Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 21

CHAPTER 21

மனசு – 21

By karuppiahrajesh70@gmail.com · November 5, 2026

0

மதில் தாண்டுமா மனசு – 21

​அன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள் என்பதால், அனுஷா வழக்கம் போலத் தன் வீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.​அப்போது அவளிடம் வந்த ஆனந்தன், “அனு, இன்னைக்கு நான் அருப்புக்கோட்டை வரைக்கும் போக வேண்டியிருக்கு… நீ கொஞ்ச நேரம் கம்பெனியில இருக்க முடியுமா?” என்று கேட்டான். சிறிது நேரம் மௌனமாக யோசித்தவள், “சரி…” என்பது போல அமைதியாகத் தலையசைத்தாள்.​மறுபுறம், மீனா தன் அம்மா கனகத்திடம், “அம்மா, நான் சைட் வரைக்கும் போயிட்டு வந்துர்றேன். மது எழுந்தா சாப்பிடச் சொல்லுங்க,” என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே அமர்ந்திருந்த சந்தோஷ், கனைக்கும் குரலில் “அக்கா… அக்கா…” என அழைத்தபடி அவளுக்குத் தன் பிஞ்சுக்கரங்களால் டாட்டா காண்பித்தான்.​அதைக் கண்டு நெகிழ்ந்த கனகம், “என் ராசா… உனக்கு அக்கா வெளியில போறது புரியுதா தங்கம்?” என்றபடி அவனது கன்னத்தைத் தடவி நெற்றியில் முத்தமிட்டார். மீனாவுக்கும் அவனது இந்தச் செயல் புதுமையாகவும் அளவிலா மகிழ்ச்சியையும் தந்தது. அவனது தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள், “அக்கா போயிட்டு வர்றேன், சரியா?” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.​அருகிலிருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தனுக்கு, ‘அனுஷா மட்டும் இன்னும் சில நாட்களுக்கு முன்பாகவே நம் வாழ்க்கைக்குள் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!’ என்ற ஏக்கம் மெதுவாய் மனதைத் தழுவியது.​அனுஷா தன் அறையிலிருந்து தயாராகி வெளியே வந்து நிற்க, கனகம், “ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டே போங்கப்பா…” என்றபடி டைனிங் டேபிளில் உணவைப் பரிமாறினார். ஆனந்தனும் அனுஷாவும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்துப் புறப்பட்டனர். மீனாவுக்கு டாட்டா காட்டியது போலத் தனக்கும் சந்தோஷ் டாட்டா காட்ட மாட்டானா என்ற ஆசை ஆனந்தனுக்குள் எழுந்தது.​உடனே கனகத்திடம், “அம்மா, நான் வேலைக்குப் கிளம்புறேன்,” என்று விடைபெற்றவன், சந்தோஷிடம் சென்று, “சந்து, நான் வேலைக்குப் போயிட்டு வரவா?” என்றான். ஆனால், சந்தோஷ் அவன் சொல்வதைக் கவனிக்காமல், அனுஷாவின் முகத்தையே ஆசையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.​இதைப் பார்த்த கனகம், “அனுமா… இப்போதான் நம்ம சந்து மீனாவுக்கு டாட்டா காமிச்சு வழியனுப்பி வச்சான். அதுதான் ஆனந்தனும் அவன்கிட்ட சொல்லிட்டு கிளம்புறான்,” என்றார் சிரித்தபடி. அனுஷா மென்னகையுடன் சந்தோஷிடம், “சந்தோஷ்… பாய்!” என்று தன் விரல்களை அசைத்து டாட்டா காண்பித்தாள்.​மறுகணமே சந்தோஷின் முகத்தில் பிரகாசமான புன்னகை பூத்தது. அவன் மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே டாட்டா காண்பித்தான். அதுமட்டுமன்றி, கனகம் அழைப்பதைப் போலவே அனுஷாவைப் பார்த்து, “அம்மா… அம்மா…” என்று மழலை மாறாமல் கூப்பிட்டான்.​அந்த ஒரு வார்த்தையைக் கேட்ட ஆனந்தனுக்கு, தன் வாழ்நாளின் அனைத்துச் சந்தோஷமும் ஒன்றுசேரக் கிடைத்துவிட்டது போல மனநிறைவு ஏற்பட்டது!​சிறிது நேரத்தில் ஆனந்தனும் அனுஷாவும் காட்டன் மில் வளாகத்திற்குள் தங்கள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தனர். வேப்ப மரத்தின் முன்பு இருந்த கல் பலகையில் அமர்ந்திருந்த சுதா, ஓடிவந்து இருவரையும் வரவேற்றாள்.​”வாங்க, வாங்க, அண்ணி! கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் கழிச்சு, இப்போதான் மில்லுக்கு வந்திருக்கீங்க. நாங்களும் உங்க வரவுக்காக எத்தனை நாள் காத்திருந்தோம் தெரியுமா?” என்று தனது பாசத்தை வெளிப்படுத்தினாள் சுதா. அனுஷா மெல்லிய புன்னகையோடு, “நல்லா இருக்கீங்களா சுதா?” என்று நலம் விசாரிக்க, “எங்களுக்கு என்ன குறைச்சல்? உங்களைப் பார்க்காததுதான் பெரிய குறையா இருந்தது. இன்னைக்கு அதுவும் தீர்ந்து போச்சு; வாங்க உள்ள போகலாம்,” என்று அனுஷாவின் கையைப் பற்றிக் கொண்டாள் சுதா.​அப்போது ஆனந்தன், “சுதா, நான் கொஞ்சம் வெளில போகணும்; அவங்களைப் பாத்துக்கோ,” என்றான்.​”அண்ணா, ரொம்பத்தான் பண்றீங்க! இது என்ன ஆள் நடமாட்டம் இல்லாத இடமா? எங்களைப் பார்த்தா மனுஷங்களா தெரியலையா?” என்று செல்லக் கோபம் காட்டிய சுதா, “நீங்க எங்கெங்கே போகணும்னு நினைக்கிறீங்களோ போயிட்டு வாங்க, அண்ணியை நான் பார்த்துக்கிறேன்,” என்றாள்.​சென்ற முறை வந்தபோது மூக்கில் பஞ்சு தூசு நமைச்சலை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இமுறை தனது முந்தானைத் தலைப்பால் மூக்கைப் பொத்திக்கொண்டு உள்ளே சென்றாள் அனுஷா.​அங்கிருந்த பெண்கள் அனைவரும், “வாங்க புதுப்பொண்ணு! உள்ள வரும்போது வெட்கமா இருக்குன்னு முகத்தை மூடிட்டு வர்றீங்களா?” என்று ஒருத்தி கேட்க, இன்னொருத்தியோ, “மூணு மாசம் ஆன பிறகு, இன்னும் என்ன வெட்கம்?” என்று கலகலவெனச் சிரித்தாள்.​அனுஷா, “டஸ்ட் ஒத்துக்கல, அதான்…” என்றாள். உடனே ரமணி, “சுதா, அண்ணிக்கு ஒரு மாஸ்க் வாங்கிக் கொடுடி,” என்றார்.​சுதா, “வாங்க அண்ணி, கடையில் மாஸ்க் வாங்கிட்டு வரலாம்,” என்று அழைக்க, “பரவாயில்லை சுதா, அப்புறம் வாங்கிக்கலாம்,” என்று அனுஷா சொல்லிவிட்டு, அங்கிருந்தவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்தாள். சுதா உடனே அனுஷாவுக்காக மாஸ்க் வாங்க ஓடினாள்.​அடுத்த அறைக்குள் செல்லும்போது அனுஷா மாஸ்க் அணிந்து சென்றாள். அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்தவள் சுதாவிடம், “இந்த ரூம்ல சாரோட சொந்தக்காரங்க மிஷின் ஓட்டிட்டு இருந்தாங்களே, அவங்க எங்கே?” என்று விசாரித்தாள்.​சுதா, “சுகந்தி அக்காவா? அவங்க கர்ப்பப்பை ஆபரேஷன் செய்துட்டு லீவுல இருக்காங்க,” என்றாள்.”அப்படியா, சரி சுதா,” என்று அனுஷா பேச்சை முடித்துக் கொள்ள, சுதா விடாமல், “சுகந்தி அக்கா அண்ணனை ரொம்ப நோகடிச்சிருச்சு. அதோட வாய்க்குத்தான் இப்படி எல்லாம் நடக்குது,” என்றாள்.​”சுதா, அப்படி என்ன பேசுச்சு?” என்று அனுஷா வினவ, “உங்களை கட்டிக்க லட்ச லட்சமா கொடுத்ததா சொல்லிடுச்சு,” என்றாள் சுதா.”அவர் கோபப்பட்டாரா சுதா?””அண்ணனுக்கு செம கோபம்! நான்தான், ‘விடுங்க அண்ணா, அதோட வாய் தெரிஞ்சதுதானே’ன்னு சொல்லி சமாதாதப்படுத்தினேன்,” என்றாள் சுதா.”ரொம்ப தேங்க்ஸ் சுதா,” என்று அனுஷா அதற்கு நன்றியுணர்வுடன் கூறினாள்.​”உங்களுக்குக் கோபம் வரலையா அண்ணி?” என்று சுதா வியப்புடன் கேட்க, அனுஷா இல்லை என்று தலையசைத்தவள், “அவர் சம்பாதிக்கிற மொத்தமும் எனக்குத்தானே?” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.​”அதானே அண்ணி! அந்தப் பொம்பளை சொன்னதுக்கு நாங்களே ரொம்ப கோபப்பட்டுட்டோம்,” என்றாள் சுதா.”இப்போ அவங்களுக்கு ஆபரேஷன் செஞ்சு எவ்வளவு நாள் ஆகுது சுதா?””மூணு நாள் ஆகுது. அவங்க ஒரு மாசம் வரைக்கும் லீவ் சொல்லியிருக்காங்க.””நம்ம கம்பெனியில இருந்து யார் யாரெல்லாம் போய் பார்த்துட்டு வந்தீங்க சுதா?””யாரும் போகல, அண்ணி.””உன்னோட அண்ணன் போய் பார்த்தாரா?” என்று சுதாவிடம் அழுத்தமாகக் கேட்டாள் அனுஷா.​திடுக்கிட்டு அனுஷாவைப் பார்த்தவள், என்ன பதில் சொல்வது என்று விழிக்க, அவளது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அனுஷா, “நான் சந்தேகப்பட்டு கேட்கல, கேசுவலாத்தான் கேட்டேன்,” என்று அமைதியாகக் கூறினாள்.​அதைக் கேட்ட சுதா, “நாங்களே போகல, அண்ணன் மட்டும் தனியா போவாரா?” என்று தன் குரலைத் தாழ்த்திச் சொன்னாள்.”சரி, மூணு நாள் தானே ஆகுது… அடுத்து எப்போ பார்க்கப் போறீங்க சுதா?””யார் பார்க்கப் போனாலும் நான் பார்க்கப் போக மாட்டேன். அது ரொம்ப மோசமா பேசும், அதைப் பார்க்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை.”​”அப்படிப் பேசக்கூடாது சுதா. அவங்க எப்படி நடந்துக்கிட்டாலும், கஷ்டப்படும்போது அதைப் பார்த்து நம்ம சந்தோஷப்படக் கூடாது. அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு சொல்லு? இதுவும் ஒரு வகையில பழிவாங்குற முறைதான். ‘நான் உன்னை மாதிரி கிடையாது, உன்னை விட உசந்தவள்’னு வாய் திறந்து சொல்லாம சொல்றதுக்கு, போய் ஒரு முறை பார்த்துட்டு வா.”​”அப்ப… நான் போய் பார்க்கணும்னு சொல்றீங்களா அண்ணி?””நீ போய் பார்க்கிறாயோ இல்லையோ… நானும் ஆனந்தும் போய் கண்டிப்பா பார்ப்போம்.””நானாவது போய் பார்த்துட்டு வந்துடுவேன், அண்ணனைக் கூப்பிட்டா நிச்சயம் உங்ககூட வர மாட்டாரு.”​அனுஷா அவளுக்கு ஆழமானதொரு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு, கல் பலகையில் இருந்த நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.​மதிய உணவை முடித்துக்கொண்டு, அலுவலகப் பணிகளையும் கவனித்த பிறகு ஆனந்தன் மில்லுக்கு வந்தான். வந்த வேகத்தில் அனுஷாவைப் பார்த்தவன், “வா அனு, சாப்பிடப் போலாம்,” என்றான்.”நம்ம போற வழியில ஹாஸ்பிடல் போயிட்டுப் போலாமா?””ஏன், என்னாச்சு?””எனக்கு ஒன்னும் இல்லை… சுகந்தி ஆபரேஷன் பண்ணி ஹாஸ்பிடல்ல இருக்காங்களாமே?””அவ அவ்வளவு முக்கியமான ஆள் எல்லாம் ஒன்னும் இல்லை. நீ வா… உன்னை விட்டுட்டு சாயங்காலம் நான் போய் பார்த்துக்கிறேன்.”​”நீங்க எப்ப வேணாலும் போய் பார்த்துக்கோங்க. நான் அவங்களைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். என்னை அழைச்சிட்டுப் போவீங்களா, இல்லை நானா பார்த்துக்கவா?”​ஆனந்தன் தன் பிடிவாதத்தை விட மனமின்றிப் பல்லைக் கடித்துக்கொண்டு, “சரி வா, நானே கூட்டிட்டுப் போறேன்,” என்றவன், சுதாவிடம் சென்று சுகந்தி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் முகவரியைக் கேட்டுக் கொண்டான். சுதா முகவரியைச் சொல்லிக்கொண்டே, ‘அண்ணிக்கு எப்படி கட்டுப்பட்டுப் போறாரு!’ என்று வியப்புடன் யோசித்தபடி தலையசைத்தாள்.​சிறிது நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்குச் சென்று சுகந்தியைச் சந்தித்தனர். தான் இவ்வளவு தூரம் அவமானப்படுத்திய மனிதன், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தேடி வந்து நலம் விசாரிக்கிறானே என்ற குற்றவுணர்ச்சியும் நன்றியும் சுகந்தியின் கண்களில் அலைமோதியது. படுக்கையில் இருந்தபடியே ஆனந்தனை நெகிழ்ச்சியோடு பார்த்தாள். ஆனந்தன் தன் பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துச் சுகந்தியின் தாயார் கையில் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு, “நாங்க புறப்படுகிறோம் அத்தை,” என்று கூறிவிட்டு அனுஷாவுடன் அங்கிருந்து வெளியேறினான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!