அத்தியாயம் – 12
கோடீஸ்வரனான முகேஷ், தனது நெருங்கிய நண்பனும் கமிஷனருமான வெங்கடேஷிடம் முல்லையைப் பற்றி மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தான்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வெங்கடேஷின் மனதில் அச்சத்தை விதைத்துக்கொண்டே இருந்தது.
முகேஷின் குரலில் இருந்த பிடிவாதமும், முல்லையைப் பற்றிப் பேசும்போது அவன் கண்களில் தெரிந்த வெறித்தனமும், அவனுக்கு ஏதோ மிகப்பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்ற உணர்வை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல்,
“டேய் முகி… உன் மனசுக்குள்ள இப்படியொரு எண்ணம் இருக்குன்னு முக்தா மேடத்துக்குத் தெரிஞ்சா போதும்… உன்னை உயிரோட விடமாட்டாங்கடா,” என்றான்.
ஆனால், வெங்கடேஷின் வார்த்தைகள் முகேஷை பயமுறுத்தவில்லை.
மாறாக, அவன் சற்றும் தயக்கமின்றிச் சிரித்தான்.
“முக்தா மட்டும் இல்லடா… இந்த உலகத்துல யார் வந்து என்னை எதிர்த்தாலும், நான் முல்லையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.”
அவனுடைய குரலில் இருந்த பிடிவாதம் வெங்கடேஷை மேலும் கலங்கச் செய்தது.
“டேய்… ஆனாலும் அந்தப் பொண்ணு உனக்கு மருமகள் முறைடா,” என வெங்கடேஷ் எப்படியாவது முகேஷின் எண்ணத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் சொன்னான்.
ஆனால், அடுத்த நொடியே முகேஷின் கையில் இருந்த மதுபானக் கோப்பை சுவரில் மோதி சிதறியது.
அவனுடைய கண்கள் கோபத்தில் சிவந்தன.
அடுத்த நொடியில் வெங்கடேஷின் சட்டையைப் பற்றியவன், நண்பன் என்றும் பாராமல் அவனது கழுத்தை இறுக்கிப் பிடித்தான்.
“டேய்… விடுடா!” என்று வெங்கடேஷ் திணறியபடி கத்தினான்.
ஆனால் முகேஷின் பிடி தளரவில்லை.
“இந்த உறவு முறையெல்லாம் எனக்கு ஒரு குறையே இல்ல. எனக்கு என் முல்லை வேணும்… அவ்வளவுதான்!”
அவனுடைய குரலில் இருந்த வெறித்தனம் வெங்கடேஷின் உடலெங்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
சில நொடிகளுக்குப் பிறகுதான் முகேஷ் அவனது கழுத்திலிருந்த பிடியைத் தளர்த்தினான்.
மூச்சை இழுத்துவிட்டபடி வெங்கடேஷ் அவனைப் பார்த்தான்.
ஆனால் முகேஷின் கண்களில் இருந்த வெறி மட்டும் துளியும் குறையவில்லை.
“அவளை நான் முதல் முறையா பார்த்த அந்த நிமிஷத்துலேயே…” என்று தொடங்கியவன், உதட்டில் ஒரு வித்தியாசமான புன்னகையை வரவழைத்தான்.
“இனிமே அவதான் என் ஆசைநாயகின்னு முடிவு பண்ணிட்டேன்.”
வெங்கடேஷ் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“அவ பெத்தெடுத்த எங்க வீட்டு வாரிசையே நாங்க காவு கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனா… எக்காரணத்தைக் கொண்டும் முல்லையை மட்டும் நான் இழந்துடக் கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.”
அந்த வார்த்தைகளைக் கேட்ட வெங்கடேஷின் முகத்தில் வெறுப்பும் அதிர்ச்சியும் ஒன்றாகக் கலந்தன.
இவன் தன் நண்பனா?
இல்லை… முல்லையின் வாழ்க்கையை அழிக்கத் தயாராக இருக்கும் ஒரு விபரீதமான மனிதனா?
அவனுக்கே புரியவில்லை.
“எனக்குப் புரியுதுடா முகி… ஆனாலும் முக்தா மேடத்தை மீறி உன்னால முல்லையை அடைய முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டான்.
முகேஷ் சற்றும் யோசிக்கவில்லை.
“முடியும்…”
சில நொடிகள் இடைவெளி விட்டவன், அவனது கண்களை நேராகப் பார்த்தபடி,
“முடிஞ்சே ஆகணும்,” என்றான்.
அந்த இரண்டு வார்த்தைகளில் இருந்த உறுதி வெங்கடேஷை அமைதியாக்கியது.
“முக்தாவுக்கு வேணும்னா அவளோட மகன் வாழ்க்கை மட்டும் முக்கியமா இருக்கலாம். ஆனா எனக்கு…” என்று கூறியவன் சற்றே சிரித்தான்.
“நான் முல்லையோட வாழப்போற எதிர்காலம்தான் முக்கியம்.”
“டேய்… இருந்தாலும், உன் பையனோட குழந்தையைச் சுமந்த ஒரு பெண்ணை எப்படி டா நீ உன் ஆசைநாயகியா நினைக்க முடியும்?”
வெங்கடேஷின் கேள்விக்கு முகேஷ் பதில் சொல்லவில்லை.
சில நொடிகள் அவனை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பின்னர் அவனது உதட்டின் ஓரத்தில் ஒரு விஷமமான புன்னகை மலர்ந்தது.
“எனக்கு உன்னோட அறிவுரை எதுவும் தேவையில்லை.”
மேசையின் மீது கிடந்த மதுபானப் பாட்டிலை எடுத்தான்.
“ஒழுங்கா என்னோட முல்லை எங்கே இருக்கான்னு தேடிக் கண்டுபிடி. அவளை எப்படியாவது என்கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு.”
அவ்வளவுதான்.
அதற்குப் பிறகு வெங்கடேஷிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
பாட்டிலை அப்படியே வாயில் வைத்தவன், மதுவை மடமடவெனக் குடித்தான்.
பாட்டிலை மேசையின் மீது வைத்தபோதும் அவனுடைய கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.
அவனது உதடுகளில் இருந்து மீண்டும் மீண்டும் ஒரே பெயர் மட்டும் வெளிவந்தது.
“முல்லை…”
“முல்லை…”
அந்தப் பெயரை ஒவ்வொரு முறையும் உச்சரித்தபோதும், அவனது மனதில் பதிந்திருந்த ஆசை இன்னும் ஆழமாகிக்கொண்டே இருந்தது.
—
அதே நேரத்தில்…
கதிரின் இல்லத்தில் இருந்த கந்தனின் கைபேசி ஒலித்தது.
அழைத்தது அவனுடைய சக வேலையாளி ராஜா.
“சொல்லு ராஜா… நான் கேட்ட விஷயம் என்னாச்சு?” என்று கந்தன் கேட்டான்.
“அந்த முகேஷ் குடும்பம் பற்றிய விவரத்தை எல்லாம் சேகரிச்சுட்டேன் கந்தா. உன்னோட மெயிலுக்கு அனுப்பிட்டேன்.”
“ஓ… ரொம்பத் தேங்க்ஸ் ராஜா.”
“ஆமா… எதுக்காக அவங்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னன்னு சொல்லவே இல்லையே?”
“அவசியம் இருக்கு ராஜா. நான் உனக்கு அப்புறம் விவரமா நேர்ல வந்து சொல்றேன். எப்படியிருந்தாலும் உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றி.”
“சரி கந்தா.”
அதோடு அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
கந்தன் கைபேசியைக் கீழே வைத்தான்.
அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டிருந்த நிலா, அவனருகே வந்தாள்.
“என்னாச்சு? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?”
“மெயில் வந்திருக்கு. இனிதான் பார்க்கணும்.”
அருகில் இருந்த தேநீரை எடுத்துப் பருகியபடியே, கந்தன் தனது மெயிலைத் திறந்தான்.
ஒவ்வொரு தகவலாக அவன் படிக்க ஆரம்பித்தான்.
சில நொடிகளிலேயே அவனது முகபாவனை மாறியது.
அதைக் கவனித்த நிலா,
“என்னாச்சு கந்தா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“அந்த முகேஷ் முக்தாவுக்கு ஒரே பையன்தான். அவனும் வெளிநாட்டுல இருக்கிறதாதான் தகவல் கிடைச்சிருக்கு.”
“சரி… ஆனா இவங்க ஏன் முல்லையைப் பிடிச்சு வச்சி, அவ குழந்தையைப் பலி கொடுக்கப் பார்க்குறாங்க?”
நிலாவின் கேள்விக்குக் கந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“அந்த உண்மை எல்லாம் தெரியணும்னா… அது ரெண்டு பேர் வாய் திறந்தாதான் கண்டுபிடிக்க முடியும்.”
“யாரு? முகேஷும் முக்தாவுமா?”
நிலாவின் கேள்வியைக் கேட்ட கந்தன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“இல்ல…மங்கலமும் அந்தக் கமிஷனர் வெங்கடேஷும்.”
அவன் மீண்டும் மெயிலைப் பார்த்தான்.
அவர்களிடமிருந்து எப்படி உண்மையை வெளியே கொண்டுவருவது?
எந்த வழியில் அணுகுவது?
என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
அப்போது நிலா வேறு ஒரு விஷயத்தை நினைத்தாள்.
“சரி… அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ சித்தி வேற முல்லையை நம்ம கதிரோட பொண்டாட்டியா நினைச்சு என்னென்னமோ பேசுறாங்களே… இதெல்லாம் எங்க போய் முடியும்?”
கந்தன் சற்றே சிந்தித்தான்.
“ம்… நானும் அதை யோசிச்சுப் பார்த்தேன். ஆனா கதிர் வாழ்க்கையை விட்டு கண்மணி போனதும், முல்லை வந்ததும்… எல்லாமே ஏதோ ஒரு காரணக் காரியத்துக்குத்தான் நடக்குற மாதிரி எனக்குத் தோணுது.”
நிலா புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“என்ன சொல்றீங்க? எதுக்காக இதெல்லாம் நடக்குது?”
“ஏன் நிலா… உண்மையாவே கதிரும் முல்லையும் இன்னொரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சா அது நல்லதுதானே?”
“மாமா… என்ன சொல்றீங்க?”
நிலாவின் கண்கள் விரிந்தன.
கந்தன் அமைதியாக அவளைப் பார்த்தான்.
“எனக்கு என்னமோ… கதிரையும் முல்லையையும் ஒண்ணா சேர்த்து வச்சிட்டா, கதிர் பொண்ணுக்கு அம்மாவும், முல்லை பையனுக்கு அப்பாவும் கிடைச்சிடுவாங்கன்னு தோணுது.”
அந்த வார்த்தைகள் நிலாவை சில நொடிகள் மௌனமாக்கின.
அவள் ஆழமாக யோசித்தாள்.
“ஆனா… கதிர் இதுக்குச் சம்மதிப்பானா?”
கந்தன் சிரித்தான்.
“ஏன்? உன் அண்ணன் என்ன பெரிய ஆண் அழகனா?”
நிலா அவனைப் பார்த்து முறைத்தாள்.
“முதல்ல முல்லை இதுக்குச் சம்மதிப்பாங்களா என்பதைதான் நம்ம யோசிக்கணும்.”
“ம்… ஆமா.”
நிலாவின் முகம் உடனே சோகமானது.
“பாவம் முல்லை… யோசிச்சுப் பாருங்க. மூணு மாசம் சுயநினைவே இல்லாம இருந்த ஒரு பொண்ணு திடீர்னு கண் விழிச்சுப் பார்க்கும்போது… கழுத்துல தாலி, வயத்துல பிள்ளைன்னு தெரிஞ்சா… அவளோட மனநிலை எப்படி இருக்கும்?”
கந்தனின் முகத்திலும் வேதனை படர்ந்து,
“ம்… பாவம் முல்லை. கண்டிப்பா நம்ம அவங்களுக்கு உதவி பண்ணணும்.” என்றான்.
“அப்போ… முல்லையை நம்ம கதிரோட சேர்த்து வைக்க முயற்சி பண்ணலாமா?” நிலா ஆசையாகக் கேட்டாள்.
கந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
பின்னர்,
“ம்… முயற்சி பண்ணலாம்,” என்றான்.
அவன் அங்கிருந்து எழுந்து அறையிலிருந்து கீழே இறங்கி வந்தான்.
அங்கே கீதா ஒரு தாளில் மும்முரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு எதிரே கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான்.
கந்தன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
பிறகு, கதிரைப் பார்த்து கண்களால்,
‘என்ன விஷயம்?’
என்று கேள்வி எழுப்பினான்.
கதிரோ பதில் சொல்லாமல் கீதாவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.
கந்தனின் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் முளைத்தது.
‘இங்கே என்ன நடக்குது?’
அவன் பார்வை மீண்டும் கீதாவின் கைகளில் இருந்த அந்தத் தாளின் மீது சென்றது.
“என்ன மாமி… என்ன பண்றீங்க?” என்று கந்தன் கேட்டபடி கீதாவின் அருகில் சென்றான்.
கீதா கையில் வைத்திருந்த தாளிலிருந்து பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
“மாப்பிள்ளை… நீங்க நிலாவை அழைச்சிட்டு போய், இந்தத் தாள்ல இருக்குற பொருளையெல்லாம் வாங்கிட்டு வாங்க.”
“என்ன இது?”
கந்தன் அவளிடமிருந்த தாளை வாங்கிப் பார்த்தான்.
அதில் மளிகை பொருள், எண்ணெய், சோப்பு, குழந்தைகளுக்கான துணிகள் என வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையான ஏராளமான பொருட்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.
அதைப் பார்த்த கந்தன் புருவத்தை உயர்த்தினான்.
“என்ன மாமி… கடை வைக்கப் போறீங்களா?”
அவன் சிரித்தபடி கேட்டதுதான் தாமதம்.
கீதா உடனே அவனை முறைத்துப் பார்த்தாள்.
“வீட்டுல இரண்டு குழந்தைங்க பிறந்து இருக்கு. இந்த வீடு வீடாவா இருக்கு?”
அவளுடைய பார்வை உடனே கதிரை நோக்கித் திரும்பியது.
“இது ஒரு வீடா இருக்கணும்னா முதல்ல எல்லாமே ஒழுங்கா இருக்கணும்.”
கதிர் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஆமா… ரூமை சரி பண்ண ஆள் வராங்களா இல்லையா?” என்று கீதா கேட்டாள்.
“நானே சரி பண்ணிடுறேன் மாமி,” என்று கந்தன் உடனே சொன்னான்.
“அப்படின்னா துறை பொண்டாட்டியையும் புள்ளையையும் அவங்க ரூமுக்கு அழைச்சிட்டுப் போகச் சொல்லுங்க.”
“அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமி…”
கந்தன் பேச்சை முடிப்பதற்குள் கீதா மீண்டும் கதிரை நோக்கித் திரும்பினாள்.
“ஆமா… இவரோட பொண்டாட்டி இரட்டைக் குழந்தை பெத்துக்கப் போறாங்கன்னு இவருக்குத் தெரியும் தானே?”
கதிரின் முகம் சற்றே இறுக்கமானது.
“அப்படி இருக்கும் போது ஏன் ஒரே ஒரு தொட்டில் இருக்கு?”
அந்தக் கேள்வியில் கதிர் திடுக்கிட்டுப் போனான்.
அவன் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த நிலா ஏதோ சொல்ல வாயைத் திறந்தாள்.
அதைக் கவனித்த கீதா உடனே,
“என்ன? என்னோட பேத்தியை வச்சி எதாவது தப்பா கணக்கு போட்டிங்களா?” என்று கேட்டாள்.
“ஐயோ! அப்படி எல்லாம் இல்ல சித்தி…” என்று கதிர் பதறினான்.
கீதாவின் முகத்தில் இருந்த கோபம் மட்டும் குறையவில்லை.
“இங்க பாருங்க… உங்க எல்லோருக்கும் சொல்லிக்குறேன். இப்போ மட்டும் இல்ல… என் பேத்தி வளர்ந்தாலும் அவளை யாரும் ஒரு குறை சொல்லக்கூடாது.”
அவளது குரலில் இருந்த கண்டிப்பு அந்த அறையையே அமைதியாக்கியது.
“யாரும் சொல்ல மாட்டாங்க சித்தி,” என்று நிலா மெதுவாகச் சொன்னாள்.
ஆனால் கீதாவின் மனக்குறை இன்னும் தீரவில்லை.
“ரெண்டு டாக்டர் இந்த வீட்டுல இருந்தும், மாசமா இருக்குற பொண்ணுக்கு மருந்து மாத்திரை தராம விட்டுட்டீங்களா?”
அவள் கேட்ட கேள்விக்கு யாரிடமும் உடனடி பதில் இல்லை.
கதிரும் நிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
கண்மணி கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்ததால்தான் கதிரின் பெண் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதைச் சொல்ல முடியாமல் இருவரும் தடுமாறினர்.
அந்த உண்மையைச் சொல்லிவிட்டால், இந்த வீட்டில் இன்னொரு புயல் கிளம்பிவிடும்.
அதை உணர்ந்த கந்தன் உடனே பேச்சை மாற்றினான்.
“சரி மாமி… ஆனது ஆச்சு. இப்போ ஏன் அதையெல்லாம் பேசுறீங்க? நிலா… வா. நம்ம போய் purchase பண்ணிட்டு வரலாம்.”
என்று நிலாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அவர்கள் வாசலை நெருங்கியபோது கீதாவின் குரல் மீண்டும் கேட்டது.
“மாப்பிள்ளை…”
கந்தன் திரும்பிப் பார்த்தான்.
“வரும்போது சுறா மீன், கார மீன் வாங்கிட்டு வாங்க.”
கந்தன் சிரித்தான்.
“எல்லா மீனும் வாங்கிட்டு வரேன் மாமி.”
கந்தனும் நிலாவும் வெளியே சென்றனர்.
அவர்கள் சென்றதும் வீட்டில் மீண்டும் அமைதி நிலவியது.
சில நொடிகள் கீதாவையே பார்த்துக்கொண்டிருந்த கதிர்,
“சித்தி…” என்று சோகமாக அழைத்தான்.
கீதா அவனை நோக்கித் திரும்பக்கூட இல்லை.
“ஒழுங்கா உன் பொண்டாட்டி, பிள்ளையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போய் வச்சிக்கோ.”
அவ்வளவு மட்டும் சொல்லிவிட்டு கீதா நேராகச் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
கதிர் சில நொடிகள் அங்கேயே நின்றான்.
பின்னர்த் தயக்கத்துடன் தனது அறைக்குள் சென்றான்.
அங்கே முல்லை இரண்டு குழந்தைகளுக்கும் நடுவே பேய் அறைந்ததைப் போல அமர்ந்திருந்தாள்.
அவளது முகத்தில் குழப்பம்.
இந்த வீட்டில் தனக்கான இடம் எது என்பதே புரியாத ஒரு தவிப்பு.
கதிர் அவளைப் பார்த்து,
“முல்லை… நீங்க என்னோட ரூமுக்கு…” என்று சொல்ல தயங்கினான்.
முல்லை அவனைப் பார்த்தாள்.
“ரெண்டு நாளைக்குத்தானே டாக்டர் சார்… நான் சமாளிச்சுக்கிறேன்.”
அவளது குரலில் தயக்கமும் சங்கடமும் தெரிந்தது.
கதிர் மெதுவாகத் தலையசைத்து,
“தேங்க்ஸ் முல்லை.” என்றான்.
அவன் அருகில் இருந்த குழந்தைகளில் ஒன்றை மெதுவாகத் தூக்கிக்கொண்டான்.
முல்லை மற்றொரு குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
இருவரும் எந்த வார்த்தையும் பேசாமல் கதிரின் அறைக்குள் சென்றனர்.
குழந்தையைப் படுக்க வைத்தபடி கதிர்,
“நான் இன்னொரு தொட்டில் ஆர்டர் போட்டு இருக்கேன் முல்லை,” என்றான்.
முல்லை எதுவும் சொல்லாமல் அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
அவளுடைய பார்வை சுவரில் இருந்த புகைப்படங்களில் நின்றது.
கதிர் சண்டைப் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள்.
பல்வேறு போட்டிகளில் அவன் பெற்ற வெற்றிகள்.
கடுமையான முகத்துடன் பயிற்சி செய்துகொண்டிருந்த கதிரின் புகைப்படங்கள்.
அவள் அவற்றைப் பார்த்தபடியே குழந்தையை மெதுவாகக் கட்டிலில் படுக்க வைத்தாள்.
கதிர் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“சாரி முல்லை. எங்களால உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு.”
அவள் உடனே தலையசைத்தாள்.
“என்ன டாக்டர் சார் நீங்க…அன்னைக்கு நீங்க மட்டும் என்னைக் காப்பாத்தலைன்னா… நானும் என் பிள்ளையும் இந்நேரம் உயிரோட இருந்திருக்க மாட்டோம்.”
கதிரின் முகம் உடனே இறுக்கமானது.
“சரி… சரி… இனி அதெல்லாம் பேச வேண்டாம்.”
அவன் குழந்தைகளைப் பார்த்தான்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் சித்திக்கு போய் ஹெல் பண்றேன்.”
சில நொடிகள் தயங்கிய முல்லை,
“சார்… நான் வேணும்னா போய் உதவி பண்ணவா?” என்று கேட்டாள்.
குழந்தைகள் இருவரும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தனர்.
கதிர் அவர்களைப் பார்த்துவிட்டு,
“சரி… வாங்க. ரெண்டு பேரும் போவோம்.”
பிறகு சற்றே தயக்கத்துடன்,
“ஆனா… என் சித்தி எதாவது பேசுனா, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.”
முல்லை மெதுவாகத் தலையசைத்தாள்.
“அதெல்லாம் நான் நினைக்க மாட்டேன் டாக்டர் சார்.”
அவள் முதலில் அறையிலிருந்து வெளியேறினாள்.
அவளைப் பின்தொடர்ந்து கதிரும் சமையலறைக்குச் சென்றான்.
முல்லையை மேலிருந்து கீழ்வரை பார்த்த கீதா,
“குழந்தைங்க என்ன பண்றாங்க?” என்று கேட்டாள்.
“அவங்க தூங்குறாங்க,” என்று முல்லை தயக்கத்துடன் பதிலளித்தாள்.
“அப்போ நீயும் போய்த் தூங்கு.”
முல்லை சற்றே திகைத்தாள்.
“இல்ல… உங்களுக்கு நான் எதாவது உதவி…”
அவள் சொல்லி முடிப்பதற்குள் கீதா கசப்பான சிரிப்புடன்,
“ஓ… நீ உதவி பண்ணித்தான் நான் இத்தனை நாள் உன் புருஷனுக்கும் உன் நாத்தனாருக்கும் சமைத்துப் போட்டேனா?”
“இல்லங்க… நான் அப்படிச் சொல்ல வரல…”
முல்லையின் குரல் தாழ்ந்தது.
கீதா அவளை நேராகப் பார்த்தாள்.
“போ… போய்க் குழந்தைங்க தூங்கும்போதே நீயும் போய்ப் படு.”
“ம்…”
வேறு எதுவும் சொல்ல முடியாமல் முல்லை தலையசைத்தாள்.
அவள் மீண்டும் கதிரின் அறைக்குள் சென்றாள்.
“சித்தி…”
கதிர் மெதுவாகப் பேச முயன்றான்.
ஆனால் கீதா அவனை நிறுத்திவிட்டாள்.
“இங்க பாரு… நான் உன்கூடப் பேச தயாரா இல்ல.”
அவ்வளவு மட்டும் சொல்லிவிட்டு அவள் வேகமாகச் சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.
கதிர் பெருமூச்சுவிட்டான்.
“சித்தி… உங்களுக்கு உடம்பு சரியில்லை. ப்ளீஸ்… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.”
கீதா அவனை நோக்காமல்,
“எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ போய் உன் பொண்டாட்டி தூங்கும் போது குழந்தை எழுந்துக்காம பார்த்துக்கோ. நைட்லாம் அவ பால் கொடுத்தா தூக்கம் இல்லாம போயிடும்,” என்றாள்.
அந்த வார்த்தைகளுக்குப் பிறகு கதிரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அமைதியாகத் தனது அறைக்குள் நுழைந்தான்.
அங்கே…
கட்டிலின் ஓரத்தில் முல்லை ஒடுங்கிப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய முகத்தில் பல நாட்களாகச் சுமந்திருந்த சோர்வு தெரிந்தது.
கதிர் சில நொடிகள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பின்னர் அருகில் இருந்த போர்வையை எடுத்து, அவளுக்கு அருகில் மெதுவாக வைத்தான்.
அவளை எழுப்ப விரும்பவில்லை.
அறையின் ஓரத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.
கண்களை மூடியபடி நாற்காலியில் சாய்ந்தான்.
ஆனால் அவனுடைய மனதுக்குள் மட்டும் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே அப்படியே உறங்கிப் போயிருந்தனர்.
அறையில் நிலவிய அமைதியை திடீரெனக் குழந்தையின் அழுகை கலைத்தது.
குழந்தை அழும் சத்தம் கேட்டதும் முல்லை பதறியடித்து எழுந்தாள்.
“அய்யோ…”
அவள் உடனே குழந்தையைத் தூக்க முயன்றாள்.
அதே நேரத்தில், கதிரும் அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தவன்,
“ஏன் செல்லம் அழறீங்க!?”
என்று கேட்டபடியே, முல்லையின் ஆண் குழந்தையை அவன் வேகமாகத் தூக்கிக்கொண்டான்.
“நீங்க இருங்க முல்லை… நான் குழந்தையை வெளியே தூக்கிட்டு போறேன்.”
குழந்தையைத் தூக்கிக்கொண்டு கதிர் அறையை விட்டு வெளியே வந்தான்.
அவனைப் பார்த்ததும் கீதாவின் முகம் மலர்ந்தது.
“அடடே… என் பேரன் எழுந்தாச்சா?”
என்று ஆசையுடன் கேட்டவள், கதிரிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
“என் செல்லப் பேரன்… ஏன் அழறிங்க?”
குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு கீதா கொஞ்சத் தொடங்கினாள்.
அப்போது சமையலறையிலிருந்து கையில் கரண்டியுடன் கந்தன் வெளியே வந்தான்.
“என்ன மச்சான்… நீயும் குழந்தைங்க கூடத் தூங்கிட்ட போல?”
கதிர் சற்றுத் தயக்கத்துடன் அவனைப் பார்த்தான்.
“ஆமா… நீங்க கடைக்குப் போயிட்டு அதுக்குள்ள வந்தாச்சா?”
“நாங்க வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சு.”
கதிர் ஆச்சரியத்துடன்,
“அவ்வளோ நேரம் தூங்கிட்டேனா?”
என்று கேட்டான்.
அதைக் கேட்ட கீதா சிரித்தாள்.
“என் பேரன் சமத்து பையன். அழுததும் தூக்குனா அமைதியா இருக்குறான். அதனாலதான் உங்க தூக்கமும் கலையல.”
கதிர் குழந்தையைப் பார்த்து மெதுவாகச் சிரித்தான்.
அந்த நேரத்தில் கந்தன் சமையலறையைப் பார்த்துவிட்டு,
“மாமி… சமையல் ரெடி.”
என்றான்.
அருகில் இருந்த நிலாவும்,
“வாங்க… எல்லாரும் சாப்பிடலாம்,” என்று அழைத்தாள்.
ஆனால் கீதா உடனே,
“மாப்பிள்ளை… இவரைப் போய் அவரோட பொண்டாட்டிக்கூடச் சாப்பிடச் சொல்லுங்க. நான் குழந்தைங்கள பார்த்துக்குறேன்,” என்றாள்.
கதிர் எதுவும் சொல்லாமல் தலையசைத்தான்.
அவன் மீண்டும் அறைக்குள் சென்றான்.
அங்கே முல்லை குழந்தையைத் தூக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“முல்லை… வாங்க. சாப்பிடலாம்.”
முல்லை மெதுவாக எழுந்தவள்
கதிரைப் பின்தொடர்ந்து வெளியே வந்து குழந்தையை நிலாவிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டு மேசைக்கு வந்தாள்.
அங்கே அவளுக்காகத் தனியாகப் பரிமாறப்பட்டிருந்த உணவைப் பார்த்ததும் முல்லையின் கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
அவளுடைய தட்டில் சுறா புட்டு, மீன் குழம்பு, முட்டை என்று விதவிதமான உணவுகள் இருந்தன.
அதைப் பார்த்ததும் அவளுடைய முகம் மாறியது.
கண்களில் திடீரெனப் பயம் படர்ந்தது.
அவள் அந்தத் தட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கதிர் முல்லையின் அருகில் அமர்ந்து,
“சாப்பிடுங்க முல்லை,” என்றான்.
முல்லை அவனைப் பார்த்து தடுமாறியவள், இறுதியில் மெதுவாக,
“சார்…எனக்கு… மீன் வேண்டாம்.”
முல்லையின் குரல் நடுங்கியது. அவளுடைய கண்கள் கலங்கின.
அவள் ஏன் அழுகிறாள் என்பது கதிருக்குப் புரியவில்லை.
“என்னாச்சு முல்லை?” என்று கதிர் குழப்பமாகக் கேட்டான்.
அந்த நேரத்தில் கீதா எழுந்து வந்து முல்லையைப் பார்த்தாள்.
“என்ன? மீன் வேண்டாமா?”
முல்லை தலையைக் குனிந்தபடி, கண்களில் நீர் தேங்க,
“எனக்கு மீன் வேண்டாம்…” என்றாள்.
கீதாவின் முகம் உடனே மாறியது.
“ஏன்? நான் சமைச்சா நீ சாப்பிட மாட்டியோ?”
முல்லை அவசரமாகத் தலையசைத்தாள்.
“நான் சாப்பிடுவேன்… ஆனா… மீன் மட்டும் வேண்டாம்.”
அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின.
“சரி சரி… மீன் வேண்டாம்னா விடுங்க சிஸ்டர், அதுக்கு ஏன் அழறீங்க?” என்று கந்தன் சமாதானம் செய்தான்.
கீதா உடனே கதிரை பார்த்து,
“என்னடா… உன் பொண்டாட்டி என்ன ட்ராமா பண்ணுறா?” என்றார்.
கதிர் இன்னும் எதுவும் புரியாமல் முல்லையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“முல்லை… கொஞ்சமாவது சாப்பிடலாமே,” என்று அவன் கெஞ்சினான்.
முல்லை தலையசைத்தாள்.
“ஹ்ம்… ஹ்ம்… எனக்கு வேண்டாம்.”
அதைக் கேட்ட கீதா கோபமாக முல்லையை முறைத்தாள்.
“உன் பொண்டாட்டி ரெண்டு பிள்ளைங்களுக்குப் பால் கொடுக்கணும். தாய் பால் சுரக்கணும்னா இப்படி மீன், முட்டை எல்லாம் சாப்பிடணும் தானே?”
முல்லை உடனே,
“நான் முட்டை சாப்பிடுறேன்… மீன் வேண்டாம்,” என்றாள்.
“ஏன் வேண்டாம்?”
கீதாவின் குரலில் கோபம் அதிகரித்தது.
முல்லை சில நொடிகள் தயங்கினாள்.
அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின.
“அதுல… அதுல முள் இருக்கும்…”
அவ்வளவுதான்.
கதிர், நிலா, கந்தன் மூவரும் சட்டென்று சிரித்துவிட்டனர்.
முல்லை மட்டும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்களைப் பார்த்தாள்.
கந்தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,
“சிஸ்டர்… முள் இல்லாத மீன் கடல்லையே இல்லையாம்!” என்று கிண்டல் செய்தான்.
முல்லையின் முகம் இன்னும் வாடியது.
கீதாவுக்கு அந்தச் சிரிப்பு கூடக் கோபத்தை அதிகப்படுத்தியது.
“இப்போ என்ன? உனக்கு நான் பண்ண சமையல் பிடிக்கல… அப்படித்தானே?”
“இல்ல… நான் அப்படி நினைக்கல…”
முல்லை பதறிப் பேசுவதற்குள் கீதா வேகமாக அவள் பரிமாறியிருந்த உணவை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
அனைத்தையும் அங்கே வைத்துவிட்டு, நேராகக் குழந்தையுடன் தன்னுடைய அறைக்குள் சென்றவள் கதவை சாத்திக்கொண்டாள்.
முல்லை அதிர்ச்சியடைந்தவள்,
“ஐயோ… நான் அப்படி எல்லாம் நினைக்கல…” என்று பதறியபடி சொன்னாள்.
நிலா அவளைப் பார்த்து, “ஏன் முல்லை… நீங்க வெஜிடேரியனா?” என்று கேட்டாள்.
“இல்லிங்க… நான்…” முல்லை ஏதோ சொல்ல வர, கதிர் அவளை இடைமறித்தான்.
“என் சித்திக்காக ஒரு வாய் சாப்பிட்டு இருக்கலாமே முல்லை.”
அவனுடைய குரலில் லேசான கோபம் கலந்திருந்தது.
முல்லை அவனைப் பார்த்தாள்.
“இல்ல டாக்டர் சார். என்னோட தொண்டையில…”
“நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்.” என்றவன் சட்டென்று எழுந்து செல்ல, முல்லையின் விழிகள் மேலும் ஈரமானது.
– தொடரும்.
1 comment
பாவம் முல்லை அனைவர்க்கும் அவளை கண்டாலே எப்படி இருக்குனு தெரியல