வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக நேரே வசந்தாவிடமும், அப்பொழுதுதான் வெளியூர் சென்று வந்திருந்த சண்முகத்திடமும் சொல்லிவிட்டார் கிரிஜா.
“உனக்கு நல்ல அறிமுகமா கிரிஜா?” என்ற கேள்வியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை அவரிடம்.
“ரொம்ப நல்ல பையன் அண்ணா. என்ன சூழ்நிலை தான் மாறிருச்சி” என்று அவனின் வாழ்வில் நடந்ததையும் சொல்லியே சம்மதம் கேட்டார்.
கிரிஜாவின் மேலுள்ள நம்பிக்கையில் அவர்களும் சம்மதித்து, அடுத்த ஒருமணி நேரத்திற்குள் பையன் வேலை செய்யும் நிறுவனத்தில், வேலை செய்யும் ஒரு நண்பரின் மகன் மூலமாக விசாரிக்க.. சற்று நேரத்திற்கெல்லாம் எந்தவித கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாத நல்ல பையன். பெண்கள் விஷயத்தில் இன்னுமே நல்லவன் என்ற தகவல் கிடைத்தது.
அடுத்த இரண்டுமணி நேரத்திற்குள் ஜாதக பரிமாற்றம் செய்யப்பட்டு, அதற்கு அடுத்த ஒருமணி நேரத்திற்குள் தெரிந்த ஜோதிடரிடம் ஜாதகமும் பார்க்க ஒன்பது பொருத்தமும் ஓஹோ என்றிருந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் நாள் ஒன்று கூடிவர, முகூர்த்த தேதியும் குறிக்கப்பட்டு, அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்றும் முடிவானது.
வேக வேகமாக நடந்தது அனைத்தும். பிள்ளைகளும் வீட்டிலேயே இருந்தாலும் மறைவாக செய்தவர்கள், இரவு உணவுக்குப் பின் இரு குடும்பமும் ஒன்று சேர்ந்து விஷயத்தை மெல்ல மணிமேகலையிடம் சொன்னார்கள்.
முதலில் ஆ…ஊ… என எகிறி எகிறிக் குதித்தவள், பையன் பார்த்தது கிரிஜா என்றதும் மனம் இல்லாமல் சம்மதித்தாள். பையனைப் பற்றிய விபரங்கள், அவன் முதல் கல்யாணம் தவிர்த்து மற்றவற்றைச் சொல்லி, தற்போதைக்கு மாப்பிள்ளை புகைப்படம் இல்லை. அடுத்தவாரம் நிச்சயத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதும் சின்னவர்களுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
அதே நேரம் சுந்தரம்-சரஸ்வதி தம்பதியினரும் தன் மகனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டனர்.
“அம்மா டைம் கேட்டிருந்தேனே!” என்றவன் குரல் வெளியே வரவேயில்லை. “ஏன் இவ்வளவு அவசரப்பட்டீங்க?” எனும்போது அவளின் முகம் மனதில் தோன்றி, ‘அவ்வளவுதானா!’ என்று கேட்டது.
“நல்ல பொண்ணுப்பா. நல்ல அறிவு, சமத்து, அமைதியான பொண்ணு. நீ பார்த்தேன்னு வையி அசந்துருவ” என்றார்.
“அம்மா இப்ப வேணாம்னு தோணுது. பேசாம நிறு…”
“மாறாஆஆ… என்ன பேசுற? பேசி முடிச்ச சம்பந்தத்தை நிறுத்தினா அவளுக்கு அசிங்கமில்லையா? தப்புடா” என்றார்.
“அதான் எதுவும் முறையா பண்ணலையேம்மா?” என்றான் தடுத்துவிடும் நோக்கத்தில்.
“ஜாதகம் பார்த்து தேதியும் குறிச்சாச்சிப்பா. இதை எப்படி கிரிஜாகிட்ட சொல்லுவேன். மாப்பிள்ளை என்னோட பையன் என்ற ஒரே காரணத்துக்காக, தன்னோட வளர்ப்புப் பெண்ணை, பொண்ணோட அப்பா, அம்மாகிட்டக் கூட கேட்காம தர சம்மதிச்சா என்மேல வச்ச நம்பிக்கையில. இனி அவ முகத்துல எப்படி முழிக்கிறது?” என்று புலம்பியவர், “சரி கடைசியா என்ன சொல்ற? அதைப் பொருத்துத்தான் நான் நிறைய முடிவு எடுக்கணும்.” என்றார்.
“ஹ்ம்…” என மூச்சை வெளியிட்டு, “சரிம்மா. முடிவு பண்ணிட்டீங்க. உங்க இஷ்டம்போல செய்யுங்க. ஆனா, அம்மா ஏற்கனவே கல்யாணமான விஷயத்தைச் சொல்லிட்டீங்களா? எதையும் மறைச்சி கல்யாணத்தை முடிச்சிராதீங்கம்மா. அது பெரிய தப்பு” என்றான்.
“இல்லப்பா. கிரிஜாவுக்கு உன்னைப்பற்றின விஷயம் எல்லாம் தெரியும். பக்கத்து தெருவுல தான் இருந்தாங்க. என்னைத் தெரிந்த அளவிற்கு உன்னையும் அவளுக்குத் தெரியும். நீ கூட அவளைப் பார்த்திருக்கடா.”
“ஓ… நியாபகம் இல்லம்மா. ஒருவேளை நேர்ல பார்த்தா தெரியுமா இருக்கும். ம்… அப்ப சரி” என்றான் பெற்றோர் இருவருக்கும் பொதுவாக.
மறுநாள் தங்களின் பாரத் சாஃப்ட்வேர் பிரதிநிதியாக, ஷ்ரவன் நிறுவனத்திற்கு சென்ற மணிமாறன், அங்கு தலைமையில் உள்ளவரை சந்தித்து பேசினான். வந்த வேலை சுலபமாக முடிந்ததில், மறுநாள் வருவதாகச் சொல்லி வெளியேறும் பொழுது கிஷோரைப் பார்த்தான்.
‘இவன் இந்த கம்பெனிலயா வேலை செய்றான்? அப்ப அவளும் இங்கேதானே இருக்கணும்.’ மனம் ஒரு குரங்கு என்பதை நிரூபித்தது மணிமாறனுக்கு. ‘லூசாடா நீ நேத்தும் இந்த ஆஃபீஸ்ல வச்சி தான ரெண்டு பேரையும் பார்த்த. அதுகூடவா மறந்திருச்சி?’ மனம் மாறிமாறித் திட்டியது.
முன்தின இரவு தாய் நிச்சயம் பண்ணப்போவதாகச் சொன்னதும், மணிமேகலையின் மேல் இருந்த ஆர்வத்தை கட்டுப்படுத்த நினைத்து, ‘அவளின் முகத்தை மற மனமே’ என்று மனதிற்கும் கட்டளையிட்டு படுத்து உறங்கினான். நடு இரவில் ஒரு பெண் முகம் மார்பில் பதிந்து, நெஞ்சில் இதழ் முத்தம் தர, அதில் உறக்கம் கலைந்து சட்டென எழுந்தவனுக்கு, தன் எண்ணங்களே கனவாக வருவதை எண்ணி சில கணங்கள் அசையாது இருந்தான்.
‘இது தப்பு. இது தனக்கு வரப்போகும் பெண்ணிற்கு செய்யும் துரோகம் என்பதை உணர்ந்து, இனி அவளின் நினைவுகள் தன்னை நெருங்க விடக்கூடாது என்று, அந்த நேரத்தில் கந்தஷஷ்டி பலமுறை சொல்லி கண்மூடி தியானித்து தன்னை நிதானப்படுத்தினான். ஆனால், தினமும் வரப்போகும் அக்கனவைத் தடுக்க முடியுமா அவனால்?
இதோ அவள் நண்பனைப் பார்த்ததுமே அவளின் நினைவு அவன் அறியாமல் எழுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை. அன்று மணிமேகலை விடுப்பு எடுத்திருந்ததால், கிஷோர் மட்டுமே வந்திருந்தான். ‘அவள் எங்கே?” என்று மணிமாறன் மனம் கேட்ட கேள்விக்குப் பதிலை கிஷோரிடம் கேட்க இஷ்டம் இல்லை.
அங்கு இருந்து கிளம்பிச் சென்றவன் சற்று தள்ளி இருந்த திறந்த உணவகம் சென்று வெயிலுக்கு இதமாக பழச்சாறு கொண்டு வரச்சொல்லி, வந்ததும் குடித்தபடி யோசனையுடன் அமர்ந்திருந்தான்.
“அம்மா ஐடில வேலை பார்க்கிறவளை, இப்படி லக்கேஜ் தூக்குறதுக்காக லீவு போடச்சொல்லி தூக்கவும் வச்சிட்டீங்களே. உங்களுக்கே இது நியாயமாப்படுதா சொல்லுங்க. ஒவ்வொரு வீட்ல போயி பாருங்க. ஒத்தைப் பொண்ணுன்னு எவ்வளவு செல்லம் கொடுக்குறாங்கன்னு. நீங்க என்னடான்னா நடக்கவச்சி கொடுமைப் படுத்துறீங்க?” என்றாள் நடக்கவைத்து அழைத்துப்போகும் எரிச்சலில்.
“ப்ச்… மணி! நடுரோட்டுல என்ன புலம்பல் வேண்டியிருக்கு. செல்லம் அதிகம் கொடுக்காமலே நீ இந்த ஆட்டம் ஆடுற. இதுல நான் இடம் கொடுத்திருந்தா என் தலையில மிளகா அரைக்கமாட்டே. போடி.. நீ வேலை பார்க்கிற லட்சணம் தான், உன் சம்பளத்துலயே தெரியுதே. இதுக்காவது நீ யூஸாகுறியேன்னு நினைச்சிக்கோ. ஐடி கம்பெனியாம். நீயும் கிஷோரும் அங்க இருக்கிறதாலயே, அந்த கம்பெனியை சீக்கிரம் மூடி சீல் வைக்கிறாங்களா இல்லையா பாரு” என்ற தாயின் பதிலில் கோவம் வந்தது.
“ஒருநாள் இல்லன்னா ஒருநாள், இதே வாயால, என் பெண்ணைப் போல யாரு மக்கான்னு பாட்டுப்பாட வைக்கல., நான்… நான்… ம்… நான் மணிமேகலை இல்ல மேகலைமணி” என்று வசனம் பேசி கொதித்த மகளைப் பார்த்து,
“அப்படின்ற?” என்று சிரித்தவர் மகள் முறைத்ததும் அதை அடக்கி, “அப்படி ஒரு சூழ்நிலை வந்தா பார்க்கலாம்” என்றவர் திடீரென்று எதையோ கண்டு, “மணிமா அதோ உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை” என்று உணவகம் நோக்கி நடந்தார்.
‘மாப்பிள்ளையா! எவன் அவன்!’ என்ற வசனம் தொண்டையோடு நின்றது கேட்டால் தாய் தன்னை ஒரு வழியாக்கி விடுவாரென்று. பின் தாய் காண்பித்த வழி பார்த்தவளுக்கு யாரையும் தெரியவில்லை. ‘இருக்கிறதுல முக்கால்வாசி பாய்ஸ்தான் இருக்காங்க. இதுல யார்ன்னு தெரியாம யாரை நான் பார்க்கிறது?’ என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.
“ஏய்! என்ன அங்கேயே நிற்கிற? இதோ கிளம்புறாங்க பாரு” என்று மணிமாறனை நோக்கி கைநீட்டினார்.
தாயின் மேல் கோவம் தான் வந்தது அவளுக்கு. கையில் இத்தனை லக்கேஜை வைத்துக்கொண்டு வேகமாக நடக்கவும் முடியவில்லை. “வெயிலா இருக்கு. ஆட்டோ பிடிக்கலாம்மா” என்றதற்கு
“ரெண்டு தெரு தள்ளி இருக்கிற வீட்டிற்கு ஆட்டோவா? என்ற பதிலே வந்தது. தன் ஸ்கூட்டி இன்று ஸ்டார்ட் ஆகாமல் செய்த சதியை எண்ணி அதையும் திட்டி ஒருவழியாக்கினாள்.
தாய் காட்டிய இடத்தில் மூவர் நின்று இருந்ததில் மணிமாறனின் பின்புறம் தெரிய, ‘இருக்கிற எரிச்சல் பத்தாதுன்னு இவன் வேற அம்மா கண்ணுல மாட்டி நம்மளைப் படுத்துறான்’ என்ற கடுப்பில் “பார்த்தாச்சிம்மா! வாங்க போகலாம். வெயில் ஓவரா இருக்கு’ என்றாள் கெஞ்சலாக.
மகள் அருகில் வந்தவர், “மாப்பிள்ளை பிடிச்சிருக்காம்மா?” என்று கேட்க, “ம்ம்… பிடிச்சிதான் இருக்கு. உங்களுக்கு, அப்பாவுக்கு, அத்தைக்குப் பிடிச்சதுன்னா போதும்மா. வாங்க போகலாம்” என்று தாயை அழைத்துச் சென்றாள்.
மறுநாள் காலை ஷ்ரவன் நிறுவனத்திற்கு வந்த மணிமாறன் அந்த கம்பெனியின் மேலாளர் முதல் இன்னும் சில முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களைப் பார்த்து பேசி, தன் மடிக்கணிணி மூலமாக வெளிநாட்டில் இருக்கும் தன் நிறுவனத் தலைவருடன் தொடர்பு கொண்டு வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததைச் சொன்னான். அன்றே சில வேலைகள் செய்யுமாறு பணித்துவிட்டு போனை வைத்தார் நிறுவனர்.
ஷ்ரவன் நிறுவன மேளாலர் ப்ரசாத் மணிமாறனுக்கு தங்கள் நிறுவனத்தின் முக்கியமான பதவியில் இருப்பவர்களை முதலில் அறிமுகப்படுத்தி, அதன்பின் அலுவலக ஊழியர்களை அறிமுகப்படுத்தினார்.
அனைவரிடமும் ஒரு சிநேக புன்னகையுடன் அறிமுகமாகி, கடைசியாக நின்றிருந்த இருவரையும் பார்க்க, அவர்களின் பேயறைந்த தோற்றமே அவர்களின் அதிர்ச்சியின் அளவே சொல்லியது, அவர்கள் தன்னை எதிர்பார்க்கவில்லை என்று.
அந்நேரம் வந்த கைபேசி அழைப்பை எடுத்து காதில் வைத்தபடி கிஷோர், மணிமேகலை, மேலாளர் மூவரையும் பிரசாத் அறைக்கு வரச்சொல்லி ஜாடை செய்தபடி உள்ளே சென்றான்.
பத்து நிமிடங்களுக்கு மேலாக பேசி தங்கள் இரத்தக்கொதிப்பை எகிற வைத்தவனை இருவரும் எதிரியாய் பார்த்து நிற்க,
பேசி முடித்தவன் “யார் இவங்க?” என்று பிரசாத்திடம் கேட்டானே பார்க்கலாம். அவ்வளவுதான்… ‘டேய் கிர்ரு! விடுடா என்னை. கையைப் பிடித்து நிறுத்தாத விடுடா. விடு சொல்றேன்ல? அவனை நான் உண்டு இல்லைன்னு பண்ணலை, நான் மணிமேகலை இல்லடா!’ என்று சபதமிட்டு சண்டை போட்டாள் மனதிற்குள் தான். அவ்வளவு ஆத்திரம் அவளுக்கு. அது வேலை செய்யும் இடமாக இல்லாமல் இருந்தால் அவனை ஒரு வழி பண்ணியிருப்பாள் என்பது வேறு.
அவர்களின் உணர்வுகளை அந்த பார்வைகளில் கண்டவன் அதை உதறி, “ம்… சொல்லுங்க மேனேஜர் சார்?” என்றான்.
“சார் இவங்க மணிமேகலை அன்ட் கிஷோர். ரெண்டு பேருமே ரொம்ப நம்பிக்கையானவங்க. நல்லவங்க கூட” என்றதும் மணியும், கிஷோரும், ‘நம்ம மேனேஜரா இது, நம்மைப் புகழ்வது. நம்மைத் திட்டியே தனக்கென்று நிறைய ஃபேன்ஸ் சேர்த்து வைத்தவரா இவர்!’ என்ற அச்சர்யத்தில் பூரித்துப் போனார்கள். அவன் அடுத்து வைக்கப்போகும் ஆப்பு தெரியாமல்.
“பி.இ பார்டர்ல பாஸ் பண்ணி, இந்த கம்பெனியில ஜாய்ண்ட் பண்ணி, அலவன்ஸ் எல்லாம் சேர்த்து மொத்தமே பத்தில் இருந்து பனிரெண்டு ஆயிரத்துக்குள்ள சம்பளம் வாங்குறது இந்த அஃபீஸ்லயே இவங்க மட்டும் தான். இவங்க டீம் லீடர், ப்ரோஜக்ட் ஹெட், ஹெச் ஆர்னு தாண்டி இவங்க இங்க இருக்க ஒரே காரணம் நான் தான்” என்றான் பெருமையாய்.
அதில் எதுவும் உள்ளர்த்தம் இருந்ததோ என்று தோன்றியது மணிமாறனுக்கு. அவன் கண்களிலும் எதோ ஒரு கல்மிஷம் தெரிய, மேலும் அந்த மேனேஜர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தான.
“கிஷோரையாவது கொஞ்சம் தேத்திடலாம் சார். இந்த எம்எம் ஒரு எம்ப்ட்டி கேஸ்” என்று அவர்கள் தலையில் அசராமல் இடியை இறக்கினான்.
அவர்களுக்கோ அவன் முன்னிலையில் தங்களைக் குறைத்துச் சொல்வது அவமானமாக இருந்தது. “சார்ர்” என பெரிதாக பொங்கியவள் குரல் தழைத்து, “இதை ஏன் சார் முன்னப்பின்ன தெரியாத ஆள்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” என்று நண்பனிடம் குனிந்து, “கிர்ரு இவருக்கு நம்மமேல அப்படி என்ன கடுப்பு? கண்டுபிடிக்கணும்டா. மனுஷன் ரொம்பத்தான் புகழ்றாரு.” என்றாள்.
“ஸ்… அம்மாயி சைலன்டுகா இரு” என அடக்கினான்.
“உங்க வேலை லட்சணம் இவருக்கும் கண்டிப்பா தெரியணும்னு தான் சொல்றேன். ஏன்னா, இவங்க நிறுவனம் நம்ம கம்பெனி ஷேர் மொத்தத்தையும் வாங்கி, அவங்க கம்பெனி நேம்ல ரன் பண்ணப்போறாங்க. ஐ மீன் நம்ம கம்பெனியை இவங்க அடாப்ட் பண்றாங்க. சோ, இனிமேல் உங்களை வேலைக்கு வச்சிக்கவா வேண்டாமான்னு கூட இவங்க கம்பெனி தான் முடிவெடுக்கும்” என்றான் தெளிவாக.
மீண்டும் மீண்டும் அவன் முன்னிலையில் அவமானப்படுவது பிடிக்காமல், “ஓகே சார் நீங்க என்ன முடிவெடுத்தாலும் ஓகே” என்று தெனாவட்டாக சொல்லிவிட்டாலும் இதயம் தாறுமாறாய் எகிறிக்குதித்தது.
‘இவனுக்குக் கீழே வேலையா?’ எனும்போது சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ‘அம்மா ஒரு தீர்க்கதரிசி தான் போல. நான் வேலை செய்யுற கம்பெனிக்காரன் வித்துட்டு போயிருவான்னு சொன்னாங்க. சரியா நடக்குதே. அப்ப இந்த பாரத் கம்பெனிக்காரன் யார்கிட்ட விப்பான்?’ என்ற யோசனை தாயைச் சுற்ற, சட்டென்று அவளறியாமல் சிரிப்பும் வந்தது.
தானே பாரத் நிறுவனத்தை விட்டு வெளியேறப் போவதை அறிவாளா!
“ஓய்! ஒருநாள் கூத்துக்கே அப்படி ஒரு ரியாக்ஷன் காட்டினான். இவனுக்கு கீழ வேலை செஞ்சா, வச்சி செய்வானே கிர்ரு. நாம தாங்குவோமா?” என்றாள் அப்பாவியாய்.
“விடு எம்எம். நான் அன்னைக்கு சொன்ன மாதிரி, இவனை மேரேஜ் பண்ணி குடும்பம் நடத்து” என்ற நேரம் தேவதைகளின் ததாத்சு ஒலி திரும்பவும் கேட்டதோ!
“டேய்! என்னடா சொன்ன? அதுவும் யாரைப் பார்த்து?” என அடித்தொண்டையில் இருந்து சீறியபடி பற்களைக் கடிக்க…
“சா…சாரி எம்எம். கொடுமைபடுத்துன்னு சொல்ல வந்தது, வாய் தவறி குடும்பம் நடத்துன்னு வந்திருச்சி.”
“இனிமேல் வாய் தவறிச்சி, அடுத்த வார்த்தை பேச வாய் இருக்காது சொல்லிட்டேன். செகண்ட் ஒஃய்பா போகணும்னு எனக்கென்ன தலையெழுத்தா. எங்க அத்தை எனக்கு சூப்பரா பார்த்திருப்பாங்க தெரியுமா?” என்றாள் ஆத்திரம் விலகாமல்.
“ஓகே சாரி. இனி பேசலை” என்று சரண்டரானான் அவளின் மனமறிந்து.
“அங்க என்ன குசுகுசுன்னு பேச்சி. இன்ட்ரடியூஸ் பண்ணினா திரும்ப விஷ் பண்றதில்லையா? இன்னும் உங்களைத் துரத்தாமல் இருக்கிறதுக்கே பெரிய வாழ்த்து சொல்லணும்” என்று ப்ரசாத் சத்தம் போட்டான்.
‘வாழ்த்து தான வாழ்த்தலாமே!’ என மனதில் நினைத்து, “தங்களின் வரவு நல்வரவாகுக சார்!” எனும்போதே ‘நாசமாப் போக’ என மனம் கௌண்ட் கொடுக்க, “வாழ்த்துகள் சார்” என்று பவ்யமாக வாய்மொழிய. ‘வந்தேன் மவனே கொன்டேபுடுவேன்’ என அடுத்த கௌண்ட் கொடுத்தது அவள் மனது.
அவளின் பாவனையிலேயே என்ன நினைத்திருப்பாள் என்பதை உணர்ந்தவன் கண்கள், ‘உன்னை நானறிவேன்’ என்பதுபோல் சிரித்தான் மணிமாறன்.
“கிர்ரு நாம என்ன மைண்ட் வாய்ஸ் கொடுத்தாலும் கண்டுபிடிச்சிடுறான்டா. என்ன பண்ணலாம்?” நண்பனிடம் நட்பாக ஐடியா கேட்க…
“ஸ்… நோரு முஸ்கோமே” என்றான் பற்களைக் கடித்தபடி.
“ஷப்பா! இவன் வேற தெலுங்குல ஆரம்பிச்சிட்டான். இவனுக்கு அவனே பரவாயில்ல போல” என புலம்பினான்.
“தெரியுதில்ல. சுப் கரோ” என்றான் கிஷோர்.
“அட சாமி! ஹிந்தி வேறயா” என்று வாயை மூடியவள் தான், மணிமாறன் அவர்களை ‘வேலையைப் பாருங்க’ என்று அனுப்பும் போதும், ‘இவர்கிட்டயாவது உங்க வாலைச் சுருட்டிக்கோங்க’ என்று மேனேஜர் சொன்னபோதும், ஏன் மாலை வீடு வரும் வரையிலுமே எதுவுமே பேசவில்லை.
அவர்களை வெளியே அனுப்பிய மணிமாறன் மேலாளரிடம் திரும்பி, “மிஸ்டர்.ப்ரசாத்! உங்க ஸ்டாப்ஸை நீங்களே இப்படி தப்பா விமர்சிக்கிறது நல்லதுக்கு இல்லை. தட்டிக்கொடுத்து வேலை வாங்கிக்கப் பழகுங்க. இப்படி இன்சல்ட் பண்ணி வேலை வாங்காதீங்க. அசிங்கம் என்பது எல்லாருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வரும். ஏன், ஒருவேளை பொறுப்பு எங்க கம்பெனிக்கு வந்த பிறகு, நீங்க எதாவது தப்பு பண்ணி, இப்படித் தெரியாத ஒருத்தர் முன்னாடி நான் திட்டினா, எவ்வளவு அவமானமா இருக்கும்னு யோசிச்சிப் பாருங்க.”
“இவங்களைன்னு இல்ல. யாரையும் இந்த மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க. இதுக்கு முன்னாடி நீங்க இன்ட்ரொடியூஸ் பண்ணின ஒரு சிலரோட க்வாலிஃபிகேஷன் கூட இவங்களோட கொஞ்சம் தான் பெட்டரா இருந்தது. நீங்க அவங்களை எதுவும் சொல்லலை. ஐ திங்க் உங்க மனசுல வேற எதோ இருக்குன்னு நினைக்கிறேன். அந்தப்பொண்ணு மேல உங்களுக்கு எதாவது முன்விரோதமா என்ன? எதுவா இருந்தாலும் இத்தோட விட்டுருங்க. அதான் உங்க லைஃப்கு நல்லது.” என்று கடி(த்து)ந்துவிட்டே கிளம்பினான்.
“இவன் என்னடா வந்த அன்னைக்கே அவங்களுக்கு சப்போர்ட் பண்றான். இது சரியில்லையே! எதுக்கும் உஷாரா இரு ப்ரசாத். பழம் நழுவி பால்ல விழலாம் தப்பில்லை. பக்கத்து இலையில விழுந்துரப்போகுது. ஆளும் பார்க்க பர்சனாலிட்டியா இருக்கான். அவளும் நமக்கு இன்னும் மடங்கலை. ஏன் ஏறெடுத்துக் கூட பார்க்கலை. ஜாக்கிரதை!” தனக்குத்தானே சொல்லியவன் கண்கள் மணிமேகலையின் மீதே நிலைத்திருந்தது.
பெண் வீடு, மாப்பிள்ளை வீட்டார்கள் இருவரும் கலந்து பேசி பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்.