Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 4

CHAPTER 4

விவாதம் – 4

By S.K Velan · October 1, 2026

0

அடுத்த சில நிமிடங்களில், கொடி வெளியே செல்ல ரெடி ஆனவன் அவனுக்கு தரப்பட்ட மாடி அறையில் இருந்து வெளியே வந்தவன் கண் எதிரில். இன்னுமும் சுரேஷின் தங்கை மல்லி பூ செடிகள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தவளின் செயலை பார்த்து கொண்டு இருந்த கொடி மீண்டும் அவள் அருகில் செல்ல, அவளோ அந்த செடியில் உள்ள மலர்களை பார்த்து தன் முகபாவனையை அழகாக மாற்றிக்கொண்டே இருக்க.

“ஏங்க உங்களுக்கு இந்த செடிங்க மேல எல்லாம் இவ்வளவு பிரியம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாதுங்க. சாரி ங்க.” என்று மீண்டும் இவன் அவளிடம் மன்னிப்பு கேட்க, அவளோ. இப்படி ஒருவன் தன் எதிரில் இருப்பதையே கண்டுகொள்ளாமல் அவள் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள்.

“டேய்! மச்சான் வாடா நேரமாகுது” என்று சுரேஷ் கீழே இருந்து கத்தும் குரல் கேட்டு கொடி வேகமாக கீழே இறங்கினான்.

“வாடா மச்சான். நான் உன்னை பாட்டிகிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று சொன்னவன், கொடியை அழைத்து கொண்டு கீழ் தளத்தில் இருக்கும் தன் பாட்டியின் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

“பாட்டி இவன் தான் என் நண்பன் கொடி.” என்று சுரேஷ் சொன்னதும்… படுக்கையில் இருந்து பொறுமையாக எழுந்த பாட்டி சுரேஷை முறைத்துக்கொண்டே கொடியை பார்த்து கடமைக்கென்று சிரித்தார்.

“வாப்பா தம்பி. உக்காரு.”

“வணக்கம் பாட்டி.” என்றான் மரியாதை நிமித்தமாய்.

“பாட்டி. கொடி இனிமே நம்ம வீட்டு மாடியில தான் தங்க போறாரு” என்று சுரேஷ் சொல்ல,

“யோவ் தகப்பா இது உன் வீடு இல்ல. இது என் பாட்டி வீடு” என்று திமிராக சொல்லிக்கொண்டே வேணு, பாட்டியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“பெரியவங்கள அப்படி எல்லாம் பேசாத வேணு.” பெரிய மனிதியாய் அவர் சொல்ல,

“அப்படி சொல்லுங்க பாட்டி.” என்றான் சுரேஷ்.

“நீ வாய மூடு.” என பட்டென்று சொன்னார்.

“டேய்!! உன் அத்தைகிட்ட சொல்லி இனிமே தினமும் கொடிக்கும் சேர்த்து சமைக்க சொல்லுடா.” என்ற தகப்பனிடம்…”சமைக்க சொல்லுனா காசு யார் தருவாங்க?” என்று கிண்டலாகக் கேட்டான் வேணு.

“நான் மாசமானதும் வாடகைக்கும்… சாப்பாடுக்கும் காசு தந்துடுவேன்பா” என்று கொடி சொன்னான்.

“நீங்க ஆம்பளை தானே?” பளிச்சென்று பையன் கேட்டிட, கொடியோ விழித்தான்.

“டேய்! பாவி ஏன்டா?” என்றான் சுரேஷ்.

“அப்போ நீங்க எப்படி மாசமாகுவீங்க?” இவனும் விடாது கேட்க,

“உங்கப்பன் மவனே. அவன் மன்த் என்ட்ல பணம் தரேன்னு சொல்லுறான்.” பல்லைக் கடித்தபடி சொன்னான்.

“ஹாங் அப்படி தெளிவா சொல்லுங்க.”

“டேய்! கொடி. இவன் இப்படி தான்டா. சரி நீ இரு. நான் தங்கச்சியை உனக்கு காபி போட்டு தர சொல்லுறேன்.” என்று எழ,

“இல்ல மச்சான். பரவாயில்ல நம்ம வெளிய போய் குடிச்சிக்கலாம் வா.”

“இரு இரு தம்பி. இங்கேயே குடிக்கலாம் உக்காரு. வேணு போய் உன் அத்தையை அழைச்சிட்டு வா” என்று பாட்டி சொன்னதும் வேணு மாடிக்கு சென்றவன் கையோடு அவன் அத்தையை அழைத்து வந்தான்.

“உக்காருடா” என்று சுரேஷ் சொன்னதும் அந்தப் பெண் இவர்களை யாரையும் பார்க்காமல் சமையல் அறைக்குள் சென்றவள், அடுத்த சில நொடிகளில் அனைவருக்கும் காபியை வேணுவிடம் தந்து அனுப்பினாள்.

“ம் எடுத்துக்கோங்க.” காபியை வேணு நீட்ட,

“தேங்க்ஸ்” என்று எடுத்துக் கொண்டான் கொடி.

“ஏன்டா இப்போ வேலைக்கு போற இடத்துல மதியம் லஞ்ச்கு என்ன பண்ணுவ?

“நான் அங்க எதாவது பார்த்துப்பேன்டா. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றதும் சுரேஷ் தலையசைத்து சம்மதிக்க,”எனக்கு நைட்டுக்கும் காலையிலைக்கும் சாப்பாடு நீங்க தந்தா போதும்…” என்றான்.

“உனக்கு எப்போ எல்லாம்… என்ன எல்லாம் வேணுமோ, இதோ இந்த பொடி பையன்கிட்ட சொல்லிடு. அவன் என் தங்கச்சிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணுவான்.”

“ம் சரிடா.”

“சரி. காபி குடிச்சிட்டியா? கிளம்பலாமா?”

“சரிடா. டேய்! உன் சிஸ்டர் கிட்ட சொல்லிடு. காபி ரொம்ப நல்லா இருந்துச்சு. பாட்டி நான் போய்ட்டு வரேன்.” என்றான்.

“என்ன பிட்டு போடுறிங்களா? போங்க போங்க போய் வேலையை பாருங்க.” என்ற சிறுவனின் பதிலில் கோவம் வரத்தான் செய்தது கொடிக்கு.

“இவன் இப்படி தான்டா. சரி நீ வா போகலாம்…” என்று கொடியை

சுரேஷ் நாளையிலிருந்து அவன் வேலை பார்க்க போகும் ஆபீஸ்க்கு அழைத்து சென்றான்.

“இங்க தான்டா நீ நாளையில இருந்து வேலைக்கு வரணும்… வழி எல்லாம் நியாபகம் வச்சிக்கோ.”

“சரிடா. உங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தான் இல்ல மச்சான். பட் பஸ் வரும் இல்ல?” சந்தேகமாகக் கேட்டான்.

“டேய்! இன்னைக்கு நைட் நான் ஊருக்கு போயிடுவேன்டா. நாளையில இருந்து நீ என் பைக்ல வேலைக்கு வா. எனக்கு வாரக் கடைசியில் மட்டும் தான் வண்டி தேவைப்படும்… அது கூட என் சிஸ்டரை அழைச்சிட்டு மார்க்கெட் போக தான்.”

“உன் வண்டியா?”

“ஏன் வண்டி ஓட்டுவ இல்ல? இல்ல தெரியாதா?”

“அதெல்லாம் தெரியும்டா.”

“பின்ன என்ன கேள்வி?” என்றான் சுரேஷ்.

“சரிடா நான் உன் வண்டிலேயே வேலைக்கு வரேன்.” கொடி சம்மதித்திருந்தான்.

“நல்லது. வா வீட்டுக்கு போகலாம்…”

“நான் ரூமுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும் மச்சான்.”

“வா வா. போகும் போதே வாங்கிட்டு போகலாம்…”

“உனக்கு ஏதும் தொந்தரவு இல்லையே.” கொஞ்சம் தயங்கியபடி கேட்டான் கொடி.

“எதுக்குடா தயங்குற. அதெல்லாம் இல்ல வா.” என்ற சுரேஷ் கொடியை கடைக்கு அழைத்து செல்ல, அங்கே தனக்கு தேவையான பொருளை எல்லாம் கொடி வாங்கிக்கொண்டு இருந்த நேரம்…

“தம்பி எப்படி இருக்கீங்க? பாட்டி, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று புரோக்கர் ஒருவர் சுரேஷை நலம் விசாரித்தார்.

“ஹாங் நீங்களா அண்ணா வாங்க.”

“பாப்பா எப்படி இருக்காங்க?”

“ம் இருக்கா.” என்றான் உள்ளே போன குரலில்.

“அப்படி ஒரு சம்பவம் நடந்த பின்னாடி, அவங்கள வந்து பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுது தம்பி. அதான் நான் அந்த பக்கம் வரது இல்ல.”

“விடுங்க அண்ணா. முடிஞ்ச கதையை பேசி என்ன ஆகப்போகுது?”

“பாப்பாக்கு வரன் எதாவது பாக்குறீங்களா தம்பி?”

“என்ன அண்ணா சொல்லுறீங்க. வரனா”?” என்றான் புரியாது.

“என்னப்பா நீங்க வரனான்னு கேக்குறீங்க? பாவம்பா உன் தங்கச்சி. அந்த பொண்ணு இன்னும் வாழவே ஆரம்பிக்கலையே. அவள என்ன இப்படியே விட்டுடலாம்ன்னு நினைக்கிறிங்களா? அது தப்புப்பா.” என்றார் புரோக்கர்.

“அப்படி இல்ல”

“இரு தம்பி. இங்க பாருங்க இந்த போட்டோவை. இந்த பையன் பெயர் சங்கர். கல்யாணம் முடிந்து இவன் பொஞ்சாதி ஒரு சின்ன சண்டையில மருந்து குடிச்சு இறந்துட்டா. போலீஸ்ல இவன் பக்கம் எந்த தப்பும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்போ இவன் வீட்டுல இவனுக்கு பொண்ணு பாக்குறாங்க. உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க. நம்ம பாப்பாவை வந்து பாக்க சொல்லலாம்…”

சுரேஷோ யோசிக்க,”என்னப்பா யோசிக்கிற? நல்ல இடம்… தாராளமா முடிக்கலாம்” என்றார்.

“சரி நீங்க மாப்பிள்ளை போட்டோவும்… உங்க போன் நம்பரும் தாங்க. நான் பாட்டிகிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்.”

“நல்லதுபா” என்று சொன்ன புரோக்கர், மீண்டும் ஒரு புகைப்படத்தை சுரேஷிடம் தர. அதே சமயம் கொடியும் தனக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு சுரேஷின் அருகில் வந்தான்.

“போகலாமா மச்சான்.”

“ம் வாடா.” என்று சொன்னவன் கொடியை அழைத்து கொண்டு தன் வீட்டுக்கு சென்று,”நீ மாடியில போய் வாங்கிய பொருள் எல்லாம் வச்சிட்டு வா. நம்ம டின்னர் சாப்பிடலாம்…” என்றான் சுரேஷ்.

“சரிடா” என்ற கொடி தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் தன் அறையில் வைத்தவன், மீண்டும் கீழே இறங்கி வர, இவன் வருவதற்குள் டைனிங் டேபிளில் இவங்களுக்கான உணவு காத்து இருந்தது.

“வாடா சாப்பிடலாம்” என்றதும் கொடி சம்மதித்து அமர, இருவரும் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்த தருணம் பாட்டியை கைத் தாங்கலாக வேணு அழைத்து வர, பாட்டியை பார்த்ததும் கொடி எழ பார்த்தான்.

“உக்காருபா. உக்காந்து சாப்பிடு.” என்றார்.

சுரேஷும்…”உட்காருடா” என்றான்.

அவன் அமர்ந்ததும்…”என்ன தம்பி. வேலை பாக்க போற இடத்தை எல்லாம் பார்த்துட்டு வந்துட்டியா? ஆமா எங்க வேல? என்ன வேல?” எனக் கேட்டார் பாட்டி.

“இன்சூரன்ஸ் கம்பெனில தான் வேலை கிடைத்து இருக்கு. இங்க இருந்து அரைமணி நேர தொலைவு தான் பாட்டி.”

“ஒ நல்லதுபா. சரி சாப்பிடு” என்றார்.

சுரேஷ்”பாட்டி” என்று அழைத்ததற்கு பதில் அளிக்காமல் அவர் அமைதியாக இருந்தார்.

“என்ன விஷயம்? ஏன் அவங்கள டிஸ்டர்ப் பண்றீங்க? அவங்களுக்கு தான் நீங்க அவங்க கூட பேசுறது பிடிக்கல இல்ல. பின்ன என்னப்பாட்டி பொட்டின்னு” என்று திட்டினான் அவனின் மகன்.

“டேய்! சும்மா இருடா. பாட்டி கடை தெருவுல புரோக்கரை பார்த்தேன்” என்று அவருக்கு தான் பேசிவது பிடிக்காவிட்டாலும் சொல்லுவதை சொல்லிவிட நினைத்து சொல்லிவிட்டான்.

“என்ன புரோக்கரையா?”

“ஆமா பாட்டி. அவரு உங்களையும் தங்கச்சியையும் ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாரு. அப்புறம்”

“வேற என்ன?”

“நம்ம பாப்பாவுக்கு ஒரு வரன் வந்து இருக்காம்… அதான் உங்களுக்கு சம்மதம்னா, அவங்கள வீட்டுக்கு வர சொல்லி பாப்பாவை பாக்க சொல்லாமான்னு கேக்குறேன்.” என்றான்.

“இப்போ தான் உனக்கு உன் தங்கச்சி மேல அக்கறை வந்து இருக்கு இல்ல.”

“அப்படி இல்ல பாட்டி.”

“ம் அவ இப்படி ஒரு நிலைமையில இருக்கும் போது கூட, நீயும் உன் பொஞ்சாதியும் முருங்கைக்கீரை சூப்பு குடிக்க தவறுறது இல்ல. அதான் இப்போ மறுபடியும் ரெண்டு புள்ளைக்கு அப்பாவாக போற.” என்றார் கடுப்புடன்.

“பாட்டி” என்றான் அதைற்கு மேல் எதுவும் பேச முடியாது.

“போதும் நிறுத்து. என் பேத்தி அவ வாழ்க்கையை இழந்து ஒரு வருஷமா நடை பிணமா சுத்திகிட்டு இருக்கா. அவளுக்கு ஒரு நல்லது பண்ணனும்னு எவனோ ஒரு புரோக்கர் பையன் சொல்லி தான் உன் மரமண்டைக்கு தோணுமா? உனக்கா தோணலை இல்ல” என்றார் அவர்.

“தப்பு தான் மன்னிச்சுடுங்க பாட்டி.”

“போதும் உன் நடிப்பு. சரி அந்த புரோக்கர் போன் நம்பரை தா. நானே அவன் கிட்ட பேசுகிறேன் அவன் நம்பரை நான் மிஸ் பண்ணிட்டேன்.”

“இந்தாங்க. இதுல நம்பரும் மாப்பிள்ளை போட்டோவும் இருக்கு.” என்று சுரேஷ். ஒரு கவரை பாட்டியிடம் தர, பாட்டி அந்த கவரை வாங்கி வேணுவிடம் தந்தவர்

“வேணு இந்த போட்டோவை உன் அத்தைகிட்ட காட்டிட்டு வா.” என்று பாட்டி சொன்னதும் வேணு ஒரு அறைக்குள் சென்றவன் சில நொடிகள் கடந்த நிலையில் வெளியே வந்து,”பாட்டி அத்தை  இங்க இருக்குறது உங்களுக்கு பிடுக்கலைன்னா, அவங்க வேணா பழனி தாத்தா ஆஸ்ரமதுக்கு போயிடவான்னு கேக்குறாங்க.” என்றான்.

“அப்படியா சொன்னா??”

“ம் ஆமா பாட்டி.”

“பாட்டி நான் வேணா போய் பாப்பாகிட்ட பேசவா?” என்றான் சுரேஷ்.

“வேணாம். அவ அப்படி தான் சொல்லுவா. நான் அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர சொல்லுறேன். நீ நேர்ல வந்து உன் தங்கச்சிக்கு அண்ணனா லட்சணமா இந்த சம்மந்தத்தை பேசி முடி.” என்று பாட்டி சொல்ல,  கொடிக்கோ ‘இங்கே என்ன தலைப்பின் பேச்சு வார்த்தை நடக்கிறது’ என்றே புரியாமல் இருக்க.

“சரிப்பாட்டி நான் கிளம்புறேன். டேய்! வேணு அம்மாகிட்ட எதாவது சொல்லனுமாடா?” என்றான் மகனிடம்…

“நாங்க போன் பண்ணி பேசிப்போம்… நீங்க கிளம்புங்க.”

“சரி சரி நீ ஒழுங்கா படி.”

“பெரிய வாத்தியார் இவரு. எங்களுக்கு எல்லாம் தெரியும்… நீங்க கிளம்புங்க” என்று சிறுவன் வேணு சொல்ல, சுரேஷ் அனைவரிடத்திலும் இருந்து விடை பெற்று பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு சென்றான்.

 கொடியும் மாடிக்கு சென்றவன் நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியோடு அவன் அம்மாவையும் அக்காவையும் செல் போனில் அழைத்து பேசிய பிறகு நிம்மதியாக தூங்கினான்,

மறுநாள் காலை மொட்டை மாடி வெளியே நின்று சோம்பல் முறித்தவன் கண்ணுக்கு பூத்து குலுங்கும் மல்லிப்பூ செடிகள் அழகாக காட்சி தர. அதே நேரம் கையில் பிளாஸ்க் உடன் மாடிக்கு வந்தான் சிறுவன்.

“இந்தாங்க டீ குடிச்சிட்டு காலையில எட்டு மணிக்குள்ள கீழே வந்தா தான் டிபன் கிடைக்கும்… இல்லன்னா அவ்வளவுதான்” என்றான்.

“காலையில குட் மார்னிங் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா உனக்கு?”

“நான் சொன்னா. உங்களுக்கு வேணா இந்த மார்னிங் குட்டா இருக்கலாம் பட் எனக்கு இது பேட் மார்னிங் தான்.”

“ஏன்டா?”

“இன்னும் ஒன் வீக்ல எனக்கு மேத்ஸ் டெஸ்ட்.”

“அதுக்கு என்ன?” என்றான் கொடி.

“எனக்கு யாரையும் கணக்கு பண்ணவும் பிடிக்காது. கணக்கு போடவும் பிடிக்காது.” வேணு முகம் சுளித்து சொல்ல,

“ஒ உனக்கு மேத்ஸ் வராதா?”

“ஆமா ஆமா” என்றான் வேகமாக.

“மேத்ஸ் ரொம்ப ஈசிடா தம்பி.”

“அது புரிஞ்சவனுக்கு அண்ணா. ஆனா,, எனக்கு தான் அது புரியவே புரியாதே அண்ணா.”

“நான் வேணா உனக்கு கணக்கு பாடம் கத்து தரவா?” என்று கேட்டான்.

“உங்களுக்கு கணக்கு போட வருமா?”

“வரும் என்பதால் தான் கேட்டேன். நான் அக்கௌண்ட்ஸ் ஸ்டுடென்ட்பா.”

“எது டீ கடை அக்கௌண்ட்டா?” என்றான் சிறுவன்.

“அட. அது இல்ல” என்று விளக்கம் அளிக்கப் போக,

“ம்…  புரியுது” என்றான் வேணு.

“சரி சொல்லு நான் உனக்கு கணக்கு கத்து தரவா

“ஒ தரலாமே. ஆனா,, நான் அதுக்கு பீஸ் எல்லாம் தர மாட்டேன்.” என்றான் அவன்.

“அதெல்லாம் வேணாம்டா. நான் கேட்க மாட்டேன்.”

“அப்போ சரி. நான் நாளையில இருந்து உங்ககிட்ட கணக்கு கத்துக்க வரேன்.”

“நல்ல காரியத்தை எல்லாம் தள்ளி போட கூடாது. நான் இன்னைக்கு வேலை முடிச்சிட்டு சாய்ங்காலம் 6 மணிக்கு எல்லாம் வந்துடுவேன். சோ, நான் உனக்கு ஏழு மணிக்கு மேத்ஸ் கத்து தரேன் சரியா?”

“ம் சரி சரி. சீக்கிரம் கீழே இறங்கி வாங்க. நான் போய் அதுக்குள்ள எங்க அத்தைகிட்ட நமக்கு டிபன் வாங்கிட்டு வரேன்.” என்றான் சிறுவன்.

“எங்க போய் வாங்குவ?”

“பக்கத்து தெருவுல தான் அத்தை  கேட்டரிங் வச்சிருக்காங்க. காலையில 5 மணிக்கு அங்க அவங்க போனா, அதோட சாய்ங்காலம் 5 மணிக்கு தான் வருவாங்க.”

“ஓஹோ.”

“சரி நீங்க கீழே வரும் போது flask  கொண்டு வாங்க நான் கீழே போறேன். ஹாங் அப்புறம் முக்கியமான விஷயம்” எனவும்…

“என்ன?” என்றான் கொடி.

“இனிமே இந்த செடில எல்லாம் கை வைக்காதிங்க.”

“ஏன்?”

“எங்க அத்தை  அப்புறம் அழ ஆரம்பிச்சிடும்…”

“இந்த பூவை டச் பண்ணா உங்க அத்தைக்கு பிடிக்காதா?”

“ஹ்ம் ஹ்ம் பிடிக்காது. இந்த செடில எவ்வளவு பூ பூத்தாலும் அதை என் அத்தை பறிக்கவும் பறிக்காது. அதுவா வாடி உதிர்ந்து போனதும் அந்த வாடிய பூவை எல்லாம் அள்ளி எடுத்து அதை கொண்டு போய் வாரத்துல ஒரு முறை கடல்ல போட்டுட்டு வரும்…”

“ஏன் இப்படி?” என்றான் குழப்பத்துடன்.

“எனக்கு தெரியாது. நான் கேட்டாலும் சொல்லாது. சரி எனக்கு நேரமாகுது நான் போறேன். நீங்க சீக்கிரம் வாங்க” என்று சொன்ன சிறுவன் வேணு வேகமாக கீழே இறங்கி ஓடினான்.

 கொடி எட்டு மணி அளவில் தன் வேலைகளை முடித்து கொண்டு கீழே இறங்கியவனுக்கு காலை உணவு ரெடியாக டேபிளில் காத்து இருந்தது.

“வா தம்பி. சாப்பிடலாமா?” எனக் கேட்டார் பாட்டி.

“இதோ வரேன் பாட்டி” என்றான் கொடி.

“சீக்கிரம் சாப்பிடுங்க. நான் ஸ்கூல்க்கு போகணும்…”

“நீ எப்படிப் போவ?”

“நான் நடந்து தான் போவேன்.” என்றான் வேணு.

“நான் வேணும்னா உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு வேலைக்கு போகட்டுமா?”

“உனக்கு ஏன்பா கஷ்டம்?” என்றார் பாட்டி.

“கஷ்டமெல்லாம் இல்லிங்க. இன்னும் கேட்டா சுரேஷ் வண்டி தானே என்கிட்ட இருக்கு. எனக்கு பிரச்சனை இல்லை” என்றான்.

“சரி சரி நீங்களே என்னை அழைச்சிட்டு போகலாம்… சீக்கிரம் சாப்பிடுங்க” என்றான் சிறுவன்.

“டிபன் ரொம்ப நல்லா இருக்கு பாட்டி.” என்று உணவை பாராட்டினான்.

“என் அத்தை  பண்ணது நல்லா தான் இருக்கும்…” என்றான் அசராது.

மூவரும் சாப்பிட்டு முடிக்க, கொடி. வேணுவை அவன் ஸ்கூல்க்கு அழைத்து செல்லும் வழியில், ”ஏங்க கொஞ்சம் வண்டியை இங்க நிறுத்துங்க” என்றான்.

“ஏன்பா?”

“அத்தை  ஒரு பைல் கேட்டாங்க. நான் அதை தந்துட்டு வரேன்.:”

“இது என்ன இடம்டா?”

“எங்க அத்தை  கேட்டரிங் இது தான். சரி நீங்க இருங்க. நான் உள்ள போயிட்டு வரேன்.” என்ற வேணு அவன் அத்தையின் கேட்டரிங்க்குள் சென்றவன் சில நிமிடங்கள் கடந்த நிலையில் வெளியே வந்தான்.

 அவனை வாசல் வரை வந்து கையசைத்து வழி அனுப்பியவளின் பார்வை வேறு யாரையும் காணாத நிலையில், மீண்டும் அவள் அங்கிருந்து சென்று விட. கொடி சிறுவன் வேணுவை ஸ்கூலில் இறக்கி விட்டான்

“ஈவினிங் எப்படி வருவ.?” என்று சிறுவனிடம் கேட்டான்.

“என் ப்ரண்ட் கூட பேசிக்கிட்டே. என் அத்தை  கேட்டரிங்கு நான் போய்டுவேன்.”

“சரி நம்ம ஈவினிங் மீட் பண்ணலாம்… பை” என்றான்.

வேணு அவன் ஸ்கூலுக்கு செல்ல, கொடிவீரன் முதல் நாள் தன் வேலைக்கு சென்றவன், அங்கே தன்னை வீரா என்ற பெயரில் அறிமுகம் செய்து கொண்டான்.

 அவனுக்கு தரப்பட்ட வேலைகளை செய்து கொண்டு இருந்தவன், மதிய நேரம் தன் கேபின் வாசலில் ஒரு பெண் அமர்ந்து இருப்பதை பார்த்தவன்,”இவங்க. இவங்க சுரேஷ் தங்கச்சி தானே. இவங்க என்ன பண்ணுறாங்க இங்க?” என்று தனக்கு தானே  கேட்டுக்கொண்டவன் அந்த பெண்ணின் அருகில் சென்று.

“ஏங்க. இங்க என்ன பண்ணுறீங்க? உங்களை தான்ங்க” என்று கொடி கேக்கும் கேள்விக்கு பதில் தராமல் அவள் கையில் இருந்த ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்தவள் அருகில் வந்த ஒரு பெண்மணி.

“Mrs. வீரவேல். உங்களை மேனேஜர் கூப்பிடுறாங்க” என்று அந்த பெண் சொல்ல, அவளோ தன் கையில் இருந்த ஆவணங்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தாள்.

“Mrs. வீரா உங்களை தான். மேனேஜர் வர சொல்லுறாரு பாருங்க” என்று மீண்டும் அந்த பெண்மணி சுரேஷின் தங்கை தோளில் கை வைத்தப்படி அவளை அழைக்க,

சட்டென்று அந்த பெண்மணியின் முகத்தை பார்த்தவள் தன் பையில் இருந்த யியர் மெஷின் எடுத்து தன் காதில் மாட்டிக்கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள்.

“வாங்க மேடம்… இத்தனை மாத போராட்டத்துக்கு பிறகு இன்னைக்கு தான் உங்க கணவர் வீரவேலோட இன்சூரன்ஸ் பணம் பத்து லட்சம் உங்க பெயர்ல டிரான்ஸ்பர் ஆகியிருக்கு. நீங்க உங்க அக்கௌன்ட் நம்பர் தந்திங்கனா. பணத்தை அதுல டெபாசிட் பண்ணிடுவோம்” என்று மேனேஜர் சொன்னார்.

 தன் கையில் இருந்த அககவுன்ட் நம்பரை மேனேஜரிடம் அவள் தந்ததும்… அவர் தன் அலைபேசி மூலம் யாருக்கோ போன் செய்தார்.

“Mr. வீராவை உள்ள வர சொல்லுங்க.” என்று மேனேஜர் சொன்னதும்… கொடிவீரன் உள்ளே வந்து அங்கே அமர்ந்து இருக்கும் பெண்ணை கேள்வியுடன் பார்த்தான்.

“மிஸ்டர்.வீரா. இவங்க தர அக்கௌன்ட் நம்பர்ல இந்த செக்கை பாஸ் பண்ண ஏற்பாடு பண்ணுங்க. ஹான் மிசஸ்.வீரவேல். இவர் தான் வந்த முதல் நாளே உங்க ஹஸ்பண்ட் இன்சூரன்ஸ் பேப்பர்ல இருந்த ப்ராப்ளம் எல்லாத்தையும் சால்வ் பண்ணி, உங்களுக்கு உடனே பணம் வர ஏற்பாடு பண்ணிருக்காரு. மோர் ஓவர் இவர் பெயர் கூட வீரா தான். அண்ட் நீங்க இவர் கூடப் போய் மீதி பார்மாலிடீஸ் எல்லாம் பினிஷ் பண்ணிக்கோங்க.” என கொடியின் பெயரை வீரா என்று மேனேஜர் சொல்ல,

முதல் முறையாக தன் எதிரில் நின்று இருந்த கொடியை நேருக்கு நேர் பார்த்தவள் தன் இருகரம் கூப்பி, “உங்களுக்கு ரொம்ப நன்றிங்க” என்று எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவள் சொன்ன நன்றிக்கு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான் கொடி.

“வாங்க மீதி பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிடலாம்” என்றவன், அவளை அழைத்து கொண்டு தன் கேபின்க்கு செல்ல,”பிளீஸ் உக்காருங்க. உங்க பெயர் என்ன??” என்று கொடி கேட்டுக்கொண்டே அவளின் ஆவணங்களை கவனித்தவன் கண்ணில் பட்டது அவளின் பயோ.

“பெயர் – சித்ரமகிழினி,

W/O. வீரவேல்

Status. Widow

என்று அச்சிடபட்டதை வாசித்தவன் கண்களுக்கு முன்பு அழகு சிலையான சித்ரமகிழினி பொலிவு இழந்த நிலையில் அமர்ந்து இருந்தாள்.

தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!