மறுநாள் திங்கட்கிழமை காலை, எப்போதும்போல வேலைக்குச் செல்லும் முன் மகிழினியுடன் கேண்டீனுக்குச் செல்வதற்காகக் கீழே இறங்கி வந்த கொடிவீரன், வாசலில் அவனுக்காகக் காத்திருந்த மனைவியைப் பார்த்ததும் சிரித்தான்.
“குட் மார்னிங், சிஎம். நீங்க என்னை விட்டுட்டுப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்.” என்றான் கிண்டலாக.
“ஆமா… ஆமா… போறாங்க. அப்படியே நான் போயிருந்தாலும், என் எதிர்ல வந்து நின்னு சண்டை போட்டு, ‘ஏன் என்னை விட்டுட்டுப் போனீங்க?’ன்னு கேப்பீங்க இல்ல? அதான் நான் தனியா போகல.”
“பாருடா… நீங்க பேசுறதைப் பார்த்தா, நான் என்னமோ உங்களை மிரட்டி உருட்டி காரியம் சாதிக்கிற மாதிரி பேசுறீங்க.” என்று சிரித்தான் அவன்.
“எப்பா சாமி… எனக்குக் கேண்டீன்ல நிறைய வேலை இருக்கு. இப்போ நீங்க என்கூட வரீங்களா? இல்ல நான் நடந்தே போகவா?”
“இருங்க, இருங்க சிஎம்… ஒன்னாவே போகலாம். ஆமா, வேணு எங்கே?”
“அவன் ஏழு மணிக்கு மேலதான் எழுவான்.”
“சரி. நீங்க வெளியே இருங்க. நான் பைக் எடுக்குறேன்.” என்றதும் இருவரும் கேண்டீனுக்குச் சென்றனர்.
அங்கே மகிழினி தன் வேலைகளை கவனித்துக்கொண்டிருக்க, கொடிவீரனும் அவளுக்குத் தேவையான வேலைகளில் உதவி செய்தான். காலை உணவை அங்கேயே முடித்துக்கொண்டவன், மகிழினி கொடுத்த மதிய உணவையும் எடுத்துக்கொண்டு தன் வேலைக்குச் சென்றான்.
மாலை வேலை முடிந்ததும் மீண்டும் கேண்டீனுக்கே வந்தவன், மகிழினியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வது… அந்த நாட்களில் அவனுடைய அன்றாட வழக்கமாகவே மாறிப்போனது.
அப்படியே ஒரு வாரம் கடந்தது. அந்த ஒரு வாரத்தில், கொடிவீரனுக்கும் மகிழினிக்கும் இடையில் சின்னச் சின்னச் சண்டைகள், செல்லக் கோபங்கள், கெஞ்சல்கள் என அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று மெதுவாக அரங்கேறிக்கொண்டிருந்தது.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. கொடிவீரனின் அறையில் அமர்ந்திருந்த வேணு, அவனுடைய போனில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வெளியிலிருந்த மகிழினியின் குரல் கொடிவீரனின் காதில் விழ, அவன் சற்றே நிமிர்ந்து கேட்டான்.
“என்னடா… உன் அத்தை தனியா பேசுற மாதிரி குரல் கேக்குது?”
“தெரியலையே… இருங்க, பாப்போம்.” என்று சொன்ன வேணு, அறையின் வாசலுக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
அங்கே மகிழினி ஓர் ஆடவனுடன் பேசிக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டிருந்தாள். அறையின் வாசலில் நின்றபடி மகிழினி அந்த ஆடவனை நோக்கி, “இதுதான் நான் சொன்ன ரூம். உள்ள போய்ப் பாருங்க.” என்றாள்.
அவனும் எந்த அனுமதியும் கேட்காமல் கொடிவீரனின் அறைக்குள் நுழைந்தான். கொடிவீரனைப் பார்த்ததும் அவனுடைய முகம் சட்டென்று சிவந்தது.
“நீயா?” என்ற அந்த ஒரு வார்த்தையே கொடிவீரனின் பொறுமையைத் தகர்க்கப் போதுமானதாக இருந்தது.
“இங்க உனக்கு என்னடா வேலை?” கொடிவீரன் குரல் அறைக்குள் அதிர்ந்தது.
வேணு இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். “அத்தை… இவரு யாரு? உங்களுக்கு தெரிஞ்ச ஆளா?”
மகிழினி பதில் சொல்ல வாயைத் திறப்பதற்குள், கொடிவீரன் அந்த ஆடவனின் சட்டையைப் பிடித்து, “நான் உன்னை கடைசியா பார்க்கும்போதே என்னடா சொன்னேன்?“ அடுத்த முறை என் கண்ணுல பட்டா… உன் கை உன் உடம்புல இருக்காதுன்னு சொன்னேன்ல?” கோவத்தில் கொந்தளிக்கக் கேட்டு, “நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா… என் வீட்டுக்கே வந்து, என் பொண்டாட்டிகூட பேசிக்கிட்டு நிப்ப?” என்றான் பிடியை விடாமல்.
அந்த ஆடவன் கொடிவீரனின் கையைத் தட்டிவிட்டு, “ஏய் வீரா… என்மேல கை வச்சதாலதானே உன்னை என் அண்ணன் உள்ள தூக்கிப்போட்டு கம்பி எண்ண வச்சான்? என்ன? நீ ஜெயிலுக்குப் போன கதையெல்லாம் மறந்துபோச்சா?” அவன் கேலியாகச் சிரிக்க, மகிழினியின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.
அடுத்த நொடியே— பளார்! என, கொடிவீரனின் கை அவனுடைய கன்னத்தில் இறங்கியது. அதோடு நிற்காமல், அவனுடைய வலது கையைப் பிடித்து முதுகுப் பக்கம் திருப்பியவன், தன் கைமுட்டியால் அவனுடைய தோள்பட்டையில் ஓங்கி ஒரு குத்து வைத்தான்.
அவன் வலியில் துடிக்க, கொடிவீரனின் முகம் முழுவதும் கட்டுப்படுத்த முடியாத கோபம். “அடுத்து ஒருமுறை ‘வாடா… போடா’ன்னு உன் வாயிலிருந்து வந்துச்சுன்னு வையு… உனக்கு அந்த ஒண்ணு இல்லாம பண்ணிடுவேன்.” என்றான்.
அவனுடைய அந்தக் கோபமான உருவத்தைப் பார்த்த மகிழினி, பயத்தில் கண்களை இமைக்கக்கூட மறந்து அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள்.
அறைக்குள் நிலவிய அந்த இறுக்கமான அமைதியை வேணுவின் அப்பாவியான குரல் உடைத்தது.
“மாமா… அந்த ஒண்ணுன்னா என்ன?”
“ம்… நாக்கை சொன்னேன்டா” என்று வேணுவிடம் சொன்னான்.
“என்னாச்சு? ஏன் இப்படி கோவப்படுறீங்க? அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா?”
மகிழினி கேட்டதும், கொடிவீரன் அவளைச் சற்றே கடுமையாக முறைத்தான்.
“என்ன? அப்புறம் கேள்வி கேட்கலாம். முதல்ல நீங்க சொல்லுங்க… அவனை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவன் ஏன் நம்ம வீட்டுக்கு வந்தான்?”
“நம்ம கேண்டீன்ல வேலை பார்க்குற ஆட்டோ டிரைவர்கிட்ட, நம்ம வீட்டுக்கு பிளம்பர் வேணும்னு நான்தான் சொன்னேன். அவர்தான் இந்த ஆளை அனுப்புனாரு.”
“யாரு யாரை அனுப்பினாலும், அவனைப் பற்றி விசாரிக்காம வீட்டுக்குள்ள விட்டுடுவீங்களா?”
அவனுடைய கேள்வியில் இருந்த கோபம் மகிழினியையும் எரிச்சலடையச் செய்தது.
“ப்ச்… இப்ப என்னாச்சுன்னு இவ்வளவு கோவமா என்னைக் கேள்வி கேட்கிறீங்க?”
“ம்… ஆமா. நீங்க பண்ற காரியத்துக்கெல்லாம் உங்க மேல கோவப்படாம, என் மடியில தூக்கி வச்சு உங்களைக் கொஞ்சுறதுதான் பாக்கி. முறைக்காதீங்க.” என்று சிறிது யோசனையுடன் அவளைப் பார்த்தவன், திடீரென்று, “ஆமா… அவன் கீழ் வீட்டுல பிளம்பர் வேலை பார்த்தானா?” என்று கேட்டான்.
“ம்… ஆமா. என் ரூம்ல இருக்குற பாத்ரூம்ல ரிப்பேர் பண்ணாரு.”
அவள் தயக்கத்துடன் பதில் சொன்ன அடுத்த நொடியே, கொடிவீரனின் முகம் இறுகியது. ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வேகமாக மாடிப்படிகளில் இறங்கிச் சென்றான். அவன் நேராக மகிழினியின் அறைக்குள் சென்று, அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்தான். சில நொடிகள் கழித்து வெளியே வந்தபோது, அவனுடைய கையில் சிறிய அளவிலான கேமரா ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த மகிழினியும் வேணுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? இது என்னன்னு தெரியலையா?”
“என்ன மாமா… இது பார்க்க கேமரா மாதிரி இருக்கு.”
“ம்… கேமராதான் டா.” என்றதும் வேணுவின் முகத்தில் குழப்பம் அதிகரிக்க, “அது எப்படி அத்தை பாத்ரூம்ல?”
கொடிவீரன் கையில் இருந்த கேமராவை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.
“இப்ப என்கிட்ட அடி வாங்கிட்டு ஓடினானே… அந்த டாஷ், அந்த வேஸ்ட்தான் இதை இங்க ஃபிட் பண்ணிட்டு போயிருக்கான்.”
“என்னங்க சொல்லுறீங்க?” பதறினாள் மகிழினி.
“ம்… ஆமாங்க. இந்த டேஷ்க்கு இதுதான் வேலை.”
மகிழினியின் முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் ஒரே நேரத்தில் படர்ந்தது.
“மாமா… அப்போ அவனை உங்களுக்கு முன்னமே தெரியுமா?”
“ம்… தெரியும் டா. அவன் நம்ம பக்கத்து ஊருதான்.”
வேணுவின் நினைவில் சிறிது நேரத்துக்கு முன்பு அந்த ஆடவன் பேசிய வார்த்தைகள் வந்து சென்றன.
“அவரு என்னமோ உங்களை அவரோட அண்ணன்கிட்ட சொல்லி ஜெயில்ல எல்லாம் தூக்கி வச்சேன்னு சொன்னாரு. ஏன் மாமா… நீங்க ஜெயிலுக்கெல்லாம் போனீங்களா?”
“ம்…” என்ற கேள்விக்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால் மகிழினியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“ஏங்க… என்ன நடக்குது இங்க? அப்போ இந்த ஆளுக்கு இதுதான் வேலையா? அப்போ இவன் பிளம்பர் இல்லையா?”
“இவனுக்கு அந்த வேலையும் தெரியும். அதைவிட… பொண்ணுங்க குளிக்குற இடத்துல கேமரா வைக்குற வேலையும், ரொம்ப நல்லாவே தெரியும்.”
“என்னங்க சொல்லுறீங்க?”
கொடிவீரனின் முகத்தில் அந்தப் பழைய கோபத்தின் சாயல் மீண்டும் வந்தது. “என் மாமா வீட்டுல இந்தப் பக்கி பிளம்பர் வேலை பார்க்கப் போனவன். இதே மாதிரி ஒரு கேமராவை ஃபிட் பண்ணி வச்சிட்டு, அதுல வீடியோ எல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்கான். அதுக்கப்புறம் என் மாமா பொண்ணை தனியா வரச் சொல்லி, அவகிட்ட தப்பா பிஹேவ் பண்ணப் பார்த்தான்.” அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஆத்திரம் கொப்பளித்தது.
“அப்போதான் இந்த நாதாரியோட கையை உடைச்சிட்டு நான் ஒரு வாரம் ஜெயில்ல இருந்தேன். அப்பவே இவனை இனிமே இந்த மாதிரி கேவலமான வேலையெல்லாம் பண்ணாதன்னு கண்டிச்சிருந்தேன்.”
அவன் கையில் இருந்த கேமராவை மீண்டும் பார்த்தான்.
“ஆனா… இவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா, நம்ம வீட்டுக்கே வந்து, அதுவும் உங்க ரூம்லேயே இந்த மாதிரி ஒரு கேவலத்தைப் பண்ணிட்டு போயிருப்பான்.”
“ஐயோ… இப்படி எல்லாம் கூட நடக்குமா? பொண்ணுங்க இன்னும் எதுக்கெல்லாம் பயப்படுறது?” அவளுடைய குரலில் அச்சம் கலந்திருந்தது.
“துணிக்கடைக்குப் போனா டிரஸ் மாத்துற இடத்துல கேமரா வைக்கிறாங்க. ஹோட்டல்ல போய்த் தங்குனா அங்கேயும் கேமரா வைக்கிறாங்க. இப்ப நம்ம வீட்டுக்கே வந்து இந்தக் கேவலத்தை எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ச்சீ… அப்படி என்ன இவங்களுக்கெல்லாம் வக்கிர புத்தி?” கொடிவீரன் அவளைப் பார்த்தான்.
“இந்த மாதிரி சமுதாயத்துலதான் நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். யாரா இருந்தாலும் நம்மள நாமதான் ஜாக்கிரதையா பார்த்துக்கணும். சும்மா இவன் சொன்னான், அவன் சொன்னான்னு கண்டவனை எல்லாம் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாது.”
“நான் ஒண்ணும் கண்டவங்க சொன்ன ஆளை எல்லாம் வீட்டுக்குள்ள விடல…”
அவள் முடிக்கும் முன், “வாயை மூடுங்க.” என்று அவனிட்ட அதட்டலில் மகிழினியின் முகம் சட்டென்று மாறியது.
“ஏன்? இந்த வீட்டுல ஏதாவது பிரச்சனைன்னா ‘மேடம், என்கிட்ட சொன்னா உங்க கௌரவம் குறைஞ்சிடுமா?”
“இந்த வேலை எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு எனக்கு எப்படி தெரியும்?”
“எனக்குத் தெரிஞ்சாலும் தெரியலைன்னாலும், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“இல்ல… நான் இந்த விஷயத்தை எப்பவோ ஆட்டோக்காரர்கிட்ட சொல்லிட்டேன். ஆனா, இவரு இன்னைக்கு வருவாருன்னு எனக்குத் தெரியாது.” என்றாள் முகம் வாட.
“இங்க பாருங்க… நாம ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காட்டியும், இப்ப நாம வாழ்ந்துக்கிட்டு இருக்குறது ரொம்ப கேவலமான சமுதாயத்துலதான். நம்மதான் நமக்குப் பாதுகாப்பு. நம்மதான் ஜாக்கிரதையா இருக்கணும்.” அவன் குரல் சற்றே மென்மையானது.
“நாளைக்கு முதல் வேலையா அந்த ஆட்டோக்காரர்கிட்ட பேசி, இப்ப வந்தானே அந்த டோமரு… அவன் அட்ரஸ் எங்கன்னு கேளுங்க.”
“ஏன்?”
“ம்… அவனுக்கு சடங்கு சுத்த…” மகிழினியின் முகம் மீண்டும் கோபத்தில் சிவந்தது.
அதைப் பார்த்த வேணு உடனே குறுக்கிட்டான். “அத்தை… மாமா உன்னை எவ்வளவு பெரிய பிரச்சனையில இருந்து சேவ் பண்ணிருக்காரு. நீ அவருக்கு தேங்க்ஸ் சொல்லாம அவரை இப்படி முறைத்துக்கிட்டு நிக்குற?”
“நீ விடுடா வேணு. உன் அத்தைக்கு நான் என்ன பண்ணாலும், என்னை முறைக்கிறதைத் தவிர வேற எதுவும் பண்ணத் தெரியாது.”
“இந்த அத்தை ரொம்ப மோசம் மாமா. நீங்க வாங்க… நம்ம மாடிக்குப் போகலாம்.” வேணு சொல்ல,
“ஏன்டா? மறுபடியும் என் போன்ல விளையாடப் போறியா?”
“வேற வேலை.”
“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணக்கூடாது. வா… நம்ம போய் உனக்கு ஏதாவது புக்ஸ் வாங்கிட்டு வரலாம்.”
“புக்கா? ஐயோ… ஸ்கூல் புக் படிச்சே எனக்கு போர் அடிக்குது. இதுல இன்னொரு புக்கா?” கொடிவீரன் சிரித்தான்.
“ஸ்கூல் புக்ஸ் எல்லாம் படிக்கும்போது அதுல ஒரு கமிட்மென்ட் இருக்கும் டா. ஆனா கதைப் புத்தகம் படிக்கும்போது ஜாலியா படிக்கலாம். வா… போய் புக்ஸ் வாங்கிட்டு வரலாம். ஒரு நாளைக்கு ரெண்டு பக்கமாவது படி.”
அவன் வேணுவை அழைத்துக்கொண்டு நகரத் தொடங்கியபோது—
“ஹலோ…” மகிழினியின் குரல் கேட்டது.
கொடிவீரன் திரும்பிப் பார்த்து, “என்னங்க? உங்களுக்கும் புக்ஸ் வேணுமா?”
“இல்ல.”
“பின்ன?”
சில நொடிகள் அமைதியாக இருந்தவள் மெதுவாக, “தேங்க்ஸ்.” என்றாள்.
“எதுக்கு தேங்க்ஸ்?”
“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்துச்சு இல்ல… அதுக்குத்தான்.”
“உங்க தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேணாம். நீங்களே அதை வச்சுக்கோங்க.” அவன் சிரித்தபடி அவளைப் பார்த்தான்.
“இனிமே வீட்டுல ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லுங்க. நான் என்ன ஏதுன்னு பார்த்துக்குறேன்.”
“என்ன பிரச்சனையா இருந்தாலும் பார்த்துப்பீங்களா?” என்று கேட்டாள்.
“ஏன்? இங்க வேற என்ன பிரச்சனை இருக்கு?”
“ம்… இந்த வீட்டுல ரொம்ப நாளா ஒரு எலி என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்கு. அதை உங்களால ஏதாவது பண்ண முடியுமா?”
வேணு உடனே சிரித்தான்.
“மாமா… அத்தை உங்களைத்தான் சொல்லுறாங்க.”
“ம்… தெரியுது டா.” என்று அவன் மகிழினியை நோக்கி ஒரு பார்வை பார்த்தான் கொடிவீரன்.
“நீ கொஞ்சம் காதை மூடிக்கோ. நான் உன் அத்தைக்கு ஒரு ரிப்ளை பண்ணிட்டு வரேன்.” அவள் அருகில் சென்றவன், அவளுடைய காதில் ஏதோ கிசுகிசுத்தான்.
அடுத்த நொடியே மகிழினி கோபத்தில் அவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள். இரண்டடி பின்னால் சென்ற கொடிவீரன், அவளை காதல் கலந்த ஒரு பார்வை பார்த்தான்.
“நான் எலியா இருக்குற வரைக்கும் தான் நீங்க இப்படி தனியா இருக்க முடியும்.” அவன் குரலில் குறும்பு. “நான் புலியா மாறிட்டேன்னா… என்னோட வேட்டை மான் நீங்க மட்டும்தான்.”
மகிழினி கோபமாக முறைக்க, “மே பி… அம்மணிக்கு எலி எது, புலி எதுன்னு அப்போ புரியும். வாடா வேணு… போகலாம்.” என்று வேணுவை அழைத்துக்கொண்டு அவன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்ற பிறகும், மகிழினியின் முகத்தில் இருந்த கோபம் அப்படியே இல்லை. சமீப நாட்களாக கொடிவீரன் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உரிமையை அவள் உணர்ந்துகொண்டுதான் இருந்தாள். ஆனால்… அந்த உரிமையை முழுவதுமாக மறுக்கவும் அவளால் முடியவில்லை. மாறாக, அந்தச் சிறிய மாற்றங்களை அவளுடைய மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டிருந்தது.
காலம் அப்படியே நகர்ந்தது. கொடிவீரனின் அக்கா சசியுடன் போனில் பேசிக்கொண்டிருந்த மகிழினி, அவனைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொண்டாள். அவனுக்குப் பிடித்த உணவிலிருந்து, அவனுடைய சிறு சிறு விருப்பங்கள் வரை தெரிந்துகொண்டபோது, அவளும் தன்னை அறியாமலேயே சில விஷயங்களை மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
அதே நேரத்தில், கொடிவீரனின் அம்மா ஜெயாவின் கோபமும் இன்னும் குறையவில்லை. அதனால், கேவி தன் அம்மாவுடன் பேசும் நேரம் குறைந்திருந்தது.
காலை, மாலை என இருவேளையும் கேண்டீன் வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தவன், சில நாட்களில் ஆபீஸ் வேலையையே மறந்து சமையல் வேலையில் தஞ்சம் புகுந்துவிடும் அளவுக்கு மாறியிருந்தான்.
மகிழினியும் அவளுக்குப் பிடித்த செவிலியர் பணிக்குச் செல்ல வேண்டும் என்று கேவி தொடர்ந்து ஊக்கம் கொடுத்தான்.
“புருஷன் பொண்டாட்டி… உங்களுக்குள்ள பேசிக்கிட்டு, உங்க எதிர்காலத்தை நீங்க உங்களுக்கு ஏற்ற மாதிரி அமைத்துக்கோங்க.” என்று பாட்டியும் சொல்லியதும், அவனுடைய முயற்சிக்கு இன்னும் ஒரு பலம் கிடைத்தது.
மகிழினியின் தோழி மீனா வேலை செய்யும் கிளினிக்கில், அவளுக்கு வேலை கேட்டான் கொடிவீரன்.
முதலில் அந்த வேலையை ஏற்க மறுத்த மகிழினி, பின்னர் கேவியும் மீனாவும் கொடுத்த ஊக்கத்தால் அரை நாள் வேலைக்குச் செல்ல முடிவு செய்தாள்.
அடுத்த ஒன்றாம் தேதியிலிருந்து கிளினிக்கில் வேலைக்குச் சேரலாம் என்ற வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டாள்.
இதற்கிடையில், ஊரில் இருந்து கொடிவீரனின் அத்தை கீதாவும் மீண்டும் மகிழினியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.
மகிழினி ஆரம்பித்த வீரன் கேண்டீனில், பாட்டி, கீதா, கேவி, வேணு, சிஎம் என அனைவரும் தங்களுக்கான வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்யத் தொடங்கினர்.
ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர், ஒரு விடுமுறை நாளில் வீட்டில் அமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
“அப்புறம்… கேண்டீன் வேலை எல்லாம் எப்படி போகுது?” மகிழினி கேட்டாள்.
“ம்… ஏதோ போய்க்கிட்டு இருக்கு, ஓனர் அம்மா.” என்றான் அவன்.
“நான் உங்களுக்கு ஓனரா?”
“இல்லையா பின்ன?”
மகிழினி புருவத்தை உயர்த்தி, “ஹ்ம்…” என்று சிலுப்பினாள்.
அப்போது கீதா சிரித்தபடி கேட்டாள். “ஏன் மாப்பிள்ளை… நீங்க அடிக்கடி வேலைக்கு லீவு போடுறீங்களே? அதனால ஏதாவது பிரச்சனை வருமா?”
“நம்ம எல்லாம் பிரச்சனைகூடவே வாழுறவங்க அத்தை. அதெல்லாம் நமக்குப் புதுசா என்ன?” கொடிவீரன் சொன்னதும், வேணு உடனே குறுக்கிட்டான்.
“ஓ… எங்க அத்தை கூட வாழ்றதைதான் நீங்க பிரச்சனைன்னு சொல்றீங்களா?”
“அட பணியார சட்டி வாயா… நீ அடங்கவே மாட்டியா?”
மகிழினி மீண்டும் அவனை முறைத்தாள்.
“ஏங்க சிஎம்… நீங்க கோவப்படாதீங்க. நான் உங்களைச் சொல்லல. பிகாஸ்… நாமதான் இன்னும் வாழவே ஆரம்பிக்கலையே!”
“நல்லா சமாளிக்கிறீங்க மாப்பிள்ளை.” கீதா சிரித்தாள்.
“தம்பி… உங்க அம்மா வேற இன்னும் பத்து நாள்ல சசியோடும் உங்க மாமாவோடும் இங்க வரேன்னு சொல்லியிருக்காங்க.” பாட்டி அந்த விஷயத்தை நினைவுபடுத்தினார்.
“ஆமா பாட்டி. சசி அக்கா சொன்னாங்க.”
“அவங்க இங்க வரும்போது, நீங்க மாடிலயும் சித்ரா கீழேயும் இருந்தா நல்லா இருக்காது பா. அதனால அவங்க வந்துட்டுப் போற வரைக்கும் நீங்க மாடியில எல்லாம் தங்காதீங்க.”
கொடிவீரன் சிரித்து, “பாட்டி… நான் உங்க பேத்தி மடியில தங்கக்கூட ரெடிதான். பட்… அவங்கதான்—”
“என்ன பேச்சு இதெல்லாம்?” மகிழினி அவனைத் தடுத்தாள்.
“நான் உண்மையைத்தான் சொன்னேன்.” என்று அவன் அப்பாவியாகப் பார்த்தான்.
“ஏன் அத்தை… நான் ஏதாவது தப்பா சொன்னேனா?” என்று கீதாவிடம் கேட்க,
“நாட் அட் ஆல் மாப்பிள்ளை.” என்று கீதா சிரித்தார்.
அப்போது, “வேணு… யாரோ கதவைத் தட்டுறாங்க. யாருன்னு பாரு.” என்றதும் வேணு வாசல் கதவைத் திறக்க, அங்கே கையில் அழகான பூங்கொத்துடன் ரேஷ்மா நின்றுகொண்டிருந்தாள்.
“உள்ள வரலாமா?”
“வெல்கம். பட்… உங்க செருப்பைக் கழட்டி வச்சுட்டு வாங்க.” வேணுவின் வார்த்தைக்கு. ரேஷ்மா சிரித்தபடி உள்ளே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் கொடிவீரன் “இப்பதான் எல்லாம் நல்லா போய்க்கிட்டிருக்கேன்னு நினைச்சேன்.” மெதுவாக முணுமுணுத்தான்.