அறுவடை தொடங்கினால், அது முடியும் வரை ஊருக்குள் போகாமல் காட்டின் நடுவே அமைக்கப்பட்ட பரணிலேயே தங்கி இரவு காவல் காப்பது ராயனுக்கும் அவனது கூட்டாளிக்கும் வழக்கமான ஒன்றுதான்.
சோளக் காட்டின் நடுவே, நான்கு பெரிய பலமான மரங்களின் கிளையை இணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது அந்த உயரமான மரப் பரண். பகல் முழுக்க சோளம் வெட்டிய அசதியில் சுனையில் குளித்துவிட்டு வந்த நண்பர்கள் நால்வரும் பரணின் மேல் பாயை விரித்துப்போட்டு படுத்து விட்டனர்.
அறுவடை தொடங்கினால், அது முடியும் வரை ஊருக்குள் போகாமல் காட்டின் நடுவே அமைக்கப்பட்ட பரணிலேயே தங்கி இரவு காவல் காப்பது ராயனுக்கும் அவனது கூட்டாளிக்கும் வழக்கமான ஒன்றுதான்.
சோளக் காட்டின் நடுவே, நான்கு பெரிய பலமான மரங்களின் கிளையை இணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது அந்த உயரமான மரப் பரண். பகல் முழுக்க சோளம் வெட்டிய அசதியில் சுனையில் குளித்துவிட்டு வந்த நண்பர்கள் நால்வரும் பரணின் மேல் பாயை விரித்துப்போட்டு படுத்து விட்டனர்.
நேரமும் கடக்க, பசி வயிற்றைக் கிள்ளவும், பரணின் கீழே நின்றிருந்த மூக்கையன் மட்டும், “டேய்… நால்வருக்கும் சேர்த்து நைட்டுக்குக் கடையில தோசையும் கறியும் வாங்கிட்டு வாரேன்டா!” என்று சொல்லிவிட்டு டார்ச் லைட்டை ஆன் பண்ணி அந்த காட்டுப் பாதை வழியாக ஊருக்குள் போனான்.
ராயனின் வயல் மட்டுமன்றி, அதைச் சுற்றியிருக்கும் அக்கம் பக்கத்து நண்பர்களின் வயல்களிலும் அடுத்தடுத்து அறுவடை வரிசையாக நடக்கவிருந்ததால் இவர்கள் அனைவரும் ஊருக்குள் வர எப்படியும் குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும்.
மூக்கையனும் மலை கிராமத்தில் இருக்கும் அந்த ஹோட்டலில் அவர்களுக்கு தோசை பரோட்டா வறுத்த கரியை வாங்கிக் கொண்டு வர நண்பர்கள் நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு படுத்துவிட்டனர்.
வானத்தில் நிலவு பிரகாசிக்க, காட்டுப் பாதையில் வீசிய தண் காற்றில், பரணின் மேல் படுத்துக் கொண்டு தன் மீசையை முறுக்கியபடி ராயன் வானத்து நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் சிறிது நிமிடத்தில் தூங்கிவிட்டான்.
இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு காட்டின் ஓரத்தில் கேட்ட மெல்லிய சலசலப்புச் சத்தத்தில், பரணில் படுத்திருந்த ராயன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துகொண்டான்.
சில்லென்ற வடகாற்றும், பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே நிறைந்திருந்த அந்த நள்ளிரவில், என்ன சத்தம் அது என உற்றுக் கவனித்தான். நிலவின் பிரகாசமான வெளிச்சத்தில், பரணின் மேலிருந்து தூரத்தில் இருந்த காட்டுச் சுனையை நோக்கி அவன் பார்வை சென்றது.
அங்கே, அடர்ந்த மரங்களின் நிழலிலிருந்து உருவெடுத்து வந்த பிரம்மாண்டமான காட்டு யானைக் கூட்டம் ஒன்று, அந்தப் பளிங்குச் சுனை நீரைத் தன் தும்பிக்கையால் அள்ளி நிதானமாகக் குடித்துக் கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த யானைகளின் தந்தங்களும், தும்பிக்கையிலிருந்து தெளிக்கும் நீர்த்துளிகளும் பளபளவென வெள்ளியை உருக்கிய போல மின்னின.
அதைப் பார்த்த ராயன் பக்கத்தில் படுத்திருந்த நண்பர்களின் தோளைத் தட்டிக் கொண்டு, “ஏய்… சொக்கா! மூக்கு! பரமு! டேய்… எழும்புங்கடா!” என்று மெல்லிய குரலில் எழுப்பினான்.
அரைத் தூக்கத்தில் கண்ணைக் கசக்கிக்கொண்டே எழுந்த சொக்கன், “என்னடா மச்சி… இந்த நேரத்துல எழும்புற?” என்று சலித்துக் கொள்ள, “அங்க பாருங்கடா…” என்று சுனையின் திசையை நோக்கி காட்டினான் ராயன்.
தூக்கக் கலக்கத்தோடு அவர்கள் அங்கே எட்டிப் பார்த்த நொடி, அத்தனை பேரின் தூக்கமும் பறந்துபோனது.
நிலவு வெளிச்சத்தில் அந்தப் பிரம்மாண்ட யானைக் கூட்டம் அமைதியாகத் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த அந்த அரிதான காட்சி, அரைகுறைத் தூக்கத்தில் இருந்த நண்பர்கள் மூவரையும் வியப்பில் வாயடைக்க வைத்தது.
யானைக் கூட்டம் சோளக் காட்டுப் பக்கம் திரும்பிவிடுமோ என்ற மெல்லிய பதற்றத்தோடு நாலு பேரும் மூச்சை அடக்கிக் கொண்டு பரணின் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
சுனையில் தாகம் தீரத் தண்ணீரைக் குடித்து முடித்த அந்த பிரம்மாண்டமான பெண் யானை, தன் தும்பிக்கையை உயர்த்திப் பிடித்துக் காற்றில் வாசனையைப் பிடித்தது. பின்னர், தன் குட்டியை நடுவே அரணாகப் பாதுகாத்தபடி, மெல்லத் திரும்பிச் சோளக் காட்டைத் தாண்டி, அடர்ந்த மலைக் காட்டை நோக்கி நகரத் தொடங்கியது.
அவற்றின் கனமான அமைதியான காலடிச் சத்தமும், கிளைகள் முறியும் ஒலியும் மெல்ல மெல்லத் தேய்ந்து, காட்டின் ஆழத்திற்குள் மறைந்துபோயின.
“அப்பாடா… தப்பிச்சோம்டா! சோளக் காட்டுக்குள்ள வந்திருந்தா இன்னைக்கு அம்புட்டும் காலி!” என்று சொக்கன் பெருமூச்சு விட, “காட்டு விலங்குங்க அது பாட்டுக்குத் தண்ணியைக் குடிச்சுட்டு அமைதியாத்தான் போகுது. நாமதான் தேவையில்லாமப் பயப்படுறோம்” என்றான் ராயன், தன் கண்களைக் காட்டின் திசையிலிருந்து விலக்காமல்.
மீண்டும் பரணில் சாய்ந்த நண்பர்கள், அதிகாலைப் பொழுதின் சில்லென்ற காற்றில் நிம்மதியாக உறங்கத் தொடங்கினர்.
இரண்டு நாட்கள் கழித்து…
சிதம்பரத்திலிருந்து தனது துணிமணிகள், அத்தியாவசியப் பொருட்களுடன் மேதினூருக்கு வந்து இறங்கினாள் எழிலரசி.
ராயனின் அப்பா மருதுவும் அவளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார்.
மறுநாள் காலை…
வெள்ளை நிற நர்ஸ் யுனிபார்மில், எழிலரசி முதன்முதலாக மேதினூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் காலெடுத்து வைத்தாள். ஊர் மக்கள் பலரும் புது நர்ஸைப் பார்க்கவும், மருந்து வாங்கவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டிருந்தனர்.
அதே நேரத்தில், சோளக் காட்டில் காய்ந்த தட்டையை வெட்டும்போது, அருவாள் பட்டு ராயனின் இடது கையில் ஆழமான காயம் ஏற்பட்டது.
பதறிப்போன நண்பர்கள் வாடா ஊசி போடுவோம் என்று அவனை ஹாஸ்பிடலுக்கு பிடிவாதமாக அழைத்து வந்தனர்.
“அடேய்… சும்மா கீறல்தான்டா விழுந்திருக்கு! இதுக்கு எதுக்குடா என்னமோ புள்ளதாச்சி பொண்ணு போல ஆஸ்பத்திரிக்கு இழுத்துட்டு வர்றீங்க?” என்று ராயன் சலித்துக்கொண்டே வர, “மூடுடா வாயை! ரத்தம் சொட்டுது பாரு… ஒழுங்கா வா!” என்று சொக்கனும் மூக்கையனும் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தனர்.
அந்த நேரத்தில், மேசையிலிருந்த மருந்துக் பாட்டில்களை அடுக்கிக் கொண்டிருந்த எழில், காலடிச் சத்தம் கேட்டு நிமிர, முறுக்கிய மீசையும், இரண்டு பட்டன் திறந்து அடர்ந்த நெஞ்சில் சுருளை முடிகள் நீலகலர் பனியனை மீறி தெரிய, கையில் சுற்றியிருந்த துணியில் ரத்தம் கசிந்தபடி கம்பீரமாக உள்ளே வந்த ராயனைப் பார்த்தாள்.
ராயனும் எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தான். வெள்ளைச் சீருடையில், கனிவான கண்களுடன் நின்றிருந்த எழிலைப் பார்த்ததும், அவனது கரடுமுரடான பார்வையில் ஒரு நொடி மென்மை புகுந்து கொண்டது.
“வாங்க… என்ன ஆச்சு?” என்று எழில் தன் மென்மையான குரலில் கேட்டாள்.
“ஒன்னுமில்லைங்க… சோளக் காட்டுல அருவாப் பட்டுடுச்சு. லேசாத்தான் வெட்டு,” என்று ராயன் அலட்சியமாகச் சொன்னான்.
“லேசாத்தானா? துணியெல்லாம் ரத்தமா இருக்கு! இங்க வந்து உட்காருங்க முதல்ல,” என்று அதட்டலான குரலில் சொன்ன எழில், அவனைச் சேரில் உட்கார வைத்தாள்.
ராயனும் வேற வழியின்றி அமைதியாக உட்கார, அவனது கையில் சுற்றப்பட்டிருந்த துணியைப் மெதுவாக அவிழ்த்துப் பார்க்கவும்,வெட்டுக் காயம் கொஞ்சம் ஆழமாகவே இருந்தது. உடனே பஞ்சில் ஸ்பிரிட்டை நனைத்து, காயத்தை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
ஸ்பிரிட் பட்டதும் காயத்தின் வலியில் ராயன் பற்களைக் கடித்துக்கொண்டு ‘ஹ்ம்ம்…’ என மெல்ல முனகினான்.
“வலிக்குதா? கொஞ்சம் பொறுத்துக்கோங்க… சுத்தம் பண்ணலைனா இன்பெக்ஷன் ஆயிடும்,” என்று எழில் பொறுமையாக அவனது முகத்தைப் பார்த்தபடிச் சொல்ல, ராயன் உடனடியாகத் தன் முக பாவனையை மாற்றி, “வலி எதுவுமில்லைங்க… நீங்க வேலையைப் பாருங்க,” என்று தன் கெத்தைக் காட்டினான்.
பக்கத்தில் நின்றிருந்த சொக்கன், “அடிப்பாவி… காட்டுல முள்ளு குத்தினாலே கத்துவியேடா, இங்க என்னடா நல்ல பிள்ளை மாதிரி உக்காந்திருக்க?” என்று கிசுகிசுக்க, ராயன் அவனை முறைத்து அடக்கினான்.
எழில் லேசான புன்னகையோடு, காயத்திற்கு மருந்து தடவி, கட்டுப் போட்டவள் “மூணு நாளைக்கு தண்ணி படக்கூடாது. அப்புறம் இதில் மாத்திரை இருக்கிறது, தவறாம சாப்பிடுங்க,” என்றாள்.
“சரிங்க…” என்று எழிலைப் பார்த்தபடி வாங்கிக் கொண்ட ராயன், தன் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண்ணின் கனிவான பார்வையில் கட்டுண்டு போயிருந்தான்!
“நீ இருடா, நாங்க போய் சோள அறுவடையைப் பார்த்துக்கிறோம்” என்று நண்பர்கள் பிடிவாதமாக ராயனை வீட்டிலேயே விட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் புறப்பட்டுச் சென்றனர்.
வீட்டு வாசலில் கையில் பெரிய கட்டோடு வந்து நின்ற மகனைப் பார்த்ததும், “ஐயையோ… ராயா! என்னடா இது கையில கட்டு? என்ன ஆச்சுடா?” என்று ஓடிவந்த மயிலா, மகனின் காயத்தைப் பிடித்துப் பார்த்தார்.
“ஒன்னுமில்லை மயிலு… சும்மா அருவா பட்டுடுச்சு, பெருசா ஒன்னுமில்லை. நீ போய் சீக்கிரம் சூடா வர காப்பி போட்டு எடுத்துட்டு வா!” என்று தாயைத் தேற்றிய ராயன், திண்ணையில் இருந்த பிரம்பு கட்டிலில் அப்படியே போய் சரிந்து படுத்தான்.
மயிலா சமையலறைக்குள் வரகாபி போடச் செல்ல, ராயன் மெல்லக் கண்களை மூடியவன் மனக்கண் முன்னே சோளக் காடோ, காயத்தின் வலியோ வரவில்லை; மாறாக, அந்த ஆரம்ப சுகாதார நிலையமும், அங்கே வெள்ளைச் சீருடையில் நின்றிருந்த எழிலின் முகமும்தான் வந்து நின்றது.
பஞ்சில் ஸ்பிரிட்டை நனைத்துத் தன் காயத்தைச் சுத்தம் செய்தபோது அவளிடமிருந்து வீசிய அந்த மெல்லிய பர்ப்யூம் வாசம், “வலிக்குதா? கொஞ்சம் பொறுத்துக்கோங்க…” என்று கனிவோடு கேட்ட அவளது மென்மையான குரல், காயத்திற்குக் கட்டுப் போடும்போது அவனது கரங்களைத் தொட்ட அவளது நீண்ட விரல்களின் தீண்டல் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனது கரடுமுரடான மனதை ஏதேதோ இம்சை செய்தது.
காட்டு விலங்குகளுக்கு கூட அஞ்சாத தன் நெஞ்சம், யாரோயேன்று தெரியாத ஒருத்தியின் பார்வையில் இப்படித் தட்டுத்தடுமாறுகிறதே என்று நினைத்துத் தன் மீசையை முறுக்கியபடியே லேசாக சிரித்துக்கொண்டான்.
பனி சிந்தும்…
.