Stories that touch hearts

Home  /  அவன் பெயர் அக்பர் (பா.ஹேமமாலினி)  /  Chapter 16

CHAPTER 16

அத்தியாயம் – 17, 18

By Sorna Sandhanakumar · November 1, 2026

0

அத்தியாயம் – 17

நதி மீது விழுந்த பச்சிலையைப் போல சுற்றித் திரிந்த அதே நாள் இன்னொரு ஆனந்தமான அதிர்ச்சியைக் கொடுத்தார் அவர். ஒரு ரீல்ஸ் கருத்துப்பெட்டியில் ஜோதாவின் ஐடியை ஒட்டி அருகில் கருப்பு நிற இதயத்தைப் போட்டிருந்தார். அந்த ரீல்ஸில் “உங்களுக்கு பிடித்த நண்பரை டேக் செய்து அன்பை வெளிப்படுத்தவும்“ என்று எழுதப்பட்டு அதற்கேற்ற பாடல் இசைத்தபடி இருந்தது. அதைக் கண்டதும் அவர் கருத்திற்காக இவள் ஒரு இதயத்தைக் கொடுத்தாள்.

அவளுக்காக அவர் குறிப்பிட்டிருந்த அதே கருப்பு நிற இதயம், அவர் ஐடியில் குறிப்பிட்டிருந்த “அல்ஹம்துலில்லாஹ்” என்கிற வார்த்தைக்கு அருகிலும் போட்டிருந்தார். அது அவளை தனித்துவமாக நினைக்க வைத்ததோடு அவருடைய அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

பார்த்துப் பேசிய மறுநாளே ஒருவருக்கு ஒருவர் இதயத்தை மாறி மாறிக் கொடுத்துக் கொண்டார்கள். இதயம் பகிர்தல் இணையதளமாக இருந்தால் என்ன? இயல்பான வாழ்கையாக இருந்தால் என்ன? பிடித்தவருக்குக் கொடுப்பதில் என்றும் பேரானந்தமே!.

இணையதள வாசிகளுக்கு இதயம் கொடுப்பது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். பார்ப்பது எதுவாக இருந்தாலும், அதைப் பதிவேற்றியிருப்பது யாராக இருந்தாலும், தனக்குப் பிடித்திருந்தால் இயத்தைக் கொடுத்து தன் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். ஆனால், ஜோதாவும் அக்பரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை.

அக்பருக்கு பெரும்பாலும் அதில் சுற்றித் திரிய நேரம் கிடைக்காது. கிடைத்த நேரத்திலும் ஜிம் சம்மந்தப்பட்ட பதிவுகளை மட்டுமே பார்ப்பார். அதுவும் அவருக்குத் தேவை இருந்தால் மட்டும்தான். ஜோதா எப்போதாவது இன்ஸ்டா பதிவுகளைச் சுழற்றுவது உண்டு. பார்த்து ரசிப்பாளே தவிர தன் சுய விருப்பத்தையோ கருத்தையோ தெரிவிக்க விரும்ப மாட்டாள்.

இருவருமே இணையதளத்தில் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளாத நபர்கள்.
இருவருக்கும் இடையில் இருக்கும் ஒரே இணைப்பு இணையதளம் மட்டும்தான்.

ஒருவருக்கு ஒருவர் தங்களின் வெறுப்பு விருப்பங்களையும் வாழ்க்கை முறையையும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். மூன்று நாட்களுக்கு மேலாக எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லாமலே ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டார்கள்.

ஜோதா அக்பருக்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும், அக்பர் ஜோதாவிற்கு மட்டும் காட்டும்படி ஸ்டோரி வைப்பதும் ஒருவருக்கொருவர் தெரியாது. இந்த ரகசியம் அவர்களுக்கு இடையில் உடைந்து மிளிர காலம் எடுத்துக் கொண்டது.

விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்குச் சென்றாள் ஜோதா. அவளுக்கு அவர் நினைவைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமலே கார் ஜன்னல் வழியே காணும் இடங்களில் எல்லாம் அவரோடு பேசி, சிரித்து, கைகோர்த்துச் சுற்றி திரிந்தாள். கொடைக்கானலில் சுற்றுப்பயணம் வந்த வெளியூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுங்கச் சாவடியை விட்டு ஒவ்வொரு வண்டியாய் வெளியேற அதிக நேரம் ஆனது.

போக்குவரத்து நெரிசலில் ஜோதாவின் காரும் சிக்கியது. சுங்கச் சாவடிக்கு முன்னிருக்கும் வெள்ளிநீர் வீழ்ச்சியில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கொடைக்கானல் என்றால் காதல் ஜோடிகளும் புதிதாய் திருமணமான ஜோடிகளும் புகை சூழ்ந்த சாலையில் கைகளைப் பிடித்துக்கொண்டு பழைய இளையராஜா பாடலில் வரும் காதல் நாயகனும் நாயகியுமாய் உலாவுவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த அழகான காட்சி காதல் மீது ஒரு நம்பிக்கையை நம் மேல் சிந்திவிட்டுச் செல்லும்.

வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு அருகில் இருந்த ஒரு தள்ளு வண்டி டீக்கடையில் ஒரு இளம் ஜோடி நின்றிருப்பதை ஜோதா கவனிக்கிறாள். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த பயணக் களைப்பு ஜோதாவின் பார்வையை அவர்கள் மீது நிலைநிறுத்தியது. மலைப் பகுதிகள் பெரும்பாலான நபர்களுக்கு ஒப்பாது. பாதை வளைந்து நெளிந்து இருப்பதால் குமட்டலை ஏற்படுத்திவிடும். அதே நிலையில்தான் அந்தப் பெண்ணும் தானாக நிற்க முடியாமல் தன் கனவனின் இடுப்பைத் தன் கையால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இருவரும் ஏற்ற ஜோடியாக இருந்தார்கள். கனவன் தன் மனைவிக்கு அந்த தள்ளுவண்டிக் கடையில் டீ வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு அவளைக் குடிக்கச் சொல்லி அன்புத் தொல்லை செய்கிறான். அவள் அதைக் குடிக்கும் நிலையில் இல்லாததால் மறுக்கிறாள்.

உடனே தன் கையில் இருந்த கோப்பையை அவள் உதட்டில் வைத்து, தலையைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டான் கணவன். டீ அவள் அனுமதி இன்றி தொண்டையில் இறங்கி இதயம் வரை பயணிப்பதை, ஜோதா ஓரக்கண்ணாலே பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டாள்.

முகம் தெரியாத யாரோ ஒருவர் காதலிப்பதைப் பார்த்தாலும் தன் ஆசைக்குரிய ஆணைக் கண் முன்னே நிறுத்தி ஏக்கத்தை மூட்டுவதே இந்த கொலைகாரக் காதலுக்கு வேலை.

கனவுலகில் அக்பரும் அவளும் டீக்கு பதிலாக காஃபி குடித்துவிட்டு சுண்டல் வாங்க நகர்ந்தார்கள். காரும் நெரிசல் விலகி நகர்ந்தது. நீண்ட பயணம்தான் அவர் நினைவோடு கொஞ்சிக் கொண்டிருந்ததால், சீக்கிரம் முடிந்துவிட்டது அவளுக்கு.

மனதில் எதையும் வைத்துக் கொள்ளத் தெரியாத ஜோதா விடுதிக்குள் நுழைந்து, அவள் அறைத் தோழிகளைக் கண்ட அடுத்த நொடியே “அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?“ என்று மொத்தக் கதையையும் அவிழ்த்துவிட ஆரம்பித்தாள்.

“
ஆம்பளைங்கன்னா அது, இது, அப்படி இப்படினு என்னென்னவோ சொன்னீங்க. நான் எந்த பிரச்சனையும் இல்லாம ரொம்ப பாதுக்காப்பா வீட்டுக்கு போனே. ஏன் தெரியுமா? நான் ஒரு ஆம்பள பக்கத்துல உக்காந்து போனே“ என்று சொல்லிக் காலரைத் தூக்கிவிட்டாள்.

தோழிகள் இவள் பேசியதைப் பார்த்து திருட்டு முழி முழித்ததோடு மட்டுமல்லாமல் திட்டவும் செய்தார்கள். யாரென்று தெரியாத ஆள் அருகே அமர்ந்து செல்வதே ஆபத்து. அவரிடம் பேசினேன் என்று வேறு பீத்திக் கொள்கிறாய். சொல்லி தானே அனுப்பினோம். சொல்லியதற்கு எதிர்மறையாகத்தான் செய்வேன் என்று அடம்பிடித்து ஆடினால், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று ஆளுக்கொரு கருத்து பேசினார்கள்.

காதல் கண் மறைத்த கதாநாயகிக்கு அவர்கள் பேசியதெல்லாம் காதில் கூட விழவில்லை.

உலகில் உள்ள எல்லா ஆண்களும் ஒரே குணம் படைத்தவர்கள் என்று தீர்மானிக்கும் உரிமை நமக்கு இல்லை.

ஒவ்வொரு கருத்துமே ஏதோ ஒரு அனுபவத்தினால்தான் வெளிவருகிறது. அனுபவமும் குணத்தைப் போன்றே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். எனக்கு நடந்ததும் நான் அனுபவித்ததும் நீங்கள் பேசுவதற்கெல்லாம் அப்பாற்பட்ட உயர்ந்த ஒன்று என்று பொலிவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவள் முகத்தில் தெரியும் தெளிவு தோழிகளை ஆச்சர்யப்படுத்தியது. இவ்வளவு உறுதியாகப் பேசுகிறாள் என்றால், எதாவது சுவாரஸ்யமான நிகழ்வு நடந்திருக்கும் என்று தோழிகள் கதை கேட்கும் கட்டத்திற்குள் புகுந்தார்கள்.

பேசித் தீர்க்க ஆள் தோடிக் கொண்டிருந்த நாயகிக்கு நல்ல வேட்டை. அறையில் இருந்த நான்கு தோழிகளில் மலர் மட்டும் அவள் மனதைப் புரிந்துகொண்டு இடையில் கேள்வி கேட்டும், உண்மையா?, அப்படியா? என்று பேசி ஒத்துழைத்தாள். மற்ற மூவரும் கன்னத்தில் கைகொடுத்துத் தாங்கி தலைசாய்த்துப் பூத்த சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“
ஹேய் உன் கிட்ட ரிசர்வ் டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டாரே அவர் பக்கத்துலயா உக்காந்த?. அப்படி பண்ணிருந்தீனா, பாத்த எல்லாருமே வேற மாதிரிதான் நெனச்சிருப்பாங்க”

“
பக்குறவங்க ஆயிரம் நினைக்கட்டும் பழகுறவங்களுக்குதான்டி உண்ம தெரியும்”

“
என்ன வசனமெல்லாம் பயங்கரமா இருக்கு. அப்போ அவரேதான்”

“
ஆமாடி அவருதான்”

இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க மற்ற தோழிகள் “யார பத்திடி பேசுறீங்க?” என்று சச்சரிக்க, “இதோ இவரப் பத்திதான்” என்று ஜோதா தன் செல்ஃபோனில் அக்பருடையா இன்ஸ்டா பக்கத்தை எடுத்துக் காட்டினாள்.

“
ஹே யாருடி இந்தப் பயன் செம்மையா இருக்கான்” என்று அனைவரும் வாயைப் பிளக்க, “அவன் இவன்னு பேசாதீங்கடி, இனிமே இவரு உங்களுக்கெல்லாம் அண்ணா” என்று ஜோதா சொல்ல, “ஓஹோ” என்று இழுத்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“
எண்ணம் போல வாழ்க்கை” சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?. மனுஷங்கள நம்பனும்டி என்று ஆரம்பித்து பேருந்து நிலையத்தில் அவளை முதன் முறை பார்த்ததிலிருந்து ஆரம்பித்து, இன்ஸ்டா ஐடி வாங்கியதைத் தொட்டு, கடைசியாக பாய் சொல்லி விடைபெற்றது வரை சொல்லி முடித்தாள். அவளது தோழிகள் கண் கொட்டாமல் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதா மிகவும் ரசனையானவள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேச மாட்டாள். அவளது பேச்சில் எப்போதும் ஒரு கவித்துவம் இருக்கும்.

ஒரே விஷயத்தை பல முறை சொன்னாலும் வேறு வார்த்தைகளில் புதுவித புரிதலோடு பேசுவாள். கேட்பவருக்கு இதை இப்படிக் கூட எடுத்துக் கொள்ளலாமா? என்று வியப்பாக இருக்கும்.

அன்று இரவு முழுக்க அவரைப் பேசித் தீர்த்தாள். “போதும்டி மணி பத்து ஆச்சு. படுங்க எல்லாரும் நாளைக்கு காலேஜ் போகனும்” என்று மலர் சொல்ல அறையின் விளக்கு அணைந்து அரங்கம் அமைதியானது.

இருள் சூழ்ந்த அந்த அறையின் அடர் கருப்பில் ஒளிரும் மின்மினிப் பூச்சியாய் வெட்கத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தாள் ஜோதா. செல்ஃபோன் திரை வெளிச்சம் முகத்தில் பட, நாணமுற்று நகத்தை கடித்தபடியே விழித்துக் கிடந்ததற்குக் காரணம் அக்பர் அனுப்பிய குறிஞ்செய்திதான். அவள் எப்படி அவளது தோழிகளோடு அவரைப் பற்றி பாடிக் கொண்டிருந்தாளோ, அதே போலத்தான் அவரும். “இன்று மதியம் என் நண்பனைச் சந்தித்தேன். அவனிடம் உன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து ரசித்தபடியே “அப்படியா? சரி இரவு உணவு முடிந்ததா? ஜிம்மில் இருந்து வீடு திரும்பியாச்சா?” என்று கேட்டாள். அதற்கு அவர் பதிலளித்ததும் அடுத்து என்ன பேசுவது என்றும் தெரியாமல், தூங்கவும் முடியாமல் அப்படியே  இருந்தார்கள் இருவரும்.

எப்படித் தூங்கினாளோ தெரியவில்லை மறுநாள் ரொம்ப நேரம் கழித்துதான் எழுந்தாள். வகுப்பிற்குச் சென்ற பிறகும் கூட தூங்கி வழிந்தாள். காதலில் விழுந்த பெண்கள் வகுப்பில் உறங்கி வழிவதைக் கேளி செய்த அவளே அதைச் செய்யும் போது அனைவரும் அவளை நோக்கி வார்த்தைப் போர் தொடுத்தார்கள்.

இப்படித்தான் அவள் காதலை அக்பரைத் தவிர மற்ற அனைவரிடமும் சொல்லி சிலாகித்தாள் ஜோதா.

அத்தியாயம் – 18

அடுத்து என்ன நடந்ததென்று நாளை வீடியோவில் பார்க்கலாம் என்று சொல்லிக் காணொளியை முடித்தான் ஆதி. அன்றைய நாளுக்கான வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டு, யாமினிக்கு குட் நைட் மெசேஜ் செய்துவிட்டு எந்த வித மனக்கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கச் சென்றான் ஆதி.

ஆதி இறக்கி வைத்ததை விட அதிக கனத்தை ஜோதி சுமக்கிறாள் என்று ஆதிக்குத் தெரியாது.

மயக்கத்தில் இருந்து எழுந்து தன் கணவனின் வருகைக்காக காத்திருந்த ஜோதி இழப்பினை நினைத்துத் துடிதுடித்தாள். அவள் தவிப்பை நீட்டிக்கும் வகையில் தன் கனவனும் “நான் வர கொஞ்சம் லேட் ஆகும்மா. நீ சாப்பிட்று வெயிட் பண்ணாத“ என்று அழைத்துச் சொல்லிவிட்டார்.

செய்வதறியாது இருந்த ஜோதி, யாமினியையும் சிபியையும் சாப்பிட வைத்து உறங்கச் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள். அவர் சொன்னதை விட ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தார்.

வீட்டிற்குள் நுழையும்போதே, அவர் முகத்தில் ஜீவன் இல்லை. பிரச்சனையில் சிக்கியது போன்ற படபடப்பில்தான் வீடு வந்து சேர்ந்தார்.

அவரிடம் சொல்ல இது சரியான சுழலா? இல்லையா? என்ற சந்தேகத்திலே அவருக்கு இரவு உணவு பறிமாறினாள்.

“
நீ சாப்பிட்டியா? “

“
சாப்பிட்டேங்க“

“
பசங்க? “

“
அவங்க சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க“

“
ம்ம்ம் சரி. ஆதி? “

“
ஃபோன் பண்ணான் பேசுனேன்“

“
சரிமா“

இருவரும் தனிமையில் இருக்கும் போது ஆசையோடு கதை கதையாய்ப் பேசும் ஜோதியிடம் இருந்து கேள்விக்கு மட்டும் கிடைக்கும் பதிலை வைத்து ஏதோ நடந்திருக்கிறது என்று கணித்தார்.

அவளிடம் கேட்டால் உடனே சொல்லிவிட மாட்டாள். அதே நேரத்தில் எதையும் அவரிடமிருந்து அவளுக்கு மறைக்கத் தெரியாது என்று ஜோதியின் கணவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் எதையும் கேட்டுக் கொள்ளாமல் கிடப்பில் தள்ளினார்.

அவர் உணவு உண்ணு முடித்ததும் இருவரும் உறங்கச் சென்று விட்டார்கள். பெரும்பாலன இரவில் பெரிய இடைவெளியில் கட்டிலின் ஓரங்களில் படுத்திருக்கும் இருவரும் தங்களின் பழைய காதல் நினைவுகளால் நெருங்குவார்கள். அப்படியான இரவாக அன்று இல்லை. இருவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிரம்பி வழிந்தது.

விளக்கை அணைத்து அரை மணி நேரம் கழித்தும் ஜோதியின் கைவளையல் சத்தம் அவரின் காதுகளில் ஏதோ சோக செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த பாஷை அவருக்கு மட்டும்தான் புரியும்.

கண்ணீரால் தலையணையை நினைத்துக் கொண்டிருந்த ஜோதி வெளிச்சம் பட்டதும் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். தன் கணவன் கையில் தட்டுடன் நிற்பதைக் கண்டாள். அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் விடுபட்டு கன்னம் வழியாக வழிந்தது.

“
பசியோட படுத்தா உன் உடம்பு தாங்காது. எதுவும் பேசாம சாப்பிடு முதல்ல“ என்று சொல்லி தன் கையால் ஊட்டினார். வாயில் வைத்த உணவு முள்ளாய் தொண்டையை குத்தி உள்ளே செல்ல மறுத்தது, போதும் என்றாள். சாப்பாட்டு விஷயத்தில் அவள் என்ன பிடிவாதம் செய்தாலும் அவளது கணவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு முடித்தாள்.

“
சொல் பேச்சே கேக்க மாட்டின்ற வர வர. உனக்குதான் உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்குல. உனக்கு ஒவ்வொரு முறையும் தடவிக் கொடுத்து சொல்லிகிட்டே இருக்கனுமா?. குழந்தையா நீ?. சாப்பிடாம இருக்குற அளவுக்கு அப்படி பெரிய விஷயம் நடந்துருச்சு?”

“
ஒன்னும் இல்லங்க நீங்க வந்த உடனே விஷயத்த உங்க கிட்ட சொல்லிடனும்னு காத்திருந்தேன். ஆனா நீங்க வழக்கத்த விட லேட்டா வந்தது மட்டுமில்லாம பாக்க ரொம்ப டென்ஷனா வேற தெரிஞ்சீங்க. அதான் நான் எதுவும் காட்டிக்காம விட்டுட்டேன்“

“
என்ன காட்டிகல?. நீ சத்தமில்லாம அழுகுற அழுக என் காத கிழிக்குது ஜோதி. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நம்ம ஜிம்முக்கு புது மிஷன்ஸ் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்குனு சொன்னேன்ல அதப் பத்திதான் சுரேஷ் கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன் சில கம்பெனி ஃபோன் நம்பர் கொடுத்தான். அதான், கால் பண்ணி பேசிட்டு வந்தேன். ரொம்ப நேரம் அதே சிந்தனைல இருந்துட்டு வந்ததாலதான் பாக்க உனக்கு அப்படித் தெரிஞ்சிருக்கு. நீ எதுவும் மனசுல எடுத்துக்காத”

“
சரிங்க”

“
ம்ம் சரி இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை? “

“
இது பிரச்சன இல்லங்க பயம்“

“
சரி ஏதோ ஒன்னு. விஷயத்த சொல்லு ஜோதி“

தலையணையின் மேல் இருந்த செல்ஃபோனை எடுத்து ஆதி நடத்தும் யூடியூப் சேனலைத் திறந்து தன் கணவனின் கையில் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள் ஜோதி. அவரும் பயம் கலந்த ஆர்வத்தோடு ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சில மணி நேரம் கழித்து ஜோதியைப் போலவே சுருண்டு மடிந்தார். கை நடுங்கி செல்ஃபோன் கீழே விழுந்தது. ஆதி இரண்டாம் நாள் பதிவேற்றிய காணொளி அவர்களது அறையில் சத்தமாக ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சத்தத்தை விட அவர்களது மௌனமான அழுகுரலின் சத்தம் அழுத்தமாக இருந்தது.

தங்களது வலியைப் பேசித் தீர்க்க வார்த்தைகளின்றி தவித்த இருவரும் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்தினார்கள். “இந்தக் கதை முடியும் போது ஆதி நம்மல விட்டு போயிருவானாங்க? “ என்று உருக்கமாக கேட்டாள் ஜோதி.

“
பைத்தியக்காரி மாதிரி பேசாத. அவன் நம்ம புள்ள. நம்மள விட்டு எங்கையும் போக மாட்டான்“

“
எனக்கு பயமா இருக்குங்க“

“
சரி அந்த டைரி எப்படி அவனுக்கு கெடச்சது? “

“
அதாங்க தெரியல. பழைய வீட்டுல இருந்து இங்க மாறி வரும்போது காணாமல் போனது. எங்க வச்சேன்றதவே மறந்துட்டேன்“

“
நம்ம இங்க வந்தே பத்து வருஷம் ஆகிருச்சே. இத்தன வருஷம் கழிச்சு எப்படி அவனுக்குக் கிடச்சது? “

“
ஆதி ஒரு நாள் வந்து ஹாஸ்டல்ல நிறைய நேரம் சும்மாவே இருக்கேன். அந்த நேரத்த வீணாக்காம யூடியூப் சேனல் ஒன்னு ஸ்டார்ட் பண்றேன் அதுக்கு எனக்கு நல்ல ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேணும். நீதான் நிறைய கதை எழுதி வச்சிருப்பியே அத நான் யூஸ் பண்ணிக்குறேன்னு கேட்டான். நானும் சரி எடுத்துக்கோ பழைய பீரோலதான் எல்லாமே இருக்குனு சொன்னேன். எத எடுத்தானா என்னனு எனக்குத் தெரியாது. இப்போ பாத்த நெஞ்ச உலுக்குற மாதிரி உக்காந்து கத சொல்லிட்டு இருக்கான்“

“
உன்னோட நோட் புக் எல்லாம் அடுக்கி வைக்கும் போது அதையும் அதுக்குள்ளயே வச்சிட்டு மறந்திருப்ப ஜோதி”

“
இருக்கலாம்”

“
சரி எதுவரைக்கும் அதுல எழுதியிருக்க? “

“
சிபி பொறந்த வரைக்கும்தா எழுதியிருக்கேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் எழுதல. அப்புறம் வீடு மாறுனோம் நோட்டு காணம போச்சு“

“
சரி ஜோதி நீ எதுக்கும் பயப்படாத. அதெல்லாம் அவன் கண்டுபுடிக்க மாட்டான்“

“
இல்லங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உண்ம தெரிஞ்சா என் புள்ள மனசு என்ன பாடுபடுமோனு பயமா இருக்குங்க“

“
அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ எதுக்கும் பயப்படாத. நான் பாத்துக்குறேன்“

தன் கணவன் கொடுத்த நம்பிக்கையிலும் ஆறுதலிலும் அன்று இரவு தீராத பயம் சற்று குறைந்தது. இருவரும் கண் மூடினார்கள். ஆனால் உறங்கவில்லை.

இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த கதை இப்போது மூன்றாவது ஆளாக ஆதிக்கும் தெரிய வந்தது. இருவரின் மனநிலையையும் கடுமையாக பாதித்தது.

இந்தக் கதையின் பெரும் திருப்பு முனையே தான்தான் எனத் தெரியாமலே ஆதி இந்த உலகிற்கு கதை சொல்லிக்
கொண்டிருந்தான்.

அவன் நினைத்ததை விட வீடியோ மிகப் பிரபலமாக ஆரம்பித்தது. கருத்துப் பெட்டியில் விருப்பங்கள் அன்பு மழையாகப் பெய்து பெருகியது. ஒவ்வொரு நாளும் அவன் அடுத்த கதையை எப்படிக் கொண்டு செல்வான் என்கிற ஆர்வத்தில் பார்வையாளர்களும்  அதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்கிறார் பதற்றத்தில் அவனின் பெற்றோரும் இருந்தனர்.

பார்வையாளர்கள் மத்தியில் ஆதியின் கதை சொல்லும் காணொளி மிகுந்த வரவேற்பைப் பெற, அவனுக்கு இருந்த ஆர்வம் பல மடங்காக உயர்ந்தது. வீடியோ போடுவதில் முன்பைவிட முனைப்புடன் இருந்தான். இதற்கிடையில் யாமினியை பெரிதாக கண்டுகொள்ளாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான்.

ஆதியின் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தைபோல ஒரு இன்பமான வாழ்க்கைக்குள் நுழைந்த யாமினிக்கு, அந்த அன்பான குடும்பத்தின் மீது மரியாதை அதிகரித்தது. அந்த குடும்ப வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த மனநிறைவு, ஆதியை இன்னும் அதிகமாகக் காதலிக்க வைத்தது. அவளது அதிகபட்ச ஆசையே அவனுடன் ஒரு சில மணித்துளி செல்ஃபோனில் பேசுவதுதான். அந்த சந்தோஷத்திற்காக ஏங்கினாள்.

வகுப்பில் இருந்து விடுதிக்கு வந்ததும் அன்னைக்கான வீடியோவிற்குத் தேவையான கதைப் பகுதியை வாசித்துவிட்டு, இரவு உணவு முடிந்ததும் அம்மாவிற்கு அழைத்தான் ஆதி.

அம்மாவின் குரலில் இருக்கும் நடுக்கமும் பேச்சில் இருக்கும் மாற்றமும் அவனை அச்சுறுத்தியது.

“
உடம்புக்கு எதுவும் முடியலைனா சொல்லிருமா… சொன்னா நாங்க வருத்தப்படுவோம்னு நெனச்சு மறைக்காத  அது பெரிய பிரச்சினையில முடிஞ்சிரும்”

“
ஒன்னும் இல்லடா ஆதி. லேசா தல வலிக்குது அவ்வளவுதான்”

“
தல வலிச்சா போய் படுக்க வேண்டியதுதான… ஏன் கிச்சன்ல நின்னுட்டு கஷ்டப்படுற?. ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது”

“
யாமினி இருக்கும் போது ஏன்டா ஹோட்டல் சாப்பாடு சாப்பிடனும். அருமையா சமச்சிட்டு இருக்கா. எனக்கு எந்த வேலையும் இல்ல. துணைக்காக நின்னிருக்கேன் அவ்வளவுதான். என் பாரதத்தை எல்லாம் பங்கு போட்டு சுமந்துட்டு இருக்காடா”

“
வீட்டுக்கு வந்து ரெண்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இவ்வளவு பாராட்டா?. நானும்தான் கிச்சன்ல உனக்கு ஹெல்ப் பண்ணிருக்கேன். என்னையப் பாராட்டி பேசிருக்கியா?. பதிலுக்கு தோசக் கரண்டியாலதான் நாலு அடி அடிச்சிருக்க“

“
நீயும் யாமினியும் ஒன்னாடா?”

“
இல்லையா அப்போ?”

“
இல்லவே இல்ல”

“
ம்ம்ம் அப்போ வீட்ல நமக்கு மரியாத அவ்வளவுதானா?”

“
உனக்கெல்லாம் இதுவே பெருசுடா. சரி யாமினி கிட்ட பேசுறியா?”

“
இல்லமா வேணாம்”

“
சரிப்பா பாத்து கவனமா இரு. நாளைக்கு கால் பண்ணு”

“
ம்ம்ம் சரிமா”

அம்மாவிடம் பேசிய பிறகு இரவு உணவு உண்ணச் சென்றான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!