தீரன் பிருந்தா திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கடந்திருந்தது.
விசாலாட்சியின் உடன்பிறந்த தங்கை தன் வீட்டிற்கு விருந்திற்கு என்று மனோதீரன் பிருந்தாவை அலைபேசியில் அழைக்க,
“இன்னொருநாள் வாரோம் சித்தி. இப்போ வேண்டாம்!” என மறுத்தான் மனோதீரன்.
என்னவோ தங்களின் சாதாரண நடவோட்டங்களே கண்காணிக்கப்படுவதை போன்ற தோற்றம் மாறட்டுமே என்று நினைத்தான் அவன்.
நிலாவின் அழைப்பை மட்டும் தீரனால் மறுக்க முடியவில்லை. அதுவும் பக்கத்து தெரு என்பதால் பிருந்தாவுடன் சென்று வந்திருந்தான்.
இன்னும் இரண்டு நாட்களில் அவன் மட்டும் சென்னை கிளம்ப வேண்டும். இதுவும் திருமணத்திற்கு முன்பே அவன் எடுத்த முடிவு தான் என்றாலும் இப்பொழுது பிருந்தாவை விட்டு செல்வது அவ்வளவு எளிதாய் தோன்றவில்லை அவனுக்கு.
பிருந்தா நூற்றில் ஒரு பங்காய் கூட அவனுடன் தனியே செல்ல விரும்பவில்லை என அவனுக்கே தெரிந்தது. அவனுக்கு தான் என்னவோ ஒரு அவதி, கவலை எல்லாம்.
அதுவும் அன்னையை நினைக்கும் பொழுது இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது இந்த நான்கு நாட்களில்.
பிருந்தா தான் நினைத்ததற்கெல்லாம் மாறாய் சிறு சத்தத்திற்கே பயந்து நடுங்குவதைக் கண்டு நாளாக நாளாக அவன் மனம் கொஞ்சம் அவளுக்காக என்று யோசிக்க ஆரம்பித்தது.
நிச்சயம் அவன் அவனைக் கொண்டு, அவனுக்காக, அவன் நிம்மதிக்காக என்று மட்டுமே சென்னைக்கு தனியே செல்லும் வழியை தேர்ந்தெடுத்திருந்தான்.
இப்பொழுது தான் அவளுக்காக தான் யோசிக்கவில்லையே என்று தோன்றியதும் கூட.
தீரன் மனைவிக்காக என்று நினைக்க ஆரம்பித்த அதே நாளில் தான் கணவன் கணவனுக்காக என பிருந்தாவும் சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.
நிலாவீட்டிற்கு விருந்துக்கு சென்ற இடத்தில் தீரனை லோகேஷ் தனியே அழைத்து சென்றிருந்தான் தன் வேலை சம்மந்தமாய்.
அந்த நேரத்தில் தான் தீரனின் கடந்தகால வாழ்க்கையை அறிந்து கொண்டாள் பிருந்தா நிலாவின் மூலம்.
குழந்தை சூர்யாவை கையில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள் பிருந்தா.
“வீடெல்லாம் உங்களுக்கு செட்டாகிருச்சா அண்ணி? ஒன்னும் பிரச்சனை இல்லையே? ஏதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் பாத்துக்குறேன்!” என்றாள் நிலா அண்ணியிடம்.
“அதெல்லாம் எதுவுமில்ல நிலா. நீங்க அடிக்கடி வந்துட்டு போனா இன்னும் நல்லாருக்கும். பாப்பாவோட இருந்த மாதிரியும் இருக்குமே எனக்கு!” என்றாள் பிருந்தாவும் நிஜமாய்.
“கண்டிப்பா வர்றேன் அண்ணி!” என்ற நிலா,
“அண்ணா இப்பவும் சென்னைக்கு அவங்க மட்டும் போற. முடிவுல தான் இருக்காங்களா?” என கேட்க,
“ஆமா! போய்ட்டு ஒண்ணு ரெண்டு வருஷத்துல கூப்பிட்டுக்குறேன் சொன்னாங்க!” என்றாள்.
“அண்ணா பாவம் அண்ணி. இன்னும் அவங்க நடந்த எதுல இருந்தும் அவங்க மீண்டு வரல. இப்பவும் பயத்துல தான் உங்களை கூட்டிட்டு போக மாட்டுறாங்க. போக போக எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சுப்பாங்க. அப்புறம் சரியாகிடும்!” என்று சொல்லி,
“உங்களுக்கு உங்க வீட்டுல சொல்லி இருப்பாங்க இல்ல அண்ணா பாஸ்ட் என்னனு?” என்றாள்.
இல்லை என்று பிருந்தா தலையசைக்க, “தெரியாதா? சொல்லவே இல்லையா?” என ஆச்சர்யம் தான் நிலாவிற்கு.
“அப்போ உங்களுக்கு தோணலையா அண்ணா கூட சென்னை போகணும்னு?” என்று கேட்க,
“அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசும் போதே சொல்லிட்டாங்க சென்னைக்கு அவங்க மட்டும் தான் போறதா. ஏன்?” என்றாள் பிருந்தா.
“அண்ணாக்கு சில விஷயங்கள் இன்னும் மறக்க முடியல. அந்த பயம் தான் உங்களை கூட்டிட்டு போக அவ்வளவு யோசிக்குறாங்க!” என்ற நிலா,
“இப்ப தான் அண்ணா இவ்ளோ சைலன்ட். முன்னாடி இப்படி எல்லாம் இல்ல. ரொம்ப ஜாலி டைப். அண்ணாவோட பாஸ்ட் மேரேஜ் லைஃப்ல அவங்க நிறைய இழந்துட்டாங்க. பணம், நிம்மதி, தூக்கம் இதெல்லாம் விட சந்தோஷம். அதுக்கு அப்புறம் தான் இப்படி அமைதியா மாறிட்டாங்க”
“நாள், நேரம், ஜாதகம் எல்லாம் பார்த்து பத்திரிக்கை அடிச்சு ஊரைக் கூட்டி ரொம்ப கிராண்ட்டா நடந்துச்சு அண்ணா மேரேஜ். வந்தவங்க ரொம்ப அழகா இருந்தாங்க. அண்ணாவும் சந்தோசமா தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணமான ஒரு வாரத்துல இங்க இருந்து சென்னைக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க. ஏற்கனவே அங்க தான் அவங்க வாழ்க்கைனு டிசைட் பண்ணி வீடு எல்லாம் வாங்கி தான் வச்சிருந்தாங்க. நாங்களும் போய் அவங்களை வீட்டுல விட்டுட்டு தான் திரும்பி வந்தோம். அப்புறம் ஒரு மூணு மாசம் அண்ணா இங்க ஊரு பக்கமே வர்ல!” என்று நிலா சொல்ல சொல்ல பிருந்தாவும் அத்தனை கவனமாய் கேட்க ஆரம்பித்தாள்.
“என் வீட்டுக்காரர் தான் அப்பப்ப சென்னை போய் அவங்களைப் பார்த்துட்டு வருவாங்க. என்னவோ சரி இல்லனு அவங்க என்கிட்ட சொன்னாங்க. ஆனா என்னனு நாங்க விசாரிக்கும் முன்னாடி எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு!” என்று நிலா சொல்லவும்,
“ஏன் என்னாச்சு?” என்றாள் பிருந்தாவே.
“அந்த பொண்ணுக்கு ஏற்கனவே லவ் இருந்திருக்கு. அண்ணாவோட வேலை, சம்பளம் இதெல்லாம் வச்சு தான் கல்யாணமே பண்ணிருக்கு. சென்னை போனதுக்கு அப்புறம் இங்க எங்க ஊருக்கு வர கூடாது, எங்க யாரோடவும் அண்ணா டச்ல இருக்க கூடாது, காசு அனுப்ப கூடாதுன்னு சண்டை போட்டிருப்பாங்க போல. கல்யாணமாகிப் போற சில பொண்ணுங்க மாதிரி இவங்களுக்கும் புருஷனோட குடும்பத்தைப் பிடிக்கல போலனு தான் நாங்க எல்லாம் நினைச்சு நாங்களும் கண்டுக்காம இருந்தோம். ஆனா நிலமை கைமீறிப் போன அப்புறம் தான் எங்களுக்கு எல்லாம் புரிஞ்சது” என்ற நிலா சில நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்திருக்க, பிருந்தா அவள் கைப்பிடித்தாள்.
“ஆடம்பர செலவு, அண்ணாகிட்ட இருக்குற பணத்தை எல்லாம் அவங்க பேங்க் அக்கௌன்ட்க்கு மாத்தி தர சொல்லி சண்டை, அப்படி குடுத்தாலும் பத்தலைனு சொல்லி ஒரு சண்டை, இது அதிகமாகி அதிகமாகி உன்னை நான் கல்யாணம் பண்ணிருக்கவே கூடாதுன்னு ரொம்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணாக்கும் கோவம் வந்து பேசியிருப்பாங்க போல, உடனே என் வாழ்க்கை உன்னால தான் போச்சு எனக்கு உன்னை பிடிக்கலைனு நேரா அவங்க அம்மா வீட்டுக்கு போய் புலம்பி சண்டை பெருசானது. அண்ணாக்கு அப்பவே வெறுத்துருச்சு. மொத்தமே ஆறு மாசம் தான் அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு!” என்று சொல்ல,
“அப்புறம்? எப்படி அவங்க இறந்தாங்க?” என்றாள் பிருந்தா.
“இல்லையே! அந்த பொண்ணு சாகல உயிரோட தான் இருக்காங்க!” என்றதும் பிருந்தா திடுக்கிட்டு விழிக்க,
“அண்ணி! உங்களுக்கு தெரியாதா?” என்றாள் நிலா.
“அவங்க இறந்துட்டதா சொல்லி தான் என் வீட்டுல சொன்னாங்க!” என பிருந்தா சொல்ல,
“இல்ல அண்ணி! சண்டை போட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போனவங்களை அவங்க அம்மா அப்பா சமாதானம் பண்ணி அண்ணாகிட்டவே கொண்டு விட்ருக்காங்க. ஆனா திரும்ப அவங்க அம்மா வீட்டுக்கு போன கேப்ல அந்த பொண்ணு லவ் பண்ணின பையன் கூட திரும்ப பேச ஆரம்பிச்சிருக்கு. சென்னை போயும் இதே தான் நடந்திருக்கு. அண்ணாக்கு செம்ம ஷாக். அதுக்கு மேல சரியா வரும்னு தோணல. ரெண்டு குடும்பமும் பேசினாங்க. அந்த பொண்ணுக்கு பணத்து மேல பேராசை. அண்ணா வேண்டாம்னா வேண்டாம்னு பிடிவாதமா சொல்லிட்டு ரீசனா நடந்ததை அப்படியே சொல்லவும் அவங்க குடும்பதுக்குள்ள சண்டையாகிடுச்சு போல. அந்த பொண்ணுக்கு தெளிவா ஒரு முடிவெடுக்கவே தெரியல. கிட்டத்தட்ட காதலிச்ச பையனும் வேணும் அண்ணனோட வருமானமும் வேணும்ன்ற மைண்ட்செட். ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்ல இருந்து வெளிவரும் முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க” என்று சொல்ல, அதிர்ந்து அமர்ந்துவிட்டாள் பிருந்தா.
“அண்ணி!” என அவள் தோள்தட்டி,
“பயமுறுத்திட்டேனா? சட்டப்படி டைவர்ஸ் கூட வாங்கியாச்சு. சத்தியமா என் அண்ணா மேல எந்த தப்பும் இல்ல!” என அரண்டு போனாள் சில நிமிடங்களில் நிலாவும்.
“இல்ல இல்ல! இதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு எதுவும் சொல்லல யாரும். அட் ஷாக்கிங்கா இருக்கு!” என்று பிருந்தா சொல்ல,
“அதுக்கப்புறம் கல்யாணமே வேண்டாம்னு தான் சொன்னாங்க. அம்மா தான் அப்படி விட முடியாதுன்னு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க. லாஸ்ட்டா என் மாமியார் தான் உங்களை பத்தின டீடெயில்ஸ் குடுத்தாங்க. அதை வச்சு தான் இப்ப எல்லாம் நல்லபடியா நடந்தது!” என்றாள் நிலா.
“ஆனா ஒண்ணு அண்ணி. அண்ணாக்கு இப்ப தேவை ஒரு அமைதியான பேமிலி லைஃப் தான். என்ன இன்னும் பயம் போகல. ஒருவேளை சென்னை கூட்டிட்டு போனா எங்க நீங்களும் யாரும் வேண்டாம்னு சொல்லிடுவீங்களோனு தான் நினைக்குறாங்க.” என்றவள்,
“சொந்தமெல்லாம் அப்படியே விட்டு போய்ட கூடாது. கூடவே வைஃப்ன்றது பெரிய சப்போர்ட்னு சொல்லுவாங்க. நீங்க சப்போர்ட்டா இருந்தா போதும் கண்டிப்பா உங்களைப் புரிஞ்சிப்பாங்க!” என்று கூறி இருந்தாள்.
இதையெல்லாம் நிலா சொல்லும் வரை தான், தன் பழைய வாழ்க்கை என்ற எண்ணங்களில் பயந்து குறுகி என ஒரு வட்டத்திற்குள் இருந்து வந்த பிருந்தாவிற்கு இப்பொழுது தான் தன்னுடைய வாழ்க்கை என்ன என்றும் அதில் தீரனின் பங்கு எவ்வளவு என்றும் புரியவே ஆரம்பித்தது.
முடிந்ததை விடுத்து இனி தங்களின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் புரிய வந்தது பிருந்தாவிற்கு.
இப்பொழுதும் கூட அவனுடன் சென்னை செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. அவனின் கடந்த கால வாழ்க்கை கசப்பை இனி அவன் நினைக்காமல் இருந்தாள் போதுமே. அதற்காக தான் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தாள்.
அதே போல தான் தீரனின் எண்ணமும் இருந்தது. என்னவோ மனதுக்குள் வைத்து மருகும் மனைவியின் தோற்றம் வெகுவாய் பாதிக்க ஆரம்பித்தது தீரனை.
அவளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்று அவனுமே நினைக்க, இருவரின் பயணமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது.
இரவின் தனிமையில் இருவரும் அதிகமாய் பேசிக் கொள்வதில்லை. தேவைக்கான பேச்சுக்கள் தான். அதன்பின் ஒரு கனத்த மௌனம் அங்கே இருவரின் நடுவிலும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும்.
பகலில் வெளியில் செல்லவும் இல்லை. அது இந்த சமூகத்தின் பார்வையைக் கொண்டு. இரண்டாம் திருமணம் என்ற வார்த்தையைக் கொண்டு அவர்கள் நிறையவே கடக்க வேண்டி இருந்தது.
அந்த ஆறு நாட்களின் முடிவில் சென்னைக்கு கிளம்ப தயாராகிவிட்டான் மனோதீரன். அவன் உடனிருந்த தருணங்களில் இல்லாத ஒன்றாய் அவன் கிளம்பும் சமயம் பெரிதாய் என்னவோ ஒன்றை இழக்கும் வலி மனதில் எழ ஆரம்பித்தது பிருந்தாவிற்குமே.
ஒரே பாதையில் பயணிக்க தயாரான போதும் வேறு வேறு இடங்களில் பிரிந்து செல்லும் நிலை, அவரவர் நிலையை மற்றவர்களுக்கு உணர்த்துமா?