Stories that touch hearts

Home  /  22. நதி (நதிபோகும் கூழாங்கல்)  /  Chapter 12

CHAPTER 12

நதி – 12

By Nadhi · November 3, 2026

0

இருக்கும் ஆயிரத்து எட்டு பிரச்சனைகளையும் தாண்டி மனோதீரனுடன் செல்லும் முடிவை எடுத்துவிட்டாள் பிருந்தா.

நல்லதா கெட்டதா தனக்கு இது வேண்டுமா வேண்டாமா என இன்னுமே அவளுக்கு தெரியவில்லை.

தீரனின் பேச்சைக் கேட்டு தான் அவள் முடிவும் கூட. அவன் பேச்சிற்கு சம்மதம் என்ற அளவில் தான் அவள் முடிவு இருந்தது.

இன்னும் கடந்து வந்த பாதைகளை மறக்க முடியவில்லை.

கூடவே விசாலாட்சியோடு தான் இங்கேயே இருந்திட முடியும் என்றும் தோன்றவில்லை.

எதுவும் நடக்கட்டும். மனது ஓரிடத்தில் சமனில்லாத போது தனக்கு சாதாகமாய் ஒருவர் வந்து நின்றால் அவர்களிடம் தானே செல்லும்.

அப்படி எடுக்கப்பட்டது தான் தீரனுடன் செல்லும் முடிவும்.

தீரன் தூங்கி விழிக்கும் பொழுதே கேள்வியாய் மனைவியைப் பார்த்தபடி தான் எழுந்திருந்தான்.

அதுவும் அவன் உறங்கியும் கூட இவள் வெளியில் எல்லாம் செல்லவே இல்லை. விசாலாட்சிக்கு பயந்தே என்றாலும் கூடவே யோசனைகளும் என செல்லத் தோன்றவில்லை.

இப்பொழுது எழுந்ததும் அவன் பார்க்க, “நான் உங்களோடவே வர்றேன். இங்க யாருக்கும் தொல்லையா நான் இருக்க வேண்டாம். கூட்டிட்டு போங்க!” என்றாள் அவனிடம்.

“குட்!” என்றவன்,

“இங்கே இருந்தாலும் தப்பில்ல. நீ தொல்லையும் இல்ல யாருக்கும். என் வைஃப் நீன்னா உனக்கு இங்க எப்பவும் உரிமையும் இருக்கு. ஓகே! அதெல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவாகிட்டு பேசுவோம்!” என்றவன் சொல்லில் தலையாட்டிக் கொண்டாள் பிருந்தா.

கொஞ்சமே தெளிந்து வந்தளிடம் முழுதாய் எதுவும் கூறிவிட முடியாதே என்று அத்தோடு வெளியில் அழைத்து வந்தான் அவளை தீரன்.

“சாப்பிட போறியா இல்ல இன்னும் அப்புறம்னு தான் சொல்ல போறியா?” என அவன் கேட்ட பின் தான் வேகமாய் சமையலறை சென்றாள் பிருந்தா.

மகனை கொஞ்சம் வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தார் ஹாலில் இருந்த விசாலாட்சியும்.

“இப்போ எப்படி இருக்கு டா? நல்லா தூங்குனியா?” என தன் அருகில் வந்து அமர்ந்த மகனிடம் விசாலாட்சி கேட்க,

“ம்ம் ஓகே தான் ம்மா!” என்றவன்,”அப்பா எங்க?” என்றான்.

“வர்ற நேரம் தான். மதியமே வந்தாங்க. நீ வந்ததை சொன்னேன். தூங்குறான்னு சொல்லவும் வெளில போனாங்க!” என்ற விசாலாட்சி பிருந்தா உணவுடன் சென்று டேபிளில் அமர்வதைகண்டார்.

தீரனும் பார்க்க, ‘சாப்பிடு!’ என்பதாய் அவன் தலையசைக்கவும் இவளும் திரும்பிக் கொண்டாள்.

“என் மனசுக்கு ஒருமுறை தப்பா பட்டுச்சுன்னா அது சரியா இருக்கும். உனக்கு தான் நான் சொன்னது புரியவே இல்ல” என மெதுவாய் பேச்சை ஆரம்பித்தார் விசாலாட்சி.

பிருந்தாவிற்கு மறைத்து பேச எல்லாம் அவர் நினைக்கவே இல்லை. அவளுக்கும் கேட்கும் என தெரிந்தாலும் கேட்கட்டும் என்றே அவர் பேச, தொண்டைக்குள் உணவு இறங்கும் முன் அத்தனை சீரற்ற சுவாசம் அவளிடம்.

“என்ன ம்மா?” என தீரன் சாதாரணம் காட்டி கேட்க,

“அதான்! வேறென்ன நான் சொல்ல போறேன்? எல்லாம் உன் கல்யாணம் தான்!” என்றவர் மகன் முகபாவத்தையும் கவனிக்க, அவன் முதலில் பெரிதாய் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

“உனக்கு உடம்பு சரி இல்லையேன்னு தான் நான் போன் பண்ணல. இங்க என்னலாம் நடந்துச்சு தெரியுமா?” என சொல்லி நிலா கூறியதையே இவருக்கு ஏற்ற விதமாய் கூறினார் விசாலாட்சி.

“எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த சண்டை சச்சரவும் இல்ல தீரா. நீ வேணா அவகிட்டயே கேட்டு பாரு!” என்றவர்,

“ஆனா இப்போ எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரும்னே தோணல. என்னவோ எல்லாம் தப்பா இருக்கு!” என்றதும் பாவமாய் கணவன் பக்கம் திரும்பினாள் பிருந்தா.

“சாப்பிடு!” என இம்முறை வாயை திறந்து கண்டிப்புடன் தீரன் கூறவும் தான் அவனும் கவனிப்பதைக் கண்டு திரும்பிக் கொண்டாள்.

“எனக்கு மட்டும் இல்ல. அவளுக்கே தெரியுது அவ எப்படினு!” என்றதும் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது பிருந்தாவிடம்.

“அவளே எல்லாத்துல இருந்தும் ஒதுங்கிக்கிட்டா. அப்போ அதானே அர்த்தம்? இப்படியே எத்தனை நாளைக்கு என்னனு இருக்க முடியும் நாம? இப்படியா ஏமாத்தி கல்யாணம் பண்ணி வைப்பாங்க? அதுவும் ரெண்டாங்கல்யாணம்!” என்று சொல்லவும்,

“எனக்கும் தானே ம்மா?” என்றவனிடம் ஏற்பட்ட இறுக்கத்தை கவனியாதவர்,

“அதுக்காக எல்லாத்தையும் எப்படி சக்கிச்சுட்டு போக? ஏற்கனவே பட்ட பாடு போதாதா? அதுவும் நான் எந்த பிரச்சனையும் இதுவரை அவகிட்ட பண்ணல. எனக்கு பிடிக்கவும் செஞ்சது!” என இறுதி வார்த்தையை தயங்கியே கூறியவர்,

“கல்யாணத்துக்கு முன்னாடி இவ்வளவு நகையும் பணமும் போடுறோம்னு சொல்லி ஏமாத்தும் போதே நான் உஷாரா இருந்திருக்கணும் இவ்வளவு இருக்குன்னு அப்போ தெரியாம போச்சு!” என்றார்.

“இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? அதுக்குன்னு இப்படி ஒருத்தியோட, நீ அங்கேயும் அவ இங்கேயும் வீட்டுக்குள்ளனு என்னனு வாழ?” என்று சொல்லவும் பிருந்தாவும் சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டவள் சமையலறை செல்ல,

“நானும் அதை தான் யோசிச்சேன் ம்மா!” என்றான் தீரன்.

“இப்பாவாச்சும் அறிவு வந்துதே!” என அத்தனை சந்தோசம் நொடியில் விசாலாட்சிக்கு.

“என்னனு நான் அங்கயும் அவ இங்கேயும் வாழ? அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைனா இன்னும் கஷ்டம்!” என்ற மகனை கொஞ்சம் நிம்மதியாய் விசலாட்சி காண,

“அதனால நான் பிருந்தாவை சென்னை கூட்டிட்டு போறேன்!” என சொல்லில் வாயடைக்க வைத்துவிட்டான் தீரன்.

“தீரா! நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்னு புரியுதா இல்லையா உனக்கு?” என விசாலாட்சி கேட்க, சமையலறையில் இருந்து வெளிவந்து நின்றாள் பிருந்தா.

“புரியுது ம்மா!” என்றவன்,

“இப்போ பிருந்தா எதாவது உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி பேசினாளா?” என்று தீரன் கேட்க, புரியாமல் பார்த்தனர் இருவருமே அவனை.

“இல்ல நான் இந்த வீட்டு மருமக. இப்படி தான் இருப்பேன்னு உங்ககிட்ட சண்டைக்கு வந்தாளா?” என்று அவன் கேட்கவும் என்னவோ புரிவதை போல இருந்தது விசாலாட்சிக்கு.

“அப்பாக்கு உங்களுக்கு சாப்பாடு தராம.. அப்படி எதாவது? இல்ல நிலாகிட்ட நாத்தனார் சண்டை?” என்றவன் பேச்சில்,

“அவ வந்து முழுசா ஒரு மாசம் ஆகல. என்ன பேசுத நீ? நான் சொல்றது கொஞ்சமுமா உன் காதுல ஏறல?” என்ற விசாலாட்சிக்கு மகன் அவளுக்கு பரிந்து வருவது நன்றாய் புரிந்தது.

“நான் இவகிட்ட சொன்னேன். தூங்க போறான் அவனை தொல்லைப் பண்ணாதன்னு. நான் அந்த பக்கம் போகவும் இவளுக்கு உன்கூட உள்ள ரூம்குள்ள பூந்துகிட்டா. அப்போவே சந்தேகம் தான். என்ன! இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை வில்லியாக்கிட்டாளா?” என விடாமல் பேசிய விசாலாட்சி,

“எங்க இந்த ரெண்டு வாரத்துல அவகிட்ட எதாவது நான் சண்டைக்கு நின்னேனானு கேளு. முழுசா நாலு நாள் வேணா அவ சமைச்சிருப்பா. மித்ததெல்லாம் நான் தான் பண்ணினேன். சொகுசா இருந்துட்டு நல்லா உன்னை ஏத்தியும் விட்ருக்கா பாரு நீ வந்ததும்!” என இப்பொழுது அத்தனை வேகமாய் பேசினார் விசாலாட்சி.

சுவற்றைப் பிடித்துக் கொண்டு அத்தோடு ஒன்றி நின்றிருந்தாள் பிருந்தா.

“இங்க நடந்ததை எல்லாம் சொன்னது பிருந்தா இல்ல நிலா!” என்று தீரன் சொல்லவும் விசாலாட்சி இறுக்கம் தளர்த்தி மகனைப் பார்க்க, பிருந்தாவும் கேள்வியாய் பார்த்தாள் கணவனை.

“என்ன பண்ணி வச்சிருக்கீங்க? இது வீடா இல்ல சந்தையா?” என்ற தீரன்,

“யாரோ சொன்னாங்கனு நீங்க பிருந்தாவை ஒதுக்கி வச்சது தப்பில்லயா ம்மா? அதை சொல்ல மறந்துட்டீங்களே!” என்றான்.

கொஞ்சமும் அவரின் மேல் தப்பே இல்லை என்பதை போல தான் விசாலாட்சியும் பேசி இருந்தார்.

“பிருந்தா சொன்னா தப்பு. அப்போ நிலா சொன்னா?” என்று தீரன் கேட்க,

“அவளுக்கு என்ன தெரியும்? அவ அரைகுறையா சொன்னதை கேட்டுட்டு என்னை எதிர்த்து நிக்குற நீ?” என அன்னையும் பேச, தலையால் சுற்றியது பிருந்தாவிற்கு.

“நிலா மட்டும் இல்ல அத்தான் என்னை கொஞ்சமும் முக தானம் பார்க்காம கண்டபடி கேட்டார். அதுவும் உங்களால. அப்போ தெரிஞ்சது எனக்கு என் தப்பு!” என சொல்லியவன்,

“உனக்கு எல்லாம் சொல்லி தான டா கட்டி வச்சேன் ஏன் அவளை கொடுமைப்படுத்துறீங்கனு மட்டும் தான் கேட்கல. மத்தபடி உசுரை உடம்புல இருந்து உருவுற மாதிரி இருந்தது அவர் கேட்ட கேள்வி!” என்றவன் குரல் அத்தனை உயர்ந்திருந்தது.

“இப்போ உங்க நினைப்பு என்ன? இவளோட நேரம் சரி இல்ல. அதனால எனக்கும் உடம்பு சரி இல்லை. அப்போ பிரிச்சு வச்சிருவீங்களா? வச்சிட்டு?” என்றவன் சொல்லில் விசாலாட்சி இத்தனை கோபத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை.

“ரெண்டாவது கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். பண்ணியே ஆகணும்னு பொண்ணு பார்த்தது நீங்க தான? அதை தான நானும் கட்டிருக்கேன். அவளை இத்தனை நாளுல இப்படி தள்ளி வச்சு கொடுமைப்படுத்தினா அவளே தான் நான் வேண்டாம்னு போயிருவா. அடுத்து? இன்னொரு பொண்ணு பார்ப்பீங்களா? அவளும் சரி இல்லைனா?” என்றவனின் சரமாரியான தாக்குதலில் பிருந்தாவும் கொஞ்சம் அரண்டு தான் நின்றாள்.

“நான் கேட்ட மாதிரி அவ உங்களை சண்டைக்கு இழுந்திருந்தாளோ இல்ல சாப்பாடு தரலைனாலோ தான் அவகிட்ட பிரச்சனை. நேரம் சரி இல்ல ஜாதகம் சரி இல்ல ராசி சரி இல்லைனு எனக்கு உடம்பு சரி இல்லாத்துக்கெல்லாம் அவ என்னம்மா பண்ணுவா?” என்றவன் குரலில் பிருந்தாவிற்கு மீண்டும் அழுகை வரும் போலானது.

“எதுக்கு இந்த வம்பு. அவ்வளவு தான் கட்டி வச்சாச்சு இல்ல? ஒருத்தி என்னை விட்டு தொலைஞ்சு போனாளே! அதே மாதிரி இவளும் என்னை டார்ச்சர் பண்ணினாலும் பரவால்ல. நானாச்சு அவளாச்சுன்னு நான் சென்னைல வச்சே பாத்துக்குறேன். ஆனா நல்லா சொல்லி தந்துட்டீங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனைல இடையில யாரையும் விடக் கூடாதுன்னு!” என்றவன் பிருந்தா கைபிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்று வண்டியிலேறி திரும்பி பிருந்தாவைப் பார்க்க, விசாலாட்சியும் அதிர்ந்து நின்றவர் வெளிவந்து பார்த்துக் கொண்டு தான் நின்றார்.

“இப்படியே சென்னை போற ஐடியா எனக்கு இல்ல. வெளில போகனும் வண்டில ஏறு!” என அதையும் அவன் கோபத்துடன் சொல்ல, சட்டென்று வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் பிருந்தா.

அத்தனை பொறுமையாய் மகனிடம் பேச காத்திருந்த விசாலாட்சிக்கு மகனின் இந்த தடாலடியான கோபம் ஒருவித அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது.

இவ்வளவு கோபத்தை அதுவும் குடும்பத்திடம் என காட்டியதே இல்லாதவனின் பேச்சு அத்தனை அதிர்ச்சியோடு இதோ இத்தோடு முடியுமா என்ற கேள்வியையும் கொடுத்தது

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!