Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 4

CHAPTER 4

மனசு – 4

By karuppiahrajesh70@gmail.com · October 6, 2026

0

​மதில் தாண்டுமா மனசு – 4

மதுவிற்கு அனுவிடம் டியூஷன் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தன் தோழிகளிடம் தீவிரமாக விசாரித்து, ஒருவழியாக அனுவின் வீட்டு முகவரியை மிகச் சரியாகக் குறிப்பெடுத்துக் கொண்டுதான் வீடு திரும்பினாள்.

​பள்ளியிலிருந்து அவளை அழைத்து வந்த ஆனந்தன், வீட்டின் வாசலில் காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டான். வீட்டிற்குள் நுழையும்போதே, வரவேற்பறைக்கு வெளியே பழைய மர நாற்காலியில் அமர்ந்திருந்தான் சந்தோஷ். அவளை வரவேற்பதற்காகவே காத்திருப்பது போல் அவனது முகத்தில் ஒருவித மெய்மறந்த புன்னகை.

​மகிழ்ச்சியோடு ஓடிவந்த மது, “அம்மா…” என்று தன் தாயை அன்போடு அழைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

ஆனால், அவளது மெல்லிய குரலை விடவும் உரக்க, “அக்கா…” என்று சந்தோஷின் தடுமாறும் குரலும், அதைத் தொடர்ந்த அவனது அசைவுகளும், எச்சில் வடியும் கைத்தட்டல்களும்தான் அந்த இடத்தை நிரப்பின.

​

மீனாவிற்குத் தன் மகள் அழைத்தது கேட்டதோ இல்லையோ, தம்பியின் குரல் தெளிவாகக் கேட்டது. உடனே தன் அறையிலிருந்து பதற்றத்தோடு வெளியே வந்தவள், “மதுக்குட்டி… வந்துட்டீங்களா?” என்று வாஞ்சையோடு மகளை வாரி அணைத்துக் கொண்டாள்.

அவளைத் தொடர்ந்து ஆனந்தனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

​மது உடனே மீனாவின் கையைப் பிடித்து இழுத்து, “அம்மா, நாம ரூமுக்கு போகலாம் வாங்க… இங்க கிரவுட் அதிகமா இருக்கு!” என்று சந்தோஷையும் ஆனந்தனையும் சுட்டிக்காட்டிச் செல்லமாகச் சிணுங்கினாள்.

​

மீனா ஆனந்தனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டு, மகளுடன் அறைக்குள் சென்றாள்.

​

ஆனந்தன் சோபாவில் களைப்போடு அமர்ந்து, “அம்மா… காபி இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்,” என்று குரல் கொடுத்தான்.

​”கொஞ்ச நேரம் உட்காருடா, இதோ கொண்டு வரேன்,” என்று கனகம் சமையலறையிலிருந்து பதில் குரல் கொடுத்தார்.

​

சிறிது நேரத்தில் கனகம் சூடான காபியோடு வெளியே வர, மீனாவும் மதுவும் தங்களின் அறையிலிருந்து புன்னகையோடு வெளியே வந்தார்கள்.

ஆனந்தன் தாயிடமிருந்து காபியைப் பெற்றுக்கொண்டு மீனாவைப் பார்த்து, “உன் பொண்ணு அப்படி என்ன ரகசியம் சொல்ல உன்னை ரூமுக்கு கூட்டிட்டு போனா?” என்று வேடிக்கையாகக் கேட்டான்.

​”அவளோட கிளாஸ் டீச்சர் வீட்டின் அட்ரஸைக் கண்டுபிடிச்சுட்டாளாம்…” என்றாள் மீனா சிரித்தபடி.

​ஆனந்தன் காபியைச் பருகியபடியே, “எங்கே இருக்குதாம்?” என்றான்.

​

“அவ சொல்றதைப் பார்த்தா நம்ம கார்த்திக் வீட்டுப் பக்கத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். பேசாம கார்த்திக்கு போன் போட்டு கேளுங்களேன் அண்ணா…” என்றாள் மீனா.

​ஆனந்தன் யோசனையுடன், “நான் அந்தத் தெருவுக்கு அடிக்கடி போயிருக்கேனே… ஆனா அந்த டீச்சரை ஒரு முறை கூட பார்த்ததில்லையே! இதே ஊர் தானா, இல்ல வெளியூர்ல இருந்து வந்து தங்கியிருக்காங்களா?” என்று கேட்டான்.

​

அதைக் கேட்ட கனகம் குறுக்கிட்டு, “நீ என்ன இந்த ஊர்ல இருக்கிற பொம்பளைங்களையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க போறவன் மாதிரி பேசுறே?” என்று மகனைக் கடிந்து கொண்டார்.

​தாயின் அந்த இயல்பான பேச்சைக் கேட்டு ஆனந்தனின் இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. உடனே தன்னுடைய கைபேசியை எடுத்து கார்த்திக்கிற்கு அழைப்பு விடுத்தான்.

​

மறுமுனையில் இணைப்பை ஏற்ற கார்த்திக், “ஆனந்த்! நல்லாயிருக்கியாடா? என்ன திடீர்னு போன் பண்ணியிருக்க? பெரிய முதலாளி ஆனதிலிருந்து வீட்டுப் பக்கம் வரதே இல்லையே நீ!” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டான்.

​”என்னடா பெரிய முதலாளி… நாளுக்கு நாள் வேலை அதிகமாகிக்கிட்டே போகுது, நகரக்கூட முடியல. நீயாவது வீட்டுக்கு வந்து போயிருக்கலாம்ல? சரி, இருக்கட்டும், நான் ஒரு விவரம் கேட்குறதுக்காகத்தான் போன் பண்ணினேன். உங்க வீட்டுப் பக்கத்துல நம்ம மதுவோட ஸ்கூல் டீச்சர் யாராவது குடியிருக்காங்களாடா?” என்றான் ஆனந்தன்.

​கார்த்திக் சிறிது நேரம் அமைதியாக யோசித்துவிட்டு, “அப்படி யாரும் இல்லையேடா! எங்க தெருவுல இருக்கிறதெல்லாம் பெரிய படிப்பெல்லாம் படிக்காத சாதாரண ஜனங்க. அங்க போய் ஏது டீச்சர்?” என்றான்.

​”அவங்க இந்த ஊர்க்காரங்க கிடையாது, வெளியூர்க்காரங்களாம்…” என்ற ஆனந்தன், பின்னால் நின்ற மதுவிடம் திரும்பி, “அவங்க பேர் என்ன சொன்ன?” என்று வினவினான்.

​”அனுஷா…” என்று மது சட்டென்று பதிலளிக்க, அதை அப்படியே வாங்கி, “அனுஷாவாம்டா…” என்று கார்த்திக்கிடம் தெரிவித்தான்.

​”அனுஷாவா! டேய், அவ என்னோட தங்கச்சிடா! ஆமா, நம்ம பாப்பா படிக்கிற ஸ்கூல்லதான் வேலை பார்க்குறா… உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்,” என்றான் கார்த்திக் வியப்பாக.

​”உனக்கு தங்கச்சியா?” என்ற ஆனந்தன்,

“எப்படிடா இத்தனை வருஷமா யார் கண்ணுக்கும் காட்டாம வளர்த்தீங்க?” என்று நக்கல் தொனிக்கும் குரலில் கேட்டான்.

​”அவ என்னோட சித்தி பொண்ணுடா. அவங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டை. இப்போ கொஞ்ச நாளாத்தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கா,” என்று விளக்கமளித்தான் கார்த்திக்.

​”ஓ, சரிடா… அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்,” என்றான் ஆனந்தன்.

​கார்த்திக் அவசர அவசரமாக, “எதுக்காகடா அவளைப் பத்தி விசாரிச்ச?” என்று மனதிற்குள் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு கேட்டான்.

​”இல்லடா, பாப்பா அந்த மிஸ் கிட்டதான் டியூஷன் படிப்பேன்னு அடம் பிடிக்கிறா… அதான் விசாரிச்சேன். சரி, இப்போ எனக்கு வேலை வந்துடுச்சு, அப்புறம் பேசுறேன்,” என்று கூறிய ஆனந்தன், கார்த்திக் அடுத்து என்ன பேச வருகிறான் என்று கூடக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

​

சுற்றி நின்ற குடும்பத்தினரைப் பார்த்து ஆனந்தன், “அந்த டீச்சர் கார்த்திகோட சித்தி பொண்ணாம். அருப்புக்கோட்டையில இருந்து இங்கே வந்து வேலை பாக்குறா போல இருக்கு,” என்று பொதுவாகச் சொன்னான்.

​

அதைக் கேட்ட கனகம், “பெரிய அருப்புக்கோட்டை ஊருக்குள்ள ஒரு டீச்சர் வேலை கிடைக்கலையாக்கும்… இங்க வந்து வேலை பார்க்குறா!” என்று சலித்துக் கொண்டே காபி டம்ளரை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.

​மீனா முகத்தில் புன்னகையோடு, “அப்போ நம்ம மதுவுக்கு டியூஷன் பீஸ் ஃபிரீ தான்!” என்றாள்.

​

“ஏன் அம்மா, அவங்க நம்ம சொந்தக்காரங்களா?” என்று ஆர்வமாகக் கேட்டாள் மதுமிதா.

​”ஆமா, நமக்கு சொந்தக்காரங்க தான்… ஆனா கொஞ்சம் தூரத்து சொந்தம்,” என்று மீனா சொல்லி முடிப்பதற்குள்,

சந்தோஷ் தன் கைகளைத் தட்டி சத்தமாகச் சிரித்துக் காண்பித்தான்.

​அவனைப் பார்த்த மது, “இந்த லூசுக்கு என்ன புரிஞ்சதுன்னு இப்போ சிரிக்குது?” என்று செல்லமாகச் சலித்துக் கொண்டே, சந்தோஷின் தலையில் லேசாக ஒரு குட்டு வைத்தாள்.

​சந்தோஷ் வலித்ததாகக் காட்டிக் கொள்ளாமல், இன்னும் சத்தமாகச் சிரித்தபடி, “அக்கா… அக்கா…” என்று அவளை நோக்கி அன்புடன் அழைத்தான்.

​

ஆனந்தன் உடனே, “ஏய் மது, எதுக்காக அவனை அடிச்ச?” என்று கண்டித்தான்.

​மீனாவும், “மது! உனக்கு எப்போதிலிருந்து கை இப்படி நீளுது? மாமாவை எதுக்கு அடிச்ச?” என்று அதட்டினாள்.

​மது தன் பொய்க் கோபத்தைக் காட்டி, “நான் அடிச்சது அவனுக்கு வலிக்கவே இல்ல, அதனாலதான் சிரிக்குறான்! நீங்க ரெண்டு பேரும் எதுக்காக என்கிட்ட சண்டை போடுறீங்க?” என்று சிணுங்கிக் கொண்டே தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

​மறுநாள், பள்ளி விடுமுறை நாள் என்பதால், இரவில் மதுவை அழைத்துக்கொண்டு கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்றான் ஆனந்தன்.

​கார்த்திக்கின் வீட்டில் அவனது தாயார் வனஜா, தொலைக்காட்சி பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்.

​வாசலில் நின்றபடியே, “கார்த்திக்…” என்று ஆனந்தன் குரல் கொடுக்க, “உள்ள வாங்கப்பா, கதவு திறந்துதான் இருக்கு!” என்று தொலைக்காட்சியின் சத்தத்தையும் மீறிப் பதிலளித்தார் வனஜா.

​

ஆனந்தன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து, “அத்தை, நான் ஆனந்தன் வந்திருக்கேன்… கார்த்திக் இல்லையா?” என்று கேட்க,

வனஜா அவனைக் கண்டு முகமலர்ச்சியுடன், “வா ஆனந்து! இது யாரு, நம்ம மீனுக்குட்டி பொண்ணா? நல்லா வளர்ந்துட்டாளே!” என்று மதுவைப் பார்த்து கைகாட்டினார்.

மதுவோ தன் தாய்மாமனின் கையைப் பயத்தோடு இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவனோடு ஒடுங்கி நின்றாள்.

​

ஆனந்தன், “மது, நம்ம வீட்டுக்கு வருவாரே கார்த்திக் சித்தப்பா… அவரோட அம்மாடா இது. பாட்டிக்கு ஹாய் சொல்லு,” என்று அறிமுகப்படுத்தினான்.

மதுவும், “ஹாய் பாட்டி…” என்று கடமைக்குச் சொல்லிவிட்டு, வீட்டில் ‘அனு மேம்’ எங்கே இருக்கிறார் என்று தன் கண்களால் தேடத் தொடங்கினாள்.

​குழந்தை யாரையோ தேடுவதைக் கவனித்த வனஜா, “யாருப்பா வேணும்?” என்று கேட்க,

ஆனந்தன், “வந்த விஷயத்தையே மறந்துட்டேன் அத்தை… கார்த்திக்கோட சித்தி பொண்ணு டீச்சரா இருக்காங்களாமே, அவங்ககிட்ட மதுவை டியூஷன் சேர்த்துவிட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்றான்.

​”ஓ… அந்த  டீச்சர் மாடியிலதான் இருக்கா. நீ போய் கூட்டிட்டு வாடா செல்லம்,” என்று வனஜா மதுவிடம் சொல்ல, அனுவைப் பார்க்கும் ஆர்வத்தில், “பாட்டி, படிக்கட்டு எங்கே இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே மாடியை நோக்கி விரைந்தாள் மது.

​ஆனந்தன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “கார்த்திக் எப்ப வருவான் அத்தை? அவனோட வைஃபையும் காணோம்?” என்று விசாரிக்க,

வனஜா பெருமூச்சுடன் பதிலளிக்க வாயெடுத்தார்.

​அதற்குள் மாடியிலிருந்த அனுவை அழைத்துக் கொண்டு மது கீழே வந்துவிட்டாள். அனுவைக் கண்டதும் வனஜாவின் குரல் தழுதழுத்தது.

“கார்த்திக்கோட பொண்டாட்டிக்கு என்னோட இருக்கிறதுல விருப்பமில்லை ஆனந்து. அதனால அவனைக் கூட்டிக்கிட்டுத் தனிக் குடித்தனம் போயிட்டா… எனக்கும் அடிக்கடி உடம்புக்கு முடியாம போகுது, அதான் என் தங்கச்சியையும் அவ குடும்பத்தையும் எனக்கு ஒத்தாசையா இருக்கறதுக்கு இங்க வரவழைச்சிருக்கேன்,” என்றார் வருத்தத்துடன்.

​

ஆனந்தன் அதிர்ச்சியுடன், “கார்த்திக் அப்படிப்பட்ட ஆள் இல்லையே அத்தை…” என்று தன் நண்பனுக்காக மறுத்துப் பேச முயன்றான்.

​

ஆனால் வனஜாவோ, ‘தான் பெற்ற பிள்ளை தன்னை விட்டுச் சென்ற நிஜமான காரணத்தை சொல்லமுடியாத’ வேதனையை மனதிற்குள் பூட்டிவைத்துக்கொண்டு, “என்னப்பா சொல்றது… பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, பெத்தவங்களை யாரும் கண்டுக்கிறதே இல்லை,” என்று புலம்பினார்.

​

ஆனந்தனுக்கு அனுவின் மீது இப்போது மரியாதை இன்னும் கூடியது. ‘பெற்ற பிள்ளையே பொண்டாட்டியின் பேச்சைக் கேட்டு வெளியேறிச் சென்ற சூழலில், தாயைப் போல வனஜாவைக் கவனித்துக் கொள்ள வந்த தங்கமகள் இவள்!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

​

மது, அனுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, “இவர் தான் என் மாமா!” என்று ஆனந்தனை அறிமுகப்படுத்தினாள்.

​

அனுஷா புன்னகையுடன், “வணக்கம் சார்,” என்று ஆனந்தனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, “மது நல்லா படிக்கிற குழந்தை ஆச்சே… அப்புறம் எதுக்கு டியூஷன் அனுப்பணும்னு நினைக்கிறீங்க?” என்று வினவினாள்.

​”உங்ககிட்டதான் டியூஷன் படிப்பேன்னு ஒரே அடம்பிடிச்சா… அதான் கூட்டிட்டு வந்தேன்,” என்றான் ஆனந்தன்.

​குறுக்கிட்ட வனஜா, “தம்பி நம்ம கார்த்திக் கூட ஒண்ணா படிச்சவன் தான்மா… நமக்குச் சொந்தக்காரன் தான்,” என்று அனுவிடம் ஆனந்தனை அறிமுகப்படுத்தினார்.

​”ஓ, அப்படியா…” என்ற அனுஷா, ஆனந்தனை நோக்கி, “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று இயல்பாகக் கேட்டாள்.

​ஆனந்தன் சற்றுத் பதற்றத்துடன், “எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைங்க!” என்று சட்டென்று பதிலளித்தான்.

​

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!