சிந்து வீட்டுக்கு வந்ததும் மனோ வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்
“எப்படி அத்தை அவருக்கு நம்ம இருக்கிற இடம் தெரிஞ்சுச்சு?”
“ அதான் தெரியலமா?
பாவிப்பய கண் கொத்திப் பாம்பா நம்மளத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்கானோ என்னமோ?” என கூறினார் சீதா
“அவருக்கு பயந்து தானே ஊரவிட்டு ஓடி வந்தோம்.இங்கேயும் வந்துட்டாரா?” என மனதின் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினாள் சிந்து.
“இப்ப என்ன செய்யலாம். நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கான்.
பேசாம போலீஸ்ல மனோவ புடிச்சு கொடுத்துடுவோமா?” என சீதா கேட்க
“என்ன அத்தை சொல்றீங்க?
அவரு உங்க மகன்”
“மகன்தான், ஆனா நம்மள நிம்மதியா வாழ விடமாடுக்கானே,
புத்தி சரியில்லாமல் திரிகிறானே!
அவன அடக்க வேற வழி தெரியல. பேசாம போலீஸ்ல புடிச்சு கொடுத்துடுவோம்” என சீதா கூறிக்கொண்டே அழுதார்.
சீதாவின் வாய் தான் மகனை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என சொன்னதே தவிர,அவர் மனமோ மகனுக்காய் ஏங்கியது.
அதை கண்டு கொண்டு விட்டாள் சிந்து
“பேசாம அத்தை வீட்ட தான கேக்குறாரு! அதுக்குத்தானே நம்மள வாழ விட மாட்டேங்குறாரு. பேசாம அவரு பெயரிலேயே எழுதி கொடுத்துருவோமா?”
என கேட்க
“உன்னோட எதிர்காலத்துக்கும் விஷ்வத்தோட எதிர்காலத்துக்கும், இருக்கிறதே அந்த வீடுதான்.
அதை எப்படி எழுதிக் கொடுக்க முடியும்” என கூறினார் சீதா.
“வீட்டை எழுதிக் கொடுத்துட்டா
நம்மள தொந்தரவு பண்ண மாட்டாரு, நமக்கு நிம்மதியாவது மிஞ்சும்” என்று விரக்தியாய் பதில் அளித்தாள் சிந்து.
“வீட்டை எழுதிக் கொடுத்தா நம்மள விட்ருவான்னு நினைக்கிறியா?
வீட்ட வித்து குடிச்சிட்டு ஊதாரியா
திரியுவான். நம்மளையும் நிம்மதியாக வாழ விடமாட்டான்.நாளைக்கு வருவேன்னு வேற சொல்லி இருக்கான்,
விஷ்வத்தையும் அவன் கிட்ட கொடுக்கணும்னு மிரட்டிட்டு போய் இருக்கான்” என சீதா சொல்ல அதிர்ந்து விட்டாள் சிந்து.
“வீடு போனா போகட்டும்னு விட்ருவேன்.
விஷ்வத்தை எப்படி கொடுக்க முடியும். அவன் என் பையன்” என்று சொல்லிவிட்டு கண்கலங்கினாள்.
இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழ்வதே, விஷ்வத்திற்காக மட்டும்தான்,
அவனை எப்படி கொடுப்பாள்
“விஷ்வத் என்னோட உயிர் அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என புலம்ப ஆரம்பித்து விட்டாள் சிந்து.
சீதா எவ்வளவோ ஆறுதல் சொல்ல, சிந்துவின் மனது திருப்தி அடைந்த பாடில்லை. அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
நாளை வரும் மனோவின் வருகையை நினைக்க, அவள் மனதில் பயம் வந்து போனது.
வேலைக்கு சென்று வந்த களைப்பு, வேதனை எல்லாம் நிரம்பி வழிய, அப்படியே அழுது அழுது தூங்கியும் போனாள் சிந்து.
இரவு முடிந்து விடியல் பிறந்தது
“ சிந்து, சிந்து” என சீதா எழுப்ப,
விழித்தாள் . அந்நேரம்
காலை எட்டரையை மணியை கடந்திருந்தது,
விஷ்வத்தையும் பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தார் சீதா.
அவசர அவசரமாக சிந்து அலுவலகத்திற்கு கிளம்ப சீதா சாப்பாட்டை எடுத்து வைத்தார். சீதாவின் வற்புறுத்தலுக்காகவும்
கடமைக்காக சிறிது சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்குச் சென்றாள்.
தன்னவளை பார்க்க வருண் அரை மணி நேரத்திற்கு முன்னாலே அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
சிந்துவின் இருக்கையை பார்க்க,
அதுவோ வெறுமையாய் காட்சியளித்தது. சிந்துவை காணாததால் ஏமாற்றம் அடைந்தாலும் அவளின் வருகைக்காக எதிர்நோக்கி காத்திருந்தான்,
அதைக் கண்டுகொண்ட மணியும்,
குணாவும், ஒரே கோரசாக
நான் ஒரு சிந்து
காவடி சிந்து
ராகம் புரியவில்லை என பாட்டு பாட வருணுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
தன்னவளை காணாத தவிப்போடு காத்திருக்க குணாவும் மணியும் அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.
“டேய் சும்மா இருங்க,
நானே டென்ஷனா இருக்கேன்
அவ வரலைன்னு” என வருண் கூறினான்.
“டேய் மச்சான், சிந்து எந்த சந்திலையாவது வந்துட்டு இருக்கும், அவசரப்படாத!” என மணி நக்கலாக சொல்ல
“இருக்கிற கடுப்புக்கு அடிச்சு மண்டையை ஒடச்சிடுவேன் “ என கூறினான் வருண்.
“சிந்து நதிக்கரை ஓரம் காத்திருக்கும் பையன் வருண் பாவம்” என்று அவர்கள் மீண்டும் கலாய்க்க கோபத்தில் அவர்களை அடிக்க ஓடி வந்தான் வருண்.
அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டே பாடினார்கள்.
அவர்களை விரட்டும் ஆர்வத்தில் எதிரே வந்த பெண்ணை கவனிக்காது, அவள் மீது மோதினான் வருண்
மோதிய வேகத்தில் அந்தப் பெண் கீழே விழ போக , விழாதவாறு அவள் இடையை பிடித்து தாங்கி இருந்தான்.
தன் தவறை உணர்ந்தவன் அந்தப் பெண்ணை நோக்கி பார்க்க அதிர்ச்சியில் விழிகளை அகலத் திறந்தான்.
தன்னவள் தன் கைகளில் தவழ்வதை கண்டவனோ, கவிஞனாகி கவிதை வடிக்க ஆரம்பித்தான்.
தடம் மாறிப்போன இதயத்தை
தடுமாறி போக வைத்த
பெண் நிலாவே
தவிக்கிறேன்
உன் தகிப்பை தாங்க முடியாமல்!
என வருண் சொல்ல,
“அடடே, ஆச்சரிய குறி” என்ற குரலும் அதைத் தொடர்ந்து சிரிப்பு சத்தமும் கேட்டது. அதில் தன்னிலை மீண்டவனோ,
யார் என்று பார்க்க,
“அவ அப்பயே போயிட்டா, முதல்ல முகத்தை தொட ஜொள்ளு வடிக்காத!”
என வருணின் காலை வாரினர் மணியும் குணாவும்!
வருண் நடந்ததை சமாளிக்க இளித்து வைக்க “இந்த எக்ஸ்பிரஷனுக்கு அந்தக் கவிதையே பரவாயில்லை”
என குணா சொல்ல மணிக்கு சிரிப்பு வந்தது.
இங்கு நடப்பது எதையும் அறியாமல் மனோவின் நினைவிலே இருந்தாள் சிந்து.
சாய்ந்தரம் வருவேன்.என் மகன் விஷ்வத்த என்கிட்ட ஒப்படைக்கணும்!!.. என மனோ மிரட்டி சென்றதாய் சொன்ன வார்த்தையே அவள் மனதில் ஒடியது.
எப்படி மனோவை சமாளிக்க போகிறோம்!! என்ற ஒற்றை எண்ணமே சிந்துவைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது!!
வருண் ஆபீசிற்கு சிந்து வந்ததிலிருந்து வைத்த கண் வாங்காமல் அவளை பார்ப்பது, ரசிப்பது, புன்னகைப்பது என்று பண்ணிக் கொண்டிருந்தான்.
இதனை சிந்து பார்த்தாலோ இல்லையோ?.. வருணின் நண்பர்களான நால்வரும் அவனை நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள்!!
“இந்த புள்ள வந்ததிலிருந்து?… இவனோட நடவடிக்கையை சரி இல்லையே?”என மணி சொல்ல,
“காதல் வந்தாலே அப்படித்தான் மச்சான்!!நமக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லை.அவன் மச்சக்காரன்.
கனவுல பார்த்த பொண்ணையே, கடவுள் கொண்டு வந்து அவன் கண் முன்னாடி நிறுத்திட்டாரு!
அந்தப் பொண்ணு கனவுல வரும்போதே காலையிலிருந்து நைட்டு வர நம்ம கிட்ட சொல்லி உயிரை வாங்குவான்!!.. இப்ப வேற அவன் கண் முன்னாடி இருக்கா? விடுவானா, அதான் இப்படி பார்த்துக்கிட்டே இருக்கான்”
“ அதுவும் சரி தான் நம்ம நிஜத்துல எவளையாவது கரெக்ட் பண்ணி கல்யாணத்தை முடிச்சிரலாம்னு பார்த்தா, நம்மள பார்த்தா அவள்களுக்கு என்ன தோணுதோ தெரியல, காரி துப்பாத குறையா வீஞ்சிட்டு போறளுக”என சலித்துக் கொண்டான் குணா.
“உங்களுக்கு ட்ரெயினிங் பத்தல, பொண்ணுங்கள பாக்கும்போது அவங்க கழுத்துல இருக்கிற நகைகளை அறுக்குறாப்புல பார்த்தா துனு துப்பிட்டு தொடப்ப கட்டைய வச்சு அடிக்கத்தான் செய்வாங்க!” என பெண்கள் இருவரும் கலாய்த்து ஹைபை அடித்துக் கொண்டனர்!!.
“நாங்க என்ன அப்படியா பார்க்கிறோம்?” என மணியும் குணாவும் தங்களுடைய சந்தேகத்தை கேட்க ,
“உங்க பார்வையை கண்ணாடி முன்னாடி நின்னு நீங்களே பாருங்க உங்களுக்கே தெரியும்”என பங்கமாய் கலாய்த்தனர் பெண்கள் இருவரும்!!
இவர்கள் இப்படி அரட்டை அடித்து மாற்றி மாற்றி கலாய்த்து கொண்டிருக்க, திடீரென்று வருணின் டீமிற்கு ஹெச் ஆர் அறையிலிருந்து அழைப்பு வர, டீமை சேர்ந்த அனைவரும், “ இப்ப எதுக்கு இந்த குரளி மண்டையன் நம்மள கூப்பிடுறான்”!என மணி கேட்டான்.
“விருந்து எதுவும் தரப்போறாரோ” என குணா சொல்ல, “தருவாரு தருவாரு, நம்ம அரட்டை அடிச்சத பார்த்திருப்பாரு! அதான் வச்சு வைய்லாம்னு கூப்பிடுறாரு “ என்று அவர்களுக்குள்ளே சந்தேகங்களையும் எழுப்பிக் கொண்டு அனைவரும் ஹெச் ஆர் அறைக்குள் நுழைந்தனர்.
“எக்ஸ்கியூஸ் மீ சார் “ என்று வருண் சொல்ல “எஸ் கம்மின் , டேக் யுவர் சீட்ஸ்…” என்று கூறினார் ஹெச் ஆர்!!
ஹெச் ஆர் ஒரு பைலை வருணிடம் கொடுத்து,”இங்க பாருங்க இது முக்கியமான ப்ராஜெக்ட்.
எப்படியோ இந்த ப்ராஜெக்ட் நம்ம கையில கிடைச்சிருக்கு.இந்த ப்ராஜெக்ட நம்ம சரியா செஞ்சு முடிச்சோம்னா நமக்கு நிறைய பெனிபிட்ஸ் இருக்கு!!
ஆனா இந்த ப்ராஜெக்ட் செய்றதுக்கான நேரம் கம்மியா இருக்கு. ரெண்டு நாளைக்கு முன்னாடி வினோத் டீமுக்கு இந்த ப்ராஜெக்ட் கொடுத்திருக்காங்க!!.. அவங்களால ஆன் டைம்க்கு செய்ய முடியாமல் திணற, இது வேலைக்காகாதுனு நெனச்சிட்டு நமக்கு தந்திருக்காங்க!
இத மட்டும் சரியா முடிச்சுட்டோம்னா நமக்கு நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாட்டுல இருக்கிற நம்ம கம்பெனில அதிக சம்பளத்தோட வேலையும் கிடைக்கும்!”என ஹெச். ஆர் சொல்ல, அனைவருக்கும் சந்தோசமாக இருந்தாலும் ஒருவரின் முகத்தை ஒருவர் கேள்வியாகப் பார்த்தனர்.
அனைவரின் எண்ணங்களை படம் பிடித்த வருண் , “ நேரம் குறைவா இருக்கலாம் கைஸ்!!.. ஆனா இந்த மாதிரி வாய்ப்பு இன்னொரு முறை நமக்கு கிடைக்காது. வேற ஒருத்தவங்களுக்கு போன வாய்ப்பு, எப்படியோ நம்ம கைக்கு வந்து இருக்கு! இது கஷ்டமான ப்ராஜெக்ட் தான் நேரம் கம்மியாவும் இருக்குது.ஆனா இத செஞ்சு முடிக்கிறதுக்கு நமக்கு திறமை
இருக்கு!”என ஒரு டீம் லீடராக அனைவரையும் ஊக்கப்படுத்த அனைவரும் உற்சாகமாக சரி செய்யலாம் என ஒத்துக் கொண்டனர்.
இங்கு அனைவரும் அவரவர் கருத்துக்களையும் அவரவர் எண்ணங்களையும் சொல்லி கொண்டு இருக்க, இதை எல்லாம் காதில் வாங்காது சிந்துவோ மரப்பாச்சி பொம்மையாக அங்கு நின்று கொண்டிருந்தாள்.
“எல்லாருக்கும் இந்த ப்ராஜெக்ட்ட செய்யறதுக்கு சம்மதமா? எல்லாரும் சேர்ந்தாத்தான் இந்த ப்ராஜெக்ட்ட சீக்கிரத்துல செய்ய முடியும்”என வருண் கேட்க, அனைவரும் சரி என சொல்ல சிந்து மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்!!
அவளின் அமைதியை பார்த்த வருண் “ “என்னாச்சு சிந்து
உங்களுக்கு விருப்பம் இல்லையா?” எனக்கேட்டான்.
“என்ன சொன்னீங்க.எதுக்கு எனக்கு விருப்பம்?”என சிந்து கேட்க
“ப்ராஜெக்ட்” என வருண் விளக்க,
“பண்ணிரலாம்!”என கூறினாள் சிந்து.
ஐவரும் ஒருமித்த எண்ணங்களோடு ப்ராஜெக்ட்டை செய்ய ஆரம்பித்தனர்!!. யாராவது ஒரு நபர் சிறிது தவறு செய்தாலும் கூட, சரியான நேரத்தில் பிராஜெக்ட்டை முடிக்க முடியாமல் போய்விடும் என்ற நிலையே அங்கு இருந்தது!
அனைவருக்கும் வெளிநாட்டு கனவும் அதிக சம்பளமும், கண் முன் தோன்ற வெகு சிரத்தையோடு தங்கள் வேலையை தொடங்கினார்கள்!!
ஆனால் சிந்து மட்டும், ஏனோ தானோ என்று வேலையை செய்து கொண்டிருந்தாள்!!
இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள காத்திருங்கள் அடுத்த அத்தியாயத்திற்கு!
கதையைப் படித்துவிட்டு உங்களது விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டுச் செல்லுங்கள்,