Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 4

CHAPTER 4

பனித்துளி 4

By seema · October 12, 2026

0

நண்பர்கள் நான்கு பேரும் பந்தியிலிருந்த கிடாவிருந்தை ஒரு கட்டு கட்டிவிட்டு, இலையைக் மடித்துப் போட்டுவிட்டு எழுந்தனர்.”சரிடா மச்சி… இராவுக்கு பார்க்கலாம்!” என்று சொல்லிக்கொண்டு அவரவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர்.

விசிலடித்தபடியே தனது வீட்டிற்கு வந்த இளந்திரையன், திண்ணையில் கால்களை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த தங்கையைப் பார்த்து, “என்னடி சில்வண்டு… உண்ட களைப்போ?” என்று வம்புக்கு இழுத்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த குயிலா, “வாயை மூடிட்டு போ! உள்ள அம்மா விளக்கமாத்தோடதான் காத்துட்டு இருக்கா…” என்று எச்சரித்தாள்.”

அப்படியா? அதையும் பார்த்தரலாம்!” என்றவன், நக்கலாகச் சிரித்துக்கொண்டே, “மயிலு… என்ன பெத்த ஆத்தா மயிலு…” என்று பாடியவாறே பிரம்பால் வேயப்பட்ட அந்த அழகான வீட்டிற்குள் காலெடுத்து வைத்தான்.அவன் உள்ளே நுழைந்த அடுத்த நொடி… காற்று மண்டலத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பித்தளைப் பாத்திரம் அவனை நோக்கிப் பறந்து வந்தது! ‘பொதீர்’ என்ற சத்தத்துடன் அது நேராக அவனது அகன்ற தோள்பட்டையில் வந்து மோதி விழுந்தது.

இரும்பு போன்ற அவனது உடம்பிற்கு அந்த அடி எறும்பு கடித்ததைப் போல லேசான வலியைக் கொடுத்தாலும், அதை அவன் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை.”இவ்வளவு பாசமா மவன் மேல…?” என்று தோளைத் தடவிக்கொண்டே இளந்திரையன் கேட்க, உள்ளிருந்து ஆவேசமாக வெளியே வந்தார் மயிலா.

“என்கிட்ட பேசாதடா! எத்தனை வாட்டி சொன்னேன்… இன்னைக்கு நம்ம கோயில்ல விசேஷம், பூசைக்குக் வெல்லனே வந்து நிக்கணும்னு? இன்னைக்கும் அந்த காலிப் பயலுகளோட சேர்ந்துக்கிட்டு ஊரைச் சுத்திட்டு வந்திருக்க!” என்று கோபத்தில் பொரிந்து தள்ளினார்.

இளந்திரையன் தன் மீசையை முறுக்கியபடி, “இதுல காலிப் பயலுக எங்க வந்தானுவ? உன் அண்ணன் மவன் சொக்கன், அதோட உன் சித்தப்பா பேரனுங்க கூடதானே போனேன்!” என்று டைமிங்காகக் திருப்பிக் கேட்டான்.

“ஆமா…. அந்த ஐயாங்க இப்போது கவர்மெண்ட் உத்தியோகத்துல இருந்து கிழிச்சுட்டாருங்க பாரு!” என்று முறைத்தவாறு வந்து நின்றார் மயிலா.

அவரைப் பார்த்தால் அப்படியே ஒரு பழங்குடி மலைவாழ் இனத்தின் கம்பீரம் மிளிரும்.

காதுகளில் அடுக்கடுக்காகக் குத்தப்பட்ட பெரிய தோடுகளும், கழுத்தில் மின்னும் இரட்டை வடச் சங்கிலியும், இரு பக்கமும் மின்னும் மூக்குத்தியுமாய் எளிமையான காட்டன் புடவையில் அவ்வளவு லட்சணமாக இருந்தார்.

அடர்ந்த கூந்தலை ஒரு பக்கமாக அள்ளி முடிந்து, முகத்தில் கோபத்தோடு நின்ற தாயைப் பார்த்ததும் இளந்திரையனுக்குச் சிரிப்புதான் வந்தது.

“அம்புட்டு கோவத்துலயும் நீ அழகுடி ராசாத்தி…” என்றபடி, தன் தாயின் கன்னங்களைத் தன் வலிமையான கரங்களால் வாஞ்சையோடு கிள்ளினான் இளந்திரையன்.

மயிலா அவனது கையைத் தட்டிவிட்டு, “பேச்சை மாத்தாதடா!” என்று பொய்யாகக் கோபித்துக் கொண்டாலும், மகனின் அந்த அன்பான செய்கையில் உள்ளுக்குள் பூரித்துப்போனார்.

“சரி சரி… ஏய்யா, நாளைக்கு நம்ம வயல்ல சோளம் அறுக்க வேண்டியது இருக்கு, புரியுதா? மறந்துடாதே!” என்றார் மயிலா குரலைத் தளர்த்தி.

“அதெல்லாம் எப்படி மறப்பேன் மயிலு?” என்று இளந்திரையன் சிரிக்க, மயிலா பெருமூச்சு விட்டபடி, “எங்க… இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்ற! விவசாயம் பண்றதுல இருக்குற ஆர்வம், அதை அறுவடை பண்ற நேரத்துல மட்டும் உனக்கு வரமாட்டேங்குது! என்னவோ புள்ளையோ… போ! சீக்கிரம் உனக்கு ஒரு கால்க்கட்டைப் போட்டாதான் நான் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும்” என்றார் சலிப்புடன்.

அதனைக் கேட்டதும் இளந்திரையன் உரக்கச் சிரித்து, “ஓ… நீ நல்லா சுகமா உட்கார்ந்திருப்ப, என் பொண்டாட்டி வந்து உனக்கு ஆக்கிப் போடுவாளா? நடக்காது மயிலா, நடக்காது! உன் கை பக்குவத்தை சாப்பிட்டுச் சாப்பிட்டு தான் இந்த நாக்கு வளர்ந்திருக்கு. எவ வந்தாலும் சரி, எனக்கு நீதான் ஆக்கணும்… புரியுதா?” என்று தாயைச் செல்லமாக வம்பிலுத்துக்கொண்டே, அந்தப் பிரம்பு வேய்ந்த வீட்டின் உள்ளே மரத்தால் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்த ஏணி போன்ற கூரைப்படியில் சுறுசுறுப்பாக ஏறி, மாடியிலிருந்த தன் அறைக்குள் நுழைந்தான்.

மாடியில் இருக்கும் அறையோ முற்றிலும் தேக்கு மரப் பலகைகளால் உருவாக்கப்பட்ட அறை. வெளி வெயிலின் தாக்கம் உள்ளே வராதபடி, மரக்கட்டைகளின் இயற்கை வாசமும், மலைக் காட்டின் சில்லென்ற காற்றும் அந்த அறையை எப்போதும் குளிரூட்டி வைத்திருந்தன.

பத்து பேர் தாராளமாகப் படுத்து உறங்கும் அளவுக்குப் பரந்திருந்த அந்த மரத் தரையின் ஒரு ஓரத்தில், கையால் நெய்யப்பட்ட தடிமனான பிரம்புப் பாயும், இலவம்பஞ்சு மெத்தையும் விரித்து வைக்கப்பட்டிருந்தன.

அறையின் கூரை மரக் விட்டங்களால் தாங்கப்பட்டிருக்க, பக்கவாட்டு மரச் சுவரில் அமைந்திருந்த சிறிய ஜன்னலைத் திறந்தால்… தூரத்தில் அடர்ந்த மலையடிவாரமும், பச்சைப்பசேல் என விரிந்திருக்கும் கம்பு, சோள வயல்களும் ஒரு ஓவியம் போலக் கண்ணுக்கு விருந்தளிக்கும். சுவரோர மர பலகைகளில் இளந்திரையன் காட்டுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் கயிறுகள், காய்ந்த மூலிகைகள், வேட்டைக்கான குறுவாள் உறைகள் ஆகியவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நவீனப் பூச்சுகள் ஏதுமின்றி, முற்றிலும் இயற்கையோடு இயைந்த அந்த மர அறை, இளந்திரையனின் சுதந்திரமான கரடுமுரடான குணத்திற்கும் அவனது ரசனைக்கும் ஏற்ற கச்சிதமான புகலிடமாக விளங்கியது.

இரவின் அமைதியில் தண்டவாளத்தின் மீது ‘தடதட’வென ரயிலின் சக்கரங்கள் சுழலும் சத்தத்தோடு, சிதம்பரத்திலிருந்து கன்னியாகுமரியை நோக்கி அவர்களின் பயணம் தொடர்ந்தது.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த எழிலுகுத் தூக்கம் வரவில்லை. காற்றில் மிதந்து வந்த இரவு நேரக் குளிர்ச்சியைக் ரசித்தபடியே, தனது எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

இத்தனை காலம் சிவக்கம் அரசு மருத்துவமனையின் வசதியான சூழலிலும், பழகிய மனிதர்களுடனும் கழித்த வாழ்க்கை இனி முற்றிலும் மாறப்போகிறது.

‘மேதினூர்… அது எப்படிப்பட்ட ஊராக இருக்கும்? அந்த மலைக் கிராமத்து மக்கள் நம்மை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?’ என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஓடின.

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெற்றோர் ரவியும் வள்ளியும் அசதியில் மெல்ல உறங்கிக் கொண்டிருந்தனர்.மறுநாள் காலை, விடியற்காலைப் பொழுதில் ரயில் நாகர்கோவில் சந்திப்பை வந்தடைந்தது.

ரயிலை விட்டு இறங்கியதும் வீசிய அந்த தென்மாவட்டத்துத் தண் காற்று, அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அங்கிருந்து பேருந்து பிடித்து, மயிலாடியைக் கடந்து, மேதியனூர் நோக்கிச் செல்லும் பாதையில் பயணம் செய்தனர்.

அங்கே செல்வது அத்தனை சுலபமல்ல. மைலாடியிலிருந்து பேருந்தில் ஏறி, செங்குத்தான மலைப்பாதையிலும், கரடுமுரடான காட்டு வழியிலும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போராடிப் பயணித்தால்தான் அந்த மலை கிராமத்தைச் சென்றடைய முடியும். காட்டு விலங்குகளின் நடமாட்டமும், திடீரென இறங்கும் பனிமூட்டமும் நிறைந்த அந்தப் பயணம் தினமும் அவளுக்கு ஒரு சவால்தான்.

நகரத்தின் இரைச்சல்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. பிரதான சாலையிலிருந்து பிரிந்து சென்ற அந்தப் பாதை, இருபுறமும் பச்சைப்பசேல் என்ற தென்னை மரங்களும், வாழைத் தோட்டங்களும், கம்பீரமான மலைத் தொடர்களும் சூழ அமைந்திருந்தது.

இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்திருந்தது போலிருந்த அந்த இடத்தைப் பார்த்ததும், வள்ளியின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது.

“எழிலு.. ஊரு பார்க்கவே அவ்வளவு அழகா, அமைதியா இருக்குடி!” என்றார் வள்ளி வியப்புடன்.

பேருந்து மேதியனூர் அடிவாரத்தை நெருங்க நெருங்க… பாதை இன்னும் கொஞ்சம் கரடுமுரடாகவும், செங்குத்தாகவும் மாறத் தொடங்கியது. அடர்ந்த காடுகளும், பிரம்மாண்டமான மரங்களும் சூழ்ந்த அந்த மலைப் பாதையைப் பார்த்ததும், ரவியின் முகத்தில் லேசான கவலைக் கோடுகள் படர்ந்தன.

“எழில்… இந்த மலையிலதான் தினமும் நீ வேலைக்கு போகணுமா? மழை நேரத்துல எல்லாம் பஸ் எப்படி வரும்னே தெரியலையேமா…” என்று ரவி கவலையோடு கேட்டார்.

“பயப்படாதீங்கப்பா… எல்லாம் பழகிடும்,” என்று தந்தைக்கு ஆறுதல் சொன்னாலும், எழிலின் உள்ளுக்குள்ளும் ஒரு மெல்லிய பயம் இருக்கத்தான் செய்தது.

பேருந்து மலையடிவாரத்தில் உள்ள மேதினூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. அங்கே ஊர் மக்கள் தங்களின் அன்றாட வேலைகளுக்காகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். டீக்கடைகளில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்த மனிதர்கள், தலைச்சுமையோடு நடந்து செல்லும் கிராமத்துப் பெண்கள் என அந்த ஊரின் மண் வாசனை அவர்களின் மூச்சை நிறைத்தது.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்தவரிடம் சென்ற ரவி, “ஐயா… இங்க கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் எங்க இருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று பணிவோடு கேட்டார்.

அவர்கள் மூவரையும் ஏற இறங்கப் பார்த்த அந்தத் டீக்கடைக்காரருக்கு, அவர்கள் ஊருக்கு முற்றிலும் புதுமுகங்கள் என்பது பார்த்தவுடனேயே புரிந்தது.

முகத்தில் இன்முகத்தோடு, “வாங்க… ஊருக்குப் புதுசுங்களா? வாங்க முதல்ல ஒரு டீயைக் குடிங்க, இந்த காலைக் குளிருக்குத் தொண்டைக்கு இதமா இருக்கும்!” என்று உபசரிப்போடு கூப்பிட்டார்.

அந்த கிராமத்து மனிதரின் அன்பான அழைப்பை அவர்களால் தட்டவே முடியவில்லை. “சரிங்க.. ரெண்டு டீ, ஒரு காபி கொடுங்க,” என்று ரவி சொல்ல, டீக்கடைக்காரர் சுடச்சுட ஆவி பறக்கத் தயாரிக்கத் தொடங்கினார்.அவர்கள் மூவரும் அந்தத் தேநீர்க் கடையின் ஓரத்தில் நின்றபடி, மலையடிவாரத்தின் சில்லென்ற காற்றையும், சுற்றிலும் விரிந்திருந்த பசுமையையும், கிராமத்து மக்களின் சுறுசுறுப்பான இயல்பையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில் சுடச்சுட டீயும் காபியும் தயாராகி வர, அதை வாங்கிப் பருகினர். அந்தப் பிரஷ்ஷான தேநீர் அவர்களின் பயணக் களைப்பை நொடியில் போக்கியது.தேநீரைக் குடித்து முடித்ததும், டீக்கடைக்காரர் கிளாஸ்களை வாங்கி வைத்துவிட்டு வழியைக் காட்டத் தொடங்கினார்.

“சார்… இப்படியே நேரா போனீங்கனாக்க ஒரு மேடு போல வரும். அந்த மேட்டுக்கு மேற்கால பக்கத்துல திரும்பினாக்க நம்ம பிள்ளையார் கோவில் இருக்கும். அந்த பிள்ளையார் கோவில்ல இருந்து ஒரு ஒத்தையடிப் பாதை போல போகும் பாருங்க… அங்கிருந்து பார்த்தீங்கனாவே ஹாஸ்பிட்டல் அம்புட்டு அழகா தெரியும்!” என்று அக்குவேறாக விவரித்தார்.

“ரொம்ப நன்றிங்க ஐயா,” என்றவாறு, மூவரும் அங்கிருந்து சென்றார்கள். டீக்கடைக்காரர் சொன்ன போலவே, சற்று தூரம் சென்றதும் ஒரு சிறிய மண் மேடு தென்பட்டது. அந்த மேட்டைக் கடந்து மேற்கே திரும்பியபோது, அரச மரத்தடியில் அமைந்திருந்த அந்தப் பழமையான பிள்ளையார் கோயில் கண்ணில் பட்டது.கோயிலைக் கடந்து, இருபுறமும் அடர்ந்த புதர்களும், காட்டுப் பூக்களும் பூத்துக் குலுங்கிய அந்த ஒத்தையடிப் பாதையில் மூவரும் மெல்ல நடந்து சென்றனர்.

அந்தப் பாதையின் நுனியை அடைந்ததும், சற்றே உயரமான இடத்தில் அமைந்திருந்த அந்த அரசாங்க ஆரம்ப சுகாதார நிலையம் அவர்கள் கண்முன்னே கம்பீரமாகத் தெரிந்தது.வெள்ளை நிறச் சாயமும், பச்சை நிறக் கூரையுமாய் அமைந்திருந்த அந்த மருத்துவமனையைச் சுற்றிப் பிரம்மாண்டமான மரங்கள் நிழல் பரப்பியிருந்தன.

சுற்றிலும் அமைதியான சூழல்; பறவைகளின் ரீங்காரமும், மலைக் காட்டின் சில்லென்ற காற்றும் மட்டுமே அங்கே வீசிக் கொண்டிருந்தன.

“அப்பா… இதான் ஹாஸ்பிட்டல் போல இருக்கு!” என்று எழில் சொல்ல, மூவரும் அந்த மருத்துவமனையின் பிரதான வாசலை நோக்கிச் சென்றனர்.மருத்துவமனையின் வெளியே சில கிராமத்து மக்கள் மருந்து வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். வரவேற்பறையைக் கடந்து உள்ளே சென்ற எழில், அங்கிருந்த மருத்துவரிடம் சென்று தனது பணிமாறுதல் ஆணையை நீட்டினாள்.

அந்த ஆவணத்தைப் படித்துப் பார்த்த மூத்த மருத்துவர், முகத்தில் மலர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார். “வாம்மா எழிலரசி… உன்னைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்! இந்த மலைக் கிராமத்துக்கு உன்னைப் போல அனுபவமும் அன்பும் உள்ள ஒரு சிஸ்டர் தான் வேண்டும்” என்று இன்முகத்தோடு வரவேற்றார்.

மருத்துவரின் அந்த அன்பான பேச்சு, எழிலின் பெற்றோர் ரவி மற்றும் வள்ளியின் மனதிலிருந்த பெரிய பாரத்தைக் குறைத்தது.

“டாக்டர் சார்… பொண்ணு இங்கதான் வேலை பார்க்கப் போறா. நாங்க தங்குறதுக்கு பக்கத்துல ஏதாவது நல்ல வீடு கிடைக்குமா?” இல்லை தினமும் கீழே இருந்து தான் மலைக்கு மேலே வரணுமா என்று ரவி தயக்கத்தோடு கேட்க,மருத்துவர் சிரித்துக்கொண்டே, “அதுக்கென்ன சார்… நம்ம ஊர் தலைவர் மருது ஐயாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும். அவரே உங்களுக்குப் பாதுகாப்புமான ஒரு நல்ல வீட்டை ஏற்பாடு பண்ணித் தந்திடுவாரு,” என்றார்.

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!