Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 14

CHAPTER 14

மனசு-14

By karuppiahrajesh70@gmail.com · October 20, 2026

0

​மதில் தாண்டுமா மனசு-14​

மனதில் எழுந்த சிந்தனைப் போராட்டத்துடன் இருந்தான் ஆனந்தன். இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் கார்த்திக்தான் என்பதால், அவனிடமே நேரில் பேசிவிடலாம் என்ற முடிவோடு அவன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.​ஆனந்தனின் எண்ணைக் கண்டதும் கார்த்திக் முகச்சுளிப்போடு அழைப்பை ஏற்றான்.​”என்ன?” என்று அவன் அலட்சியமாகக் கேட்க, ஆனந்தன் சிறு படபடப்புடன் கேட்டான்:​”ஏண்டா, நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன்? எதுக்காக என்னைப் பத்தி இப்படித் தப்புத் தப்பாகப் பிரசங்கம் பண்ணிட்டு இருக்க?”​கார்த்திக் கலங்கவில்லை; மாறாக அவன் கோபமாகப் பேசுவது பிடிக்காமல், “எனக்கு அப்படிப்பட்ட பழக்கமெல்லாம் இல்லை. உன்னோட இயல்பு எதுவோ, அதைத்தான் சொல்லியிருப்பேன். அதுக்காக போன் பண்ணி திட்டுறியா? நீ பெரிய முதலாளின்னா உடனே ஆள் வச்சு அடிப்ப போல இருக்கே… போனை வைடா!” என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டான்.​ஆனந்தனுக்கு மனப்போராட்டம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை. ‘நாளை அனுவைச் சந்தித்து அவளிடம் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்’ என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.​மறுநாள் காலையில், மருமகள் மதுவை அழைத்துக் கொண்டு போய் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான் ஆனந்தன். வரும் வழியில் இருந்த மாரியம்மன் கோவிலுக்குள் அனு நுழைவதைப் பார்த்தான்.​கோவில் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு அவனும் உள்ளே சென்றான். அனு கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு, சிறிது நேரம் அமர்வதற்காக முன்பிருந்த மண்டபத்திற்கு வந்தாள்.​அங்கே தன் முன் வந்து நின்றவனைக் கண்ட அனுஷா, “வாங்க ஆனந்தன், சாமி கும்பிட்டாச்சா?” என்று மகிழ்ச்சியோடு கேட்டாள்.​”ம்ம்… கும்பிட்டேன்… நேத்து கோபத்தோட போன மாதிரி இருந்தது, இன்னைக்கு கோபத்தோட சுவடே தெரியலையே?” என்றான் ஆனந்தன்.​அனு புரியாமல், “நேத்து நான் என்ன கோபத்தோடவா போயிருந்தேன்?” எனக் கேட்டாள்.​”உங்களைப் மாதிரி பொண்ணு கிடைச்சா தாராளமா கல்யாணம் செஞ்சுப்பேன் அப்படின்னு சொன்னேனே… நீங்களும் ஏதோ பதில் சொல்லிட்டு இறங்கிப் போனீங்களே!”​”ஓ, அதுவா? அதை நான் அப்பவே மறந்துட்டேனே!”​”ஆனா, உங்க அண்ணன் கார்த்திக் சொன்னதை மட்டும் மறக்காம ஞாபகத்துல வச்சிருக்கீங்களே…”​அனுஷா தயக்கத்துடன், “அதுவா, என்னை மன்னிச்சிடுங்க. நிஜமாவே நான் உங்களைப் பார்த்து அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. நீங்க உங்களைப் பற்றி மட்டும் யோசிக்காம, உங்களோட சூழ்நிலை, அதனால வரப்போற பாதிப்புன்னு எல்லாத்தையும் யோசிச்சு முடிவெடுத்துப் பேசுறீங்க. அது என்னைப் போல இருக்கிறவங்களுக்குச் சரியா புரியாமல் தப்பா நினைச்சுட்டோம். என்னை மன்னிச்சுக்கோங்க,” என்று மனதார மன்னிப்புக் கேட்டாள்.​ஆனந்தன் தர்மசங்கடத்தோடு, “எதுக்கு என்னை இப்படித் தர்மசங்கடப்படுத்துறீங்க? நானும் உங்களை மன்னிச்சிட்டேன். உங்ககிட்ட நானும் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, அதுக்காக சாரி!” என்றான்.​”பள்ளிக்கு நேரமாயிடுச்சு, நான் புறப்படுறேன்” என்று அனுஷா எழுந்து கொள்ள,”ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் உங்களை டிராப் பண்றேன்” என்று உடன் வந்தான் ஆனந்தன்.​”உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் ஆனந்த்?” என்றாள் அனு.​”என்ன, யாராவது தப்பா பேசுவாங்கன்னு நினைக்கிறீங்களா?”​“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆனந்த்… நான் உங்ககூட பைக்ல ஏற்கனவே வந்திருக்கேனே, அப்புறம் எதுக்கு யோசிக்கப் போறேன்?” என்றாள்.​”நீங்க வந்த வேலை என்னால லேட் ஆகும், அதுக்காகச் சொன்னேன்” என்று கூறி வண்டியை நோக்கி நடந்தாள் அனுஷா.​சற்றுச் சங்கடத்தோடு அவளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டாள். வண்டி புறப்பட்டதும், ‘மத்தவங்க தப்பா நினைப்பாங்களோ இல்லையோ, உங்க மனசுல தப்பான ஆசையை வளர்த்துப்பீங்களோன்னுதான் தவிர்க்க நினைக்கிறேன் ஆனந்த்…’ என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அனு.​அதைத் தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் சுமூகமாகவே கடந்து சென்றன. அதன் பின் ஆனந்தன் அனுவிடம் காதலிப்பதாக வெளிப்படையாக எதையும் பேசுவதில்லை.​பள்ளியின் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. கார்த்திக் தன் மகன் நவீனுக்குக் காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தான். விழாவிற்கான அழைப்பிதழ்களை வாங்கி வந்து, குடும்பத்தினருடன் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தபோது, வனஜா கட்டாயப்படுத்தி, “ஆனந்தன் வீட்டுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.​கார்த்திக், ஆனந்தன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்துப் பத்திரிகை கொடுக்கச் சென்றான்.​கனகம், “வா கார்த்திக்” என்று அன்போடு வரவேற்று அமரச் செய்து, “இப்ப என்ன, இன்னொரு பொண்ணு பார்த்திட்டு வந்திருக்கேயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.​கார்த்திக், “இனி அவன் விஷயத்தில் நான் தலையிடப் போவதில்லை அத்தை. இது வேறு விஷயம், மீனா “வேறு விஷயமா…” என்றாள்.​”என்னது கார்த்திக்?” என்று கனகம் குழப்பமாகக் கேட்க,​பத்திரிகையை எடுத்துத் கனகத்திடம் நீட்டியவன், “அத்தை, என் பையனுக்குக் காதுகுத்து வச்சிருக்கேன். காலையில் வீட்டுக்கு முன்பு பஸ் வந்துவிடும், நீங்கள் வந்துடுங்கள்” என்றான்.​அதை வாங்கிக் கொண்ட கனகம், “சரி கார்த்திக். நாளைக்கு நாங்க குடும்பத்தோட வந்து, உன் வீட்டில் இருக்கிற டீச்சர் பொண்ணைப் பொண்ணு கேட்கலாமான்னு நினைச்சோம்” என்று அவன் புத்தி மாற வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுக் கூறினார்.​கார்த்திக் எரிச்சலோடு, “நீங்க கேட்டாலும் அவங்க பொண்ணு கொடுக்க மாட்டாங்க அத்தை!” என்றான்.​”ஏன், அந்தப் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா பொண்ணு கொடுத்துத்தானே ஆகணும்?”​கார்த்திக் நக்கலாக, “அந்தப் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தாலும் உங்க பையனுக்குப் பிடிக்காதே அத்தை!” என்றார்.​”ஏன், என் பையனுக்கு ஏன் பிடிக்காமல் போகும்?”​”ஏன்னா, அவ இப்போ புதுசா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு கிடையாது. ஏற்கனவே அவளுக்குக் கல்யாணமாகி மூணு வருஷம் ஆச்சு; அவளோட கணவர் இறந்து இரண்டு வருஷம் ஆகப்போகுது. அவளுடைய மன மாற்றத்திற்காகத்தான் இங்கே அழைத்து வந்து வைத்திருக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த மாதிரி அவ மனசை மாற்றிக்க மாட்டேங்குறா. ஒருவேளை ஆனந்தனைப் பிடித்து மனதை மாற்றிக் கொண்டாலும், ஆனந்தனுக்கு இரண்டாம் தாரத்துப் பொண்ணுங்களைப் பிடிக்காதே! நீங்க வேற நல்ல பொண்ணா பாருங்க அத்தை, நான் வரேன்” என்று முகத்தில் அடித்தது போலச் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறிச் சென்றான்.​கார்த்திக் பேசிவிட்டுச் சென்றதைக் கேட்டு அதிர்ந்துபோன கனகமும் மீனாவும் அப்படியே உறைந்து நின்றார்கள். அருகில், எதுவும் அறியாமல் சந்தோஷ் கத்திக் கூச்சலிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.மாலை வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக்கைப் பார்த்ததும், வனஜா, “பூஜைக்குத் தேவையான சாமான்கள் என்னென்னவென்று சமையல்காரரிடம் கேட்டு எழுதி கொடுத்துட்டியா கார்த்திக்?” என்றார்.​”எல்லாத்தையும் சொல்லியாச்சு மா” என்றான் கார்த்திக்.​உடனே அமுதா, “நீ ஏன்ப்பா ஒத்தையில கஷ்டப்படுற? சித்தப்பாவைத் துணைக்கு அழைச்சிட்டுப் போயிருக்கலாமே!” என்றாள்.​அதற்கு கார்த்திக், “இந்த ஊர் சித்தப்பாவுக்குப் புதுசு சித்தி. நான் கணக்கு வழக்கோட சொல்லிட்டு வருவேன். என்னை வச்சுக்கிட்டு அவங்களை எதுக்கு அலைய வைக்கணும்?” என்று விளக்கினான்.​அப்போது அங்கு வந்த சிவம், “சரி தம்பி, ஊர்ல சொல்ல வேண்டிய ஆளுங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா?” என்று கேட்டார்.​”எல்லாருக்கும் சொல்லிட்டேன் சித்தப்பா. ஊர் முழுக்கக் கூப்பிடலை; நெருங்கிய சொந்தக்காரங்க மட்டும் தான்” என்றான் கார்த்திக்.​”முதல் நாளே போய் அங்கே தங்க வேண்டியது இருக்குமா?” என்று சிவம் கேட்க, “இல்ல சித்தப்பா, இருக்கண்குடி கோவிலுக்குக் காலைல போய் சமையல் பண்ணி சாப்பிட்டு வந்துடலாம். நைட்ல அங்கே கொசு, வண்டு தொல்லைகள் அதிகமா இருக்கும்” என்றான் கார்த்திக்.​அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட வனஜா, “ஆனந்த் வீட்டுக்குச் சொன்னியா கார்த்திக்?” என்று கேட்டார்.​அதைக் கேட்டதும் எரிச்சலடைந்த கார்த்திக், “சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன்; ஆனா நீங்க சண்டைக்கு வருவீங்களே அதுக்காகத்தான் போய் சொல்லிட்டு வந்தேன்” என்றான்.​”என்னடா இது? நம்ம ஜென்ம பகையாளி மாதிரி பேசுற? ஒரு பொண்ணு வேணாம்னு சொன்னது அவ்வளவு பெரிய தப்பா?” என்று வனஜா கேட்க, “அம்மா போதும்! இதையே நூறு தடவை சொல்லிட்டீங்க. ஹான், இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்… ஆனந்தனோட அம்மாவுக்கு அணுவை மருமகளாக்கிக்கணும்னு ஆசையாம்!” என்று அணுவைப் பார்த்தபடியே கூறினான்.​அமுதாவுக்கும் சிவத்திற்கும் இதைக் கேட்டதும், ‘அணு இதைக் கேட்டு என்ன செய்யப் போகிறாளோ?’ என்ற பயம் தொற்றிக் கொண்டது.​வனஜா பதற்றத்துடன், “அதுக்கு நீ என்ன சொன்ன கார்த்திக்?” என்றார்.​”நான் என்ன சொல்லியிருப்பேன்? உங்க பையனுக்கு அவ செட் ஆக மாட்டா, நீங்க வேற ஃப்ரெஷான பொண்ண பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டேன்” என்று சிரித்தான் கார்த்திக்.​”அவங்க என்னாச்சு? ஏதும் கேட்கலையா?” என்று வனஜா தாழ்ந்த குரலில் கேட்க, “கேக்காம இருப்பாங்களா? ‘எதுக்காக இப்படி பேசுற, என்ன நடந்துச்சு?’ அப்படின்னு துருவித் துருவி கேட்டாங்க. நானும் எல்லா விவரத்தையும் அவங்ககிட்ட சொல்லிட்டேன்; உங்க பையன் எதிர்பார்க்கிற மாதிரி கல்யாணத்துக்காகக் காத்திருக்கிற பொண்ணு இவ கிடையாது, ஏற்கனவே கல்யாணமாகி மூணு வருஷம் ஆயிடுச்சு, இப்போ புருஷன் இல்லாம எங்க வீட்ல உதவியா இருக்கான்னு சொல்லிட்டேன்” என்றான்.​அனு இதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இயல்பாகவே அமர்ந்திருந்தாள். ஆனால், அமுதாவும் சிவமும் நல்ல வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டோமே என்று வருத்தத்துடன் இருந்தனர். வனஜாவும், “அச்சச்சோ, நல்ல வேளை கூடிவரும்னு நினைச்சிருந்தா, இவன் போய் எல்லாத்தையும் கெடுத்து வச்சுட்டானே!” என்று மனதுக்குள் புலம்பினார்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!