Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 24

CHAPTER 24

மனசு – 24

By karuppiahrajesh70@gmail.com · November 16, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 24​

சந்தோஷ் இறந்து மூன்றாவது நாள். சுகந்தி, ஆனந்தின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்திருந்தாள்.​அங்கே கனகம் தன் மகனைப் பறிகொடுத்த துக்கத்தில் முற்றிலும் சோர்ந்து போய்க் கிடந்தார். ஆனந்தும் அவனது தங்கையும் உயிரற்ற ஜடங்களைப் போல, நிம்மதியை இழந்து அங்கும் இங்கும் நடைபிணமாக அலைந்து கொண்டிருந்தனர். அனுஷா அந்த வீட்டின் மருமகளாக வந்து ஓராண்டு காலம் ஆகியிருந்தாலும், சந்தோஷின் மரணம் அவளுக்குள் ஆழமான வருத்தத்தை அளித்திருந்தாலும், அதை அவள் வெளியில் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை.​வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் முகபாவனைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுகந்தி, அனுஷாவைத் தனியாக அழைத்துச் சென்று பேசத் தொடங்கினாள்.​”அனுஷா… நீ இந்த வீட்டுக்குப் புதுசுன்னாலும், அந்தப் பையன் மேல நீ ரொம்ப அக்கறையா நடந்துக்கிட்டதா எல்லாரும் சொல்லிக் கேள்விப்பட்டேன். உன்னோட மாமியாரும் நாத்தனாரும் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க; ஆனா, காலம் போகப் போக அவங்க எப்படியாவது தேறிடுவாங்க. ஆனா உன் புருஷனை பார்கிறதுக்கே பாவமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? ஆனா உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் பெருசா ஈடுபாடு இருக்கிற மாதிரி தெரியலையே! எது எப்படியோ, என்ன கோபமா இருந்தாலும் இந்த நேரத்தில் அதைக் காட்ட வேண்டாம். கோபத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு, அவரை ஆறுதல் படுத்தித் தேத்துற வழியைப் பார்.”​ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்த சுகந்தி, “பாவம்… வெளியில நாலு இடம் போயிட்டு வர்ற மனுஷன் இல்லையா? வீட்டுக்குள்ள நிம்மதியா இருக்கணும்னு கொஞ்சம் அக்கறை எடுத்துப் பாரு. நான் வரட்டுமா?” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றாள்.​சுகந்தி சொன்ன அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், அப்படியே சிலையாய்ச் சமைந்து தன்நிலை மறந்து அமர்ந்திருந்தாள். சுகந்தி “நான் வரட்டுமா?” என்று விடைபெற்ற வார்த்தைகள் கூட அனுஷாவின் செவிகளில் ஏறவில்லை.​அதே நேரத்தில், “நீங்க ரெண்டு பேரும் விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? உங்களுக்குள் என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியாது” என்று சுகந்தி சொன்னபோது, ‘நாம் ஆனந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இங்கே வந்திருக்கிறோம் என்ற உண்மையை இவளிடம் மறைத்துவிட்டோமே!’ என்ற எண்ணம் அவளுக்குள் உரைத்தது.​அதை நினைத்துப் பார்த்தவளுக்கு மனம் அலைபாயத் தொடங்கியது. ‘ஏன் அதை மறைக்க நினைத்தேன்? முதல் திருமணத்தை மறைத்து வைக்க வேண்டும் என்று என் மனதுக்கு ஏன் தோன்றியது? அப்படி என்றால், என் வருணை நான் மறந்துவிட்டேனா? நான் ஏற்கனவே திருமணமானவள் என்பதை எதற்காக மறைக்கத் துடித்தேன்?’ என்பது போன்ற பல்வேறு கேள்விகள் அவள் மூளைக்குள் விடைதெரியாமல் சுழன்று கொண்டிருந்தன.​சந்தோஷின் எட்டாம் நாள் காரியம் நிறைவுற்ற இரவு. அனுஷா தனியாகக் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அவளது முதல் கணவன் வருண் அவளோடு பேசிய பழைய நினைவுகள் கனவுக் காட்சிகளாகக் கண்களுக்குள் விரிந்தன.​”அனு, எல்லா குழந்தைகள் மேலயும் இவ்வளவு அன்பா நடந்துக்கிறியே… நாளைக்கு நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா, இதே அக்கறை மத்த குழந்தைகள் மேலயும் இருக்குமா?” என்று வருண் குறும்புடன் கேட்டான்.​அனுஷா புன்னகைத்தபடி, “இந்த அளவுக்கு அக்கறை இருக்குமா இல்லையான்னு தெரியல. ஆனா, நம்ம குழந்தை மேல நிறைய அக்கறை எடுத்துக்கிட்டாலும், மத்த பிள்ளைகள் மேல கொஞ்சமாவது நிச்சயம் அக்கறை காட்டுவேங்க” என்றாள்.​”அப்படியா… அப்போ நான் உன்னோட வயித்துல குழந்தையா பிறந்தா, என்னையும் இதே அக்கறையோட கவனிச்சுப்பியா?” என்று வருண் ஏக்கத்துடன் கேட்க, “என்னோட வருண் குழந்தையா பிறந்தா, நான் எவ்வளவு ஆசையா அள்ளிக் கொஞ்சிக் கொண்டாடுவேன் தெரியுமா!” என்றாள் அனுஷா.​திடுக்கிட்டுக் கண்விழித்து அமர்ந்தாள் அனுஷா. கட்டிலுக்குக் கீழே தரையில் ஆனந்தன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.​’எனக்கு ஏன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கனவு வந்தது? அன்று வருண் என் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று விளையாட்டாகச் சொன்னதை, நிஜத்திலும் நிறைவேற்ற ஆசைப்படுகிறாரா? ஒருவேளை என்னோட மனசு என்னையும் அறியாமல் ஆனந்த் பக்கம் சாய்கிறதா? நானும் ஆசைக்கு அடிமையாகிவிட்டேனா?’ என்று பலவாறாக யோசித்து குழம்பியவள், எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தாள். ஆனால், கலைந்து போன தூக்கம் அதன் பிறகு அவள் கண்களைத் தீண்டவே இல்லை.​சோகமும் வெறுமையுமாகப் பதினைந்து நாட்கள் கடந்துவிட்டன. பதினாறாவது நாள் காரியம் செய்வதற்காக சேது சமுத்திரம் கடற்கரைக்கு ஆனந்தன், கார்த்திக், சிவம் ஆகிய மூவரும் உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர்.​சந்தோஷிற்குப் பதினாறாம் நாள் காரியங்களைச் செய்து முடித்து அனைவரும் வீடு திரும்பிய நேரம். ஆனந்த், தன் தாய் கனகத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். ‘காரியம் என்ற பெயரில் இந்தப் பதினாறு நாட்களும் என் மகனின் பெயர் எங்களோடு உறவாடிக் கொண்டிருந்தது; இனி அவன் பெயரும் அந்நியமாய্প்ப போய்விடுமே!’ என்று ஆதங்கப்பட்டு அழுதபடியே, சந்தோஷ் தங்கியிருந்த அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார் கனகம்.​தாயின் நிலையைக் கண்டு உள்ளம் தவித்த ஆனந்தனும், தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்திருந்த மற்ற சொந்த பந்தங்கள் அனைவரும் புறப்படுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். மீனாவும் தன்னுடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்புவதாக அனுஷாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.​இப்போது அந்தப் பெரிய வீட்டை மயான அமைதியும் வெறுமையும் சூழ்ந்து கொண்டன. ‘இந்த வீட்டில் இதுவரை ஆண்டு கொண்டிருந்த கலகலப்பு எங்கே சென்றது?’ என்று மனம் வருந்திய அனுஷா, ஆனந்தனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணி அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.​”எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறீங்க?” என்றபடி உள்ளே நுழைந்தவளைக் கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்தான் ஆனந்தன். அவள் வந்த காரணத்தைப் புரிந்து கொண்டவன் போல, தானாகவே ஒரு முடிவுக்கு வந்தவனாய் பேசத் தொடங்கினான்.​”வாங்க அனு… என் தம்பிக்குச் சேவை செய்ய வாங்கன்னு நான் கூப்பிட்டதுக்காக இங்கே வந்திருந்து, உங்களால முடிஞ்ச எல்லா நல்லதையும் செஞ்சுட்டீங்க. இனி இந்த வீட்டுல உங்களைத் தங்க வைக்கிறதுக்கு எனக்கு எந்த ஒரு காரணமும் இல்ல. நீங்க தாராளமா உங்க மனசுப்படி என்ன வேணும்னாலும் செய்யலாம், எங்கே வேணும்னாலும் போகலாம்” என்று சொன்னவனின் வார்த்தைகள் தழுதழுத்தன.​அனுஷா அப்படியே சிலையென நின்றுவிட்டாள். கட்டிலில் அமர்ந்திருந்த ஆனந்தன் அவளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு, “மீண்டும் ஒருமுறை உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அனு. நீங்க போயிட்டு வாங்க” என்றான்.​அவன் கும்பிடுவதைக் கண்டு பதறிப் போன அனுஷா, ‘வேண்டாம்’ என்று கையசைத்து மறுத்தபடியே அருகில் வந்தாள்.​”நான் என்னோட புருஷனை இழந்துட்டு ஆதரவில்லாம நிற்கும்போது, நீங்க எனக்கு வாழ்க்கை கொடுக்க முன்வந்தீங்க. ஆனா எனக்கு அது அப்போ புரியல. என்னோட கஷ்டம் தான் பெருசுன்னு கண்ணை மூடிக்கிட்டு இருந்தேன். ஆனா நீங்க, எத்தனை கஷ்டங்களை உங்களுக்குள்ள அடக்கிக்கிட்டு, இந்தக் குடும்பத்துக்காகவும் அவங்க சந்தோஷத்துக்காகவும் உங்களைச் சந்தோஷமாவே காட்டிக்கிட்டு இருக்கீங்க! உங்களுக்கு நான் ஆறுதல் சொல்ல வந்தேன்; ஆனா நீங்க நான் வருத்தப்படுவேன்னு எனக்கு ஆறுதல் சொல்லி, என் மனசுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கச் சொல்றீங்களே!” என்றவள் தன் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்.​விசும்பல்களுக்கிடையே அவள் தொடர்ந்தாள்: “நான் உங்களோட இருந்த இந்த ஒரு வருஷமும், என் மனசை அடக்கி என்னைக் கட்டுப்படுத்திக்கத்தான் முயற்சி பண்ணினேன்; ஆனா என்னோட உண்மையான இயல்பு அது இல்ல. நான் உங்களை ஒவ்வொரு முறையும் பிரமிச்சுத்தான் பார்த்திருக்கேன். இப்போ கூட, சுகந்தி அக்காகிட்ட நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு தைரியமா சொல்லல. ஏன்னா, என் முதல் திருமணம் யாருக்கும் தெரிஞ்சிடக் கூடாதுன்னு மறைக்கத்தான் என் மனசு முயற்சி பண்ணியிருக்கு.​நான் என்னையும் அறியாமல் உங்களை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதே நேரத்துல என் வருண் என்னை எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கிட்டாரு; அவருக்கு நான் எந்தத் துரோகமும் செஞ்சிடக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, உயிரோட இல்லாத ஒருத்தருக்குத் துரோகம் செய்யக் கூடாதுன்னு நினைச்ச நான், உயிரோட இருக்கிற உங்களோட மனசைப் பத்தி யோசிக்கவே இல்லை. என்னை மன்னிச்சிடுங்க ஆனந்த்… வருணை என்னால மறக்க முடியல, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க ஆனந்த்?” என்று அவள் கதறி அழுதாள்.​அவளது கோலத்தைக் கண்ட ஆனந்தனின் மனம் இளகியது. ஆதரவாக அவளைப் பார்த்தவன், மென்மையாகப் பேசினான்:​”உங்களை யாரு உங்களோட வருணை மறந்து வாழச் சொன்னது அனு? நீங்கள் அவரோட நினைவுகளோடயே வாழுங்க…”​அவன் அப்படிச் சொன்னதும், அனுஷாவுக்கு ஆனந்தன் தன்னை வீட்டைவிட்டு வெளியேறிப்போகச் சொல்வதாகத் தோன்றியது. பதறியவளாய், “ஆனந்த்…” என்று தடைபட்ட குரலில் அழைக்க, அவளது தவிப்பைப் புரிந்துகொண்டு மெதுவாய் புன்னகைத்தான் ஆனந்தன்.​”நான் நிஜமாதான் சொல்றேன் அனு! நீங்க உங்களோட வருனோட நினைவுகளை மறந்துவிட்டு இங்கே இருங்கன்னு நான் சொல்லல; அவர நினைச்சுக்கிட்டே இருங்க. நான் ஏதாவது உங்களை தவறாகப் பேசியிருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன். அதேபோல… ரொம்ப தேங்க்ஸ் அனு!” என்றார்.​கூறிய அந்த நன்றி எதற்காக என்று புரியாமல் ஆனந்தனின் முகத்தை ஆழமாகப் பார்த்தாள் அனுஷா. அவள் தவிப்பை உணர்ந்தவனாய், மெலிதாகச் சிரித்தபடியே, “நீங்கள் என்னை நேசித்ததா சொன்னிங்களே… அதுக்காக!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ஆனந்த்.​அவன் விட்டுச் சென்ற வார்த்தைகள் அனுஷாவின் இதயத்தில் ஒரு புதிய அலைகளை எழுப்பிச் சென்றன.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!