மகிழினியிடம், “பரவாயில்லைங்க. சுடுதண்ணீரை நானே எடுத்துட்டு போறேன்” என்றவன் அவள் கையில் இருந்த தண்ணீரை வாங்கிக்கொள்ள, மகிழியின் முகம் எந்த ஒரு விருப்பு வெறுப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சுடன், “என்ன பாட்டி நீங்களும் அத்தை கூடவே நம்ம ஊருக்கு போறிங்களா?” என்று கேட்க,
“ம்… ஆமா தம்பி. உங்க அம்மா தான் என்னையும் கீதாவயும் நாளைக்கே வர சொன்னாங்க” என்றார் அவருக்கு தேவையான துணிகளை அடுக்கி கொண்டே.
“பாட்டி நான் எந்த பையில டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிக்க?” என்று வேணு கேட்க,
“என்ன வேணு? உனக்கு ஸ்கூல் இல்லையா? நீயுமா இவங்க கூட ஊருக்கு போகப்போற என்றவள் வேணுவை தன்னோடு கட்டிக்கொண்டு அவன் முடியை கோதிக்கொண்டே கேட்டாள் மகிழினி.
“ஆமா அத்தை நானும் இவங்கக்கூட நாளைக்கு கிளம்புறேன்.”
பாட்டி, கீதா, வேணு என்று அவர்களுக்கு உடமைகளை எடுத்து வைத்துக்கொள்ள, கொடிவீரனின் பார்வை அவனின் பாவையின் விழிகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தது.
“மாமா, நீங்க அத்தை கூட எப்ப வருவீங்க? என்று சிறுவன் கேட்டதும் இயல்பு பார்வைக்கு வந்து, “நாங்க வெள்ளிக்கிழமை காலையில அங்க இருப்போம்டா” என்றவன் கீதா அருகில் அமர்ந்து கொண்டான்.
“ஏன் தம்பி நீங்களே தாலி பண்ணிப் போடுவீங்கன்னு உங்க அம்மா சொன்னாங்களே. நீங்க அந்த வேலையெல்லாம் கூட பண்ணுவிங்களா?” என்று கேட்டார் பாட்டி.
“என் மாப்பிள்ள நகை மட்டும் இல்ல. சமையல் கூட நல்லா தான் பண்ணுவாரு. கேட்டரிங் எல்லாம் படிச்சாரு. ஆனா, இவரோட அம்மா தான் கரண்டி பிடிக்கிற ஆம்பளைங்களுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காதுன்னு சொல்லி, இவர ஊர் விட்டு ஊர் ஆபீஸ் உத்தியோகத்துக்கு அனுப்பி வச்சிருக்கா.”
“என்ன நீங்க சமையல் பண்ணுவிங்களா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் மகிழினி.
“உங்க அளவுக்கு எல்லாம் இல்லிங்க. ஏதோ பண்ணுவேன்.” என்றான் பவ்யமாய்.
“என்னமா நீ. உன் புருஷனுக்கு என்னல்லாம் தெரியும்னு கூட உனக்கு தெரியாதா?” என்றார் கீதா.
‘என்ன அவங்க புருஷனா நினைக்கிறங்களான்னே அவங்களுக்கு தெரியல’ என்று மனதில் பேச, மகிழினி அவனைக் கண்டு முறைத்தாள். “ஏங்க முறைக்கிறீங்க?” என்றான் காரணம் அறியாது.
“உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது.”
“ஐயோ! சரி சரி நான் போய் தூங்குறேன். குட் நைட்.”
“மாப்பிள்ள பங்க்ஷன்கு உங்க அண்ணன் அண்ணி வருவாங்களா?”
“ஏன் அத்தை? என் அண்ணன் வந்தா அவர அங்கேயும் வந்து நீங்க வம்பு பண்ணலாம்னு பாக்குறீங்களா?”
“யாரு, நான் உங்க அண்ணனை வம்பு பண்ணுறேனா?”
“ஆமா. எங்க அண்ணன் பாவம் தானே.”
“அவனுக்கு பாவம் பார்த்தா ஊர் தாங்காதுபா” என்றார் கீதா.
“அண்ணனை அம்மா கூப்பிட்டு இருப்பாங்க தான் அத்தை. சரி நீங்க நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புறீங்க? நான் வேணும்னா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணவா?”
“இல்ல மாப்பிள்ள. உங்க அக்கா சசியே எல்லா வேலையும் அங்க இருந்தபடியே பண்ணிட்டா. நாங்க நாளைக்கு காலையில பத்து மணி பஸ்க்கு கிளம்பிடுவோம்.”
“நான் வேணா ஆபீஸ்ல சொல்லிட்டு வந்து உங்கள பஸ் ஸ்டாண்ட் அழைச்சிட்டு போகவா?” என்று கேட்டான் கொடிவீரன்.
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க ஏன் அடிக்கடி லீவு சொல்லுறிங்க?”
“ம்… சரி அத்தை. காலையில பாக்கலாம். வேணு வா தூங்க போகலாம்.”
“நான் ஏன் வரணும்?” என்று கேட்டான்.
“நீ தானேடா இனிமே மாமா பக்கத்துல தூங்க போறேன்னு, உங்க அத்தைகிட்ட சொல்லிருக்க.”
“என்ன நான் சொன்னேனா அதெல்லாம் நான் சொல்லல. எங்க அத்தை தான் நான் முடியாதுன்னு சொல்லியும் என்னை வலுகட்டாயமாக உங்க கூட படுக்க அழைச்சிட்டு வந்தாங்க” என்று உண்மையைச் சொல்ல அவளோ தலையில் கை வைத்துவிட்டாள்.
“ஓ… ஏங்க நீங்க பொய் கூட சொல்லுவிங்களா?”
“ஆமா நான்தான் உங்களுக்கு அடிபட்டு இருக்கும்போது தனியா படுக்க வேணான்னு நினைச்சு, உங்க கூட தூங்கலாம்ன்னு வந்தோம். ஏன் இப்போ என்னவாம் அதுக்கு?” என்றாள் திமிராக.
“அப்போ வாங்க. நேரமாகுது பாருங்க. வாங்க போய் தூங்கலாம்.” என்றான் அடித்ததுடா யோகம் என்பதாக.
“ஐயோடா ஆளைப்பாரு. அதான் உங்க கை கட்டு எல்லாம் கழட்டியாச்சு இல்ல. இனிமே எங்க துணை உங்களுக்கு எதுக்கு போங்க போய் தூங்குங்க” என்றவள் பொய்யான கோபத்துடன் அவள் அறைக்கு செல்ல,
“கட்டின பொண்டாட்டி கூட ஒரே ரூம்ல தூங்கணும்னா, நம்ம கை கால்ல கட்டு வேணும் போல” என்று இவன் முனங்குவதை கேட்டு
“உங்க நிலமை பாவம் தான்போல மாப்பிள்ள. போங்க போய் வெறும் தரையில கவுந்து அடித்து படுத்துக்கோங்க. போங்க” என்றார் கீதா.
“ம்… எனக்கு என் பழனி மாமா ராசி போல. குட் நைட் அத்தை” என்றவன் கையில் ப்ளாஸ்குடன் மாடிக்கு சென்று கட்டிலில் படுத்தவன் மனதை முழுவதுமாக மகிழினியின் உருவம் மட்டுமே நிறைந்து இருந்தது
மறுநாள் காலை எப்போதும் போலவே கொடிவீரன் தன் அலுவலகத்துக்குக் கிளம்பி கீழே இறங்கி வர, மேசை மேல் அவனுக்காக காலை உணவுடன் சேர்ந்து, மதிய உணவை இவனுக்காக ஒரு பையில் தயாராக வைத்துவிட்டு, மகிழினி தன் கேண்டீன்கு சென்று இருப்பதை அறிந்து கொண்டவன், காலை உணவை சாப்பிட அமர்ந்ததும், கீதா கையில் தண்ணியுடன் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.
“மாப்பிள்ள எங்களுக்கு கேப் மட்டும் புக் பண்ணிடுங்க. நாங்க 9.30 மணிக்கு இங்க இருந்து கிளம்புறோம்” என்றார் கீதா.
“ம்… சரி அத்தை. பார்த்து போயிட்டு வாங்க. போனதும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. வேணு ஜாக்கிரதை பாட்டிக்கு மருந்து எல்லாம் எடுத்துக்கோங்க.”
“ம்… சரி மாப்பிள்ள” என்று சொல்ல,
பாட்டி அவர் அறையில் இருந்து வெளியே வந்தவர், “ஏன் தம்பி நீங்க பஸ்ல வருவிங்களா? இல்ல உங்க காருல வருவீங்களா.?” என்க,
“காருல தான் பாட்டி.”
“கார்லையா?”
“ம்… ஏன் பாட்டி? உங்க பேத்தி பயப்படுவாங்கன்னு நினைக்கிறிங்களா?”
“ம்… ஆமாபா.”
“நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாம கிளம்புங்க” என்று சொன்னவன், மதிய உணவை எடுத்துக்கொண்டு அனைவரிடம் இருந்தும் விடைபெற்று, அவனுடைய வேலைக்கு செல்ல, ஒரு வார காலம் அவனுக்காக காத்திருந்த எல்லா வேலைகளையும் செய்தான்.
ரேஷ்மா அவள் அறையில் தன் வேலையில் முழுகி இருக்க, நேரம் கடந்ததை உணராமல் இருவரும் ஒன்றாக மதிய நேரம் கேண்டீன்கு சாப்பிட வந்ததும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களுக்கு, இயல்பாக இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
“என்ன வீரா? உடம்பு இப்போ எப்படி இருக்கு?”
“ம்… இப்போ ஓகே தான் ரேஷ்மா” என்றான் கொடிவீரன்.
“வாங்களேன் சேர்ந்தே சாப்பிடலாம். உங்களுக்கும் சேர்த்து நான் ஆர்டர் பண்ணவா?”
“நோ தேங்க்ஸ் ரேஷ்மா. நான் லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்கேன்.”
“இட்ஸ் ஓகே. பட் சேர்ந்து சாப்பிடலாமே.”
“ம்…”
“இதோ இந்த டேபிள்ல உக்காரலாமா?” எனவும் கொடிவீரன் சம்மதம் சொல்ல, இருவரும் ஒன்றாக ஒரு டேபிளில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டு கொண்டு இருக்க,
“என்ன சாப்பாடு இது பார்க்க கலர் கலரா இருக்கு. நல்லா இருக்குமா?” என்று கேட்டாள்.
“இது வானவில் சாதம்ங்க. என் பொண்டாட்டி எனக்காக ரெடி பண்ணுற ஸ்பெஷல் ரைஸ்.” சந்தோசமாக சொன்னான்.
“அப்படி என்ன இதுல ஸ்பெஷல் இருக்கு?”
“ம்… உங்க தட்டுல நீங்க ஆர்டர் பண்ண சாப்பாடு வகை வகையா இருந்தாலும், என் தட்டுல எனக்காக, என் பொண்டாட்டி ரெடி பண்ணி தந்த இந்த சாப்பாடை எட்டிப்பார்த்து இத்தனை கேள்வி கேக்குறீங்க பாருங்க. இது தான் ஸ்பெஷல்” என்றான் பெருமையாக.
“அது என்ன சாப்பாடுன்னு கேட்டதுக்கா நீங்க இவ்ளோ பேசுறிங்க?”
“ஓ… அதிகமா பேசுறேனோ.”
“சரி நீங்க சாப்பிட்டு வாங்க. நான் வொர்க் கன்டினியூ பண்ணப்போறேன்.”
“ம்…”
“தென் நீங்க பிரைடே லீவு கேட்டீங்கன்னு மேனேஜர் சொன்னாரு. ஏன் வீரா எங்காவது வெளிய போறிங்களா? பர்சனல்னா சொல்ல வேணாம்.”
“ம்… ஆமா பர்சனல் தான்.”
“பட் நீங்க இத்தன நாள் இங்கேயே லீவு எடுத்துட்டா, எங்க அண்ணன் கல்யாணதுக்கு எப்படி இங்க லீவு கொடுப்பாங்க” என்று கேட்டாள்.
“ஜீவா மேரேஜ்கு வரதுக்கு நானும் என் மனைவியும் இன்னும் பிளான் பண்ணலைங்க. இனி தான் ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணனும்.”
“ஒ… அப்போ அவங்களும் என் அண்ணன் மேரேஜ்கு வருவாங்களா?”
“ஆமா வரதா இருந்தா நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா தானே வர கூடும்.”
“ஏன் வீரா எனக்கு ஒரு சந்தேகம்?”
“என்ன வேலையை பற்றியா?”
“இல்ல உங்கள பற்றி.”
“என்னைப் பற்றி என்ன?” என்றான் புரியாது.
“அப்போ உங்களுக்கும் அவங்களுக்கும் இப்போ சண்டை எல்லாம் முடிஞ்சு நீங்க சமாதானம் ஆகிட்டீங்களா?”
“நாங்க சண்டை போட்டத நீங்க எப்ப பார்த்தீங்க?”
“ஆனா, அவங்க உங்கிட்ட டிவோர்ஸ் கேட்டாங்களே?” அவன் பதில் குழப்பத்தைக் கொடுக்கவும் கேட்டாள்.
“கேக்குறத எல்லாம் கொடுத்துட முடியுமா?”
“ஆனா, அவங்களுக்கு தான் உங்க கூட வாழ பிடிக்கலையே?”
“அவங்களுக்கு வாழ பிடிக்கலைனா, நான் அவங்களுக்கு நேந்தரபழம் வாங்கி கொடுத்துப்பேன்.”
“என்ன?” என்று விழித்தாள் ரேஷ்மா.
“நீங்க வாழை பழத்தை தானே சொன்னிங்க?”
“காமெடி பண்ணாதீங்க வீரா.”
“லிசன் ரேஷ்மா. நீங்க பேசுறத எல்லாம் நான் காமெடியா எடுத்துகிறதால தான், இவ்ளோ நேரம் நீங்க கேக்குற அறிவாளித்தனமான கேள்விக்கு எல்லாம் புன்னகை முகத்தோடு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். இதே நீங்க பேசுறத நான் சீரியஸா எடுத்துக்கிட்டேன்னு வையுங்க. என்னைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்து, என் எதிர்ல என் பொண்டாட்டிய பத்தி கமெண்ட் பண்ணீங்களோ, அப்போவே சீனு வேற மாதிரி ஆகியிருக்கும். சோ ப்ளீஸ் உங்க லிமிட் என்னன்னு தெரிஞ்சு நடந்துக்கோங்க.” என்றான் பட்டென்று.
”ம்… ஆக்சுவலி நான் அன்னைக்கு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.”
“ரொம்ப ஓவர்.”
“சாரி வீரா.” என்றாள்.
“சரி வேலைக்கு நேரமாகுதுன்னு சொன்னீங்கல்ல. போயி வேலைய பாருங்க. நான் சாப்பிடும்போது பேசுறது எனக்கு பிடிக்காது” என்றவன் மகிழினி இவனுக்காக பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்த மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ரேஷ்மாவும் எந்த ஒரு கோபதாபத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இயல்பாகவே அங்கிருந்து நகர்ந்தாள்.
அன்றைய தினம் தன் வேலைகளை முடித்த நிலையில், பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வர, அவனின் செல்போன் ரிங் ஆனதும் அதில் மகிழினியின் கேண்டீன் லேண்ட்லைன் நம்பர் தெரிந்த நிலையில், “என்னாச்சு முதல் முறையா மேடம் நமக்கு கால் பண்ணுறாங்க. எதாவது பிரச்சனையா” என்று தனக்குள் நினைத்தவன், “ஹலோ” என்றான் சிறு அச்சதுடனே.
“ஹலோ” என்று பதிலுக்கு அவளின் குரலில் உள்ள மெல்லினத்தை உணரந்தவன்,
“எஸ் யாரு பேசுறது?” என்றான் அவளை சீண்டும் விதமாக.
“நான்தான் பேசுறேன்” என்று மகிழினி சற்று அழுத்தமாக பதில் சொல்ல,
“நானுனா, யாரு நயன்தாரவா?” என்றான் கிண்டலான குரலில்
“ஆமா இவரு பெரிய ஹீரோ பாரு. இவருக்கு நயன்தாரா கால் பண்ண” என்றவளின் கோவத்தை மேலும் அதிகரிக்க எண்ணியவன்,
“ஓ… செல்லக்குட்டி நீயாடி தங்கம். சொல்லு பட்டுக்குட்டி. உனக்கு இப்போ தான் இந்த மாமன் நினைவு வந்துச்சா?” என்று கொஞ்சும் குரலில் கேட்க,
“நான் செல்லக்குட்டியும் இல்ல. தங்கக்குட்டியும் இல்ல. நான் மகிழினி பேசுறேன்.”
“யாரு மகிழினியா? அப்படி யாரையும் எனக்கு தெரியாதே” என்றவனின் பதிலில் கோவத்தின் உச்சிக்கு சென்றவள்,
“ஹலோ! நான் உங்க சிஎம் பேசுறேன். இப்போ தெரியுதா நான் யாருன்னு?” என்றாள் அழுத்தமாக.
“என் சிஎம். ம்… பரவாயில்லையே. உரிமை கேக்காமலேயே கிடைக்குதே” என்றான் சிரித்த முகத்துடன்.
கோவத்தில் அவளை மீறி உதிர்த்த வார்த்தையில் உள்ள உரிமையை எண்ணி, இவளே சில நொடிகள் மௌனம் காத்து, தன் தலையில் அடித்து கொண்டவள், “உங்கிட்ட போன்ல பேசுனா கூட என்னை குழப்பிவிட்டு வம்பு பண்ணுறது தான் உங்க வேலை போல” என்றவளின் நிலையை எண்ணி சிரித்தவன்,
“சொல்லுங்க சிஎம். என்ன போன் எல்லாம் பண்ணிருக்கீங்க? கண்டிப்பா எதாவது முக்கியமான விஷயமா தான் இருக்கும். என்னாச்சு எதாவது பிரச்சனையா?” அக்கறையாகக் கேட்டான்.
“பிரச்சனை எல்லாம் இல்ல. பாட்டி, வேணு, கீதா அம்மா எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்க. போகும்போது இங்க வந்து வீட்டு சாவியை என்கிட்ட கேண்டீன்ல கொடுத்துட்டு போயிருக்காங்க. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு போறதா இருந்தா, நம்ம கேண்டீன்கு வந்து சாவி வாங்கிட்டு போங்கன்னு சொல்லதான் போன் பண்ணேன்.”
“பட் நான் வீட்டுக்கு வரதுக்குள்ள நீங்க வீட்டுக்கு போயிடுவீங்க தானே?”
“இன்னைக்கு கொஞ்சம் அதிகமா வேல இருக்கு ஐடி கம்பெனில ஏதோ கெட்டுகதர் போல. சோ எக்ஸ்ட்ரா ஆர்டர் கொடுத்து இருக்காங்க. நம்ம கேண்டீன்ல ரெண்டு ஆளு வேலைக்கு வரல. அதான் நான் இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகும். நீங்க இங்க வந்து சாவி வாங்கிட்டு போறிங்களா?”
“ம்… சரிங்க. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்ப தான் போறேன். அப்போ நான் நேரா உங்க கேண்டீன்கு வந்துடுறேன்.”
“ம்… சரி நான் போன் வச்சிடுவா”
“ம்… சரிங்க” என்று வைக்கப்போகையில்,
“ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இருங்க வச்சிடாதீங்க” என்றாள் வேகமாக.
“என்னங்க?”
“யாரு அது செல்லகுட்டி? தங்ககுட்டி எல்லாம்?”
“புரியலயே.”
“நான்தான் போன்ல பேசுறேன்னு தெரியாம செல்லம் வைரம்னு வேற யாரையோ கொஞ்சினீங்க. அதான் யாரு கேட்டேன்.”
“தெரியாம எல்லாம் கொஞ்சலைங்க. நீங்கன்னு தெரிந்து தான் கொஞ்சினேன்” என்றான் சிரித்தபடி.
“ஒ… அப்போ என்கிட்ட வம்பு பண்ணிங்களா?”
“அதை ஏங்க வம்புன்னு நினைக்கிறிங்க. நான் உங்கமேல வச்சிருக்க அன்புன்னு கூட நினைக்கலாமே.”
“ம்… நினைப்பு தான் பிழைப்ப கெடுக்குது போல உங்களுக்கு.”
“சிஎம்கு என்மேல நம்பிக்கையே இல்ல போல” என்றான் கொடிவீரன்.
“நான் ஏன் உங்கள நம்பணும்?”
“ம்… பின்ன ஏன் மேடம்கு நான் வேற பொண்ணுங்க கூட பேசுறனான்னு சந்தேகம் வருது?”
“ப்ச் சந்தேகம் எல்லாம் இல்ல பாஸ். ஒருவேளை அப்படி யாராவது ஒரு பொண்ணு உங்க லைஃப்ல இருந்தா, எனக்கு அப்புறம் நீங்க அவங்கள மேரேஜ் பண்ணிக்கலாம் இல்லையா. அதான் கேட்டேன்.”
“கேண்டீன் வேலையை விட்டுடுட்டு மேடம் எப்ப புரோக்கர் வேலையை பாக்க ஆரம்பிச்சீங்க?”
“அதெல்லாம் நான் எந்த வேலையும் பாக்கல. நீங்க சீக்கிரம் வந்து சாவி வாங்கிட்டு போங்க.” என்றவள் அவனை விரும்பவும் முடியாமல், விலகவும் முடியாமல், மதில் மேல் நிற்கும் பூனை போல தவித்து இருந்த நிலையில் வேலை செய்ய, கொடிவீரன் வந்துவிட்டான்.
“என்னங்க தடப்புடலா வேலை நடக்குது போல” என்றான் வந்ததும் வராததுமாய்.
“ம்… வாங்க காபி போடவா?”
“வேணாங்க ஆபீஸ்ல குடிச்சிட்டேன்.”
“இந்தாங்க வீட்டு சாவி.”
“உங்களுக்கு எப்ப வேலை முடியும்?”
“ரெண்டு பேர் வேலைக்கு வரல. சோ கொஞ்சம் லேட் ஆகும்.”
“ம்… நான் வேணா எதாவது வேலை பார்க்கவா?” என்று கேட்டான்.
“நான் பண்ற வேலையை நீங்க பாக்க போறிங்களா?” என்று அவனைப் பார்த்தாள்.
“ப்ச் அது இல்லிங்க. நான் வெஜ் கட் பண்ணி தரவா?” என்க,
“உங்களுக்கு ஏன் இந்த கஷ்டம் எல்லாம்?”
“இதெல்லாம் கஷ்டம் இல்ல. இது எனக்கு ரொம்ப பிடிச்ச வேல. இந்த கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துகிட்டு எப்ப பாரு அதுலேயே முழுகி இருக்குறது தான் எனக்கு கடுப்பா இருக்கும். பட் மெல்லிய இசை கேட்டுகிட்டே, அந்த இசைக்கு ஏற்றது போல சமையல் பண்ணும்போது மனசுல அப்படியே மயிலிறகை வருடுற மாதிரி இருக்கும். ப்ச் அதெல்லாம் ஒரு ஃபீல்ங்க. சரி சொல்லுங்க நான் உங்கக்கூட இன்னைக்கு எதாவது வொர்க் பண்ணவா?”
“ம்… உங்களுக்கு சோர்வா இல்லையா?”
“உங்கள பார்த்த பின்னாடி எப்படிங்க சோர்வா இருக்க முடியும்?” என்று சிரித்தான்.
“ம்… போதும் ரொம்ப ஐஸ் வைக்காதிங்க.”
“சரி சரி சொல்லுங்க. நான் என்ன பண்ணட்டும்?”
“இந்த வெஜ்டபிள்ஸ் எல்லாம் க்ட் பண்ணி கொடுத்தா, நான் சப்பாத்திக்கு சைட் டிஷ் ரெடி பண்ணிடுவேன். அப்புறம் வண்டி வந்ததும் ஏத்தி விட்டுட்டு நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”
“அவ்ளோ தானே இருங்க வரேன்.” தன் அலுவலக பையை ஓரம் வைத்தவன், தன் சட்டை கை மடிப்பை முட்டி வரை மடித்து விட்டு, அவன் செல்போனில் பாட்டை போட்டவன், கைகளை கழுவி கொண்டு மேசையில் அமர்ந்து, மகிழினி சொன்ன வேலைகளை எல்லாம் செய்து கொடுத்தான்.