மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கதிர்வேலன் நேரே சென்றது பாண்டியனின் இல்லத்திற்கு தான்.
கதிர்வேலனை பார்த்து முல்லை பேசிய வார்த்தைகளை அச்சு பிசராமல் நாகராஜன் ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு இருக்க, தன் அறையில் அமர்ந்து இருந்த பாண்டியனும் அதை கேட்க நேர்ந்தது.
“அந்த ரவா லட்டுக்கு எவ்ளோ திமிர் பார்த்திங்களா ம்மா” என்று கதிர்வேலன் கோபத்துடன் கர்ஜிக்க,
“அதற்கு பெயர் திமிர் இல்ல வாத்தி. அது அவளோட சுயமரியாதை” என்றாள் ரோஜா.
“என்ன நீங்க. அவ நம்ம யாருமே அவளுக்கு வேணான்னு சொல்லி என்னை அந்த கேசவன் எதிர்ல கேவலடுத்தி அனுப்பி இருக்கா, நீங்க என்ன அவளுக்கு பரிந்து பேசுறீங்க” என்று கதிர்வேலன் மேலும் கோவப்பட,
“எல்லாம் என்னால தான்” என்று புல்ம்ப ஆரம்பித்தான் ஜீவா.
ஆயிரம் காரணம் சொன்னாலும், முல்லை பேசியதை கதிர்வேலனால் ஏற்று கொள்ள முடியாத நிலையில், “இனி அந்த ரவா லட்டு முகத்தை கூட நான் பார்க்க மாட்டேன்” என்று வாய் சவடால் உதிர்த்தான்.
முல்லையின் தரப்பில் இருந்து யோசித்த பாண்டியனுக்கு. அவள் சொன்னது தான் சரி என்ற எண்ணம் தோன்ற. அதே தருணம் பாண்டியனின் கைபேசிக்கு அவர் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு செண்முகம். ஓ. ரொம்ப நல்லது பா. இன்னும் ஒரு மணி நேரத்துல நாங்க கோவிலில் இருப்போம்” என்ற பாண்டியன் கைபேசி இணைப்பை துண்டித்தவாறு.
“கதிரு.“ என்று தன் இளைய மகனை அழைத்தார்.
தன் தந்தையின் குரலை கேட்டு அறைக்குள் நுழைந்த ரோஜா “என்னப்பா தண்ணி வேணுமா” என்று கேட்க,
“இல்லமா. மனசே சரியில்ல. வாயேன் கதிர் கூட கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்று பாண்டியன் சொல்ல, ரோஜா, பாண்டியன், கதிர் ஆகிய மூவரும் நாகராஜனுடன் காரில் கோவிலுக்கு சென்றார்கள்.
இவர்கள் அனைவரும் அம்மன் கோவிலுக்குள் நுழைந்து நெய் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிப்பட்டுக்கொண்டு இருக்க,
“அண்ணா.“ என்று அழைத்துக்கொண்டு பாண்டியனின் முன்னே நடுத்தர பெண்மணி ஒருவர் வந்து நின்றார்.
“என்னமா சரசு. நல்லா இருக்கியா” என்று பாண்டியன் விசாரிக்க.
“இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க. நம்ம பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” என்ற சரசு என்னும் சரஸ்வதி பாண்டியன் நண்பனின் மனைவி.
“இவ, இவ உங்க பொண்ணு ரோஜா தானே. நல்லா வளர்ந்துட்டாளே” என்ற சரஸ்வதியின் பார்வை கதிர்வேலன் மீது படர்ந்து.“இவன் வேலன், கதிர் வேலன் தானே. டேய் தம்பி கதிரு. எப்படி டா இருக்க” என்று பாண்டியனின் பிள்ளைகளை நலம் விசாரித்தார்.
“ம்மா. யார் இந்த டப்பா வாயு.“ என்று கதிர்வேலன் தன் தங்கையிடம் விசாரிக்க.“டேய் தம்பி. நான் தாண்டா சரசு அக்கா. என்ன என்னை மறந்துட்டியா” என்று கேட்க,
“இதுவரை மறந்து இருந்தா என்ன. இனி வருங்கால மாமியார் உன்னை கதிர் மறக்கவே மாட்டான்” என்று பாண்டியன் சொல்ல, “என்ன மாமியாரா?” என்று ரோஜா புரியாமல் கதிரை பார்த்தாள்.
“ஆமா மாமியார் தான். கதிருக்கு மட்டும் இல்லை உனக்கும் நான் மாமியார் தான். ஏன்னா நாங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க முடிவு பண்ணி இருக்கோம். என்ன அண்ணா. பசங்ககிட்ட எந்த விவரத்தையும் சொல்லலையா” என்று சரஸ்வதி கேட்க,
“நான் கிழித்த கோட்டை என் இரண்டு பிள்ளைகளும் தாண்ட மாட்டாங்க. சரி உன் பையனும் பொண்ணும் எங்கே” என்று பாண்டியன் கேட்க,
“லக்ஷ்மி, ரவி, இங்க பாருங்க பாண்டியன் மாமா வந்து இருக்காரு” என்றாள் சரஸ்வதி.
தன் தந்தை தங்களுக்கு தெரியாமல் என்ன செய்கிறார் என்று ரோஜாவும் கதிர்வேலனும் யூகிப்பதற்கு முன்னதாக
30 வயது மதிக்கத்தக்க இளைஞனும் 32 வயது மதிக்கத்தக்க பெண்ணும் இவர்கள் கண்ணெதிரே வந்து நிற்க,
“என்னமா லக்ஷ்மி. எப்படி இருக்க?” என்று பாண்டியன் நலம் விசாரிக்க,
“அண்ணா. எல்லாரையும் போல இவளை நீங்களும் லட்சுமின்னு கூப்பிட்டால் கதிருக்கு எப்படி இவளை அடையாளம் தெரியும்,
அதனால தனலட்சுமின்னு வாய் நிறைய கூப்பிடுங்க” என்று சரஸ்வதி சொல்ல.
“வாத்தி. என்ன இது? இந்த தனத்தையா, உங்களுக்கு அப்பா பொண்ணு பார்த்து இருக்காரு” என்ற ரோஜாவின் கேள்வியில் கதிர்வேலனின் இரண்டு கண்களும் பிதுங்கி தரையில் வந்து விழாத குறையாக இருந்தது.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கதிர்வேலன் யூகிக்கும் முன்னே தன லட்சுமி என்கிற பெண் இவர்கள் முன்னே வந்து நின்றாள்.
“என்னமா தனா எப்படி இருக்க?” என்று பாண்டியன் விசாரிக்க,
“நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க, ரோஜா நீ எப்படி இருக்க” என்ற பெண்ணின் பார்வை கதிர்வேலனை பார்த்து மரியாதை நியமித்தமாக புன்னகை பூத்தது.
“சரி சரி. இங்கேயே நின்னு பேச வேண்டாம்ம். வாங்க அப்படி ஓரமா போய் உக்காந்து பேசலாம்” என்ற பாண்டியணை தொடர்ந்து அனைவரும் கோவில் மண்டபத்தில் சென்று அமர்ந்தார்கள்.
தன் தந்தையின் செயலில் கதிர்வேலனுக்கு எரிச்சல் ஏற்பட்டாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் இல்லை என்ற காரணத்தால், “ம்மா. இங்க என்ன நடக்குது?” என்று தன் தங்கையிடம் கேட்டார் கதிர்.
“என்ன கேட்டா. எனக்கு மட்டும் என்ன தெரியும் வாத்தி. இருங்க ஐயனே சொல்லட்டும்” என்று ரோஜா சொல்ல,
தனமும் அவரின் தம்பி ரவியும் அருகருகே அமர்ந்து இருந்தவர்களின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது.
“அப்புறம், மாப்புள்ள எப்ப வெளிநாட்டுக்கு போக போறாரு” என்று இவர்களின் மௌனத்தை உடைக்கும் விதமாக பாண்டியன் பேச ஆரம்பிக்க,
“கல்யாணம் முடிந்த கையோட ரோஜாவை அழைச்சிட்டு கிளம்பிடுவான்” என்றார் சரஸ்வதி.
“ம்மா. அந்த லேப்டாப் வாயி என்ன பேசுது. யாருக்கு யாரோட கல்யாணம்” என்று கதிர்வேலன் மேலும் கோவம் கொள்ள,
“கதிரு, நம்ம ரோஜாவை நான் ரவிக்கு தான் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்றார் பாண்டியன்.
“என்ன ப்பா நீங்க. திடுதிப்புனு கல்யாணம் அது இதுன்னு சொல்றிங்க” என்று கதிர் கேட்க,
“நான் உசுரோட இருக்கும் போது என் பொண்ணு பையன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசை படுறேன்” என்றார் பாண்டியன்,
தன் தந்தையின் பயத்தை அறிந்து இருந்த கதிர், “அப்பா. நீங்க சொல்லுறது எனக்கு புரியுது. ஆனா.“ என்று கதிர் பேசும் முன்னே,
“இங்க பாரு கதிர். அப்பா எது பண்ணாலும் அது உங்க நல்லதுக்கா தான் இருக்கும். அதனால தான் சரஸ்வதி வீட்டுல நான் உங்க ரெண்டு பேருக்கும் சம்மதம் பேசி இருக்கேன்” என்றார் பாண்டியன்.
ஒரு நொடி கதிர் தன் எதிரே அமர்ந்து இருக்கும் தனாவை அழுத்தமாக பார்த்தவன், அப்படியே தன் பார்வையை சரஸ்வதி பக்கம் திருப்ப.
“என்னடா தம்பி. என் பொண்ணை சைட் அடிக்கிறியா” என்று வாயெல்லாம் பல்லாக கேட்டு சிரித்தார் சரஸ்வதி.
“ஐயோ. சும்மாவே இந்த சரசு என்கிட்ட சரசம் பண்ணும். இப்போ அப்பா வேற மொத்தமா என்கிட்ட இத கோத்து விட பாக்குறாரே” என்று கதிர்வேலன் தனக்குள் முணங்கி இருக்க,
“அண்ணா. ரவியும் ரோஜாவும் தனியா பேசிட்டு வரட்டுமே” என்றார் சரிஸ்வதி.
“ஹாங். தாராளமா. ஏன். தனா கூட போய் கதிரோட பேசிட்டு வரட்டும்” என்று பாண்டியன் சொல்ல,
வேறு வழியே இல்லாமல்
கதிர் தனாவோடும்,
ரோஜா ரவியோடும் தனியே சென்று
பேச ஆரம்பித்தார்கள்.
கோவிலின் வில்வ மரத்தின் கீழே ரோஜா நின்று இருக்க, “எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். உனக்கு என்னை பிடித்து இருக்கா” என்று வினாவினான் ரவி.
“என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியுமுன்னு நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றிங்க” என்று ரோஜா கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரிய தேவை இல்லை, எனக்கு என் அக்கானா உயிர். அவருக்கு கல்யாணம் ஆகணும்னா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று ரவி சொல்ல. மேலும் குழம்பி போன ரோஜா,
“என்ன சொல்றிங்க. தெளிவா பேசுங்க. உங்க அக்கா கல்யாணத்துக்கும் என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பதருக்கும் என்ன சம்மந்தம்?” என்று ரோஜா கேட்டாள்.
“உன்னை மாதிரி தான் என் அக்காவும்”என்ற ரவியை புரியாமல் ரோஜா பார்க்க,
“என்ன புரியலையா. என் அக்காவுக்கும் சாமி வரும்.
அதனால என் அக்காவுக்கு இது நாள் வரை கல்யாணம் தள்ளி போய்கிட்டே இருந்துச்சு, ஆனா பாண்டியன் மாமாவோட நண்பன் சண்முகம் தான் உன்னை பற்றி அம்மாகிட்ட சொன்னாங்க. அதனால தான் அம்மாவும் உங்க பையனுக்கு என் மகளை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னா. என் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான்னு பாண்டியன் மாமா வாக்குறுதி கொடுத்து இருக்காரு” என்றான் ரவி.
முழுவதுமாக ரவி பேசிய வார்த்தையை கேட்ட ரோஜாவிற்க்கு தனக்காக தன் அண்ணனின் வாழ்க்கையை அப்பா பணயம் வைக்க நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்டாள்.
“என்ன. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் தானே” என்ற ரவியை அழுத்தமாக பார்த்த ரோஜா,
“உடனே எல்லாம் சொல்ல முடியாது. நான் வீட்டுக்கு போய் யோசிச்சு அப்பாகிட்ட என் பதிலை சொல்லுறேன்” என்ற ரோஜா வேகமாக அங்கிருந்து கதிர் வேலன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
கோவிலின் படிக்கட்டில் கதிர்வேலன் அமைதியாக அமர்ந்து இருக்க,
“நான் உன்ன விட முணு வயசு பெரிய பொண்ணு கதிர்” என்று தன் மௌனத்தை உடைத்தார் தனம்,
“அப்போ இனி நான் உன்னை அக்கானு கூப்பிடவா.?”என சட்டென்று கதிர்வேலன் கேட்டதும் தனா சத்தமாக சிரித்தாள்.
“இப்போ எதுக்கு சிரிக்கிற” என்று கதிர் கடுப்புடன் கேட்க,
“நமக்குள்ள வயசு வித்தியாசம் இருக்கு, இந்த கல்யாணம் வேணாமுன்னு நான் என் அம்மாகிட்ட எவ்வளவோ போராடி பார்த்துட்டேன் கதிர், ஆனா எப்போதும் போலவே அவங்க நினைக்கிறத நடத்தி தீரணும்னு முடிவோடு இருக்காங்க” என்று தனா சொன்னாள்.
“அப்போ எதுக்காக இந்த ஏற்பாடு” என்று கதிர்வேலன் கேட்க, “வாத்தி. வாங்க நம்ம கிளம்பலாம்” என்றாள் ரோஜா.
தன் தங்கையின் கோவமான முகத்தை பார்த்து ஏதும் புரியாமல், “என்னாச்சு ம்மா.“ என்று கதிர்வேலன் கேட்க,
“நீங்க வாங்க நம்ம கிளம்பலாம், தனா. எங்க ஐயன் உங்க அம்மாவுக்கு போன் பண்ணி பேசுவாரு, இப்போ நாங்க கிளம்புறோம்” என்ற ரோஜா தன் அண்ணனின் கையை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல, தனத்துக்கோ ரோஜாவின் நடவடிக்கையில் அவளின் முகம் இறுக்கமாக மாறியது.
“அப்பா. நம்ம கிளம்பலாமா” என்று சரஸ்வதியும் பாண்டியனும் பேசிக்கொண்டு இருந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்து வந்த படி ரோஜா கேட்க,
“என்னமா ரோஜா என் பையன்கிட்ட பேசிட்டியா?” என்ற சரஸ்வதி,
“கதிரு. தனாக்கிட்ட பேசுனியா” என்று கேட்டார்.
“ஆன்ட்டி. எங்க அப்பா எங்ககிட்ட சொல்லாம இந்த சந்திப்பை ஏற்பாடு பண்ணிட்டாரு, இப்போதைக்கு நாங்க என்ன கருத்து சொன்னாலும் அதை நீங்க எங்க சம்மதமா எடுத்துப்பிங்க, அதனால நாங்க வீட்டுக்கு போய் பேசிட்டு அப்புறம் எங்க அப்பாவை உங்களுக்கு போன் பண்ண சொல்லுறோம், இப்போ நாங்க கிளம்புறோம்” என்ற ரோஜா வேகமாக கோவிலில் இருந்து வெளியேறி இருந்தாள்.
தன் மகளின் செயலில் முகம் மாறிய பாண்டியன், “சரி சரசு. நான் வீட்டுக்கு போய் போன் பண்ணுறேன், பசங்ககிட்ட சொல்லிடு” என்றவாறு அவரும் கோவிலில் இருந்து வெளியேற,
“இப்போ உனக்கு சந்தோசமா. உன் பிடிவாததுக்கு இன்னும் நான் எவ்வளவு அசிங்க படனும்ன்னு தெரியல” என்ற தனா. தன் தம்பியுடன் கோவிலில் இருந்து வெளியே செல்ல,
“அடி போடி. நான் எப்பாடு பட்டாவது உங்க கல்யாணத்தை முடித்து வைப்பேன்” என்று சபதம் எடுத்தார் சரஸ்வதி.
கோவிலில் இருந்து வெளியேறிய பாண்டியனின் குடும்பத்தை அழைத்து கொண்டு நாகராஜன் தன் காரை பொறுமையாக விரட்டிக்கொண்டு இருக்க,
“என்ன அப்பா. ஏன் இப்படி பண்றீங்க” என்று கேட்டாள் ரோஜா.
“என்ன ரோஜா. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது தப்பா” என்று பாண்டியன் கேட்க,
“என் கல்யாணத்துக்காக ஏன் தனாவை வாத்திக்கு கட்டி வைக்க நினைக்கிறீங்க” என்று கேட்டாள் ரோஜா.
“எல்லாம் காரணமா தான் ரோஜா.“ என்று பாண்டியன் சொல்ல,
“என்ன பொல்லாத காரணம்” என்று சற்று கடுமையாக கேட்டாள் ரோஜா.
“உனக்கு இதுவரை 20க்கு மேற்பட்ட மாப்பிளையை பார்த்துட்டேன், ஆனா எல்லோரும் சாமி ஆடுற பெண்ணை நாங்க எங்க குடும்பத்துக்கு எடுத்துக்க மாட்டோமுன்னு தான் சொன்னாங்க, ஆனா சரஸ்வதி அப்படி இல்ல, ஏன்னாகிட்டத்தட்ட உன்னோட நிலைமையில தான் தனலட்சுமியும் இருக்குறதால, அந்த பொண்ணு கல்யாணமும் இதுவரை நடக்காம இருக்கு, அதான் நானும் சரசும் பேசி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்று பாண்டியன் சொன்னதும் தான், தன் தந்தையின் மனநிலை கதிருக்கு புரிய வந்தது.
“சரி நீங்க சொல்லுறது எனக்கு புரியுது. ஆனா அதுக்காக மூணு வயசு பெரிய பெண்ணை நீங்க நம்ம வாத்திக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களா” என்று ரோஜா கேட்க,
“அதனால என்ன. எனக்கும் உங்க அம்மாவுக்கும் ரெண்டு வயசு வித்தியாசம், ஏன் நாங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழலையா” என்று கேட்டார் பாண்டியன்.
“இல்ல பா. எனக்காக நீங்க வாத்தி வாழ்க்கையை அடமானம் வைக்கிறது எனக்கு பிடிக்கல, நீங்களே போன் பண்ணி சரசு ஆன்ட்டிக்கிட்ட இந்த கல்யாணத்துல என் பிள்ளைய்ங்களுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிடுங்க” என்று ரோஜா சொல்லவும், நாகராஜன் விரட்டிய காரை பாண்டியன் வீட்டு வாசலில் நிறுத்தவும் சரியாக இருந்தது.
ரோஜா கோவமாக காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல, “என்ன கதிரு உன் தங்கச்சி நான் பேச வந்ததை கேட்காம இப்படி கோவபடுறா. நீயே சொல்லு, நம்ம ரோஜாவுக்கு நம்ம எத்தனை இடத்துல மாப்பிளை பார்த்து அது தட்டி போய் இருக்கு, இந்த இடம் ரொம்ப நல்ல இடமுன்னு எனக்கு தோணுது கதிரு. அதுவும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதால கண்டிப்பா நம்ம வீட்டு பெண்ணை அவங்க நல்லா தான் பார்த்துப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்றார் பாண்டியன்.
இங்கே இத்தனை பேச்சும் நடந்தும் கதிர்வேலன் அமைதியாகவே இருக்க,
“என்னப்பா கதிர். உன் தங்கச்சி வழக்கைக்காக உன் வாழ்க்கையை வீணாக்க போறேன்னு நீ நினைக்கறியா” என்று பாண்டியன் கேட்க,
ஒரு நொடி தன் தந்தையை அடிபட்ட பார்வை பார்த்த கதிர்வேலன்,
“உங்களுக்கு எது சரின்னு படுதோ அதையே பண்ணுங்க அப்பா. நமக்கு நம்ம அம்மா நல்லா இருக்கணும்” என்று தன் தங்கையின் வாழ்க்கைக்காக தனாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார் கதிர்வேலன்.
“தெரியும் கதிர். ரோஜாவிற்காக நீ கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவன்னு எனக்கு தெரியும்” என்ற பாண்டியன் நிம்மதி பெருமுச்சுடன் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் செல்ல,
மீண்டும் கதிர்வேலன் மனதில் முல்லை ஹாஸ்பிடலில் வைத்து அவனை எடுத்தேரிந்து பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவுக்கு வந்தது.
இதே தருணம் கதிர்வேலனுக்கு கோவம் வரும்ப்படி பேசியதை எண்ணி முல்லை தன்னையே நொந்து கொண்டவள். மீண்டும் மீண்டும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை என்று கதிர் சொன்னது தான் அவளின் நினைவுக்கு வந்த வண்ணமாகாவே இருந்தது.
ஆனால் கேசவனுக்கோ. முல்லையின் இந்த திடிர் மாற்றம் நிம்மதியை கொடுக்க.“கதிரு. இனி தான் டா உனக்கு இருக்கு” என்று அவன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
இரவு 8மணி அளவில் முல்லை தலையில் கை வைத்தபடி மருத்துவமனையில் உள்ள காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து இருக்க, “முருகன் கண் விழிச்சிட்டாரு. நீங்க போய் பார்க்கலாம்” என்றார் செவிலியர்.
இத்தனை கலவரத்திலும் தன் தந்தையின் சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்ததை எண்ணி உள்ளுற முல்லை மகிழ்ச்சி அடைய.
“முல்லை வா உன் அப்பாவை போய் பார்க்கலாம்” என்று அழைத்தாள் பார்வதி.
முல்லையும் பார்வதியும் சிகிச்சை அறைக்குள் நுழைய. கேசவன் அச்சம் கொண்டவனாக வாசலில் நின்று இருந்தான்.
முகத்தில் செயற்கை சுவாசத்தின் உதவியோடு முருகன் கண் விழித்து பார்க்க, தன் தந்தையை அந்த நிலையில் பார்த்த முல்லையின் விழிகள் கண்ணீரை தத்தெடுத்துக் கொண்டது.
“என்னங்க.“ என்று முருகன் அருகே ஈர விழிகளுடன் பார்வதி செல்ல. தூரமாக நின்று இருக்கும் முல்லையை இமைகள் அசைத்து தன் அருகே அழைத்தார் முருகன்.
தன் தந்தையின் அசைவை அறிந்து முல்லை முருகன் அருகே செல்ல, அவரின் மாஸ்க்கை எடுத்தப்படி “ப, பயந்துட்டியா” என்று கேட்டார் முருகன்.
முருகனின் கேள்வியில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை இழுத்து பிடித்து இருந்த முல்லையை பார்த்து, “உன்னை அனாதையா விட்டுட்டு அப்பா போக மாட்டேன்” என்றவரின் சொல்லில்,
“அப்பா…“ என்று கதறி அழுதாள் முல்லை.
தன் மகளின் கண்ணீரை பார்த்து முருகனின் விழிகளும் ஈரமாக, “அம்மாடி முல்லை. அழாத, உன் அப்பாவுக்கு இனி ஒன்னும் ஆகாது” என்றார் பார்வதி.
நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்வதியும் முருகனும் இதுவரை தன்னிடம் இன்முகத்துடன் பேசி இல்லாத நிலையில். முல்லை இப்போது இருக்கும் சூழ்நிலையில் இவர்களின் அன்பான வார்த்தை அவளுக்கு அனுசரணையாக இருந்தது.
பார்வதி நல்ல மனம் கொண்டவர். முருகன் தான் பார்வதியை இதுநாள் வரை முல்லைக்கு நீ தாயாக நடந்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை புகட்டாமல் இருந்து உள்ளார்.
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பார்வதியின் புத்தி எங்கே போனது என்ற கேள்விக்கு பதில். .
ஆதியில் இருந்தே மாற்றான் பெண்ணுக்கு பிறந்த பிள்ளையை நாம் ஒரு அடி தள்ளி வைத்து தான் வளர்க்க வேண்டும் என்று பார்வதியின் வீட்டில் சொல்லிக் கொடுத்த தவறான அறிவுரையாக கூட இருக்கலாம்.
ஆனால் ஏனோ இன்று காலை கேசவன் முருகனிடம் நடந்துக்கொண்டதை நினைத்து பார்வதிக்கு முல்லை மீது இரக்கம் வந்து இருக்க, இந்த இரக்கத்தால் யாருக்கு என்ன பாதகம், யாருக்கு என்ன சாதகம் என்று இறைவன் ஒருவனே அறிந்து இருந்தான்.
தன் கணவனின் சோகமான முகத்தை பார்த்து, “என்னங்க. வலி அதிகமா இருக்கா.“ என்று பார்வதி கேட்க, “ம். ஆமா ரொம்ப வலிக்குது” என்றார் முருகன்.
“அப்பா. நீங்க அதிகம் பேசாதீங்க. போக போக வலி குறையும்” என்று முல்லை சொல்ல,
“ம். நான் நல்லா தான் இருக்கேன். நீயும் உன் சித்தியும் போய் சாப்பிடுங்க” என்றார் முருகன்.
“இருக்கட்டும் அப்பா. நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று முல்லை சொல்ல,
“அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. கிளம்புங்க” என்ற செவிலியரின் குரலில் முல்லையும் பார்வதியும் சிகிச்சை அறையில் இருந்து வெளியேற. கலங்கிய விழிகளுடன் முல்லை நடந்து செல்வதை பார்த்து முருகனின் மனதில் பாரம் கூடி போனது.