Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 26

CHAPTER 26

நல்லை – 26

By Roja Roslin · October 29, 2026

0

கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்து முருகன் இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து

வெளியே வந்த மருத்துவர்,

“பெரியவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருக்கு, அவருக்கு உடனடியா ஆப்ரேஷன் பண்ணனும், ஆனா அவர் ஹெல்த் இருக்கிற கண்டிஷனுக்கு மாத்திரை மருந்து கொடுத்து சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வந்ததுக்குப் பிறகுதான் ஆபரேஷன் செய்ய முடியும்” என்று மருத்துவர் சொல்ல,

தாயை இழந்த முல்லைக்கு தன் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை எனினும், பேருக்காவது தந்தை என்று ஒருவர் இருக்கிறாரே என்ற நிம்மதியும் இந்த நொடி காணாமல் போனது.

“டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் புருஷனை காப்பாத்துங்க” என்று பார்வதி அந்த இடத்தில் முருகனின் உற்ற துணைவியாக தன் கணவனுக்காக மன்றாட.

தன் வாழ்வில் என்னதான் நடக்கிறது என்று தனக்கே புரியாத நிலையில் முல்லை பிரம்மை பிடித்ததை போல உறைந்து போய் நின்று இருந்தாள்.

“டாக்டர் ஆப்ரேஷன் பண்ணா தான் மாமாவை குணப்படுத்த முடியுமா” என்று கேசவன் கேட்க,

“ஆமா சார். கண்டிப்பா ஆப்ரேஷன் பண்ணி தான் ஆகணும். அவரோட பொண்டாட்டி இவங்க தானே, இவங்ககிட்ட ஆப்ரேஷன் ஃபார்ம்ல கையெழுத்து போட சொல்லுங்க, அப்படியே அவரோட பொண்ணுகிட்டயும் கையெழுத்து வாங்குங்க” என்று செவிலியரிடம் தெரிவித்த மருத்துவர்,

“முருகனுக்கு சுகர் கொறஞ்சதும் ஆப்ரேஷன் பண்ணிடலாம். பயப்படாதீங்க, என்று பார்வதி முல்லைக்கு தைரியம் சொன்ன விதமாக அங்கிருந்து சென்றார்.

“ஐயோ. என் புருஷன் ஐயனார் மாதிரி இருந்தாரே. என் புருஷனை இப்படி பண்ணிட்டியே டா பாவி” என்று தன் தம்பியை பார்வதி கடிந்து கொள்ள,

“அக்கா. நான் ஒன்னும் மாமாவை வேணும்னே இப்படி பண்ணல. இது எதார்த்தமா நடந்தது தான், நீ இந்த பிரச்சனையை பெருசாக்காத. ஒழுங்கா அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் அவர் கூட நிம்மதியா வாழற வழிய பாரு. அத விட்டுட்டு நாலு பேர் எதிர்ல இந்த மாதிரி கத்திக்கிட்டு இருந்தேனா இன்னைக்கு நைட்டே உன் புருஷன் கதையை முடிச்சிடுவேன்” என்ற கேசவன்,

தன்னையே மிரட்டுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் பார்வதி தன் தம்பியின் உண்மையான முகத்தை பார்த்து வாயடைத்து தான் போனார்.

தன் தந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து விட வேண்டும் என்று முல்லை அழுது அழுது ஓய்ந்தவள்,

அன்னம் தண்ணீர் ஆகாரம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் கடவுளின் சிலையின் முன்னே மண்டியிட்டு அமர்ந்திருக்க.

“அக்கா. மாமா ஆபரேஷன்க்கு நான் வீட்டுக்கு போய் பணம் எடுத்துட்டு வரேன், நான் வரதுக்குள்ள இவளோ, நீயோ யார்கிட்டயாவது எதாவது உளறி வச்சிங்க, அப்புறம் இங்க நடக்குறதே வேற” என்ற கேசவன் வேகமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தான்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த நிலையில். கேசவன் மீண்டும் மருத்துவ மனைக்குள் நுழைந்தவன், முருகனின் அறுவை சிகிச்சைக்காக பணத்தை கட்டியதும்,

முருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பிக்க, முல்லையும் பார்வதியும் உலகத்தில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டியப்படி சிகிச்சை அறையின் வாசலில் தவிப்புடன் நின்று இருந்தார்கள்.

இதே தருணம். குன்னக்குடியில் உள்ள பாண்டியனின் வீட்டில்.

கதிர்வேலன் மேசையில் அமர்ந்து இருந்தவன் எண்ணம் முழுதும் முல்லையை பற்றியே நினைவுகளில் நிறைந்து இருக்க,

“என்ன வாத்தி. கைக்கு வந்த வாழ்க்கையை தவற விட்டோம்ன்னு கவலையா இருக்கீங்களா” என்று கேட்டாள் ரோஜா.

“ரவா லட்டு நம்ம வீட்டுக்கு மருமகளா வரலைனா கூட. அவ கட்டிக்கிட்டு போற இடம் நல்ல இடமா இருக்கனும்” என்று கதிர்வேலன் சொல்ல,

“ஏன். அந்த கேசவனுக்கு தான் முல்லையை கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு உங்களுக்கு தெரியாதா” என்று கேட்டாள் ரோஜா.

“ம். தெரியும் அம்மா. ஆனா அந்த கேசவன் எல்லாம் ஒரு ஆளா. அவனை இவ கல்யாணம் பண்ணா கண்டிப்பா இவ சந்தோசமா இருக்க மாட்டா” என்று முல்லையின் எதிர் காலத்தை எண்ணி கவலைப்படும் கதிர்வேலனுக்கு தெரியவில்லை இவன் ஒருவனை தவிர முல்லையின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வேறொருவர் காரணமாக இருக்க முடியாது என்று.

“நம்ம என்ன பண்ண முடியும் வாத்தி. எப்படியாவது முல்லையை நம்ம கூடவே வச்சிக்க ஆசைப்பட்டு தான் நான் உங்ககிட்ட அவளை கட்டிக்க சம்மதம் கேட்டேன். ஆனா நீங்க தான் காரியத்தையே கெடுத்துட்டீங்க” என்ற ரோஜாவின் வார்த்தையில் உள்ள நியாயத்தை கதிர்வேலன் இன்று நினைத்து பார்த்து தன்னை தானே நொந்து கொண்டார்.

ரோஜாவும் கதிர்வேலனும் பேசிக்கொண்டு இருக்க, தன் அறையில் இருந்து பொறுமையாக எழுந்து வந்தார் பாண்டியன்.

“என்ன ப்பா எதாவது வேணுமா” என்ற கதிர்வேலன் தன் தந்தையின் கரங்களை பற்றி இருக்க,

“நான் ரூம்லயே இருக்குறது ஒரு மாதிரி இருக்கு கதிரு. அதான் கொஞ்ச நேரம் இப்படி உக்கார வந்தேன்” என்ற பாண்டியணை ஹாலில் உள்ள சோபாவில் அமர வைத்தார் கதிர்வேலன்.

காலை பத்து மணியை கடந்தும். நேற்று அடித்த மதுவின் ஆதிகத்தில் ஜீவா கண் விழிக்காமல் நாகராஜன் வீட்டிலேயே உறங்கி இருந்தான்.

நேற்று இரவு முழுவதும் ஜீவா தங்கள் அறைக்குள் வராதவணை நினைத்து மீனா அமைதியாக இருந்தாலும், கஸ்தூரி ஏழரையை இழுக்க தயாராக இருந்த நிலையில், “அண்ணா. இந்த அநியாயத்தை கொஞ்சம் கேளுங்க” என்று இழுவையாக ஆரம்பித்தார் கஸ்தூரி.

“அத்த. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அத மனசுல வச்சிக்கிட்டு நீங்க எதுவா இருந்தாலும் பேசுங்க” என்று ரோஜா கஸ்தூரியை கடிந்துகொள்ள,

“என்ன கஸ்தூரி. என்ன பிரச்சனை” என்று வினாவினார் பாண்டியன்.

கஸ்துரி அடிக்கும் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்து கஸ்தூரியின் கழுத்தை பிடிக்கும் அளவுக்கு எழுந்த கோவத்தை எல்லாம் கட்டுப் படுத்திகொண்டான் கதிர்வேலன்.

“என்ன அத்த என்னதான் பிரச்சனை உங்களுக்கு” என்று ரோஜா கேட்டது தான் தாமதம்.

“அண்ணா. உங்க பெரிய பையன் ஜீவா” என்று கஸ்தூரி ஆரம்பிக்கும் முன்னே,

“ஏய் நிறுத்து. எனக்கு எந்த பெரிய பையனும் இல்லை. எனக்கு இப்போ ஒரு பொண்ணு ஒரு பையன் அவ்ளோ தான்” என்று திட்டவட்டமாக சொன்னார் பாண்டியன்.

“அண்ணா. ஜீவா நைட்ல்லாம் வீட்டுக்கு வரல, அதுவும் இல்லாம அவன் குடிச்சிட்டு வந்து அந்த முல்லை பேரை தான் சொல்லிக்கிட்டு இருக்கான். எனக்கு என்னமோ இந்த ஜீவா முல்லையை” என்று கஸ்தூரி அராம்பிக்கும் முன்னே,

“நண்பா நண்பா.“ என்ற அழைப்போடு நாகராஜன் பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைய,

“என்ன நாகா ஏதாவது பிரச்சனையா” என்று ஏதும் புரியாமல் கேட்டார் கதிர்வேலன்.

நாகராஜனின் முகத்தில் தெரிந்த கலவரத்தை பார்த்து, “டேய் என்னடா என்ன பிரச்சனை” என்று மீண்டும் கதிர்வேலன் கேட்க,

“நண்பா. உன் மாமா. அதான் முல்லையோட அப்பாவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க” என்றவனின் வார்த்தையை கேட்டு அனைவரின் புருவமும் கேள்வியாய் உயர்ந்தது.

“என்னடா சொல்லுற. முருகன் மாமாவையா ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்காங்க” என்று ரோஜா கேட்க,

“ஏன். என்னவாம் அந்த ஆளுக்கு” என்று சின்ன பதற்றம் கூட இல்லாமல் விசாரித்தார் கஸ்தூரி.

“டேய். முருகன் மாமாவுக்கு என்னாச்சு” என்று கதிர்வேலன் கேட்க,

“நண்பா. இன்னைக்கு காலையில நான் முருகன் ஐயா வீட்டுல வேலை பார்க்குற இசக்கி பாட்டியை கோவில்ல பார்த்தேன், அவங்க தான் முருகன் ஐயா ஹாஸ்பிடல்ல இருக்குற விஷயத்தை சொன்னாங்க.

அது மட்டும் இல்ல. முருகன் ஐயாவை கீழ தள்ளி. இன்னைக்கு அவர் ஹாஸ்பிடல்ல இருக்க காரணம் அந்த கேசவன் தான்” என்ற நாகராஜனின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு ஏதும் புரியாமல் போனது.

“என்னடா சொல்ற. கேசவன் ஏன் அவனோட அக்கா கணவனை தள்ளி விடணும்” என்று புரியாமல் கதிர் கேட்கும் வேளையில் அடுப்பணையில் இருந்து மீனா வெளியே வர, அதே தருணம் ஜீவாவும் மது மயக்கம் தெளிந்து வீட்டுக்குள் நுழைந்தார்.

“நண்பா. பாவம் டா முல்லை. நேத்து நைட் அந்த கேசவன் அந்த புள்ளைகிட்ட தப்பா நடந்துக்க பாத்து இருக்கான். அப்போ முருகன் ஐயா அந்த கேசவனை அடி வெளுத்து வாங்கி இருக்காரு,

ஆனா அதுக்கு அந்த கேசவன் முல்லைக்கு பாம்பு கடித்து ஒரு நாள் நைட் நீயும் அந்த புள்ளையும் வெளிய தங்குனத சொல்லிக்காட்டி, அந்த புள்ளையை அசிங்க படுத்தி இருக்கான்.

அதுக்கும் முருகன் ஐயா கேசவனை கண்டமேனிக்கு திட்டி வீட்ல இருந்து வெளியே அனுப்பி இருக்காரு. அப்பவும் அடங்காத அந்த கேடு கெட்டவன்,

அந்த புள்ளையை சந்தேகப்பட்டு, இன்னைக்கு காலையில ஒரு நர்ஸை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து முல்லையை பரிசோதிக்க சொல்லி இருக்கான்.

இதனால கோவம் அடைந்த முருகன் ஐயா கேசவனை அடிக்க போகும்போது கேசவன் அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் பின்னந்தலையில் அடிபட்டு ஆபரேஷன் பண்ற அளவுக்கு இப்போ அங்க சூழ்நிலை இருக்கு” என்று முருகனின் இல்லத்தில் பணிபுரிந்த இசக்கி. நாகராஜனிடம் சொன்ன விஷயத்தை இப்போது நாகராஜன் பாண்டியனின் வீட்டில் சொல்லிக்கொண்டு இருக்க, கதிர்வேலனின் முகம் கோபத்தில் கொந்தளித்தது.

நாகராஜன் சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்த ஜீவா, “என் முல்லையை பத்தி பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்ல. இப்பவே போய் அந்த கேசவனை நான் என்ன பண்றேன் பாரு” என்று கோபமாக கைகளை முறுக்கிக்கொண்டு வாசலை நோக்கி செல்ல,

“போதும் நிறுத்துப்பா. நிறுத்து. கட்டண பொண்டாட்டி வீட்ல இருக்கும்போது, வேற ஒரு பொண்ணை முல்லை மல்லினு ஏலம் போட்டுக்கிட்டு இருக்கியே, நீ எல்லாம் மனுஷனா. . ஆமா. இப்போ அந்த கேசவன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு. இதோ இந்த கதிரும் முல்லையும் ஒரு நாள் நைட் வெளிய தங்கிட்டு தானே வந்தாங்க”

என்று கஸ்தூரி பேசி முடித்த அடுத்த நொடி கதிர்வேலனின் கரங்கள் கஸ்தூரியின் கழுத்தை நெருக்கி பிடித்து, அவரை இரண்டு அடி தன் கரங்களைக் கொண்டு மேலே தூக்கியவாரு,

“அடுத்து ஒரு முறை முல்லையை பத்தி உன் வாயில இருந்து தப்பா ஒரு வார்த்தை வந்தா கூட இந்த கழுத்தை அப்படியே அமுக்கி சாவடிச்சு போட்டுடுவேன்” என்ற கதிர்வேலனின் கண்களில் தெரிந்த ஆவேசத்தை பார்த்து கஸ்தூரியின் சப்த நாடியும் அடங்கிப் போனது.

“ஐயோ மாமா. விடுங்க விடுங்க அம்மா தெரியாம சொல்லிட்டாங்க” என்று மீனா கதிர்வேலனின் கரங்களைப் பிடித்து தன் அம்மாவை விடிவிக்கும்படி கெஞ்ச,

“அப்படியே அந்த பொம்பள கழுத்தை புடிச்சு வெளியே தள்ளுடா கதிர்” என்று ஜீவாவும் தன் பங்குக்கு கஸ்தூரியை கடிந்து கொண்டான்.

“டேய் கதிர். அவளைக் கீழே இறக்கி விடுடா” என்று பாண்டியன் கோபமாக கத்தியவரின் வார்த்தையைக் கேட்டு கதிர் சட்டென்று தன் கரங்களில் இருந்த கஸ்தூரியின் கழுத்தை விடுவிக்க, தொப் என்று புலிமூட்டை கணக்காக கீழே விழுந்தார் கஸ்தூரி.

கீழே விழுந்த கஸ்தூரியை அழுத்தமாக பார்த்த கதிர்வேலன், “இதான் உனக்கு கடைசி தவணை. இன்னொரு முறை முல்லைப்பத்தி எங்கையாவது தப்பா மூச்சு விட்ட. அடுத்தது உனக்கு வாயில நாக்கு இருக்காது” என்று கஸ்தூரியை கண்டித்தவன். அதிவேகமாக வீட்டில் இருந்து வெளியேற, கதிர்வேலனின் கோபத்தை நன்கு அறிந்திருந்த ரோஜாவிற்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து தான் இருந்தது.          

“சந்தோஷமா. இப்ப உனக்கு சந்தோஷமா, உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டு இந்த வீட்டுக்கு வந்த பொண்ணை தவிக்க விட்டுட்டு, இதோ உன் தம்பி விரும்பியவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்க பாரு. இது எல்லாம் நீ பண்ண கேவலத்தால வந்த வினைதான். இங்க பாருடா.

முல்லை பாவம் உன்னை சும்மா விடாது” என்று தன் பங்கிற்கு பாண்டியன் ஜீவாவை வார்த்தையால் வதைக்க, அந்த இடத்தில் ஜீவாவின் சூழ்நிலை என்னவென்று கேட்பதற்கு யாரும் தயாராகவும் இல்லை, மீதி கேட்டாலும் நடந்த உண்மையை சொல்லும் திராணி ஜீவாவிற்கும் இல்லை என்பதே உண்மை.

பாண்டியனின் வீட்டிலிருந்து வெளியேறிய கதிர்வேலன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்ய. அவனை தொடர்ந்து வந்த நாகராஜன், ““நண்பா. எங்கடா போற” என்றவன். தன் நண்பனின் கரங்களைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“கையை விடுடா. அந்த கேசவனுக்கு நான் யாருன்னு புரிய வைக்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் என் ரவா லட்டை அவ்வளவு கேவலமா பேசி இருப்பான். என்ன மனுசன்டா அவன்” என்று கதிர்வேலன் தன் கரங்களை மடக்கி அருகில் இருந்த சுவற்றை குத்த,

“ஆனால் நண்பா. எனக்கு உன் மேல ஒரு வருத்தம் இருக்கு” என்றான் நாகராஜன்.

“என்னடா. நான் என்ன பண்ணேன்”

என்று கதிர்வேலன் கேட்க,

“ஏன் நண்பா. உன் தங்கச்சி தான் உன்கிட்ட முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பமானு கேட்டாங்களே,

அப்பவே அந்த புள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லி இருந்தா அந்த புள்ள இன்னிக்கி முருகன் ஐயா வீட்டுக்கு போக வேண்டிய அவசியமே இல்லையே” என்று நாகராஜன் சொல்ல,

“ஏன்டா நீயும் புரியாம பேசுற. முல்லை மனசுல நான் இல்லடா. என்னை விரும்பாத ஒரு பொண்ண நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்” என கேட்டான் கதிர்வேலன்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நண்பா. ஆனா முல்லை பாவம். இன்னைக்கு முல்லை படுற கஷ்டத்துக்கு முக்கிய காரணமே உன் அண்ணன் தான். உன் அப்பா சொல்ற மாதிரி உங்க குடும்பம் முல்லைக்கு பண்ணது பெரிய துரோகம்” என்ற நாகராஜனின் சொற்கள் எதுவுமே கதிர்வேலனின் காதில் விழாத பட்சத்தில், முல்லையை அசிங்கப்படுத்திய கேசவனுக்கு தக்க பாடம் கர்ப்பிக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் மனக்கணக்கை வகுத்து வைத்தார் கதிர்வேலன்.

மதியம் இரண்டு மணி கடந்த நிலையில், சிவகங்கை மருத்துவமனையில் முருகனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது என்று மருத்துவர் சொல்ல, உலகில் உள்ள எல்லா கடவுளுக்கும் பார்வதியும் முல்லையும் மனதிற்குள் நன்றி தெரிவித்தார்கள்.

கேசவனுக்கும் தன் அக்கா கணவன் உயிருடன் திரும்பியது மகிழ்ச்சியை கொடுக்க,

“டாக்டர் நான் என் அப்பாவை பார்க்கலாமா?” என்று முல்லை கேட்டாள்.

“இன்னும் மூன்று மணி நேரம் கடந்து போய் பாருங்க. ஆனா அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று மருத்துவர் சொல்ல, எப்படியோ தன் தந்தை நலமாக இருக்கிறார் என்ற செய்தி ஒன்றே முல்லைக்கு இந்த நொடி நிம்மதியை கொடுத்தது.

என்னதான் தன் தம்பியாக இருந்தாலும் தன் கணவன் விஷயத்தில் கேசவன் நடந்து கொண்டதை பார்வதியால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கேசவனிடம் ஒரு வார்த்தை கூட பேசிடாத பார்வதி, அந்த நொடி அழுது அழுது சோர்ந்து போன முல்லை மீது பரிதாபம் கொண்டவள்,

“நீ போய் கேன்டின்ல எதாவது சாப்பிட்டு வா” என்றார்.

இது வரை பார்வதியின் அக்கறையை உணர்ந்திடாத முல்லை, “எனக்கு எதுவும் வேண்டாம்ம். வேணும்னா நீங்க போய் சாப்பிட்டு வாங்க என்றாள்

முல்லைக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லையென்று அறிந்து இருந்த பார்வதி, “சரி வா நம்ப ரெண்டு பேரும் போயி காப்பி தண்ணி குடிச்சிட்டு வரலாம்” என்றபடி இந்த நொடி உண்மையான அன்போடு முல்லையின் கையைப் பிடித்து கேண்டின்கு அழைத்துச் சென்றார் பார்வதி.

முல்லையும் பார்வதியும் ஒன்றாக அங்கிருந்து நகர்ந்ததும்,

கேசவனோ முருகனுக்கு மயக்கம் தெரிந்த பிறகு முல்லையுடன் தனக்கு திருமணம் நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில் பல யோசனைகளோடு நின்று இருந்தவனுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நேரத்தில் அவனின் வலது கால் இடது கை இடம் மாறப்போகிறது என்று.

முல்லையும் பார்வதியும் கேண்டினில் அமர்ந்து காப்பியை பருகிக் கொண்டு இருக்க, இருவர் இடத்திலும் மௌனம் நிலவியது.

“என்னதான் இருந்தாலும் கேசவன் பண்ணது மிகப்பெரிய தப்பு.

அவனை நான் மன்னிக்க மாட்டேன்” என்று பார்வதி மௌனத்தை உடைக்க, முல்லை அவர் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.

“அவர் கண் விழிக்கட்டும். இந்த கேசவனை நான் கண்டிக்க சொல்கிறேன்” என்று பார்வதி சொல்ல, அதற்கும் முல்லை எதிர் வார்த்தை பேசாமல் அமைதியாக இருக்க, அந்த நொடி கேண்டினில் சலசலப்பு ஏற்பட்டது.

“என்ன என்ன இங்க பிரச்சனை? என்று அங்குள்ள நபர்களை பார்வதி விசாரிக்க.

“மாடில சண்டை நடக்குதுங்க. யாரோ ஒருத்தவன், ஒரு ஆளை போட்டு அடி பின்னி எடுக்கிறான்” என்று அந்த நபர் சொன்னதும், பார்வதியும் முல்லையும் வேகமாக கேண்டின்னில் இருந்து மாடிக்கு ஓட.

அங்கே நாகராஜனுடன் வந்திருந்த கதிர்வேலனோ, முழு ஆவேசத்துடன் கேசவனின் மூஞ்சி முகரையை அடித்து உடைத்துக்கொண்டு இருந்ததை பார்த்த முல்லையின் விழிகள் அசையாமல் ஸ்தம்பித்துப் போனது.

“எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ண கேவலமா பேசி இருப்ப. அதுவும் என் மாமாவை வேற கீழே தள்ளிவிட்டு இருக்க, உன்னை கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா” என்ற கதிர்வேலன் ஒரே தருணத்தில் கேசவனின் முகத்திலும் நெஞ்சிலும் மாறி மாறி மிதித்துக் கொண்டிருக்க,

“அய்யோ அய்யோ என் தம்பி பண்ணது தப்புதான். அவன் செத்துட போறான். அவனை அடிக்காத அடிக்காத” என்று பார்வதி கதிர்வேலனின் காலை பிடித்து கதறிக் கொண்டு இருந்தார்.

யார் பேசுவதையும் காதில் வாங்காத கதிர்வேலன், ““என்னடா. முல்லைக்கு ஒன்னுனா கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா. அவளுக்காக நாங்க இருக்கோம். அவ எங்க வீட்டுப் பொண்ணுடா. எவ்வளவு தைரியம் இருக்கும் உனக்கு. என்ன கேடுகெட்ட எண்ணமடா உன்னோட எண்ணம். உன்னை எல்லாம் சும்மா விடவே கூடாது” என்று மேலும் கதிர்வேலன் கேசவனை நாலு காட்டுகாட்ட.

கேசவன் வலி தாங்க முடியாமல்

“என்னை விட்டுடு நான் தெரியாம தான் தள்ளி விட்டேன்” என்று கதறினான்.

என்ன? தெரியாம பண்ணியா. இருடா. உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கிறேன். எங்க அவ” என்ற கதிர்வேலனின் பார்வை முல்லை மீது படிய, கதிர்வேலனின் ஆவேசத்தை பார்த்தபடி உறைந்து போய் நின்று இருந்தாள் முல்லை

கதிர்வேலன் வேகமாக முல்லையின் அருகே சென்றவன், “ ஏன் டி. இவன் உன் அப்பாவ தள்ளிவிட்டு இருக்கான். இவனை போலீஸ்ல புடிச்சு கொடுக்காம நீ என்ன புடிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா நின்னுகிட்டு இருக்க. வா. .

வந்து அவன் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு” என்ற கதிர்வேலன் முல்லையின் கரங்களைப் பிடித்து தன் வசம் இழுக்க, முல்லையோ சற்றும் தாமதிக்காமல் கதிர்வேலனின் கரங்களை தட்டி விட்டாள்

“என்ன டி. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா இவன் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டுறானா. யாரும் உன்னை ஒன்னும் பண்ண முடியாது. உனக்கு நாங்க இருக்கோம் வா”

என்ற கதிர்வேலன் மீண்டும் முல்லையின் கரங்களைப் பிடிக்க,

“என்ன.? நீங்க இருக்கீங்களா.? எப்படி? எத வச்சு என் கூட நீங்கயெல்லாம் இருப்பீங்கன்னு சொல்றீங்க? என்று கேட்டாள் முல்லை.

“என்னடி பேசுற. நான், என் அப்பா, ரோஜா, ஜீவா அண்ணா இப்படி எல்லோரும் உனக்காக இருக்கோம்” என்று கதிர்வேலன் சொல்ல,

“ம். ஆமா. இருந்திங்க. நீங்க எல்லாம் எனக்காக அப்போ இருந்திங்க. ஆனா இப்போ நீங்க யாருமே எனக்காக இல்ல. ஏன். இனி அந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்ற முல்லையின் மனதில் கதிர்வேலன் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று சொன்ன வார்த்தைகள் தான் ஆழமாக பதிந்து இருந்தது.

ஆனால் இந்த நொடி வரை முல்லையின் மனதை அறிந்துகொள்ளாத கதிர்வேலனோ, மீண்டும் முல்லையை தவறாக எண்ணியவன், ஜீவாவை முல்லை திருமணம் செய்து கொள்ள முடியாததை எண்ணி தான் முல்லை இப்படி தன்னை எடுத்தேரிந்து பேசுகிறான் என்று நம்பினான்.

முல்லையின் உதாசீனமான வார்த்தைகள் கதிரை நோகாடிக்க,

கேசவனோ அந்த வலியிலும் கதிரை ஏளனமான தோரணையில் பார்த்து கிண்டலாக சிரித்தான்.

இன்னும் சற்று நேரம் கதிர்வேலன் அங்கு இருந்தாலும் அவனுக்கு தான் அது பிரச்சனையாக வந்து முடியும் என்று எண்ணிய முல்லை, “இனி என் வாழ்க்கையில் நீங்க யாரும் தலையிட வேண்டாம்ம். உங்க குடும்பத்துக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க இங்க இருந்து போங்க” என்ற முல்லையின் வார்த்தையை கேட்டு கதிர்வேலனுக்கு அதீதக் கோபம் எழ, “இப்பதான் எனக்கு குளுகுளுன்னு இருக்கு” என்ற கேசவனை அடிக்க பாய்ந்த கதிர்வேலனை தடுத்து நிறுத்தினான் நாகராஜன்.

“வேணா நண்பா. இப்போ சூழ்நிலை சரியில்ல, நீ இவனை அடிப்பதை யாராவது வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணிட்டா பெரிய பிரச்சனை ஆயிடும். வா போகலாம்: என்றபடி நாகராஜன் கதிர்வேலனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, கதிர்வேலனோ, முல்லையை முறைத்த வண்ணமாகவே மருத்துவமனையில் இருந்து வெளியேற. முல்லையின் மூளையோ கதிர்வேலனின் நிழலை கூட இனி காணக்கூடாது என்று அவள் விழிகளுக்கு கட்டளையிட்டது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!