Stories that touch hearts

Home  /  25. யட்சன் (யட்சனின் நேகா)  /  Chapter 5

CHAPTER 5

யார் அவன்?

By yatchan · October 9, 2026

0

தன்னை உலுக்கிக் கொண்டிருந்த தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நேகா.

அழுததில் கண்கள் சிவந்து, அவளது கன்னத்தில் உருண்டோடிக் கொண்டிருந்த கண்ணீரைத் தன் சேலை முந்தானையால் துடைத்தார் கீதா.

மேலும் அவளிடம் எதுவும் பேச வேண்டாம் என்றெண்ணியவர் அமைதி காத்தார். வலியின் மிகுதியில் தன் தாயின் மடியில் மெல்லமாக சாய்ந்து கொண்டாள் நேகா. அவளது வலியை உணர்ந்தவர், அவளது தலைமுடியை மெல்லமாகக் கோதி விட்டு, கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். அதில் சிறிது ஆறுதலடைந்தவள், நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.

அனைத்தையும் கேட்ட கீதாவின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன. அவரது முகத்திலும் நிம்மதி கலந்த மகிழ்ச்சி பரவியது.

மெதுவாக, “அந்தப் பையன் யாருன்னு உனக்குத் தெரியாதா டி?”

“தெரியலை மா.”

“தெரியாம எப்படி டி இருபதாயிரம் உனக்காகத் தூக்கிக் கொடுத்திருக்கான்?”

“அவன் மாஸ்க் போட்டிருந்ததால சரியா மூஞ்சு தெரியலை மா.”

“அந்தத் தம்பியை நம்ம வீட்டுக்குள்ள கூப்பிட்டு நன்றி சொல்லியிருக்கலாம் இல்ல டி… இவ்வளவு பெரிய உதவி செஞ்ச பிள்ளையை வாசல்லேயே நிக்க வச்சி அனுப்பிருக்க?”

“ஊர்ல உள்ளவங்களைப் பத்தி உனக்குத் தெரியாதா மா? ஒண்ணுன்னா ஒன்பதா பேசுவாங்க.”

அவளது பேச்சிலிருந்த உண்மை கீதாவிற்குப் புரிந்தது. இருப்பினும், தங்களுக்கு உதவிய ஒரு இளைஞனிடம் நன்றி கூட கூறாமல் அனுப்பியது அவருக்கு சங்கடமாகவே இருந்தது.

எதுவும் பேசாமல் யோசித்த கீதாவின் மௌனத்திலிருந்தே அவரது எண்ணங்களைப் புரிந்துகொண்ட நேகா, “நீ ஒண்ணும் கவலைப்படாத மா… அந்தப் பையனை ஹாஸ்பிட்டல்ல வச்சிதான் பார்த்தேன். நாளைக்கு அங்க போனா பார்க்கலாம். அப்ப நன்றி சொல்லலாம்,” என்று தன் தாயைச் சமாதானப்படுத்துவதாக நினைத்து, அவளுக்கு அவளே கூறிக்கொண்டாள்.

‘அவன் யார்?’ என்ற கேள்வி அவளுக்குள் உறுத்திக்கொண்டே இருந்தது. அவனது கண்கள் இதற்கு முன்பு பரிச்சயமானதாகத் தோன்றின. ஆனால், முழுதாக அவன் யார் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“சரி மா… இப்படியே அழுதுகிட்டே இருந்தா எதுவும் நடக்காது. நான் கொஞ்ச நேரம் வயலுக்குப் போய் களவெட்டுறேன். நீ அவன் எழுந்ததும் அவனைத் தூக்கிட்டு வயலுக்கு வா மா,” என்றபடி மடியிலிருந்து எழுந்தாள்.

“அதுக்குள்ள என்னடி அவசரம்? இந்த மத்தியான வெயில்ல அங்க ஒத்தையில போய் என்ன பண்ணப் போற? கொஞ்சம் வெயில் தாழப் போவோம்.”

“என்னம்மா சொல்லிட்டு இருக்க? வெயில் தாழனா, இருட்டுனதுக்குப் அப்புறம் போய் களவெட்டச் சொல்றியா?” என்று கூறிவிட்டு கீதாவின் கண்களை உற்றுப் பார்த்தாள்.

“இன்னைக்கு வேண்டாம் டி… நாளைக்கு வெட்டுவோம் ” என்று கீதா கூற, நேகாவிற்கும் இப்போதைக்கு வெளியில் செல்ல மனம் ஒருமாதிரி இருந்தது.

“சரி மா… நாளைக்கு வெட்டுவோம்,” என்றாள்.

அதில் மெல்லிய புன்னகையுடன் எழுந்த கீதா, வீட்டின் சமையலறைக்குச் சென்று தட்டில் சாதத்துடன் வெளிவந்தார்.

அதனைக் கண்ட நேகா, “இப்போதைக்கு பசிக்கலை மா… வேண்டாம்,” என்றாள்.

“காலையில சாப்பிட்ட உப்புமா… அதுக்குப் பிறகு எதாவது சாப்பிட்டியா டி? ஒழுங்கா சாப்பிடு,” என்று தட்டை அவளிடம் நீட்டினார்.

அதனை வாங்கி உண்ணாமல், “வேண்டாம் மா… பசிக்கலை,” என்று மீண்டும் கூறினாள்.

“நீ இப்படியெல்லாம் பண்ணா சாப்பிட மாட்ட,” என்றவர், சாதத்தைச் சாம்பாருடன் பிசைந்து, வாழைக்காய் கூட்டைச் சிறிது அதில் சேர்த்து உருண்டையாகப் பிடித்து நேகாவின் வாயருகில் கொண்டு சென்றார்.

“நா என்ன சின்ன குழந்தையா மா? இப்படி உருண்டை பிடிச்சு ஊட்ட வர நீ?”

“நீ எனக்கு எப்போதும் குழந்தைதான்டி,” என்று கீதா கூற, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அந்த உருண்டையை வாங்கிக்கொண்டாள்.

நேகா மெல்லமாக அசைபோட்டு சாதத்தை விழுங்குவதைப் பார்த்த கீதா, மனதிற்குள், ‘என் பிள்ளைக்கு சீக்கிரமா நல்ல வழி காட்டு தாயி,’ என்று வேண்டிக்கொண்டார். தன் பிள்ளை படும் கஷ்டத்தை நினைத்து நாளுக்கு நாள் மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்.

கீதா ஊட்ட, உண்டு முடித்தாள் நேகா.

அதன்பின், “நா போய் தியோவைத் தூக்கிட்டு வரேன் மா,” என்றுவிட்டு அங்கிருந்து வெளியில் கிளம்பினாள்.

வீட்டை விட்டு தெருவில் அவள் நடக்க ஆரம்பித்ததும், அங்கங்கே தெருவில் நின்றவர்கள் ஒன்று கூடி கீதாவைப் பற்றிப் பேசிக்கொண்டனர்.

“ஏதோ ஒரு பையனை இவ வச்சிருக்காளாம் டி. அவன்தான் குழுவுக்குப் பணங்கட்டுனானாம்,” என்று முணுமுணுத்துக் கொண்டனர்.

அதனைக் கேட்டும் கேட்காதது போல் கடந்து சென்று, வள்ளி அக்காவின் வீட்டிற்குள் சென்றாள்.

இவளைப் பார்த்ததும், “என்ன புள்ள ஆச்சி… என்னென்னவோ உன்னைப் பத்தி சொல்றாங்க. அந்தப் பையன் யாரு?” என்று நேரிடையாகவே கேட்டுவிட்டாள் வள்ளி.

“என்னக்கா… நீங்களுமா அவங்க பேசுறது எல்லாம் நம்புறீங்க?”

“இந்த ஊரைப் பத்தி எனக்குத் தெரியாதா புள்ள? உனக்காகக் காசு கட்டுன பையன் உன் பிரண்டா?” என்று கேட்டார்.

அவரிடம் உண்மையைக் கூறினாலும் நம்புவாரா என்ற பயம் உள்ளுக்குள் எழுந்தது.

“ஆமாக்கா… என் காலேஜ் பிரண்ட்,” என்று பொய்யைக் கூறி மழுப்பினாள்.

அவளது கண்களிலேயே பொய் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட வள்ளி, “நான் உன்னைத் தப்பா நினைப்பனா புள்ள? ஒழுங்கா உண்மையைச் சொல்லு,” என்றார்.

“அது வந்துக்கா…” என்று சற்று தயங்கியவள், பின்னர் மருத்துவமனையிலிருந்து அவன் தன்னைப் பின்தொடர்ந்து வந்தது முதல், அவன் பணம் கட்டியது வரை அனைத்தையும் கூறி முடித்தாள்.

“என்ன புள்ள சொல்ற? யாருனே தெரியாதவன் இருபதாயிரம் கொடுத்தானா?!”

“ஆமாக்கா…” என்று தலையசைத்தாள்.

“எனக்கென்னவோ அந்தப் பையன் உன்னை லவ் பண்றான்னு நினைக்கிறேன் புள்ள…” என்றவரின் இதழோரத்தில் புன்னகை மலர்ந்தது.

“அது எப்படிக்கா? இது என்ன சினிமாவா? பார்த்த உடனே லவ் வர?”

“எனக்கென்னவோ அந்தப் பையன் உன்னை ரொம்ப நாளா ஃபாலோ பண்றான்னு நினைக்கிறேன். உனக்குத்தான் தெரியலைன்னு நினைக்கிறேன்,” என்றுவிட்டு சிறிது யோசித்தார்.

அதனைக் கேட்ட நேகாவின் முகத்திலும் குழப்ப ரேகைகள் படர்ந்தன.

“அந்தப் பையனைக் கண்டுபிடிச்சு, பூ துட்டு வந்ததும் அவன் காசை கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுக்கணும் கா,” என்று சம்பந்தமே இல்லாமல் பதில் கூறுபவளை வித்தியாசமாகப் பார்த்தாள் வள்ளி.

“நா என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீ என்ன புள்ள காசைத் திருப்பிக் கொடுக்கிறதைப் பத்தி பேசுற?”

“என்னைக்கு இருந்தாலும் திருப்பிக் கொடுத்துத்தானே ஆகணும் கா.”

“உனக்கு நா சொல்றது புரியுதா இல்லையா புள்ள? எனக்கு என்னவோ அந்தப் பையன் நல்ல பையனா இருப்பான்னு நினைக்கிறேன்,” என்று விட்டு அவளின் முகத்தில் எதுவும் உணர்ச்சிகள் தென்படுகிறதா என்று உற்று நோக்கினார். எதுவும் இல்லையென்றதும், “பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ புள்ள,” என்று இதுவரை மறைமுகமாக அவளுக்கு உணர்த்த நினைத்ததை வெளிப்படையாகவே கூறிவிட்டாள்.

“ஏற்கனவே உங்ககிட்ட சொன்னது தான்க்கா… திரும்பவும் சொல்றேன். இந்த ஜென்மத்துல என் புருஷனை நினைச்சே நான் வாழ்ந்திருவேன். இன்னொருத்தருக்கு என் வாழ்க்கையில இடம் கிடையாது,” என்று உறுதியாகக் கூறினாள்.

அவளது பேச்சைக் கேட்ட வள்ளிக்கு, அதற்கு மேலும் பேசுவதில் பிரயோஜனமில்லை என்று தோன்றியது.

“சரிப்புள்ள,” என்றுவிட்டு அமைதியாகிவிட்டாள் வள்ளி.

அவளைக் கடந்து சென்று தன் மகனைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தாள் நேகா.

“சரிக்கா… போயிட்டு வரேன்,” என்றவள் வீட்டிற்குச் சென்றாள்.

தியோவை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தானும் அவனோடு படுத்துக்கொண்டாள்.

அவளது யோசனையில் வள்ளி அக்கா, ‘அந்தப் பையன் உன்னை லவ் பண்றான்,’ என்று கூறியது மண்டைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதையே யோசித்தபடி அப்படியே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலை…

மருத்துவமனை…

மருத்துவமனைக்குள் நுழைந்ததும், நன்றி சொல்ல அந்த இளைஞனைத் தேடத் தொடங்கினாள் நேகா. அவளது கண்களுக்கு அவன் புலப்படாததால், சோகத்துடன் நேற்று கொடுத்த டெஸ்ட்டுக்கான ரிசல்ட் என்ன வந்திருக்கிறது என்று பார்க்க அங்கு சென்றாள்.

இவர்களைப் பார்த்ததும், “உங்க பெயர் சொல்லுங்க,” என்றாள் அங்கிருந்த செவிலியப் பெண் ஒருவர்.

“கீதா,” என்று அவர் கூறவும், அவரது டெஸ்ட் ரிசல்ட்டை எடுத்தவள், “இவங்க யாரு?” என்று அருகில் இருந்த நேகாவைக் கைகாட்டிக் கேட்டாள்.

“என் பொண்ணு,” என்றார் கீதா.

“நீங்க கொஞ்ச நேரம் அந்த பெஞ்ச்ல உட்கார்ந்திருங்க மா,” என்ற செவிலியப் பெண், “நீங்க இங்க வாங்க,” என்று நேகாவை அருகில் அழைத்தாள்.

நேகா அருகில் செல்ல, “உங்க அம்மாவுக்கு காசநோய் இருக்குனு டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு,” என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட நேகாவின் கண்களில் நீர் துளிர்த்தது. அதனைத் துடைத்துக்கொண்டு, “நீங்க சரியா செக் பண்ணுங்க… எங்க அம்மாவுக்கு எப்படி காசநோய் வர முடியும்?” என்று, அதெல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் கேட்டாள்.

“கீதா… *** உங்க போன் நம்பர் இதுதானே?” என்று கேட்க,

“ஆமா,” என்று தலையசைத்தாள்.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு,” என்ற பெண், பக்கத்தில் தனியாக இருக்கும் கட்டிடம் ஒன்றைக் காட்டி, “அங்க டாக்டர் இருப்பாங்க. உங்க அம்மாவை அங்க கூட்டிட்டுப் போங்க,” என்றாள்.

அதனைக் கேட்டுவிட்டு டெஸ்ட் ரிசல்ட்டை கையில் வாங்கிக்கொண்டு, தியோவுடன் கீதா அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்தாள் நேகா.

தன் மகளின் கண்களை வைத்தே ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்துகொண்டார் கீதா.

“என்னடி சொன்னாங்க?” என்றுவிட்டு மகளின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

“அது வந்து மா…” என்று சற்று தடுமாறியவள், “அந்த பில்டிங்ல இருக்கிற டாக்டரைப் பார்க்கச் சொன்னாங்க மா,” என்று பாதியை மறைத்து மீதியைக் கூறினாள்.

“இதுக்குத்தான் இப்படி நின்னையாடி? நா கூட என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன். சரி வா… அந்த டாக்டரைப் பார்ப்போம்,” என்றுவிட்டு எழுந்தார் கீதா.

மூவரும் அந்தக் கட்டிடத்தை நோக்கிச் சென்றனர்.

கட்டிடத்தின் முகப்பில், ‘காசநோய் பிரிவு’ என்று எழுதப்பட்டு, அதற்கென்று தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்ததும், வரவேற்பறையில் அமர்ந்திருந்த செவிலியர் ஒருவரிடம் சென்று டெஸ்ட் ரிசல்ட்டை நீட்டினாள் நேகா.

இவளை நிமிர்ந்து பார்த்த பெண்மணி, “பெசண்ட் யாரு?” என்றார்.

“என் அம்மாதான்,” என்று கீதாவைக் கைகாட்டினாள்.

“எக்ஸ்ரே எடுத்துட்டு வந்து டாக்டரைப் பாருங்க,” என்றுவிட்டு, அந்தப் பெண்மணி தன் வேலையில் மூழ்கினார்.

அதனைக் கேட்ட கீதா கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“என்னடி எக்ஸ்ரே, அது இதுனு சொல்றாங்க? இதுக்குத்தான் நா ஆஸ்பத்திரி வரமாட்டேன்னு சொன்னேன். எனக்கு ஒண்ணும் வேண்டாம். வீட்டுக்குப் போவோம் வா,” என்று அவளது கைகளைப் பிடித்து வீட்டிற்கு இழுத்தார் கீதா.

“ஏம்மா… புரிஞ்சுக்க மாட்டேங்கிற? சொல்றதைக் கேளு. வா… எக்ஸ்ரே எடுத்து பார்த்துடுவோம்,” என்று அழைத்தாள் நேகா.

“நீ, நா சொல்றதைக் கேளு டி… எனக்கு ஒண்ணும் இல்லை. சளி, இருமல் தான். அதுவும் மெடிக்கல்ல மாத்திரை வாங்கிச் சாப்பிட்டா சரியாயிடும். இங்கெல்லாம் இப்படித்தான் பயமுறுத்தி, இல்லாத நோயையும் வரவச்சிடுவாங்க. நீ கிளம்பு… நம்ம வீட்டுக்குப் போகலாம்.”

“அய்யோ… நா சொல்றதை ஏன் மா புரிஞ்சுக்க மாட்டேங்கிற? உனக்குக் காசநோய் இருக்குனு டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு,” என்று கோபத்தில் கத்தி உண்மையைக் கூறிவிட்டாள் நேகா.

அந்த வார்த்தைகளைக் கேட்ட கீதா நிலைதடுமாறி அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவரது எண்ணம் முழுவதும், தனக்கு எதுவும் ஆகிவிட்டால் தன் மகளை யார் பார்த்துக்கொள்வார் என்பதிலேயே மூழ்கியது. அவரையறியாமலேயே கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டார்.

“நீ ஏன் மா அழுவுற? இப்பல்லாம் இந்த நோயைக் குணப்படுத்த நிறைய டிரீட்மென்ட் இருக்கு,” என்று, அவள் வாழ்க்கையை நினைத்து கீதா அழுவது புரியாமல் கூறினாள் நேகா.

“என்னை விடுடி… நா போயிட்டா உனக்குனு யார் இருக்கா சொல்லு?” என்று கண்ணீர் மல்க கீதா கேட்க,

அதற்கு பதிலாக தன் தாயை அணைத்துக்கொண்டாள். அவளின் கண்கள் நீர்த்துளிகளை உதிர்க்கப் போகும் சமயம்… அவர்களுக்கு முன்பாக வந்து நின்றான் யட்சன்.

படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் ..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!