Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 10

CHAPTER 10

மனசு-10

By karuppiahrajesh70@gmail.com · October 14, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 10​

அனுஷா சொல்லிக் கொடுக்க முறையின்படி, சந்தோஷிற்குப் பாடம் நடத்தத் தயாரானாள் மது. அவனது கையைப் பிடித்துக் கழிவறை வரை அழைத்துச் சென்று அதைக் காட்டியவள், “இங்க பாரு சந்தோஷ்… உனக்கு ‘ஆய்’ வந்துச்சுன்னா, என்கிட்ட ‘ஆய்’னு சொல்லணும், சரியா?” என்றாள் பொறுமையாக.​

சந்தோஷ் ஒன்றும் விளங்காமல் விழி விரித்துத் திருதிருவெனத் தலையசைத்தான்.​”நான் இப்போவே உன்னை ஆய் போகச் சொல்லல. இனிமேல் உனக்கு இயற்கை உபாதை வந்தா, அதை என்கிட்ட உடனே சொல்லணும்… புரியுதா?”​

அவன் புரியாமல் “ஆஆ…” என அலறியபடி வேண்டாம் என்பதுபோல மறுப்பாகத் தலையை ஆட்டினான்.​பொறுமையிழந்த மது, அவன் தலையில் லேசாகக் கொட்டி, “லூசு… உன்னை இப்போவே போகவா சொல்றேன்? வந்தா என்ன சொல்லணும்னு சொல்லித்தர்றேன்ல, ஒழுங்காப் புரிஞ்சுக்கணும்!” என்று அதட்டினாள்.​

சந்தோஷ் மிரண்டு போய் நிற்பதைப் பார்த்தவள், “நான் யாரு… ‘பாப்பா’தானே? அதைச் சொல்லு,” என்றாள்.​அவன் தடுமாறி, “பா…” என இழுத்தான்.​”ஓகே! நான் பாப்பா. இது என்ன?” என்று கழிவறையை மீண்டும் சுட்டிக் காட்டினாள்.​”ஆ… ஆய்…” எனத் திக்கித் திணறி வார்த்தையை வெளிப்படுத்தினான் சந்தோஷ்.​

“வெரி குட்! மூளையே இல்லாத முட்டாளா இருந்தாலும், நான் சொல்றதை டக்குனு புரிஞ்சுக்கிறயே… குட் பாய்! ஆனா, எப்பப் பார்த்தாலும் இப்படி வாயைத் திறந்துட்டே இருக்கக் கூடாது; எச்சிலை முழுங்கு… முதல்ல முழுங்கு!” என்று மது கூற, அவனோ எச்சில் வடிய அவளையே பார்த்து மந்தகாசமாகச் சிரித்தான்.​அப்போது அங்கு வந்த ஆனந்தன், வாசலில் நின்றிருந்த இருவரையும் கண்டுவிட்டு அமைதியாக உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் வெளியே வந்தவன்,

“என்ன பாப்பா… கக்கூஸ் கிட்ட நின்னு என்ன பெரிய கண்டுபிடிப்பைப் பத்தி பாடம் நடத்திட்டு இருக்க?” என நக்கலாகக் கேட்டான்.​

“நேத்து அனு மேம்தான் கழிவறையைக் காட்டி ‘ஆய்’ வருதுன்னு சொல்லிக் கொடுக்கச் சொன்னாங்க. அந்தப் பாடத்தைத் தான் இவனுக்குக் கத்துக் கொடுத்துட்டு இருக்கேன். நீயும் பாவம்ல… இவன் கண்ட இடத்துலயும் ஆய் போறதை எத்தனை நாள் தான் அள்ளிப் போடுவ?” என்றாள் மது நியாயமான கோபத்துடன்.​

ஆனந்தன் பெருமிதத்துடன் புன்னகைக்க, அதைப் பார்த்த சந்தோஷும் சேர்ந்து சத்தமாகச் சிரித்தான்.​கோபம் தலைக்கேற மது, “லூசு! உன்னை நான் என்ன பண்ணச் சொன்னேன்? எச்சிலை முழுங்கு, இப்படி ஜொள்ளு வடிக்காதேனு சொன்னேன்ல? அதை விட்டுட்டு எதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து சிரிக்கிறீங்க?” என்று பொரிந்தாள்.​ஆனந்தன் குறும்பு மின்ன, “சந்தோஷுக்கு நீ முறைப்பெண் பாப்பா… அதான் உன்னைப் பார்த்ததும் ஜொள்ளு விடுறான்னு நினைக்கிறேன்,” என்றான்.​சலிப்புடன் தலையில் அடித்துக் கொண்ட மது, “நீ மட்டும் என்னவாம்? நீயும் தான் எனக்கு முறைப்பையன்… அதுக்காக உன்னைப் பார்த்ததும் நானா ஜொள்ளு விட்டுட்டு இருக்கேன்? லூசு… மொத்தக் குடும்பமுமே லூசு!” என்று அலுத்துக்கொண்டே, சந்தோஷை அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.​பின்னால் இருந்தபடியே ஆனந்தன், “ஏய் மது சாரி… வா வந்து உன்னோட சப்ஜெக்ட்ட நடத்து, பாவம் சப்ஜெக்ட் அனாதையா நிக்குது!” என்று குரல் கொடுக்க,​வீட்டுக்குள் இருந்தபடி மது, “சப்ஜெக்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல சாணி போடும், அதை நீயே அள்ளிப் போடு!” என்று எரிச்சலாகக் குரல் கொடுத்தாள்.​சிறிது நேரத்தில்

அனைவரும் அவரவர் பணிகளை முடிக்க, மது பள்ளிக்குக் கிளம்பினாள்; ஆனந்தன் தனது அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றான்.​

மதிய வேளையில், கனகமும் மீனாவும் ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவர்களோடு அமைதியாக அமர்ந்திருந்தான் சந்தோஷ். திடீரென அவனுக்கு வயிறு வலித்து, மலம் கழிக்க வேண்டிய உந்துதல் ஏற்பட, அழத் தொடங்கினான்.​பதறிப்போன கனகம் அவன் அருகில் சென்று, “என்ன ஆச்சு கண்ணு? வயிறு வலிக்குதா? சாப்பிடுவோமா?” எனக் கையைச் சாப்பிடுவது போல் சைகை காட்டி விசாரித்தார்.​சந்தோஷ் மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டுத் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.​மீனா குறுக்கிட்டு, “அவனோட சேர்ல எறும்பு ஏதாவது இருக்கான்னு பாருமா… ஒருவேளை எறும்பு கடிச்சிருக்கும்,” என்றாள்.​கனகமும் அவன் அமர்ந்திருந்த மர நாற்காலியைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.​அப்போதுதான் காலை மது கற்றுக் கொடுத்த பாடம் அந்தத் தம்பியின் மண்டைக்குள் மின்னலாய் வெடித்தது. சட்டென நிமிர்ந்தவன், “ஆஆஆய்ய்…!” என்று வீடு அதிரக் கத்தினான்.​திகைத்துப் போன கனகம், “ஆத்தாடி ஆத்தா! முப்பது வருஷம் கழிச்சு என் மகராசன் தன் வாயால ‘ஆய்’ வருதுன்னு சொல்லியிருக்கான்டி!” என்று ஆனந்தக் கண்ணீருடன் துள்ளிக் குதித்தபடி, அவனைக் கைப்பிடித்துக் கழிவறையை நோக்கி அழைத்துச் சென்றார். மீனாவுக்கும் அவன் சொன்ன விதம் பெரும் வியப்பை அளித்தது.​சந்தோஷைச் சரியாக்கி, கழிவறையில் அமர வைத்துவிட்டு வெளியே வந்த கனகம், மீனாவிடம் மெல்லிய குரலில், “இந்த மதுபிள்ளையோட டீச்சர் பாடம் நடத்துனாலோ இல்லையோ, பையனுக்கு நல்ல பழக்கவழக்கத்தைக் கத்துக் கொடுத்துட்டு இருக்கா. அவளுக்கு எவ்வளவு பீஸ் கொடுத்தாலும் தகும்பா!” என்றார் சிலிர்ப்புடன்.​மீனா புன்னகையுடன், “இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ம அண்ணாவுக்குக் கிடைச்சிட்டா எவ்ளோ நல்லா இருக்கும்…” என்றாள் ஏக்கமாக.​கனகம் பெருமூச்சுடன், “இந்த மாதிரி என்னடி… இவளே எனக்கு மருமகளா வரணும்னு சொல்லு!” என்றார்.​மீனா யோசனையுடன், “கார்த்திக் அவனுக்கு இப்படி ஒரு தங்கச்சி இருக்கிற விஷயத்தையே நம்மகிட்டயே சொல்லல. இதுல அவளைப் பொண்ணு கேட்டால் கொடுத்திடுவானா?” என்று தன் சந்தேகத்தை எழுப்பினாள்.​கனகம் ஏக்கமாய், “ஆமா மீனா… அந்தப் பய எவ்ளோ விநயம் புடிச்சவனா இருந்திருக்கான் பாரு! எங்க வீட்டுல ஒரு பொம்பளப் புள்ள இருக்கு, கட்டிக்கிறியான்னு கேட்காமல் யாருக்கோ மாப்பிள்ளை கேட்டு வந்துட்டான். அவன் கேட்கலைன்னா என்ன? நானே நேர்ல போய் அவங்களோட அம்மாட்ட கேட்கிறேன்,” என்றார் உறுதியாக.​மீனா கவலை தோய்ந்த குரலில், “நீ போய் கேட்கிறதெல்லாம் சரிமா… மத்தவங்களைப் போல அந்தப் பொண்ணோட அம்மாவும் நம்ம சந்தோஷை நினைச்சுக்கிட்டு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்றது? எதுக்கு வீணான கற்பனையை வளர்த்துக்கிற?” என்றாள்.​கனகம் தன் இயலாமையை எண்ணி வருந்தியபடி, “அதுவும் சரிதான்… இந்த மது குழந்தையைக் கூடவே இருந்து இவ்வளவு அக்கறையோட கவனிச்சுக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறாளே, அதே அன்போடு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஒரு நிமிஷம் ஆசைப்பட்டுட்டேன். ஆனா, எனக்குத்தான் ஆசைப்படுவதற்கு யோக்கியதை இல்லையே…” என்று குரல் தழுதழுக்க அமைதியானார்.​அவர்கள் அப்படிப் பேசிக் கொண்டிருக்க, கழிவறையிலிருந்து சந்தோஷ் சத்தம் கொடுக்கவே, மீனா, “போய் தம்பிக்குக் கால்-கை கழுவி விடுமா…” என்று கூறிவிட்டு, தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றாள்.​மாலைப் பொழுது கவிழ்ந்த வேளையில் ஆனந்தன் வீடு வந்து சேர்ந்தான். அவனுக்கு வரவேற்பு அளித்த மீனா, “அண்ணா… மத்தியானம் பூரா அம்மா உன்னைப் பத்தியேதான் பேசிட்டு இருந்தாங்க,” என்றாள்.​ஆனந்தன் புருவங்களை உயர்த்தியபடி, “அம்மா எதுக்காக என்னைப்பத்திப் பேசணும்?” என்று கேட்டான்.​மீனா புன்னகையுடன், “அம்மாவுக்கு மதுவோட டீச்சரை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சாம். அதோட, கார்த்திக் யாரோ ஒருத்தருக்கு மாப்பிள்ளை வேணும்னு கேட்டு வந்தானே, அவன் வீட்டிலேயே ஒரு பொம்பளப் புள்ள இருக்குது… அதைப்பத்தி நம்மகிட்ட சொல்லவே இல்லையேன்னு அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க,” என்றாள்.​ஆனந்தனின் முகத்தில் தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியதுடன், தன் நண்பனின் மறைமுகச் செயலின் மீது ஒரு சிறு கோபமும் எழாமல் இல்லை. “அவன் கிடக்கிறான் திருட்டு ராஸ்கல்!” என்று மனத்திற்குள்ளேயே கார்த்திக்கைத் திட்டிவிட்டவன், தன் முகத்தில் படர்ந்த மெல்லிய புன்னகையை மறைத்துக்கொண்டு, தன் அறை நோக்கிச் சென்றான்.​‘அம்மா… உங்களது அந்த ஆசைப்படியே அனுதான் உங்களுக்கு மருமகளாக வரப் போகிறாள்… அதுவும் சீக்கிரமே!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே குதுகலத்துடன் தன் பணியைத் தொடர்ந்தான் ஆனந்தன்.​அனுஷா பள்ளியிலிருந்து வீடு திரும்பியவுடன் முகம், கை, கால்களைக் கழுவிவிட்டுச் சோபாவில் வந்து அமர்ந்தாள். வனஜா, “அமுதா, அனுவுக்குக் காபி கொடும்மா,” என்றார்.​அமுதா காபியை ஆற்றி எடுத்துக்கொண்டு வந்து அனுஷாவின் கையில் கொடுத்தாள். அதை வாங்கிப் பருகியபடியே அனுஷா, “இன்றைக்கு ஸ்கூல் பிரின்சிபால், அனாதை ஆசிரமத்தில் இருக்கிற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, அவங்களோடவே இருந்து கவனித்துக்கொள்ள ஒரு டீச்சர் வேணும்னு சொன்னாங்க. நான் அந்த வேலைக்குப் போகத் தயாராக இருக்கிறதா சொன்னேன், ஆனால்…” என்றாள்.அமுதா, “என்ன ஆனால்?”“எனக்கு சின்ன வயசாம் பெத்தவங்க சம்மதம் வேணுமாம்”​வனஜா உடனே, “சரியாத்தானே சொல்லியிருக்கிறாங்க! இப்போ எதுக்காக நீ அனாதை ஆசிரமத்துக்குப் போகணும்னு ஆசைப்படுற? உனக்குச் சொல்லிக்கொள்ள சொந்தம் என்று யாரும் இல்லையா?” என்றார்.​அமுதா அனுஷாவின் அருகில் அமர்ந்து, “ஆமாம்க்கா… அவள் புத்தியில் உரைக்கிற மாதிரி கேளுங்க,” என்றாள்.​அனுஷா கண்கலங்கியபடியே, “என்னோட வருணுக்கு குழந்தைகள் மேல ரொம்ப விருப்பம். அவனோட ஆசைப்படி நான் குழந்தைதான் பெற்றுக்கல; ஆனா மற்ற குழந்தைகளுக்காவது அம்மாவாகவும் டீச்சராகவும் வாழ்ந்துவிட்டு அவனோட ஆசையை நிறைவேற்றப் போறேன்,” என்றாள்.​அமுதா உருக்கமாக, “அவர் உயிரோட இருந்திருந்தால் உனக்கும் குழந்தையும் குடும்பமும் இருந்திருக்கும். அவர் இல்லாததால நீ எங்களுக்குக் குழந்தையா திரும்பி வந்துட்ட. இப்பவும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை; அவர் ஆசைப்படி நீ ஒரு கல்யாணம் பண்ணி குழந்தை பெற்றுக்கொள்,” என்றாள்.​அனுஷா, “அம்மா!” என்று சத்தமாகக் கண்டித்துவிட்டு, காபி கோப்பையை அங்கே வைத்துவிட்டு வேகமாக மாடிப்படி ஏறிச் சென்று தனது அறைக்குள் அடைக்கலம் ஆனாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!