தீரன் கிளம்பி வெகு நேரமாகிவிட்டது. இந்நேரம் அவன் தன் தங்கி இருக்கும் இடத்திற்கே சென்றிருப்பான்.
அவன் கிளம்பும் நேரம் அறைக்குள்ளேயே இருந்து கொண்டாள் பிருந்தா. அவளிடம் விடைபெற்று தான் மட்டும் என தீரன் வெளிவர, ஏன் என்னவென்று கூட விசாலாட்சி கேட்கவில்லை.
பிருந்தாவின் எண்ணம் அவனை சுற்றிலும் தான் இருந்தது அந்நேரம்.
மாலை அவன் கிளம்பிய பின் தோட்டத்தில் தான் அமர்ந்திருந்தாள் முழுதும். அந்த இடம் அவ்வளவு அமைதியைக் கொடுத்தது அவளுக்கு.
நிலா தன் அண்ணனின் கடந்த கால வாழ்க்கையை முழுதாய் பகிர்ந்திருந்தாள் என்றாலும் அது மூன்றாம் மனிதரின் கண்ணோட்டம் தானே!
இதில் கணவன் மனமும் அவனின் திருமண வாழ்க்கை குறித்த எண்ணவோட்டமும் எவ்வாறு இருக்கும் என நினைத்தபடி இருந்தாள்.
அனுபவித்தவன் அத்தனை எளிதாய் அதை மறந்துவிடுவானா என்ன? இப்பொழுது தான் கொஞ்சம் புரிவதை போல இருந்தது தன்னை அவன் சென்னை அழைத்து செல்லாத காரணம். நீண்ட நேரம் கழித்தே எழுந்து வீட்டிற்குள் வந்தாள்.
“ரெண்டு நாள்ல ஒரு கல்யாண வீட்டுக்கு போகணும் பிருந்தா. என் அண்ணே சம்மந்தக்காரங்க வீட்டு கல்யாணம்” விசாலாட்சி சொல்ல,
“நானும் வரணுமா த்தை?” என தயங்கி தான் கேட்டாள்.சுத்தமாய் செல்லும் எண்ணம் இல்லை.
இந்த திருமணம் நிச்சயம் வெளியில் இன்னும் பல வருடங்களுக்கு பேசு பொருளாய் தான் இருக்கும் என நினைத்து அவள் கேட்க,
“உன்னையும் அவங்களுக்கு தெரியணும் இனி. சொந்தக்காரங்க வீட்டுக்கு போகாம எப்படி? நியாபகம் வச்சுக்கோ. போறோம்!” என்று என்று கூறிவிட்டார் விசாலாட்சி.
மனமில்லை என்றாலும் விடப்போவதில்லை தானே என அவளும் நினைத்துக் கொண்டாள்.
அறைக்குள் வந்து அலைபேசியை எடுக்க, இரண்டு தவறிய அழைப்புகள். இரண்டும் ஒரே எண். தீரனின் எண் தான். இன்னும் பத்தியப்படாமல் இருந்தது.
திருமணமான அன்று அவன் தன் அலைபேசியை வாங்கி அவன் எண்ணை அழுத்தி அவன் அலைபேசியில் அவளுடைய எண்ணை சேமித்திருந்தான்.
அதே எண்ணுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு இவள் காத்திருக்க சில நொடிகளிலேயே அழைப்பை ஏற்றிருந்தான் மனோதீரன்.
“தோட்டத்துல இருந்தேன். போன் ரூம்ல இருந்துச்சு. கால் பண்ணிருந்திங்களா?” அழைப்பை ஏற்றுவிட்டு அமைதியாய் இருந்தவன் செயலில் பிருந்தா கேட்க,
“ஹ்ம்ம் சும்மா. ரீச் ஆகிட்டேன் சொல்ல கால் பண்ணினேன்” என்றான்.
“ஹ்ம்ம்!” என்றவளுக்கு மேலும் என்ன பேச என்று தெரியவில்லை. இரவு எட்டு மணியாகி இருந்தது நேரம்.
“சாப்டியா?” அவள் பேசப் போவதில்லை என தெரிந்து தீரன் கேட்க, அதுவும் ஒரு சின்னதாய் மிக மிக சின்னதாய் ஒரு புன்னகையைக் கொண்டு வந்தது பிருந்தாவிடம்.
இந்த ஒரு வார்த்தையை இவளிடம் கேட்பதற்கென்று இத்தனை வருடத்திலும் ஒருவர் கூட இருந்ததில்லை அவளுக்கென்று.
“ஹெலோ பிருந்தா?” அவள் அமைதியில் இவன் மீண்டும் அழைக்க,
“இருக்கேன். இனி தான் சாப்பிடணும்” என்றவள் தயக்கம் தான் என்றாலும் சில நொடி இடைவெளிவிட்டு,
“நீங்க… நீங்க சாப்பிட்டீங்களா?” என்றாள். அதைக் கேட்கவே அத்தனை கூச்சம். என்னவோ போலான உணர்வு. புதிதாய் தான் இருந்தது சிறு குளிர்வான அந்த நொடி.
“இதோ போனும். பிரண்ட் வரவும் சேர்ந்து போய் சாப்பிட்டு வர வேண்டியது தான்!” தீரன் சொல்ல,
‘சமைக்க மாட்டாங்களா? வெளில சாப்பிடுறாங்களா?’ கேள்வி தோன்ற அதையும் கேட்டுவைக்க வெகுவாய் யோசித்தாள். முதலிலேயே அதிகமாய் பேசுகிறோம் என நினைத்துவிடுவானோ என்ற எண்ணத்தில்.
“ஓகே சாப்பிடுங்க!” என்று அவள் சொல்லி இருவரும் விடைபெற்றுக் கொண்டாலும் அந்த அழைப்பு கொஞ்சம் இதம் கொடுத்தது இருவருக்கும்.
சாப்பிட்டு முடித்து மீண்டும் அறைக்குள் வந்த பிருந்தாவிற்கு இந்த தனிமையும் புதிதாய் தான் இருந்தது அதுவும் பிடித்திருந்தது.
யாரும் எதுவும் தன்னிடம் கேட்கப்போவதில்லை. இந்த அறை இப்பொழுது அவளுக்கானது. அவளுக்கு மட்டுமேயானது என ஒரு மகிழ்ச்சி.
நிம்மதியாய் ஒரு உறக்கம் வேண்டும் என எண்ணியபடி வந்து படுத்தவளுக்கு கடந்தகால எண்ணங்கள் அப்படி தூங்கவிடவில்லை.
தன் வீட்டில் அன்னை தன்னை நடத்திய முறை, திருமணம் செய்தவன் தனக்கு நடத்திய கொடுமை, அதை தான் எவ்வளவு சொல்லியும் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் அவனிடமே தன்னை தள்ளிவிட்ட தன் குடும்பம் என மொத்தமாய் கண்முன் வர, சில நொடிகளில் எல்லாம் எழுந்து அமர்ந்து விளக்கை போட்டுக் கொண்டாள்.
இப்பொழுது இந்த தனிமை கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. பத்து மணி வரையும் விளக்கையும் அணைக்காமல் அறைக்குள் உழன்று கொண்டிருந்தவள் எண்ணத்தை எங்கனம் உணர்ந்தானோ கணவன் தீரனிடம் இருந்து அழைப்பு மனைவிக்கு.
திடீர் அலைபேசி சத்தத்தில் முதலில் திடுக்கிட்டாலும் தீரனின் அழைப்பு கொஞ்சம் ஆசுவாசம் கொடுக்க மறக்கவில்லை பெண்ணுக்கு.
“ஹெலோ!”
“தூங்கிட்டியா என்ன?”
“இல்ல!” என்றவள் சத்தத்தில்,
“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என்றான் கூர்ந்து கவனித்து.
“ம்ம்ஹும்!” என்றவள் சில நொடி எடுத்து,
“என்னவோ ஒரு மாதிரி பயமா… தனியா.. இங்க நான் மட்டும்…” என்றவளுக்கு அதை சொல்லி எப்படி புரிய வைப்பது என தெரியவில்லை.
“என்ன பிருந்தா? தனியா இருக்க பயமா?” அவனே புரிந்ததை கேட்க,
“ஹ்ம்!” என்றொரு வார்த்தை மட்டும்.
“விண்டோ ஓபன் பண்ணிக்கோ!” தீரன் சொல்ல,
“இல்ல வேண்டாம்!” என மறுத்தாள்.
“சொல்றேன்ல! ஓபன் பண்ணு” என மீண்டும் அவன் சொல்லவே அதை செய்தவளுக்கு சட்டென்று அந்த வித்தியாசம் நன்றாய் உணர முடிந்தது.
தோட்டத்தில் இருந்த பூச்செடிகள் இந்த அறையை ஒட்டி இருந்ததை கவனித்தாள் தான் என்றாலும் இந்த நறுமணத்தை எதிர்பார்க்கவில்லை.
கூடவே பறவைகளின் ஓசைகள்.மனதிற்கு சட்டென்று ஒரு உற்சாகம் தருவதைப் போல சிறு சிறு சத்தம்.
“நம்ம ஏரியால மரமெல்லாம் ரொம்ப கம்மி. நம்ம வீட்டுல தான் மாமரம் இவ்வளவு அடர்த்தியா இருக்கும். அதான் இங்க பறவைங்க வரும். மார்னிங் சவுண்ட் இன்னும் நல்லாருக்கும்!” என தீரனே கூற,
“தேங்க்ஸ்!” என்றாள் பிருந்தா.
“ஹ்ம் குட் நைட்!” என்றவன் வைத்துவிட, சில நிமிடங்கள் அங்கிருந்தவளுக்கு உறக்கம் கண்ணை சுழற்றவும் நகர்ந்து வந்து படுத்துக் கொண்டாள்.
காலை ஆறு மணிக்கெல்லாம் அவன் கூறியதைப் போல அத்தனை சத்தம் மாமரத்தி இருந்து.மனிதர்கள் காலை எழுந்து வேலைக்கு செல்வதைப் போல பறவைகளும் அந்த நேரமே எழுந்து கலைந்து செல்வதைக் கண்டபடி உற்சாகத்துடனே எழுந்து வந்தாள் வெளியே.
இன்னுமே விசாலாட்சி எழவில்லை. தாமதமாகும் என தீரணும் சொல்லி இருக்க, சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
புதுவித உற்சாகம் தான். தனியே தூங்கி எழுந்து யாரின் இடையூறும் இன்றி தானே சமைத்து என இது அவளுக்கு பிடித்திருந்தது.ஏழரை மணிக்குள் காலை உணவினை தயாரித்து முடித்தவள் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டாள்.
இன்னுமே அந்த ஒரு பயம் மட்டும் செல்லவில்லை அவளுக்கு. எழுந்து வந்ததும் முதலில் தன்னைப் பார்க்க வேண்டாமே எனும் எண்ணம்.
இதோ நேற்று போலவே இன்றும் இரண்டு தவறிய அழைப்பு. அதுவும் தீரன் தான்.சிறு புன்னகையுடன் அவள் அழைக்க,
“அப்படி என்ன பண்ற நீ? கால் பண்ணினா எடுக்காம? அதுக்குள்ள எழுந்து தோட்டதுக்கு போய்ட்டியா என்ன?” என்றான் தீரன்.
அவனிருந்த ஒரு வாரமும் காலை அவன் விழிக்கும் நேரம் அவள் இல்லை. காபி மட்டும் காத்திருக்கும். கேட்டால் தோட்டத்தில் இருந்ததாய் கூறுவாள்.
அப்படி நினைத்து தீரன் கேட்க, “சமைச்சுட்டு இருந்தேன். போனை மறந்துட்டேன்!” என்றாள் அவளுமே இலகுவாய்.
“சமைச்சியா?” என்றவன் சிரிக்கும் சத்தமும் கேட்டது.
“ஓகே நான் கிளம்பிட்டேன்!” என்றான் தீரன்.
“இப்பவேவா?”
“ஹ்ம் இந்த வாரம் மார்னிங் ஷிப்ட். எய்ட் டு ஃபோர்!” என அவன் சொல்ல, கேட்டுக் கொண்டவள்,
“நிலா அண்ணிக்கு கால் செஞ்சு பேசட்டுமா?” என்றாள் ஆர்வமாய்.
அதற்கும் ஒரு புன்னகை தோன்ற, “பேசலாமே! நிலாக்கும் பேசலாம். எனக்கும் பேசலாம்!” என்றான். சட்டென்று அமைதியாகிவிட்டாள் அவன் பதிலில்.
“ஓகே! அப்புறம் பேசுறேன்!” என்றவன் வைத்துவிட, அன்றைய நாள் அமைதியாய் நன்றாய் கடந்து கொண்டிருந்தது பிருந்தாவிற்கு.
நாள் முழுதும் யாரின் இடையூறும் இன்றி தான், தனக்காக, தனக்கு என நகர்ந்ததை விரும்பி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
“பரவால்ல.. நல்லா தான் சமைக்குற. மதியத்துக்கும் பண்ணிடுவியா?” என விசாலாட்சி சமைக்க சொல்ல, அவர் கொஞ்சம் சுமுகமாய் பேசியதற்கே மகிழ்ந்தவள்,
“நானே பண்ணிடுறேன் த்தை!” என விரும்பி ஏற்று செய்து வைத்தாள்.
நிலாவிடம் பத்து மணிக்கு அழைத்து பேச, நிலாவிற்கும் பிருந்தா அழைத்து அதுவும் இயல்பாய் தன்னிடம் பேச அழைத்ததில் என மனம் நிம்மதி கொண்டது. அதை லோகேஷிடம் சொல்ல, அவனுக்குமே மகிழ்ச்சி தான்.
மாலை தீரன் வேலை முடிந்து வரவும் நிலாவிடம் இருந்து அழைப்பு வர,
“சொல்லு நிலா. பாப்பா எப்படி இருக்கா?” என்று தான் எடுத்தான் தீரன்.
“நல்லாருக்கா ண்ணா!” என கூறிய நிலா அடுத்து முழுதாய் பிருந்தாவைப் பற்றியே பேச, தீரன் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் சென்று சேர ஆரம்பித்தது வலுவாய்.
அடுத்து பிருந்தாவிற்கு அழைக்க, முதல் அழைப்பிலேயே எடுத்துவிட்டாள்.”நான் கூட வேணும்னு தான் எடுக்கலையோனு நினைச்சேன்” என முதன் முதலில் கிண்டலாய் பேசினான் தீரன்.
“தோட்டத்துல தான் இருக்கேன். நாலு மணிக்கு வேலை முடிஞ்சிடும் சொன்னிங்களா. அதான் போன் எடுத்துட்டு வந்தேன்!” என்றவளை மனம் மெச்சிக் கொண்டது அந்த நேரம்.
“கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்தியா?” என அதை அவளுக்கும் உணர்த்த நினைக்க, பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.
அடுத்தடுத்த பேச்சுக்களில் அவளையும் அவனோடு பேச்சில் இணைய வைத்திருந்தான்.
அன்று முழுதுமான அன்றாடத்தை அவள் கூற கூற கேட்டும் கொண்டான் அமைதியாய்.
“நாளைக்கு ஒரு கல்யாண வீட்டுக்கு போகணும்னு அத்தை சொன்னாங்க. உங்க மாமா சொந்தமாம்!” என பிருந்தாவே தகவல் சொல்ல,
“ஹ்ம் போய்ட்டு வா!” என்றவனுக்கு அந்நேரம் வேறு எதுவும் நினைவில் இல்லை.
அடுத்து நிகழவிருக்கும் சம்பவம் முன்பே தெரிந்திருந்தால் நிச்சயம் அனுப்பி இருக்கமாட்டான்.
காலம் கடந்திருந்தது. ஒன்று இரண்டு என நாட்களை தாண்டி ஒரு வாரத்தையும் தாண்டி தான் அவனுக்கு விஷயமே தெரிந்தது.
அதற்குள் பிருந்தாவின் மனமும் முற்றிலும் முழுதாய் ஓடிந்ததோடு மீண்டுமாய் கூட்டுக்குள் அடங்கிக் கொண்ட பறவையாகி இருந்தாள்.
அப்படி மாற்றி இருந்தது என்னவோ சொந்தங்கள் என்ற உறவுகளோடு விசாலாட்சியும் தான்.