Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 5

CHAPTER 5

பனித்துளி 5

By seema · October 13, 2026

0

கிடாவிருந்து தின்ற மயக்கத்திலும், காட்டுப் பாதையின் களைப்பிலும் பிரம்புக் கட்டிலில் பொதிரென விழுந்த ராயன், அப்படியே தூங்கிப்போனான்.

மறுநாள் அதிகாலைப் பொழுது இன்னும் விடியாத அந்தப் பனி மூட்ட நேரத்தில், மேதினூர் மலையடிவாரம் மெல்ல விழித்துக்கொண்டது.

மலையிலிருந்து வீசிய சில்லென்ற வடகாற்றும், காட்டுப் பறவைகளின் கூச்சலும் அந்த விடியலுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் ராயனும், அவனது நண்பர்கள் படையும் அதிகாலையிலேயே அருவாள், சாக்குப் பைகளுடன் சோளக் கொள்ளைக்குக் கிளம்பிவிட்டனர்.சுற்றிலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் மலைத் தொடர்கள், அதன் அடிவாரத்தில் பனித்துளிகள் சொட்டச் சொட்டப் பச்சைப்பசேல் என விரிந்து கிடந்தது மருதுவின் சோளக் காடு.

விளைந்து முற்றிய சோளத் தட்டைகள் காற்றில் அசைந்தாட, அருவாள் வெட்டும் ‘சடக் சடக்’ சத்தமும், நண்பர்களின் சிரிப்பொலியும் அந்த காட்டைச் சுறுசுறுப்பாக்கின.கேளி கிண்டல்களுடன் சோளம் அறுத்துக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பின்னாடி திரும்பிப் பார்த்த சொக்கன், “எலே மாப்பு… இன்னும் எங்கடா மீசையைக் காணோம்?” என்றான்.

அருவாளால் சோளத் தட்டையைச் சரித்துக்கொண்டிருந்த ராயன் நிமிர்ந்து பார்க்காமலேயே, “பின்னாடிதான் இருப்பாரு… பாருடா!” என்றான்.

அப்படியா மச்சி என்றவாறு சொக்கன் திரும்பிப் பார்க்க, அங்கே கைலியை மடித்துக் கட்டி, தோளில் துண்டோடு மருது கோபமாக இவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

அவரைப் பார்த்ததும் பயப்படுவதற்குப் பதிலாக அசட்டுச் சிரிப்புச் சிரித்த சொக்கன், “மாமா… காலைல உன்னைப் பார்க்கலனா எனக்கு வேலையே ஓட மாட்டேங்குது!” என்று ஐஸ் வைத்தான்.

மருது தன் மீசையை முறுக்கிக்கொண்டே, “இருக்கும்டா இருக்கும்… என்றைக்கு  உங்க முதுகுல மிதிக்கப் போறனோ, அன்னைக்குத் தெரியும்டா என்னோட பாசம்!” என்று கோபமாக சொல்லிக்கொண்டே அங்கே வெட்டிப் போட்டிருந்த சோளக் கதிர்களை சாக்குப் பையில் அள்ளி, ஓரமாகக் குன்று போலக் குவித்து வைக்கத் தொடங்கினார்.

அவர் தள்ளிப் போனதும், பக்கத்தில் இருந்த மூக்கையன் சொக்கன் தோளில் தட்டி, “ஏண்டா… என் சித்தப்பாவை வம்பிழுக்கலனா உனக்குத் தூக்கமே வராதாடா?” என்றான் நக்கலாக.

சொக்கன் தன் மார்பில் கைவைத்து, “உன் சித்தப்பா மேல எனக்கு அம்புட்டு காதோலுடா!” என்று சத்தமாகச் சொல்ல, சோளக் கொள்ளையே அதிரும்படி அத்தனை பேரும் சத்தமாக சிரித்தனர்.

அவர்கள் பேசியது தூரத்திலிருந்த மருதுவின் காதிலும் விழுந்தது தான். ‘இந்தக் காலத்துப் பயலுக…’ என்று மனதிற்குள் சிரிப்பு வந்தாலும், ஊர்த் தலைவர் என்ற தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல், வழக்கம் போல அந்தச் சிரிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் உதட்டைக் கடித்துக்கொண்டு சோளத்தைச் சாக்கில் அள்ளும் வேலையைப் பார்த்தார்.

மலையடிவாரத்துக் காலை வெயில் மெல்லச் சோளக் கதிர்கள் மீது படர, அரட்டை ஒரு பக்கம் இருந்தாலும் வேலையில் கவனமாக இருந்தனர்.

“சரிங்கடா…நீங்க சோளத்தை அள்ளி வைங்க, நான் போய் குடிக்க ஏதாச்சும் வாங்கிட்டு வாரேன்,” என்று சொல்லிவிட்டு மருது தனது துண்டை உதறிப்போட்டு வயலிலிருந்து மெல்ல நடந்தார்.

அதே நேரத்தில், மருந்து அறை, பிரசவ வார்டு என எல்லாவற்றையும் பார்வையிட்ட எழிலுக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப்போனது.ஆனால், தாங்கள் தங்குவதற்கு வசதியான ஒரு பாதுகாப்பான வீடு வேண்டும் என்பதால், டாக்டரின் யோசனைப்படி ஊர் தலைவரைச் சந்திக்க முடிவெடுத்தனர்.

மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம், “ஐயா… உங்க ஊர் தலைவர் மருது ஐயா வீடு எந்தப் பக்கமா இருக்குங்க?” என்று ரவி கேட்டார்.

“அதோ… அந்த மலையடிவாரப் பாதையில இறங்கிப் போனீங்கன்னா, பிரம்பு வேய்ந்த பெரிய வீடு தெரியும் தம்பி. அதான் தலைவரு வீடு. ஆனா இந்த நேரத்துல அவர் அங்க இருக்க மாட்டாரு, அவங்க வயல்ல சோள அறுவடை நடந்துக்கிட்டு இருக்கு… அங்கதான் இருப்பாரு!” என்று வழிகாட்டினார்.

சில்லென்ற காற்று வீச, காட்டின் பச்சை வாசனையும், ஏதேதோ சத்தமும் கேட்ட அந்தப் பாதையில் மூவரும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டிருக்க… எதிரே டீக்கடையை நோக்கி வந்து கொண்டிருந்த ஊர் தலைவர் மருதுவின் கண்ணில் இவர்கள் மூவரும் பட்டனர்.

அவர்களைப் பார்த்தவுடனேயே ஊருக்குப் புதிதாக வந்தவர்கள் என்பதைப் புரிந்துகொண்ட மருது, தன் கம்பீரமான நடையைச் சற்று குறைத்தவர், “வாங்க… ஊருக்குப் புதுசாத் தெரியுது, யாரைப் பார்க்கணும் நீங்கள்?” என்று விசாரித்தார்.

உடனே ரவி “ஐயா… நாங்க சிதம்பரம் பக்கம் இருந்து வர்றோம். என் பொண்ணு எழிலுக்கு இந்த ஹாஸ்பிட்டல்லதான்  நர்ஸ் வேலை போட்டிருக்காங்க. ஊர் தலைவர் மருது ஐயாவைப் பார்த்துத் தங்குறதுக்கு வீடு கேட்கலாம்னு டாக்டரய்யா சொன்னாரு…” என்று வந்த விஷயத்தைத் தெளிவாச் சொன்னார்.

“அடடே… புதுசா வந்த நர்சம்மாவா நீங்க! வாங்க தாயி… வாங்க!” நான் தான் அந்த மருது.”வீதியில நின்னுகிட்டா பேசுறது? முதல்ல வீட்டுக்குப் போவோம் வாங்க,” என்று அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

சிறிது நிமிடத்தில் வீட்டுக்கு வந்ததும், “மயிலு… ஏ மயிலு! நம்ம ஆஸ்பத்திரிக்கு புதுசா நர்சம்மா வந்திருக்காங்க பாரு… குடிக்கக் தண்ணி எடுத்துட்டு வா!” என்று குரல் கொடுத்தார்.

வந்துட்டேங்க என்றவாறு சிரித்த முகத்தோடு உள்ளிருந்து வந்த மயிலா, “வாங்க, நல்லா இருக்கீங்களா?” என்று மூவரையும் விசாரித்துத் தண்ணீரைக் கொடுத்தார்.

“நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நம்ம தெருவுலயே நாலாவதா ஒரு வீடு காலியாத்தான் இருக்கு. நம்ப வீடு தான். நல்ல காத்தோட்டமான வீடு… உங்களுக்குப் பாதுகாப்பாவும் இருக்கும். நீங்க தாராளமா அங்க தங்கிக்கலாம். சொந்த வீடு மாதிரி நினைச்சு இருங்க,” என்றார் மருது.

மருதுவின் இந்த  உதவியும், மயிலாவின் அன்பான உபசரிப்பும் ரவி, வள்ளி மற்றும் எழில் மூவரின் மனதிலிருந்த பயத்தைப் போக்கி, பெரும் நிம்மதியைத் தந்தது.

“எங்க பொண்ணு இங்க தனியாதான் தங்கி வேலை பார்க்கப்போறா… உங்க பிள்ளை போல நினைச்சு கொஞ்சம் பார்த்துக்கோங்க ஐயா,” என்று ரவியும் வள்ளியும் கவலையோடு மருதுவிடம் சொன்னார்கள்.

அவர்கள் பேச்சில் இருந்த பெற்றோர் பாசத்தைப் புரிந்து கொண்ட மருது, தன் மீசையை மெல்லத் தடவியபடி, “இந்த ஊர்ல உங்களுக்கு எந்தப் பயமும் தேவையில்லை… நம்ம காவல் தெய்வம் ஆத்தா மலையம்மா இருக்கா! அவ எந்தக் கெடுதலும் தவறா நடக்க விட்டுட மாட்டா”

“டவுனு போல இங்க பெரிய பெரிய ஆடம்பர வசதியெல்லாம் இருக்காதுதான். ஆனா, சுத்தமான காத்தும், மனுஷங்களோட உண்மையான அன்புக்கும் பஞ்சமே இருக்காது… நிம்மதியா இருக்கலாம். வாங்க, போய்ப் பார்ப்போம்!” என்று சொல்லியபடி அவர்களை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அது இரண்டு விசாலமான அறைகளைக் கொண்ட, கூரை வீடு. கூரையின் இயற்கை அமைப்பே வீட்டிற்குள் ஒரு சில்லென்ற சூழலைத் தந்திருந்தது. வீட்டின் பின்னால் இருந்த பரந்த தோட்டத்தில், பளிங்கு போன்ற நிலத்தடி நீரைக் கொடுக்கும் கை அடி பைப் ஒன்றும் இருந்தது.அங்கிருந்து சில மீட்டர் தொலைவிலேயே, மலையிலிருந்து கிளம்பி வரும் தெளிந்த நீர் ஓடை ஒன்று சலசலவென்ற நதியோசையோடு ஓடிக் கொண்டிருந்தது.

இயற்கை அள்ளித் தந்த அந்த அழகிய சூழலையும், ஓடையின் சத்தத்தையும் பார்த்த எழிலுக்கும் அவளது பெற்றோருக்கும் அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே பிடித்துப்போனது.

“அப்பா… வீடு ரொம்ப நல்லா இருக்குப்பா!” என்று எழிலும் சந்தோஷமாக சொன்னாள்.

“இன்னும் இரண்டு நாள்ல பொருட்களையும் எடுத்துக்கிட்டு வரோம் ஐயா…” என்று மருதுவிடம் சொல்லிவிட்டு, மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் மேதினூரிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் சிதம்பரம் செல்ல வேண்டிய டிரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.

நேரமும் கடக்க, நான்காவது பிளாட்ஃபாரத்தில் அவர்களுக்கான டிரெயின் வந்து நிற்க, மூவரும் தங்களின் பெட்டியில் ஏறி அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர். நாள் முழுக்க நடந்த அலைச்சலும், மலையேறிய களைப்பும் உடம்பை வாட்ட, வரும் வழியிலேயே மூவருக்கும்  சாப்பாடு வாங்கி வந்திருக்க, சாப்பிட்டு முடித்தவர்கள் அசதியின் காரணமாக ஆளுக்கொரு பர்த்தில் படுத்துவிட்டனர்.

ரயிலின் ‘தடதட’ சத்தத்தோடு நள்ளிரவுப் பயணம் நகர, அதிகாலையில் அந்த டிரெயின் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் வீட்டின் சூழல் ஒரே பரபரப்பாகதான் இருந்தது.எழிலுக்குத் தேவையான பாத்திர பண்டங்கள், புது டிரஸ்கள், சமையலுக்கு ஏற்ற அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் இரண்டு பெரிய டிரங்க் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டோ, “எழிலு… நானும் உன் கூடவே வந்து மேதினூர்ல தங்கிடுறேனேடி! தெரியாத ஊரில் உன்னைத் தனியா விட்டுட்டு எப்படி இருக்க முடியும்?” என்றார்.

அம்மா சொன்னதைக்கேட்ட எழில், “என்னம்மா விளையாடுறியா? அப்பா சுகர் பேஷன்ட்! அவருக்கு வேளா வேளைக்குச் சரியான நேரத்துல சாப்பாடும் மருந்தும் கொடுத்தாகணும். நீ என் கூட வந்துட்டா அவருக்கு யாரு பார்த்துப் பார்த்துச் செய்வா? இல்லன்னா நான் உன்னை வர வேண்டாம்னு சொல்லப் போறேனா?” என்ற எழில் தனது அம்மாவை முறைத்தாள்.

மகள் சொல்வதும் வள்ளிக்குப் புரிந்ததுதான். இருந்தாலும் இதுவரை தங்களை விட்டு மகள் ஒருநாள் கூடப் பிரிந்து இருந்ததில்லை. அவ்வளவு தொலைவில் அதுவும் ஒரு மலைக் கிராமத்தில் இளம்பெண்ணான தனது மகள் தனியாகத் தங்கப் போகிறாளே என்பதை நினைக்கவே, அவரது நெஞ்சு திக் திக்கென்று அடிச்சிக்கத்தான் செய்தது.

பனி பொழியும்..

← Previous All Chapters Next →

2 comments

yatchan October 13, 2026 - 8:04 pm

வர்ணனைகள் மிக அருமை ..மோதினூருக்கே சென்றது போல் உள்ளது..நாயகன் நாயகியை இன்னும் சந்திக்கவில்லையே?

seema October 14, 2026 - 8:29 am

ஆன் த வே ல இருக்கான் 🤩🤩🤩🤩மிக்க நன்றி பா

Leave a Comment

error: Content is protected !!