சில நொடிகளில் இருவரும் தனிமையை நாடி, அங்கிருந்து சற்று நகர்ந்து தோட்டத்துப் பக்கம் சென்றனர்.
இருவருக்கும் இடையில் சில நொடிகள் அமைதி நிலவியது.
திடீரென்று கொடிவீரன் மகிழினியைத் தன் வசம் இழுத்தான். அவள் எதிர்பாராத அந்தத் தருணத்தில், அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்.
அவனது அன்பை உள்ளூர ரசித்த மகிழினியும் அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடுங்க கொடி… நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஆனா… என் தரப்பில் இருந்து நீங்க யோசிச்சுப் பாருங்க…”
என்று மகிழினி தன் தரப்பு நியாயத்தை முழுதாகச் சொல்ல வருவதற்குள், கொடிவீரன் தன் ஆள்காட்டி விரலை அவள் உதட்டின் மீது வைத்து அவள் வார்த்தையைத் தடுத்தான்.
“இனி முடிஞ்ச கதையைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். நம்ப நம்முடைய லைஃபை சந்தோஷமா ஸ்டார்ட் பண்ணலாம்.
அதுக்கு முதல்ல நம்ப சென்னையில இருந்து கிளம்பணும். அதுவரைக்கும் இப்படி அடிக்கடி வெஜிடேரியன் கிஸ் மட்டும் கொடுக்க உங்க சம்மதம் வேணும்.”
மகிழினி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
“கிடைக்குமா?”
“அது என்ன வெஜிடேரியன் கிஸ்?”
கேவி கள்ளச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
“இப்போதைக்கு இந்த முத்தம் போதும். மும்பை போனதும் மொத்தமா… ஐ மீன் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டுக்குறேன்.”
என்று அவன் சொல்ல, மகிழினி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
அதன் பிறகு சில நாட்களிலேயே, மகிழினியை அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்பிய கொடிவீரன், சசியின் கணவன் சிவாவின் வீட்டில் இருவரும் புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காகத் திட்டமிட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான்.
அன்றைய தினம்…
காலை நேரம்.
மும்பையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில்,
“சிஎம்… நான் வேலைக்குப் போயிட்டு வந்துடறேன். வந்ததும் நம்ப ஷாப்பிங் போகலாம்.”
“ம்…”
“தனியா இருக்க உங்களுக்கு போர் அடிச்சதுனா டிவில நாடகம் பார்த்துக்கிட்டு இருங்க.”
“ஐயோ… எனக்கு நாடகம் பார்த்தெல்லாம் பழக்கம் இல்ல.”
“ஏங்க… உங்ககிட்ட வேற போன் இல்ல. ஏதாவது அவசரம்னா நீங்க எப்படி என்னை காண்டாக்ட் பண்ணுவீங்க?”
மகிழினி சிரித்தாள்.
“உண்மையா அன்பு இருக்கிறவங்களுக்கு போன் எல்லாம் தேவைப்படாது. நான் மனசுல நினைச்சாலே அடுத்த நிமிஷம் நீங்க இங்கே இருப்பீங்க.”
கொடிவீரன் புருவத்தை உயர்த்தினான்.
“அப்படியா? சரி… அப்போ நான் இப்ப என் மனசுல ஒண்ணு நினைக்கிறேன். நீங்க அதைத் தெரிஞ்சுக்கிட்டு பண்றீங்களான்னு பார்ப்போமா?”
“அப்படி என்ன நினைக்கப் போறீங்க?”
கேவி மனதிற்குள் சிரித்தான்.
‘நான் போயிட்டு வரேன்னு சொல்லும் போதெல்லாம் உங்ககிட்ட இருந்து ஒரு முத்தத்தை எதிர்பார்ப்பேனே… அது இன்னைக்கு கிடைக்குமா?’
அந்த எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு இதழ் ஓரத்தில் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“ம்… இப்ப சொல்லுங்க. பாப்போம்… நான் உங்ககிட்ட என்ன கேட்க நினைச்சேன்னு.”
மகிழினி தன் ஆள்காட்டி விரலைப் பச்சரிசிப் பற்களால் கடித்தபடி அவனைப் பார்த்தாள்.
“ம்… சரியா தெரியல. இருந்தாலும்…”
என்று அவனை நெருங்கி வந்தவள், சட்டென்று அவன் கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள்.
“பார்த்து வேலைக்குப் போயிட்டு வாங்க. சாயந்திரம் பாப்போம்.”
என்று வெட்கத்துடன் சொல்ல, அதீத சந்தோஷத்தில் மிதந்த கொடிவீரன் தன்னவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.
கேவியை வழியனுப்பி வைத்த மகிழினி கதவைத் தாழிட்டாள்.
வீட்டில் இருந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும், அவளது நினைவு முழுவதும் தன்னவனைச் சுற்றியே இருந்தது.
பல மணி நேரங்கள் கடந்தன.
மாலை ஐந்து மணியளவில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
அளவான ஒப்பனையுடன் சிரித்த முகமாக கதவைத் திறந்த மகிழினியின் கண்முன்னே, கையில் மல்லிகைப்பூச்சரத்துடன் கொடிவீரன் நின்றிருந்தான்.
அதே புன்னகை மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தவன், கதவைத் தாழிட்டு தன் கையில் இருந்த பூவை மகிழினியிடம் கொடுத்தான்.
அவளும் வெட்கத்துடன் அதை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்தாள். பின்னர் அவனிடமிருந்த பையை வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.
கேவி தங்களது அறைக்குள் சென்றான்.
சில நிமிடங்களில் ஃப்ரெஷ் ஆகி வேறு ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
அப்போது தேநீர் நிரம்பிய இரண்டு கோப்பைகளை கையில் ஏந்தியபடி மகிழினி அவனுக்காகக் காத்திருந்தாள்.
இருவரும் வீட்டின் பால்கனியில் அருகருகே அமர்ந்து தேநீர் பருக ஆரம்பித்தனர்.
“இன்னைக்கு வேலை எப்படி போச்சு?”
“குறை சொல்ற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா… எனக்குத்தான் அங்க வேலை ஓடல.”
“ஏன்?”
“ப்ச்… எல்லாம் உங்களாலதான். உங்ககிட்ட போன் இருந்தாவது அடிக்கடி போன் பண்ணி நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிப்பேன். பட்… எனக்கு அதுக்கும் வழி இல்ல. அதான் கொஞ்சம் கடுப்பா இருந்துச்சு.”
“இப்போ என்ன? எனக்கு ஒரு ஃபோன் வேணும். அவ்வளவுதானே? சரி… நீங்களே எனக்கு ஒரு போன் வாங்கித் தாங்க.”
“உண்மையாவா?!”
“ம்…”
“இன்னைக்கே வாங்கிடலாம்.”
“ம்…”
மகிழினி சிரித்தாள்.
“ஆமா… இன்னைக்கு அம்மாவுக்கு போன் பண்ணிங்களா? கேண்டீன்ல ஏதும் பிரச்சனை இல்லையே?”
“அதெல்லாம் இல்லிங்க. எல்லாமே சூப்பரா போகுதாம். பாட்டிகூட உங்களைக் கேட்டேன்னு சொன்னாங்க. வேணுதான் நம்ம இல்லாம…”
“ரொம்ப கவலையா இருக்கானா?”
“அதெல்லாம் இல்ல. இப்போதான் பயபுள்ள ஜாலியா இருக்கானாம்.”
மகிழினி சிரித்தாள்.
“ஹாங்… அப்புறம் சொல்ல மறந்துட்டேன். நான் ஒர்க் பண்ற ஆபீஸ் பக்கத்துல ஒரு ஹோம்ல வேலை பார்க்க ஒரு நர்ஸ் வேணுமாம். பேசிக் சேலரிதான் தருவாங்க. உங்களுக்கு விருப்பம்னா நம்ம இருக்கப் போற கொஞ்ச மாசத்துக்கு நீங்க அங்க வேலைக்குப் போறீங்களா?”
“உங்க ஆபீஸ் பக்கத்துலயா?”
“ம்… ஆமா. நானே உங்களைக் காலையில என்னைப் பிக்கப் பண்ண வர கேப்ல அழைச்சிட்டு போய்ட்டு, வரும்போது நானே அதுல அழைச்சிட்டு வந்துடுவேன்.”
“ஓ… நல்ல ப்ளான்தான்.”
“நானா ப்ளான் பண்ணலங்க… அதுவா எனக்கு அமையறது தான்.”
மகிழினி புன்னகைத்தாள்.
“என்ன… அங்க வேலைக்குப் போறீங்களா?”
“ம்… வரேன்.”
“சூப்பர்ங்க! சரி… வாங்க. நம்ம வெளிய போய்ட்டு வரலாம்.”
“இப்போவா? நான் இன்னும் டின்னர் பண்ணலையே.”
“அதெல்லாம் வெளிய சாப்பிட்டுக்கலாம். நீங்க வாங்க. ஜாலியா கொஞ்சம் நடந்து போய்ட்டு வருவோம்.”
என்றவன் மகிழினியை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்றான்.
அங்கே அவளுக்காக ஒரு செல்ஃபோனையும், வீட்டுக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டனர்.
பின்னர் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பினார்கள்.
“என்னோட இன்னொரு சிம் இருக்கு. அந்த நம்பர் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.”
என்றவன் மகிழினியின் கைபேசியை ரெடி செய்து கொடுத்தான்.
அதை வாங்கியவள் தன் பாட்டி, கீதா, ஜெயா, சசி, மகி என்று அனைவரிடமும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தாள்.
அதனால் அருகில் இருந்த கவுச்சில் தலைசாய்ந்து படுத்திருந்த கேவியையே மறந்துவிட்டாள்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு கைபேசி அழைப்பைத் துண்டித்தவள், கேவி அருகில் வந்து அவனை எழுப்பினாள்.
“என்னங்க… பேசி முடிச்சிட்டீங்களா? போய் தூங்கலாமா?”
“ம்… சாரிங்க. ரொம்ப நேரம் பேசிட்டேன்.”
“இட்ஸ் ஓகே. போய்ப்படுங்க. குட் நைட்.”
மகிழினி அவனைப் பார்த்தாள்.
“நீங்க…”
“ம்… என்ன?”
“நீங்க படுக்க வரல?”
“ப்ச்… நான் வந்தா சும்மா இருக்க மாட்டேனே!”
“என்ன?”
“நான் வந்து உங்க கூட ஒரே கட்டில்ல படுத்தா, நான் சும்மா இருக்க மாட்டேன்னு சொன்னேன்.”
மகிழினி அவனை நேராகப் பார்த்தாள்.
“உங்கள யாரு சும்மா இருக்கச் சொன்னாங்க?”
அவளது வார்த்தைகளில் இருந்த சம்மதத்தை உணர்ந்த கேவி அவளை நெருங்கினான்.
மெதுவாக அவள் முகத்தை வருடி, அவளது தாடையில் கை வைத்து முகத்தை உயர்த்தியவன்,
“இந்த நொடி நம்ம ரெண்டு பேர் மனசுல நம்ம ரெண்டு பேரோட காதலைத் தவிர வேற எந்த எதிர்மறை எண்ணமும் நமக்குள்ள இருக்கக்கூடாது. புரியுதா?”
என்று கேட்டான்.
“ம்…”
என்று அவள் மெதுவாகச் சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர்.
அந்த நொடியில் அவர்களுக்குள் இருந்த தயக்கங்கள் அனைத்தும் கரைந்துபோனது.
மகிழினியின் மனதில் பல்லாயிரம் பூக்கள் ஒரே நேரத்தில் மலர்ந்ததைப் போன்ற உணர்வு தோன்றியது. கொடிவீரனின் இதயமும் இயல்பைவிட வேகமாகத் துடித்தது.
ஒரு வழியாக சில நிமிடங்களில் அந்த இனிய தருணம் முடிவுக்கு வந்தது.
கேவி தன்னவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அறைக்குள் செல்லும் தருணத்தில்… வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.
மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டதும், தன் கரங்களில் ஏந்தியிருந்த மகிழினியை மெதுவாகக் கீழே இறக்கிவிட்டான் கேவி.
அதீத கோபத்துடன் வீட்டின் வாசல் கதவைத் திறக்க, அங்கே கையில் கிப்ட் பாக்ஸ் உடன் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
“சார் உங்களுக்கு பார்சல் வந்து இருக்கு” என்றான் அவன்.
“இந்த நேரத்துல தான் பார்சல் கொண்டு வருவீங்களா?” கடுப்புடன் கேட்க,
“சரியா இந்த நேரத்துக்கு தர சொல்லி தான் ஆர்டர் பண்ணிருக்காங்க சார்.”
“ப்ரம் அட்ரஸ் என்ன?”
“அதெல்லாம் தெரியல சார். நீங்களே பார்த்துக்கோங்க” என்றவன் கொடிவீரன் கையில் ஒரு பாக்சை தந்து மின்னல் வேகத்தில் மறைய, கையில் கிப்ட் பாக்ஸ் உடன் உள்ளே நுழைந்த கணவனைப் பார்த்தாள் மகிழினி.
“என்னங்க… யாரு இந்த நேரத்துல?” என்று மகிழினி கேட்க, வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்த கொடிவீரன் திரும்பிப் பார்த்தான்.
“டெலிவரி பாய்ங்க. யாரோ பார்சல் அனுப்பி இருக்காங்க.”
“யாரு?”
“தெரியல.”
“ஐயையோ… இதுல பாம் எதாவது இருக்குமா?”
கொடிவீரன் சிரித்தான்.
“ஹா ஹா… நம்ம என்ன? மணிரத்னம் படமா எடுக்குறோம்?”
“ப்ச்… அதுல என்ன இருக்குன்னு பாருங்க.”
“இருங்க… பிரிப்போம்.”
என்றவன் அந்த கிப்ட் பாக்ஸைத் திறந்தான். அதற்குள் இருந்த பொருட்களைப் பார்த்த அடுத்த நொடியே கொடிவீரனின் முகம் கோபத்தில் மாறியது. ஆனால், மகிழினியோ அந்த அன்பளிப்பைப் பார்த்ததும் வாய் விட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.
“என்னங்க… இது!!”
கொடிவீரன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“இத யாரு உங்களுக்கு அனுப்பிருக்காங்க?”
“வேற யாரு… மாறன் அண்ணன்தான்.”
“அட பாவமே… ச்சீ… பாவம் நீங்க!”
“ஹலோ!! போதும்! எதுக்கு நீங்க என்னை இப்போ டீஸ் பண்ணுறீங்க?”
“யாரு நானா டீஸ் பண்ணுறேன்?”
என்றவள் மீண்டும் சிரிக்க, கொடிவீரனின் கோபம் இன்னும் அதிகமானது. கையில் இருந்த கிப்ட் பாக்ஸை மேசை மீது வைத்துவிட்டு, அதே கோபத்தோடு மாறனுக்கு கைபேசியில் அழைத்தான்.
“ஹலோ! சொல்லு டா தம்பி… என்ன, நான் அனுப்புன கிப்ட் வந்துச்சா?” என்று மாறன் மறுமுனையில் உற்சாகமாகக் கேட்டான்.
“யோவ்… நீ எனக்கு அண்ணன் தானே?”
“என்னடா? தம்பி பொசுக்குன்னு அண்ணனை இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட?”
“பின்ன என் பொண்டாட்டி எதிர்க்க இப்படி தான் என் மானத்தை வாங்குவிங்களா?”
“உன் மானம் போகக்கூடாதுன்னு தான்டா தம்பி… நான் சரியான நேரத்துல சரியான விஷயத்தை உனக்கு அனுப்பி வச்சிருக்கேன்.”
“எனக்கு இப்போ வர ஆத்திரத்துக்கு நீங்க மட்டும் என் முன்னாடி இருந்திங்க…”
“அடேய் வளர்ந்து கெட்டவனே! உன் முன்னாடி இருக்குற பொண்டாட்டியை விட்டுட்டு என்னை ஏன்டா தேடுற? போ போ… ஜமாளி! நானும் போய்…”
“குல்பி சாப்பிட போறிங்களாக்கும்?”
“நான் மேகி சாப்பிடப் போறேன். டாட்டா… ஹேவ் எ குட் நைட்!”
என்று மாறன் சட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட, மகிழினி மீண்டும் சிரித்தாள். அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கொடிவீரன் முறைத்தான்.
“இப்போ நீங்க சிரிக்கிறத நிறுத்தப் போறிங்களா இல்லையா!?”
“நான் என்ன பண்ணுறது? எனக்கு அந்த கிப்ட் பாக்ஸைப் பார்த்தா சிரிப்புதான் வருது.”
“வேணா சிஎம்… என்னை இப்படி நக்கல் பண்ணா எனக்கு செம்ம கோவம் வரும்.”
“ஓ… கோவம் வருமா? வரட்டும். அப்படி உங்க கோவம் என்னை என்ன பண்ணப் போகுதுன்னு நானும் பாக்குறேன்.”
என்றவள் மீண்டும் அந்த கிப்ட் பாக்ஸையும், கொடிவீரனையும் பார்த்துச் சிரித்தாள்.
அடுத்த நொடி அவனது முகம் மாறியது. அவளை தன் அருகில் இழுத்து அணைத்துக்கொண்டான்.
“நான் மறுபடியும் சொல்லுறேன்… என்னைக் கிண்டல் பண்ணாதீங்க. அப்புறம் உங்க நிலைமை ரொம்ப மோசமா போய்டும்.”
“நா… நான் உங்கள கிண்டல் எல்லாம் பண்ணல. ஆனா…”
என்று சொல்லிக்கொண்டே மீண்டும் சிரித்தவளின் பார்வை மேசை மீது இருந்த கிப்ட் பாக்ஸை நோக்கிச் சென்றது.
அவள் சுதாரிப்பதற்குள் கொடிவீரன் அவளைத் தன் கரங்களில் அள்ளிக்கொண்டான். அவளை அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தவன், அவளது முகத்தைப் பார்த்தபடி புன்னகைத்தான்.
அவனது திடீர் கோபத்தைக் கண்டு முதலில் மகிழினி சிறிது அஞ்சினாள்.
“கொடி…” என்று அவள் தயக்கத்துடன் அழைக்க, அவன் அவளது இதழ்களின் அருகே விரலை வைத்துத் தடுத்து,
“ப்ச்… நீங்க என்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டீங்க. I want to teach you a good lesson,” என்றான்.
அவனது அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த காதலை உணர்ந்த மகிழினியின் தயக்கம் மெல்ல மறைந்தது. கோபமாகத் தொடங்கிய அந்த விளையாட்டு, இருவரின் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட அந்த நொடிகளில், அவர்களுக்கிடையே இருந்த தயக்கங்களும் தூரங்களும் கரைந்துபோயின.
அன்றிரவு அவர்களின் அன்பு, அவர்களுக்குள் இருந்த எல்லா இடைவெளிகளையும் அழித்தது. ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொண்ட அந்த இரவு, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாக மாறியது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கேவியும் சிஎம்மும் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்கள்.
“தம்பி! சித்ரா எங்கப்பா?” என்று பாட்டி கேட்டார்.
“அவங்க செடிக்கு தண்ணி ஊத்த மாடிக்கு போயிருக்காங்க பாட்டி.”
“நம்ம எத்தன மணிக்கு ப்பா உங்க கிராமத்துக்குக் கிளம்பணும்?”
“நாளைக்கு விடியற்காலையில ஒரு நாலு மணிக்கு கிளம்புனா, வெயிலுக்கு முன்னாடி போயிடலாம் பாட்டி.”
“பரவாயில்ல தம்பி… மகிக்கு இப்போ நிறை மாசம். உங்க அக்காவுக்கு வளைகாப்பு. இப்படி எல்லாமே நல்ல விஷயமா நடக்குறதைப் பார்த்தா எனக்கு சந்தோசமா இருக்கு ப்பா.”
“ம்… ஆமா பாட்டி. எல்லோரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போயிட்டாங்க இல்ல.”
“ம்… ஆமாப்பா. ஆனா…”
“என்ன பாட்டி?”
“நீங்களும் உங்க பொண்டாட்டியும் சந்தோசமா இருக்கீங்க தானே?”
“ஆமா. ஏன்? உங்களுக்கு இந்த திடீர் சந்தேகம்?”
என்று கேவி கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், மகிழினியின் அண்ணன் சுரேஷ் வேணுவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
“அது ஒண்ணும் இல்ல மச்சான். நீங்க சந்தோசமா இருந்தா இந்நேரம் என் பையனுக்கு ஒரு பெண்ணைப் பெத்து தந்து இருப்பிங்களேன்னு பாட்டி ஃபீல் பண்ணுறாங்க.”
“ஏன்? குழந்தை பிறக்கலனா நாங்க ஹாப்பியா இல்லைன்னு அர்த்தமா?”
“அப்படினு பாட்டி தான் ஃபீல் பண்ணுறாங்க.”
“அதெல்லாம் பிறக்கும் போது பிறக்கட்டும். ஆமா… வேணு ஏன் கவலையா இருக்கான்?”
“தெரியலடா. ரெண்டு நாளா சோகமாகவே இருக்கான்.”
“வேணு! நீ வா… நம்ம மாடிக்கு போகலாம்.” என்றவன் வேணுவை அழைத்துக்கொண்டு மாடி அறைக்குச் செல்ல, சுரேஷும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.