Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 9

CHAPTER 9

மனசு 9

By karuppiahrajesh70@gmail.com · October 13, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 9​

அபுதாபியிலிருந்து தினமும் சரியாக மாலை ஏழரை மணிக்குச் சங்கரின் காணொளி அழைப்பு வந்துவிடும். அந்தத் திசையிலிருந்து வரும் அழைப்பு மீனாவுக்கு உலகத்தையே மறந்துவிடும் தருணம். எதிரில் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற எதைக் குறித்தும் அவளுக்கு அக்கறையிராது; சங்கருடன் பேசுவதிலேயே அவளது முழு உலகமும் சுருங்கிவிடும்.​அன்றும் அப்படித்தான். மது காய்ச்சலின் தகிப்பில் டியூஷன் செல்லாமல் படுக்கையில் முடங்கிக் கிடக்க, பகல் முழுக்க வேலை செய்து களைத்துப்போன ஆனந்தன் படுக்கையறையில் சோர்ந்து போய்ப் படுத்திருந்தான். பக்கத்துக் கோவிலில் ஒலித்த பஜனை ஒலிகள் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில், அங்கே சென்றுவிட்டார் தாய் கனகம்.வீட்டின் மூலையிலிருந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்த சந்தோஷ் சத்தமாக அழுது கொண்டிருந்தான். அவனது அருகில் அமர்ந்து கணவனுடன் கொஞ்சிக் கொண்டிருந்த மீனாவுக்கு அந்த அழுகை ஒரு பொருட்டாகவே இல்லை.​உள்ளறையிலிருந்து ஆனந்தன் குரல் கொடுத்தான். “மீனா… சந்தோஷ் கத்துறான், என்னன்னு போய் பாரு!”​ஆனால், மீனா அதைக் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. எதிரில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சங்கரோ எரிச்சலோடு, “உன் தம்பி போடுற சத்தத்தில் போன் வெடிச்சிடும் போல இருக்கே, என்னன்னு போய் பாரு மீனா!” என்று கூறினான்.​அதற்கு மீனா, “அவனுக்கு வேற வேலை என்ன? எந்த நேரமும் இப்படித்தான் அழுதுட்டு இருப்பான். இப்பதான் சாப்பாடு கொடுத்தேன், இன்னுமும் பசிக்குதோ என்னவோ!” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.​இதற்கிடையில், காய்ச்சலால் தன் அறையில் படுத்திருந்த மது, சந்தோஷின் இடைவிடாத அழுகை தாங்காமல் எழுந்து வந்தாள். வந்தவளுக்கு அங்கே காத்திருந்த காட்சியைக் கண்டதும் நெஞ்சடைத்தது போல் இருந்தது. சந்தோஷ் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே மலம் கழித்திருந்தான். அந்தத் துர்நாற்றமும் கோலமும் கண்ட மதுவுக்கு உடனே குமட்டிக்கொண்டு வந்தது. “உவ்வே…” என்று வாந்தி எடுப்பது போல் முகம் சுழித்தவள் வாயைப் பொத்திக் கொண்டாள்.​மீனாவோ இதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தன் போன் உலகத்திலேயே திளைத்திருக்க, சங்கரோ மதுவின் வாந்திச் சத்தத்தைக் கேட்டு, “அவ என்ன சத்தம் போடுறா? போனை அவ பக்கம் திருப்பு!” என்று விசாரித்தான்.​அதே நேரத்தில், சந்தோஷின் அழுகை அடங்காததால் சலிப்புடன் வெளியே வந்த ஆனந்தன், மது வாயைப் பொத்தியபடி பரிதவித்து நிற்பதைக் கண்டான். அவளது நிலையைப் பார்த்தபடியே அருகில் வந்தவனுக்குப் பின்னர்தான் புரிந்தது, சந்தோஷ் என்ன செய்துவிட்டான் என்பது.​துளியும் தாமதிக்காமல் மதுவைத் தாங்கிப் பிடித்து அவளது அறைக்கு அழைத்துச் சென்று மெதுவான குரலில் ஆறுதல்படுத்தினான். “ஒண்ணும் இல்லடா, பயப்படக் கூடாது… நீ அதை நினைக்காத, ஃபர்ஸ்ட் தண்ணியைக் குடி…” என்று தன் கையாலேயே தண்ணீர் குடிக்கக் கொடுத்தான்.​அதே விநாடி, ஆனந்தன் கோபமாக வருவதைக் கவனித்த மீனா, திடுக்கிட்டுப் போனாள். “மாமா… அண்ணன் ஏதோ திட்ட வர்றாரு போலிருக்கு, நான் அப்புறம் பேசுறேன்!” என்று வேகமாகக் கூறியவள், அழைப்பைத் துண்டித்தாள்.​சந்தோஷிடம் விரைந்து வந்தவள், “லூசுப் பயலே, இப்படியா பண்ணுவ? பக்கத்துல்தானே உக்காந்து இருக்கேன், ஒரு வார்த்தை ‘அக்கா’ன்னு கூப்பிட வேண்டியதுதானே!” என்று அவனைத் திட்டித் தீர்த்தாள்.​அப்போது மதுவை அறைக்குள் பாதுகாப்பாக அமர வைத்துவிட்டு வெளியே வந்த ஆனந்தன், மீனாவின்மீது தீயாகப் பார்வையைப் பாய்ச்சினான். “வாயை மூடு முதல்ல! அவன் இவ்வளவு நேரம் கத்திட்டு இருக்கான், என்னன்னு பார்க்காம உனக்கு அப்படி என்ன பேச்சுடி பேசுறதுக்கு? போ, அவனை உடனே கழிவறைக்குக் கூட்டிட்டுப் போ!” என்று கண்டித்து அனுப்பினான்.​மீனா முணுமுணுத்தபடியே எழுந்து சந்தோஷைக் கைப்பிடித்துக் கழிவறைக்கு அழைத்துச் சென்றாள்.​ஆனந்தனோ அறையில் காய்ந்த துணியைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தமாகத் துடைத்து, பினைல் தெளித்து, மாப் போட்டு, அறை முழுவதும் நறுமண ஸ்பிரே அடித்துச் சூழ்நிலையைச் சரிசெய்தான்.​அதற்குள் கழிவறையிலிருந்து மீனா, சந்தோஷின் உடையைக் கழற்றிவிட்டு அவனை அங்கேயே அப்படியே நிற்க வைத்திருந்தாள். உள்ளே நுழைந்த ஆனந்தன், “சரி, நீ போய் வேலையைப் பாரு,” என்று மீனாவை வெளியே அனுப்பிவிட்டு, தானே சந்தோஷுக்குக் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்தினான். பின்னர் அவனுக்குப் புதிய உடை மாற்றி, உடல் முழுவதும் பவுடரைப் பூசி, மீண்டும் மர நாற்காலியில் அமர வைத்துவிட்டு வந்து சோபாவில் சோர்வாகச் சாய்ந்தான்.​கொஞ்சம் பயமும் குற்றவுணர்ச்சியும் கலந்த முகத்துடன் வந்த மீனா, “சாரி அண்ணா…” என்றாள்.​அதற்கு ஆனந்தன் சலிப்புடன், “சரி விடு… போய் ரூம்குள்ள இருக்கிற அவளைக் கவனி. ஆனாலும் உன் புருஷன் மேல வச்சிருக்கிற பாசம் அளவுக்கு அதிகமா போயிட்டு இருக்கு, கொஞ்சம் குறைச்சுக்கோ. என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு போன்லயே மூழ்கியிருக்கிறது சரியல்ல,” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சந்தோஷின் அருகில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினான்.​மறுநாள் மாலை. டியூஷன் நேரம் முடிந்ததும் மது தன் வீட்டுப்பாடங்களை முடித்துக்கொண்டு புறப்படத் தயாரானாள். அனுஷா மற்ற குழந்தைகளை வழியனுப்பிவிட்டு அவள் அருகில் வந்தாள்.​”மேம்… நேத்து எங்க வீட்ல பெரிய கலவரமே நடந்துடுச்சு!” என்று மது ஆரம்பிக்கவும், அனுஷா ஆவலோடு, “என்ன பிரச்சனை மது?” என்று கேட்டாள்.​”எங்க மாமாவுக்கு நீங்க சொன்னபடியே நானும் எல்லா ட்ரெயினிங்கும் கொடுத்துட்டு இருக்கேன். ஆனா எந்த இம்ப்ரூவ்மென்ட்டுமே இல்லை, இன்னமும் உட்கார்ந்த இடத்திலேயே ஆய் போய்விடுகிறான். நேத்து அப்படித்தான்… அம்மா போன் பேசிட்டு இருந்தாங்களா, மாமா சேர்ல உட்கார்ந்திருக்கும் போதே ஆய் போயிட்டான். அம்மாவும் பாவம் தான், காலையில இருந்து அவனைக் கூட இருந்து கவனிச்சுக்கிறாங்க; அதனால கொஞ்சம் கோபமா இருந்திருப்பாங்க போல, அதான் அவனைக் கண்டுக்கவே இல்லை. மாமா வந்துதான் அம்மாவைத் திட்டுனாரு. அப்புறம் மாமா அந்த இடத்தை சுத்தப்படுத்திட்டு, ‘அம்மா வருத்தப்படுவாள்’னு அவகிட்டயும் சாரி சொன்னாரு. மாமாவும் பாவம் இல்ல மேம்? காலையிலிருந்து வேலை பார்த்துட்டு வந்து அப்பதான் ரெஸ்ட் எடுக்கப் போனாரு. நானும் சின்னப் புள்ளையாச்சே, பெரிய ஆளா இருந்திருந்தா நானே அவனை தூக்கிட்டுப் போய் சுத்தம் செஞ்சிருப்பேன். எனக்கு அந்த ஸ்மெல்லே ஒத்துக்கல… நேத்து வாந்தியே வந்துடுச்சு தெரியுமா?”​மதுமிதாவின் ஒவ்வொரு வார்த்தைகளையும், அவளது பிஞ்சு முகத்தில் நிழலாடிய முதிர்ச்சியையும் அனுஷா வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறுமி பேசும் பேச்சில் இருக்கும் கனிவும், தன் தாய்மாமன் மீது அவள் காட்டும் அக்கறையும், அதே நேரத்தில் தன் தாயின் சலிப்பையும் பொறுமையின்மையையும் அவள் புரிந்துகொள்ளும் விதமும் அனுவை ஆச்சரியப்படுத்தியது. மன வளர்ச்சி குன்றிய சந்தோஷ் மீது அவள் காட்டும் இரக்கமும், தாய்மாமனின் உழைப்புக்காக அவள் படும் கவலையும் அவளது வயதை மீறிய முதிர்வை வெளிப்படுத்தியது.​”அச்சச்சோ, நீ வாமிட் பண்ணிட்டியா மது?” என்று அனு அன்பு ததும்பக் கேட்டாள்.​”இல்ல மேம், அதுக்குள்ள எங்க மாமா வந்து என்னை ரூமுக்குள்ள தூக்கிட்டுப் போயிட்டாரு,” என்றவள், தன் பையிலிருந்து சந்தோஷ் வரைந்த பழைய காகிதங்களை எடுத்து அனுவிடம் நீட்டினாள். “இதைப் பாருங்க மேம்… நல்லா ஹேண்ட் ரைட்டிங் பண்றான், டிராயிங் பண்றான்; ஆனா, தெளிவா பேச மாட்டேங்கிறான்,” என்று குரலில் ஏக்கம் ததும்பக் கூறினாள்.​அவற்றை அன்போடு வாங்கிப் பார்த்த அனுஷா, “சூப்பர் மது! நீ உன்னோட மாமாவை நல்லா ட்ரெயின் பண்ணியிருக்க. இதேபோல அவனுக்கு ஆய் வருதுன்னு சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்து. ‘ஆயி’ அப்படின்னு ரெண்டு எழுத்துதானே, ஈஸியா சொல்லிடுவான். இனிமேல் அழக்கூடாது, இப்படிச் சொல்லணும்னு நீதான் அவனுக்குப் பழக்கப்படுத்தணும் மது,” என்று உற்சாகப்படுத்தினாள்.​”நான் சொன்னா அவன் பழகிடுவானா மேம்?” என்று மது அப்பாவியாகக் கேட்டாள்.​”நிச்சயமாகப் பழகிடுவான்டா! நீதான் சொல்லிக் கொடுக்கணும். பசிக்குதுன்னாலும் ‘சோறு’ன்னு சொல்லிக் கொடு. பிஸ்கட் சாப்பிட ஆசைப்பட்டாலும்…” என்று அனு நிறுத்த, மதுவே தொடர்ந்தாள், “அதைப் பத்தியும் அவன் ‘சோறு’ன்னே சொல்லட்டும்! அவனுக்குப் பிடிச்சதை நான் கொடுக்கிறேன்.”​”ஓகே மேம்! இனிமே நான் இதை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்று புன்னகையுடன் சொன்ன மது, திடீரென, “இன்னும் மாமாவைக் காணோமே!” என்று தன் தாய்மாமனைத் தேடினாள்.​”வா… நாம கீழ பாட்டியோட டிவி பார்க்கலாம். கொஞ்ச நேரத்துல உன்னோட மாமா வந்துடுவார்,” என்று மதுவை மாடியில் இருந்து தரை தளத்திற்கு அழைத்துச் சென்றாள் அனுஷா. அவள் சொன்னபடியே ஆனந்தனும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான். மதுவும் “பாய் மேம்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றாள்.​அனு மாடியில் தனது அறைக்குச் சென்று கட்டிலில் சோர்வாக அமர்ந்தாள். அவளது மனம் யோசனையில் ஆழ்ந்தது. ‘இவ்வளவு கனிவாகவும் அன்பாகவும் நடந்து கொள்ளும் மனுஷன், எதற்காகத் தன் வாழ்வில் நடந்த சில விஷயங்களில் இரண்டாம் தாரம் பொண்ணுங்களை இழிவா பேசினான்? அந்தப் பிஞ்சு குழந்தை மதுகூடத் தான் வளரும் சூழ்நிலையில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளப் பழகி, இவ்வளவு அன்போடு நடந்து கொள்கிறாள். அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்கி வைத்திருக்கும் குடும்பத்தில் இருக்கிற ஆனந்தனுக்கு ஏன் இன்னும் அந்த முடங்கிய புத்தி இருக்கிறது? பெண்கள் ஒருத்தரைத் கல்யாணம் செய்து கொண்டு வாழ்விழந்தால் இன்னொருத்தரைத் கல்யாணம் செய்யக்கூடாது என்று நினைக்கும் புத்தி எப்படித் தோன்றியது? இதுதான் கற்பு நெறின்னு அவரது குடும்பத்தில் சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்க போலிருக்கு…’ என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!