Stories that touch hearts

Home  /  SS-24-சிறுகதைப்போட்டி சிறுகதைகள்  /  Chapter 28

CHAPTER 28

பெண்மையை விலைபேசும் தொழிற்சாலை​ (ரேவதி அசோக்)

By Sorna Sandhanakumar · September 21, 2026

0

ஆபிஸ்க்கு அரக்க பறக்க கிளம்பிக்கொண்டிருந்தாள் தர்ஷிகா.

“
ஹேய் தர்ஷி இந்த செய்தியை பார்த்தாயா …? என்ற தாய் ப்ரியா அவளின் முன் ஒரு தமிழ் தினசரியை கொண்டு வந்து நீட்டினார்.

“
ம்மா எனக்கு ஏற்கனவே ஆபிஸ்க்கு நேரமாயிடிச்சி. இப்போ நியூஸ் படிக்கிறது முக்கியமா, டிபன் பாக்ஸ் ரெடி செய்தாயா…?

தாயிடம் கேட்டபடி தன் மெல்லிய ஒப்பனையை முடித்துக்கொண்டு கைப்பையில் ஐடி கார்ட், பர்ஸ், போன் எல்லாம் இருக்கிறதா என்று சோதித்து அதை தோளில் மாட்ட தாயோ பிடிவாதமாக அவள் முகத்தை செய்தி தாள் பக்கம் திருப்பினார்.

“
முதலில் இந்த செய்தியை பார், உன் தோழி ஸ்ரீ நிஷா ஒரு படத்தில் கமிட் ஆயிருந்தாள் என்று சொன்னியே, அந்த படத்தோடு தயாரிப்பாளர் கூட உன் மூன்றாவது பட தயாரிப்பாளர், அவர் பெயரென்ன தர்ஷி…?

தாயின் கேள்வியில் சலித்துக்கொண்டு,”ம்மா நான் மறக்க நினைக்கிற விஷயத்தை ஏன் மீண்டும் நினைவுப்படுத்தறே. அதுசரி ஸ்ரீக்கு என்னாச்சு, பேப்பரில் என்ன செய்தி தான் வந்திருக்கு…”என்று தாயிடமிருந்து செய்தி தாளை வாங்கி அதில் விழிகளை ஓட்டினாள்.

“
ஏன் ஸ்ரீயை அந்த படத்திலிருந்து தூக்கினாங்க, வேறு ஒரு கதாநாயகியை போட்டிருக்காங்க …?

“
அந்த தயாரிப்பாளர் வழக்கம் போல அவனுடைய கைங்கர்யத்தை காட்டியிருப்பான். அதற்கு ஸ்ரீ இடம் கொடுத்திருக்க மாட்டாள். கடுப்பாகி படத்திலிருந்து தூக்கியிருப்பான்…” என்று ஏளனத்துடன் கூற தர்ஷியின் விழிகள் தாயை அலுப்புடன் நோக்கியது.

“
ப்ச் தெரிஞ்ச விஷயத்தை பற்றி விவாதிப்பது நேர விரயம்…. “

தாய் கொடுத்த டிபன் பாக்ஸை தன் கைப்பையில் வைத்துக்கொண்டு வெளியில் வர அவளின் ஆபிஸ் வேன் வந்து நின்றது.

தாயிடம் விடைபெற்று வேனில் ஏறியவள், ஏற்கனவே உள்ளே அமர்ந்திருந்த கொலீக்ஸ் எல்லோருக்கும் காலை வணக்கத்தை கூறிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள்.

தாயால் கிளறி விடப்பட்டிருந்த அவளின் கடந்தகாலம் அதுவரை அவளுள் சமாதி ஆகியிருந்த அவளின் கனவுகளையும், ஏக்கங்களையும் தோண்டி எடுத்த தினுசில் அவள் முன் ஆஜராக, அந்த நினைவுகளின் பாரம் தாங்க முடியாமல் விழிகளை மூடினாள் வேதனையுடன்.

தர்ஷிகா மதுரை பக்கம் ஒரு குக்கிராமத்தில் பிறந்திருந்தாலும் தந்தை கிருஷ்ணன் கனவுலகமான சினிமா தொழிற்சாலையில் லைட்மேனாக வேலை பார்த்ததால் சிங்கார சென்னையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்.

தந்தையுடன் அடிக்கடி ஷூட்டிங் சென்றதால் தர்ஷிகாவின் அழகான குண்டு முகமும், துறுதுறுப்பும் இயக்குனர்களை கவர, அவளை அவர்கள் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்கள். அப்படியே படிப்படியாக அவள் பிரபலமான குழந்தை நட்சத்திர வரிசை பட்டியலில் இடம் பெற கிருஷ்ணன் லைட்மேன் வேலையை விட்டுவிட்டு மகளின் கால்ஷீட்டை கவனிக்க ஆரம்பித்தார்.

தர்ஷிகா படத்தில் மட்டுமல்ல, விளம்பரங்களிலும் சக்கை போடு போட ஆரம்பித்தாள். அதன் விளைவாக கிருஷ்ணனே எதிர்பார்க்காத அளவு பணம் கொட்டியது. அதை வைத்து சென்னையில் சொந்தமாக வீடு வாங்கினார். குழந்தையாக இருந்த தர்ஷிகா வளர்ந்து பருவ மங்கை வயதை எட்டிப்பிடித்தாள். பதினெட்டு வயது பருவ மங்கையான தர்ஷிகா, மூக்கும் முழியுமாக, அந்த வயதிற்க்குண்டான அழகும், செழுமையும், பளபளப்பும் அவளை பேரழகியாக மாற்றியிருந்தது.

அவளின் அழகை கண்டு கன்னட படவுலகில் ஒரு பெரிய மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக முதன் முதலாக கமிட் ஆகி நடிக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால் அவளுக்கு தமிழில் நிறைய படங்கள் வர ஆரம்பித்தது. அதனோடு அவளுக்கு தொல்லையும் வர ஆரம்பித்தது. தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட வேண்டுமென்றால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட தர்ஷிகா நிர்தாட்சணயமாக மறுத்தாள்.

எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் நடிக்க வேண்டுமென்றால், அப்படியொரு பட வாய்ப்பே தேவையில்லை என, வரிசை கட்டி வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அப்படியே பின் வாங்கினார்கள். அப்படியும் எப்படியோ செலெக்ட் ஆகி வீட்டுக்கு வந்தால் உன்னை பெர்சனலாக தயாரிப்பாளர் பார்க்கணும் என்ற அழைப்பு வரும். சோழியன் குடுமி சும்மா ஆடுமா. அத்தோடு அந்த படவாய்ப்பு பறிபோகும். ஆனால் தர்ஷிகா மனம் தளரவில்லை. சினிமாவை கலையாக பார்த்த ஒரு சில இயக்குனர்கள் அவளை தங்கள் படத்தில் போட்டு படத்தை இயக்கினார்கள்.

படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் தர்ஷிகாவின் நடிப்பு மக்களால் பேசப்பட்டது. ஆயினும் அவளின் கொள்கையால் அவளுக்கு தமிழில் ஒரு நல்ல ஓப்பனிங் கிடைக்கவில்லை. படத்தில் தான் இப்படி என்றால் விளம்பர படங்களிலும் அதே பிரச்சினை.

மேடம் விளம்பர பட இயக்குனரை சந்தோஷப்படுத்தினால் நீங்க இந்த துறையில் ஓஹோன்னு கொடி கட்டி பறப்பீங்க என்று அவளை புக் செய்ய வந்த ஏஜென்ட் கூற கிருஷ்ணன் நொந்து போனார். தர்ஷிகா இந்த கேவலத்திற்கு ரெடியாக இல்லையென்று சினிமா தயாரிப்பாளர் மத்தியிலும், இயக்குனர்கள் மத்தியிலும் செய்தி பரவ, அவளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

படவாய்ப்புகள் இல்லாமல் வருமானமும் நின்றுவிட மனதளவில் நொந்து போனவள் பண தேவைக்காக இன்ஸ்ட்டாகிராமில் ரீல்ஸ் போட ஆரம்பித்தாள்.

என்ன தான் அவள் கண்ணியமாக ரீல்ஸ் போட்டாலும் வக்கிரம் பிடித்த ஆணினம் அவளின் அழகையும், உடலழகையும் அருவருக்க தக்க வகையில் ஆபாசமாக வர்ணித்து வந்த கமெண்ட்ஸ் அவளை சுக்கு நூறாக உடைத்து தற்கொலை முயற்சியில் கொண்டு போய் விட்டது.

மகளின் தற்கொலை முயற்சி பெற்றவர்களை பதற வைத்தது.

ஆபாசமாக கமெண்ட் செய்கிறவர்கள் உன்னை கேவலப்படுத்த செய்கிறார்கள் என்று எடுத்துக்காதே தர்ஷி, அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் மனது எந்தளவு சீர்கெட்டுக்கிடக்கிறது என்று புரிஞ்சிக்கோ. உன் இலக்கு என்னவோ அதை நோக்கி செல். நடுவில் வருகிற எந்த தடைகளையும் கண்டு தயங்கி நிற்காதே என்ற தாயின் அறிவுரையில் அவளின் ரீல்ஸ் தொடர்ந்தது.

ஒரு நாள் இன்ஸ்ட்டாகிராம் பிரபலம் ஒருவர் அவளை கைபேசியில் அழைத்து, எனக்கு ஒரு சில பெண்கள் தேவைப்படுகிறார்கள், உன்னால் ஏற்பாடு செய்து அனுப்ப முடியுமா என்று கேட்க தர்ஷிகா குழம்பி போனாள். அதை அந்த பிரபலத்திடம் கேட்க, நான் ஒரு நடன நிகழ்ச்சி நடத்துகிறேன், அதற்கு தான் பெண்கள் தேவை, உனக்கும் விருப்பமிருந்தால் நீயும் வா என்ற பிரபலத்தின் பேச்சு அவளுக்கு சற்று நம்பிக்கையை உண்டாக்கியது.

ஆசை ஆசையாக ஓகே சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் அவளின் இன்ஸ்ட்டா டைரக்ட் மெசேஜில் ஒரு அனானிமஸ் ஐடி அழைத்து சொன்ன விஷயம் தர்ஷிகாவை அதிர வைத்தது. அவர்கள் உன்னை அழைப்பது நடன நிகழ்ச்சிக்கு அல்ல. ஒரு சில பெரிய மனிதர்களுக்கு உங்களை இரையாக்க தான் நடன நிகழ்ச்சி என்று பொய் சொல்லி அழைக்கிறாங்க. உன்னிடமும் பெண்களை ஏற்பாடு செய்ய சொல்லியிருப்பாங்களே என்று கூற, இப்படியும் கூட நடக்குமா என்ற அதிர்வலையை உண்டு பண்ணியது அவளுள்.

இன்ஸ்டாகிராமில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இரு, நீ கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் உனக்கும் வித விதமான பிரச்சினைகளை கொடுப்பார்கள். இப்பொழுது தானே உனக்கு ஆரம்பிச்சிருக்கு, இனி மேலும் வரும், உஷாராக இரு என்று அவளை எச்சரிக்க அன்றோடு அவளின் இன்ஸ்ட்டா கணக்கை பிரைவேட்டில் மாற்றிவிட்டாள்.

இப்படியே அவளின் நாட்கள் வாய்ப்புக்களை தேடுவதில் செலவாகிக்கொண்டிருக்க, அவர்களின் கையிருப்பும் குறைந்துக்கொண்டே சென்றது. கிருஷணனும் வேலை கிடைக்காமல் திண்டாடினார். இந்த நிலையில் அவளுக்கு ஒரு தமிழ் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ஆடிஷன் சென்று அவள் தேர்வாகிவிட தர்ஷிகா நிம்மதி பெருமூச்சு எடுத்தாள் எப்படியும் இரண்டு வருஷத்திற்கு பண பிரச்சினை இருக்காதென்று. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கடவுள் எதற்கு?

சின்ன திரையில் பெரிதாக பிரச்சினை இருக்காது என்று சந்தோஷமாக ஷூட்டிங் செல்ல ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் ஒரு மாதம் எவ்வித பிரச்சினையுமில்லாமல் சென்றது ஷூட்டிங். ஆனால் நாளாக நாளாக மெதுவாக அங்கேயும் பிரச்சினை அவளை நோக்கி வர தர்ஷிகா வன்மையாக மறுத்தாள்.

பரவாயில்லைம்மா, உனக்கு பிடிக்கலைன்னா பிரச்சினையில்லை என்று பெருந்தமையாக சொன்ன இயக்குனர்கள் அதன் பிறகு சீரியல் கதையில் அவள் கேரக்ட்டரை டம்மியாக்கினார்கள். ரெகமென்டில் வந்தவர்களை ராணி போலவும், தர்ஷிகா மாதிரி வாய்ப்பு தேடி வந்தவர்களை பிச்சைகாரிகள் போல நடத்தவும் அவளுக்கு வெறுத்து போனது. ஒரு சில எபிசோடிலேயே அவள் கேரக்ட்டரை சாகடித்து படத்திற்கு மாலை போட்டுவிட அத்தோடு சீரியலுக்கும் தலை முழுகினாள்.

“
என் பெண்மையை விலைபேசாமல் என்னால் இந்த சினிமா துறையில் சாதிக்க முடியாதாப்பா…”என்ற பெண்ணின் கதறல் ஏற்கனவே நொந்து போயிருந்த கிருஷ்ணனை நிலைகுலைய வைக்க இயாலாமையில் அன்றிரவே அவரின் உயிர் அவரை விட்டு பிரிந்து போனது.

தந்தையின் இறப்பிற்கு பிறகு தர்ஷிகா மீடியாவிலிருந்து ஒதுங்கி தன் படிப்பை தொடர ஆரம்பித்தாள் தாயின் அறிவுரைப்படி. சரியான வருமானம் இல்லாமல் ப்ரியாவால் குடும்பத்தை சரிவர நடத்த முடியவில்லை. இதற்கு நடுவில் அவர்களின் குடும்ப சூழல் தெரிந்து சினிமா ஆட்கள் அவளின் வீட்டிற்கு வந்து அவளை விபச்சார சாக்கடையில் இழுக்க முயற்சிக்க தர்ஷிகாவுக்கு தான் முதலைகளிடம் மாட்டிக்கொண்டிருப்பது புரிந்து அடி வயிற்றை கலக்கியது.

இனியும் இங்கிருந்தால் தன்னை கபளீகரம் செய்துவிடுவார்கள் என்று பயந்து இரு பெண்களும் அந்த வீட்டை விற்று விட்டு,மானத்தை காப்பாற்றிக்கொள்ள ஒரு நாள் இரவோடு இரவாக பெங்களுருக்கு சென்று வாடகை வீட்டில் குடியேறினார்கள். தையல், ஜாக்கெட்டிற்கு ஆரிஒர்க் செய்வது, எம்ப்ராயடரி போன்ற வேலைகளை தாய் செய்ய, தர்ஷிகா மும்மரமாக படித்து இன்று புகழ்பெற்ற ஐடி கம்பெனியில் நல்ல பதவியில் இருக்கிறாள்.

“
ஹேய் தர்ஷி, என்ன கனவுலகத்தில் மிதக்கறியா…? என்று தன் காதருகில் கேட்ட குரலில், தன்னை சுதாரித்து திரும்ப, ரோஸி தான் அவளை உலுக்கிக்கொண்டிருந்தாள்.

“
என்னாச்சு தர்ஷி, வண்டியில் ஏறினதிலிருந்து தீவிரமா யோசிச்சிட்டு வர்றே, என்ன மலரும் நினைவுகளா…?

“
மலரும் நினைவுகள்…”என்று கசப்பாக புன்னகைத்தவள்,”சந்தோஷமான நினைவுகளை கொடுத்தால் அதை மலரும் நினைவுகள் என்று சொல்லலாம். என் கடந்தகாலம் முழுக்க முழுக்க எனக்கு வலியையும், வேதனையையும் மட்டுமே கொடுத்தது ரோஸி.

சினிமா துறையில் சாதிக்க திறமைகள் மட்டும் போதாது. அங்கிருக்கிருப்பவர்களை, குறிப்பாக வாய்ப்பு தருகிறவர்களுடன் படுக்கணும். என் பெண்மையை அவர்களுக்கு பங்கு வைக்கணும். அப்பொழுது தான் சினிமா துறையில் ஒரு நட்சத்திரமாக ஒளிர முடியும்.

இல்லை நான் என் பெண்மையை அடகு வைக்கமாட்டேன் என்று சொன்னால் என் நிலைமை தான் மற்ற பெண்களுக்கும். நான் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, எனக்கு அவப்பெயரை உண்டாக்கி, என் தந்தையை இழந்து, கடைசியில் என் வாழ்க்கையையே சூறையாக்க முயன்றவர்களிடமிருந்து தப்பி நானும் என் தாயும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறோம்.

இது தான் நிஜ சினிமா துறையின் அவலம். அது கனவு தொழிற்சாலை அல்ல. பெண்களின் கனவுகளையும், கற்புகளையும் விற்கும் தொழிற்சாலை. ப்ச் …”என்று அலுத்துக்கொண்டாள்.

“
உன் காயங்களை ஏன் மீண்டும் நக்கி வலியை உண்டாக்கிக்கிறே தர்ஷி …”

“
இந்த வலி என் உயிர் உள்ளவரை போகாது ரோஸி, என் அம்மா மட்டும் எனக்கு உறுதுணையாக இல்லையென்றால் நான் எப்பவோ மண்ணுக்கு இரையாகி இருப்பேன். இல்லை அந்த கனவு தொழிற்சாலை என்னை சாக்கடையில் நீந்தவிட்டிருக்கும். கடவுள் தான் என் தாய் தந்தையின் உருவில் வந்து காப்பாற்றி இருக்கிறார்…” என்று பெருமூச்செடுக்க ரோஸி அவள் கையை அழுத்திக்கொடுத்தாள் ஆதரவுடன்.

வேன் ஆபிஸ் வளாகத்திற்குள் சென்று நிற்க, எல்லோரும் இறங்க, தர்ஷியும் ரோஸியுடன் இறங்கி பேசிக்கொண்டே நடக்க அவளை உரசிக்கொண்டு ஒரு கார் வந்து நின்றது.

“
ஹேய் வந்துட்டாண்டி உன் ரியல் ஹீரோ ரிஷி. உனக்கு சினிமா துறையில் ஹீரோக்கள் அமையவில்லை என்றால் என்ன, நிஜ ஹீரோ உன்னை தேடி வந்திருக்கான், பாவம்டி ஒருவருஷமாக உன் பின்னால் சுத்திகிட்டு இருக்கான் உன் பதிலுக்காக. இன்றாவது அவன் ப்ரோபோசலுக்கு பதில் சொல். நான் போறேன் …”என்று ரோஸி அவள் காதில் கிசுகிசுத்துவிட்டு முன்னே சென்றாள்.

ரோஸி சென்றதும் வண்டியிலிருந்து இறங்கிய ரிஷியை கண்டு தர்ஷியின் இதழ்கள் மெலிதாக புன்னகையில் வளைய, ஒரு பூங்கொத்தை நீட்டினான் ஐ லவ் யூ என.



ரேவதி அசோக்

← Previous All Chapters Next →

Leave a Comment