மதில் தாண்டுமா மனசு – 16
அனுஷா கனகத்தைப் பார்த்து, “உங்ககிட்ட யாராவது மறுமணம் செய்து கொள்ளச் சொல்லித் கேட்டிருந்தால் சம்மதித்திருப்பீர்களா?” என்று கேட்டதும், கனகத்தின் கண்கள் கலங்கிவிட்டன.அவளது தாய் அமுதா, “என்ன வார்த்தை பேசுற நீ? பெரியவங்ககிட்ட மரியாதை கொடுத்துப் பேசத் தெரியாதா?” என்று கடிந்து கொள்ள முயன்றார்.உடனே கனகம், “நீங்க எதுவும் பேச வேண்டாம்மா. அவளாவது என்னை அக்கறையோட விசாரிச்சாளே, அதுவே எனக்குப் போதும், சந்தோஷம் தான்,” என்று பெருந்தன்மையுடன் கூறினார்.அப்போதுதான் அனுஷாவுக்கும், “நாம் இப்படிப் பேசலாமா?” என்ற குற்ற உணர்ச்சி மனதில் எழுந்தது.கனகம் தொடர்ந்து பேசத் தொடங்கினார். “என்கிட்ட யாரும் உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு கேட்டதில்லம்மா. அவங்க கேட்டது வேற… ‘பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரமா பார்த்து வா, ரெண்டு பேரும் தனியா சந்திக்கலாம்’னு கூச்சமே இல்லாம எத்தனையோ பேரு என்கிட்ட கேட்டுருக்காங்க. நானும், ‘பிள்ளைகளைப் பாதுகாக்கணும்னு அதுக்கு சம்மதிக்கலையா? இல்ல, பிள்ளைகளுக்குத் தெரிஞ்சா மானம் கெட்டுப்போயிவிடும் என்ற பயத்துல ஏத்துக்கலையா?’ன்னு அந்த வயசுல எனக்கு விளங்கல.நீ கேட்டது போல, யாராவது ஒரு நல்ல வாழ்க்கை தர முன்வந்திருந்தால் நான் அதை ஏற்றிருப்பேனோ என்னவோ! நான் அந்த வாழ்க்கையை அன்று ஏற்றிருந்தால், கை, கால் திடமா இருக்கிற ஆனந்தும் மீனாவும் எங்கேயோ எப்படியோ உயர்ந்திருப்பாங்க. ஆனால், சந்தோஷை யார் கவனிச்சுப்பா? நானும் அவனைக் கைவிட்டிருந்தா அந்தக் குழந்தை என்ன நிலையில இருந்திருக்கும்? இந்நேரம் உயிரோடு இருப்பானோ மாட்டானோ…” என்று தலையில் கைவைத்து தேம்பி அழுதுவிட்டார்.அனுஷாவின் இதயம் ஒரு நிமிடம் அதிர்ந்து போய்விட்டது. “அம்மா…” என்று அவரை ஆதரவாகத் தடவிக் கொடுத்தாள்.அமுதாவும் கனகத்தின் தலையைத் தடவி, “என் பொண்ணு அறியாம கேட்டுட்டா, மன்னிச்சுடுங்கம்மா! நீங்க மனசு வெறுத்து அவளை எதுவும் சபிச்சுடாதீங்க,” என்று அங்கிருந்த மாரியம்மனிடம் வேண்டுவதைப் போலக் கனகத்திடம் வேண்டினார்.அதற்கு கனகம், “நான் என் பிள்ளையைச் சபிப்பேனா? என்னம்மா பேசுறீங்க?” என்றவர், அனுஷாவைப் பார்த்துக் தொடர்ந்தார்.”இதுவரைக்கும் எங்க ஆனந்துக்குப் பார்த்த பொண்ணுங்க எல்லாரும், ‘சந்தோஷ் இருக்கிற வீட்டுல வாழ முடியாது’ன்னு முகத்துக்கு நேராவே சொல்லியிருக்காங்க. அதை எல்லாம் அவன் ஒரு நாளும் சட்டை பண்ணினது கிடையாது. ஆனால், உன்னை அவன் மனசுல ஆழமா நினைச்சுட்டான்; அவனோட மனசால தப்பா எதுவும் நினைக்கத் தோணாது. நீயும் உயர்வானவள், எந்தக் கலங்கமும் இல்லாதவள் என்று நினைச்சுதான் இந்த இடத்துக்கு வந்து உன்கிட்ட மன்றாடினேன்.நீயும் எல்லாரையும் மாதிரி, ‘சந்தோஷ் இருக்கிற வீட்டுல வாழ முடியாது’ன்னு நேரா சொல்லாமல், எப்படியெல்லாமோ சுத்திவளைச்சு என்னால் முடியாதுன்னு சொல்லிட்ட. உனக்கு இந்த அம்மன் சன்னிதானத்துல வச்சுச் சத்தியமாச் சொல்றேன்… நான் உயிரோட இருக்கிற வரைக்கும் என் பிள்ளையை நானே கவனிச்சுக்குவேன். ஒருவேளை நான் சாகப் போறேன்னு தெரிஞ்சாலோ இல்ல எனக்கு உடல் பாதிப்பு ஏதாவது தென்படும் சமயத்திலேயோ, உங்களுக்கு இடைஞ்சலா என்னோட சந்தோஷை விட்டுட்டுப் போக மாட்டேன். நானே என் கையால அவனைக் கொன்னுட்டு, நானும் என் உயிரை மாய்த்துக்கொள்வேன்!” என்று சொன்னவர் கதறி அழுதுவிட்டார்.அனுஷா, “வேண்டாம்மா…” என்று தலையைச் அசைத்தபடி கண் கலங்கினாள்.அமுதா, “அம்மா, என்ன பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, அமைதியா இருங்க,” என்று அவரைத் தடுத்தார்.அனுஷாவிடம் திரும்பிய கனகம், “நீ எனக்கு மருமகளா வரணும்ங்கிற ஒரே வைராக்கியத்துக்காகத்தான் உன்கிட்ட இப்படி வந்து நிற்கிறேன். அதுக்கு மேல உன் பிரியம்!” என்று கூறிவிட்டு, அவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு வேகவேகமாகக் கோயிலை விட்டு வெளியேறிச் சென்றார்.மாலையில் அனைவரும் ஊர் திரும்புவதற்காக ஒன்று கூடினார்கள். “எல்லாரும் பஸ்ல ஏறுங்க, சீக்கிரமா வீட்டுக்குப் போகலாம். உங்க கூட உட்கார்ந்தவர்கள் யாரு வந்திருக்கா, வரலைன்னு எல்லாரையும் சரி பார்த்துக்கோங்க” என்றான் கார்த்திக்.அனுஷா கலங்கிப்போன முகத்தோடு கூடவே அமுதாவும் நிற்க, அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டிய கனகத்தைக் காணவில்லை என்பதை கார்த்திக் கவனித்தான்.அவன் அமுதாவிடம், “அத்தை, எங்க சித்தி?” என்று கேட்க, அமுதாவால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அனுஷாவின் முகவாட்டத்தையும் அமுதாவின் தயக்கத்தையும் பார்த்தவன், நிச்சயம் அவர்கள் ஆனந்தனுக்காகப் பரிந்து பேசியிருப்பார்கள் என்று புரிந்து கொண்டான்.”சரி, நீங்கள் பஸ்ல ஏறுங்க” என்று அவர்களையும் ஏறச் சொல்லிவிட்டு, கூட்டத்தைக் கவனத்தில் கொண்டு மற்ற விஷயங்களை வீட்டில் பேசிக்கொள்ளலாம் என்று புறப்பட்டான்.பஸ் விருதுநகரை அடைந்ததும், ஆங்காங்கே இறங்க வேண்டியவர்கள் இறங்கிக்கொண்டு இறுதியாக வீட்டின் முன்பு சிலரும் இறங்கிக்கொண்டனர். அனைவரும் வீடு சென்ற பிறகு, ஆனந்தன் குடும்பம் அவர்களது வீட்டிற்குள் வந்து நுழைந்தது.அமுதாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. “கார்த்திக், ஆனந்த் வீட்டுக்கு போன் போட்டு அந்த அம்மா வந்துட்டாங்களானு ஒரு வார்த்தை கேளுப்பா” என்றார்.கார்த்திக், “எந்நேரம் சித்தி, அவங்க கிளம்புனாங்க?” என்றார்.“மதியம் மூணு மணி இருக்கும்.””அப்பவே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே சித்தி? அவங்க போறதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாமே!””நீங்க எங்கே இருக்கீங்கன்னு எனக்குத் தெரியலப்பா.””என்ன சொல்லிட்டுப் போனாங்க?”அனுஷா, ஓ… எனச் சத்தமிட்டு அழுதுகொண்டிருந்தாள்.அமுதா தயங்கியபடியே, “ஆனந்தனை கட்டிக்கச் சொல்லி கேட்டாங்க. அவ முடியாதுன்னு சொல்லிட்டா, அதனால கோபித்துக்கொண்டு போய்ட்டாங்க” என்றார்.கார்த்திக் அனுஷாவைப் பார்த்து, “உனக்கும் விருப்பம் இருக்கிற மாதிரிதானே பேசுன? ஏன் பிடிக்கல? அவனை நான் கோபப்பட்டது உரிமையால் தவிர வேற எந்த விரோதத்தாலும் இல்லை. ஆனந்தன் குணத்துல தங்கம்; அவனைப் போல யாரும் இந்த ஊர்ல கிடையாது. அப்படிப்பட்டவன் வந்து உன்னை விரும்பிட்டுக் கேட்டான் என்பதற்காக அவனைச் சீப்பா நினைச்சுட்டியா?” என்றான்.அனுஷாவிடம் எந்த பதிலும் இல்லை. அழுகையை தவிர.அப்போது வனஜா, “நீ உன்னோட இறந்த புருஷனுக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்லம்மா. ஆனா, உன்னைப் பெத்த எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்து உண்மையா நடந்துக்கோ. நாங்க கண் மூடிப் போன பிறகு உன்னைத் தனியா விட்டுட்டுப் போன மனக்குறையோட போய் சேரணும்னு எதிர்பார்க்கிறியா? நம்மளே தேடி அலைஞ்சாலும் கிடைக்காத ஒரு நல்ல மாப்பிள்ளை உனக்குக் கிடைச்சிருக்கு, அவனை ஏத்துக்கிறதுதானம்மா முறை?” என்றார்.அனுஷா, “என்னால என்னோட வருனுக்குத் துரோகம் செய்ய முடியாது. அவரை என்னால மறக்க முடியாது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆனந்தனும் வீட்டிற்குள் நுழைந்தான்.ஆனந்தனைப் பார்த்ததும் அனுஷா இரண்டு கைகளால் வாயை மூடியபடி ஒரு மூலையில் அமர்ந்தாள். அங்கிருந்த மற்ற அனைவரும் அமைதியானார்கள்.ஆனந்தன் வனஜாவிடம், “அத்தை, அனுஷாகிட்ட நான் ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்” என்று உத்தரவு கேட்டுவிட்டு, வனஜா சம்மதம் கொடுத்தாரா இல்லையா என்பதைப் பற்றியும் யோசிக்காமலேயே அனுஷாவைப் பார்த்துக் பேசினான்.”எங்க அம்மா உங்ககிட்ட பேசினதைப் பத்திச் சொன்னாங்க. அவங்க ஏதாவது தப்பா கேட்டு இருந்தா தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க! நீங்க என் தம்பி இருக்கிறதால சம்மதம் சொல்லவில்லை என்று எங்க அம்மா நினைச்சுட்டாங்க. ஒருவேளை அது உண்மையா இருந்தாலும், வேற யாராவது உங்களை கல்யாணம் செஞ்சுக்க வந்தா தயவு செஞ்சு ஏத்துக்கோங்க” என்றவன், அங்கிருந்து வெளியேற நினைத்து மீண்டும் அனுஷாவைத் திரும்பிப் பார்த்தான்.”நீங்க எங்கேயோ போய் முகம் தெரியாதவங்களுக்கெல்லாம் சேவை செய்ய ஆசைப்பட்டீங்களே… அந்த சேவையை எங்க வீட்ல என் தம்பிக்கு செய்யலாமே! என்னோட பொண்டாட்டிங்கிற பேர்ல இருந்து சேவை செய்யலாமே…” என்று தழுதழுத்த குரலில் சொன்ன அந்த மறுகணம், அனுஷா தன்னையும் மீறி அழுது வடித்தாள். ஆனந்தன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டான்.அதேவேளை, அவளது தந்தை சிவம், “அனுமா, நான் உயிரோட இருக்கும்போதே எனக்கு உயிர் போற வேதனையை கொடுத்துடாதம்மா! உன் கால்ல விழுந்து கேட்கிறேன், அந்தத் தம்பிகைக் கட்டிக்கோ” என்று தரையில் விழுந்தார்.அவரைத் தடுத்துப் பிடித்த கார்த்திக், “அனு, நீ ஆனந்தனை கல்யாணம் செஞ்சு சந்தோஷமா வாழணும். அவனைவிட வேற யாரும் உனக்கு நல்ல துணையா இருக்க முடியாது. அவன் இரண்டாம் தாரத்துப் பொண்ணுங்க வேண்டாம்னு சொல்லிட்டான்னு நான் கோபப்பட்டேன். ஆனா உன்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சு இன்னைக்கு இங்க வந்து என் வீட்டுக்கு நீ வரணும்னு கேட்டுட்டுப் போறானே. தயவு செஞ்சு சரின்னு சொல்லுமா” என்று வற்புறுத்தினான்.அனுஷா, கனகத்தின் மன்றாடலுக்கும், ஆனந்தனின் வேண்டுதலுக்கும், தன் தந்தை காலில் விழுந்து கதறிய கதறலுக்கும் மதிப்பு கொடுத்து, அழுகை தொண்டையை அடைக்க “சரி…” என்று தலையசைத்தாள்.அந்த வாரத்தில் வந்த முகூர்த்த நாளில், அனுஷாவும் ஆனந்தனும் விருதுநகர் ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்துப் பதிவு திருமணம் செய்து கொண்டனர். கனகம் மட்டற்ற மகிழ்ச்சியோடு மருமகளை வரவேற்றாள். அனுஷா ஆனந்தனைத் திருமணம் செய்து கொண்டாளே தவிர, மனதளவில் வருனின் மனைவியாகவே அந்த வீட்டினுள் நுழைந்திருக்கிறாள்.இவள் மனது எப்போது அவளுக்காக அவளே போட்டுக்கொண்ட மதிலைத் தாண்டிப் போகப் போகிறதோ!