🕊️ பாகம் 17
மறுநாள் காலை…
ஜன்னல் வழியாக வந்த காலை வெயில் மெல்ல அறை முழுவதும் பரவியிருந்தது. ஆனால், முந்தைய இரவு அவளை வாட்டியெடுத்த காய்ச்சலின் சோர்வில் முல்லை இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் கண் விழிப்பதற்கு முன்பே கதிர் எழுந்துவிட்டான். இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் கவனமாகத் தூக்கிக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, பாலும் கொடுத்துவிட்டு மீண்டும் தொட்டிலில் படுக்க வைத்திருந்தான்.
எல்லாம் முடிந்ததும் முல்லையின் அருகில் வந்தவன், அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். காய்ச்சல் கணிசமாகக் குறைந்திருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குள் ஒருவித நிம்மதி ஏற்பட்டது.
மெதுவாக அவளை எழுப்பியவன்,
“முல்லை… எழுந்துக்கோங்க. சூடா தண்ணி வச்சுத் தரேன். போய்க் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோங்க” என்றான்.
தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்த முல்லை, ஏற்கனவே குளித்துப் புத்தாடை அணிந்து தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
அவளுடைய பார்வையைப் புரிந்துகொண்ட கதிர், சின்னதாகச் சிரித்தபடி,
“என்ன, குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியமா இருக்கா?” என்றான்.
பிறகு ஏதோ யோசித்தவன், குறும்பாக,
“நீங்க தனியா குளிப்பீங்களா… இல்லையென்றால்…?” என்று இழுத்தான்.
அவன் எதைச் சொல்ல வருகிறான் என்று புரியாமல் முல்லை அதிர்ச்சியுடன் அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவளுடைய பார்வையைப் பார்த்ததும் கதிர் அவசரமாகச் சமாளித்தான்.
“ஐயையோ! நான் அப்படி எதுவும் சொல்ல வரலைங்க. நிலா வந்ததும் அவ உதவியோட குளிக்கிறீங்களான்னு கேட்க வந்தேன். நீங்க வேற என்னவோ நினைச்சுக்கிட்டீங்க!” என்றான்.
அவனுடைய தடுமாற்றத்தைப் பார்த்து முல்லைக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“சரிங்க, நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு மெதுவாகக் குளியலறைக்குச் சென்றாள்.
—
அதே நேரம்… முகேஷின் பங்களாவில்…
கோபத்தின் உச்சியில் இருந்த முக்தா, கையிலிருந்த ‘அக்னி‘ பத்திரிகையை மங்கலத்தின் முகத்தை நோக்கி வீசியெறிந்தாள். அந்தப் பத்திரிகை காற்றில் பறந்து கீழே விழுந்தது.
“என்னாச்சு மேடம்?” என்று பயந்த குரலில் கேட்டாள் மங்கலம்.
“இன்னும் என்ன ஆகணும்? உன்னோட அஜாக்கிரதையாலதான் அந்த முல்லையையும், இந்த வீட்டு வாரிசையும் நம்ம கையை விட்டுப் போக விட்டுட்ட! அது போதாதுன்னு இப்போ இந்தப் பத்திரிகை வேற! ‘பலி கொடுக்கும் பணக்காரன்‘னு தலைப்பு போட்டு, நம்ம கதையைப் பத்தி நேர்ல பார்த்த மாதிரி பெருசா கட்டுரை எழுதியிருக்கான். இனிமேல் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகுதோ!” என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.
மங்கலத்துக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தலைகுனிந்து அமைதியாக நின்றாள்.
அந்த நேரத்தில் பதற்றத்துடன் உள்ளே நுழைந்த கமிஷனர் வெங்கடேஷ்,
“மேடம்… எல்லாமே நம்ம கைமீறிப் போயிட்டு இருக்கு!” என்றான்.
அதைக் கேட்ட முகேஷ் கோபமாக,
“இப்போ என்னாச்சு?” என்று கேட்டான்.
“நான் அன்னைக்கே சொன்னேனே! அந்தக் கந்தன் சாதாரண ஆள் இல்லை. ஏதாவது பண்ணி நம்மளச் சட்டத்துல சிக்க வைப்பான்னு சொன்னேனே… அதுதான் இப்போ நடந்துருக்கு!” என்றான் வெங்கடேஷ்.
“என்ன சொல்ற நீ?” என்று முக்தா அதட்டினாள்.
“அந்த முல்லை தனக்கு நடந்த அநியாயத்தைப் பத்தி மனித உரிமை ஆணையம், பெண்கள் பாதுகாப்பு மையம்னு எல்லா முக்கிய இடங்களுக்கும் மெயில் அனுப்பியிருக்கா மேடம். அவளுக்கு முழுப் பாதுகாப்பு கொடுக்கணும்னு கோரிக்கையும் வச்சிருக்கா. இதெல்லாத்துக்கும் பின்னால இருந்து கந்தன்தான் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கான்!” என்றான்.
“என்ன?!” என்று முக்தாவும் முகேஷும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியடைந்தனர்.
சில நொடிகள் யோசித்த முகேஷ்,
“ஓ… அப்படின்னா சட்டப்படியும், பத்திரிகையாளர்கள் மூலமாகவும் நம்மைச் சிக்க வைக்கப் பார்க்கிறாங்க. இந்த விஷயம் வெளியே பெருசாகுறதுக்கு முன்னாடி ஏதாவது பண்ணியாகணும்” என்றான்.
“இனிமேல் நம்மைப் பத்தி ஒரு செய்திகூட வெளியே வரக்கூடாது. அதுக்குள்ள அந்த முல்லையைக் கண்டுபிடிச்சாகணும்!” என்று முக்தா ஆத்திரத்துடன் கூறினாள்.
உடனே முகேஷ் ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான்.
அப்போது முக்தா,
“ஏய் மங்கலம்… என் யூகப்படி அந்த டாக்டர் கதிர்கூடத்தான் முல்லை இருக்கணும். அதனால முதல்ல அவனோட பூர்வீகம் எங்கன்னு கண்டுபிடி. அவனோட சொந்த ஊருக்குப் போய்த் தேடிப் பாரு. ஒருவேளை முல்லை அங்கே இருந்தான்னா, அவளைப் போட்டுத் தள்ளிட்டு குழந்தையை மட்டும் தூக்கிட்டு வந்துடு. இந்த முறை எந்தத் தப்பும் நடக்கக்கூடாது. புரியுதா?” என்று கொடூரமாகக் கட்டளையிட்டாள்.
“சரிங்க மேடம். நீங்க சொன்ன மாதிரியே ஏற்பாடு பண்றேன்” என்றாள் மங்கலம்.
ஆனால், முகேஷின் மனதிலோ வேறொரு கணக்கே ஓடிக்கொண்டிருந்தது.
ஒருபுறம் முல்லையைச் சுற்றி ஆபத்தான சதிவலை ஒன்று பின்னப்படத் தொடங்கியது. மறுபுறம், மங்கலமும் அவளது ஆட்களும் முல்லையையும் குழந்தையையும் தேடிக்கொண்டு கதிரின் சொந்த ஊருக்குப் பயணமானார்கள்.
—
இதே தருணம்… கீதாவின் வீட்டில்…
காலை உணவைத் தட்டில் எடுத்துக்கொண்டு தன் படுக்கையறைக்குள் வந்தான் கதிர். அப்போது படுக்கையிலிருந்து எழுந்திருந்த முல்லை,
“நான் வெளியே வந்து சாப்பிடுறேன்ங்க” என்றாள்.
“இருக்கட்டும், நீங்க இங்கேயே சாப்பிடுங்க” என்று சொல்லியபடியே அவளுக்கு இட்லியைப் பரிமாறினான்.
அவனுடைய செயலைப் பார்த்த முல்லைக்குச் சங்கடமாக இருந்தது.
“என்னால உங்களுக்குத்தான் ரொம்பச் சிரமம்” என்றாள் தயக்கத்துடன்.
உடனே புன்னகைத்த கதிர்,
“ஏன்? எனக்கு உடம்பு சரியில்லாம இருந்தா, நீங்க இதெல்லாம் செய்ய மாட்டீங்களா? அப்போ அதைச் சிரமம்னு நினைப்பீங்களா?” என்று கேட்டான்.
“உங்களுக்கு ஏன் உடம்பு சரியில்லாம போகப்போகுது? நான் இருக்கிற வரைக்கும் உங்களுக்கு ஒண்ணும் ஆகாது” என்று உறுதியாகச் சொன்னாள் முல்லை.
அவளுடைய அந்த வார்த்தைகள் கதிரின் மனதை நெகிழச் செய்தன.
அவள் சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளைக் கொடுத்தான்.
“மதியம் நான் சமைக்கிறேன்” என்றாள் முல்லை.
“அதெல்லாம் வேண்டாம். சித்தி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்றான்.
“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று அவள் அக்கறையுடன் கேட்க,
“ம்… சாப்பிட்டேன்” என்று பதிலளித்தவன், அவள் சாப்பிட்ட தட்டை ஓரமாக வைத்தான்.
சிறிது நேரம் கழித்துத் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்த முல்லை,
“இப்போ நான் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா?” என்று கேட்டாள்.
“காய்ச்சல் இப்போ நல்லா குறைஞ்சிருக்கு. நீங்களே பால் கொடுங்க” என்றான் கதிர்.
அதற்குப் பிறகு இருவருக்கும் இடையில் சில நொடிகள் அமைதி நிலவியது.
அந்த அமைதியைக் கலைத்த முல்லை,
“என் மாமா எங்க இருக்கார்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டாள்.
“அதையெல்லாம் கந்தன் பார்த்துப்பான். நீங்க கவலைப்படாதீங்க” என்றவன், சிறிது நேரம் தயங்கிவிட்டு அவளைப் பார்த்தான்.
“ஏன் முல்லை… உங்க மாமா வந்து உங்களைக் கூப்பிட்டா, என்னை விட்டுட்டு… அதாவது, இந்த வீட்டை விட்டுப் போயிடுவீங்களா?” என்று கேட்டான்.
அவனுடைய கேள்வியில் முல்லை அதிர்ச்சியடைந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“யார் வந்து கூப்பிட்டாலும் சரி, நீங்களா என்னைப் போகச் சொன்னா மட்டும்தான் நான் போவேன்” என்றாள்.
“அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வரவே வராது” என்று உடனே சொன்னான் கதிர்.
“உண்மையாவா?” என்று அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.
“உங்களையும் தேவா குட்டியையும் அனுப்ப எனக்கு எப்படி மனசு வரும்? அதுவும் இல்லாம, நேத்து இங்கே வந்தவங்க எல்லாம் என் குழந்தையைத் தப்பா பேசினப்போ, நீங்க அவளை விட்டுக்கொடுக்காம பேசியது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா?” என்றான்.
“அவள் என்னோட குழந்தை. அவளைப் பெத்தது யாராக இருந்தாலும் சரி, அவளுக்கு அம்மாவா இருக்கப்போறது நான்தான்!” என்று முல்லை உரிமையுடன் சொன்னாள்.
அவளுடைய தாய்மையைப் பார்த்த கதிர் சில நொடிகள் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய பார்வையைப் பார்த்ததும் முல்லையின் முகம் மாறியது.
பழைய நினைவுகள் அவளுக்குள் மீண்டும் வலியை ஏற்படுத்தின.
“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? என் வயிற்றுல பிறந்த குழந்தைக்கே அப்பா யாருன்னு தெரியாத நிலைமையில இருக்கேன். இதுல உங்க குழந்தைக்கு நான் அம்மாவா எப்படி இருப்பேன்னு நினைக்கிறீங்களா?” என்று குரல் உடையக் கேட்டாள்.
அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும் கதிரின் முகம் இறுகியது.
“இனிமேல் அப்படியெல்லாம் பேசாதீங்க முல்லை. என்ன பிரச்சனை வந்தாலும் சரி, தேவா குட்டிக்கு நான்தான் அப்பா… சுந்தரி பாப்பாவுக்கு நீங்கதான் அம்மா!” என்று அழுத்தமாகச் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் முல்லையின் கண்கள் கலங்கின.
“முல்லை… என்னாச்சு?” என்று பதறியபடி அவளருகில் வந்தான்.
“எனக்குப் பயமா இருக்குங்க. நாளைக்கே யாராவது வந்து என்னையும் குழந்தையையும் சொந்தம் கொண்டாடினா நான் என்ன செய்வேன்?” என்று கண்ணீருடன் கேட்டாள்.
“நீங்க எதுவும் செய்ய வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றான் கதிர்.
ஆனால், முல்லையின் மனதில் இருந்த பயம் மட்டும் குறையவில்லை.
“என்னாச்சு? என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று மெதுவாகக் கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“முல்லை… என்னன்னு சொல்லுங்க. ஏன் இப்படி இருக்கீங்க?” என்று மீண்டும் கேட்டான்.
அதற்குப் பிறகுதான் அவளுடைய மனதில் இருந்த கவலை வார்த்தைகளாக வெளியே வந்தது.
“எனக்குச் சொல்லவே தெரியலைங்க. என்னைப் பத்தின உண்மை தெரிஞ்சா அத்தை என்னை ஏத்துப்பாங்களா? யாருக்கோ பிறந்த குழந்தைக்கு என் மகன் ஏன் அப்பாவா இருக்கணும்னு கேட்க மாட்டாங்களா?” என்று தேம்பினாள்.
“ஏய்… சித்தி அப்படியெல்லாம் நினைக்கிற ஆளே இல்லை. அவங்களைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் சொன்னான்.
“நானும் குழந்தையும் எத்தனை நாளைக்குத்தான் எங்களைப் பத்தின உண்மையை மறைச்சு உங்களோட வாழ முடியும்? இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாலே எனக்கு அழுகையா வருது” என்றாள்.
அவளுடைய கண்ணீரைப் பார்த்த கதிரால் மனம் தாங்க முடியவில்லை. இன்னும் நெருக்கமாக அவளருகில் வந்தான்.
“எனக்கு என்ன நடந்திருந்தாலும், என்னை யாருக்காகவும் விட்டுட மாட்டீங்கதானே?” என்று கேட்டபடியே அவன் நெஞ்சில் சாய்ந்து அழத் தொடங்கினாள் முல்லை.
அவளுடைய பயமும் தவிப்பும் கதிருக்குப் புரிந்தது. அவளை மென்மையாக அணைத்துக்கொண்டவன்,
“அழாதீங்க முல்லை… நான் இருக்கேன்ல. நீங்க, நான், நம்ம ரெண்டு குழந்தைகள்னு நம்ம நாலு பேரையும் யாராலும் பிரிக்க முடியாது!” என்றான்.
அவனுடைய வார்த்தைகளில் கொஞ்சம் நம்பிக்கை வந்ததும் அவனிடமிருந்து விலகி முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள்.
சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த கதிர், தன் மனதில் இருந்ததைச் சொல்லத் தொடங்கினான்.
“முல்லை… இந்த உணர்வு என்னன்னு எனக்கே புரியலை. நான் ஏற்கனவே கல்யாணமாகி விவாகரத்தானவன்தான். ஆனா, நான் உங்களை மறுபடியும் காதலிக்கிறேனானு யாராவது கேட்டா, அதுக்கு என்கிட்ட சரியான பதில் இல்லை. ஆனா, ஒண்ணு மட்டும் நல்லா தெரியும். யாருக்காகவும் உங்களையும் குழந்தையையும் இழக்க எனக்கு விருப்பமில்லை. இது சரியா, தப்பான்னு கூட யோசிக்கத் தோணலை. உங்களை விட்டுக்கொடுக்கவும் மனசில்லை” என்றான்.
முல்லை கண்ணீரைத் துடைத்துக்கொண்டவளாய் மெல்லச் சிரித்தாள்.
“எனக்கும் அப்படித்தான். இந்தக் கொஞ்ச நாள்ல அத்தை உங்களை என் புருஷன், என் புருஷன்னு சொல்லிச் சொல்லி, இப்போ நானே உங்களை அப்படித்தான் நினைக்க ஆரம்பிச்சிட்டேன்” என்றாள் வெட்கமும் அழுகையும் கலந்த குரலில்.
அவளுடைய பதிலைக் கேட்ட கதிரின் இதழோரத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
காதலே இல்லை என்று இருவரும் தங்களுக்குள் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய மனங்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டிருந்தன. அந்த உணர்வுக்குப் பெயர் காதல்தான் என்பதை மட்டும் இருவரும் இன்னும் முழுமையாக உணரவில்லை.
சரியாக அந்த நேரத்தில்…
அறையின் கதவோரத்தில் வந்து நின்றிருந்த கீதாவின் குரல் இருவரையும் அதிர வைத்தது.
“டேய் கதிர்… இங்கே என்னடா நடக்குது?”
கீதாவின் குரலைக் கேட்டதும் கதிரும் முல்லையும் பதறியபடி ஒருவரிடமிருந்து ஒருவர் விலகினர்.
“சித்தி…” என்று கதிர் திடுக்கிட்டான்.
அறைக்குள் நுழைந்த கீதா, கதிரைப் பார்த்து அதிர்ச்சியுடன்,
“இப்போ நீ முல்லைக்கிட்ட என்ன பேசிட்டு இருந்த? உனக்கு விவாகரத்து ஆயிடுச்சா?” என்று கேட்டார்.
“சித்தி… நான்… நான் வந்து…” என்று உண்மையைச் சொல்ல முயன்றான் கதிர்.
ஆனால், அவன் சொல்லும் முன்னே,
“ம்மா…” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நிலைதடுமாறிய கீதா அப்படியே சரிந்து விழுந்தார்.
“மாமி!” என்று பதறியபடி கந்தன் ஓடி வந்தான்.
“சித்தி!” என்று நிலாவும் கதிரும் அலறிக்கொண்டு அவரருகில் சென்றனர்.
என்ன செய்வதென்று தெரியாமல் முல்லை அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.
கடுமையான நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டிருந்த கீதாவை உடனடியாகக் காரில் தூக்கிக்கொண்டு கதிரும் கந்தனும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.
வீட்டில் நிலாவும் முல்லையும் மட்டுமே இருக்க, கீதாவின் நிலையை நினைத்து இருவருமே பதற்றத்தில் இருந்தனர்.
“நீங்க கோயிலுக்குப் போயிட்டு வந்தது எங்களுக்குத் தெரியாது நிலா…” என்று கலங்கிய கண்களுடன் சொன்னாள் முல்லை.
“அழாதீங்க முல்லை… சித்திக்கு ஒண்ணும் ஆகாது. நல்லபடியா திரும்பி வந்துடுவாங்க” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் நிலா.
அந்த நேரத்தில்தான் வீட்டின் கதவு பலமாகத் தட்டப்பட்டது.
யாரென்று பார்க்க நிலா வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள்.
வாசலில் மங்கலம் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் அவளுடைய ஆட்கள் சிலரும் நின்றிருந்தனர். மங்கலத்தின் முகத்தில் கொடூரமான கோபம் தெரிந்தது.
அவளைப் பார்த்ததும் முல்லை பயத்தில் அலறியபடி ஓடிப்போய்ப் படுக்கையறைக்குள் மறைந்துகொண்டாள்.
நிலா மங்கலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவளைத் தடுத்து நிறுத்த முயன்றாள்.
ஆனால், நிலா சத்தமிட்டு ஊரைக் கூட்டுவதற்குள் மங்கலம் கையிலிருந்த கனமான இரும்புப் பொருளால் அவளுடைய தலையில் ஓங்கி அடித்தாள்.
அந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் நிலா அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
அதற்குள் மங்கலத்தின் ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டனர்.
படுக்கையறைக்குள் ஒளிந்திருந்த முல்லையைத் தேடிச் சென்ற மங்கலம், கதவை எட்டி உதைத்துத் திறந்தாள். ஒரு மூலையில் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த முல்லையைப் பார்த்ததும் அவளுடைய முகத்தில் கொடூரமான சிரிப்பு மலர்ந்தது.
அடுத்த நொடியே முல்லையின் தலைமுடியைப் பிடித்துக் கொத்தாக இழுத்தாள்.
“என்ன முல்லை… நீ எங்க போய் மறைஞ்சாலும் உன்னைத் தேடி வந்து பிடிக்கிற சக்தி எனக்கு இருக்கு!” என்று ஆணவத்துடன் சிரித்தாள்.
வலியால் துடித்த முல்லை அவளுடைய பிடியிலிருந்து தப்பிக்கப் போராடினாள்.
அப்போது தொட்டிலில் இரண்டு குழந்தைகளும் எதுவுமே தெரியாமல் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தன.
முதலில் முல்லையின் ஆண் குழந்தையைப் பார்த்த மங்கலம், சட்டென்று அதைத் தூக்கிக்கொண்டாள்.
“ஐயோ! என் குழந்தையை விட்டுடு!” என்று கதறிய முல்லை, மங்கலத்தின் கையைப் பலமாகக் கடித்தாள்.
வலியால் துடித்த மங்கலம் ஆத்திரத்தில் முல்லையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.
அந்த அடியைத் தாங்க முடியாமல் நிலைதடுமாறிய முல்லை கீழே சுருண்டு விழுந்தாள். அடுத்த நொடியே மயக்கமடைந்தாள்.
அவளைக் கவனிக்காமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த மங்கலம், உடனே முக்தாவுக்கு அழைத்தாள்.
“அம்மா… குழந்தை என் கையில கிடைச்சிருச்சு. முல்லையையும் பிடிச்சிட்டேன்” என்றாள்.
மறுமுனையில் பேசிய முக்தா, அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் தங்களுடைய இடத்துக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டாள்.
“சரிங்க அம்மா” என்று கூறிய மங்கலம் அழைப்பைத் துண்டித்தாள்.
உடனே தன்னுடைய ஆட்களை அழைத்து, வீட்டிலிருந்த அனைவரையும் காரில் ஏற்றும்படி உத்தரவிட்டாள்.
மங்கலத்தின் ஆட்கள் மற்றொரு தொட்டிலிலிருந்த கதிரின் பெண் குழந்தையையும், மயங்கிக் கிடந்த நிலாவையும் தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.
ஒருபுறம் மங்கலத்தின் கைகளில் முல்லையின் குழந்தை… மறுபுறம் அவளுடைய ஆட்களின் கைகளில் கதிரின் குழந்தையும், நிலாவும் இருந்தனர். மயங்கிக் கிடந்த முல்லையையும் அவர்கள் தூக்கிக்கொண்டு காரை நோக்கிச் சென்றனர்.
அனைவரையும் காரில் ஏற்ற முயன்றபோது, வீட்டிலிருந்து எழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டில் வேலை செய்யும் கண்ணமாவும் அங்கே ஓடி வந்தனர்.
அவர்கள் மங்கலத்தையும் அவளுடைய ஆட்களையும் வழிமறித்து, பெண்களையும் குழந்தைகளையும் கீழே இறக்கும்படி வற்புறுத்தினர்.
ஊர் மக்கள் தங்களைச் சுற்றி வளைத்ததால் ஆத்திரமடைந்த மங்கலம், இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தாள்.
அதைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
“யாராவது குறுக்கே வந்தீங்கன்னா சுட்டுத் தள்ளிடுவேன்!” என்று மிரட்டினாள்.
துப்பாக்கியைக் கண்டு பயந்த ஊர் மக்கள் வேறுவழியின்றிப் பின்னால் நகர்ந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மங்கலத்தின் ஆட்கள், முல்லையையும் நிலாவையும் இரண்டு குழந்தைகளையும் அவசரமாகக் காரில் ஏற்றினர்.
அனைவரும் காருக்குள் ஏறியதும் மங்கலம் கடைசியாக ஒருமுறை அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் காரில் ஏறினாள்.
அடுத்த நொடியே கார் வேகமாக அங்கிருந்து கிளம்பியது.
துப்பாக்கி மிரட்டலால் செய்வதறியாமல் நின்ற கண்ணம்மா, கார் கண்ணிலிருந்து மறைந்ததும் உடனடியாகக் கதிருக்குத் தகவல் தெரிவிக்க முயன்றார்.
ஆனால், மங்கலம் அதற்குள் முல்லை, நிலா மற்றும் இரண்டு குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, முக்தா சொன்ன இடத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தாள்.
—
அதே நேரம்… மருத்துவமனையில்…
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தான் கதிர்.
கீதாவுக்குத் தீவிர சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர்கள். அருகில் நின்றிருந்த கந்தனும் கதிருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
“கந்தா… சித்திக்கு ஒண்ணும் ஆகாது இல்ல?” என்று கலங்கிய குரலில் கேட்டான் கதிர்.
“ஒண்ணும் ஆகாது கதிர். நீ தைரியமா இரு. டாக்டர்கள் நல்லா பார்த்துக்கிட்டு இருக்காங்க. சித்தி சீக்கிரம் கண் விழிச்சிடுவாங்க” என்று அவனுக்கு ஆறுதல் கூறினான் கந்தன்.
இங்கே, மருத்துவமனையில் கீதாவின் உடல்நிலைக்காகக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த கதிருக்கும் கந்தனுக்கும், தங்களுடைய வீட்டில் நடந்த கொடூரமான கடத்தலைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.
ஒருபுறம் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கீதா…
மறுபுறம் முக்தாவின் சதிவலையில் சிக்கியிருக்கும் முல்லை, நிலா மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகள்…
இந்த ஆபத்திலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வரப்போகிறார்கள்?
– தொடரும்… 🕊️
5 comments
Sema super.. ❤️.intha கந்தன் ரொம்ப நல்லவர் போல 😂.. கீதா ma mass 🔥..
ஐயோ என்ன இப்படி ஆகிவிட்டது ரெண்டு பேரையும் எப்படி காப்பாத்துவது
Ada super skkkk
கதையில் திருப்புமுனை இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை..
இப்படி நடந்து விட்டதே…
முல்லை, நிலா மற்றும் குழந்தைகளுக்கு எந்த விபரீதமும் நடந்து விட கூடாது…
Ud arumai SK❤️. Viru viruppa irunthathu, KM nijamave Kathal le vilundhutanga, lovely. Aiyo chitti pavam. Oh my goodness ippidi Mullaipoo Nila kozhanthaigal yellam Mangalam kitte maativitingale nyayama?