• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
அத்தியாயம் -2


ஆதிரைக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது.கேரளாவிற்கு இப்பொழுது தான் முதன்முதலாக அதுவும் தனியாக செல்வது ஒருவிதமான பதற்றத்தையும் சேர்த்துக் கொடுத்தது.

தன் அம்மாவின் நிறைய ஆலோசனைகளோடு தன் பயணத்தை தொடர்ந்தாள் ஆதிரை.இரயில் பயணமும் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு என்றானது.உடன் பயணித்தவர்கள் வெளியே வேடிக்கை இதற்கிடையில் அலுவலகத்தில் இருந்து வந்த சில கைப்பேசி அழைப்புகளுக்கான பதில்கள் என பயணம் நன்றாகவே சென்றது.

இரயில் பயணத்தில் தனது கடைசி நிறுத்தமான எர்ணாகுளத்தில் வந்து நின்றது.ஆனந்தமும் ஆர்வமுமாய் படியின் வாசலில் வந்து நிற்கவும் அங்கே புன்னகை முகமாக நின்ற முதியவர் ஒருவர் “நீங்க தானே ஆதிரை” என்று தமிழும் மலையாளமும் கலந்துக் கேட்கவும் ஓரளவு புரிந்துக் கொண்டவளாக ஆமாம் என்று தலையசைத்தாள்.

அவரும் அவளை அழைத்துக் கொண்டவர் கையில் இருந்த பெட்டியை வாங்குவதற்கு முற்பட ஆதிரை “வேண்டாம் நானே தூக்கிட்டு வரேன்” என்று மறுத்து விட்டு அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அவரிடம் “நீங்க சிந்தியாவிற்கு என்ன முறை வேணும்?” என்று கேட்க அவரோ புரியாமல் விழித்தார்.

உடனே ஆதிரை கையில் வைத்திருந்த கூகுளின் உதவியால் அவள் தமிழ் பேசி அதை மலையாளத்தில் மொழி பெயர்ப்பை வைத்து அவரிடம் கேட்கவும் அவரும் சிரித்துக் கொண்டே அதே போல் அவளிடம் திரும்ப “நான் மதனோட மாமா” என்றார்.

இப்படியாக இருவரும் இரயில் நிலையத்தின் வாயிலுக்கு வரவும் அங்கே முன்னால் ஓட்டுநர் புறம் காரில் அமர்ந்தபடி ஒருவன் அமர்ந்திருக்க அவனுக்கு அருகில் செல்லவும் இவர் பின் பக்கக் கதவை திறக்கவும் அதில் அவரே ஆதிரையின் பெட்டியை தூக்கி வைத்து விட்டு அவர் முன்னால் அமர்ந்திருக்க பின்னால் ஆதிரை அமரச் சொன்னவர் “இங்கிருந்து ஒரு இருபது நிமிசம் தான் நாம வீட்டுக்கு போகலாம்” என்பதை மலையாளத்தில் சொல்ல அவளோ அதை இணையத்தின் உதவியால் மொழிப் பெயர்த்துக் கொண்டாள்.

இதை எல்லாம் முன்னால் சிரித்தப்படி அமர்ந்தவன் பார்த்துக் கொண்டிருந்தான்.இவளோ அவனைப் பார்த்து மெதுவாக “இப்போ எதுக்கு இந்த இளிப்பு?” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் அப்படிச் சொன்னதும் திரும்பி பார்த்தவன் அந்தப் பெரியவரிடம் மலையாளத்தில் பேச ஆரம்பித்தான்.

ஆதிரையின் நிலைமை தான் மோசமாக இருந்தது.எதிரில் இருப்பவர்களின் பேச்சை புரிந்துக் கொள்ள முடியாததால் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தனக்குப் பிடித்த பாடலை கைப்பேசியில் ஒலிக்க விட்டப்படி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எங்குப் பார்த்தாலும் பச்சை பசலென செடிகளும் தண்ணீர் ஓடைகளும் மக்களின் கூட்டமும் நிரம்பி இருந்தது.இவை எல்லாம் மனதிற்கு ஒருவித அமைதியைத் தர அப்படியே காரின் ஜன்னலோரம் சாய்ந்தவள் தூங்கிப் போனாள்.

திடீரென்று விழிப்பு வரவே கண்களைத் திறந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க காரில் யாருமில்லை.ஏதோ ஒரு இடத்தில் நின்றுக் கொண்டிருந்தது.ஒருவிதமான பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ள சட்டென்று வியர்த்தது.

அப்போது தான் காரினுள் இன்னும் ஏசி ஓடிக் கொண்டிருந்தது.கதவை திறந்து வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.ஒரு பெரிய வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கும் இங்குமாக சின்னச்சிறு பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒரு சின்னப் பெண் ஆதிரையைப் பார்த்து “ஆன்ட்டி ஆ விளிக்கு போகு” என்று கைக்காட்டிச் சொன்னாள்.

அந்தச் சிறுமி காட்டிய வழியில் நடந்தாள்.அது வீட்டின் உள்ளே செல்லாமல் பின்பக்கமாக இருந்தது.இவளும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடக்கவும் அங்கே நிறைய ஆட்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.அப்போது காரை ஓட்டியவன் அங்கே நிற்பதைக் கண்டு அவனருகில் செல்லவும் பின்னாலிருந்து “ஆதிரை ஆதிரை “ என்ற சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள்.

சிந்தியா தான் சிரித்துக் கொண்டு ஓடி வந்தவள் ஆதிரையைக் கண்டதும் அவளைக் அன்போடு கட்டிக் கொண்டாள்.சிந்தியாவின் இந்த திடீர் செய்கையினில் மொத்தமாக உடைந்தவள் அவளை இறுக அணைத்துக் கொள்ள உதடுகள் புன்னகை புரிந்தாலும் விழிகளிலிருந்து கண்ணீர் வடிந்தது.

சிந்தியாவும் அந்நிலையில் தான் இருந்தாள்.

இருவரும் விலகிக் கொள்ள கரங்கள் மட்டும் அணைத்திருந்தது.ஆதிரை “எப்படி இருக்கே?” அழுத்தமாகக் கேட்டாள்.முகம் முழுவதும் புன்னகையோடு “என்னைப் பார்த்தால் எப்படி தெரியுது? நல்லா இருக்கேனா?” என்று தன்னை கொஞ்சம் குனிந்து பார்த்தவாறு கேட்டாள் சிந்தியா.

ஆமாம் என்பது போல் புன்னகைத்துக் கொண்டே தலையசைத்தாள்.சிந்தியா “நீ எப்படி இருக்கே?”

“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்” என்றாள்.

சிந்தியா அவளை ஆழ்ந்து பார்த்தப்படி “ஏன் பொய் சொல்றே?” ஆதிரையிடம் பதிலில்லை.

“இப்போ எதுக்கு தேவையில்லாத விஷயம் எல்லாம்” என்றதும் சரியென்பது போல் தலையசைத்தாள் சிந்தியா.

ஆதிரையின் கரங்களை அழுந்தப்பிடித்தவாறே “என்னோடக் கல்யாணத்துல எனக்கு மட்டுமில்லை உனக்கும் சந்தோஷம் மட்டும் தான் நினைவா இருக்கனும்” என்றாள்.

ஆதிரை விழிகளை மூடி சம்மதம் போல் ஒத்துக் கொண்டாள்.

“வா உள்ளே வீட்டைப் போய் சுற்றிப் பார்க்கலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் சிந்தியா.

இங்கே இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை எல்லாம் ஆதிரையோடு காரில் வந்தவனும் பார்த்துக் கொண்டிருந்தான்.அவளின் உதடுகள் பேசாத வார்த்தைகள் விழிகள் பேசிய வார்த்தைகளின் ஜாலத்தை ஒருநொடி அப்படியே அசராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

வீட்டையும் அங்கே உள்ளவர்கள் அவளின் பெற்றோர் உடன்பிறந்தவர்கள் என எல்லோரையும் சந்தித்து பேசி நலம் விசாரித்து இவளைப் பற்றிய அறிமுகம் புது நபர்கள் என எல்லோரையும் தெரிந்துக் கொண்டாள் ஆதிரை.

சிந்தியா மதனிடம் ஆதிரையை அறிமுகப்படுத்தினாள்.

அவனோ எந்தவிதமான கௌரவமும் இல்லாமல் ஆதிரையிடம் “ஷ்ப்பா நீங்க தான் ஆதிரையா? சிந்தியா எப்பவும் உங்களைப் பத்தித் தான் பேசுவா மிடில ப்ளீஸ் காப்பாத்துங்க இனிமேல் என்னைப் பற்றி எல்லோர்கிட்டயும் பெருமையா பேசச் சொல்லுங்க நீங்க சொன்னால் கேட்பா ப்ளீஸ்” என்று ஏதோ அவளிடம் ஏற்கனவே பேசிய நபரைப் போல் பேசியதும் ஆதிரையால் பதில் பேச முடியாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

சிந்தியா “மதன் சும்மா இருங்க” என்ற போது “ஆதிரை உங்களை இந்த நிமிசத்துல இருந்து என்னுடைய தங்கச்சியா தத்து எடுத்துக்கிறேன் அதனால எனக்காக நீங்க தான் சப்போர்ட்டா இருக்கனும் சரியா” என்றதும் சிந்தியா “சப்போர்ட்டாவும் கிடையாது சாத்துக்குடியும் கிடையாது” என்ற போது ஒரே சிரிப்புத் தான் அந்த இடம் முழுவதும் நிரம்பி இருந்தது.

திருமணம் என்றாலே பதற்றமும் பரபரப்பும் பார்த்து இருந்தவளுக்கு இன்று ஏனோ அந்த மாதிரி எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு குடும்பத்தின் சந்திப்பு நிகழ்ச்சியாகத் தான் தெரிந்தது.

எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருப்பதை அவளின் விழிகள் வியப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்க அதை அங்கே அவனும் ஓரமாக நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்படியே பேச்சுக்கள் பேசி சிரிப்புக்கள் அங்கே சிதறிக் கிடந்தது.மதனுக்கு ஆதரவாக அவனின் அம்மா பேசாமல் சிந்தியாவின் பக்கம் பேசிக் கொண்டிருந்தார்.இவை எல்லாம் ஆதிரைக்கு புதியதாக இருந்தது.

சிந்தியா “ஆதிரை முதல்ல நீ போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் நீ இப்படியே பார்த்துட்டு இருந்தால் நேரம் போய்டும் மதன் வாயை மூட மாட்டார் வா போகலாம்” என்று மதனிடம் “எல்லாம் அப்புறம் பேசலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு போனாள் சிந்தியா.

ஆதிரை “ஹேய் என்னோட பேக் நான் இன்னும் உள்ளே கொண்டு வரலை” என்ற போது “அதெல்லாம் எப்பவோ உள்ளே வந்திடுச்சு நீ தான் நல்லா தூங்கிட்டு இருந்தே” என்றாள் சிரித்துக் கொண்டே…

ஆதிரை கோபமாக “இங்கே வந்த உடனே அந்த டிரைவர் என்னை எழுப்பி விட வேண்டியது தானே இல்லை நீயாவது எழுப்ப வேண்டியது தானே” என்றாள்.

சிந்தியா சிரித்துக் கொண்டே “தர்ஷன் டிரைவர் இல்லை மதனோட ப்ரெண்ட் நானும் உன்னை எழுப்பலாம் தான் வந்தேன் நீ தான் அசந்து தூங்கிட்டு இருந்தே தர்ஷனும் முதலிலேயே வேண்டாம்னு தான் சொன்னான். ஆனால் நான் உன் பக்கத்துல வந்து உட்கார்ந்தேன் உனக்கு எதுவும் தெரியலை அந்தளவுக்கு பயண அசதின்னு விட்டுட்டேன் இங்கே வந்து ஒரு மணிநேர கழிச்சுத் தான் எழுந்து வந்திருக்கே” என்றாள் ஆச்சரியமாய்…

“என்ன?” ஆதிரை அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“நம்பலைன்னா நீயே டைம் பாரு” என்றதும் தான் ஆதிரை தான் காதில் மாட்டி வைத்திருந்த ஹெட்செட் நினைவு வந்து காதில் கைவைத்துப் பார்த்தாள்.

அவளைப் பார்த்த சிந்தியா “நான் தான் எல்லாத்தையும் கழற்றி உன் ஹேன்பேக்ல வைச்சேன்” என்ற போது ஆதிரையின் அறை வந்திருந்தது.அதில் அவளை உள்ளே போகச் சொன்னவள் “எல்லாத்தையும் போட்டு தேவையில்லாமல் யோசிட்டு இருக்காதே இன்னைக்கு மட்டும் தான் உனக்கு தனி ரூம் நாளையிலிருந்து ஷேரிங் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டுச் சென்றாள்.


அவள் சொன்னதற்கு சரியென்று தலையசைத்தாலும் தெரியாதவர்களோடு எப்படி ஒன்றாக தங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
Last edited:
Administrator
Joined
Sep 3, 2024
Messages
184
குளித்து முடித்து உடை மாற்றி விட்டு அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தவள் அங்கே மூடியிருந்த கதவை திறக்க அது மொட்டை மாடியின் பக்கம் செல்வதாக இருக்க அங்கே சென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.

சுற்றிலும் மரங்களும் மலைகளும் சூழ்ந்திருந்த இயற்கையை இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது விழிகளை மூடி,

வளைந்து நெளிந்து போகும்
பாதை மங்கை மோகக்
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ ஆலங்கொடி…

என்று அவள் பாடிக் கொண்டிருக்கும் போது அருகினில் யாரோ நிற்பதைப் போல் உணர்ந்தவள் கண்களைத் திறக்க அங்கே காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் நின்றுக் கொண்டிருந்தான்.

அவனை கேள்வியாகப் பார்க்கும் போது சிந்தியாவும் உள்ளே வந்தவள் ஆதிரையின் கையைப் பிடித்து “வா சாப்பிடப் போகலாம் நிறைய வேலைகள் இருக்கு” என்று இழுத்துக் கொண்டு செல்ல ஆதிரையோ அவனையே முறைத்துப் பார்த்தப்படியே சென்றாள்.

சிந்தியாவின் அம்மா,அப்பா மற்றும் இன்னும் சிலரோடு அமர்ந்து ஆதிரை காலை உணவைச் சாப்பிட்டு முடித்தாள்.சிந்தியாவிடம் “சிந்தியா அந்த ரூம் வழியாகத் தான் மொட்டை மாடிக்கு வர முடியுமா?” என்ற போது “இல்லை அந்த ஒற்றை வழிப் பாதையின் பக்கமாக இதே போல இருக்கிற சில ரூம்களுக்கும் வர்ற மாதிரி வழி இருக்கு தர்ஷன் அங்கே இருந்ததுனால கேட்டியா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.

அவள் ஆமாம் என்று தலலையசைத்தாள்.”அவனும் அடிக்கடி மொட்டை மாடிக்கு வருவான்.எனக்கும் அங்கே நின்னு பார்த்தால் நல்ல ரிலாக்ஸா இருக்கும் வா நான் எந்தந்த பங்ஷனுக்கு என்னென்ன டிரெஸ் போடனும்னு செலக்ட் பண்ணி சொல்லு நகை,சிகை அலங்காரம்னு எல்லாமே பார்க்கனும் நைட் வெளியே போகலாம் நாளையிலிருந்து ஒவ்வொரு விழாவாக ஆரம்பிச்சிடும் ஏன்னா ரெண்டு முறையிலும் கல்யாணம் நடக்குது ஆதிரை மதனோட விருப்பமும் அதான்” என்றாள்.

அப்பொழுது அங்கே ஒரு ஐந்து வயது சிறுமி இவளுக்கு வழியைச் சொன்ன பெண் வந்தாள்.சிந்தியாவைக் கண்டதும் “மாம் டாடி இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க” என்று ஆங்கிலத்தில் சொல்லி கை நிறைய பூக்களை கொடுத்து விட்டு ஓடி விட்டாள்.

அதைப் பார்த்து சிந்தியா புன்னகையோடு அந்த மல்லிப்பூவை எடுத்து தலையில் வைத்தாள். அதைப் பார்த்த ஆதிரை கொஞ்சம் அதிர்ச்சியாகி “மதனுக்கு குழந்தை இருக்கா?”

“ம்ம்ம்….” என்றாள்.

ஆதிரை “அவரோட மனைவி அந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டாங்களா?”

“மாட்டாங்க ஏன்னா இது அவங்க பொண்ணு இல்லையாம்”

ஆதிரை புரியாமல் பார்த்தாள்.சிந்தியா தலையில் வைத்த பூவை கண்ணாடியில் சரிபார்த்தப்படி “ம்ம்… டென்ஷன் ஆகாதேடி இது அவங்க ரெண்டுபேருக்கும் பிறந்த குழந்தை இல்லை தத்து எடுத்து வளர்க்கிற பொண்ணு ஆனால் அது குட்டிம்மாக்கு தெரியாது.மதனுக்கும் அவரோட மனைவிக்கும் குழந்தை பிறக்கிற வாய்ப்பு குறைவுங்கிறதுனால மதன் ஒரு பெண் குழந்தையை கைக்குழந்தையாக இருக்கும் போது எடுத்து வளர்க்கனும் முடிவு பண்ணி வளர்க்க ஆரம்பிச்சாங்க ஆனால் அது அவங்க மனைவிக்கு விருப்பம் இல்லை மதனை மாதிரி வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகரவும் விருப்பமில்லை அப்படியே தேங்கி இருக்கனும்னா முடியாது ஆதிரை அதோட நேத்து அவரும் குடும்பமும் எப்பவும் ஜாலியா பேசுறதைப் பார்த்தேல்ல அந்த மாதிரி இருந்ததுக் கூட அவங்களுக்கு பிடிக்கலை அதனால அவங்களே டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டாங்க மூன்று வருஷம் ஆகிடுச்சு இந்த மதன் எங்க கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணி இருக்காரு என்னச் சொல்றதுன்னு தெரியலை ஆனால் அவங்க இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வேற ஒருத்தரை கல்யாணம் முடிஞ்சி வெளிநாட்டுக்கு போய்ட்டாங்களாம் இந்த விஷயம் பத்து நாளுக்கு முன்னாடித் தான் அவருக்கே தெரியும் எப்படி பாரு” என்று சொல்லி சிரித்தாள்.

ஆதிரைக்கு சிந்தியாவைப் பார்க்க வித்தியாசமாகத் தெரிந்தாள்.எப்போதும் எல்லாவற்றையும் தீவிரமாக ரொம்ப கவனமாக பேசுபவள் செய்பவள் இன்றைக்கு எல்லாற்றையும் எளிதாக அதுவும் புன்னகையோடு கடந்து இருப்பவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

ஆதிரை அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட சிந்தியா “என்ன ரொம்ப வித்தியாசமா தெரியுறேன்னா மதன் தான் காரணம் என்னோட மாற்றத்தை நீ பார்க்கனும் தான் உன்னை நேர்ல வரச் சொன்னேன் நீ தானே ரொம்ப ஆசைப்பட்டே இதோ பாரு” என்று கைகளை இரண்டு பக்கமும் விரித்து சுற்றிக் காட்டியவள் “அழகா இருக்கேனா” என்று சிறு பிள்ளையைப் போல் கேட்டாள்.

விழிகளில் ஆனந்தக் கண்ணீரை நிரப்பியபடி ஆமாம் என்று தலையசைத்துச் சொன்னாள்.

முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தோழியர் இருவரும் இளம்வயது தோழிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.
 
Top