மதில் தாண்டுமா மனசு – 15
கார்த்திக், ஆனந்தன் வீட்டில் பேசிவிட்டு வந்ததை விவரித்துக் கொண்டிருந்ததைக் கேட்டவர்கள் அனைவரும் வாயடைத்துப் போயிருந்தனர்.அங்கே நிலவிய அமைதியைப் பார்த்த கார்த்திக், “என்ன எல்லாரும் ஒரேடியா சைலன்ட் ஆயிட்டீங்க?” என்று கேட்டான்.”நீ பேசுன பேச்சுக்கு நாளைக்கு அவங்க பங்க்ஷனுக்கு வருவாங்களாடா?” என்று வனஜா கவலையுடன் கேட்டார்.”நான் பேசுனதால அவங்க வராங்களோ இல்லையோ… இனி ஆனந்தன் அனுவின் பக்கம் தலை வச்சுக்கூட படுக்க மாட்டான்!” என்று ஆவேசமாகச் சிரித்த கார்த்திக், “அனுவைக் கட்டிக்க சம்மதமானு அவன்ட்ட கேட்க மறந்துட்டேனே” என்று கேலியாகச் சிரித்தான்.அப்போது மெல்ல வாயைத் திறந்த அனுஷா, “அவரோட அம்மாக்கிட்டதானே இத்தனை விஷயத்தையும் பேசினீங்க?” என்று கேட்டாள்.“இந்த நேரம் அவனோட அம்மா அவனுக்கு விஷயத்தைச் சொல்லியிருப்பாங்க” என்றான் கார்த்திக்.உடனே அனுஷா, “நல்ல வேலை பண்ணினீங்க; அவர்கிட்ட நேரடியா சொல்லியிருந்தீங்கன்னா, உடனே சம்மதம் சொல்லி இருப்பாரே” என்று உளறிவிட்டு அனைவரையும் பார்த்து விழித்தாள்.அனைவரும் அவளையே விசித்திரமாகப் பார்க்க, அவள் சமாளிப்பாக, “நான் எனக்குச் சம்மதம்னு சொல்ல வரல… நம்ம அவரைத் தப்பாப் புரிஞ்சுகிட்டோம்னு சொல்ல வந்தேன். அவரோட புத்தி ஒழுங்காதான் வேலை செய்யுது; நம்ம அவரைப் புரிஞ்சுகிட்ட விதம்தான் தப்பு. மத்தபடி எனக்கு அவர்மேல எந்த விருப்பமும் இல்லை” என்று தன் நிலையை விளக்கினாள்.மறுபுறம், ஆனந்தன் வீட்டிற்கு வந்ததும் கனகமும் மீனாவும் கார்த்திக் வந்து சென்ற விஷயத்தைப் பற்றியும், அனுவின் நிலையைப் பற்றியும் அவனிடம் சொல்லி முடித்தனர்.”அப்படியா… அதனாலதான் அந்தப் பொண்ணு அனாதை ஆசிரமத்துக்கு வேலைக்குப் போகணும்னு சொல்லிட்டு இருந்ததா! நம்மளும் கார்த்திக்கைத் தப்பாத்தான் நினைச்சிருக்கோம் அம்மா. கார்த்திக் அவங்களை இந்த ஊருக்கு வரவழைக்கிறதுக்காக, அவங்க அம்மாக்கூட கோபப்பட்டு வீட்டைக் காலி செஞ்சு போன மாதிரி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருப்பான் போல” என்று உருக்கமாகப் பேசினான் ஆனந்தன்.உடனே கனகம், “ஒருவேளை இந்தப் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதிச்சா நீ கட்டிக்கிவியா ஆனந்த்?” என்று இயல்பாகவே கேட்டார்.”யாருடைய வற்புறுத்தலும் இல்லாம அவங்களா சம்மதிச்சா தாராளமா கல்யாணம் செஞ்சுப்பேன். ஆனா, அப்படி சம்மதிக்கிற ஆள் இல்ல இந்த அனு. அவங்க ஒவ்வொருத்தர்கிட்ட பேசும்போதும் வார்த்தையைப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகப் பிரயோகிக்கிறாங்க. நானே குறும்புத்தனமா ஏதாவது கேட்டால், சில நேரத்துல பதில் சொல்லாமல் தவிர்த்திருக்காங்க. அப்படிப்பட்டவங்க இன்னொரு முறை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பாங்களானு எனக்குத் தோணல” என்றான் ஆனந்த்.”நீதான் அந்த பொண்ணுக்கு நல்ல நண்பனாச்சே! உன்னோட நல்ல குணத்தைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்காங்களே, அவங்களுக்கும் உன்மேல ஒரு சின்ன ஈடுபாடு இருந்தாக்கூட சம்மதிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குண்ணா…” என்றாள் மீனா.“ஒருமுறை நம்ம நேரிலேயே கேட்டு விடலாமா ஆனந்த்?” என்றார் கனகம்.”வேண்டாம் வேண்டாம்! இப்போ எப்படி இயல்பா பேசிப் பழகிக்கிட்டு இருக்கோமோ, அப்படியே போயிடட்டும். யாரோட வற்புறுத்தலாலும் இல்லாம அவங்களுக்கும் எப்போவாவது என்மேல பிரியம் வந்தா அப்போ பார்த்துக்கலாம்மா” என்று ஆனந்த் மறுப்பு சொன்னான்.“இப்போவே பாதி வயசு போயிடுச்சுடா, இதுக்கப்புறம் காலம் தாழ்த்தி கல்யாணம் செய்ய முடியுமா?” என்றார் கனகம்.”கல்யாணமே ஆகாட்டினாலும் பரவாயில்லைம்மா, கட்டாயக் கல்யாணம் வேண்டாம். அது அவங்களுக்கும் நல்லதல்ல, நம்ம குடும்பத்துக்கும் நல்லது இல்லை” என்று கூறிவிட்டு அவன் தன் அறைக்குச் சென்றான்.அறைக்குள் சென்று கதவை அடைத்து அமர்ந்தவன், “நான் வேண்டாம்னு சொல்லிட்டேனே தவிர, யாராவது அனுவை எனக்குக் கட்டி வச்சிட மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் எனக்குள்ள இருக்கு… இதைச் சொல்றதுக்குக்கூட எனக்கு ஒரு நல்ல நண்பன் இல்லையே!” என்று ஏங்கியபடியே அமர்ந்திருந்தான்.மறுநாள் காலையில் கார்த்திக்கின் வீடு உறவினர்களின் வருகையால் களைகட்டியிருந்தது. விருதுநகரிலிருந்து இருக்கன்குடி கோவிலுக்குச் செல்வதற்காக அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்து வீட்டின் முன்பு காத்திருந்தது. வந்திருந்தவர்கள் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முந்திச் சென்று அமர்ந்து கொண்டிருந்தனர்.கடைசி ஆளாகக் கனகம் மட்டும் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தார்.இதுவரை அனுஷாவை நேரில் பார்த்திராத அவர், அனைவருக்கும் வழிவிட்டு ஒதுங்கி நின்றுகொண்டிருந்த அனுஷாவின் தயக்கத்தைப் பார்த்தவுடன், ‘இவள்தான் அனுஷா’ என்பதை ஊகித்துக் கொண்டார்.வனஜா அவரைப் பார்த்து, “வாங்க அண்ணி! உங்களுக்கு இப்போதான் நேரம் கிடைச்சதா? காலையிலேயே வந்து சீட் பிடிக்காம நின்னுட்டு இருக்கீங்களா?” என்றார். “மீனாவும் ஆனந்தனும் வரலையா?” என்றும் கேட்டார்.அமுதாவும் சிவமும், “இவங்கதான் ஆனந்த் தம்பியோட அம்மாவா?” என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.வனஜா, “ஆமா, இவங்கதான் ஆனந்தன் அம்மா” என்று அறிமுகப்படுத்தியவர், “அண்ணி, இது என் தங்கச்சி; அது அவளோட வீட்டுக்காரர்” என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, அனுவைக் காட்டி, “இவ அவங்களோட பொண்ணு” என்றார்.கனகம் அவர்கள் மூவரையும் பார்த்து இன்முகத்தோடு புன்னகைத்துவிட்டு, அனுவைப் பார்த்தபடியே, “இந்தப் பொண்ணுதான் டீச்சரா இருக்காளா?” என்று கேட்டார்.வனஜா, “ஆமாம் அண்ணி, நம்ம மீனா மகள் இவளோட வகுப்பில்தான் படிக்கிறாள். இங்க டியூஷன் எடுக்கிறதும் இவள்தான்” என்றவர், “நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்களே அண்ணி, ஏன் பிள்ளைகளைக் கூட்டிட்டு வரல?” என்றார்.அதற்குக் கனகம், “வீட்டில சந்தோஷை மட்டும் விட்டுட்டு வர முடியாது இல்ல வனஜா, அதனால மீனாவும் ஆனந்தனும் அவனைப் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாங்க” என்றார்.அப்போது கார்த்திக், “எல்லாரும் பஸ்ல போய் உட்காருங்க!” என்று குரல் கொடுக்க, கனகம் அனுவின் கையைப் பிடித்துக்கொண்டே, “வாமா, நாம ரெண்டு பேரும் போய் இடம் பிடிக்கலாம்” என்று அழைத்துச் சென்றார்.அவர்களோடு அமுதாவும் சேர்ந்து பேருந்தில் ஏறி, மூவர் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். அனுஷா, அமுதாவுக்கும் கனகத்திற்கும் நடுவில் அமர நேர்ந்தது.கனகம் மெல்லப் பேச்சுக்கொடுத்து, “வீட்டுல மதுக்குட்டி அடிக்கடி உன்னைப் பத்தியே பேசிட்டிருப்பா… நீ சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம் அவளும் சந்தோஷ்கிட்ட ரொம்ப அன்பா பழகுறா. அதோட எங்க ஆனந்த் அவ செய்யுற ஒவ்வொரு செயலுக்கும் உன்னைப் பாராட்டு மழையில் நனைச்சிடுவான். நானும் ‘இப்படி ஒரு மகராசி என் வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்’னு ஒவ்வொரு தடவையும் நினைச்சிருக்கேன்” என்று சொல்லி ஒரு வெற்றுப் புன்னகை சிந்தினார்.அனுவுக்கு அவரது பேச்சைக் கேட்கக் கேட்க மனதுக்குள் சங்கடமாக இருந்தது. அமுதாவோ, இவர்கள் இயல்பாகப் பேசிப் பழகுவதைப் பார்க்கும்போது, இதுவே அவர்களின் வாழ்க்கையில் இணைய இன்னொரு நல்ல வாய்ப்பாக அமையுமோ என்று எண்ணி அகமகிழ்ந்தாள்.கோவிலை அடைந்து அனைவரும் சுவாமி தரிசனம் முடித்தனர். மதிய உணவிற்குப் பிறகு ஆங்காங்கே பொருட்கள் வாங்கச் சென்றிருக்க, கனகமும் அமுதாவும் அனுவோடு கோவிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போதும் அமுதாவும் அனுவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை; கனகமே பேச்சைத் தொடங்கி வைத்தார்.”வாமா, நாமளும் சாமி கும்பிட்டு கடைவீதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்” என்று அழைக்க, அனு, “இல்லம்மா, நீங்க போயிட்டு வாங்க” என்று மெல்லிய குரலில் மறுத்தாள்.கனகம் இயல்பாக, “வயசுப் பொண்ணு எதுக்கு இப்படி தயங்கிக்கிட்டு இருக்க? வா…” என்று அவள் கையைப் பிடித்து எழுப்பினார்.அமுதா குறுக்கிட்டு, “அவ கூட்டத்துக்குள் வர்றதுக்கு…” என்று தயங்கிப் பாதியில் நிறுத்த, கனகம், “எனக்கு எல்லா விஷயமும் தெரியுமா. பேசுறவங்க அவங்களுக்குள்ளதானே பேசி இருப்பாங்க? நம்மளை எதிர்த்து வந்து பேசப்போறதில்லை. வாங்க, நாமளும் சாமி கும்பிடத்தானே வந்திருக்கோம்! இங்கே வேற கல்யாணமோ இல்ல விசேஷமோ நடக்கலையே… நாம அவங்களோட சேர்ந்து போகல, தனியாத்தானே போறோம்” என்று இருவரையும் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள்.அப்படியே கோவிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தபோது, கனகம் மெல்லத் தன் மனதிலிருப்பதைப் பேசத் தொடங்கினார். “எங்க ஆனந்தும் இப்படித்தான்… மக்கள் கூடுற கூட்டத்துல போய் நிக்கிறதுக்கு ரொம்பத் தயங்குவான்.”அமுதாவும் அனுவும் எதற்காக என்பதைப் போலக் கனகத்தை நிமிர்ந்து பார்த்தார்கள்.கனகமே தொடர்ந்து, “வந்திருக்க சொந்தக்காரங்க எப்படா கல்யாணம் முடியும், என்னைக்கு கல்யாணச் சாப்பாடு போடுவேன்னு கேட்டு கேலி பண்ணுவாங்கனு எந்தக் கூட்டத்துக்கும் போக மாட்டான். நீயும் அப்படித்தான் உன்னோட வாழ்க்கையை நினைச்சுத் தயங்கிக்கிட்டு அடைஞ்சு கிடக்கிற… பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டு இந்தத் தயக்கத்தைத் தூக்கி எறிஞ்சிட வேண்டியதுதானே?” என்று பளிச்சென்று கேட்டுவிட்டார்.அனுஷாவின் கண்கள் கலங்க, “அம்மா வேண்டாமா…” என்று மறுத்துச் சொன்னாள்.ஆனால், கனகம் விடுவதாயில்லை. “நான் இந்த விசேஷத்துல கலந்துக்கக் கூடாதுனுதான் இருந்திருப்பேன். ஆனா உன்னைச் சந்திக்கணும்ங்கிறதுக்காக மட்டும்தான் இப்போ இங்கே வந்தேன். ஆனந்தன் ரொம்ப நல்லவன் அப்படின்னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணும்ங்கிற அவசியமில்லை. நானும் உன்னைப் போலதான் சின்ன வயசுலயே புருஷனை இழந்துட்டேன். ஆனா எனக்கு மூணு பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கடமை இருந்துச்சு. நீ இப்போ துணிஞ்சு வேலைக்குப் போயிட்ட.அன்னைக்கு நாத்து நடுவதற்கும் களை பிடுங்குவதற்கும் தான் வேலைக்குக் கூப்பிடுவாங்க. முதலாளா போய் நின்னா, ‘நீயெல்லாம் எதுக்கு முந்திக்கிட்டு வந்தா?’னு கேட்பானுங்க. கடைசி ஆளா போனா, ‘உனக்கு தனியா தட்டுத் தாம்பூலம் வச்சு அழைக்கணுமா?’னு கேட்பானுங்க. இந்த ஊரு எங்க போனாலும் வழி விடாம அடைச்சுப் பிடிச்சு என்னை ஒடுக்கி வச்சது. அப்பவெல்லாம் நினைப்பேன்… நமக்கும் ஒரு மஞ்சள் கயிறும். ஒத்த ரூபாய் வருமானம் இல்லாததால் ஒன்றுக்கும் உதவாத நாய்கள் எல்லாம் எப்படி பேசுதுனு! அன்னைக்கு என்னோட ஆனந்த் தலையெடுத்ததும் எல்லாப் பிரச்சினையும் அவன் சரி செஞ்சான். ‘ஏய், வா, போ’னு கூப்பிட்டவங்க எல்லாம் கேலிக்கு சொல்றாங்களோ நல்லவிதமா சொல்றாங்களோ, ஆனா இப்போ ‘முதலாளியம்மா’னு என்னைக் கூப்பிடுறாங்க.அப்படி வளர்ந்ததால என்னவோ, அவனுக்கு உனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைப்பு இருக்கு. நீ எப்படிப்பட்டவனு விவரமே தெரியாமதான் உன்மேல விருப்பப்பட்டு கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறானே தவிர, இதுல ‘நான் வாழ்க்கை கொடுக்கிறேன்’னு மார்தட்டிக்க நினைக்க மாட்டான் என் பிள்ளை!” என்றார்.அனுஷா சட்டென்று கனகத்தைப் பார்த்து, “அம்மா போதும்! அன்னைக்கு உங்களுக்கு யாராவது வாழ்க்கை கொடுக்க முன்வந்திருந்தா நீங்க சம்மதம் சொல்லியிருப்பீங்களா?” என்று எதிர்த்துக் கேள்வி கேட்டாள்.