அத்தியாயம் – 5
நிச்சயதார்த்த நாளன்று காலையிலேயே வேலைக்குக் கிளம்பிய மகனை சரஸ்வதி தடுத்தார்.
“அம்மா ஈவ்னிங் தான நிச்சயதார்த்தம். அதுக்குள்ள வந்திருவேன்மா.” என்று சொல்ல, தாயின் முறைப்பை உணர்ந்து, “நிஜமா தான்ம்மா. ஈவ்னிங் வந்திடுறேன். இன்னைக்கு ஆபீஸ்ல கண்டிப்பா நான் இருந்தே ஆகணும்மா. லட்சக்கணக்குல சம்பளம் கொடுக்கிறது எதுக்கு? இப்படி நினைச்ச நேரம் லீவ் எடுக்கவா? அதுவும் ஜெனரல் மேனேஜர் போஸ்ட்ல இருந்துட்டு தப்பும்மா. அப்பா நீங்களாவது சொல்லுங்க. அப்படியே லேட்டானாலும் எதாவது சொல்லி சமாளிங்க அதுக்குள்ள வந்திடுறேன்” என்றான் கெஞ்சாத குறையாக.
“பெண்ணை நீ பார்க்க வேண்டாமா மாறா?”
“அதான் பொண்ணு அழகு! அறிவு! சமத்துன்னு அடுக்குனீங்களே. அப்புறம் நான் பார்க்க என்ன இருக்கு? நீங்க பார்த்தாலே போதும்.”
“டேய்! நான் அழகுன்னு சொல்லவே இல்லையே?” என்றார் சரஸ்வதி.
“அழகுன்றது மனசுல இருக்கும்மா. நீங்க ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி இருக்கீங்கன்னா முதல்ல கேரக்டர் தான் பார்த்திருப்பீங்க. அதான் அதை அழகு சொன்னேன்.”
“நல்லா சமாளிக்கிற மாறா. படிச்ச படிப்பு இப்படில்லாம் யூஸாகுது இல்ல?”
“பின்ன. உங்க பையனா இருந்து இது கூட செய்யலன்னா எப்படிப்பா. பொண்ணை உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு என்கிறப்ப என்கிட்ட கேட்க வேண்டியதே இல்ல. அப்ப எனக்கும் சம்மதம். மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதீங்க. நான் கிளம்புறேன் பை” என்று வாசல் நோக்கிச் செல்ல.,
“போட்டோ வாங்கி மெய்ல் பண்ணவா மாறா?” என்ற தாயின் குரலுக்கு நின்றவன், “அதுக்கெல்லாம் டைம் இருக்குமா தெரியலம்மா? பை” என்று கிளம்பிவிட்டான்.
மணிமாறன் கிளம்பிய அதே நேரம் இரண்டாவது தளத்தில் எதிரெதிர் வீட்டில் இருந்து வந்த நண்பர்கள், “தேங்க் காட். நாம சீக்கிரம் கிளம்பிட்டோம். வா போகலாம்” என இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல,
“ஏய் நில்லுங்க” என்று இருவரின் தாய்மார்களும் ஓடி வந்தனர்.
“என்னாச்சி? ஏன் இந்த வேகம்?” என இருவரும் சேர்ந்தாற்போல் கேட்டார்கள் இருவரும்.
“இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் மணி. இப்ப எங்க கிளம்பிட்ட? இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்ல இரு.” என்றார் வசந்தா.
“என்னது லீவா? இன்னைக்கு லீவு போட்டா, மொத்தமா முழுக்கு போட்ற வேண்டியது தான். இன்னைக்கு எங்க கம்பெனி, இன்னொரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்துக்கு கைமாறி சைனாகுது” என்று வேகமாக சொன்னவள், அதன் பின்னே அர்த்தம் உணர்ந்து நாக்கைக்கடித்து தாயைப் பார்த்தாள்.
அவள் சொன்னதை கப்பென்று பிடித்த வசந்தா சத்தமாக சிரிக்க, தாயின் புத்திசாலித்தனம் தெரிந்தது என்பதால், அவரின் புரிந்துகொள்ளல் ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை எம்எம்கு.
“ம்மா… போங்க” என்று சிணுங்க…
சிரிப்பை அடக்கிய வசந்தா, “சரி மேல சொல்லு” என்றார்.
“இன்னைக்கு ரெண்டு கம்பெனி எம்டி, ஜி.எம், ஆடிட்டர்ஸ், மேனேஜர்ஸ் எல்லாரும் வருவாங்க. கான்பரன்ஸ் நடக்கும். அது முடிஞ்சி கம்பெனி ஸ்டாப்ஸ் பற்றின விசாரணைன்னு அக்குவேர் ஆணிவேரா அலசுவாங்க. உங்களுக்கே தெரியும் ஏற்கனவே எங்களுக்கு நல்ல பேர். இதுல லீவு போட்டா… ம்கூம் என்னால எல்லாம் ட்வென்ட்டி ஃபோர் ஹவர்ஸ் வெட்டியா வீட்ல இருக்க முடியாதும்மா.”
“ஆமா அத்தை. எனக்கும் இந்த கம்பெனி பெரிய கம்பெனிக்கு போனா சம்பளம் அதிகரிக்கும். இனிமேல் வெளில வேலை தேடினா, இந்த சம்பளம் கூட வராது” என்றான் தன் கவலையாய்.
“இதுக்குத்தான் படிக்கும்போதே ஒழுங்கா படிங்கன்னு சொல்லி தலைப்பாடா அடிச்சிக்கிட்டோம். யார் கேட்டீங்க?”
“உங்க தலையில யார் அடிக்கச் சொன்னது? எங்க தலையில நாலு தட்டு தட்டி இருக்கலாம்ல. சரியா படிச்சிருப்போம்ல” என்ற மகளைப் பார்த்து பல்லைக்கடித்தபடி,
“ரொம்ப நல்லவ மாதிரி பேசாத மணி. என்கிட்ட நீ கொஞ்ச நஞ்ச அடியா வாங்கியிருக்க சொல்லு? சூடு மட்டும்தான் வைக்கல. அப்ப உங்களுக்கு விளையாட்டு தான் பெருசா தெரிஞ்சது. அந்த விளையாட்டையாவது எதாவது ஸ்போர்ட்ல விளையாண்டு ஜெயிச்சீங்களா? அதுவும் கிடையாது.” என்று அவர் திட்டிக்கொண்டே போக,
“வசந்தா விடு” என்ற கிரிஜா, “சரி எப்ப வருவீங்க? முடியலன்னா சொல்லுங்க. இன்னொரு நாள் வச்சிப்போம்?” என்றார்.
“லேட்டாகத்தான் செய்யும். நீங்க நிச்சயத்தை நிறுத்த வேண்டாம்மா. முடிஞ்சவரை இவளை மட்டுமாவது சீக்கிரம் அனுப்ப ட்ரை பண்றேன்” என்றான் கிஷோர்.
“ப்ச்… என்னவோ பண்ணுங்க. வர்றவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை” என்றார் வசந்தா.
“சொல்லிப் புரிய வைங்கம்மா. இல்லன்னா என்னைப் புரிஞ்சிக்காத இந்த சம்பந்தம் வேண்டாம்” என்றாள் உறுதியாக.
“மணி எப்ப பார்த்தாலும் அபசகுனமாகவே பேசாத. சரஸ்வதி அக்கா ரொம்ப நல்லவங்க. பையனும் ஐடியில வேலை செய்யுறதால சூழ்நிலையைப் புரிஞ்சிப்பாங்க” என்று கிரிஜா சொல்ல,
“அப்புறம் என்னம்மா?” எனத் தாயிடம் கேட்டு, “வா கிர்ரு கிளம்பலாம்” என்றாள்.
“ஏய் சாப்பிட்டுட்டுப் போங்க. இல்ல வண்டி கீ கிடைக்காது” என்ற மிரட்டலில் இருவரும் சாப்பிட்டே கிளம்பினார்கள்.
ஷ்ரவன் நிறுவனமே பரபரப்பாய் காட்சியளிக்க, அனைவரும் ஒவ்வொரு வேலையில் முனைப்பாக இருந்தனர்.
“எம்எம் இது நம்ம கம்பெனி தானா? நம்ப முடியலையே?”
“ஆஆஆ… ஏன்டி கிள்ளுன?” என்று கேட்டு திரும்பவும் அவன் ஆவென்று சத்தமிட… “முதல்ல கிள்ளுனது நம்ப முடியாததை நம்பவைக்க. ரெண்டாவது கிள்ளு என்னை ‘டி’ சொன்னதுக்கு.”
“நீ என்னை எத்தனை ‘டா’ போட்டு கூப்பிடுற?” என்றான் கோவத்தில்.
“நான் உன்னைவிடப் பெரியவ. உன்னை எப்படி வேணா கூப்பிடலாம். பட் யூ…?” என கேள்வியாய் நிறுத்த…
“ச்சீ… போ உன்னோட எல்லாம் என்னால வரமுடியாது. உன் வேலையை நீயே பார்த்துக்கோ” என கோவித்துச் சென்றான்.
“போடா! நீ இல்லன்னா என்னால தனியா சமாளிக்க முடியாதா என்ன? நான் பார்ப்பேன்டா ஆயிரம் பேர் வேலை” என்று அவளும் முகம் திருப்பிச் சென்றாள்.
இரண்டு நிறுவனத்தின் சந்திப்பு (மீட்டிங்) முடிந்து, ஒரு சிலரை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்ததில், மணிமேகலையும் கிஷோரும் திருதிருவென விழித்தனர்.
“நாம மாட்டினோம்டா கிர்ரு” என்றாள் தாங்கள் சண்டையிட்டு இருந்த கோவத்தை மறந்து.
“எனக்கும் அதான் தோணுது எம்எம். பொண்ணு உனக்காவது கல்யாணம் முடிச்சிட்டா வேலைக்கு போகணும் என்ற அவசியம் இருக்காது. அதே எனக்கு வேலை இல்லைன்னா எவன் பொண்ணு கொடுப்பான் சொல்லு.” மீட்டிங் அறையில் மற்றவர்களுக்கு சந்தேகம் வராத அளவிற்கு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க,
இருவரின் முகத்தோற்றத்தையும் பார்த்திருந்த மணிமாறன், ‘இத்தனை பெரியவங்க இருக்கிறாங்களே, அந்த மரியாதைக்காவது சைலன்ட்டா இருக்காங்களா பாரு. இப்பவும் குசுகுசுன்னு பேசுதுங்க. இவங்களை என்ன பண்ணினா சரியாகுவாங்க?’ மனம் கேட்ட கேள்வியையும் மீறி பாராட்டுதலும் இருந்தது அவன் பார்வையில்.
‘எவ்வளவு அழகு. அதைவிட அறிவாளித்தனமா பேசுறேன் என்ற பேர்ல இன்னொசன்டா அவ செய்யுற சேட்டைதான் ரொம்ப அழகா இருக்கு’ என நினைத்தவனுக்கு அன்றைய நிச்சயதார்த்தம் ஏனோ மறந்திருந்தது. நிஜமாகவே இருவரும் வேலை நீக்க லிஸ்டில் தான் இருந்தார்கள். என்ன செய்யலாம்?” என யோசித்தவன் அருகில் இருந்த எம்டியின் காதில் ஏதோ சொன்னான்.
கிஷோரின் கல்யாணக் கனவு நொறுங்குவதை கேட்டுக் கொண்டிருந்தவள், இதைப் பார்க்க கண்களில் தீப்பொறி பறந்தது. “டேய்! அங்க அவன் நமக்கு ஆப்பு வைக்கிறான். இங்க நீ புலம்பிட்டி இருக்க” என்று வெளியில் சிரித்தாற்போல் உள்ளுக்குள் குமுறலுடன் நண்பனின் காதைக் கடித்தாள்.
கிஷோர் மணிமாறனை பாவம்போல் பார்க்க,
“ஷப்பா! இவ கொடுத்த பில்டப்புல பாவம் பையன் பேய் முழி முழிக்கிறானே’ என்றெண்ணி, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என ஆறுதலாய் கண்ணசைவு மூலம் சொல்ல, அதில் நம்பிக்கை வந்த கிஷோர் முகம் பளிச்சிட்டது.
‘பரவாயில்லையே. பையன் நம்ம நினைச்ச அளவுக்கு ட்யூப்லைட் இல்லைபோல’ என தோன்றியது.
கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்ப, நிறுவனத் தலைவர், மணிமேகலை கிஷோரைக் காண்பித்து மாறனிடம் எதோ சொல்லிக்கிளம்பினார்.
அதை பார்த்திருந்த இருவருக்கும் “என்னவா இருக்கும்? வேலையைவிட்டு தூக்கிட்டதா சொல்லப் போறாங்களோ? அப்படிச் சொன்னா மத்தவங்க மத்தியில ரொம்ப அசிங்கமா இருக்குமே. ஏன் இந்த மணிமாறனே தங்களை ஒரு மார்க்கமா பார்ப்பானே! ஹையோ… அம்மா அப்பவே சொன்னாங்க, படி மணி படிப்புத்தான் முக்கியம்னு. படிபடின்னு சொல்லும்போதே படிக்காம விட்டுட்டு, இப்ப அவஸ்தைப்படுறேன்” என்று அவளின் புலம்பல்கள் தொடர்ந்தது.
மாறன் அவர்களிடம் வந்து, “உங்களை டிஸ்மிஸ் செஞ்சிரவா? இல்ல டி பிரமோட் பண்ணலாமான்னு கேட்டாங்க. டி பிரமோட் பண்றதுக்கும் நீங்க பார்க்கிற வேலைக்கு கீழ வேற வேலை இல்லயாம். அந்தளவுக்கு உங்களோட வேலைகள் இருந்திருக்குபோல. இதுவரை ஒரு ப்ராஜக்ட் கூட கம்ப்ளீட் பண்ணலன்னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனாலும், இந்த மாறன் தான் உங்கமேல உள்ள நம்பிக்கையில் மாறல் சப்போர்ட் செய்து பார்த்துக்கறதா சொல்லிருக்கேன். இனி உங்களோட ஹெட் நான்தான்!” என ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அவர்களின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தபடியே எம்டியின் பின்னோடு மாறன் சென்றான்.
“ஷப்பா கிர்ரு… கொஞ்ச நேரத்துல சும்மா கிர்ரு கிர்ருன்னு வந்திருச்சி போ. இந்த வேலை கண்டிப்பா நமக்குத் தேவையா? பேசாம வேற வேலை ட்ரை பண்ணலாமா?” நண்பனின் முறைப்பில்… “இவனைப் பார்த்ததில் இருந்து என்னை முறைக்கிறதையே வேலையா வச்சிருக்க நீ. சரி உன்னோட கல்யாணமும் இந்த வேலையிலதான் மிங்கிளாகி இருக்குன்றது புரியுது.”
“ஒளனு பாபு! எந்த தைரியத்துல இவன் நம்மளை அசிஸ்டெண்டா சேர்த்துக்கிட்டான். ஒருவேளை பக்கத்துல வச்சி பழிவாங்கப் போறானோ?” நண்பனின் முறைப்பைப் பார்த்து, “நோரு முஸ்கோமே. அதான சொல்லப்போற. தெலுங்குல இதைவிட்டா என்னைத்திட்ட வேற வார்த்தையே இல்ல போல. போ போ வேலையைப் பாரு” என்று வெளியே வர மாலை ஆறாகிவிட்டது.
“அடப்பாவிங்களா! மதியம் சாப்பாட்டிற்கு கூட அனுப்பாம இப்படிப் படுத்துறாங்களே. ஹ்ம்… இனிமேல் சைட் விசிட் முடிய எப்படியும் நைட் ஒன்பதாகிடும்” என்றாள் சலிப்பாக..
“என்னது ஒன்பதாகிருமா? எம்எம் உனக்கு இன்னைக்கு என்கேஜ்மெண்ட். மறந்துட்டியா?” என்று பதறினான் கிஷோர்.
“அட ஆமாம்ல. ப்ச்… என்னோட வருங்கால கணவனை பார்க்கவிடாத, இந்த பாரத் சாப்ட்வேர் கம்பெனி ஒழிக!” என்ற மெல்லிய கோஷம் காற்றோடு சாரி ஏசி காற்றில் சென்று மணிமாறனின் காதில் எதிரொலித்தது.
நேரே அவளிடம் வந்தவன், “யாரை ஒழிகன்னு கோஷம் போடுற?” என்றான் கண்டிப்பான குரலில்.
“சார்… நோ சார். நான் அப்படி எல்லாம் சொல்வேனா. பாரத் சாப்ட்வேர் கம்பெனி ஒளிவீசட்டும்னு சொன்னேன் சார்” என்றாள் பவ்யமாய்.
“நானும் நம்பிட்டேன். வேலை செய்யுற இடம் கோவில் மாதிரி. சோ, அதைப் பழிக்கிற மாதிரி எதுவும் பேசக்கூடாது சரியா?” என கேட்டு, “ஆனாலும், உனக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தில்ல?” என்றான் கிண்டலாய்.
அவனின் குரலில் இருந்த ஏளனம் புரிந்து தோள்குலுக்கி, “ஏன் கிர்ரு இவருக்கு நம்மளைச் சுத்துறது தான் வேலையா. பெரிய ஆஃபீஸருன்னு சொன்னாங்க. அதெல்லாம் பொய்யா?” என மாறனைக் கிண்டலடித்தாள். எப்பொழுதும் போல் கிஷோர் முறைக்க, “ஓகே ஓகே” என்று வாய்பொத்தினாள்.
“எனக்கு ஒரு சின்ன சந்தேகம். கேட்கலாமா?” என்று மாறன் கேட்க…
“எங்க அளவு புத்திசாலியா இல்லாட்டியும், உங்க அளவுக்கு சுமாரா சொல்றோம் சார். கேளுங்க” என கெத்து காட்டிட,
‘எனக்குத் தேவைதான். ஹையோ!’ என மனதினுள் புலம்பி, “உன்னைப் பெத்தாங்களா..?”
“இல்ல செஞ்சாங்களான்னு கேட்குறீங்களா சார்?” என அவசரமாக அவனை முடிக்க விடாது இடையிட்டாள்.
கை உயர்த்தி நிறுத்தச்சொல்லி, “இல்ல வயித்தைக் கிழிச்சி எடுத்து விட்டு ஏறிஞ்சாங்களான்னு கேட்கணும்னு நினைச்சேன்” என்றான் பல்லைக்கடித்தபடி.
சட்டென்று கண்கள் பளிச்சிட, “சார் மதியம் சாப்பிடல. கேன்டீன்ல ஒக்க காஃபி. ரெண்டு பச்சி சாப்பிட்டுட்டு சொல்லட்டுமா? பசி காதை அடைக்குது” என்று உலக அப்பாவித்தனத்தை எல்லாம் குரலில் கொண்டு வந்து, அதை முகத்திலும் காட்ட,
ஒரு நிமிடம் அசந்து, மறுநிமிடம் அவளின் பசியை எண்ணி, “வாங்க போகலாம்” என்றான் வேகமாக.
“சார் நாங்க ஸ்பான்சர் பண்ணட்டுமா? இல்ல நீங்க பண்றீங்களா?”
அவளின் குறும்பு புரிந்தவன் சிரித்தவாறு, “நானே பண்றேன்” என்றபடி கேன்டீன் வர… அவர்களை அமரவைத்து காஃபியும் பஜ்ஜியும் மணிமாறன் கிஷோருக்கு வாங்கிக் கொடுத்து, தனக்கு மட்டும் மீண்டும் மீண்டுமாக வடை, கேசரி, சிப்ஸ் வேகவைத்த பயிர் என அனைத்தையும் வளைத்து வாங்கி ஏப்பம் விட்டு, “ரொம்ப தேங்க்ஸ் சார். காலையில் இருந்து சாப்பிடலையா. அதான்…” என்றாள் அமைதியாக.
‘அடிப்பாவி! அம்மாவும் அத்தையும் கொடுத்ததை ரௌண்ட் கட்டிட்டு, இப்படி ஒரு பிட்டா!” எதற்கென்றுதான் புரியவில்லை கிஷோருக்கு.
நண்பனின் பார்வையில்… ‘விட்ரா விட்ரா.. நமக்கு இதெல்லாம் ஒரு விஷயமா’ என பார்வையிலேயே பதில் கொடுத்தாள்.
கிஷோருமே “ஆமா சார் காலையிலேயே கிளம்பிட்டோம்” என்றான் தோழி சொன்ன பொய்யை உண்மையாக்கி.
“ஏன் காலையில் இருந்து சாப்பிடல?” என்ற மாறன் தன் பதற்றக் குரல் வெளியே தெரியாமல் மறைத்து பணம் கொடுத்து வர… ஏனோ அதை கிஷோர் கண்டுகொண்டதை அறியவில்லை.
அதற்குள் மணிமாறனின் கைபேசியில் அழைப்பு வர, “முக்கியமான கால். நான் கிளம்புறேன் பை” என்றபடி நடந்தவனிடம்,
“சார் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கேட்காம போறீங்களே?” என வம்படியாக அவள் கேட்க,
“இன்னொரு நாள் கேட்டுக்குறேன்” என சைகையில் சொல்லி கைபேசியில் பேசியபடி சென்றான்.
“என்ன எம்எம் இதெல்லாம்? யார்கிட்டேயும் இப்படிப் பண்ணமாட்டியே? ஏன் என்கிட்டக் கூட இந்தளவு வம்பிழுக்கமாட்டே. என்னாச்சி உனக்கு? அவரும் எதுவும் தெரியாத மாதிரி நீ கேட்கிறத எல்லாம் செஞ்சிட்டுப் போறாரு.”
“ஹேய்! ஸ்டாப் ஸ்டாப். என்ன அவரு இவருன்னு. ஒன்லி அவன் இவன் சொல்லு” என்றாள் அதட்டலாக.
“அவனுக்கு என்மேல ஒரு இது இருக்கு. அதை கொஞ்சம் டெவலப் பண்ணி விட்டுட்டு, நான் மேரேஜ் பண்ணிப்பேன். இவன் ரேகா அக்காக்கு பண்ணின கொடுமைக்கு, என் மூலமா சின்ன தண்டனை. சின்னது கூட இல்ல இது மனசுல படுற காயம், காலத்துக்கும் வலிக்கும்” என்றாள் கோவமாய்.
அவளையே பார்த்திருந்த கிஷோர், “நேனு தீன்னீ நி தக்கரா எதிர் சூட்லேது? ஏன் சேஸ்த்துனாவுனு தெளிசி சேஸ்தாவா அம்மாயி? சீட்டிங் ரா. ஒக்கா மனுஷினி குண்டனி ஹர்ட் செஸாவே? நின்ன ஏன் சேஸேதி?” என்று சத்தம்போட சுற்றி இருப்பவர்களை உணர்ந்து நிறுத்தினான்.
“இப்ப ஏன் கோபப்படுற கிஷோர்? எனக்கு மெல்ல பேசினாலே தெலுங்கு புரியாது. இதுல நீ ஸ்பீடா வேற பேசுற. இப்ப என்ன, உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல. என்ன செய்றன்னு தெரிஞ்சிதான் செய்றியா? ஏமாத்துற? ஒருத்தன் இதயத்தை ஹர்ட் பண்ற! உன்னை என்ன செய்யலாம்னு கேட்கிற. அப்படித்தான?” அவனது ஆத்திர முகமே ‘ஆம்’ என்று சொல்லியது.
கிஷோரின் குடும்பத்தினருடன் சிறுவயதில் இருந்து பழகுவதால் தமிழ்ப் பெண்ணான மணிமேகலைக்கு, அவர்களின் தெலுங்கு அத்துப்படி. ஆனாலும், அதை மறைத்து அவனைக் கேலி செய்வது அவளது வாடிக்கை.
மூச்சை இழுத்துவிட்டு, “நான் எதுவுமே செய்யமாட்டேன் கிஷோர். அவனாகத்தான் வர்றான். நானா போகலை. என்ன அவன் வர்ற டைம், உன்கிட்ட பேசுறமாதிரி நினைச்சி ஜாலியா பேசுவேன். அவ்வளவுதான்! மத்தபடி நானா வம்பிழுக்கமாட்டேன். அவனுக்கும் ஏமாற்றத்தோட வலி என்னன்னு தெரியணும் இல்ல. மத்தபடி ப்ளான் பண்ணி ஒருத்தனை வளைச்சிப்போட்டு பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு நான் மோசம் இல்லை. அது உனக்கே தெரியுமே நண்பா? இருந்தாலும் சந்தேகப்படுற. ஹ்ம்.. பரவாயில்ல விடு. சரிவா டைமாகுது. ஏற்கனவே நமக்கு ரொம்ப நல்ல பெயர் இருக்கு. இப்போதைக்கு சமத்தாகிருவோம்” என்று அழைத்துச் சென்றாள்.