வீடு வந்த மகனின் புன்னகை முகம் கண்ட தாய்க்கு சந்தோஷமாக இருந்தது. அந்த சந்தோஷம் மகனின் சட்டையைப் பார்த்ததும் மடிய, மகன் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெண்ணா? மகன் திருமணம் செய்துகொள்வது சந்தோஷம் தான். ஆனால், முன்னர்போல் எதாவது ஏடாகூடமானால் என்ன செய்வது? என்ற பயமே வந்தது அவருக்கு.
“என்னப்பா இதெல்லாம்?” என்று அவனின் சட்டையைக் காண்பித்துக் கேட்க, அவன் சிரித்த சிரிப்பில், ‘இப்ப என்ன தப்பா கேட்டுட்டோம்னு இந்த சிரிப்பு சிரிக்குறான்’ என தாய் பேய்முழி முழித்தார்.
“இது… இதைத்தான்மா அந்தப் பொண்ணு எதிர்பார்த்தா” என்று நடந்த அனைத்தையும் தாயிடம் சொன்னான்.
“என்னடா சொல்ற? ஏன் என்ன காரணம்? நீ எந்த தப்பும் பண்ணலையேடா. இத்தனை வருஷம் கழிச்சி பழிவாங்குறேன்னு சொல்றாங்கன்னா, எதுக்கும் கொஞ்சம் உஷாராயிரு மாறா” என்று பதட்டப்பட்ட தாயிடம்,
“யாருக்குத் தெரியும். ஆனா, நீங்க பயப்படுற அளவுக்கு மோசமான பொண்ணு கிடையாது. விளையாட்டுத்தனமா பேசிட்டு இருக்கா. சரியான வாயாடிம்மா அந்தப்பொண்ணு. இன்ட்ரெஸ்டிங் கேரக்டர் கூட” எனும்போது மகனின் முகம் மலர்வதைக் கண்டார்.
‘தன் மகன் வாழ்வு மீண்டும் மீண்டு வருமா?’ மனம் அடித்துக் கொள்ளத்தொடங்கியது அந்த தாய்க்கு. “சரிப்பா வா சாப்பிடலாம்” என்று அழைத்தார்.
“இதோம்மா. ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். சரி அப்பா வந்தாச்சா?” என கேட்டபடியே நடந்தான்.
“இல்லப்பா. இப்ப வர்ற டைம் தான். அப்புறம் மணி…” என்று தயங்க.
தாயின் தயக்கத்தில் நின்றவன். “என்னம்மா சொல்லுங்க?” என கேட்டான்.
“இல்ல நீ ப்ரஷ்ஷாகிட்டு வா’ என்றதும் ஏதோ புரிந்தவன், “ம்…” என தலையசைத்து சில நிமிடங்களில் சாப்பிட வந்தான். தாயின் தயக்கத்தில், “என்னம்மா கல்யாண பேச்சா?” தாயின் தலையாட்டலில், “இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கம்மா. நான் கொஞ்சம் தயாராகிக்கறேன்.” என்றான் மணிமாறன்.
“ஆனா…”
“அம்மா! ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல. கொஞ்சநாள் தான் டைம் வேணும் கேட்கிறேன். ப்ளீஸ்மா. அப்புறம், என் லைஃப்ல நடந்த எதையும் மறைக்காம, உண்மையைச் சொல்லித்தான் பொண்ணு பார்க்கணும். அதை எப்பவும் மறந்துவிடாதீங்க.” சற்று அழுத்தமாகவே சொன்னான்.
“சரிப்பா. அப்ப நாங்க பார்க்க ஆரம்பிச்சிடுறோம்.” என்றார் வேகமாக.
“என்னது பார்க்க ஆரம்பிக்கிறீங்களா? என்னம்மா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க? நான்தான் டைம் கேட்டேனே?”
“நீ டைம் கேட்ட சரி. நாங்க பார்க்க ஆரம்பித்து முடிய, உன்னோட டைமும் முடிய கரெக்டா இருக்கும்” என்றபடி தனது அலுவலக பையை ஷோபாவில் வைத்தபடி அவனது தந்தை சுந்தரம் வந்தார்.
“நீங்களுமாப்பா?” என்றான் சலிப்பாக.
“அதென்ன நீங்களுமாப்பா? நான் உன்னோட அப்பாடா. எனக்கு உன்மேல அக்கறை இருக்காதா? உனக்குப் பிடிக்காத எந்தப் பொண்ணையும் உன்மேல வலுக்கட்டாயமா திணிக்க மாட்டோம். அந்த வாக்குறுதி கொடுக்கிறோம் போதுமா? பழசையே நினைச்சி பயப்படாம கல்யாணத்துக்கு சம்மதி. மற்றதை நாங்க பார்த்துக்குறோம்.” என்றார் மென்மையான குரலில்.
சில நிமிடம் யோசித்தவன், “சரிப்பா” என்று அமைதியாக சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு வந்து படுத்தவனுக்குள் பலவித யோசனைகள். ‘இந்தக் கல்யாணம் சரிவருமா? நான் நல்லவனா என்று எனக்கே தெரியலையே. வர்ற பெண்ணை நான் நல்லபடியா பார்த்துப்பேனா? ஏற்கனவே ஒருத்தியை சரிவர புரிந்துகொள்ளாமல் போய்த்தானே, தனக்கு இந்த நிலை. இதில் இன்னொரு பெண்ணை எப்படி? முடியுமா தன்னால்?’ விடைதெரியா கேள்விகள் பல, விதவிதமாக வந்து பயமுறுத்தின.
அதை மறக்க நினைத்தவன் கண்முன், நண்பனால் எம்எம் என்றழைக்கப்பட்ட அப்பெண் முகம் வர, அடுத்த நொடி முகம் புன்னகையை பூசிக்கொண்டது. “உன் பெயரும் எம்.எம்மா? எம்எம் மீனங் என்னவா இருக்கும்? பரவாயில்ல. நான் மணம் மகிழ்விப்பவள்னு எடுத்துக்கறேன்.” என்றவன் புன்னகையுடன் உறங்கினான்.
“ஏய்! ரெண்டுபேரும் அங்கேயே நில்லுங்க?” என்ற கோரஸ் குரல்களில் அதிர்ந்து நிற்க,
“எங்க போனீங்க? டைம் என்ன தெரியுமா? வயசுப்பொண்ணு வர்ற நேரமா இது? கொஞ்சம்கூட பொறுப்பே இல்ல உங்களுக்கு” என்று சரமாரியாக கேள்விகள் பறந்தது.
“அம்மா அ…அது அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போயிருந்தோம்மா. இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா, அதான் செம கூட்டம். அங்க இங்க நகரக்கூட முடியலன்னா பாருங்களேன். உங்ககிட்ட பேசும்போது கூட என்னால போனைக் கையில பிடிக்க முடியலம்மா. அந்தளவுக்கு நெரிசல். எப்படியும் சாமி தரிசனம் முடிச்சிட்டுத்தான் வரணும்னு நினைச்சதால இவ்ளோ டைமாகிருச்சி.” என்றாள் குழந்தை போல் முகம் வைத்து.
“ஓஹ்… அவ்வளவு கூட்டமா?” என்றவர் குரலில் இருந்த நக்கலை அறியவில்லை சிறியவர்கள்.
“ஆமாம்மா. நகரவே முடியாத அளவு ரொம்பக் கூட்டம்.” என்று தான் சொன்ன பொய்யை அவள் அப்படியே தொடர,
“ஓவரா பொய் சொல்ற மணி. அவ்வளவு நெரிசல்னா ஏன் சத்தம் எதுவும் கேட்கல?”
“அவ சரியாத்தான் சொல்றா அத்தை” என்று தோழிக்கு வக்காலத்து வாங்கியவன் காதைத் திருகி, “என் பொண்ணு சொல்றது பொய்யின்னு குழந்தைக்குக் கூடத் தெரியும். அவளுக்கு நீ ஜால்ரா அடிக்கிறியா? நாங்களும் நீங்க போன அதே அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போயிருந்தோம். ஆனா, பாருங்க ஆறு மணிக்குப் போயிட்டு ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டோம்” என்றதும் அவர்கள் அதிர்ந்து பின் அசடுவழிய சிரிக்க,
“நான் சொல்லல கிர்ரு. நான் எட்டடின்னா எங்கம்மா பதினாறடின்னு” என்று காதோரம் கடித்தாள்.
“போதும் வழிஞ்சது. சரி எங்க போனீங்க?”
“அது அம்மா சும்மா வின்டோ ஷாப்பிங் போனோம். அங்க ஒரு ப்ரண்டைப் பார்த்தோமா, டைம் போனது தெரியாம பேசிட்டு இருந்திட்டோம்மா. சாரி” என்றாள் தன் காதைப்பிடித்து.
“இப்படிப் பால் வடியுற முகம் மாதிரி வச்சி எல்லாத்தையும் ஏமாத்திரு. உங்க ரெண்டுபேர் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதனால உங்களை விடுறேன். இல்லன்னா இப்படி சுத்த விடுவோமா என்ன. சரி ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு சாப்பிட வாங்க. நீயும் சீக்கிரம் வாடா” என்றார்.
சிறியவர்கள் பத்து நிமிடத்திற்கெல்லாம் வந்து அமைதியாக சாப்பிட்டு முடிக்க., “மணிமா உனக்கு மாப்பிள்ளை பார்க்க போறதா அப்பா சொல்லிட்டு இருந்தாங்க. நீ என்ன மாதிரி எதிர்பார்க்கிற?”
‘அச்சோ! இவகிட்ட போயா இதையெல்லாம் இந்த அத்தை கேட்கிறாங்க’ என்றபடி கிஷோர் பார்த்தான்.
“ம்..” .என யோசித்தவள், “ஹான்! அம்மா! ஆறடிக்கு மேலயும் இல்லாம, ஐந்தே முக்கால் அடிக்குக் கீழேயும் இல்லாம இருக்கணும். ஏன்னா நான் ஐந்தே காலுக்கும், ஐந்தரைக்கும் இடையில் இருக்கிறதால. அப்புறம், ரொம்ப வெய்ட்டாவும் இல்லாம, ரொம்ப ஒல்லியாகவும் இல்லாம இருக்கணும். அடுத்து ரொம்ப கருப்பும் இல்லாம, ஓவர் கலரும் இல்லாம இருந்தா அழகா இருக்கும். நெக்ஸ்ட் ரொம்பவும் படிச்சிருக்காம, கொஞ்சமாவும் படிச்சிருக்காம இருந்தா நலம். நெக்ஸ்ட், ரொம்ப வசதியாவும் இல்லாம, கம்மியான வசதியாவும் இல்லாம இருக்கணும்.”
“நெக்ஸ்ட்” என்று பல்லைக் கடித்து கடுப்பாகக் கேட்டார் அவளின் தாய் வசந்தா.
“அது மம்மி, ரொம்ப அழகாவும் இல்லாம, அழகு கம்மியாவும் இல்லாம இருக்கணும்.”
“ஓஹ்… அப்புறம்ங்க மேடம்” என்ற குரலில் அதிக நக்கல்.
“ரொம்ப நல்லவனாவும் இல்லாம, கொஞ்சங்கூட கெட்டவனாகவும் இல்லாம இருக்கணும். ஸ்… ஸப்பா இன்னும் இருக்கு. இப்பவே மூச்சி முட்டுது. நியாபகம் வர வர சொல்லிருறேன்மா” என்றாள்.
“வசந்தா! கேட்ட நமக்கே திணறுதே. இவளுக்கு திணறலன்னா தான் சந்தேகப்படணும். இப்ப என்ன செய்யப்போற?”
“அத்தை பேசாம இப்படி ஒரு பையனை ஆர்டர் கொடுத்து செஞ்சிரலாமா?” என்றவன் ஏதோ நினைவு வந்து, “ஹேய் எம்எம்! இந்தத் தகுதி அனைத்தும், இன்னைக்கு பார்த்த நம்ம எதிரிகிட்டத்தான் இருக்கு” என்றான் காதோரமாய்.
“டேய்! உன்னை…” என பல்லைக்கடித்தவள், “ஓடிப்போயிரு! இன்னும் கொஞ்சநேரம் இங்க நின்ன கொன்னுருவேன் பார்த்துக்கோ” என்று திட்ட,
“வேற வழியில்லடா கிஷோர். நீ சொன்ன மாதிரி செஞ்சி தான் ஆகணும்போல” என்று வசந்தா சொன்னார்.
“ஓய்! என்ன கிண்டல் அடிக்கிறீங்க. என் மருமக அழகுக்கும், குணத்துக்கும் இன்னுமே கன்டிஷன் போடலாம். நீ வாடா. நான் உனக்கேத்த மாதிரி பார்க்கிறேன்.” என்றார் கிஷோரின் தாய் கிரிஜா.
“கிரிஜா வேண்டாம். இவளுக்கு அவள் அப்பாதான் செட்டாகுவாங்க” என்ற எச்சரிக்கை கொடுத்தார்.
“பரவாயில்ல வசந்தா. என் பங்குக்கு நானும் பார்க்கிறேன். நான் பார்த்தா உனக்கு ஓகேவா மணிமா.” என்று அவளிடமும் கேட்க,
“நூறு சதவீதம் பார்க்காமலேயே முடிச்சிப்பேன் அத்தை.” என்றாள் சந்தோசமாக.
அவள் சொன்ன நேரம் தேவதைகள் சொன்ன, ‘அப்படியே ஆகட்டும்’ பழிக்கப்போவதை அறியவில்லை மணிமேகலை.
“இது என்னோட மருமகளுக்கு அழகு” என கையால் திருஷ்டி சுத்தினார் கிரிஜா.
“ஏய்! உன் பழிவாங்குற மேட்டர் என்னாச்சி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த அலட்டு அலட்டுன. இங்க வந்து டமார்னு சம்மதிச்சிட்ட?” என்று அவளை தனியாக அழைத்துச்சென்று கேட்டான் கிஷோர்.
“ப்ச்… கேட்டது அத்தையாச்சே. அம்மா, அப்பான்னா பிடிவாதமா மறுத்திருப்பேன். அத்தைன்னு வரும்போது, அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி என்னால மறுக்க முடியல கிஷோர். அது ஏன்னு தெரியாது. ஷி இஸ் வெரி ஸ்பெஷல் டூ மீ.” என்றாள்.
“தேங்க்ஸ் எம்எம். நான் கூட எங்கம்மா மேல இந்தளவு பாசமா இருக்கேனா தெரியாது. அவங்க மேல நீ வச்சிருக்கிற பாசம் அலாதியானது. அவங்களை நீ நல்லா பார்த்துக்கிற எம்எம்.” குரல் கமற மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொன்ன நண்பனைப் பார்த்து, “சரி வா சாப்பிட்டுக் கிளம்பு” என பாசமாய் அழைத்தாள் தாயாய் மாறி.
“என்னது திரும்பவும் சாப்பாடா?” என்று அதிர்ந்த நண்பனின் தோற்றத்தில் தான், தன் உளறல் புரிய, “ஹி…ஹி… உணர்ச்சிவசப்பட்டுட்டேன்டா அம்பி” என்றாள் அவன் தோள்தட்டி.
மறுவாரம் தாங்கள் வேலை செய்யும் ஷ்ரவன் சாப்ட்வேர் கம்பெனிக்குள் நுழைய, எதிரே வந்தவனைப் பார்த்து அந்த இடத்திலேயே அசையாது நின்றவள், நண்பனின் கையைச் சுரண்டி, “ஏய் கிர்ரு, இது அவன்தான?” என்று கேட்க,
அதுவரை எப்பவும்போல் தங்கள் அலுவலகத்தின் பெயிண்டிங் போட்டோஸை ரசித்தபடி வந்தவன், “எது, எவன்தானன்னு கேட்கிற?” என்று திரும்பியவன் மணிமாறனைப் பார்த்ததும், “இவன் எங்க இங்கே? வா எம்எம் வேற பக்கமா போயிரலாம்” என்றான் வேகமாக.
“ஏன் வேற பக்கமா போகணும்? நாமதான் அவனைப் பார்த்திருக்கோம். அவன் நம்மைப் பார்த்தது கிடையாது. நினைவிருக்கா?”
“ஓ… ஆமாம்ல. அன்னைக்கு சார் ஃபுல் டைட்ல…” என்றவனை எம்எம் முறைக்க, “இப்படி முறைச்சி முறைச்சியே உன்னோட கண்ணு பெருசாகிருச்சி.”
“இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். பேசாம வா” என்றபடி எதிரில் வந்தவனைக் கவனிக்காது செல்ல,
அவனோ இவர்கள் எதிரில் வந்து, “ஹாய்! நீங்க இங்கதான் ஒர்க் பண்றீங்களா?” என்று புன்னகையுடன் கேட்டதும், அதிர்ந்தது என்னவோ மணிமேகலை கிஷோர்தான்.
கம்பெனி விஷயமாக பாரத் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் மணிமாறன், கம்பெனி பிரதிநிதியாக ஷ்ரவன் கம்பெனிக்கு வந்து, அங்கிருந்த மேலாளரை சந்தித்துத் திரும்பும் வழியில், சென்றவாரம் பார்த்த பெண்ணும் பையனும் வந்தனர். ‘தெரியாததுபோல் நடிக்கலாமா’ என்று முதலில் எண்ணியவன் அதைவிடுத்து, ‘நீங்க என்னைப் பழி வாங்கப்போறீங்களா? நான் வைக்குறேன்டா ஆப்பு’ என்றபடி அவர்களை நோக்கி வந்திருந்தான்.
“என்ன பதில் சொல்லாம முழிக்கிறீங்க? உங்க பழி வாங்குற வேலையெல்லாம் எப்படிப்போகுது? எதுக்காக பழி வாங்குறீங்கன்னு தெரியல. உங்களுக்கும் ரேகாவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு தோணுது. ஆமா, அன்னைக்கு எனக்கு முத்தம் கொடுத்த தான? சூப்பரா இருந்தது தெரியுமா?” என்று கண்ணடித்து, “இனிமேல் முத்தம் கொடுத்து பழிவாங்கணும்னா, இந்தா என்னோட விசிட்டிங் கார்ட். நேர்ல கூப்பிடு வர்றேன்” என்று அவள் கையில் திணித்தான்.
சற்று நேரம் அவர்களிடம் அசைவில்லை என்றதும், “ஹேய்! என்னாச்சி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பேந்த பேந்த முழிக்கிறீங்க. பழிவாங்குறவங்க பார்வை இப்படி இருக்கக்கூடாது. எப்படி இருக்கணும் தெரியுமா? இங்க என்னைப் பாரு எம்எம்” என்று அவளின் முகத்தை தன்புறம் திருப்பி, “இப்படி இருக்கணும்” என்று அவளை ஊடுருவுவதுபோல் ஒரு பார்வை பார்த்தான்.
‘பார்க்காத பார்க்காத ஐயையோ பார்க்காத…’ என்ற பாடல்தான் அவளின் நினைவுகளில் வந்தது. அவனைப் பழிவாங்கும் எண்ணம் எங்கோ பதுங்கி ஒழிந்திருந்தது. சில வினாடிகள் அந்த பார்வையினுள் நுழைந்தவளை…
“ஹலோ! என்ன பேசுறீங்க?” என்ற கிஷோரின் குரல் நினைவுக்கு கொண்டு வந்தது.
“நீங்க பேசினதைத் தவிர, நான் எதையும் பேசலையே” என அசால்ட்டாக சொல்லி, “உன் பழி வாங்கலுக்காக நான் வெய்ட் பண்றேன் செல்லம்” என்றபடி அவளின் கண் நோக்க, அவனின் பார்வையில் இருந்து தலையைத் திருப்பியவளை, சின்ன முறுவலுடன் பார்த்து “பை எம்எம். பை கிஷோர்!” என்று சென்றேவிட்டான்.
சில வினாடிகள் ஒன்றுமே புரியாமல் நின்று இருந்தவர்களுக்கு “இதெல்லாம் அவனுக்கு எப்படி?” என ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்து கேட்டு, “அப்ப அவன் அன்னைக்குத் தண்ணி அடிக்கலையா? நாம தான் ஏமாந்துட்டோமா?” என்றார்கள் இருவரும் கோரஸாக. சொல்லி முடித்ததும் கிஷோர் அவளை முறைக்க, “எப்பப் பார்த்தாலும் என்னை ஏன்டா முறைக்கிற? ஒரு புதுமொழி சொல்றேன் கேளு?” என்றாள்.
“புதுமொழி!”
“யா…யா…” என்று அவள் தலையாட்ட..
“அதுவும் நீ!”
“எஸ் கிர்ரு!” என்று காலரைத் தூக்க… “காலக்கொடுமைடா சாமி. சரி. உன் ஃப்ரண்டா வேற போயிட்டேன். பரவாயில்ல சொல்லு?” என்றான் வேண்டா வெறுப்பாய்.
“பொண்ணுங்க கண்ணு பெருசா இருந்தா பசங்களுக்குப் பிடிக்கும். இதுவே பசங்க கண்ணு பெருசா இருந்தா பொண்ணுங்க பயந்துருவாங்க. சோ இனிமேல் இப்படி முறைக்காத. ப்ச்… அதான் முறைக்காத சொன்னேன்ல. முதல்ல இது எப்படி நடந்ததுன்னு யோசிப்பியா. அதை விட்டுட்டு இப்ப என்னை முறைக்கிறது தான் பெரிய வேலை மாதிரி செஞ்சிட்டிருக்க?” என்றாள் முகம் சுருக்கி.
திரும்பவும் முறைக்கப் போனவன் அவளின் விளக்கத்தில் சிரித்து, “ஆமா எம்எம். நான் அன்னைக்கே சொன்னேன் தான, அவனுக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லைன்னு” என்று சொன்னான்.
“ஆனா, இவன் தண்ணியடிச்சி பேசினதாலதான, ரேகா அக்கா அந்த முடிவு எடுத்தாங்க” என்றவளுக்கு ரேகாவின் மீதான பாசத்தில் கண்கலங்கியது.
“அதுக்கப்புறம் விட்டிருக்கலாம்மா.” அவளோ கண்கலங்கப் பார்க்க, “ப்ச்… இது ஆஃபீஸ். ஏற்கனவே நம்ம ரெண்டுபேருக்கும் ரொம்ப நல்ல பெயர். வா மத்ததை பின்னாடி பேசிக்கலாம்” என்று தோழியை அழைத்துச்சென்றான்.
அன்று ஞாயிறு காலை அந்த பெரிய பல்பொருள் அங்காடியில், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி பில் போட நின்ற சரஸ்வதி, அங்கு இருந்த கிரிஜாவை அடையாளம் கண்டு அருகில் வந்து, “கிரிஜா எப்படி இருக்க? பார்த்து வருஷக்கணக்காகுது. இருந்தாலும் அப்படியே இருக்க. பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டேன்” என்ற குரலில் திரும்பினார் கிரிஜா.
தன்னை அழைத்தவரின் குரல் பிடிபடவே சிலவினாடிகள் ஆக, யாரெனத் தெரிந்ததும், “அக்கா எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றார் சந்தோஷத்தில்.
“நல்லா இருக்கோம்மா. நாம சந்திச்சி ஏழு வருஷம் இருக்கும்ல.” என்றவர் முகத்திலும் குரலிலும் அவ்வளவு மகிழ்ச்சி.
“ஆமாக்கா. இப்ப அவரும் இல்லை” என்று கிரிஜா சொன்னதும், சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
“எனக்குத் தெரியாதுமா. சாரி. எப்படி ஆச்சிது?” எனக் கேட்டார்.
“நாங்க உங்க ஏரியாவில் இருந்து போன மறுவருஷம், ஹார்ட் அட்டாக்ல…” எனும்போது கண்கள் கலங்க, பின் தன்னை சமாளித்து, “சே…நான் வேற பழசை எல்லாம் உளறிட்டு இருக்கேன். பையன் என்ன பண்றான் அக்கா?” என்று கேட்டார்.
“இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஜி.எம்மா இருக்கான்.”
“பையனுக்கு வேற கல்யாணம் பண்ணிட்டீங்களா? அந்த பொண்ணு போனதுக்கு அப்புறம் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டான். தப்பே செய்யாம தண்டனை அனுபவிச்சிட்டான் அக்கா உங்க பையன்?” என்றார் வருத்தமாக.
“எங்க கிரிஜா. பொண்ணு பார்க்கவான்னு கேட்டாலே ஓடிப்போறான். உனக்கே தெரியும் அவன் எப்படின்னு. அந்தப்பொண்ணு போனதில் இருந்து தான்தான் அதுக்குக் காரணம்னு நினைச்சே நொந்தவன். இப்ப இன்னொரு பொண்ணு தன்னால பாதிக்கப்பட்டிருவாளோன்னு பயப்படுறான். அப்படி கிடையாதுடான்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்றான். அவனோட போராடுறதே பெரிய வேலையாப் போச்சி. நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம்னு இருக்கான். ஹ்ம்… பார்க்கலாம் அவனுக்கானவ இனிமேலா பிறக்கப்போறா” என்றவர். “வீடு பக்கத்துலதான வாயேன் கிரிஜா?” என்றழைத்தார்.
“இல்லக்கா. வீட்டுக்குப் போகணும். மணி இன்னைக்கு நானே சமைக்கப்போறேன்னு ஒரு லிஸ்ட் கொடுத்து அனுப்பியிருக்கா. நேரத்துல போகல, என்னை ஒருவழி பண்ணிருவா. அப்புறம் இன்னைக்கு இரண்டு குடும்பம் பட்டினி தான்” என்று சிரித்தார்.
“உனக்கு ஒரு பையன் மட்டும்தான? இது யாரு உன்னையே விரட்டுறது? உன் பையன் சின்னப் பையன்ல. அதுக்குள்ள பையனுக்கு மேரேஜ் பண்ணிட்டியா என்ன?” என்றார் ஆச்சர்யமாய்.
“அச்சோ! இல்லக்கா. அவள் என் ப்ரண்டோட பொண்ணு. எங்க எதிர் ப்ளாட்ல தான் இருக்காங்க. நான்னா அவளுக்கு ரொம்ப இஷ்டம். சின்ன வயசுல இருந்தே என்கிட்ட வளர்ந்த பொண்ணு. முன்னாடி நாம அடுத்தடுத்த தெருவில் இருந்தோம்ல. இவங்க இன்னொரு தெருவில் இருந்தாங்க. நம்ம இடத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்ததால உங்களுக்கு தெரியாது. இப்ப ரெண்டு ஃபேமிலியும் ஒரே அபார்ட்மெண்ட்ல சொந்தமா ப்ளாட் வாங்கிட்டோம். அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற பொறுப்பைக் கூட என்கிட்டத்தான் கொடுத்திருக்காங்கன்னா பாருங்களேன்.” என்றவர் குரலில் அவ்வளவு பெருமை.
“ஓ… அப்ப ரொம்ப நல்லவங்களா தான் இருக்கணும் கிரிஜா. நானும் மாறனுக்கு பார்த்துட்டு தான் இருக்கேன். எதுவும் சட்டுன்னு அமையமாட்டேன்னுது. நல்ல இடமா பார்க்கணும்” எனும்போது, சட்டென்று இருவருக்கும் ஏதோ தோன்றி முகம்பார்த்தனர்.
“அக்கா அவங்க உங்காளுங்க தான். ஜாதகம் பார்த்து பொருந்தினா முடிச்சி போட்டுரலாம்.” சரஸ்வதியின் குழப்பமுகம் பார்த்து, “ஒத்துப்பாங்களான்னு யோசிக்கிறீங்களாக்கா? கண்டிப்பா ஒத்துப்பாங்க” என்று கைபேசி எண் வாங்கி இருவரும் மனநிறைவுடன் சென்றனர்.