மதில் தாண்டுமா மனசு — 13
அமுதா, அனுவின் கையில் சாவியைக் கொடுத்து, “நம்ம வீட்ல பீரோவைத் திறந்தா என்னோட பாஸ்புக் இருக்கும். அதை எடுத்துட்டுப் போய் பேங்க்ல வட்டியை கணக்கு பண்ணி பணத்தைக் கட்டிட்டு வந்துரு” என்று அனுப்பி வைத்தார்.”சரிம்மா, வேற எதுவும் எடுத்துட்டு வரணுமா?” என்று அனு கேட்க, “வேறு எதுவும் தேவையில்லை. பக்கத்து வீட்ல உங்க பெரியம்மாவைப் பார்த்து பேசிட்டு வா” என்றார் அமுதா.ஆனந்தனுக்கு அருப்புக்கோட்டையில் இருக்கும் ஒரு தனியார் மில்லில், ‘நூற்புச் சுற்றுகளைச் கழியா சுற்றிக் கொடுக்கும்’ புதிய ஆர்டர் ஒன்று கிடைத்திருந்தது. அது பற்றிய விவரங்களை மேனேஜரிடம் பேசிவிட்டு வருவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான்.அனு, அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருந்தாள். அங்கே அவளைக் கண்ட ஆனந்தன், அவளருகே வண்டியை நிறுத்தினான்.”எங்கே அனு கிளம்பியாச்சு?” என்று அவன் கேட்க,”இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டுருக்கேன். எங்க ஊருக்குப் போயிட்டு சில திங்க்ஸ் எடுத்துட்டு வரலாம்னு கிளம்பினேன்” என்றாள் அனு.ஆனந்தனுக்கு அனுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல விருப்பம்தான். ஆனால், அவளிடம் கேட்டால் எங்கே தவறாக எண்ணிக் கொள்வாளோ என்ற யோசனை ஒருபுறம் ஓட, “நானும் அருப்புக்கோட்டைக்குத்தான் போறேன்” என்றான்.”அப்படியா! சரி, போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு அனு சிரிக்க,’என்ன இப்படி சொல்லிட்டாளே!’ என மனதுக்குள் யோசித்தான் ஆனந்தன்.திடீரென, “பஸ் போயிடுமோன்ற அவசரத்துல வண்டியை எடுத்துட்டு வந்துட்டேன். ஆனா வண்டியை எங்கே நிப்பாட்டுறதுன்னு தெரியலையே!” என்றான் நடிப்பாக.பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த இன்னொரு பயணி, “வண்டியை அப்படியே ஓரங்கட்டி சைடு லாக் பண்ணிட்டு போங்க தம்பி, யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க” என்றார் உதவிகரமாக.”இதுவும் நல்ல யோசனைதான்” என்றவன், பேருந்து நிறுத்தத்தின் அருகில் வண்டியை நிறுத்தி லாக் செய்துவிட்டு, அனுவோடு பேருந்தில் செல்லத் தயாரானான்.அனு அவனிடம், “டூவீலர்லயே அருப்புக்கோட்டைக்குப் போகலாமே, எதுக்காக பஸ் பிடிச்சுப் போகணும்னு நிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.ஆனந்தன் விளையாட்டாக, “அப்போ வாங்க, ரெண்டு பேரும் ஒண்ணாவே டூவீலர்ல போகலாம்” என்றான்.”விருதுநகர்ல இருந்து அருப்புக்கோட்டைக்கு பொம்பளைங்களுக்கு பஸ் ஃப்ரீயா போகுதே! அதோட பஸ்க்குள்ள நிழலா இருக்கும். அதனாலதான் பஸ்ஸிலேயே போயிடலாம்னு நினைக்கிறேன். நீங்க டூவீலர்ல போனா போக வேண்டிய இடத்துக்குச் சரியா போய்க்கலாம்னு சொன்னேன்” என்றாள் அனு.அதற்கு ஆனந்தன் பொறுப்பாக, “நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கூடிக்கிட்டே போகுது. எதுக்குங்க பத்து ரூபாய் பஸ் கட்டணத்துல முடியற விஷயத்துக்கு நூறு, நூற்றம்பது ரூபாய் பெட்ரோல் செலவு பண்ணணும்?” என்று சொல்லி முடிக்கவும், அருப்புக்கோட்டை செல்லும் பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது.இருவரும் பேருந்தில் ஏறிக் கொண்டனர். இரண்டு பேர் அமரும் இருக்கையில் அனு அமர, ஆனந்தனும் அவளோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான். இருவர் மனதிலும் எந்தவொரு சங்கடமும் தோன்றவில்லை; இயல்பாகவே அமர்ந்து கொண்டனர்.அனுவிற்கு நீண்ட நாட்களாக ஆனந்திடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்வியைக் கேட்க, இப்போது ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது போல் இருந்தது.பேருந்து சிறிது தூரம் சென்றதும் மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் அனு.”ஆனந்த், உங்களோட பிரண்ட் கார்த்திக் உங்களுக்காக ஒரு பொண்ணு பார்த்துட்டு வந்ததா சொன்னானே?”ஆனந்த் இயல்பாக, “அந்தப் பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டேன் அனு” என்றான்.அனு அதை அப்படியே விடுவதாயில்லை. “எதுக்காக வேண்டாம்னு சொன்னீங்க?””மனசுக்குப் பிடிக்கல, அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்.””பொண்ணைப் பார்க்காமலே, பேசாமலே மனசுக்குப் பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம் ஆனந்த்? வேற யாரையாவது லவ் பண்றீங்களா?”ஆனந்த் சிரித்தபடி, “இந்த வயசுக்கு மேல எனக்கு லவ் எல்லாம் செட் ஆகுமாங்க?” என்றான்.நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த அனு, “ஒரு பொண்ணைப் பார்க்காமலேயே பிடிக்கலைன்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?” என்றாள்.”இதுல என்னங்க தப்பு இருக்கு? என்னையும் கிட்டத்தட்ட நூறு பொண்ணுங்க பிடிக்கலைன்னு சொல்லி இருக்காங்க, அதுக்காக நான் என்ன வருத்தப்படவா செஞ்சேன்? நூத்துல ஒரு பொண்ணை நான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன், அது தப்புன்னு நீங்க எப்படி சொல்றீங்க?” என்றான் ஆனந்தன்.”ஆனந்த், நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல… விதவைப் பெண்கள் மறுமணம் கல்யாணத்துக்கு நிக்கிறது தப்புன்னு நினைக்கிறீங்களா? புருஷனை இழந்துட்டா காலமெல்லாம் சிங்கிளாவே இருக்கணும்னு உங்களோட மைண்ட் செட்ல வச்சிருக்கீங்களா?”இத்தனை நேரம் அனு தன்னை மனதில் நினைத்துக் கொண்டுதான் இதையெல்லாம் கேட்கிறாளோ என்று ஆனந்தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவள் கேட்ட இந்தக் கேள்வியில் இருந்து அவளது எண்ணம் என்னவென்று ஆனந்தனுக்கு இப்போது தெளிவாக விளங்கிவிட்டது!இப்போது வரை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பது போல அனுவைச் சுற்றி வந்த அவன் கண்கள், எதிர்ப்புறம் திரும்பிக் கொண்டன. ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்ட ஆனந்தன், “நான் விதவைகள் மறுமணம் செய்யுறது தப்புன்னு சொல்ல வரல அனு. என்னோட குடும்பச் சூழல் என்னன்னு உங்களுக்குத் தெரியுமோ என்னவோ… இருந்தாலும் உங்களுக்கு விளங்குற மாதிரி சொல்றேன்.என்னோட தம்பி மூளை வளர்ச்சி இல்லாதவன். அவன் இருக்குற வீட்ல எங்க பொண்ணு வாழ முடியாதுன்னு எல்லா பெண் வீட்டுக்காரங்களும் சொல்லிட்டாங்க. இப்போ இந்தப் பொண்ணு ஃபர்ஸ்ட் மேரேஜா இருந்திருந்தா, இதே காரணத்தைச் சொல்லி தைரியமா வேண்டாம்னு நிராகரிச்சிருக்கும். ஆனா இது செகண்ட் மேரேஜ்க்காக வெயிட் பண்றதால, ‘பரவாயில்லை’ன்னு சகிச்சு ஏத்துக்கப் போகுது.இது பொண்ணுக்கு மட்டும் இல்லைங்க… அவளோட அப்பா அம்மாவுக்கும் சேர்த்துதான் சொல்றேன். அவங்களும் ‘ஒரு கல்யாணம் ஆனால் போதும்’ங்கிற நிலையில என்னோட வீட்டுச் சூழலை ஏத்துக்கிறாங்க. நிஜமான சகிப்புத்தன்மையோட எங்க வீட்டுக்கு மருமகளா வர அந்தப் பொண்ணு நிச்சயமா ஆசைப்பட்டிருக்காது. அதனாலதான் எனக்குப் பிடிக்காத மாதிரி வேண்டாம்னு சொல்லி அனுப்பி வச்சேன்” என்றான்.அனுவுக்கு அவன் சொல்வதும் நியாயம்தான் என்று தோன்றியது. இதே பெண்ணை முதல் முறை அவனுக்குக் கட்டிக் கொடுக்க நிச்சயம் சம்மதித்திருக்க மாட்டார்கள் என்று அவள் மனதிலும் உரைத்தது. “சரிங்க, அவங்க கட்டாயத்துக்காகத்தான் ஏத்துக்குறாங்கன்னே இருக்கட்டும்… நமக்குத் தேவை பொண்ணுதானே? அதையெல்லாம் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?” என்றாள் மலர்ச்சியோடு.ஆனந்தன், “கல்யாணம் செஞ்சுக்கிற வரைக்கும் ‘சரி’ன்னு கல்யாணம் பண்ணிப்பாங்க அனு. தாலி கழுத்துல ஏறிடுச்சுங்கிற தைரியத்துல, ‘கட்டாயம் தனிக் குடித்தனம் போய் ஆகணும்’னு அடம்பிடிப்பாங்க. அந்நேரம் என்னால அவங்களோட போக முடியாதுங்க. வீட்ல என் தங்கச்சி இப்போ இருக்குறா… நாளைக்கு அவளோட புருஷன் ஊருக்கு வந்துட்டாருன்னு வச்சுக்கோங்க, அவரோட போயிடுவா. அப்புறம் நானும் எங்க அம்மாவும் தான் அவனைப் பார்த்துக்கணும். அந்த நிலையில என்னையும் ஒரு பொண்ணு கூட்டிட்டுப் போயிட்டா, எங்க அம்மா ஒத்தையில அந்த 30 வயசு குழந்தையை எப்படி பார்த்துக்க முடியும்? சுயநலம்னு வரும்போது யாரும் என் தம்பியைப் பத்தியோ என் அம்மா படும் கஷ்டத்தைப் பத்தியோ யோசிக்க மாட்டாங்க. அதுக்காக அவங்களை திருப்திப்படுத்துறதுக்காக நானும் போய்விட முடியாது” என்று சொல்லி மௌனமானான்.”ஆனா இதெல்லாம் உங்களோட கற்பனைங்க! நீங்க நேர்ல போய் பார்த்து, நிஜமாவே அவங்களுக்கு உங்க வீட்ல வாழச் சம்மதமான்னு கேட்டிருக்கலாம்… இப்படியே யோசிச்சுட்டு இருந்தா எப்பதான் கல்யாணம் பண்றதா உத்தேசம்?””கல்யாணம் நடக்கணும்னு விதி இருந்தா நடக்கட்டும், இல்லாட்டி நான் எப்போதும் போல இருந்துட்டுப் போறேன்.””அச்சச்சோ! அப்படியெல்லாம் பேசாதீங்க, கண்டிப்பா கல்யாணம் நடக்கும். ஆனா நீங்க கொஞ்சம் உங்களோட எதிர்பார்ப்பைக் குறைச்சுக்கணும்.””என்னோட எதிர்பார்ப்பு… பொண்ணு அழகா இருக்கணும், அறிவா இருக்கணும், சொத்து சுகம் இருக்கணும்னு எல்லாம் கேட்கலையே! எங்க வீட்டுல எங்களோட நல்லபடியா ஒத்துப் போகணும்… அதுக்கு ஏத்த பொண்ணு வந்தா கட்டிக்கப் போறேன்” என்றான்.’ஐயோ! ஏன் இந்த பேச்சை எடுத்தோம்?’ என்று மனதிற்குள் வருந்தினாள் அனு. “இதுக்கெல்லாம் நல்ல தீர்வு என்ன தெரியுமா? நீங்க யாரையாவது லவ் பண்ணனும். லவ் பண்ணுனா…. லவ்வர் சொல்றதை எப்படி மீற முடியும்? அதனால அவங்க நீங்க சொல்றதை ஏத்துப்பாங்க” என்றாள்.இப்போது ஆனந்தன் குறும்புத்தனமாக, “சும்மா பார்க்கிற பொண்ணையெல்லாம் காதலிச்சிட முடியுமாங்க? குறைந்தபட்சம் உங்கள மாதிரியாவது இருக்க வேண்டாமா?” என்றான்.இப்போது பேச்சு எங்கோ திசை மாறிப்போகிறது என்று தனக்குள்ளே வருந்தினாள் அனு.அவளுக்கு ஆனந்தனின் மனநிலை என்ன என்பது கிட்டத்தட்ட புரிந்துவிட்டது. பதில் பேசாமல் வந்தால், அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டதாகி விடுமே என்று எண்ணியவள், “நானும் ஒரு விதவையா இருந்தா நீங்க இந்த கேள்வியைக் கேட்டிருப்பீங்களா? நீங்கள் சொன்ன அதே கட்டாயம் எனக்கும் பொருந்தும்தானே” என்றாள்.ஆனந்தன் பதறிப்போய், “நான் சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் அனு… அதுக்காக என்னென்னவோ யோசிச்சு மனசைக் குழப்பிக்கிட்டு இருக்கீங்க! விடுங்க… அதுக்காக நீங்க விதவை அது இதுன்னு பேசுறது நல்லா இல்லை” என்று அவள் பேச்சை மறுத்துரைத்தான்.இதற்கு மேல் பேசக்கூடாது என்று தீர்மானித்து, அனு வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆனந்தனும் அனுவும் இறங்கிக் கொண்டனர். அனு பக்கத்தில் ஆட்டோ பிடித்துத் தன் வீட்டிற்குச் சென்றாள். அதேபோல ஆனந்தனும் ஆட்டோ பிடித்துத் தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றான்.ஆனந்த் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் பேருந்தில் புறப்பட்டு விருதுநகர் வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் கண்களை மூடியபடி, ‘அனுவை நாம் எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம்! இரக்க குணம் உள்ளவள், நல்ல குணவதி, நல்ல விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறாள். இருப்பினும் அவளுக்கும் நம்முடைய குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லையா? ‘நானும் விதவையாக இருந்தால் என்னைக் கேட்பீர்களா?’ என்று சொல்லிவிட்டாளே! ‘நான் விதவை என்ற காரணத்திற்காக ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறேன்’ என்று நினைத்திருக்கிறாளே… என்னுடைய மனது அவளுக்கு புரியாமல் விகாரமாகத் தெரிந்திருக்கிறதே…’ என்று யோசித்துக் கொண்டே வந்தான்.