Stories that touch hearts

Home  /  02. S.K (மாற்றான் தோட்டத்து முல்லைப்பூ)  /  Chapter 10

CHAPTER 10

முல்லைப்பூ – 10

By S.K Velan · October 23, 2026

4

பாகம் – 10

“கண்மணி….

என் நண்பன் சுவாமிநாதனோட தோழியா எனக்கு அறிமுகமானா. அவளோட பிடிவாதமான சுபாவம், சுதந்திரமான பேச்சு, ஏனோ அன்னைக்கு எனக்குப் பிடிச்சிருந்தது. அப்புறம் எங்க நட்பு காதலா மாறுச்சு.

ஆனா, போகப் போகத்தான் அவளோட உண்மையான குணம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது.” என்ற கதிர் தன் கைகளைக் கூப்பிக் கொண்டு தரையைப் பார்த்தபடி தொடர்ந்தான்.

“என்னை அவள் ஆசைப்படுற மாதிரி, ரொம்ப சகஜமா இருக்கச் சொல்லி கம்பெல் பண்ணுவா. கல்யாணத்துக்கு முன்னாடியே நம்ம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாமுன்னு அவ சொன்னா. எனக்கு அதுல விருப்பம் இல்லை. நான் என் சித்திகிட்ட எங்க காதலை பற்றி பேசுறேன் சொல்லி அவளை சமாதானம் பண்ணேன்.”

“போன்ல என் சித்திகிட்ட நான் ஒரு பொண்ணை நேசிக்கிறேன் என்ற உண்மையையும் சொன்னேன். ஆனா அவங்க நிலாவுக்கு பெரிய இடத்துல இருந்து சம்மந்தம் வந்துருக்கு. பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்க நான் சம்மதம் சொல்லிட்டேன்னு சொல்லி, என் காதலை பற்றி எந்த விவரமும் கேட்காம போனை கட் பண்ணிட்டாங்க. நான் நேர்ல போய் சித்தியை பார்த்து என் காதலை பற்றிச் சொல்ல முடிவு பண்ணேன்.”

“ஆனா, கதிர், உங்க சித்தி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. நாம எதுக்கு அவங்க கிட்ட அனுமதி கேட்கணும்? நாம ரெண்டு பேரும் தனியா ஒரு ஃபிளாட் எடுத்து ‘லிவிங்-இன்’ வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். யாருக்கும் கட்டுப்பட தேவையில்லைன்னு கண்மணி அலட்சியமா சொன்னா”

“அவ பேசினதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியா இருந்தது. என்னைப் பெத்த அம்மா இல்லாம, தன் வாழ்க்கையையே தியாகம் பண்ணி என்னை வளர்த்தவங்க என் சித்தி. அவங்க மனசு நோகுற மாதிரி எந்தக் காரியத்தையும் நான் பண்ண மாட்டேன்னு திட்டவட்டமா சொல்லிட்டேன். நாம ஒண்ணா வாழணும்னா, அது நேர்மையா கல்யாண பந்தத்துல மட்டும்தான் நடக்கும்னு சொன்னேன்.”

“அவளுக்குக் கோபம் கொப்பளிச்சுது. ஆனா, என்னை அடைஞ்சே தீரணும்ங்கிற பிடிவாதத்துல, சரி, உன் இஷ்டப்படியே கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் உன் சித்தி, குடும்பம்னு அவங்களை என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்தா அவ்வளவுதான்னு நிபந்தனையோட சம்மதிச்சா.” என்ற கதிரின் கண்கள் கோபத்திலும், வேதனையிலும் சிவந்தன.

“சித்தியை எதிர்த்து, அவங்க மனசை உடைச்சுட்டு நான் கண்மணியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறமும் அவளால என் எளிமையான வாழ்க்கையை ஏத்துக்க முடியல. நான் சித்தி மேல வச்சிருந்த மரியாதையும், அன்பும் அவளுக்கு எரிச்சலைத்தான் தந்தது. அந்தச் சமயத்தில்தான் என் நண்பன் சுவாமிநாதன் அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கினான். அவனோட ஆடம்பரமான வாழ்க்கையும், எதையும் பொருட்படுத்தாத

சுபாவமும் கண்மணியைக் கவர்ந்துச்சு. எனக்குத் தெரியாமலேயே அவங்க இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஆரம்பிச்சிருக்கு.”

“ஒரு நாள் இரவு, அவ தன் துணிகளை எல்லாம் பேக் பண்ணிட்டு இருந்தா. நான் எதுக்கு பேக் பண்ற? எங்க போறன்னு கேட்டேன். என் முகத்துல அடிச்ச மாதிரி, கதிர், எனக்கு உன்கூட வாழப் பிடிக்கல. என் லைப் ஸ்டைல்கு சுவாமிநாதன் கூட தான் எனக்கு செட் ஆகும். சோ, எனக்கு விவாகரத்து வேணும்னு சொன்னா.”

“நான் இடிஞ்சு போயிட்டேன். அவன் என் நண்பன் கண்மணி. அவனோட நீ… ஏன்டின்னு கத்தினேன். அது தப்புன்னு சொல்லி புரியவைக்கப் பார்த்தேன். எவ்வளவு பேசியும் அவள் அசையலை. ஒரு முடிவு எடுத்துட்டு நிற்கிறவள்கிட்ட நாம என்ன கத்தி, என்ன பிரயோஜனம்?”

 “ஆனா, அவ எந்தவித குற்றவுணர்வும் இல்லாம, உனக்கு என் மேல காதலே இல்ல கதிர். எப்பப் பாரு மருந்து பொட்டியை தூக்கிட்டு காலையில போய்ட்டு நைட் வர்ற. எனக்கு இந்த வீடு ஜெயில் மாதிரி இருக்கு. எனக்கு உன்னோட எப்பவும் ஒத்துப்போகாதுனு என் மேலையே குறை சொல்ல ஆரம்பிச்சா.”

“எதுவாயிருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம் கண்மணி. இப்படித் தப்பான முடிவெடுக்காத. இது உன் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் சொன்னேன்.  ஆனா, அவள் தெளிவாதான் இருந்தா.”

“நான் தெரியாம உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன். அப்பவே அதுக்கு தான் லிவிங்ல இருக்கலாமுன்னு சொன்னேன். நீ தான் தாலி மண்ணாங்கட்டினு என் உயிரை வாங்குன. எனக்கும் அதுக்கும் செட்டாகாது என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவ, கடைசியா… எனக்கு அவனைத்தான் பிடிச்சிருக்கு. நானும் அவனும் தான் இனி லிவிங்ல இருக்க போறோம். அதனால நீ என்ன பண்ற, அமைதியா மியூச்சுவல் டிவோர்ஸ் பத்திரத்துல கையெழுத்துப் போட்டுட்டு உன் வழியைப் பாருன்னு சொன்னா.”

“எனக்கு என்ன நடக்குதுனே புரியல. இதெல்லாம் எனக்கு புதுசா இருந்துச்சு. என் சித்தியை மீறி நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு, ஒரே வருஷத்துல நான் வேணாம், என் நண்பன் தான் வேணும்னு சொன்னது எல்லாம், ஏதோ படத்துல வர கதை போல இருந்துச்சு.”

“நான் என்னை சுற்றி நடக்கும் துரோகத்தை நினைத்து பார்க்கும் முன்னே, எனக்கு நீ டிவோர்ஸ் தரலைனா, என் சாவுக்கு நீயும், உன் சித்தியும்தான் காரணம்னு எழுதி வச்சுட்டு சூஸைட் பண்ணி செத்துடுவேன். அப்படியே உங்க ரெண்டு பேரையும் ஜெயில்ல கம்பி எண்ண வைப்பேன்னு மிரட்டினா.”

அதைக் கேட்டதும் முல்லை அதிர்ச்சியில் தன் வாயில் கை வைத்துக்கொண்டாள்.

“என்ன அதிர்ச்சியா இருக்கா? அதுக்கு பஞ்சம் இருக்காது. என் சித்தியோட பெயருக்குக் களங்கம் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே, நான் அவள் அனுப்பிய டிவோர்ஸ் பத்திரத்துல கையெழுத்துப் போட்டேன்.”

“எண்ணி ஒரு மாசத்துல

டிவோர்ஸ் வழக்கு முடிஞ்,சு கோர்ட்டை விட்டு நாங்க வெளியே வந்த அன்றே கோர்ட் வாசலில் கண்மணி திடீர்னு மயங்கி விழுந்தாள். டாக்டரான நான் அவளைப் பரிசோதிச்சப்போதான் அவ வயித்துல என் குழந்தை வளர்ற உண்மை தெரிஞ்சது.”

“அவ கண்விழிச்சதும், நான் விஷயத்தைச் சொல்ல, தாய்மை அடைஞ்ச சந்தோஷம் அவளுக்கு வரல. ஆத்திரம்தான் வந்துச்சு. இந்தக் குழந்தை என் எதிர்காலத்தையே பாழாக்கிடும், நான் உடனே இதைக் கலைக்கப் போறேன்னு துடிச்சா.”

“நான் அவ கால்ல விழாத குறையா, வேண்டாம் கண்மணி. இது நம்ம குழந்தை. உனக்கு வேண்டாம்னா விட்டுடு. நீ பெத்து மட்டும் கொடு. நான் வளர்த்துக்கிறேன். தயவுசெய்து குழந்தையை எதுவும் செய்யாதன்னு அழுது கேட்டேன். ஆனா, அவ என் வயித்துல பிறந்த குழந்தை உன்கிட்ட வளர்றதா? நான் இதை வாழவே விடமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா.”

“வேற வழியில்லாம நான் கோர்ட்டுக்குப் போனேன். என் மனைவிக்குக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லைன்னாலும், ஒரு உயிரைக் கொல்ல அனுமதி கொடுக்கக் கூடாது. குழந்தையைப் பெற்றெடுத்து என்கிட்ட ஒப்படைக்க உத்தரவிடணும்னு மனு போட்டேன். கோர்ட்டும் குழந்தையைப் பெத்துத் தரச் சொல்லி உத்தரவு போட்டுச்சு.” என்ற கதிரின் கண்கள் வெறுமையாய் தரையை வெறித்தது.

நிமிர்ந்து பார்த்தவன், “ஆனா, அவளோட வஞ்சம் அடங்கல. கோர்ட் உத்தரவை மீறி, என்னை பழிவாங்குறதுக்காகவே திருட்டுத்தனமா கடுமையான அபார்ஷன் மாத்திரைகளை அளவுக்கு அதிகமா சாப்பிட்டிருக்கா.

அந்த மாத்திரைகள் குழந்தையைக் கலைக்கல. ஆனா, வயித்துல இருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையோட உறுப்புகளைப் பாதிச்சு குழந்தையை ஊனமாக்கிடுச்சு.”

“அவ பிள்ளை பெத்து தர வரைக்கும் அவளை என் பாதுகாப்புல தான் இருக்கணும்னு கோர்ட் உத்தரவு போட்டுச்சு. அவளை இதே வீட்டுல தங்க வச்சி நான்தான் கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டேன். அவளுக்காக இல்லைனாலும் என் பிள்ளைக்காக அவளை நான் நல்லா கவனிச்சிகிட்டேன்.”

“அவ என்னை கஷ்டப்படுத்துறதா நினைத்து, என் குழந்தை வயத்துல இருக்கும் போது தண்ணி, சிகரெட் என்று குடிச்சி என் குழந்தையை தண்டிச்சிட்டா.”

“குழந்தை பிறக்க அடுத்த மாசம் வர டைம் இருந்துச்சு. அதனால தான் நான் எனக்கு லண்டன்ல விருது வழங்குற விழாவுக்கு போயிட்டு வந்தேன். அப்போ தான் காட்டுல உங்களை பார்த்தேன்.”

அவன் கண்கள் அவள் ஆண் பிள்ளை மீது படிந்து. “இதோ இந்த அழகனை பார்த்தேன்.” என்று சிரித்தவன்.

மறுபடியும் முகம் வாடி, “கண்மணி என்ன பண்ணினாள்னு தெரியல. ஒரு மாசத்துக்கு முன்னே என் மகளை பெத்து போட்டுட்டு, இனி இந்த குழந்தைக்கும், உனக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு என் பிள்ளையை அனாதையா விட்டுட்டு போயிட்டா.”

“இதோ இப்போ இந்த ஊரை விட்டே போக போறா. இனி என் பிள்ளைக்கு அம்மா அப்பா ரெண்டுமே நான் தான்.”

துக்கம் தாளாது கதிர் தன் இரு கரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மி அழத் தொடங்கினான்.

“நான் என்ன பாவம் பண்ணினேன். என்னைப் பெத்த தாயும் என்னை விட்டுப் போயிட்டாங்க. என்னை வளர்த்த சித்தியையும் நான் இழந்துட்டேன். கடைசியில என் குழந்தையையும் இப்படி ஊனமாக்கிட்டுப் போயிட்டாளே.” என்று கதறி அழுத்தவனைப் பார்த்து

முல்லைக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது.

கதிரின் இந்த வலி நிறைந்த கடந்த காலத்தைக் கேட்ட பிறகு, அவளால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தன் குழந்தையை அணைத்திருந்த அதே தாய்மையோடு, கதிரைப் பரிதாபமாகப் பார்த்தாள். எந்த தாயும் செய்யத் துணியாத கொடூரத்தைச் செய்துவிட்டுச் சென்ற கண்மணியின் மீது அவளுக்கு அருவருப்பும், கதிரின் மீது அளவில்லாத அனுதாபமும் ஏற்பட்டது.

கைகொண்டு முகத்தை அழுந்தத் துடைத்து, “எனக்கு நடந்த எந்த கெட்டதும் என் சித்திக்கு தெரியாது. தெரிஞ்சா அவங்க தாங்க மாட்டாங்க. ஏதோ மூலையில நான் என் பொண்டாட்டி, பிள்ளையோடு நல்லா இருக்கேனு அவங்க நம்புறாங்க. நானும் நிலா, கந்தனிடம் எல்லாம் எனக்கு நடந்த விவரகரத்து பற்றியு,ம் என் நிலைமையை பற்றியும் சித்திகிட்ட சொல்லக்கூடாதுனு கண்டிப்பா சொல்லிட்டேன்” என்றான்.

முல்லைக்கு அவனை எப்படி சமாதானம் பண்ணுவது என்றே தெரியாமல் போனது.

“ஆனா, ஒன்னு மட்டும் சத்தியம்.

நான் அவ மேல வைத்த காதலுக்கு அவ பதில் சொல்லலைனாலும், அவ என் பொண்ணுக்கு பண்ண பாவத்துக்கு கண்டிப்பா ஒரு நாள் பதில் சொல்லியே தீரணும்” என்றவன் கண்களில் அவ்வளவு கோவம் இருந்தது.

“என் பொண்ணு என்ன பாவம் பண்ணினா? அவ எதிர்காலம் எப்படி இருக்கும். என் பொண்ணு ஸ்கூல் காலேஜ் போற இடத்துல எல்லாம் அவ கையை பார்த்து நாலு பேர் ஏளனம் பண்ணுவாங்களே. கண்மணி பண்ண தப்புக்கு என் பொண்ணு தண்டனையை அனுபவிக்கனுமா? என்று கதிர் வெம்பி வெடித்து அழுதான்.

அவன் அழுது ஒயட்டும் என்று அவனை அழ விட்டு அமைதியாக இருந்தாள் முல்லை.

இறுதியாக அவள் நினைத்தது போலவே அவனும் தன்னை தானே தேத்தி கொண்டான்.

“சாரி. நான் வேற என் பிரச்சனையை எல்லாம் உங்க தலையில இறக்கி வச்சிட்டேன்.” என்றவன் முல்லையின் குழந்தையை பார்க்க, அந்தக் குழந்தையோ கதிர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருப்பது போலவே அமைதியாக கட்டிலில் படுத்து இருந்தது.

“அடடா… சார் தூங்கலையா. சரி வாங்க நம்ம குளிப்போம்” என்ற கதிர் முல்லையின் ஆண் பிள்ளையை தூக்கிக்கொண்டு போனவன், அழகாய் பிள்ளையை குளிக்க வைக்க, ஏனோ கதிரின் கைகளில் இருந்த குழந்தை ஒரு முறை கூட அழாமல் சமத்தான பிள்ளையாக இருந்தது.

“பரவாயில்லையே பேபி ரொம்ப soft போலவே. அழகா குளிச்சி முடிச்சிட்டாரே” என்ற கதிர் பிள்ளைக்கு வேற ஆடையை மாற்றி விட்டான்.

அவன் செயலை பார்த்துக்கொண்டு இருந்த முல்லைக்கு, அவன் சொன்ன கதை தான் அவளின் மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.

“அநேகமா நாளைய மறுநாள் கந்தனும், நிலாவும் வந்துடுவாங்க. வந்ததும் நம்ம போய் தம்பிக்கு நிறைய dresses வாங்கலாம்” என்று பிள்ளையிடம் பேசிக்கொண்டு இருந்தான் கதிர்.

“அதே மாதிரி உங்க மாமா போன் நம்பர், உங்க கிராமத்து அட்ரஸ், அப்புறம் முக்கியமா நீங்க வேலை பார்க்க போற இடத்தோட அட்ரஸ்னு எல்லாமே கந்தன் கிட்ட கொடுங்க. சீக்கிரமா உங்களுக்கு நியாயம் கிடைக்க அவன் ஏற்பாடு பண்ணுவான்” என்று கதிர் சொல்ல,

அவனை சுற்றியே அவ்வளவு பிரச்சனை இருந்தபோதிலும் தனக்காக கவலைப்படும் மனிதனை பார்த்து முல்லைக்கு அவன் மேல் மரியாதை கூடியது.

இரண்டு பிள்ளைகளையும் குளிப்பாட்டி தூங்க வைத்த கதிர். “எனக்கு ரொம்ப பசிக்குது. சாப்பிடலாமா?” என்று கேட்க.

“ம்… சாப்பிடலாம்” என்ற முல்லை அறையில் இருந்து வெளியே வந்து, கதிரோடு அமர்ந்து மதிய உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

மதிய உணவு முடிந்ததும், குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதிரும் முல்லையும் சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

சில நிமிடங்கள் கழித்து கதிரே பேச்சை ஆரம்பித்தான்.

“முல்லை! நீங்க ஸ்கூல்ல எப்படி இருந்தீங்க?” என்று கேட்டதும் அவள் சிரித்தாள்.

“நானா? ரொம்ப அமைதியான பொண்ணு.”

“நம்பிட்டேன்…” என்றான் கதிர் சிரித்தபடி.

“என்ன சார்?”

“உங்களை பார்த்தாலே தெரியுது. அமைதின்னு சொல்றது பொய்னு.”

முல்லையும் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் இருவருக்கும் இருந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.

பள்ளிக் காலத்து குறும்புகள், நண்பர்கள், கல்லூரி நாட்கள், பிடித்த ஆசிரியர்கள் என்று இருவரும் மாறி மாறி பேச ஆரம்பித்தார்கள்.

கதிர் பேசும்போதெல்லாம், ஒரு கட்டத்தில் பேச்சு சித்தியிடம் வந்து நின்றுவிடும்.

“எங்க சித்தி அப்படி… எங்க சித்தி இப்படி… நான் சின்ன வயசுல இப்படிப் பண்ணினப்போ சித்தி…” என்று அவன் தொடர்ந்து சித்தியின் கதைகளை சொல்லிக்கொண்டே இருந்தான்.

முல்லை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“சார். உங்க சித்தியை நீங்க ரொம்ப நேசிக்கிறீங்க போல?”

“ரொம்பவா? அவங்க இல்லன்னா நான் இன்னைக்கு நானே இல்ல.” என்று சிரித்தான்.

சில நொடிகள் அமைதியாக இருந்த முல்லை, மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“எனக்கும் அப்படித்தான் என் தாய் மாமா.” என்ற முல்லையின் பேச்சு அவள் மாமாவைச் சுற்றியே இருந்தது.

அவர் எப்படி அவளை வளர்த்தார். அவளுக்காக என்னென்ன செய்தார். அவளுடைய வாழ்க்கைக்காக எவ்வளவு தியாகம் செய்தார் என்று சொல்லிக்கொண்டே போனாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமானவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில், இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழ ஆரம்பித்தார்கள்.

“நீங்க போய் கொஞ்சம் தூங்குங்க முல்லை. குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன்.”

“இல்ல சார்…”

“நீங்க நேத்துல இருந்து சரியா தூங்கவே இல்ல. போய் படுங்க.” என்றான்.

முல்லை முதலில் தயங்கினாலும், குழந்தைகளை கதிரிடம் விட்டுவிட்டு படுத்தாள்.

சிறிது நேரத்தில் அவளறியாமலேயே தூக்கம் வந்துவிட்டது.

கதிர் குழந்தைகளை பார்த்துக்கொண்டே சமையலறைக்குள் சென்றான்.

சில நிமிடங்களில் காபியின் வாசனை வீடு முழுவதும் பரவியது.

முல்லை கண் விழித்தபோது, கதிர் கையில் இரண்டு காபி கப்புகளுடன் நின்றிருந்தான்.

“எழுந்துட்டீங்களா? இந்தாங்க காபி.” என்று நீட்டினான்.

“நீங்க காபி போட்டீங்களா?”

“ஆமா. உங்க தூக்கத்தை கெடுக்கக்கூடாதுன்னு மெதுவா போட்டேன்.”

முல்லை காபியை வாங்கிக்கொண்டு சிரித்தாள்.

அந்த ஒரு சிறிய விஷயமே அவளுடைய மனதில் கதிர் மேலுள்ள மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

இரவு உணவுக்கு கதிர் ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்க, சாப்பிட்டும்போதும் அவர்களுடைய பேச்சு தொடர்ந்தது.

நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை.

திடீரென்று கதிர் போனை பார்த்தான்.

“இன்னும் கந்தன் போன் பண்ணலையே?” என்று‌ சொல்ல,

“ஏதாவது வேலையா இருக்கலாம் சார்.”

“இல்ல. அவன் இப்படிப் பண்ண மாட்டான். எவ்வளவு வேலையா இருந்தாலும் போன் பண்ணிருவான்.” என்று சொல்லியவன் கந்தனுக்கு போன் செய்தான்.

ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை போன் ரிங் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால், கந்தன் எடுக்காதிருக்கவும், கதிரின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

“என்னாச்சுன்னு தெரியலையே.”

“நாளைக்கு பேசிக்கலாம் சார்.”

“ம்…” என்று சொன்ன கதிர், குழந்தைகளை பார்த்துவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

சில நிமிடங்களிலேயே அவனுக்கும் தூக்கம் வந்துவிட்டது.

அதிகாலை, சரியாக ஐந்து மணி.

டக்… டக்… டக்…

கதவு தட்டும் சத்தம் கேட்டு கதிர் திடுக்கிட்டு எழுந்தான். இவ்வளவு அதிகாலையில் யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவை நோக்கி நடந்தான்.

கதவைத் திறந்தவன், அங்கே நின்றிருந்த உருவத்தை பார்த்ததும் அப்படியே உறைந்து போனான்.

“சித்தி…”

இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் சித்தியை பார்த்த கதிரின் கண்கள் கலங்கின. வார்த்தைகள் வரவில்லை.

அவனுடைய முகத்தை கூட பார்க்காமல், மிகவும் சோர்வாக இருந்த அவன் சித்தி வீட்டுக்குள் நுழைந்தார்.

அந்த நேரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்க, அச்சத்தம் கேட்டதும் கதிரின் சித்தி நின்றார்.

குழந்தைகள் அழும் திசையை நோக்கி மெதுவாக நடக்க,

அங்கே இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்தியபடி கட்டிலில் அமர்ந்திருந்த முல்லையைப் பார்த்தார்.

அவளைப் பார்த்ததும் சித்தியின் முகம் மாறியது.

“ஓ… நீ தான் என் மகனை என்கிட்ட இருந்து பிரித்த கடன்காரியா?” என்று சொல்ல,

முல்லை அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.

அடுத்த நொடியே சித்தி குழந்தைகளை நோக்கி கையை நீட்டி, “ம்… என் பேரனையும் பேத்தியையும் என்கிட்ட கொடு.” என்று சொல்லிவிட்டு, சட்டென்று இரண்டு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் தன் கைகளில் தூக்கிக்கொண்டாள்.

அதைப் பார்த்த கதிர் உடைந்து போனான்.

“சித்தி…” என்றழைக்க, அவள் திரும்பிப் பார்க்கும் முன்பே, கதிர் அவள் காலடியில் மண்டியிட்டான்.

“என்னை மன்னிச்சிடுங்க சித்தி. உங்களை விட்டுட்டு என் ஆசைதான் முக்கியம்னு வந்துட்டேன்.” என்று கதறி அழ ஆரம்பித்தான்.

என்ன நடக்கிறது என்பதே புரியாமல் முல்லை கதிரையும், அவன் சித்தியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன் கையில் இருந்த இரண்டு குழந்தைகளையும் இறுக அணைத்துக்கொண்டபடி நின்ற சித்தியின் கண்கள், முல்லையைத் தான்

சுட்டெரித்தது.

தொடரும்…

← Previous All Chapters Next →

2 comments

jo October 23, 2026 - 10:23 pm

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe

Kishore Key October 23, 2026 - 11:46 pm

Pavam mullai ivangaa mamiyar kodumaiya

Leave a Comment

error: Content is protected !!