அன்றிரவு கொடிவீரனின் அறையில் மகிழினி கட்டிலில் சோகமாக அமர்ந்திருந்தாள். குளியல் அறையிலிருந்து வெளியே வந்த கொடிவீரன் அவளைப் பார்த்ததும்,
“என்னங்க மேடம்? ஏன் ஒரே சோக கீதமா இருக்கு? என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“கொடி… இன்னைக்கு விசேஷத்துக்கு வந்த எல்லோரும் நமக்கு எந்த விசேஷமும் இல்லையான்னு கேட்டாங்க.”
“இல்லையான்னு கேட்டா இல்லன்னு சொல்லுங்க. அதுக்கு நீங்க ஏன் இவ்வளவு கவலையா இருக்கீங்க?”
“எனக்கும் சசி அக்காவைப் பார்த்ததும்…”
“பார்த்ததும்?”
மகிழினி தயங்கினாள்.
“நமக்கும் ஒரு குழந்தை பொறக்கணும்னு ஆசையா இருக்கு.”
“அதுக்கு என்ன? பெத்துக்கிட்டா போச்சு.”
“ஆமா… குழந்தை என்ன கடையில விக்கிற பொருளா? கேட்டதும் கிடைக்கறதுக்கு?”
“குழந்தை வரம் எல்லாம் பெரிய விஷயங்க. அது நிறைய பேருக்கு கிடைக்கிறது இல்ல.”
மகிழினி மெதுவாக அவனைப் பார்த்தாள்.
“நமக்கு கிடைக்குமா?”
கொடிவீரன் அவளது கையைப் பிடித்துக்கொண்டான்.
“அப்படியே நமக்கு குழந்தை வரம் கிடைக்கலனாலும், அழகா ஒரு ஆம்பள குழந்தையையும் ஒரு பொம்பள குழந்தையையும் தத்து எடுத்துப்போம். இதுல என்ன இருக்கு?”
மகிழினி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“என்ன சொல்றீங்க? குழந்தையை தத்து எடுத்துக்கப் போறீங்களா?”
“ஏன்? தத்து எடுக்கக் கூடாதா?”
“என்னங்க இது? அப்படியா… நமக்கு வயசாயிடுச்சு!”
“தெரியுது இல்ல. அப்ப எதுக்கு இதை நினைச்சு கவலைப்படுறீங்க?”
மகிழினி அமைதியாக இருந்தாள்.
கொடிவீரன் அவளைப் பார்த்தபடி மெதுவாகப் பேசினான்.
“இங்க பாருங்க சிஎம்… வாழ்க்கை எப்பவுமே நம்ம நினைச்சது போல அமையறது இல்ல. ஆனா, அதுவா எதை அமைக்குதோ, நம்ம அதை நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்.
“இதே ரூம்ல ரெண்டு மூணு தடவை நீங்களும் நானும் ஒண்ணா தங்கி இருக்கோம். அப்போ நமக்குள்ள எவ்வளவோ கருத்து வேறுபாடு நடந்திருக்குது. ஆனா, இப்போ நம்ம சந்தோஷமா இந்த ரூம்ல இருக்கோம்.
“காலம் எப்பவும் எல்லாத்தையும் ஒரே மாதிரி வச்சிருக்காது. இன்னைக்கு கெட்டவங்களா இருக்கிற எல்லாரும் நாளைக்கு நல்லவங்களா மாறலாம். இன்னைக்கு நல்லவங்களா இருக்குறவங்களும் நாளைக்கு கெட்டவங்களா மாறலாம்.
“அதனால யாரு எப்படி மாறினாலும், நமக்கு அவங்கிட்ட இருந்து எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கிட்டா எந்த ஒரு பிரச்சனையும் இல்ல.”
மகிழினி அவனைப் பார்த்தாள்.
“இப்போ என்ன சொல்ல வரீங்க? நமக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்ல வரிங்களா?”
கொடிவீரன் உடனே சிரித்தான்.
“ஆமா… இப்படி விடிய விடிய ரூம்ல பேசிக்கிட்டே இருந்தா எப்படி குழந்தை பிறக்கும்? களத்துல இறங்கினாதானே குழந்தை பிறக்கும்!”
மகிழினியின் முகம் சிவந்தது.
“அதுவும் உண்மைதான். ஆனா… என்ன பண்றது? என் புருஷனுக்கு பேச்சைத் தவிர வேற எதுலையும்…”
“என்ன?”
“ஒருவேளை அதனாலதான் அன்னைக்கு மாறன் அண்ணன் அந்த அன்பளிப்பை அனுப்பினாரோ?”
கொடிவீரன் உடனே அவளை முறைத்தான்.
“இங்க பாருங்க… மறுபடியும் அந்த அன்பளிப்பைப் பத்தி என்கிட்ட பேசினீங்க நான் செம டென்ஷன் ஆயிடுவேன். அப்புறம் நீங்கதான் அவஸ்தைப்படணும்.”
“இருந்தாலும் உங்க அண்ணன் கொஞ்சம் ஓவர்தான். அதை ஏன் உங்களுக்கு அனுப்புனாரு?”
“சொல்லிக்கிட்டே இருக்கேன். மறுபடியும் மறுபடியும் அதைப் பற்றியே பேசிக்கிட்டு இருக்கீங்க. இல்ல இல்ல… எல்லாரும் சொன்ன மாதிரி உங்க வாயையும் வயிறையும் பெருசாக்கினால்தான் நீங்க அமைதியா இருப்பீங்க. இருங்க… வரேன்.”
என்று ஆசை தீரப் பொய்யான கோபத்துடன் சொன்னவன், தன் மனைவியின் அருகில் சென்றான்.
அன்றிரவு மீண்டும் அவர்களுக்குள் இருந்த காதலும் அன்பும் மலர்ந்தது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தங்களுக்குள் இருந்த தயக்கங்களை மறந்து, அந்த இரவை இருவரும் மறக்க முடியாத அளவுக்கு அன்பால் நிறைத்துக் கொண்டார்கள்.
சசியின் சீமந்ததுக்கு வந்த அனைவரும் கொடிவீரனின் கிராமத்தில் இருந்து சென்னைக்கு கிளம்ப தயாரான நிலையில்,
“அத்தை…! மகி அண்ணிக்கு நிறைமாசம். அதனால் நீங்க அவங்க கூட இருந்து அவங்களைப் பார்த்துக்கோங்க,” என்றான் கொடிவீரன்.
“நான் அங்க போனா சென்னை கேண்டீனை யார் பார்த்துப்பாங்க?” என்று கீதா கவலையுடன் கேட்டார்.
“சுரேஷ் அண்ணன் பார்த்துப்பாரு ம்மா. இந்த மாதிரி நேரத்துல நீங்க மகி அக்கா கூட இருங்க,” என்று மகிழினியும் ஆதரவாகச் சொன்னாள்.
“ஆமா… இவங்க பெரிய டாக்டர் பாரு! அதெல்லாம் வேணாம். என் பொண்டாட்டியை நானே பார்த்துப்பேன்,” என்று மாறன் இடையில் புகுந்தான்.
“அண்ணா… அண்ணிக்கும் அவங்க அம்மா அவங்க கூட இருக்கணும்னு ஆசை இருக்கும்ல,” என்றான் கொடிவீரன்.
“அவளுக்கு ஆசை இல்லைனாலும் பரவாயில்ல. நான் என் மகக்கூட இருந்து அவளைப் பார்த்துக்குறேன்,” என்று கீதா உரிமையாகச் சொல்ல,
“ஆங்… இப்படி இவங்களே உரிமையா பேசுனா நான் ஏன் வேணான்னு சொல்லப் போறேன்? ஏன் அத்தை… உங்க மகளை மட்டும் பார்த்துப்பீங்களா? இல்ல என்னையும்?” என்று மாறன் குறும்பாகக் கேட்டான்.
“உங்களத்தானே பார்த்துட்டா போச்சு!” என்று கீதாவும் சலிப்பில்லாமல் பதிலளித்தார்.
அவர்களின் வழக்கமான சண்டையைப் பார்த்த ஜெயா சிரித்தபடி, “அடடா… நீங்க ரெண்டு பேரும் இன்னுமா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? எப்போதான் உங்க சண்டை ஓயும்னு தெரியல!” என்றார்.
“அதெல்லாம் இந்த ஜென்மம் வரைக்கும் ஓயாது சித்தி. சரி சித்தி, நாங்க கிளம்புறோம். சசி… உடம்ப பார்த்துக்கோ மா,” என்றான் மாறன்.
“சரி மாறா,” என்றாள் சசி.
“எல்லோருக்கும் போயிட்டு வரோம். சித்ரா, நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லணும். ஓகேவா?” என்று மகி மகிழினியைப் பார்த்துக் கேட்டாள்.
“நல்ல செய்திதானே மகி மா உனக்கு வேணும்? நீ வா… நான் உனக்கு சன் நியூஸ் போட்டு காட்டுறேன்,” என்று மாறன் கண்சிமிட்ட,
“ஐயோ… மொக்கை போடாத மாமா! சரி வாங்க கிளம்பலாம். கொழுந்தனாரே, சித்துவைப் பார்த்துக்கோங்க. அம்மா, வாங்க போகலாம்,” என்று மகி அவனை அடக்கிவிட்டு கீதாவை அழைத்தாள்.
“ம்… சரி. எல்லோருக்கும் போயிட்டு வரோம். மாப்பிள்ளை, மும்பைக்குப் போனதும் போன் பண்ணுங்க,” என்றார் கீதா.
“கண்டிப்பா அத்தை. அண்ணா… அங்க போய் அத்தை கிட்ட சண்டை எல்லாம் போடாதீங்க!” என்று கொடிவீரன் எச்சரிக்க,
“வேணும்னா கொண்டை போடவா!?” என்று மாறன் கேட்டதும்,
“நீங்க எதையும் போட வேணாம். எங்க கீதா பாட்டியை ஒழுங்கா பார்த்துக்கோங்க. அதுவே போதும்,” என்று வேணு பெரியவரைப் போல அறிவுரை கூறினான்.
“வேணு… உனக்கும் முழு ஆண்டு பரிட்சை லீவு தானே? நீயும் எங்க கூட வாயேன்,” என்று கீதா அழைத்தார்.
“ஆமாடா வேணு… மாறன் வீட்ல இந்த லீவை என்ஜாய் பண்ணிட்டு வா,” என்று பாட்டியும் சொல்ல,
“ஆமாடா குண்டு பையா… நம்ம வீட்டுக்கு வா,” என்று மாறனும் அழைத்தான்.
“ம்… நீங்க எல்லாம் ரொம்ப கெஞ்சி கேக்குறதால வரேன். சரி, நானும் எல்லோருக்கும் போயிட்டு வரேன். டாட்டா!” என்று சொல்லியவன்தான் முதல் ஆளாக மாறனின் காரில் ஏறி அமர்ந்தான்.
மாறனும் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கேவி வீட்டிலிருந்து கிளம்பினான்.
அவர்கள் கிளம்பியதும் கொடிவீரன் தன் அம்மாவைப் பார்த்தான்.
“சரிம்மா… நாங்களும் கிளம்புறோம். அக்காவைப் பார்த்துக்கோங்க.”
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப் போகலாம் இல்ல? சித்து கூட இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்று ஜெயா ஏக்கத்துடன் கேட்டார்.
“அக்காவை நீங்க பார்த்துக்கோங்க ம்மா. நாங்க இன்னும் மூணு மாசத்துல நம்ம அப்பாவுக்கு திதி கொடுக்க இங்க வரும்போது ஒரு வாரம் தங்கிட்டுப் போறோம்,” என்றான்.
“ம்… சரிப்பா. ரொம்ப சந்தோசம். சித்ரா, நீ நல்லா சாப்பிட்டு உடம்ப பார்த்துக்கணும். புரியுதா?”
“கண்டிப்பா மா. நீங்க கூட இங்க நிம்மதியா இருக்கணும். எங்களைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதீங்க. நாங்க அங்க நல்லா இருக்கோம்,” என்று மகிழினி அன்புடன் கூறினாள்.
“அம்மா… அவங்க நேரத்தோட கிளம்பட்டும். நேரமாகுது பாருங்க. சித்ரா, உடம்ப பார்த்துக்கோ,” என்றாள் சசி.
“ம்… சரிக்கா. நீங்களும் ஜாக்கிரதை. குட்டிப் பாப்பாவைப் பார்த்துக்கோங்க.”
“சரிங்க… கிளம்பலாமா? இப்போ போனா தான் ரோடு ஃப்ரீயா இருக்கும்,” என்றான் கொடிவீரன்.
“ம்… கிளம்பலாம்.”
“நம்ம டீல் படி போகும்போது ஃபர்ஸ்ட் டூ ஹவர்ஸ் நீங்கதான் கார் டிரைவ் பண்ணணும். ஓகேவா?” என்று அவன் மகிழினியைப் பார்த்தான்.
“என்ன? சித்து கார் ஓட்டுவாளா?” என்று ஜெயா ஆச்சரியப்பட்டார்.
“என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க? உங்க மருமக மும்பையில கார் கத்துக்கிட்டு லைசென்ஸ் எடுத்துட்டாங்க. இப்போ எல்லாம் அவங்க செம்மையா கார் ஓட்டுவாங்க. அதுவும் என்னை விட சூப்பரா!” என்று பெருமையாகச் சொன்னான் கொடிவீரன்.
“வாவ்… சூப்பர் சித்து!” என்றாள் சசி.
“தேங்க்ஸ் க்கா,” என்று மகிழினி சிரித்தாள்.
“இருந்தாலும் ஜாக்கிரதையா போகணும். புரியுதா? போனதும் எனக்கு போன் பண்ணுங்க,” என்று ஜெயா மீண்டும் அறிவுறுத்தினார்.
அதன்படியே மகிழினியும் கொடிவீரனும் மாறி மாறி காரை ஓட்டினர். சில மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, பாட்டியுடன் கேவி மற்றும் சிஎம் இருவரும் சென்னையில் இருந்த தங்கள் வீட்டை அடைந்தனர்.
அன்றிரவு…
மாடியில் இருந்த அறையில் இருவரும் படுத்திருந்தனர். கொடிவீரனின் கரங்கள் மகிழினியின் இடையைச் சுற்றியிருந்தன.
“பாட்டி தூங்கிட்டாங்களா?” என்று அவன் கேட்டான்.
“இந்நேரம் அவங்க பாதி தூக்கத்துல இருப்பாங்க,” என்ற மகிழினி, அவன் இதயத்தில் தலையை வைத்து படுத்திருந்தாள்.
“கார் டிரைவ் பண்ணதால ரொம்ப டயர்டா இருக்கீங்களா?”
“அதெல்லாம் இல்ல. நான் நார்மலாதான் இருக்கேன்,” என்றவளின் விரல்கள் கொடிவீரனின் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தன.
“என்னாச்சு என் பொண்டாட்டிக்கு? ஏதோ பலத்த யோசனையில இருக்குற மாதிரி தெரியுதே,” என்றவன், அவள் விரல்களில் மெதுவாக முத்தமிட்டான்.
“எந்த யோசனையிலும் இல்ல. முதல்ல படுத்துத் தூங்குங்க. குட் நைட்,” என்றவள் அவனை அணைத்துக்கொண்டாள்.
அவள் மனதில் இருந்த ஏக்கத்தை அவன் புரிந்திருந்தான். தங்களுக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்ற அவளது ஆசையையும் அவன் அறிந்திருந்தான். ஆனால் காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தான். அந்த இரவு அவளது மனதை மேலும் கேள்விகளால் சுமையாக்காமல், அவளை அன்பாக அணைத்தபடியே தூங்கினான்.
மறுநாள் இரவு, சென்னை கேண்டீன் பொறுப்பை மகிழினியின் அண்ணன் சுரேஷிடம் ஒப்படைத்துவிட்டு, கேவியும் சிஎம்மும் மும்பை செல்லும் ரயிலில் ஏறினர்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைவரின் வாழ்விலும் நிறைய நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தன.
மகிழினியின் அண்ணன் சுரேஷ் தான் செய்துகொண்டிருந்த வேலையைத் தலை முழுகிவிட்டு, வீரா கேண்டீனை எடுத்து நடத்திக்கொண்டிருந்தான்.
மகிழினியின் பாட்டியும் பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்து, சுரேஷின் மனைவி, பிள்ளைகளை ஏற்றுக்கொண்டிருந்ததால், அவ்வப்போது அவர்களின் வருகையும் வேணுவின் பாட்டியின் மனதைக் குளிரச் செய்தது.
வேணுவும் படிப்பிலும், கவிதைப் போட்டியிலும் சமமாகத் தேர்ச்சி பெற்று, சிறு வயதிலேயே பொறுப்பாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டிருந்தான்.
மாறனின் மனைவி மகிக்கு முதல் குழந்தையாக ஆண் வாரிசு பிறந்திருந்தது. ஆனால் பெண் பிள்ளை மீது ஆசை கொண்ட மாறன், தினமும் மகிக்கு வெரைட்டி குல்பி வாங்கிக் கொடுக்க மறக்காதவனாக இருந்ததோடு, அடிக்கடி அவனது மாமியார் கீதாவையும் வம்பிழுக்கத் தவறவில்லை.
கொடிவீரனின் அக்கா சசிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு, சசியின் நாத்தனார் ஆண்டாள் சசி வீட்டிலேயே தங்கிவிட்டாள். சசியின் மகள், ஆண்டாளுக்கும் பெறாத மகளாக மாறிவிட்டாள்.
என்னதான் மகள் வழியில் தனக்கு ஒரு பேத்தி பிறந்திருந்தாலும், தன் மகன் வழி பேரன், பேத்தியை கொஞ்சி மகிழக் காத்திருந்த ஜெயாவின் வேண்டுதல் மட்டும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. செல்ஃபோன் வாயிலாக இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி நலம் விசாரித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
மும்பை மெயின் பிராஞ்ச் வேலையில் கொடிவீரனின் பங்களிப்பு அதிகமாக இருந்த காரணத்தால், கேவியை அங்கே முக்கியப் பொறுப்பில் நிர்வாகம் நியமித்திருந்தது. அதனால் அவனது சம்பளமும் மூன்று மடங்காக உயர்ந்திருந்தது.
மகிழினியும் தனக்குப் பிடித்த செவிலியர் வேலையை மனநிறைவுடன் செய்துகொண்டிருந்தாள். அவளது கடந்தகால நினைவுகள் அவ்வப்போது அவளை கலங்க வைத்தாலும், கொடிவீரனின் அரவணைப்பும், மகிழினி தன்னவனின் மீது கொண்ட அன்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
நீண்ட நாட்களாக எண்ணமாக இருந்தபடி, கொடிவீரன் தனது சொந்த வீடு கட்ட முயற்சி எடுத்தான். அதிலும் வெற்றி பெற, மகிழினியின் வருமானம் குடும்பச் செலவுகளுக்கும், கொடிவீரனின் வருமானம் வீடு கட்டத் தேவையான பணத்தைச் சேர்ப்பதற்கும் என்று கணவன், மனைவி இருவரும் திட்டமிட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இப்படியாக மூன்று மாதங்கள் கடந்த நிலையில், கொடிவீரனும் மகிழினியும் மீண்டும் சென்னை திரும்பினார்கள்.
இந்த முறை ஒரு வார கால விடுமுறையில் வந்தவர்கள், தங்களது சொந்த பந்தங்கள் அனைவரையும் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டிருந்தனர். அவர்களுக்காக சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கொடிவீரன் எண்ணியிருந்தான்.
“ஏங்க… அப்போ நீங்க கடைக்கு வரலைங்களா?” என்று மகிழினி கேட்டாள்.
“நீங்க போய் வாங்கிட்டு வாங்க கொடி. நான் கேண்டீன் போயிட்டு கணக்கு வழக்கு எல்லாம் பார்க்கணும்,” என்றாள்.
“ஏன்? உங்க அண்ணன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“நம்பிக்கை என் அண்ணன் மேல எனக்கு நிறையவே இருக்கு. ஆனா, எனக்குத் தெரிந்த ஒரு ஞானி சொல்லி இருக்காரு… தாயும் சேயும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறையாம். அதனால பண விஷயத்துல எப்பவுமே நம்ம சரியா இருக்கணுமாம்.”
“ஓ… இப்படி ஒரு பணப்பேய் பிடித்த ஞானி யாருங்க?”
“அவரு வேற யாரும் இல்ல… என்னோட பு…ரு…ஷன்!”
“ஓ… அவனா? அவன் சொன்னா சரியாதான் இருக்கும்.”
“ம்… இருக்கும், இருக்கும்.”
“சரி. நான் ஷாப்பிங் போயிட்டு வரேன். உங்களுக்கு எதாவது வேணுமா?”
“ம்…ஹூம். எனக்கு ஏதும் வேணா.”
சிறிது யோசித்தவள், “ஆமா… ஜெயா அம்மா எப்போ வரேன்னு சொன்னாங்க?”
“அம்மா நாளைக்கு சாயங்காலம் இங்க இருப்பாங்க. அவங்க வந்ததும் நம்ம எல்லாம் இந்த வாரம் சசி அக்கா பிள்ளையையும், மகி அண்ணி பிள்ளையையும் போய் பார்த்துட்டு, முறை செஞ்சுட்டு வந்துடுவோம்.”
“ம்… சரிங்க. நீங்க பார்த்துப் போயிட்டு வாங்க. நான் கேண்டீனுக்குக் கிளம்புறேன்.”
அப்போது கீழிருந்து வேணுவின் குரல் கேட்டது.
“மாமா! மாமா! இருங்க… நானும் வரேன்!”
“ம்… வாடா.”
“சரிப்பா… பார்த்துப் போயிட்டு வாங்க,” என்று மகிழினி சொல்லிவிட்டு கேண்டீனுக்குக் கிளம்பினாள்.
கொடிவீரனும் வேணுவும் நகைக்கடைக்குச் சென்றனர். அங்கே அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்த ரேஷ்மா வேகமாக அவர்களருகில் வந்தாள்.
நட்பின் அடிப்படையில் கேவி-சிஎம் வாழ்க்கையைப் பற்றி விசாரித்தவள், அடம்பிடித்து இருவரையும் ஜிகர்தண்டா குடிக்க அழைத்துச் சென்றாள். வேணுவும் அவர்களுடன் இருந்தான். சில நிமிடங்கள் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு ரேஷ்மா அங்கிருந்து விடைபெற்றாள்.
ரேஷ்மா சென்றதும் வேணுவும் கேவியும் டிஜிட்டல் ஃபோட்டோ ஸ்டூடியோவுக்குள் சென்றனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு, பெரிய அளவிலான ஒரு போட்டோ ஃப்ரேமை கிப்ட் பேப்பரில் சுற்றி வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினர்.
“மாமா… நான் ரொம்ப டயர்ட். சோ… நான் போய் தூங்குறேன்,” என்றான் வேணு.
“டேய்… சாப்பிடாம தூங்காத டா.”
“பசிக்கல மாமா. நம்மதான் ரேஷ்மா ஆன்ட்டி கூட ஜிகர்தண்டா குடிச்சோம் இல்ல… எனக்கு அதுவே போதும். நான் கீழே போய் தூங்குறேன்,” என்று சொல்லிவிட்டு வேணு வேகமாகக் கீழே இறங்கி ஓடினான்.