🕊️💐 பாகம் 20
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், “முல்லை!” என்று கதிர் அலறினான்.
அனைவரும் சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தனர். அங்கே முகேஷ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்தான்.
அதைக் கண்ட கந்தன், “அடப்பாவி! என்னடா நீ… பொட்டுன்னு போயிட்ட!” என்று பெருமூச்சு விட்டான். பிறகு வெங்கடேஷைப் பார்த்து, “இருந்தாலும், ஒரு கமிஷனரைக் கைது செய்யிற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே!” என்று கிண்டலாகச் சிரித்தான்.
இதற்கிடையில் மங்கலம் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றாள். அதைப் பார்த்த நிலா, “ஏய்! உன் முகமெல்லாம் லைவ்ல வந்துடுச்சு. இனிமேல் உன்னால தப்பிக்க முடியாது!” என்று கூறி அவளைக் கன்னத்தில் அறைந்தாள்.
முகேஷின் உடலைப் பார்த்த முல்லைக்கு எந்தப் பரிதாபமும் ஏற்படவில்லை. தன்னுடைய வாழ்க்கையைச் சீரழித்தவர்களுக்குக் கிடைத்த தண்டனை இதுதான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
கந்தன் வெங்கடேஷை ஓர் இருக்கையில் அமர வைத்துவிட்டு, மங்கலத்தை நோக்கித் திரும்பினான்.
“இதுக்கெல்லாம் மூலக்காரணமே நீதான். அந்த அப்பாவிப் பொண்ணு முல்லைக்கு ஏன் இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.
முதலில் அமைதியாக இருந்த மங்கலம், இனிமேலும் உண்மையை மறைக்க முடியாது என்பதை உணர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“முக்தா அம்மாவுக்கு மாயமந்திரங்கள் மேல ரொம்ப நம்பிக்கை. அவங்களோட ஒரே மகன் அமீர், விபத்துல சிக்கி கோமாவுக்குப் போயிட்டாரு. அவரைக் காப்பாத்த, அவருக்குப் பிறக்கிற முதல் வாரிசை யாகத்துல பலி கொடுத்தா அவர் கண் விழிச்சிடுவார்னு நான் ஆசை காட்டினேன். அதோட அவங்களோட செல்வமும் புகழும் அதிகமாகும்னும் சொன்னேன்.
“முகேஷ் ஐயா முதல்ல இதுக்கு மறுத்தாலும், முக்தா அம்மா ஒரு மருத்துவர் மூலமா கோமாவுல இருக்கிற அமீரின் விந்தணுவைப் பயன்படுத்திக் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு, இதற்காக ஒரு பெண்ணைத் தேடச் சொன்னாங்க.
“நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு, உறவினர்னு சொல்லிக்கொள்ள ஒரு மாமாவைத் தவிர வேறு யாரும் இல்லாத முல்லைப்பூவைத் தேர்ந்தெடுத்தேன். அவளை மயக்கத்துல இருக்கும்போதே முக்தா அம்மா மஞ்சள் கயிறு கட்டி, யாகம்னு சொல்லி ஒரு சடங்கையும் நடத்தினாங்க.”
இதைக் கேட்ட கந்தன் கோபத்துடன், “அடப்பாவி! மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையையே அழிச்சிருக்க!” என்றான்.
மங்கலம் தொடர்ந்து பேசினாள்.
“டாக்டர் பல்லவி மூலமா அமீரோட விந்தணுவைப் பயன்படுத்தி முல்லைக்கு செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை செய்யத் திட்டமிட்டோம். கிட்டத்தட்ட மூணு மாசம் கழிச்சுதான் அவள் கண் விழிச்சா. அதுவரைக்கும் அவளுக்கு என்ன நடக்குதுன்னே தெரியாது. குழந்தை பிறந்ததும் யாகத்துல பலி கொடுக்கிறதுதான் எங்களோட திட்டம். ஆனா, அதுக்குள்ள அவள் தப்பிச்சு உங்ககிட்ட வந்துட்டா!”
தன் வாக்குமூலத்தை முடித்த மங்கலம் தலைகுனிந்து நின்றாள்.
அதைக் கேட்ட கந்தன் வெங்கடேஷைப் பார்த்து, “அப்போ இதெல்லாம் நடக்க இந்தக் கமிஷனரும் துணையா இருந்திருக்காரு!” என்றான்.
பிறகு மங்கலத்தை நோக்கி, “நீ பணத்துக்காகத் திட்டம் போட்ட. முக்தா மகனைக் காப்பாத்தத் திட்டம் போட்டா. முகேஷ் வாரிசுக்காகத் திட்டம் போட்டான். ஆனா, ஆண்டவன் போட்ட திட்டத்துல இன்னைக்கு அந்த மூணு பேருமே இல்ல!” என்றான்.
அப்போது காவலர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். நடந்த அனைத்தையும் கந்தன் அவர்களிடம் விளக்கினான். அதைத் தொடர்ந்து வெங்கடேஷ், மங்கலம் மற்றும் அவளுடைய ஆட்கள் கைது செய்யப்பட்டனர். முகேஷின் உடலும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது.
பிறகு கந்தன் ரகசியக் கேமராவை எடுத்து,
“அக்னிக் கொடுத்த ஐடியாதான் இன்னைக்கு இவங்களோட அத்தனை குற்றங்களையும் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கு. நாங்க இங்க வர்றதுக்கு முன்னாடியே சட்டைப் பட்டன்ல மினி கேமராவும், வெடிகுண்டு மாதிரி வடிவமைக்கப்பட்ட வீடியோ கேமராவும் ஏற்பாடு பண்ணியிருந்தோம். அதனாலதான் இங்க நடந்த எல்லாத்தையும் நேரலையில் காட்ட முடிஞ்சது!” என்றான்.
அதைக் கேட்ட நிலா பெருமிதத்துடன் சிரித்தாள்.
அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.
—
கதிரின் மருத்துவமனை…
அறைக்கு வெளியே முல்லை தன் குழந்தையை அணைத்தபடி கலங்கிய முகத்துடன் நின்றிருந்தாள். அருகில் கதிர் மற்றொரு குழந்தையை ஏந்தியிருந்தான்.
அப்போது கீதா, “முல்லை… நீ பழனியோட அக்கா பொண்ணா?” என்று கேட்டார்.
முல்லை ஆமாம் என்று தலையசைத்தாள்.
அந்த நேரத்தில் செவிலியர் ஒருவர் அங்கே வந்து, பழனிசெல்வம் கண் விழித்துவிட்டதாகக் கூறினார். அதைக் கேட்டதும் அனைவரும் அவரைப் பார்க்க அறைக்குள் சென்றனர்.
சிகிச்சைக்குப் பிறகு மெல்லக் கண் விழித்த பழனிசெல்வம், அருகில் நின்றிருந்த முல்லையைப் பார்த்ததும் பதற்றத்துடன்,
“முல்லை… உனக்கு என்னாச்சுடா? ஏன் அவங்க என்னை அடைச்சு வச்சிருந்தாங்க?” என்று கேட்டார்.
அப்போது அவருடைய பார்வை அருகில் நின்றிருந்த கீதாவின் மீது விழுந்தது.
ஒரு நொடி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தவர், பல வருடங்களுக்கு முன்பு மனதில் புதைத்துவைத்திருந்த நினைவுகள் மீண்டும் எழ, “கீதா… நீயா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
பல வருடங்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட அந்த இருவரின் கண்களிலும் பழைய காதல் நினைவுகள் மின்னின. பழனிசெல்வத்தின் முகத்தில் ஆச்சரியமும், கீதாவின் முகத்தில் சொல்ல முடியாத தவிப்பும் வெளிப்பட்டன.
அவர் தொடர்ந்து ஏதோ பேச முயன்ற நேரத்தில் முல்லை குறுக்கிட்டாள்.
“மாமா… இவங்களோட பையன் டாக்டர் கதிர்தான் என்னைக் காப்பாத்தினார். அவரும் கந்தன் அண்ணனும் மட்டும் இல்லன்னா இன்னைக்கு நான் உங்க முன்னாடி உயிரோட நின்னிருக்கவே மாட்டேன்!” என்றாள்.
அப்போது அங்கே வந்த கந்தன், முல்லைக்கு நேர்ந்த கொடுமைகளையும், அவளைக் காப்பாற்ற நடந்த போராட்டத்தையும் பழனிசெல்வத்திடம் விளக்கினான்.
அதைக் கேட்ட பழனிசெல்வம் கதறி அழுதார்.
“அடப்பாவிகளா! என் மருமக வாழ்க்கையையே அழிச்சிட்டாங்களே! இதெல்லாம் தெரியாம இத்தனை நாள் உயிரோட இருந்திருக்கேனே!” என்று வேதனையுடன் புலம்பினார்.
அவரை அனைவரும் தேற்றினர். சிறிது நேரத்திற்குப் பிறகு நன்றிப் பெருக்குடன் பழனிசெல்வம் கதிரையும் கந்தனையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
அப்போது கதிர் அனைவரையும் வீட்டுக்கு அழைத்தான். அந்த நேரத்தில் கந்தன் குழந்தைகளின் கழுத்திலிருந்த தாயத்தைக் கழற்றச் சொன்னான்.
“அது எதுக்கு மாமா?” என்று நிலா கேட்டாள்.
“அன்னைக்கு நான் பெயர் சூட்டு விழாவில் குழந்தைகளுக்குப் போட்டது GPS பொருத்தப்பட்ட தாயம். அதனாலதான் மங்கலம் உங்களை எங்கே கடத்திட்டுப் போனான்னு என்னால துல்லியமா கண்டுபிடிக்க முடிஞ்சது. இனிமேல் அதோட தேவை இல்லை!” என்றான் கந்தன்.
அதைக் கேட்ட நிலா, “சூப்பர் மாமா!” என்று பாராட்டினாள்.
—
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு…
பழனிசெல்வம் முழுமையாகக் குணமடைந்து, கதிரின் வீட்டில் அனைவருடனும் மகிழ்ச்சியாக இருந்தார்.
ஒருநாள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது,
“பழனி… உங்க அக்கா மக முல்லைப்பூவை என் அக்கா பையன் கதிருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறீங்களா?” என்று கேட்டார்.
அதைக் கேட்ட முல்லையும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அப்போது இடையில் புகுந்த கந்தன்,
“அடடா! அவங்க கல்யாணத்தை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா?” என்று கீதாவையும் பழனிசெல்வத்தையும் பார்த்துக் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
“டேய்! என்னடா சொல்ற?” என்று கதிர் கேட்டான்.
கந்தன் சிரித்தபடி கீதாவைப் பார்த்து, “மாமி, உங்க கைக்குறிப்பு புத்தகத்துல இருந்த PS இவர்தானே?” என்று பழனிசெல்வத்தைக் காட்டினான்.
பிறகு கதிரை நோக்கித் திரும்பி,
“உன் அம்மா இறந்ததும் உன் சித்தியை உன் அப்பாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா, அவங்க மனசுல அப்பவே பள்ளிக்கூட நண்பரான பழனிசெல்வம் இருந்திருக்காரு. அதனாலதான் உனக்காக மட்டுமே அவங்க வாழ்ந்திருக்காங்க. அதேபோல பழனிமாமாவும் கீதாவை மறக்க முடியாம, அவரோட அக்கா மகள் முல்லைக்காகவே வாழ்ந்திருக்காரு. இவங்க ரெண்டு பேரும் தங்களோட காதலைத் தியாகம் பண்ணியிருக்காங்க. இப்போ அவங்களுக்குச் சேர்த்து வைக்க வேண்டியது நம்ம கடமை!” என்றான்.
கீதாவும் பழனிசெல்வமும் முதலில் தயங்கினர்.
ஆனால் கதிர், “சித்தி… கல்யாணம் பண்ணிக்க வயசு ஒரு தடையே கிடையாது. ஊர் உலகம் என்ன பேசும்னு யோசிக்காதீங்க. நம்ம வாழ்க்கையை நாமதான் வாழணும்!” என்றான்.
முல்லையும் பழனிசெல்வத்தின் அருகில் சென்று, “மாமா… நீங்க எனக்காக நிறைய செஞ்சிருக்கீங்க. உங்க வாழ்க்கையில இழந்த சந்தோஷத்தை மீட்டுக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை. நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் நான் கதிரைக் கல்யாணம் பண்ணிப்பேன்!” என்று அடம்பிடித்தாள்.
அனைவரும் வற்புறுத்தியதால், வேறு வழியின்றி கீதாவும் பழனிசெல்வமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இறுதியில் கீதா மறுமணத்துக்குச் சம்மதித்தார்.
அவர்கள் சம்மதித்ததும் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்தது.
அந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
நிலா கதவைத் திறக்க, வாசலில் டாக்டர் பல்லவி நின்றிருந்தாள்.
“பல்லவி! நீயா? உள்ளே வா!” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தாள்.
உள்ளே வந்த பல்லவி, முல்லையைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு,
“முல்லை… என்னை மன்னிச்சிடு!” என்று கண்ணீர் விட்டாள்.
முல்லை அவளைத் தேற்றி, “நீங்க என்ன பண்ணுவீங்க? பணம் படைத்தவங்க சொன்னா கேட்டு தானே ஆகணும்!” என்றாள்.
அப்போது கீதா, “யார் இவங்க?” என்று கேட்டார்.
அதற்கு முல்லை, “என் வயத்துல ஒரு உயிர் வளரக் காரணமே இவங்கதான்!” என்று பல்லவியைச் சுட்டிக்காட்டினாள்.
பல்லவி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,
“முக்தாவும் முகேஷும் என்னையும் என் குடும்பத்தையும் அழிச்சிடுவோம்னு மிரட்டித்தான் இந்தக் காரியத்தைச் செய்ய வச்சாங்க. அவங்க இறந்த செய்தியைப் பார்த்த பிறகுதான் உங்களைத் தேடி வரத் தைரியம் வந்துச்சு!” என்றாள்.
நிலா அவளைத் தேற்றினாலும், கதிர் மட்டும் அவளைப் பார்த்து,
“உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே! நான் உன் நண்பன் தானே?” என்று வருத்தத்துடன் கேட்டான்.
அப்போது, “அன்னைக்கு நீ எனக்கு பண்ண உதவி தான் உன் உயிரே உன் கையில இருக்க காரணமா இருக்கு” என்றாள்
அவள் வார்த்தையின் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
அப்போது பல்லவி,“முக்தா கோமாவுல இருந்த அமீரோட விந்தணுவைப் பயன்படுத்தச் சொல்லி என்னை மிரட்டினாங்க. ஆனா, மருத்துவப் பரிசோதனையில அது கருத்தரிப்புக்குப் பயன்படாதுன்னு தெரிஞ்சது. இதை அவங்களிடம் சொல்லப் பயந்த நேரத்துல முகேஷ் ஐயாவும் தன்னோட விந்தணுவைப் பயன்படுத்தச் சொன்னாரு. அதுவும் முடியாதுன்னு தெரிஞ்சதும், என்னையும் என் குடும்பத்தையும் அழிச்சிடுவேன்னு மிரட்டினாங்க.
“அப்போதான் உன்னிடம் ஒரு உதவி கேட்டேன். குழந்தை இல்லாம பதினைந்து வருஷமா தவிச்ச ஒரு தம்பதிக்காக விந்தணு தானம் செய்ய முடியுமான்னு கேட்டேன். நீயும் ஒரு நல்ல காரியம்தானேன்னு நினைச்சு சம்மதிச்ச.
“ஆனா, நான் உன்கிட்ட உண்மையைச் சொல்லலை. நீ தானம் செய்த விந்தணுவைத்தான் முல்லையின் கருமுட்டையுடன் பயன்படுத்தி செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை செய்தோம். அந்த உண்மை தெரிஞ்சா நீ என்ன சொல்வியோன்னு பயந்துதான் அப்போ சொல்லாம மறைச்சிட்டேன். உன் சம்மதம் இல்லாம உண்மையை மறைச்சது என் தப்புதான்!” என்று வருத்தத்துடன் கூறி முடித்தாள்.
பல்லவி சொன்னதைக் கேட்ட கதிர் சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றான்.
பிறகு தன் கைகளில் இருந்த ஆண் குழந்தையைப் பார்த்தான். அந்தக் குழந்தையை மெதுவாக அணைத்துக்கொண்டபோது அவனுடைய கண்கள் கலங்கின.
அருகில் நின்றிருந்த முல்லை, கதிரின் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளுடைய கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
அந்த இருவரின் உணர்வுகளையும் புரிந்துகொண்ட பல்லவி அமைதியாக அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
அந்த நொடியை அழகாக வர்ணிப்பதுபோல்…
மாற்றான் தோட்டத்து முல்லையைத் தீண்டாமலேயே மலரச் செய்திருந்தான் கதிரவன்!
அன்று முல்லையின் வாழ்க்கையில் பறிக்கப்பட்ட மகிழ்ச்சி, இன்று அவள் நேசிக்கும் கதிரவனாலேயே மீண்டும் மலர்ந்தது.
எபிலாக் ❤️
இறைவன் வகுத்த விதியின் விளையாட்டில், முல்லையின் கருவில் வளர்ந்த குழந்தைக்குக் கதிர்தான் தந்தை என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்ததும், அங்கே மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இத்தனை நாட்களாகத் தங்களை அறியாமலேயே பின்னிப் பிணைந்திருந்த உறவு, இன்று ஓர் அழகான குடும்பமாக உருவெடுத்திருப்பதை நினைத்து கதிரும் முல்லையும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.
காலம் பலருடைய வாழ்க்கையில் எத்தனையோ காயங்களை ஏற்படுத்தினாலும், சிலருக்குத் தாமதமாகவேனும் அழகான பரிசுகளைக் கொடுக்கத் தவறுவதில்லை.
அதற்கு ஓர் உதாரணமாக அமைந்தது கீதா – பழனிசெல்வத்தின் திருமணம்.
அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த கோவிலில், அறுபது வயதைக் கடந்த அந்த இரு உள்ளங்களும் மணக்கோலத்தில் நின்றிருந்தனர். பல வருடங்களாக ஒருவருக்கொருவர் மனதில் சுமந்துவந்த காதலை இன்று வெளிப்படுத்தும் தருணம் அது.
பழனிசெல்வம் கீதாவின் கழுத்தில் மாலையை அணிவிக்க, கீதாவும் புன்னகையுடன் அவருக்கு மாலை அணிவித்தார். இருவருடைய கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.
பல வருடங்களுக்கு முன்பு கைவிட்டுப் போன காதல், இன்று மீண்டும் கைகூடியிருந்தது.
அங்கிருந்த அனைவரும் கைதட்டி அவர்களை வாழ்த்தினர்.
அப்போது கந்தன் குறும்புப் புன்னகையுடன் கதிரைப் பார்த்தான்.
“டேய் கதிர்… உனக்கும் முல்லைக்கும் கல்யாணம் நடக்குற அதே கோவில்லதான் நிலாவுக்கும் எனக்கும் கல்யாணம் நடத்துவோம். என்ன சொல்ற?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட நிலா வெட்கத்தில் முகம் சிவக்க, கதிர் சிரித்தபடி கந்தனின் தோளில் தட்டினான்.
“முதல்ல உங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்துவோம் மச்சான்!” என்றான்.
அந்த வீட்டில் அடுத்தடுத்து திருமணக் கொண்டாட்டங்களுக்கான மகிழ்ச்சி நிறைந்தது.
இதற்கிடையில், முக்தா மற்றும் முகேஷின் சதித்திட்டத்தால் முல்லையின் வாழ்க்கை சீரழியக் காரணமாக இருந்த வெங்கடேஷ், மங்கலம் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட்டனர். முல்லைக்குரிய நீதி கிடைத்தது.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களின் சதிகளை முறியடித்ததற்காக கந்தனுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அன்று அவனுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த நிலா,
“மாமா… இப்போ நீங்க இன்னும் பெரிய போலீஸ் அதிகாரி!” என்று கிண்டல் செய்தாள்.
—
அன்றைய தினம்…
கதிர் – முல்லையின் அறை.
அறையில் மென்மையான வெளிச்சம் பரவியிருந்தது. ஜன்னல் வழியாக வீசிய தென்றல் திரைச்சீலையை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தது.
அறையின் ஒரு பக்கத்தில் இரண்டு குழந்தைகளும் தனித்தனித் தொட்டில்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
கட்டிலின் அருகே நின்றிருந்த முல்லையின் கழுத்தில் கதிர் கட்டிய மாங்கல்யம் அழகாக மின்னிக்கொண்டிருந்தது.
ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்.
அவனுக்குப் பின்னால் மெதுவாக வந்த முல்லை, அவனருகில் நின்றாள்.
அவளுடைய வருகையை உணர்ந்த கதிர் திரும்பிப் பார்த்தான்.
அவளுடைய முகத்தில் இருந்த அந்த மெல்லிய புன்னகை அவனுடைய மனதை ஏதோ செய்தது. நெற்றியில் அழகாகத் தெரிந்த குங்குமம், கழுத்தில் மின்னிய மாங்கல்யம், காற்றில் அசைந்த கூந்தல் என அவனுடைய பார்வை ஒவ்வொன்றாக அவளிடம் நிலைத்தது.
இத்தனை துயரங்களைக் கடந்து இன்று தன் அருகில் மகிழ்ச்சியாக நிற்கும் அவளைப் பார்த்தபோது, அவனுக்குள் விவரிக்க முடியாத ஓர் உணர்வு எழுந்தது.
“என்னாச்சுங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று முல்லை கேட்டாள்.
சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்,
“முல்லை… உன் வாழ்க்கை அழிய நானும் ஒரு காரணமா இருந்துட்டேனோன்னு தோணுது!” என்றான்.
அவள் உடனே அவன் முகத்தைப் பார்த்தாள்.
“என்ன பேசுறீங்க நீங்க? என் கருவுல யாரோ ஒருத்தரோட குழந்தை வளர்ந்தாலும், அது என் குழந்தைங்கிற எண்ணம்தான் எனக்கு இருந்தது. ஆனா இப்போ அந்தக் குழந்தை நம்ம குழந்தைன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்றாள்.
அவளை அன்பாக அணைத்துக்கொண்ட கதிர்,
“என் மேல உனக்குக் கோபம் இல்லையா?” என்று கேட்டான்.
“ஏன் இப்படி பேசுறீங்க?”
“நான் ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணிட்டு, மறுபடியும் உன்னை மறுமணம் பண்ணியிருக்கேன்.”
அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“அதனால இப்போ என்ன? மறுமணம் என்றாலும் அதுவும் திருமணம் தானே?”
கதிர் அமைதியாக அவளைப் பார்த்தான்.
“எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல முல்லை. இந்த ஊர் உலகம் உன்னை இரண்டாம் தாரம்னு சொல்லாதா?”
“என்ன நீங்க… அப்படிப் பார்த்தா என் மாமாவுக்கும் உங்க சித்திக்கும் நம்மதான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம். அவங்க சந்திக்கப்போற ஏச்சும் பேச்சும் நம்மைவிட அதிகம்தான்.
ஊர் பேசிக்கிட்டேதான் இருக்கும். அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டிருந்தா, அவங்க வேற வேற கேள்வி கேட்டுக்கிட்டேதான் இருப்பாங்க. அவங்களுக்கு விடை சொல்ற வேலையை விட்டுட்டு நம்ம வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிப்போம்!” என்றாள்.
அவளுடைய பேச்சில் இருந்த தெளிவும் தைரியமும் கதிரின் மனதிலிருந்த அத்தனை சங்கடங்களையும் கரைத்துவிட்டன.
“நமக்கு எவ்வளவோ வேலை இருக்கு. நம்ம பசங்களை நல்லா படிக்க வைக்கணும். நல்ல பிள்ளைகளா வளர்க்கணும். அப்புறம்…” என்று ஒவ்வொரு விரலாக நீட்டிக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லை.
அவளுடைய முகபாவனைகளையும் குறும்பான பேச்சையும் ரசித்துக்கொண்டிருந்தான் கதிர்.
அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவன் மட்டும் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“முல்லை…” என்று அழைத்தான்.
“ம்ம்… என்னங்க?”
“என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?”
அவள் சற்றும் யோசிக்காமல்,
“உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட ஒரு பங்கு அதிகமா!” என்றாள்.
கதிர் சிரித்தான்.
“உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.
“எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட ஒரு பங்கு கம்மியா!” என்றான்.
அவள் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“பயங்கரமான ஆளுதான் நீங்க!” என்று சிரித்தாள்.
அந்த நேரத்தில் தொட்டிலில் இருந்த பெண் குழந்தை அழத் தொடங்கியது.
“அச்சோ! என் அழகி ஏன் அழறாங்க?” என்று பதறியபடி சென்ற முல்லை, குழந்தையைத் தூக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்து பாலூட்ட ஆரம்பித்தாள்.
அடுத்த நொடியே ஆண் குழந்தையும் அழுதது.
“என்னாச்சு தேவா குட்டிக்கு?” என்று கேட்ட கதிர், குழந்தையைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.
அவன் கைக்கு வந்ததும் குழந்தை அழுகையை நிறுத்தியது.
அதைப் பார்த்த முல்லை,
“சரியான அப்பா ஆளுதான் இவன்!” என்று சிரித்தாள்.
“என் அழகி… என் செல்லம்…” என்று பெண் குழந்தையைப் பார்த்துக் கொஞ்சினாள்.
கதிரும் குழந்தையை மார்பில் போட்டுக்கொண்டு கட்டிலில் படுத்தான். அருகில் அமர்ந்திருந்த முல்லை, குழந்தைக்குப் பாலூட்டியபடியே மற்றொரு கையால் கதிரின் தலையை மெதுவாக வருடிக்கொடுத்தாள்.
குழந்தைகளின் மெல்லிய மூச்சுச் சத்தத்தோடு அறை அமைதியில் மூழ்கியது.
மனைவியின் அருகாமையிலும் குழந்தைகளின் அரவணைப்பிலும் கதிரின் கண்கள் மெல்ல மூடின.
அவன் உறங்கும் அழகைப் பார்த்த முல்லையின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
தனக்கு இரண்டு குழந்தைகளையும், அன்பான கணவனையும் கொடுத்த இறைவனுக்கு மனதார நன்றி சொன்னாள்.
‘இந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்கத்தான் இரண்டு வருடங்கள் இத்தனை கஷ்டப்பட்டேனா? இனிமேல் என் பிள்ளைகள், என் கணவன், என் அத்தை, மாமா என எல்லோருடனும் எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் கடவுளே!‘ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கந்தவேலனின் காலண்டர் தென்றல் காற்றில் மெதுவாக அசைந்தது.
அதில் இருந்த ‘யாம் இருக்க பயம் ஏன்?’ என்ற வாசகத்தைப் பார்த்த முல்லையின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
சில காதல்கள் காலத்தைக் கடந்து காத்திருக்கும்…
சில உறவுகள் விதியால் மீண்டும் இணைக்கப்படும்…
சில வாழ்க்கைகள் சோதனைகளைக் கடந்து மீண்டும் வசந்தத்தைக் காணும்!
வாழ்க்கையில் ஒரு முறை திருமணம் முடிந்துவிட்டால், மீண்டும் காதலிக்கவோ, திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழவோ முடியாது என்பதில்லை.
வயதோ, கடந்த காலமோ, சமூகத்தின் பேச்சோ உண்மையான அன்புக்கு ஒருபோதும் தடையாக இருக்க முடியாது.
மறுமணம் என்பது முடிந்துபோன வாழ்க்கையின் தொடர்ச்சி அல்ல… இழந்துபோன மகிழ்ச்சியை மீண்டும் தேடிக்கொள்ளக் கிடைக்கும் இன்னொரு அழகான வாய்ப்பு!
அந்த உண்மையைத் தங்கள் வாழ்க்கையின் மூலம் உணர்த்தியபடி, கதிரும் முல்லையும் இனி வரும் நாட்களில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாழத் தொடங்கினர்.
அவர்களின் வாழ்க்கையில் இனி வசந்தம் மட்டுமே!
முற்றும். 🕊️❤️
1 comment
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe