Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 31

CHAPTER 31

முல்லை – 31

By Roja Roslin · October 29, 2026

0

ஒரு வழியாக கதிர் ஜீவாவை அவன் அறைக்கு அழைத்துச் செல்ல. பாண்டியனும் கோபத்துடன் அவர் அறைக்கு செல்ல. ரோஜா மட்டும் ஏதோ யோசனையுடன் நின்றிருந்தவள் அருகே வந்த கதிர்வேலன், “என்னம்மா? என்ன யோசிக்கிறீங்க” என்று கேட்டார்.

“இன்னைக்கு முருகன் மாமா அப்பாவை பார்க்க வந்ததுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு நினைக்கிறேன், எனக்கு சரியா சொல்ல தெரியல” என்ற ரோஜா, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்று இருந்தாள்.

வீட்டில் நடந்த பிரச்சனைகளை எண்ணியபடி கதிர்வேலனும் தன் நண்பன் நாகராஜனின் வீட்டிற்கு வந்திருக்க,

“என்ன நண்பா இது. ஏன் அப்பா திடீரென்று ஜீவா அண்ணன் மேலே இவ்வளவு கோபப்படுறாரு” என்று கேட்டான் நாகராஜன்.

“அண்ணன் மேல அப்பாவுக்கு கோபம் இருக்கிறது உண்மைதான். ஆனால் இப்போ ஏன் முல்லை பெயரை கேட்டதும் இப்படி ஆத்திரப்பட்டாருன்னு தான் புரியல. அதுவும் அம்மா சொன்ன மாதிரி முருகன் மாமா ஏன் அப்பாவை பார்க்க வந்தாருன்னும் சரியா விளங்கல” என்று கதிர்வேலனும் தன் தந்தையின் மாற்றத்தை எண்ணி யோசிக்க தொடங்கி இருந்தார்.

இதே தருணம் தன் படுக்கையில் படுத்திருந்த பாண்டியனோ,

“எப்படியாவது என் மகளுக்கு நான் நினைத்தடி இந்த கல்யாணம் நல்ல விதமா நடந்து முடியனும். முருகன் தரப்பிலிருந்து முல்லையை இந்த வீட்டிற்கு மருமகளா அனுப்பி வைக்கணும்னு அவன் ஆசைப்படுவது நியாயம்தான்.

ஆனால் கதிருக்கு முல்லையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத பட்சத்தில் நான் எப்படி முருகனுக்கு வாக்கு கொடுக்க முடியும். அதுவும் இல்லாமல் முல்லை மனதில் ஜீவானந்தத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்த பட்சத்தில். கதிர்க்கும் முல்லைக்கும் திருமணம் செய்து வைத்தால் எப்படி இவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும்”

என்று பல குழப்பத்தில் இருந்த பாண்டியனுக்கு. முல்லை இந்த வீட்டிற்கு மருமகளாக வராமல் இருப்பதே நல்லது என்ற எண்ணம் மட்டும்தான் இப்போதைக்கு இருந்தது.

இப்படியாக அவரவர் மனதில் ஒவ்வொரு எண்ணம் ஓடிக்கொண்டு இருக்க.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதியின் பிள்ளைகளான ரவியும் தனலட்சுமியும் நிச்சயம் நடக்க இருக்கும் கோவிலில் காத்திருந்தார்கள்.

கதிர்வேலனை தவிர பாண்டியனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கோவிலுக்கு வருகை தந்திருக்க.

“என்ன ரோஜா ஏன் இன்னும் கதிர் மாமா வரல “

என்று மீனா ரோஜாவிடம் கேட்கும் சமயம், முருகன், பார்வதி அவர்களுடன் முல்லையும் கோவிலுக்கு வருகை தந்திருந்தார்கள்.

முல்லையைப் பார்த்ததுமே பாண்டியனின் மனதில் இனம் புரியாத வலி ஏற்பட்டது.

என்றுமே பாண்டியனுக்கு முல்லை என்றால் அதிக பாசம் உண்டு.

காரணம் தன் தங்கையின் மறு உருவமாக அவர் முல்லையை நினைத்திருந்தார்.

ஆனால் முருகன் வாய் திறந்து கேட்டும் முல்லையை தன் வீட்டுக்கு மருமகளாக ஆக்கிக்கொள்ள முடியாத நிலையில் பாண்டியன் இருக்க. முல்லைக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்று அவரும் மனதார நினைத்திருந்தார்.

“நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகுது. இரண்டு ஜோடிகளும் வந்து சபையில் உட்காருங்கள்”

என்று ஐயர் சொல்ல.

ரோஜாவும் ரவியும் சபையில் அமர்ந்திருக்க,

தனா மட்டும் தனியாக சபையில் காத்திருந்த நேரத்தில்.

“கதிர். கதிர் எங்கே” என்று பாண்டியன் கேட்க…

“வாத்தி எங்கே” என்று தனாவின் காதில் விழும்படி வேண்டுமென்றே ரோஜாவும் கேட்க. ஜீவானந்தம் மட்டும் முல்லையை

பார்த்தபடி நின்றிருந்தவரை பார்த்து,

“இந்தப்பா தேவதாஸ். நீ அப்புறம் முல்லையை பார்க்கலாம். எங்க உன் தம்பி” என்று கஸ்தூரியும் கேட்க.

“சீக்கிரம் மாப்பிள்ளையை வர சொல்லுங்க மோதிரம் எங்கே” என்று மீண்டும் ஐயர் கேட்கும் சமயம்.

முல்லையின் கண்களும் அவளை மீறி கதிர்வேலனைத் தேட.

“டேய் நண்பா என்னடா ஆச்சு” என்று நாகராஜன் கேட்கும் தருணம்.

அனைவரின் கண்ணெதிரே வந்து நின்ற கதிர் வேலனை பார்த்து.

“ஐயையோ வாத்தி என்ன ஆச்சு” என்று பதறிக்கொண்டு ரோஜா அங்கிருந்து எழுந்து ஓடி வருவதற்கு முன்னதாக,

“மாமா சார், என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று தன்னையும் மீறி முல்லை கதிர்வேலனை நோக்கி ஓடியவள்.

கதிர்வேலனின் கைகளில் வெளியேறிக்கொண்டு இருக்கும்

ரத்தத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அவள் புடவை முந்தினியை கிழித்து கதிர்வேலனின் வலது கையில் இறுக்கமாக கட்டிய முல்லையின் கண்களில் வடிந்த கண்ணீரையும் தாண்டி, கதிர்வேலனின் விழிகள் முதல் முறையாக முல்லையின் அன்பை உணர்ந்த தருணமாக அந்த காட்சி அமைந்தது.

கையில் ரத்தம் சொட்ட அனைவிரின் முன்னே வந்து நின்ற கதிர்வேலனை பார்த்து கூடி உள்ளவர்கள் அதிர்ச்சி அடைய. யாருக்காகவும் காத்திருக்காமல். யாரையும் கருத்தில் கொள்ளாமல் முல்லை தன் முந்தியயை கிழித்து கதிர்வேலனின் கையில் இருந்த காயத்துக்கு கட்டுபோட்டு க்கொண்டு இருந்தாள்.

“டேய் கதிர். என்னடா என்னாச்சு.“ என்று கதிர்வேலனின் நிலையை கண்டு ஜீவானந்தம் தன் தம்பியின் அருகே ஓடி வர, கதிர்வேலனின் பார்வையோ அவனின் ரவா லட்டை தவிர வேற யாரையும் காணமாட்டேன் என்று அடம் பிடித்தது.

கதிர்வேலனின் கையில் இருந்து ரத்தம் கொட்டிக்கொண்டு இருக்க.

கூடி இருந்த அனைவரும் என்னானது என்ற கேள்வியை மாறி மாறி கேட்டு சோர்ந்து போன நிலையில்.

முல்லையோ. கண்களில் கண்ணீருடன்,

“என்னாச்சு மாமா சார். எப்படி இவ்ளோ பெரிய காயம். ஐயோ ரத்தம் கொட்டுது. அப்பா அப்பா நம்ம கார்ல முதல் உதவி பெட்டி இருக்குமே இருங்க நான் போய்க் கொண்டு வரேன்” என்று முல்லை பதற்றதுடன் எழுந்தவளின் செயலில் திக்குமுக்காடி போனான் கதிர்வேலன்.

“நல்ல காரியம் நடக்கும் போது இது என்ன மாப்பிள்ள பையன் கையில் இவ்ளோ பெரிய ரத்தகாயம்” என்று அங்குள்ள பெண்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுக்க.

“வாத்தி. என்னாச்சு உங்களுக்கு. கையில எப்படி இவ்ளோ பெரிய வெட்டுக்காயம்” என்று பதற்றதுடன் கேட்டாள் ரோஜா.

“டேய். கேக்குறாங்க தானே. என்னாச்சு டா” என்று பாண்டியன் சத்தம் போட்டதும்.

“வாசல்ல ஒரு அம்மா தேங்காய் உடைச்சு தர சொன்னாங்க. அப்போ தெரியாம.“ என்று கதிர்வேலன் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே.

“மாமா சார். கையை காட்டுங்க.“ என்று முல்லை தன் கையில் இருந்த முதல் உதவி பெட்டியைக்கொண்டு. கதிருக்கு வைத்தியம் பார்க்க நினைத்தவளின் கரங்களில் இருந்த பெட்டியை தனம் தன் வசம் பிடுங்கி இருந்தாள்.

தனத்தின் செயலில் சட்டென்று முல்லை சூழ்நிலை உணர்ந்தவள்.“சாரி. நீங்களே பண்ணுங்க” என்றபடி அங்கிருந்து நகர்ந்ததும். தனா கதிர்வேலனின் கையை பிடித்து,

“ஒரு தேங்காய் கூட உனக்கு ஒழுங்கா உடைக்க தெரியாதா கதிர்” என்று கேட்டதும்.

“வாத்தி நீங்க வாங்க நம்ம ஹாஸ்பிடல் போகலாம். முருகன் மாமா நீங்க வண்டி எடுங்க” என்ற ரோஜா. தனத்தின் அருகே நின்று இருந்த கதிர்வேலனின் கையை பிடித்து தன்னோடு அழைத்து சென்றவள்.

“முல்லை நீயும் வா. அப்பா நாங்க வாத்தியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போயிட்டு வரோம்” என்றாள் ரோஜா.

ரோஜாவின் செயலில் ரவி மற்றும் தனத்திற்கு கோவம் எழ.

“என்ன ரோஜா இது. இன்னைக்கு நம்ம நாலு பேருக்கும் நிச்சயம் நடக்க இருக்கும் போது நீ கதிரை இங்க இருந்து வெளிய அழைச்சிட்டு போனால் என்ன அர்த்தம்” என்று தனா கேட்க.

“என்ன நீ. நான் என்ன வாத்தியை சினிமாவுக்கா அழைச்சிட்டு போறேன். அவர் கையில எவ்ளோ பெரிய காயமுன்னு பார்த்த தானே. முல்லை முந்தியே நனைந்து போன அளவுக்கு ரத்தம் வருது. இப்படிப்பட்ட நிலையில உங்க நிச்சயம் எப்படி நடக்கும்ன்னு நீ நினைக்கிற” என்று கேட்டாள் ரோஜா.

ஏற்கனவே. எப்படியாவது இந்த நிச்சியத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணி இருந்த ரோஜாவிற்கு இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்.“அப்பா. நாங்க வாத்தியை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறோம்.“ என்ற ரோஜா. பாண்டியனின் சம்மதத்திற்காக காத்து இருக்காமல் அடுத்த நொடியே கதிர்வேலன் முல்லையை அழைத்துக்கொண்டு முருகனின் காரில் கோவிலில் இருந்து அருகே இருக்கும் மருத்துவமனையை நோக்கி சென்று இருந்தாள்.

ரோஜாவின் செயலில் அதீத கோவம் கொண்ட தனாவோ. தன் அம்மா சரஸ்வதியை முறைத்து பார்க்க.

“அண்ணா. இருந்தாலும் உங்க பொண்ணுக்கு வீம்பு அதிகம் போல. இங்க இத்தனை ஆம்பளைங்க இருக்கும் போது உங்க பொண்ணு ஏன் கதிரை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகனும்” என்று கேட்டதும். பாண்டியன் பதில் பேசாமல் அமைதியாக நின்று இருந்தார்.

“அட. நீங்க சரியா சொன்னிங்க போங்க. ஆமா ஆமா. இந்த ரோஜாவுக்கு ரொம்ப வாயு தான். அவ தான் என் அண்ணன் வீட்டுல நாட்டாமை பண்ணுவா. அவ வைக்கிறது தான் இங்க சட்டம். நீங்க சொன்ன மாதிரி இதோ ஜீவா, உங்க பையன், ஏன் உங்க கதிரை கட்டிக்க காத்து இருக்குற உங்க பொண்ணுக்கூட இங்க இருக்கும் போது. அந்த அதிர்ஷ்டம் இல்லாத பொண்ணு முல்லையை அழைச்சிட்டு போய் இருக்காளே. அதுல இருந்தே தெரியல. இந்த ரோஜா ஒரு தற்குறின்னு” என்ற கஸ்தூரி. இதுதான் சமயம் என்று இல்லாத பொல்லாததை சொல்லி ரோஜாவின் திருமணத்தை நிறுத்த தன்னால் முடிந்த வேலைகளை செய்ய தொடங்கி இருந்தார்.

யார் என்ன பேசினால் என்ன. இந்த முறையும் என் மகளின் நிச்சயம் நடக்காதா என்ற கவலையில் பாண்டியன் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து இருக்க.

“மாமா. உங்க பொண்ணு ரோஜா வந்ததும். முதல்ல அவகிட்ட சொல்லி எங்க குடும்பம் ஆளுங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை தர சொல்லுங்க.“ என்று ரவி சொல்ல.

“நான் ஒருத்தி இருக்கும் போது. ஏன் ரோஜா வேற எவளையோ கதிர் கூட அழைச்சிட்டு போகணும்” என்று கேட்டாள் தனா.

“excuse me. கதிர் கூட போனது வேற யாரோ ஓரு பொண்ணு எல்லாம் இல்ல. அவ முல்லை. எங்க அத்த பொண்ணு அவ” என்று ஜீவானந்தம் சொல்ல.

“ஒ. நீங்க கட்டிக்க இருந்த பொண்ணா” என சட்டென்று கேட்டார் சரஸ்வதி.

“என்ன அம்மா நீங்க. இந்த குடும்பத்துல என்ன தான் நடக்குது. அண்ணன் தம்பியை விரும்புன பொண்ணை கல்யாணம் பண்ணி இருக்காரு. தம்பி என்னவோ அண்ணன் விரும்புன பொண்ணுகூட வெளிய போறாரு. சுத்த விவஸ்த்தை இல்லாத ஆளுங்கா இருக்காங்கலே” என்ற தனாவை ஏகத்துக்கும் முறைத்தாள் மீனா.

கஸ்தூரியின் வாயிக்கு இணையாக தனா பேசும் பேச்சை கஸ்தூரி ரசித்து இருக்க.

“என்னங்க நீங்க. எங்கள பற்றி ஏன் சபையில நின்னு தப்பா பேசுறீங்க. நீங்க வாழ ஆசைப்படுற குடும்பத்த இப்படி தான் நாலு பேர் எதிர்ல தலைகுறைவா பேசுவீங்களா” என்று பொறுமை இழந்தவளாக மீனா கேட்க.

“ஏய் மீனா நீ சும்மா இரு. இவங்க இப்படியெல்லாம் கேட்டா தான் அந்த ரோஜாவுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும்” என்றார் கஸ்தூரி.

“அம்மா. நீ சும்மா இரு. இங்க பாருங்க தனம். ரோஜாவும் சரி முல்லையும் சரி. கதிர் மாமாவுக்கு ஒன்னுனா துடித்து தான் போவாங்க. இதெல்லாம் ஒரு கதைன்னு நீங்க பேசிகிட்டு இருக்காதிங்க” என்று மீனாவும் இந்த முறை சற்று கோவமாக தான் தனாவிடம் பேசி இருந்தாள்.

“இப்போ ஏன் ஆளு ஆளுக்கு என்னென்னவோ பேசிகிட்டு இருக்கிங்க. பக்கத்துல இருக்குற கிளினிக்கு தான் கதிரை அழைச்சிட்டு போய் இருப்பாங்க. கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்க,

அவங்க வந்ததும் பேசிக்கலாம். அங்க பாருங்க பாண்டியன் ஐயா வேற கவலையா இருக்காரு” என்று நாகராஜன் சொன்னதும். மேற்கொண்டு யாரும் எதுவும் பேசாமல் கோவில் வளாகத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.

இதே சமயம். கோவிலில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் கிளினிக்கில் கதிர்வேலனின் வலது கையில் ஏற்பட்டு இருந்து வெட்டு காயத்துக்கு மருத்துவர் கட்டுப்போட்டு, மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

“கையில ஒரு நாள் முழுக்க தண்ணி படக்கூடாது. கண்டிப்பா pain அதிகமா இருக்கும். செப்டிக் ஆகாம பார்த்துக்கோங்க” என்று மருத்துவர் சொல்ல.

“டாக்டர் சார். என் மாமா சார் கைக்கு வேற ஒரு பிரச்சனை இல்லையே. பாவம் அவரு, கம்பு சுத்துற ஆளு, அவர் கையையும், வாயையும் வச்சி தான் அவரு வாழ்க்கையே ஓடுது” என்று முல்லை இயல்பாக சொல்ல. மருத்துவர் என்ன நினைத்தாரோ சட்டென்று சிரித்து இருந்தார்.

அந்த கலவரத்திலும் முல்லையின் வெகுளியான பேச்சைக் கேட்டு ரோஜாவும் சிரித்து விட.“ஆமா. எனக்கு மட்டும் தான் வாய் இருக்கு. ஏன் உன் மூக்கு கீழ மட்டும் என்ன தங்க சுரங்கமா இருக்கு” என்று கதிர்வேலன் கேட்க.

முல்லை அவனை ஏகத்துக்கும் முறைத்தவள்.

“டாக்டர் சார். என் மாமா சார் வாய் கொஞ்சம் நேரம் மூடியே இருக்குற மாதிரி உங்ககிட்ட எதாவது ஊசி இருக்கா” என்று கேட்டாள் முல்லை.

மருத்துவர் மேலும் முல்லையின் பேச்சை கேட்டு சிரித்து இருக்க.“அந்த ஊசி இருந்தா இதோ இந்த ரவா லட்டு வாயில போடுங்க. எப்ப பாரு என்கிட்ட சண்டை போட மட்டும் தான் இவ வாயை என்கிட்ட கொடுப்பா” என்று கதிர்வேலன் சொல்ல. முல்லை அவனை உதடு சுழித்து மேலும் முறைக்க.

“என்னடி முறைக்கிற. ரொம்ப முறைச்ச. அந்த சுழிக்கிற வாயை இழுத்து வச்சி சூடு வச்சிடுவேன்” என்றான் கதிர்வேலன்.

“என்ன.? என் வாயிக்கு சூடு வைப்பிங்களா. எங்க வையுங்க. வையுங்க பாப்போம்” என்று இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முல்லை கதிர்வேலனிடம் எகுறிக்கொண்டு செல்ல.

இத்தனை நாள் கண்ணீரும் சோகமுமாய் பார்த்த தன் மகளின் இந்த பரிமாணத்தை பார்த்து முருகனுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

இடம் மறந்து, சூழ்நிலை மறந்து, சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் மறந்து முல்லையும் கதிர்வேலனும் தங்களுக்கென்று ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்க.

இவர்கள் இருவரின் அர்த்தமில்லாத சண்டையை பார்த்து,

“சரி சரி புருஷனும் பொண்டாட்டியும் பொறுமையா வீட்டுக்கு போய் சண்டை போடுங்க. இது நாலு நோயாளிகள் வர இடம்” என்றார் மருத்துவர்.

“சரி டாக்டர். நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்” என்ற முல்லை.“இருங்க. உங்களை வீட்டுக்கு போய் வச்சுக்கிறேன்” என்று சொல்ல.

“இரு டி போற வழியிலேயே உன் வாயை உடைக்கிறேன்” என்று கதிரும் பதில் பேச. மருத்துவர். கணவன் மனைவி என்று இவர்களை குறிப்பிட்டதை கூட இவர்கள் இருவரும் கருத்தில் கொள்ளாமல் இருந்தார்கள்.

“டாக்டர் சொன்னது நினைவிருக்கட்டும் மாமா சார். கையில தண்ணி படாம பாத்துக்கோங்க” என்று முல்லையே மருத்துவர் ஸ்தானத்திலிருந்து கதிர்வேலனுக்கு அறிவுரை கொடுக்க,

இவர்கள் இருவரும் முன்னோக்கி ஜோடியாக செல்வதை பார்த்து முருகன் வைத்த கண் எடுக்காமல் அவர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

முருகனின் இந்த மாற்றத்தை கவனித்த ரோஜா, “மாமா.“ என்று அழைக்க, சுயநினைவுக்கு வந்தவர்.“சொல்லுமா. என்ன கிளம்பலாமா?” என்று கேட்டார்.

“இல்ல மாமா. இன்னும் பத்து நிமிஷம் கழித்து கிளம்பலாம்” என்று ரோஜா சொல்ல.

“என்னமா முகூர்த்த நேரம் முடிய போகுது, நல்ல நேரத்துல உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கணும்”

என்று முருகன் சொல்ல.

“அதெல்லாம் நடக்க தேவையில்ல. முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க மாமா” என்றாள் ரோஜா.

ரோஜாவின் பேச்சைக்கேட்ட முருகன், “என்ன மா ரோஜா. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு நிச்சயம் நடக்கணுமே” என்றதும்.

“ஐயோ மாமா. வாத்திக்கு அந்த பொண்ணுகூட கல்யாணம் நடக்க வேண்டாம்ம்” என்றாள் ரோஜா.

“என்னமா. ஏன் இப்படி எல்லாம் பேசுற”

“மாமா. எங்க அப்பா எனக்காக தான் வாத்திக்கு இஷ்டம் இல்லாத கல்யாணத்தை பண்ணி வைக்க பாக்குறாரு”

“அதுல என்ன தப்பு இருக்கு ரோஜா. ஒரு அப்பாவா பாண்டியன் மாமா இதெல்லாம் பண்ணி தானே ஆகணும்”

“ஆமா ஆமா. நல்லா பண்ணாரு. சரி அத விடுங்க. ஏன் மாமா. அன்னைக்கு ஏன் நீங்க ஜவுளிக்கடைக்கு வந்திங்க”

“என்னைக்கு”

“மாமா. அந்த கேசவனுக்கு accident நடந்த தேதியில், நீங்க என் அப்பாவை பார்க்க ஜவுளிக்கடைக்கு வந்திங்களே. அதைப்பற்றி தான் கேக்குறேன்”

“அது. அதுவா” என்று தன் வார்த்தையை நிறுத்திய முருகன்.“நா. நான் முல்லையை” என்று அவர் உண்மையை சொல்ல வரும் முன்னே.

பாண்டியனின் இடத்தில் இருந்து யோசித்து பார்த்து, “அது நான் எதார்த்தமா தான் ரோஜா வந்தேன். சரி சரி நீ வா நேரத்தோடு கோவிலுக்கு கிளம்பலாம்” என்ற முருகன். ரோஜாவின் கேள்விக்கு பிடிக்கொடுக்காமல் வேகமாக கிளினிக்கில் இருந்து வெளியேறி இருந்தார்.

முருகனின் முகத்தை வைத்தே. அவர் எதையோ சொல்ல தயங்குகிறார் என்று அறிந்துகொண்ட ரோஜா.

“இவரோட போக்கே சரியில்லையே. பேசாம நம்மளே இவர்கிட்ட வாத்திக்கு முல்லையை பொண்ணு கேக்கலாமா” என்று யோசித்தவள். அதே மனநிலையுடன் முருகனின் காருக்கும் சென்று இருந்தாள்.

“சீக்கிரம் வா ரோஜா. நீ என்ன ஊர்வலம் வர தேர் மாதிரி நடந்து வர” என்ற முல்லையை பார்த்து,

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என் அம்மா அசைந்து வரும் தேர் தான்” என்றார் கதிர்வேலன்.

முருகனின் காரில். கையில் கட்டுடன் அமர்ந்து இருந்த கதிர்வேலனை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்ட முல்லை.

“அப்பா. சீக்கிரம் கார் எடுங்க. கோவில்ல இவங்களுக்கு நடக்க இருக்குற நிச்சியதுக்காக அனைவரும் காத்து இருப்பாங்க” என்றாள் முல்லை.

“இப்போ கூட எனக்கு எவகூட நிச்சயம் நடந்தா இவளுக்கு என்னனு தான் நினைக்கிறா இவ” என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்ட கதிர்வேலனுக்கு தெரியவில்லை. முல்லை மனதிலும் இருப்பவன் அவன் தான் என்று.

ரோஜாவும் முல்லையும் முருகன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருக்க.

கதிர். முருகன் அருகே அமர்ந்து இருக்க. முருகன் விரட்டிய கார் விரைவாகவே கோவிலை சென்று அடைந்தது.

முருகனின் காரை பார்த்ததும் நாகராஜன் ஜீவானந்தம் என்று இருவரும் முதலில் ஓடி வர, அனைவரின் முன்னிலையிலும் எப்படி கதிரின் நலனை விசாரிக்க முடியும் என்ற தயக்கத்தில் நின்று இருந்தாள் மீனா.

முருகனின் காரில் இருந்து இறங்கிய கதிரை, “டேய் தம்பி. டாக்டர் என்ன சொன்னாரு டா” என்று ஜீவானந்தம் கேட்க.

மருத்துவர் சொன்னதை அனைவரின் முன்னிலையிலும் எடுத்து சொன்னாள் ரோஜா.

“சரி சரி. டாக்டர் சொன்ன மாதிரியே கையில தண்ணி படாமல் பார்த்துக்கோ. இப்போ வா உள்ள போகலாம்” என்ற ஜீவானந்தம். காரின் அருகே நின்று இருந்த முல்லையை தயக்கத்துடன் பார்த்து இருக்க. முல்லையோ ஜீவா இருக்கும் திசையை கூட காணாமல் நேரே வேகமாக கோவிலுக்குள் சென்று இருந்தாள்.

“சரி வாங்க உள்ள போகலாம். பாண்டியன் ஐயா வேற சின்னமா மேல வருத்தமா இருக்காரு” என்று நாகராஜன் சொல்ல.

“என் மேல வருத்தமா. ஏன் என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே ரோஜா கோவிலுக்குள் செல்ல. கதிரை கை பிடித்து உள்ளே அழைத்து சென்றார் ஜீவானந்தம்.

கதிரை பார்த்ததும், அவன் அருகே ஓடி வந்த பாண்டியன். தன் பிள்ளையை நலம் விசாரித்தவர்.“ஏன் மா ரோஜா. கதிர் கையில ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்கு நீ ஏன் மா கோவிலை விட்டு வெளியே போன.“ என்று கேட்டார் பாண்டியன்.

பாண்டியனின் கேள்வியில் ரோஜாவிற்கு கோவம் எழ.“அதானே. ஏன் இங்க வேற ஆளுங்களே இல்லையா. நிச்சயம் நடக்க வேண்டிய பொண்ணு. நீ இப்படி வெளிய போவியா. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போய் இருக்க” என்ற ரவியின் கேள்வியில் முல்லை, மீனா, ரோஜா என்று அனைவரின் முகமும் மாறிப்போனது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!