுவேன்” என்று அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டான்.
“எல்லோருக்கும் நினைவா வாங்கிட்டீங்களா?
“ம்ம்… வாங்கிட்டேன்”
“நான் எப்போதும் இப்படி கேட்பேன் எங்க அம்மா சொன்னது வேற எதாவது மறந்துட்டா கூட நினைவுக்கு வந்துடுமாம்”
அவன் அப்படிச் சொன்னதும் அதைக் கேட்டு சிரித்தாள்.
அவனோ அவளைப் பார்த்து “உங்களுக்கு என்ன வாங்குனீங்க?”
அவளோ திருதிருவென்று விழித்தாள்.அவளைப் பார்த்து சிரித்தவன் “எதுவும் வாங்கலையோ?”
ஆமாம் என்று தலையசைத்தாள்.
அப்பொழுது படபடவென மழைப் பெய்ய இருவரும் வேகமாக நடந்து காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டனர்.
தர்ஷன் “சாயங்காலம் மழை பெய்ய ஆரம்பிச்சா சட்டுன்னு விடாது நாம வீட்டுக்கு போகலாம்” என்றான்.இரவு நேரம் மழைப் பெய்தால் வண்டி மெதுவாகத் தான் ஓட்டனும்” என்று காரணம் சொல்லி விட்டு பயணத்தை தொடர்வதற்கு முன் சின்னதாக இருந்த தேநீர் கடைக்கு அருகில் போய் நின்றவன் “இந்த மாதிரி சின்னக் கடைல டீ குடுப்பீங்களா?” என்று கேள்வியாகக் கேட்டான்.
“ம்ம்… குடிப்பேன் கூடவே அந்த பழம்பூரியும் வாங்கிக் கொடுங்க சூடாக இருக்கு இந்த மழைக்கு நல்லா இருக்கும்” என்றாள்.
அவனோ சரியென்பது போல் தலையசைத்து விட்டு தேநீரும் இரண்டு பழம்பூரியை வாங்கிக் கொள்ள அவளோ “உங்களுக்கு தனியாக வாங்கிக் கோங்க” என்று அவள் சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் தனக்கு ஒன்று வாங்கிக் கொண்டான்.
காரிலிருந்தபடியே வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தனர்.
அமைதியாக இருக்கவும் வானொலியை ஒலிக்க விட்டான்.
தமிழ் பாடலைக் கேட்டப்படியே வெளியே வேடிக்கை பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது.சில இடங்களில் நிறுத்தியும் மெதுவாகவும் சென்றது.
தன்னைப் பற்றி அவனிடம் சொன்னது போல் அவனைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பது மனதைப் போட்டு துளைத்துக் கொண்டிருந்தது.
மனதிலே எப்போது கேட்கலாம் என்று யோசித்தவள் மழையின் வேகம் அதிகமாகவே இருக்கவே அவன் காரை ஓரமாக நிறுத்தி இருந்தான்.
அப்போது அவனுடைய கைப்பேசி அழைத்தது.அழைப்பை எடுத்தவன் “ஹலோ அம்மா சொல்லுங்க” என்றான்.
“ம்ம்… சரி பார்க்கிறேன் நல்லா இருக்கேன் ம்ம்… பரவாயில்லை கார்ல” என்ற ஒற்றை பதில்களாகவே இவனிடம் வந்துக் கொண்டிருந்தது.பேசி முடித்ததும் அழைப்பை துண்டித்தவன் ஆதிரையைப் பார்த்தான்.அவளோ தன் கைப்பேசியில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளும் தர்ஷனைப் பார்க்கவும் திரும்பவும் பயணம் ஆரம்பிக்கவும் “அம்மா தான் பேசினாங்க”
இவளோ தலையசைத்து விட்டு “உங்களைப் பற்றி சொல்லுங்க”
“என்னைப் பற்றித் தான் உங்களுக்கு தெரியுமே”
அவளோ “ஆர்.ஜே பற்றி இல்லை உங்களைப் பற்றி” அழுத்தமாகச் சொன்னாள்.
அவள் அப்படிச் சொன்னதும் மெலிதாக புன்னகைத்தவன் மனதினுள் ‘இந்தப் பெண்கள் எப்போதும் இப்படித் தான்தான்’ என்று நினைத்தவாறே “நான் சென்னையில் பிஸ்னஸ் பண்றேன் அம்மாவும் அப்பாவும் பெங்களூர்ல இருக்காங்க”
“ம்ம்… அப்புறம் உங்களோடு பிறந்தவங்க”
“அக்கா இருக்காங்க மெரேஜ் முடியவும் வெளிநாட்டுல செட்டில்”
“அப்புறம்”
“அப்புறம் வேறென்ன?”
“வேற… உங்க லைப் பத்தி சொல்லலை”
அவனோ காரின் திசைமாற்றியை அழுத்தமாக பிடித்தவன் “நான் தனியாகத் தான் இருக்கேன்” என்றான்.
“கல்யாணம் பண்ணலையா?”
அவனோ மெலிதான புன்னகை மறைந்து முகம் முழுவதும் ஒரு அழுத்தத்தை நிரப்பிக் கொண்டது.
“இல்லை அதுல எல்லாம் ஆர்வம் கிடையாது இப்படியே தனியா சிங்கிளா இருந்தால் சந்தோஷமாக இருக்கும்” என்றான்.அவன் பேசியதைக் கேட்டு அவளால் நம்ப முடியவில்லை.இவ்வளவு ஒரு எதார்த்தமான ஒருவனை அப்படி யாருக்கும் பிடிக்காமல் போய் இருக்குமா? என்ற யோசனையோடு அவனிடம் “வாழுறீங்க சந்தோஷமா இருங்க” என்று அவனுக்கு வாழ்த்துச் சொன்னாள்.
இதே பதில் நிறைய நபர்களிடம் சொல்லி எத்தனையோ பேரிடம் சொன்ன பொழுதெல்லாம் அவர்கள் இவனுக்கு இலவசமான அறிவுரையும், அவர்களின் மகிழ்ச்சி வாழ்வையும் இன்னும் சில பேர் இதுவே சிறந்தது என்று அவர்களுடைய சோகக்கதை சொல்வார்கள். ஆனால் ஆதிரை அவனுக்கு வாழ்த்தியதை ஏனோ சட்டென்று மனதில் அவளின் பதில் ஒட்டிக் கொண்டது.