“வேணு… இப்போ சொல்லு. என்னாச்சு உனக்கு?”
“ப்ச்… என்ன சொல்லச் சொல்றீங்க? எல்லாம் போச்சு.”
“புரியலையே.”
“நான் என் பத்மாக்கு ஒரு லெட்டர் எழுதி, போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்புனேன். அதை அவங்க அப்பா படிச்சுப் பார்த்துட்டு என்னை போன் பண்ணித் திட்டிட்டாரு.”
“அப்படி என்னடா போட்டோ எடுத்து அனுப்புன?”
“பத்மாக்கு ஒரு கவிதை அனுப்புனேன்.”
“ஏன்டா… முளைச்சு மூணு இலை விடல. அதுக்குள்ள உனக்கு பத்மா கேக்குதா?” என்று சுரேஷ் கிண்டலடித்தான்.
“இலைக்கும் இதயத்துக்கும் என்ன சம்பந்தம்?”
என்ற வேணுவின் கேள்வியைக் கேட்டு கேவி சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தான்.
“இருடா மச்சான். வேணு, நீ சொல்லு. அப்படி என்ன கவிதை எழுதுன?”
வேணு தன் கைபேசியை எடுத்துக்கொண்டு தான் எழுதிய கவிதையைப் படிக்கத் தொடங்கினான்.
“அன்பே பத்மா…
உன் நினைவிலேயே இருக்கும் எனக்கு
உன்னைப் பற்றி நினைக்க
இந்த ஒரு யுகம் பத்து மா?
என்னதான் நான்
என் மனதை உன்னிடம் எடுத்து சொன்னாலும்
உனக்கு தேவை நேரா நேரத்துக்கு
தின்ன உப்பு மா…
உன்னை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும்
என்னை மறப்பது
ரொம்ப ரொம்ப தப்பு மா…
சரி… நேரத்தோட நீ போய் தூங்கு.
ஏனா இப்ப மணி பத்து மா…”
கவிதையை முடித்த வேணுவை கேவி ஆச்சரியமாகப் பார்த்தான்.
“வாவ்! சூப்பர் டா! நீயா எழுதுன?”
“ம்… ஆமா.”
“பயங்கரமா இருக்கே!”
“டேய் மச்சான்! நீ என்னடா இவன் பண்ண தப்பை என்கரேஜ் பண்ணுற?”
“இப்போ அவன் என்ன தப்பு பண்ணான்?”
“டேய்… லவ் பண்ற வயசாடா இது?”
“ஹேய் லூசு! அவன் லவ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னானா?”
“டேய்… இவனுக்கு முழுசா பத்து வயசுகூட ஆகல. இப்பவே பத்மாக்கு லவ் லெட்டர் எழுதுறானே. இதுக்குப் பேர் லவ் தானே?”
“அடேய்… இவன் மனசுல இல்லாத ஒண்ணை நீயா ஏன்டா இவனை நினைக்க வைக்குற?”
வேணு மீண்டும் சோகமானான்.
“வேணு… நீ ஏன் பத்மாக்கு லெட்டர் எழுதுன?”
“அவள எனக்குப் பிடிக்கும். எழுதுனேன். ஏன்? இதுல என்ன தப்பு இருக்கு?”
“நான் எப்போ அதெல்லாம் தப்புன்னு சொன்னேன்?”
“அப்போ ஏன் அப்பா என்னைத் திட்டுறாரு?”
“அவன் கிடக்குறான். ஆனா, நீ சூப்பரா கவிதை எழுதுறடா. உனக்கு தமிழ் மேல ரொம்ப ஆர்வம் இருக்கு.”
“டேய்… இவன் இப்போ எழுதி இருக்குறது பேர் கவிதையா?”
“அடேய்… அது அவனுக்கு கவிதைதான். நீ முதல்ல கீழே போ.”
“என்னமோ போ! இந்த முருங்க குச்சி வாயனுக்கு நீ ஏன் இப்படி சப்போர்ட் பண்றன்னு தெரியல. இவன் வயசுல இருக்குற அந்த எதிர்த்த வீட்டு பொண்ணு பாரதி, ‘பெருசானா நான் டீச்சர் ஆகப் போறேன்’னு சொல்லுறா. ஆனா இந்தப் பக்கி இந்த வயசுல பத்மாவுக்கு லவ் லெட்டர் தந்துகிட்டு அலையுது!”
“அப்பா! டோன்ட் கம்பேர் மீ வித் அதர்ஸ்!”
“ஓ… அடுத்தவங்க கூட உங்கள கம்பேர் பண்ணா துரைக்கு கோவம் வருமோ?”
வேணுவும் விடவில்லை.
“சரி… அந்த பாரதியோட அப்பா சப்-கலெக்டர். அவங்க அம்மா ஒரு ஸ்கூலுக்கு தலைமை ஆசிரியர். அவங்க பெத்த பிள்ளைங்க கூட நீ என்னை கம்பேர் பண்றியே! அப்போ நானும் உன்னை அவங்க கூட கம்பேர் பண்ணி, ‘நீ ஏன் படிக்க வேண்டிய வயசுல கலெக்டர் ஆகாம முருங்க பஜ்ஜி சாப்பிட்டே?’ன்னு கேட்கவா?”
கேவி சிரித்தான்.
“சொல்லு… கேட்கவா?”
“டேய்! பெரியவங்கள என்ன பேச்சு பேசுற நீ?”
“பெரியவங்க நீங்க என்கிட்ட பெரியவங்களா பேசுனா என் பதிலும் மரியாதையா இருக்கும். வீணா என்னை அவமானப்படுத்தினா என் ரிப்ளை இது தான்.”
“வேணு, நீ இரு. டேய் சுரேஷ், நீ கீழே போடா.”
“இவன் வாய்க்கு கண்டிப்பா பின்னால இருந்து எவளாவது வந்து தான் மிதிக்கப் போறாள்!”
என்று சுரேஷ் புலம்பிக்கொண்டே கீழே இறங்கிச் சென்றான்.
வேணு சோகமாக அமர்ந்திருக்க, கொடிவீரன் அவன் தோளில் தட்டிக்கொடுத்தான். அப்போது ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்த மகிழினியும் வேணுவின் அருகில் அமர்ந்தாள்.
“இங்க பாரு வேணு… உன் அப்பன் பேசுறத எல்லாம் நீ காதுல வாங்காத. எனக்குத் தெரிந்து நீ அனுப்புன கவிதை பத்மா அப்பாவுக்குப் பிடிக்கல போல. அதான் அவரு உன்கிட்ட பத்மாவை பேச விடல.”
“அப்போ நான் வேற கவிதை எழுதவா?”
“ம்… எழுது. நிறைய கவிதை எழுது. பத்மாவைப் பற்றி மட்டும் இல்ல… இதோ அந்த மல்லிப்பூ, ரோஜாப்பூ… ஏன், இதோ உன் அத்தையின் அழகிய வதனம்… ம்… எனக்கும் உனக்குமான உறவு வானம், பூமின்னு எல்லாத்தைப் பற்றியும் கவிதை எழுது.”
“அப்படி எழுதுனா!?”
“அப்படி எழுதுனா நீ பத்மாவைத் தேடிப் போக வேணா… பத்மா அப்பாவே உன்னைத் தேடி வருவாரு.”
“அப்படி அவரு வரலைனா?”
“அட… பத்மா இல்லைனா கல்பனா. கல்பனா இல்லைனா சொர்ணா. ஆக மொத்தம் யாரு இருந்தாலும், இல்லைனாலும் அட்லாஸ்ட் நீ ஒரு பெரிய கவிஞனா இருப்படா.”
வேணுவின் முகத்தில் சின்னதாகப் புன்னகை மலர்ந்தது.
“படிப்பு, வேலை, கவிதைன்னு நீ ரொம்ப பிஸியா இருப்ப. அதனால என்ன நடந்தாலும் அதை நமக்கு ஏற்றது போல மாத்திக்க ட்ரை பண்ணு. ஓகேவா?”
“ம்… சரி மாமா. நான் கீழே போறேன். இன்னும் ரெண்டு நாளுல எங்க ஸ்கூல்ல ஆனுவல் டே பங்க்ஷன் வருது. நான் போய் என்னை அதுக்குத் தயார் படுத்திக்கிறேன். தேங்க்ஸ் மாமா. பை அத்தை!”
என்றவன் வேகமாக மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான்.
மகிழினி உடனே கொடிவீரனை முறைத்தாள்.
“என்னங்க இது? அவன்கிட்ட இப்படி பேசி வச்சி இருக்கீங்க?”
“வேற எப்படி பேசுறது? அவன் போக்குல போய் தானே அவனை சரி பண்ண முடியும்.”
“ஓஹோ… சார் எல்லாத்தையும் சரி பண்ணிடுவிங்களா?”
மகிழினியைத் தன் தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“ஏன்? என் பொண்டாட்டிக்கு அதுல என்ன டவுட்?” என்றான்.
“டவுட் எல்லாம் இல்ல. ஆனாலும் நீங்க கேடி தான்.”
“யாரு நானா கேடி? நோ நோ… நான் ரொம்ப நல்ல பையன்.”
“ம்… சொன்னாங்க.”
கொடிவீரன் சிரித்தான்.
சிறிது நேரம் கழித்து மகிழினி கேட்டாள்.
“சரி… பாட்டி என்னமோ கவலையா இருக்காங்களே. என்னன்னு கேட்டீங்களா?”
“ஏன்? என்னாச்சு அவங்களுக்கு?”
“ம்… அவங்களுக்கு குழந்தை வேணுமாம்.”
கொடிவீரன் புருவத்தை உயர்த்தினான்.
“ஏங்க… அப்போ உங்க தாத்தா உயிரோடு இருக்காரா?”
“ஐய… ஆளைப் பாரு! அவங்க நமக்கு ஒரு பிள்ளை வேணும்னு கேக்குறாங்க.”
“ம்… என்கிட்டயும் சொன்னாங்க.”
“முதல்ல நம்மள சேர்ந்து வாழ்ந்தா போதும்னு சொன்னாங்க. இப்போ குழந்தை பெத்துக்கிட்டா போதும்னு சொல்றாங்க. இப்படியே நம்மள நினைச்சு கவலைப்படுறது தான் இவங்க வேலை போல.”
“பட்… அதுதானே நல்ல தம்பதிகளுக்கு அழகு. கல்யாணம் முடிந்து, பிள்ளை பிறந்து, அந்தப் பிள்ளைகளோட பொண்டாட்டி புருஷனு, சொந்த பந்தம், நட்பு கூட வாழ்றது தானே முழுமையான வாழ்க்கை.”
மகிழினி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“ம்… ஆமா. ஆனா, எனக்கு மறுபடியும் இப்படி ஒரு வாழ்க்கை அமையும்னு நான் நினைச்சுப் பார்க்கல.”
கொடிவீரன் உடனே அவளைப் பார்த்தான்.
“தாயே முட்டைக்கண்ணி… இதுக்குத்தான் நான் உங்களை சென்னை அழைச்சிட்டு வரக்கூடாதுனு நினைச்சேன். பிளீஸ்… மறுபடியும் பழசை எல்லாம் பேசாதீங்க.”
“இல்ல கொடி… நான்…”
“ப்ச்… பேசாதீங்கன்னு சொல்றேன் இல்ல.”
என்றவன் அவளைத் தன் அருகில் இழுத்துக்கொண்டான். அவளது மனதில் பழைய நினைவுகள் மீண்டும் எழாமல் இருக்க, அவளை அன்போடு தேற்றினான்.
ஒவ்வொரு நாளும் கணவன்–மனைவி என்ற உறவை மதித்து, ரசித்து, புரிந்துகொண்டு வாழத் தொடங்கிய அவர்களைப் பார்த்து அவர்களின் குடும்பமும் மனதார மகிழ்ச்சி அடைந்தது.
மறுநாள் காலையே கேவி, சிஎம், வேணு, பாட்டி, சுரேஷ் என அனைவரும் கேவியின் காரில் அவன் கிராமத்துக்குக் கிளம்பினர்.
சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஜெயாவின் வீட்டைச் சென்றடைந்தனர்.
அவர்களை வரவேற்கும் விதமாக ஜெயா வாசலுக்கு ஓடி வந்தார். தன் மகனையும் மருமகளையும் பார்த்ததும் அவரது கண்கள் கலங்கின. இருவரையும் கட்டியணைத்துக்கொண்டு தன் அன்பை பொழிந்தார்.
“யாரு வந்து இருக்காங்க? ஓ… சிஎம் வந்து இருக்காங்களா!? வாங்க வாங்க… வாங்க!”
என்று முகம் மலர கீதாவும் அவர்களை வரவேற்றார்.
“கீதா அம்மா… ஜெயா அம்மா… எப்படி இருக்கீங்க?” என்று மகிழினி அன்புடன் கேட்டாள்.
“நாங்க நல்லா இருக்கோம். வாங்க வாங்க… உள்ள வாங்க.”
கொடிவீரன் கீதாவைப் பார்த்தான்.
“அத்தை… என்ன ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க? என்ன மேட்டர்?”
“மேட்டரா? எங்க எங்க?”
கேவி முறைத்தான். மகிழினி சிரித்தாள்.
மாறன் உடனே அவனருகில் வந்து, “டேய் தம்பி… எப்படி டா இருக்க?”
“நான் உங்க கூட பேச மாட்டேன்.”
“ஏன்டா? வாயில புண்ணா?”
“ம்… இல்ல… புண்ணாக்கு.”
“ஏன்? மாட்டுக்கு போடுறத நீ தின்னுட்டியா?”
கேவி மீண்டும் முறைக்க, மகிழினி சிரிப்பை அடக்க முடியாமல் பார்த்தாள்.
“மாமா!” என்று மகிழினி அழைத்தாள்.
“ஏமா?”
“ஏன் வந்ததும் வராததுமா என் கொழுந்தனை வாசல்ல நிக்க வச்சு வம்பு இழுக்கறீங்க? அவர் பாவம். தம்பி… நீங்க உள்ள வாங்க.”
“ஏய் நில்லுடி! என் தம்பியையும் நான் வம்பு இழுக்கக்கூடாது… உன் தங்கச்சியையும் நான் வம்பு இழுக்கக்கூடாதுனா நான் என்னதான் பண்றது?”
“நீங்க பண்ணதுதான் என் வயித்துல ஒண்ணு இருக்கே… அதுவே போதும்.”
“சரி சரி… என் அருமை பெருமை எல்லாம் வாசல்ல நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்காத. டேய் தம்பி… என்மேல ஏன்டா கோபமா இருக்க?”
“ஏன்? உங்களுக்கு தெரியாதா?”
“டேய்… இன்னுமா அதையே நினைச்சுகிட்டு இருக்க? விடுடா… விடுடா… இதெல்லாம் சகஜம்.”
“இருந்தாலும் நீங்க என் பொண்டாட்டி எதிர்க்க என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டீங்க.”
“சரி… இப்ப என்ன பண்ணலாம்? மறுபடியும் வேணும்னா இன்னொரு கிப்ட் கொடுக்கவா?”
“நீங்க எதையும் கொடுக்க வேண்டாம். முதல்ல உள்ள வாங்க,” என்று கீதா அவர்களை உள்ளே அழைத்தார்.
“அம்மா… அக்கா எங்க?”
“உன் அக்கா… உங்க எல்லார் எதிர்லயும் வெளியே வர கூச்சப்பட்டுக்கிட்டு ரூமுக்குள்ளே இருக்கிறா.”
“இதுல என்ன கூச்சம் இருக்கு?”
“உங்களுக்கு எதுல தான் அண்ணா கூச்சம் இருக்கு? ஆனா என் அக்கா அப்படியா?” என்று கேவி கிண்டலடித்தான்.
“போதும் உன் அக்கா புராணம். போ… போய் உன் அக்காவைப் பாரு.”
“சித்ரா… நீ வா. நான் உன்கிட்ட நிறைய பேசணும்,” என்று ஜெயா மகிழினியை அழைத்தார்.
“ஆமா ஆமா… வா,” என்று கீதாவும் அழைக்க, மகிழினி அவர்களுடன் சென்றாள்.
கொடிவீரன், “நான் போயி சசி அக்காவைப் பாத்துட்டு வந்துடறேன்,” என்றான்.
“நானும் போய் பாத்துட்டு வரேன்,” என்ற மகிழினியை ஜெயா தடுத்தார்.
“இல்ல இல்ல… நீ அவளை அப்புறம் பார்க்கலாம். நீ என் கூட வா.”
என்று ஆசை ஆசையாகத் தன் மருமகளை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
பெரியவர்களுக்கே உரிய எதிர்பார்ப்புகளுடன் மகிழினியின் வாழ்க்கையைப் பற்றி கேட்டறிந்த ஜெயாவும் கீதாவும், கேவியும் சித்ராவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்தபோது மனதளவில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் மறுபுறம் சசியைப் பார்த்துக் கொண்டிருந்த கேவி,
“டேய் தம்பி… எப்படிடா இருக்க?” என்று சசி கேட்டதும்,
“அக்கா, நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? வயித்துல இருக்குற என் மாப்பிள்ளை என்ன சொல்றான்?” என்றான்.
“டேய்… அது என்ன? மாப்பிள்ளை? ஏன் பொண்ணா இருந்தா ஏத்துக்க மாட்டியா?”
“குழந்தையில ஆண் என்ன? பெண் என்ன? எந்தக் குழந்தையா இருந்தாலும் சந்தோஷம்தான். அப்புறம் மாமா எங்க?”
“அவங்க அக்காவை அழைச்சிட்டு வரப் போயிருக்காரு.”
“என்ன அக்கா… இன்னும் மாமாவோட அக்காவும் மாமாவும் அப்படித்தான் இருக்காங்களா? இல்ல ஏதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கா?”
“டேய்… உனக்கு விஷயம் தெரியாதா? அந்த வனிதாவை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திட்டாங்களாம்.”
அதை கேட்டுக்கொண்டிருந்த மாறன் உடனே,
“எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். அது என்ன ‘தண்ணி இல்லாத ஒரு காடு’? அப்படின்னு ஒரு காடு எங்க இருக்கு?” என்றார்.
“இப்ப அதெல்லாம் ரொம்ப முக்கியமா?” என்று மகி கேட்டாள்.
“ஏன்டி? உனக்கு எதுதான் முக்கியம்? நான் எதைக் கேட்டாலும் கட்டைய போடுறதுல கரெக்டா இருக்கிற.”
“சரி சரி… வளவளன்னு பேசாம ஆக வேண்டிய வேலையை பாருங்க.”
சசி சிரித்தபடி கேவியைப் பார்த்தாள்.
“அப்புறம் டா… கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது? மும்பை வேலை எப்படி இருக்கு?”
“ம்… சூப்பர்.”
“மறுபடியும் போகணுமா? இல்ல அங்க இருந்து மொத்தமா இங்க வந்துட்டிங்களா கொழுந்தனாரே?” என்று மகிழினி கிண்டலாகக் கேட்டாள்.
“அங்க எனக்கு வேலை செட் ஆகிடுச்சு அண்ணி. அதே மாதிரி சிஎம்க்கும் மன நிறைவான வேலை கிடைச்சிருக்கு. அதனால நாங்க அங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.”
சசி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“டேய்… என்னடா இது? நம்ம சொந்த ஊரு இதுதான். மகிழினிக்கு சென்னை. நீங்க ரெண்டு பேரும் சம்பந்தமே இல்லாம போய் மும்பைல வாழறீங்க. இதெல்லாம் எப்படி செட் ஆகும்?”
கொடிவீரன் அமைதியாகச் சொன்னான்.
“அக்கா… நம்ம பிறந்த ஊரு எதுவா வேணா இருக்கலாம். ஆனா, நமக்குனு ஒரு வேலை கிடைச்சு எந்த ஊரு நம்மள வாழறதுக்கு வழி பண்ணுதோ, அதை நம்ம ஊரா ஆக்கிக்கணும். அவ்வளவுதான். எனக்கு மும்பை பிடிச்சுப் போச்சு. சிஎம்க்கும் அப்படிதான். அதனால இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாம்னு ஒரு பிளான் இருக்கு.”
“இல்லடா… உங்களுக்கு குழந்தை குட்டினு ஆச்சுன்னா எப்படி டா அங்க இருந்து தனியா மேனேஜ் பண்ண முடியும்?”
“அதுக்கு என்ன? பெத்துக்கும் போது சந்தோஷமா இருக்குல. வளர்க்கும்போது ரெண்டு பேர் சேர்ந்து வளர்த்துக்க வேண்டியதுதான். வேணும்னா எங்க அம்மாவை அழைச்சிட்டு போறேன்.”
“ஐயோ! நீ அம்மாவை அழைச்சிட்டு போனா அப்ப என் குழந்தையை யார் பார்த்துக்குறது?” என்று சசி கவலைப்பட்டாள்.
அந்த நேரத்தில் சசியின் கணவன் சிவாவின் அக்கா ஆண்டாள் வீட்டிற்குள் நுழைந்தார்.
“அதுக்குத்தான் நான் இருக்கேனே! என் வயித்துப் பிள்ளையை எடுத்துக் கொஞ்சதான் எனக்கு கொடுத்து வைக்கல. என் தம்பி பிள்ளையை யாவது நான் வளர்க்கிறேனே!”
“அதுக்கு என்ன அண்ணி? தாராளமா நீங்களே வளர்த்துக் கொடுங்க. யாரு வேணாம்னு சொன்னது?” என்று சசி மனமார அவர்களை வரவேற்றாள்.
சொந்த பந்தங்கள் சூழ்ந்து இருக்க, அனைவரும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்திருந்த அந்த நேரத்தில் மாறன் வேணுவைப் பார்த்தார்.
“என்னடா வேணு… நொய் நொய்ன்னு எதாவது பேசிக்கிட்டு இருப்ப. இப்போ என்ன அமைதியா இருக்கிற?”
வேணு அவரைப் பார்த்து ஒரு பார்வை பார்த்தான்.
சுரேஷ் உடனே,
“அதுவா? இவன் இந்த வீட்டு பக்கத்துல இருக்கிற பத்மாவ…”
“டேய் மச்சான்! கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா? ஒருத்தவங்க பேசினாலும் பேசிக்கிட்டே இருக்கிறான்னு சொல்றீங்க. அமைதியா இருந்தாலும் ஏன் அமைதியா இருக்கிறேன்னு கேட்கிறீங்க. உங்ககிட்ட எல்லாம் மனுஷன் வாழறதே ரொம்ப கஷ்டம்,” என்று கேவி அலுத்துக்கொண்டான்.
வேணு சிரித்தான்.
“அட விடுங்க மாமா. இவங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்ல. ஆமா… அத்தை எங்க?”
“அதானே! என் பொண்டாட்டியை ஆள காணோம். என் அம்மாவையும் ஆள காணோம்.”
“ஐயோ… என் மாமியாரையும் ஆள காணோம்,” என்று மாறனும் சேர்ந்து கொண்டார்.
“இருக்கோம்… இருக்கோம்! இங்கதான் இருக்கோம்,” என்று கீதாவின் குரல் கேட்டது.
“வாங்க வாங்க… எல்லாரும் வாங்க,” என்று ஜெயாவும் அழைத்தார்.
அன்றைய தினம் சசிக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடந்து முடிந்தது.
“சரி சரி… வாங்க எல்லாரும் சாப்பிடலாம்,” என்று கீதா அழைத்தார்.
அப்போது மகிழினி,
“அம்மா… நாங்க கிளம்பறோம். சாப்பாடு வேணா… எனக்கு ஒரு மாதிரி இருக்கு,” என்றாள்.
“அண்ணி, இந்த நேரத்துல நீங்க வீட்டுக்குக் கிளம்ப வேண்டாம். நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பலாம். நீங்க போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”
“ஆமாம் மகி… இன்னைக்கு நீ இங்கேயே இரு,” என்றார் கீதா.
மாறன் உடனே,
“அய்யய்யோ! நான் இன்னொரு வீட்டுல எல்லாம் தங்க மாட்டேன். என் வீட்ல, என் பெட்ரூமில், என் பொண்டாட்டி கூட இருக்கிறதுதான் எனக்கு பிடிக்கும்.”
“ஹலோ மாப்ள! இன்னும் கேட்டா உங்க பொண்டாட்டியையும் உங்களையும் இந்த நேரத்துல நாங்க பிரிச்சி வைக்கணும். போனா போதுன்னு உங்க கூட என் பொண்ண அனுப்பி வைக்கிறதே பெரிய விஷயம்.”
“சரி… அப்போ உங்க பொண்ணை இங்க விட்டுட்டு உங்கள அழைச்சிட்டு போடா?”
“ஏய்! என்ன திமிரா?”
“அட… எனக்கு கூடமாட சாப்பாடு செய்ய ஒத்தாசைக்கு…”
“இன்னும் உனக்கு என்னைப் பத்தி ஒழுங்கா தெரியல.”
“சரி… எனக்கு தெரியறது இருக்கட்டும். எங்க மாமனாரை ஆள காணோம்.”
“நீ எதுக்கு இப்ப அவர தேடுற?”
“அதானே… நீங்களே அவரை தேடுறது இல்ல.”
“ஐயோ அண்ணா… விடுங்க. ஏன் இப்போ அத்தைய வம்பு இழுத்துக்கிட்டு இருக்கீங்க?” என்று கேவி சிரித்தான்.
ஜெயா அனைவரையும் பார்த்து மனநிறைவுடன் பேசத் தொடங்கினார்.
“இந்த மாதிரி நம்ம குடும்பம் ஒத்துமையா இருக்கணும்னு தான் நான் கோவில் கோவிலா ஏறி சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கிங்க. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அம்மாடி சித்ரா… இதே மாதிரி கூடிய சீக்கிரம் நீயும் ஒரு பேரனையோ பேத்தியையோ எனக்கு பெற்று கொடுத்திரு. எனக்கு அதைவிட வேற எந்த சந்தோஷமும் இல்ல.”
“நான் சொல்ல வந்ததை நீ சொல்லிட்ட ஜெயா,” என்றார் பாட்டி.
கொடிவீரன் உடனே,
“இப்போதைக்கு குழந்தை பெத்துக்கிற ஐடியா எல்லாம் எங்களுக்கு இல்ல. குழந்தை பிறக்கும்போது பிறக்கட்டும். நீங்க அக்காவுடைய பிரசவத்துக்குத் தேவையான வேலையை பாருங்க.”
“ம்,” என்று ஜெயா அமைதியாகத் தலையசைத்தார்.
சிறிது நேரத்தில் கேவி வேணுவைப் பார்த்தான்.
“வேணு… நீ எங்க கூட தூங்க வரியா?”
“இல்ல மாமா. நான் கீதா பாட்டி கூட தூங்குறேன்.”
“அண்ணா… நீங்க?”
“நானும் கூட மா.”
“ஏய்!” என்று கீதா முறைத்தார்.
“மகி கூட இன்னொரு ரூம்ல படுத்துக்குறேன்னு சொல்ல வந்தேன்,” என்று மாறன் சமாளிக்க, கேவி சிரித்தான்.
“சரி சரி… எல்லோரும் போயி நேரத்தோடு படுங்க. காலையில எல்லாரும் குலதெய்வக் கோவிலுக்குப் போகணும்,” என்று ஜெயா அறிவுறுத்தினார்.